Monday, April 30, 2012

சுகந்த தூப தீர்த்தார்ய சுவாமிகள்

மழை பொழிய பாடிய மகான்
ஸ்ரீரங்கப் பெருமாளிடம் மழை வேண்டிப் பிரார்த்தித்து மனமுருகி பாடி மழை பெய்வித்தவர் ஸ்ரீ சுகந்த தூப தீர்த்தார்ய சுவாமிகள். இவரது இயற்பெயர் தத்தாத்ரேயா. இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சன்னதியில் தூபக்கால் ஏந்தி பெருமாளுக்கு ....... தூப நித்ய கைங்கர்யம் செய்து வந்ததால் இவரது இயற்பெயர் மறைந்து இந்த பட்டபெயர் திலைத்தது. தீர்த்தார்யா என்றால் சாஸ்திஞானி என்று அர்த்தம். 15ம் நூற்றாண்டில் தஞ்சையில் நாயக்க வம்சத்தினரின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அரசர் அச்சுதப்ப நாயக்கர், முக்கிய அமைச்சர் கோவிந்த தீட்சிதர். இவர் கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றியுள்ள 16 மண்டபங்களையும் கட்டியவர். இவரை மக்கள் ஐயன் என்று மரியாதையுடன் அழைப்பார்கள். இவரைப்போற்றி ஐயன் பேட்டை (அய்யம்பேட்டை) என ஒரு ஊருக்கே பெயரிட்டு அழைத்தனர். இவ்வூரில் (1551-1661) பங்குனி திருவோண நட்சத்திரம் அவதரித்த தீர்த்தார்யா சுவாமிடகள் பெருமாளின் சேவைக்காக தன்னையே அர்ப்பணித்த பிரம்மச்சாரி. ஒருமுறை மழையின்றி வறட்சி ஏற்பட்டது. மக்கள் இத்துன்பத்திலருந்து மீள தீர்த்தாய சுவாமியை மக்கள் அணுகி, மழை வேண்டி பெருமாளிடம் பிரார்த்திக்குமாறு வேண்டினர். பக்தர்களின் வேண்டுகோளை ஏற்ற சுவாமிகள், சவுராஷ்டிர மொழியில், ஸ்ரீரங்கநாதா ! இத்தருணமே மழை பெய்வித்து ஏரி, கிணறு, நதிகள் நிறையும் படி செய்வாயாக ! அரிசி முதலிய உணவுபொருட்களை மலிவாக கிடைக்க செய்.
உன்னையே கதியென்று சரணடைந்த திரவுபதிக்கு ஆபத்பாந்தவனா ரட்சித்தாய். எங்களையும் வறட்சி எனும் ஆபத்திலிருந்து காத்தருள்வாய் ரங்கா ! முன்பெல்லாம் மக்கள் போதிய வசதியுடன் வாழ்ந்தனர். இன்றோ பஞ்சக்கொடுமையினை அனுபவிக்கின்றனர். உனது திக்கரத்தில் உள்ள சக்கரத்தினை ஏவி அந்த கொடுமைகளை அழித்து விடு ரங்கா ! பஞ்சத்தால் மக்கள் செய்வதறியாது கிடக்கின்றனர். இந்நிலை நீங்க மழை பொழிவிப்பாய் ரங்கா ! பஞ்சம், பசிக்கொடுமையால் மக்கள் கண்டதை உண்ணும் அவல நிலை ஏற்பட்டு அலைகின்றனர். மக்களை இப்படி அலைய விடாமல் போதிய மழையினை பொழியச்செய் ரங்கா ! மழையின்றி மக்கள் பரிதவிக்கும் போது நீ ஆனந்தமாக அறிதுயில் கொள்ளலாமோ ? உன் பக்த ஜனங்கள் நலம் பெற மழை பொழிவிப்பாய் ரங்கா ! ரங்கா ! ரங்கா ! என கீர்த்தனை ஒன்றை முகாரி ராகத்தில் மனமுருகி பாடினார். மழையும் பொழிந்தது. நாமும் நீரின்றி வறட்சியால் வாடும் இந்நேரத்தில், சுவாமிகளின் கீர்த்தனைகளை பாடி, மழை பொழிய, பெருமாளை வேண்டுவோம். அதுமட்டுமல்ல, சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளிலிருந்தும் பாதுகாப்பை வேண்டிக் கேட்போம்

