Saturday, September 17, 2011

பொறுமையே சிறந்த பண்பு


பணம் மனத்தை மாசறச் செய்கிறது. பணத்தில் உம்மை வெகு, அதிகமாக ஈடுபடுத்திக் கொண்டீரானால், நீர் அதன் கவர்ச்சிக்குள்ளாவீர், பணத்தின் மோகம் அத்தகையதாகும்.

உலகினில் நீர் காணுகின்ற விபத்துக்கள் யாவற்றிற்கும் பணமே மூலமாகும். பணமானது ஒருவனுடைய மனம் வேறு திசைகளில் விகாரப்படுமாறும் செய்துவிடுகின்றது.

போதுமென்ற மன நிறைவுக்கு நிகரான செல்வம் எதுவும் இல்லை. பொறுமைக்குச் சமமான பண்பு வேறில்லை.

வாழ்க்கையில் ஆபத்துக்கள் வராது என்பது உண்மையல்ல. துன்பங்கள் எப்போதும் தொடரத்தான் செய்யும். ஆனால் அவை நிலைத்து நிற்காது. பாலத்திற்கு அடியில் என்றும் ஓடிக்கொண்டிருக்கும் நீரைப்போல அவையும் நிற்காது போய் விடுவதைக் காண்பாய்.

அஞ்சவேண்டாம்! மனிதப் பிறவி துன்பங்கள் நிறைந்தது. எனவே எதையும் தாங்கிக் கொள்வதே சிறந்தது. இறைவனின் நாமத்தைச் சொல்லிக் கொண்டே துன்பங்களைப் பொறுமையாக சகித்துக் கொள்.

எவருமே இறைவனாக இருந்தாலும் மனித வடிவில் வரும்போது மனம், உடல் இவைதரும் துன்பங்களை ஏற்றே ஆக வேண்டும்.

ஒருவனிடம் நல்வினை தோன்றும்போது அவனது சிந்தனைகள் இறைவனை நோக்கித் திரும்புகின்றன. தீவினை அவனிடம் தோன்றுமானால் தீய சிந்தனைகளே அவனிடம் எழுகின்றன. இவை அனைத்தும் இறைவனுடைய திருவுளப்படியே நடக்கின்றன.
எதை எப்படிச் செய்ய வேண்டும் என்பது இறைவனுக்குத்தான் தெரியும். இறைவனுடைய பாதார விந்தங்களில் மனிதன் தன்னை முழுமையாக அடைக்கலமாக்கும் போது அவனுக்கு எல்லாவற்றையும் இறைவன் அருளுகிறார்.

No comments:

Post a Comment