Saturday, April 28, 2012

ஜெயவந்த்

அப்பா, நீங்கள் செய்வது உங்களுக்கே நியாயமாகத் தெரிகிறதா? நன்றாக நடந்து கொண்டிருக்கும் வியாபாரத்தை ஏன் நிறுத்துகிறீர்கள். இவ்வுலகம் பொருள் என்ற அச்சாணியில் சுற்றுவதை நீங்கள் அறியவில்லையா? எங்களையாவது வியாபாரம் செய்ய விடுங்கள், என தங்கள் தந்தையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர் அவரது ஆறுமகன்கள். தந்தை ஜெயவந்த் அவர்களிடம், மக்களே! நீங்கள் இவ்வூரில் நல்லபெயர் வாங்கவில்லை. நம்மை விட வளர்ந்தவர்களைக் கண்டு பொறாமைப்படுகிறீர்கள். நான் விஷ்ணு பக்தன் என்பதை ஊரறியும். நீங்களோ கடவுளுக்கு பயப்படாமல், இருக்கிற பொருட்களை யெல்லாம் தவறான வழியில் செலவழிக்கிறீர்கள். உங்களிடம் இல்லாத கெட்ட குணமே இல்லை. நான் இன்னும் சம்பாதித்தால், பணம் உங்களை அடிமைப்படுத்தி விடும். நம்மிடம் இப்போது இருப்பதே காலம் முழுமைக்கும் போதும். சம்பாதித்த பணத்தில் பாதியை தர்மத்திற்கு ஒதுக்கி விடுவோம். மற்றதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள், என்றார். மகன்கள் ஆறு பேருக்கும் கடும் கோபம். அவர்கள் தந்தையைத் திட்டி தீர்த்தனர். இவர்களில் மூத்தவன் தன் தம்பிகளிடம், அடேய்! இவரிடம் பணம் இருந்தால், நமக்கு ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவார். தானம், தர்மம், கோயில், குளம் என பாழாக்கி விடுவார். நாம் அரசனிடம் செல்வோம். இவரைப் பற்றி புகார் செய்து, செல்வத்தை தக்க வைத்துக் கொள்வோம், என்றான். அனைவரும் அரசவைக்கு சென்றனர்.
மூத்தவன் அரசனிடம், அரசே! எங்கள் தந்தையார் எங்கள் தாத்தா சொத்துக்களை வைத்துக் கொண்டு, எங்களிடம் தர மறுக்கிறார். சொந்தமாக செய்த வியாபாரத்தையும் நிறுத்தி விட்டார். அதில் சேர்த்த செல்வத்தை தான தர்மம் செய்கிறார். எங்களுக்கு எதுவும் தரவில்லை. நாங்கள் வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்கிறோம் என்றால் முதல் போடுவதற்கு பணம் தர மறுக்கிறார். நாங்கள் எப்படி வாழ முடியும்? எங்களுக்கு சொத்தை வாங்கித் தாருங்கள், என்றான். அரசன் யோசித்தான். அவர்களை அனுப்பிவிட்டு, ஜெயவந்த்தை அழைத்து வர உத்தரவிட்டான். ஜெயவந்த் கம்பீரத்தோற்றத்துடன் அரசவைக்குள் வந்தார். நெற்றியில் நாமம் பளிச்சென மின்னியது. பண்புடன் அரசருக்கு வணக்கம் தெரிவித்தார். அரசன் அவரிடம், நீர் உமது மகன்களுக்கு பொருளைக் கொடுக்காமல், உம்மிடமே வைத்துக் கொண்டிருக்கிறீராமே, அதை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும், என்றான் கடுமையாக. மன்னா! பிறக்கும் போது என்ன கொண்டு வந்தோம். இறக்கும் போது என்ன கொண்டு செல்லப்போகிறோம் எதுவும் இல்லை. நாம் செய்யும் நல்ல செயல்களும், தீய செயல்களும்தான் நம்முடன் வரப்போகின்றன. இறைவன் கொடுத்த செல்வத்தில், ஏழை, எளியோருக்கு சிறிது கொடுப்பதில் என்ன தவறு? தானம் தர்மம் செய்வதற்கு நேரம் காலம் கிடையாது. நினைத்தவுடனேயே செய்துவிட வேண்டும். இது புண்ணியத்தைச் சேர்க்கும், என்றார்.
அரசன் மேலும் மேலும் கேள்விகள் கேட்க, ஜெயவந்த் தர்க்க ரீதியாக பதிலளித்தார். அவற்றைப் புரிந்து கொள்ள முடியாத மன்னன், இந்த மனிதர் சரியான பைத்தியமாக இருக்க வேண்டும் என்று தனக்குள் முடிவு செய்து, இப்படிப்பட்டவரை ஊருக்குள் நடமாடவிட்டால் ஏதேனும் அபாயம் நேரும், எனவே அவரை சிறையில் அடைப்பதே சரி என எண்ணினான். சற்று நேரத்தில் மனம் மாறிய அவன் இவருக்கு சிறைதண்டனை கொடுத்தால் சிறைத்துறைக்கு வீண் செலவு தான் ஏற்படும், ஒரு பைத்தியத்தை சிறையில் அடைப்பதை விட, கொன்று விடுவதே மேல் என கணக்குப் போட்டான். காவலர்களே! இவரை நீங்கள் நாளை ஒரு சாக்கில் கட்டி குளத்தில் எறிந்து விடுங்கள், என்றான். ஜெயவந்த் இழுத்துச் செல்லப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவர், எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. பெருமாளே! நான் உனது பக்தன். எனக்கு நீ இப்படிப்பட்ட சோதனையை தந்திருக்கிறாய். இதை நான் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறேன். தானம், தர்மம் செய்வதைப் பாவம் என நீ கருதினால், இந்த தண்டனையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்கிறேன். நான் யாருக்கும் இதுவரை எந்த கெடுதலும் செய்ததில்லை. அந்த திருப்தியுடன் விரைவில் உனது பாதத்தை அடைவதில் பெருமைப்படுகிறேன், என்றவராய், இரவு முழுவதும் கைகொட்டி பஜனை செய்து கொண்டிருந்தார். மறுநாள் காவலர்கள் அவரை ஒரு சாக்கில் கட்டி குளத்திற்கு தூக்கிச் சென்றனர். இந்த செய்தி ஊர் முழுவதும் பரவிவிட்டது. மக்கள் ஒன்றுகூடி குளக்கரையில் நின்றனர்.
ஏழை எளியோர்களுக்கு உதவிய இந்த பெரியவருக்கு இப்படி ஒரு தண்டனையா? இந்த மன்னனுக்கு கேடுகாலம் துவங்கிவிட்டது. அதனால்தான் இப்படியொரு தண்டனையை விதித்திருக்கிறான், என்று பேசிக் கொண்டனர். ஆனாலும், மன்னனை எதிர்க்க யாருக்கு துணிவு வரும்? சாக்கிற்குள் இருந்த ஜெயவந்த், இறைவா, எனக்கு இனி பிறவி வேண்டாம். ஒருவேளை பிறக்க வைப்பதே சித்தமானால், உன்னை மறவாதிருக்கும் இதயத்தை தா எனக் பிரார்த்தித்தார். காவலர்கள் மூடையை குளத்திற்குள் வீசினர். தென்நாட்டில் அப்பர் பெருமானைக் கல்லில் கட்டி கடலில் தள்ளியபோது, கல்லோடு சேர்ந்து அப்பர் மிதந்தார். அதுபோன்ற அதிசயம் இந்த குளத்திலும் நடந்தது. ஜெயவந்த் இருந்த மூடை மூழ்குவதும், வெளியே தெரிவதுமாக இருந்தது. சற்றுநேரத்தில் அங்குள்ளோர் கண்கள் கூசின. பளபளக்கும் பொன்னிறமுள்ள ஆமை ஒன்று மூடையை தன் முதுகில் சுமந்து வந்தது. அது மெல்ல மெல்ல ஊர்ந்து குளக்கரையை அடைந்து மூடையுடன் நின்றது. மன்னனுக்கு தகவல் பறந்தது. அவன் அலறியடித்துக் கொண்டு ஓடிவந்தான். மூடை அவிழ்க்கப்பட்டது. மூடைக்குள் ஜெயவந்த் பத்மாசனத்தில் இருகரம் கூப்பி அமர்ந்திருந்தார். மன்னனும் சுற்றி நின்ற மக்களும் அவரது கால்களில் விழுந்தனர். பெருமாளே கூர்ம வடிவில் வந்து அவரை காத்துள்ள விஷயம் அப்போது தான் அனைவருக்கும் புரிந்தது. மகான் ஜெயவந்த் வாழ்க என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது. இந்நேரத்தில் கரையில் நின்ற ஆமை தண்ணீருக்குள் சென்று மறைந்துவிட்டது. அதன்பிறகு ஜெயவந்தை, தனது குருவாக மன்னன் ஏற்றுக் கொண்டான். நாடு முழுவதும் பக்தியில் சிறந்து விளங்கியது

பண்டரீபுரம் ராமதாஸர்

ராமதாஸர் ஒரு சிறந்த ராமபக்தர். இவர் அனுமாரின் அம்சமாகவே இந்த உலகத்தில் அவதரித்தார். அவர் பிறக்கும்போது சிறியதாக ஒரு வால்கூட இருந்தது. நாள் ஆக ஆக அது தானே மறைந்துவிட்டதாம். எப்போதும் ஸ்ரீராம் ஜய ராம் ஜய ஜய ராம் என்றே ஜபம் செய்து கொண்டிருப்பார். இந்த மந்திரத்தில் பதின்மூன்று எழுத்துக்கள் இருப்பதால், பதின்மூன்று கோடி கணக்கு வைத்து ஜபம் செய்வார். இவர் ஒருமுறை ஜபம் செய்து விட்டால், ராமருடைய வில்லில் உள்ள மணி ஒரு தரம் அடிக்குமாம். இப்படி பலமுறை பதின்மூன்று கோடிகள் ஜபம் செய்தவர். இடையில் ஒரு கௌபீனம், கையில் ஜபமாலை, நீண்ட முடி, தாடி, கால்களில் பாதுகை, இதுதான் அவருடைய உருவம். கண்கள் எப்போதும் சூரியன் போல் பிரகாசித்துக் கொண்டே இருக்கும். சத்ரபதி சிவாஜியின் குரு இவர். ராமதாஸர் கோதாவரி நதிக்கரையில் உள்ள கஞ்சன்காட் என்ற இடத்தில் ஒரு குகையில் தங்கி ஜபத்தில் ஈடுபட்டவராக இருப்பார். பண்டரீபுரம், அருகிலுள்ள மகா÷க்ஷத்திரம். ஒரு தாயாருக்கு நிறைய குழந்தைகள் இருக்கும். எல்லாக் குழந்தைகளும் அம்மா, அம்மா என்று தாயாரைச் சுற்றி சுற்றி வந்துகொண்டே இருக்கும். தன்னைச் சுற்றி வரும் குழந்தையைக் காட்டிலும், தன்னை விட்டு விலகியிருக்கும் குழந்தையையே தாய் உள்ளம் அதிகமாக நினைக்கும். அதுபோல் தான் பகவானும்.
பாண்டுரங்கனை தரிசிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருந்தாலும், பாண்டுரங்கனோ ராமதாஸர் வருகின்றாரா? எப்போது என்னைப் பார்க்க வருவார்? இவ்வளவு பக்கத்தில் இருந்துகொண்டு என்னைப் பார்க்க ஏன் வரவில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டே இருக்கின்றார். ராமதாஸர் ஏன் பாண்டுரங்கனை பார்க்க வரவில்லை? அதற்கு ஒரு காரணம் உண்டு. சிவ பக்தர்கள் பாண்டுரங்கனை சிவனே என்கிறார்கள். பண்டரீபுரத்தில் சிவராத்திரி விமரிசையாக இருக்கும். திகம்பரராக இருப்பதால், ஜைனர்கள் எல்லாம் மஹாவீரர் என்கிறார்கள். வைஷ்ணவர்கள் எல்லாம் கையில் சங்குடன் ருக்மணியுடன் இருப்பதால் இவன் கிருஷ்ணனே என்கிறார்கள். ராமதாஸருக்கு ஒரு பிடிவாதம். ராமரைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை. ராம நாமத்தைத் தவிர வேறு நாமத்தை ஜபம் செய்வதில்லை. ராமாயணத்தைத் தவிர வேறு எதையும் பாராயணம் செய்வதில்லை. இப்படியிருக்க எந்த மூர்த்தி என்றே நிர்ணயம் ஆகாத பாண்டுரங்களை எப்படித் தரிசனம் செய்வது? அதனால் தான் போகவில்லை. ஒரு நாள் சிவாஜி, ராமதாஸரை வணங்கி விட்டு, அவர்முன் கைகூப்பி பணிவுடன் நின்றார். ராமதாஸரும் வந்த விஷயத்தைக் கேட்டார். நாளை ஏகாதசி, பாண்டுரங்கனுக்கு ஒரு பெரிய திருமஞ்சனம், பூஜை எல்லாம் ஏற்பாடு செய்துள்ளேன், தாங்கள் தான் அதை முன்னின்று நடத்திக் கொடுக்க வேண்டும் என சிவாஜி வேண்டினார். நீ பூஜையை நல்ல முறையில் நடத்து, ஆனால் என்னால் வரஇயலாது என்று ராமதாஸர் கூறினார். அதற்கு சிவாஜி, தங்களால் நாளை வரமுடியாது என்றால், வேறு ஒருநாளில் பூஜை நடத்த ஏற்பாடு செய்கிறேன் என்றார்.
ராமதாஸரோ, நீ எப்போது ஏற்பாடு செய்தாலும் நான் வருவதற்கில்லை, திட்டமிட்டபடி நாளையே நடக்கட்டும் என்று கூறினார். சிவாஜியோ, தாங்கள் ஏன் வருவதற்கில்லை என்பதை நான் தெரிந்து கொள்ளலாமா? என்று வினவினார். வேறு ஒன்றும் இல்லை. நான் ராமபிரானைத் தவிர வேறு தெய்வத்தை சேவிப்பதில்லை என்ற நியமத்தில் இருப்பவன். அதனால் தான் நான் வருவதிற்கில்லை என்று கூறினேன். குருவானவர், சீடர்கள் செய்யும் நல்ல காரியங்களைத் தடுக்காமல் ஊக்குவிக்க வேண்டும், அதனால் தான் பூஜையை உன்னை நடத்தச் சொன்னேன் என்றார். சிவாஜியோ, நீங்கள் வரவில்லையென்றால் அனைத்து ஏற்பாடுகளையும் நிறுத்தி விடுவேன் என்று பிடிவாதமாக இருந்தான். சரி! உன் ஆசைக்காக காலையில் வந்து ஐந்து நிமிடங்கள் இருந்துவிட்டு வந்துவிடுவேன் என்று கூறி சிவாஜியை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். மறுநாள் காலையில் ஸ்நானம் எல்லாம் முடித்துவிட்டு, ஜபமாலையை கையில் உருட்டிக்கொண்டு ஜபம் செய்து கொண்டே பண்டரீ வந்துவிட்டார். பண்டரீ வந்தால், அங்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. சிவாஜி வருவதாகவோ, திருமஞ்சனம் ஏற்பாடாகி இருப்பதாகவோ ஒரு தகவலும் இல்லை. ஜபம் செய்து கொண்டு வந்தவர் தன்னை அறியாமல் கோயிலுக்குள் வந்து விட்டார். கோயிலுக்குள் வந்து தெய்வத்தை வணங்காமல் அலட்சியம் செய்யக்கூடாது என்பதால் உள்ளே சென்று தரிசனம் செய்தார். பாண்டுரங்கனே தன்னை தரிசிக்க இப்படி ஒரு லீலை புரிந்துள்ளார் என அப்போது தான், ராமதாஸரின் மனதில் தோன்றியது. உடனே ராமதாஸர், ஹே பாண்டுரங்கா! நீ ராமனா அல்லது பாண்டுரங்கனா! ராமனாக இருந்தால் சரயு நதிக்கரையை விட்டு ஏன் இங்கு வந்தாய்? சீதாவை விட்டு விட்டு ருக்மணி தேவியுடன் இங்கு காட்சி தருகிறாய்? என புலம்பினார். அடுத்தவிநாடி அங்கு பாண்டு ரங்கனைக்காணவில்லை. அந்த இடத்தில் சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் சகிதமான ராமச்சந்திர மூர்த்தி தனது விஸ்வரூபதரிசனம் காட்டி, ராமனும் நானே, பாண்டு ரங்கனும் நானே என்பதை உணர்த்தினார்.

Friday, April 27, 2012

இதயத்தில் இருக்கும் இறைவன் - சுவாமி கமலாத்மானந்தர்

* புலனடக்கமும், ஆன்மிக சாதனைகளும் நம் வாழ்வில் இணைந்திருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லாத நிலையில் ஆன்மிக அனுபவங்கள் ஏற்படுவதற்கு வழியே இல்லை. வேலை செய்தால் தானே கூலி கிடைக்கும். வேலையே செய்யாத ஒருவன் கூலியை மட்டும் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை. * மனிதன் பிறருக்குப் பரோபகாரமாகவும், நல்லொழுக்கங்களுடன் வாழ்ந்து தவத்தில் சிறந்து விளங்கி, இறுதியில் இறைவனின் திருவடியில் இரண்டறக் கலப்பதே வாழ்வின் நோக்கமாகும்.
* எந்த அளவிற்கு உள்ளம் தூய்மையாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஒருவனிடம் மனச்சாட்சியும் விழிப்புடன் இருந்து அவனை நல்வழியில் செலுத்திக் கொண்டிருக்கும். அதனால் மனமே குருவாக இருந்து நமக்கு வழிகாட்ட வேண்டும்.
* ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையின் அமுத வாக்காகும். வெளியில் ஆலய வழிபாடு செய்வதோடு திருப்தி கொள்ளாமல் இதயத்தில் இருக்கும் கடவுளை அறிவதே நம் பெரியோர்களின் நோக்கமாகும்.
* இறைவனை உள்ளத்தில் உண்மையாகவே ஆராதிக்கத் தொடங்கினால், நான் என்ற அகந்தை எண்ணம் அழிந்து விடும். ஒளி வந்தவுடனேயே இருள் நீங்குவதுபோல, இறைவன் இருக்கும் இடத்தில் தான் என்னும் அகந்தை நிற்க முடியாது.

Wednesday, April 25, 2012

மனத்தூய்மையே அருளைப் பெற முயற்சிப்பதன் முதல் படி

ஒரு மனிதனின் நிம்மதியான வாழ்க்கைக்குத் தேவை அருளும் பொருளும். இவை இரண்டும் இருந்து விட்டால், எதற்கும் கவலை இல்லை. அருள் அதிகம் இருக்க வேண்டும். பொருள் போதுமான அளவில் இருக்க வேண்டும். பொருள் அதிகம் இருந்தால், அருளைப் பெறுவதில் சிரமம் இருக்கும். அதாவது, அருளைப் பெறுவதில் மனம் நாட்டம் கொள்ளாது. அருளும் பொருளும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதவை. அருளை வைத்துக் கொண்டு பொருள் பெற முடியாது; பொருளை வைத்துக் கொண்டு அருளைப் பெற முடியாது. இரண்டையுமே தேடித்தான் பெற வேண்டும். நல்ல ராசிக்காரர்கள் சிலரை இவை இரண்டுமே தேடி வருவதும் உண்டு. அருள் என்றால், இறை இன்பம். இறை அருள். இறைவனின் ஆசி என்றெல்லாம் சொல்லலாம். என்றென்றைக்கும் எப்போதும் நல்ல நிலையில் ஒருவரை வைத்திருக்க உதவுவது அருள். இத்தகையோரைப் பார்த்தாலே, கையெடுத்துக் கும்பிடத் தோன்றும். பொருள் என்றால், நாம் தேடிச் சேகரித்த செல்வம். பொருள் தேடும் ஆசை குறையக் குறையத்தான் அருள் வந்து சேரும். ஒருவர் வைத்துக் கொண்டிருக்கும் செல்வத்தால், படிப்பால், பதவியினால், ஞானத்தால் அருளை வாங்க முடியாது. அருள் கடைச் சரக்கு அல்ல.
மனத்தூய்மையே அருளைப் பெற முயற்சிப்பதன் முதல் படி. ஸ்ரீராமபிரானின் மனத் தூய்மையை ராவணனே வியந்து போற்றி இருக்கிறான். எதிரியே என்றாலும், ராமனின் இந்தக் குணத்தை தன் மனைவியான மண்டோதரியிடம் வியந்து சொன்னதாக, பரமஹம்சர் சொல்வார். சீதையைத் தங்கள் நாயகி ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஏன் இவ்வளவு அவஸ்தைப்படுகிறீர்கள்? ராமனைப் போன்ற மாய வடிவம் எடுத்து, சீதையிடம் சென்று அவளை ஏன் ஏமாற்றி அடையக் கூடாது. என்று கேட்டாளாம் மண்டோதரி. கணவனின் இந்த இச்சையைப் பூர்த்தி செய்ய விரும்பிய மண்டோதரியே இப்படி ஒரு வழியைச் சொன்னாள். அதற்கு ராவணன், சேச்சே... அப்படி இல்லை மண்டோதரி. ராமனை நினைத்த மாத்திரத்திலேயே வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஆனந்தமும் இன்பமும் மனதில் உண்டாகின்றன. பரமபதமான சொர்க்கமும்கூட வெறுப்பாகி விடும் போலிருக்கிறது. அப்படி இருக்கும்போது, அவனுடைய திவ்ய சொரூபத்தை எடுத்துக் கொண்டால், எனக்கு எப்படி சிற்றின்பத்தில் நாட்டம் செல்லும்? மனம் இச்சையில் லயிக்காது என்று மண்டோதரியிடம் சொன்னானாம். பொருளாசை மற்றும் இன்ன பிற ஆசைகளில் மனம் சென்று கொண்டிருந்தால், அருள் கிடைக்காது. இறைவனை தரிசிக்க முடியாது. பணம், பதவி, பட்டம், ஆற்றல் இவற்றைச் சேர்க்க முயலும் ஆசை அறவே அடங்கினால்தான் இறை தரிசனம் கிடைக்கும். அந்த இன்பத்தை உணர முடியும்.
அருளில் கிடைக்கும் ஆனந்தத்தை ஒருமுறை ருசித்துப் பார்த்து விட்டால், அதன் பின் வேறு எந்த ஆசையும் ஒரு மனிதனுக்கு எழாது. சான்றோர்கள் அனுபவித்துப் பெற்ற அந்த அருள் அமுதத்தைப் பெற முயற்சிக்கலாமே! அருளைப் பெறுவதற்கு மனதை முதலில் பக்குவப்படுத்துங்கள். பக்குவப்பட்ட மனதில்தான் அருள் ஆனந்த தாண்டவம் ஆடும்.

Saturday, April 21, 2012

அரியவனோ எளியவனோ இறைவன் ?

அந்த காவியுடை சாது காட்டிலே அமர்ந்து கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்தார். தினமும் காலையும் மாலையும் நிலை கொள்ளாமல் தவிப்பதும் ஏதோ ஒரு வகைத் தேடலிலும் ஈடுபட்டிருந்ததை கவனித்த வேடன் ஒருவனுக்கு அவர் மேல் இரக்கம் பிறந்தது.

அவரை நெருங்கி “ஐயா தாங்கள் தேடுவது என்னவென்று சொன்னால் என்னால் முடிந்த உதவி செய்கிறேன்” என்றான்.

அவருக்கோ சிரிப்பு வந்தது. மந்திர சித்தியைப் பற்றி அந்த வேடனுக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது?
”உன்னால் முடியாதப்பா” என்று சுருக்கமாக பதில் உரைத்தார்.
முடியாது என்று அவர் சொன்னதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.
“எனக்கு இந்த காட்டில் தெரியாத மரமோ செடியோ பிராணியோ கிடையாது. நீங்கள் தேடும் பொருளை அடையாளம் சொல்லுங்கள். மருந்துக்கான பூவா, இலையா அல்லது ஏதேனும் அரிய பொருளா சொல்லுங்கள். நான் எப்பாடுபட்டாவது உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கிறேன்.” என்று விடாமல் சொன்னான். அவன் அன்புத் தொல்லை தாங்க முடியவில்லை.

”நான் தேடுவது ஒரு விசித்திரமான மிருகம். அதற்கு சிங்கத்தின் தலை, மனிதனின் உடல், கூரிய நகங்கள். அடர்ந்த பிடரி. முடிந்தால் தேடிப் பிடித்து வா” என்று அனுப்பினார்.

“அட இப்படி ஒரு மிருகத்தை நான் கண்டதே இல்லையே ! அப்படி ஒன்று இருந்தால் அது இல்லாமல் திரும்பமாட்டேன்” என்று சொல்லி விசித்திரமான அந்த மிருகத்தைத் தேட ஆரம்பித்தான். அன்றைய பொழுதும் சாய்ந்தது. அடுத்த நாள் விடியும் பொழுது அந்த மிருகம் இன்று கிடைக்காவிட்டால் உயிரை விட்டுவிடுவது என்ற முடிவோடு தேட ஆரம்பித்தான். நீரும் உணவும் இன்றி தேடி அலுத்து நிராசையின் விளிம்பில் இருந்தவனுக்கு திடீரென்று ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது.

அந்த திசையில் சென்றதுமே அந்த விசித்திர மிருகம் கண் முன்னே நின்று கொண்டிருந்தது. ”ஓ நீதானா அது” என்றபடியே சந்தோஷத்துடன் அருகேயிருந்த கொடிகளை அறுத்து அதைக் கட்டி தர தர வென்று இழுத்து வந்து முனிவர் முன் நிறுத்தினான். அந்த விசித்திர மிருகம் ஒரு நாயைப் போல இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தது.

“ சாமி இதோ நீங்க தேடுற பிராணி” என்று மகிழ்ச்சியுடன் கூவினான்.

சாதுவுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. அவருக்கு தெரியவில்லை என்பது வேடனுக்கு புரியவில்லை. “இதோ ..இதோ” என்று மீண்டும் மீண்டும் அது நிற்கும் இடத்தைக் காட்டினான்.

அவன் தன்னம்பிக்கையோடு காட்டும் போது குழம்பிய மனதினராய் அவ்வேடனை பரிதாபமாகப் பார்த்தார். தன் கண்களை நம்புவதா அல்லது அந்த வேடனை நம்புவதா என்று புரியாமல் திகைத்தார். அப்போது சிங்கத்தின் கர்ச்சனை மட்டும் மிக அருகிலிருந்து கேட்டது. அந்த தபஸ்விக்கு உண்மை பளிச்செனப் புரிந்தது.

“பிரபோ இந்த எளியவனுக்கு காட்சி தரும் தாங்கள் என்னை கை விட்டுவிட்டீரே !” என்று கதறினார்.

“அப்பனே காலம் கனியும் போது உன்னிலும் என்னைக் காண்பாய்” என்று அசரீரியாய் பதில் வந்தது.

(மீதிக் கதையைப் பின்னர் பார்ப்போம்)
நமக்கு ஒரு குழப்பம். அங்கே இறைத் தாகத்தில் தவிப்பவனுடைய கண்களுக்கு அரியவனாகி நிற்கிறான். ஏதுமறியா அப்பாவிக்கு வேடனுக்கு எளியவனாகி நிற்கிறான். என்ன ஒரு விந்தை ?
இவன் யார் பிடியில் அகப்படுவான் யார் பிடியில் சிக்கமாட்டான் என்பதைத் தீர்மானிக்க யாராலும் இயலாது. எனவே அவனுடைய நிலைப்பாடு இந்நேரத்தில் இப்படித்தான் இருக்கும் என்று எவரும் அறுதியிட்டு கூற முடிவதில்லை.

அதே குழப்பம் கபீருக்கும் ஏற்படுகிறது.
भारी कहौं तो बहु डरौं, हलका कहूं तौ झूठ ।
मैं का जाणौं राम कूं, नैनूं कबहूँ न दीठ ॥

அரியவன் என்னலும் தயக்கம்,எளியவன் என்பதும் பொய்யே
அறியேன் யானும் இராமனை, விழிகள் கண்டது மில்லையே


(’டரௌ’ என்று கபீர் பயன்படுத்தியுள்ள சொல் ‘பயத்தைக்’ குறிப்பதாகும். அது ’உண்மையற்றதாகி விடும்’ என்ற பயமே தவிர இறைவனைக் குறித்த பயம் அல்ல. தமிழாக்கத்திற்கு தயக்கம் என்ற சொல் பொருத்தமாகத் தோன்றுகிறது )
அலகிலா விளையாட்டு உடையான் அவனடி சரணாவதைத் தவிர இறைவன் போக்கை ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாது.
சாதுவிற்கு அவன் எளியவன் அல்லன். ஆனால் வேடனின் பார்வையில் அவன் அரியனும் அல்லன்.
ஆகையால்தான் ” அவனைப் பற்றி என்ன சொல்ல முடியும்? இராமனை நான் பார்த்ததும் இல்லை”என்று அவன் மகிமையை உணர்த்த இயலாதவராய் அடக்கத்தோடு உரைக்கிறார் கபீர்.

யாருக்கு எது நன்மை செய்யும் அதை எப்போது தரவேண்டும் என்னும் இறைவன் சித்தத்தை யாராலும் அறிய முடியாது என்பதை திருமூலரும் கூறுகிறார்.

அகன்றார் வழிமுதல் ஆதி பிரானும்
இவன்தான் என நின்ற எளியனும் அல்லன்
சிவன்தாள் பலப்பல சீவனும் ஆகும்
நயன்தான் வரும் வழி நாம் அறியோமே


( அகன்றார் = முனிவர்கள்; நயன்தான் வரும் வழி= நன்மைகள் வருகின்ற விதம்)


இப்போது ’காலம் கனியும் போது உன்னில் என்னை காண்பாய்’ என்று சொன்னக் கதைக்கு வருவோம்.

 
எங்கோ மோனத்தில் ஆழ்ந்திருந்த பத்மபாதரின் மனக்கண் முன்னே காபாலிகன் சங்கரரை பலி கொடுப்பதற்கு நெருங்கி வரும் காட்சி விரிந்தது. அவர் உபாசித்த நரசிம்ம மந்திரம் அவரை முழுவதுமாக ஆட்கொண்டது. தன் குருவை காப்பாற்ற வேண்டி பெரும் கர்ஜனையுடன் ஆகாயத்திலே எழும்பி புயல் போல் காபாலிகனின் குகையுள் புகுந்தார்.

முன்னொரு நாளில் இரண்ய கசிபுவை எப்படி கையால் தூக்கி அவன் குடலை நரசிம்மம் உருவியதோ அதே கதியை காபாலிகனுக்குக் கொடுத்தார்.

மற்றவர்கள் ஓடிவந்து சமாதியிலிருந்த சங்கரரை எழுப்பினர். இரத்தத்தில் தோய்ந்த சீடனின் உக்கிர வடிவில் நரசிம்மனை கண்ட சங்கரர் உடனே பிரஹ்லாதனைப் போல உக்கிரத்தை தணிக்க நரசிம்மத் தோத்திரம் இயற்றினார்.

சங்கரரை சிவனின் அவதாரமாகவே சொல்வதுண்டு.

சிவனிடமிருந்து வரம் பெறுவதற்காகவே காபாலிகன் சங்கரரை அணுகி அவரது முழு சம்மதத்தின் பேரிலேயே பலியிடுவதற்கு முற்பட்டான். அவருடைய சங்கல்பமில்லாமல் பத்மபாதருக்கு அந்த உத்வேகம் வந்திருக்காது. எல்லாம் அறிந்த சங்கரர் அவனுக்கு அப்படி ஒரு முடிவை கொடுத்தது ஏன் ?

அங்கே தந்திர மார்க்கத்தின் வழி வந்த காபாலிகனுக்கு முக்தியும் தரவேண்டியிருந்தது. இங்கே பத்மபாதருடைய மந்திரசித்திக்கும் ஒரு பூரணத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

’நன்மைகள் வரும் வழி நாம் அறியோமே’ என்று திருமந்திரம் சொல்வதும் ”அறியேன் யானும் இராமனை” என்று கபீர் கூறுவதிலும் உள்ள உண்மை ஒன்றுதான்.
 
 

ஆன்மிக சிந்தனைகள் - காஞ்சி பெரியவர்

நிம்மதிக்கான வழி இது தான்
* நாம் எல்லோரும் கடவுளைப் பற்றிய உண்மையான ஞானத்தைப் பெற முயல வேண்டும். ஞானம் என்பது என்ன? பரம்பொருளாகிய கடவுள் மட்டுமே உண்மை, மற்றதெல்லாம் மாயை என்பதைத் தவிர வேறு எதுவுமே இல்லை என்பது தான்.
* பரம்பொருள் என்னும் ஒன்று தான் உலகத்தில் உள்ள அத்தனைப் பொருளுமாக இருக்கிறது. எல்லாப் பொருட்களையும் கடவுளாகவே பார்க்க வேண்டும். இதை விடுத்து அந்தப் பொருட்களை அதன் உண்மை இயல்புக்கேற்ப மனதைச் செலுத்தினால் சஞ்சலம், ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட கஷ்டங்கள் ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கும்.
* திண்ணையில் உட்கார்ந்திருப்பவன் கீழே விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ அல்லது சுளுக்கு ஏற்படுவதோடோ போய்விடும். ஆனால், பணக்காரன், பதவிக்காரன் மாடி மீது இருக்கிறான். அவன் கீழே விழுந்தால் எலும்பு முறிந்துவிடும், ஏன்...உயிருக்கே ஆபத்து உண்டாகும்.
* உலகத்தில் பிறந்த ஒவ்வொருவனும், "தான் ஒருவனே மகா கெட்டிக்காரன், மகா யோக்கியன், ரொம்ப அழகுள்ளவன்' என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அதுபோலவே, துன்பப்படுபவனும் "தான் ஒருவன் மட்டுமே உலகிலேயே அதிகத் துன்பப்படுபவன்' என்று எண்ணிக் கொள்கிறான். ஆனால், இரண்டுமே உண்மையல்ல. சுகமும் துக்கமும் இரட்டைப்பிறவிகள். சுகம் இருக்கும் இடத்தில் துன்பமும் இருக்கும். இன்பமும் துன்பமும் ஒன்றைவிட்டு ஒன்று விலகுவதில்லை. எனவே, இன்பம் துன்பம் இரண்டையும் விட்டாலன்றி நிம்மதிக்கு வேறு வழியில்லை

Friday, April 20, 2012

இராமானந்த தீர்த்தர்!

 கபீரின் குருவாகக் கருதப்படுபவர், இராமானுச வழியில் வந்த ஒரு மகான்! சடங்குகள் சார்ந்த மரபை வெறுத்து, வடநாடு சென்ற இவர் யார்? = இராமானந்த தீர்த்தர்
இவரே கபீரின் மானசீக குரு!
கபீர் வளர்ப்பால் முஸ்லீம் என்பதால், சுற்றி இருந்த சில அக்ரஹார சீடர்கள் விலக்க, அவமானப்பட்ட கபீர், அழுது கொண்டே கங்கைப் படித்துறையில் படுத்துறங்கி விட்டார்!

விவரம் அறியாத இராமானந்தர், யாரோ இரண்டு வீர புருஷர்கள் (இராம-இலக்குவன்) தன் மடத்தை விட்டுப் போவதாக விடிகாலைக் கனவு கண்டு,
ஐயோ, பாகவத அபச்சாரம் (அடியார் பழித்தல்) நடந்து விட்டது போலிருக்கே என்று பதறி,

இதர வகுப்பாரை விசாரிக்க, உண்மை அறிந்து, எதற்கு கபீரை விரட்டினீர்கள் என்று மற்றவர்களைக் கடிந்து கொண்டார்!
உடனே கங்கைக் கரையில் குளிக்கப் போகும் போது, படியில் கால் வைக்க, அது கபீரின் மேல் பட்டு விட..."சீதாராம்" என்று இராமானந்தர் அலற, கபீர் எழுந்து வணங்க, அதுவே தாரக மந்திர உபதேசம் ஆயிற்று! கபீர் சீடர் ஆனார்!
ஒன்றே என்னின் அன்றேயாம், இரண்டே என்னின் தவறேயாம்
என்றும் எதுவோ அதுவேயாம், உரையில் கபீரும் பேதையாம்
என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ஒரு ஈரடி...
"ஒன்றே என்னின் ஒன்றே ஆம் ; பல என்று உரைக்கின் பலவே ஆம்;" என்று துவங்கும் ஒரு பெரும் தமிழ் கவிஞரின் பாடலை ஒட்டி அமைந்திருக்கிறது. எழுதியது யார் ? = கம்பர்

கம்ப ராமாயணம் - கடைசிக் காண்டமான யுத்த காண்டத்தின் முதல் பாட்டு!

ஒன்றே என்னின், ஒன்றே ஆம்; பல என்று உரைக்கின், பலவே ஆம்;
அன்றே என்னின், அன்றே ஆம்; ஆம் என்று உரைக்கின், ஆமே ஆம்;
இன்றே என்னின், இன்றே ஆம்; உளது என்று உரைக்கின், உளதே ஆம்;
நன்றே, நம்பி குடி வாழ்க்கை! நமக்கு இங்கு என்னோ பிழைப்பம்மா!
 கபீர் என்பதற்கு அரேபிய மொழியில் ஒரு பொருள்! தாச என்பதற்கு வடமொழியில் ஒரு பொருள்! அப்படியென்றால் கபீர்தாசர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?
கபீர் + தாசர் = Great (Allah) + Servant = சிறப்பானவரின் அடிமை!
அல்லாஹ் என்னும் இறைவனின் திருப்பெயர்களுள், 37ஆம் திருநாமமாக, திருக்குர்ஆனில் வருவது கபீர் என்ற நாமம்!

காஞ்சி மகா பெரியவரை தரிசித்த மகிழ்ச்சியில்பால்பிரண்டன்




'தேஜோமயமான தெய்வீக நிலை கொண்ட மகா பெரியவாளின் அழகிய உருவத்தை ஒருபோதும் என்னால் மறக்க முடியாது!'
காஞ்சி மகா பெரியவரை தரிசித்த மகிழ்ச்சியில், அவரது அருட்கடாட்சத்தை அனுபவித்த பூரிப்பில்... பால்பிரண்டன் எனும் ஐரோப்பியர் தமது நூலில் குறிப்பிட்டிருக்கும் வாசகம் இது.
நம் முனிவர்கள், யோகிகள் மற்றும் மகான்களைச் சந்தித்து, ஆசி பெற்று, அவர்களுடனான தனது அனுபவங்களை எழுத இந்தியாவுக்கு வந்தார் பால் பிரண்டன். செங்கல்பட்டில் முகாமிட்டிருந்த காஞ்சி மகா பெரியவரை வேங்கடரமணி என்பவர் உதவியுடன் தரிசித்தார். அப்போது, தான் அடைந்த பரமானந்தம்... தொடர்ந்து அன்றிரவே தமக்கு வாய்த்த அற்புத அனுபவம் குறித்து தமது புத்தகத்தில் விரிவாக விளக்குகிறார் பால் பிரண்டன்:
''மகா பெரியவாளை சந்தித்தது, எனது வாழ் நாளில் எனக்குக் கிடைத்த- என்றும் மறக்க முடி யாத தெய்வீக அனுபவம். குழந்தைப் பருவத்தில் இருந்தே கடவுள் பணியில் ஈடுபட்டுள்ள காஞ்சிப் பெரியவரை விட்டுப் பிரிய எனக்கு மனமே வரவில்லை.

அனைத்தையும் துறந்தவர்; மிகப் பெரிய பீடாதிபதியாக இருந்தும் அகங்காரம் இன்றி, அமைதியாகவே இருந்தார். தமக்கு வழங்கப்படும் பொருட்களைப் பங்கிட்டு, தகுதியானவர்களுக்கு அவரே அளித்து விடுகிறார். அவரைச் சந்தித்த பிறகு, அன்று மாலை வரை செங்கல்பட்டையே சுற்றிச் சுற்றி வந்தேன். மீண்டும் ஒரு முறை மகா பெரியவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அங்குள்ள கோயில் ஒன்றில், பக்தர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார் பெரியவாள். அங்கு சென்றேன். அப்போது, பெரியவாளது பிரகாசமான திருமேனியைக் கண்டு மெய்சிலிர்த்தேன்.

அவர் பேசியது எனக்குப் புரியவில்லை என்றாலும், ஜாதி வேறுபாடின்றி அனைவருக்கும் ஒரே நிலையில் அவர் உபதேசிக்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது. அந்தக் கூட்டத் தில் இருந்தவர்களுக்கு வாழ்க்கை குறித்து எந்த சந்தேகமும் இல்லை. அனைவரும் நம்பிக்கையு டன் இருந்தனர். அவர்களைப் பார்த்துப் பொறா மைப்பட்டேன். 'கடவுள் இருக்கிறார்' என்ற எண்ணம் அவர்களுக்கு திடமாக இருந்தது. மேடு- பள்ளம் நிறைந்த உலக வாழ்க்கையைப் பற்றியோ, பிரபஞ்சத்தின் ஒரு பகுதியான பூமியின் அழிவைப் பற்றியோ அவர்கள் கவலைப்படவே இல்லை.

பிறகு, நானும் நண்பர் வேங்கடரமணியும் சென்னைக் குத் திரும்பினோம். அப்போது வேங்கடரமணி, 'நீங்கள்தான் உண்மை யான அதிர்ஷ்டசாலி. ஏனெனில், ஐரோப்பிய எழுத்தாளர் ஒருவருக்கு ஸ்வாமிகள் பேட்டியளித்தது இதுவே முதல் முறை. எனவே, தங்களுக்கு ஸ்வாமிகளின் ஆசிர்வாதம் பரிபூர்ணமாகக் கிடைத்துவிட்டது!' என்றார். எனக்குப் பெருமையாக இருந்தது.

அன்று இரவு, தூக்கத்தில்... செங்கல் பட்டில் கண்ட அதே உருவத்தை மிகத் தெளிவாக மீண்டும் காணும் பாக்கியம் கிடைத்தது. என்னிடம் கருணையையும் அன்பையும் காட்டுவதற்காகவே அந்த உருவம் வந்ததாக அறிந்தேன். காஷாயம் (காவிஉடை) தரித்த அந்த உருவம், 'பணிவுடன் இரு. அனைத்தையும் அடைவாய்' என்பது போல் என் காதில் ஒலித்தது. பிறகு, அந்த உருவம் மறைந்தது. இதையடுத்து எனக்குள் ஓர் அமைதி; பெருமிதம்; மகிழ்ச்சி! தென்னிந்திய மக்களால் கடவுள் அவதாரமாக மதிக்கப்படும் காஞ்சி மகா பெரியவாளை சந்தித்த அனுபவத்தை அன்று இரவு முழுவதும் சிந்தித்தபடியே இருந்தேன்.''

பால் பிரண்டனுக்குக் கிடைத்த இந்த அனுபவம் நமக்கும் கிடைக்க காஞ்சி மகானை பிரார்த்திப்போம்!

Wednesday, April 18, 2012

சேக்கிழார்

பெரியபுராணம் தந்த சேக்கிழார் அரசபதவியை விட்டெறிந்து தெய்வத் திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தொண்டை நாடு புலியூரில் குன்றத்தூர் கிராமத்தில் அவதரித்தவர் சேக்கிழார். அவர் பிறந்ததும் அருண்மொழி ராம தேவர் என்ற பெயர் இடப்பட்டது. இவரது சகோதரர் பாலறாவாயர். சேக்கிழாரின் தந்தை இரண்டாம் குலோத்துங்கன் எனப்பட்ட அநபாய சோழனிடம் அமைச்சராகப் பணியாற்றினார். 1133ம் ஆண்டு முதல் 1150ம் ஆண்டு வரை இவனது ஆட்சிக்காலம் இருந்தது. சேக்கிழாரின் தந்தை அரசவைக்கு வரும் போதெல்லாம் சேக்கிழாரையும் உடன் அழைத்து வருவார். இதனால் சேக்கிழாருக்கு அரசியல் நடவடிக்கைகள் அத்துப்படி ஆயின. தந்தையைத் தொடர்ந்து சேக்கிழாருக்கு அந்தப்பதவி கிடைத்தது. அநபாயச்சோழன் சேக்கிழாரை தனது முதல் அமைச்சராகவே நியமித்தான். சேக்கிழார் தனது பொறுப்பை நல்லமுறையில் கவனித்து நாட்டை நல்வழியில் நடத்திச் சென்றார். ஒருமுறை திருநாகேஸ்வரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை தரிசிக்க சேக்கிழார் சென்றார். இறைவனைக் கண்டதும் அவரது கண்கள் பனித்தன. அவர் உடலே இறைசக்தியால் ஆட்டுவிக்கப்பட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. அரசபதவியை விட்டுவிட்டு தெய்வப் பணிக்கு சென்று விடலாமா என எண்ணினார். இந்த நேரத்தில் மன்னனின் போக்கு திடீரென மாறியது. மன்னன் அநபாயச்சோழன் சீவகசிந்தாமனி என்னும் காப்பியத்தை படித்துவிட்டு சிற்றின்பத்தில் மூழ்கி காலத்தை கழித்தான். எனவே சிவ நூல்களை படித்து நல்லவழியில் செல்ல மன்னனை சேக்கிழார் கேட்டுக்கொண்டார்.
அவன் சேக்கிழாரிடம், சமயநூல்களை உருவாக்கியவர்கள் யார் என கேள்வி கேட்டான். மன்னன் இப்படி கேட்டதே சேக்கிழாருக்கு பெருமையாக இருந்தது. சேக்கிழார் அதற்குரிய விளக்கங்களை மன்னனிடம் எடுத்துக்கூறினார். நம்பியாண்டார் நம்பி எழுதிய திருவந்தாதியை செப்பேடு செய்து ராஜராஜசோழன் சைவ சமயத்தின் உண்மை நெறியை மக்களுக்கு எடுத்துக்காட்டினான். அப்படிப்பட்ட மன்னனின் வழியில் வந்த தாங்களும் சைவ சமயத்தை காக்க ஏற்பாடுசெய்ய வேண்டும் என சேக்கிழார் எடுத்துக்கூறினார். இதையடுத்து மன்னன் திருந்தினான். சிவபெருமானின் தொண்டர்களின் வரலாற்றை காவியமாக்கி தரவேண்டும் என சேக்கிழாரை கேட்டுக்கொண்டான். அதற்காக பொன்னும் பொருளும் கொடுத்து வேண்டிய ஏற்பாடுகளை செய்தான். சேக்கிழார் சிதம்பரம் நகருக்கு சென்றார். அங்கு நடராஜ பெருமானை வணங்கி, சிவனின் திருத்தொண்டர்களின் வரலாற்றை எழுத அடியெடுத்துக் கொடுக்க வேண்டும் என வேண்டினார். தில்லையம்பல நடராஜர் உலகெலாம் என அடியெடுத்துக் கொடுத்தார். அதை முதற்சொல்லாக வைத்து சேக்கிழார் பெரியபுராணத்தை எழுதத் தொடங்கினார். அதில் 4253 பாடல்கள் இருந்தன. எழுத்துப்பணி முடிந்து காவியத்தை நடராஜரின் பாதத்தில் சேக்கிழார் சமர்ப்பித்தார். இதைக் கேள்விப்பட்ட மன்னன் தனது பரிவாரங்களுடன் சிதம்பரத்திற்கு புறப்பட்டு வந்தான். மன்னன் வருவதை அறிந்த சேக்கிழார் சிதம்பரத்தில் உள்ள மூவாயிரம் அந்தணர்களுடனும் திருமட தலைவர்களுடன் சென்று மன்னனை வரவேற்றார். அவர் ருத்திராட்சமும் திருநீறும் அணிந்து சிவனடியார் போல நின்று கொண்டிருந்தார். அந்த உருவத்தை பார்த்த உடனேயே மன்னன் அவரை வணங்கினான். அப்போது விண்ணில் அசரீரி வாக்கு எழுந்தது. சேக்கிழார் முடித்த பெரியபுராணத்தை அரங்கேற்றம் நிகழ்ச்சியை மிகப்பெருமளவில் நடத்த அசரீரி வாக்கு கூறியது.
இதையடுத்து மன்னன் விழா ஏற்பாடுகளை ஆரம்பித்தான். தில்லை நடராஜருக்கு உகந்த நல்லநாளும், திருஞான சம்பந்தர் அவதரித்த பொன்னாளுமான சித்திரை திருவாதிரை தினத்தில் அரங்கேற்ற நிகழ்ச்சியை தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது . மிகப்பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடக்கும் திருவிழாவிற்கு வரும் கூட்டம் போல பக்கத்து நாடுகளிலிருந்து, புலவர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சிதம்பரத்தில் கூடினர். ஊரெங்கும் பூரணகும்பம் வைத்து திருவிளக்கு ஏற்றினர். ஒருபக்கம் சிலம்பாட்டம், மற்றொரு பக்கம் நடனம் என கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சிதம்பரம் நடராஜர் கோயில சிற்பங்கள் வர்ணம் பூசப்பட்டன. வீதியெங்கும் வாழை, கமுகு தோரணங்கள் அலங்கரித்தன. இப்படிப்பட்ட குதுகலமான சூழ்நிலையில் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பெரியபுராணத்தின் அரங்கேற்றம் துவங்கியது. அரங்கேற்றம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்து. கதை முடிந்தபாடில்லை. ஒரு வருடம் பெரியபுராணத்தை சேக்கிழார் பாடினார். அடுத்த ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை தினத்தன்று தனது இனிய கவிதைகளை பாடிமுடித்தார். சேக்கிழார் தந்த பெரியபுராணத்தில் 63 நாயன்மார்களின் வரலாறு இடம்பெற்றுள்ளது. விழா முடிந்ததும் மன்னன் மீண்டும் தன் நாடு அடைந்தான். சேக்கிழாரின் சகோதரரான பாலறவாயரை அமைச்சராக்கி அவருக்கு தொண்டைமான் என்னும் பட்டத்தை வழங்கினான். அவனது காலத்தில் நாடு மிகச் செழிப்பாக விளங்கியது. அதன்பிறகும் சேக்கிழார் தில்லையரசரின் புகழ்பாடி அவரது திருவடியைச் சேர்ந்தார்.

இக்காயத்தினைக் கோயிலாக உணருங்கள்....

எலும்புகளாலும் தசைகளாலும் ஆன இந்த கூட்டின் மீது உள்ள அபிமானம் நீங்காத வரையில் நான் எப்படி சிவனாக முடியும்.?
இறையை அறிவதற்கே இவ்வுடல் இறையால் ஈயப்பட்டுள்ளது. அப்பர் பெருமான் ஒரு இடத்தில் இக்காயத்தினைக் கோயிலாக உணருங்கள் என்பார்.

காயமே கோயிலாகக்
கடிமனம் அடிமையாக‌
வாய்மையே தூய்மையாக‌
மனமணி இலிங்கமாக‌
நேயமே நெய்யும்பாலா
நிறைய நீர் அமைய ஆட்டிப்
பூசனை ஈசனார்க்குப்
போற்றவிக் காட்டினோமே.

இன்னொரு இடத்தில் மறுமுறையும் அப்பர் பெருமான் சொல்வார்:

உடம்புஎனும் மனை அகத்துள்
உள்ளமே தகளியாக‌
மடம்படும் உணர் நெய் அட்டி
உயிரெனுந் திரிமயக்கி
இடர்படு ஞானத் தீயால்
எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை
கழல் அடி காண லாமே.

இவை ஒரு புறம் இருக்க, இன்னுமோர் உரத்த சிந்தனை
எனக்கு வருவதை என்னால் தவிர்க்க இயலவில்லை.

சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுதமுடியும் ?

சுவரை இடித்துவிட்டோ அல்லது காயப்படுத்திவிட்டோ அதில்
சித்திரம் வரைவது சாத்தியமோ ?
ஆகவே உடலை வருத்துவதில் பயனில்லை. வருத்துவதால்
ஞானம் பிறக்குமா ! ஆதலால், உடலைப் பேணுவதின் மூலம்
உள்ளத்தைப் பேணவேண்டும். அதே சமயம், எது எது இவ்வுடலின்
அன்றாட வாழ்வுக்கு ( இதை continued and imperilled existence
எனப் பொருள் கொள்க ) தேவையானவற்றிக்கும் மேலாக எதிலும்
கொள்ள நேரும் பற்றினைத் தவிர்த்தால் மட்டுமே இறையின் பால்
கருத்தும் கவனமும் ஏற்படும்.

எனவே தான் கபீரும் ஒரு இடத்தில்,
ஆண்டவனே ! எனக்கு இத்தனை மட்டும் தாருங்கள் !
எதனால், நானும் பசித்து இருக்கமாட்டேன், என் வீட்டுக்கு வரும்
சாதுக்களும் பசித்து இருக்கமாட்டார் என்றார்.

உபவாசம், பசித்திருத்தல் எல்லாமே உடலை, உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும் சாதனங்கள். பசித்து உண் என்பார்கள். பசி எடுக்கும்போது தான் பசித்தும் புசிக்க ஒன்றும் இல்லா மக்களின் துன்பம் தெரிகின்றது. அவர்தம் இன்னலைப் போக்கும் வழிகளை நாட முடிகிறது.

விவேகானந்தரின் பொன்மொழிகள்..

*கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

*உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

*செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

*வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

*இளைஞர்களே, உங்களுக்கு என்னிடம் நம்பிக்கை இருக்குமானால், என்னை நம்புவதற்குரிய தைரியம் இருக்குமானால், ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்பேன்.

*பலவீனம் இடையறாத சித்திரவதையாகவும் துன்பமாகவும் அமைகிறது.

*பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது.

*இந்தியாவை முன்னேற்றமடையச் செய்ய விரும்பினால், பாமர மக்களுக்காக நாம் வேலை செய்தாக வேண்டும்.

*அடிமைகள் எல்லோருக்கும் பெரிய சனியனாக இருப்பது பொறாமையே ஆகும்.
நமது நாட்டைப் பிடித்த சனியனும் அதுதான்.ஏழை எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், கல்வியறிவில்லாதவர்கள் ஆகிய இவர்களே உன்னுடைய தெய்வங்களாக விளங்கட்டும்.

*பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால், அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வந்து சேர்ந்துவிடும்.

*உண்மைக்காக எதையும் துறக்கலாம்; ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்காதே.

*வலிமையே மகிழ்ச்சிகரமான, நிரந்தரமான, வளமான, அமரத்துவமான வாழ்க்கை ஆகும்.

*தன்னலம் சிறிதும் இல்லாமல், நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

*இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.

*வீரர்களே, கனவுகளிலிருந்து விழித்தெழுங்கள்!
தளைகளிலிருந்து விடுபடுங்கள்!

*இளைஞனே, வலிமை, அளவற்ற வலிமை - இதுவே இப்போது தேவை.
சிறந்த லட்சியத்துடன் முறையான வழியைப் பின்பற்றித் தைரியத்துடன் வீரனாக விளங்கு!

*உடல் பலவீனத்தையோ, மன பலவீனத்தையோ உண்டாக்கும் எதையும் அணுகக் கூடாது.

*நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று நான் சொல்கிறேன்.

*எவனுடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனையே நான் மகாத்மா என்பேன்; மற்றவர்கள் துராத்மாக்களே.

*எப்போதும் பொறாமையை விலக்குங்கள்.
இதுவரையிலும் நீங்கள் செய்யாத மகத்தான காரியங்களை எல்லாம் செய்து முடிப்பீர்கள்.
கீழ்த்தரமான தந்திரங்களினால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது.
இது என் உறுதியான நம்பிக்கை.

*சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும்.
சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.

*நமது நாடு வீரர்களை வேண்டி நிற்கிறது.
வீரர்களாகத் திகழுங்கள்!
தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரம் ஆகும்.

*அளவற்ற பலமும் பெண்ணைப் போல் இரக்கமுள்ள இதயமும் பெற்றவனே உண்மை வீரன்.

*இளைஞர்களே, தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்.
ஓ சிங்கங்களே! நீங்கள் செம்மறியாடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்.
சுயநலம் என்பதை அறவே தூர எறிந்துவிட்டு வேலை செய்யுங்கள்..

*உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.

*என் குழந்தைகளான நீங்கள் என்னைவிட நூறு மடங்கு சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

*தீண்டாமையை தீவிர கொள்கையாகவும் உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை நீங்கள் ஆன்மிகத்தில் முன்னேறமுடியாது.

*பெரிய புத்தகங்களை படிப்பதாலும் அவ்வாறு படித்து பேரறிஞர் ஆவதாலும் ஆன்மிக உணர்வைப் பெற முடியாது என்பது நிச்சயம்.

*சங்கங்கள் ஏற்படித்தி கூட்டங்கள் சேர்த்து எவரும் ஆன்மிக உணர்வை பெற முடியாது. அன்பின் மூலமாகத் தான் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு ஆன்மிக உணர்வை செலுத்த முடியும். ஆன்ம ஞானத்தைப் பெற விரும்பும் ஒருவன் தொடக்கத்தில் புற உதவிகளைப் பெற்று சுயபலத்தில் நிற்க வேண்டும். ஆன்ம ஞானம் கிட்டிய பின் பிற உதவிகள் தேவையில்லை.

*கல்வி மூலம் தன்னம்பிக்கை ஏற்படுகிறது. தன்னம்பிக்கை மூலம் தன்னுள் உறங்கிக் கிடக்கும் ஆன்மா விழித்துக் கொள்கிறது. கைக்கோ, வாளுக்கோ ஆற்றல் ஏது? ஆற்றல் முழுவதும் ஆன்மாவிலிருந்தே வெளிப்படுகிறது.

*எல்லாப் பெருமையையும், எல்லா ஆற்றலையும், எல்லாத் தூய்மையையும் ஆன்மா தூண்டுகிறதே தவிர, ஆன்மாவைத் தூண்டுவது எதுவும் இல்லை.

*ஆன்மிக உணர்வை பெறாதவரை நமது நாடு மறுமலர்ச்சி அடையாது. ஆன்மிக வாழ்க்கையில் பேரின்பம் பெறாமல் போனால், புலனின்ப வாழ்க்கையில் திருப்தியடைய முடியாது. அமுதம் கிடைக்காமல் போனால் அதற்க்காகக் சாக்கடை நீரை நாடிச் செல்லமுடியாது.

*ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடிய போதிலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுகள் காய்கறி உணவையே உண்டு வந்தாலும் சரி, உன்னுள்ளே இருக்கும் ஆன்மிகம் விழிப்படையாவிட்டால், அதனால் ஒரு பயனும் இல்லை.

* ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச் சிறந்த கருவி, அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும்.எங்கு பெண்கள் மதிக்கப் படுகிறார்களோ,அங்கே தேவதைகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.எங்கே அவர்கள் மதிக்கப் படவில்லையோ,அங்கே எல்லா காரியங்களும் முயற்சிகளும் நாசமடைகின்றன.எந்த நாட்டில்,எந்த குடும்பத்தில் பெண்களுக்கு மதிப்பு இல்லையோ, எங்கே அவர்கள் துயரத்தோடு வாழ்கிறார்களோ அந்த நாடும் குடும்பமும் உயர்வடைவதற்கான நம்பிக்கையே இல்லை!


*தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். லட்சியத்திலிருந்து 1000 தடவை வழுக்கி விழுந்தாலும், லட்சியத்துக்கு உழைப்பதில் பிழைகள் நேர்ந்தாலும் திரும்பத் திரும்ப அந்த லட்சியத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள். லட்சியத்தை அடைய 1000 தடவை முயலுங்கள். அந்த 1000 தடவை தவறினாலும் இன்னுமொரு முறை முயலுங்கள். முயற்சியைக் கைவிடாதீர்கள்.

*எல்லாவற்றிலும் பரம் பொருளைப் பார்ப்பதுதான் மனிதனின் லட்சியமாகும். எல்லாவற்றிலும் பார்க்க முடியாவிட்டாலும் நாம் நேசிக்கும் ஒரு பொருளிலாவது பார்க்க வேண்டும். பிறகு இன்னொன்றில் பார்க்க வேண்டும். இப்படியே இந்தக் கருத்தை விரிவுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
*எல்லாவற்றையும் கடவுளாகப் பார்ப்பதற்கு எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சமயத்தில் நிச்சயம் அந்த லட்சியத்தை அடைந்துவிடுவோம்.

*தீமையை எதிர்க்காதீர்கள், அகிம்சையே மிக உயர்ந்த ஒழுக்க லட்சியம் என்று ஆச்சாரியார்கள் உப தேசித்து இருக்கிறார்கள். இந்த உபதேசத்தை நம்மில் சிலர் அப்படியே கடைப்பிடிக்க முயல்வோமானால் சமுதாய அமைப்பே இடிந்து தூள் தூளாகி விடும்.


*அயோக்கியர்கள் நம் சொத்துக்களையும் நம் வாழ்க்கையையும் பறித்துக் கொண்டு தங்கள் விருப்பப்படி நம்மை ஆட்டி வைப்பார்கள். இது நமக்குத் தெரியும். இத்தகைய அகிம்சை சமுதாயத்தில் ஒரேயொரு நாள் கடைப்பிடிக்கப்பட்டாலும் கூட பெரும் நாசமே விளைவாக இருக்கும்.

*ஆனாலும் தீமையை எதிர்க்காதீர்கள். என்ற உபதேசத்தின் உண்மையை உள்ளுணர்வின் மூலமாக நம் இதய ஆழங்களில் உணரவே செய்கிறோம். இது மிக உயர்ந்த லட்சியமாக நமக்குத் தோன்றுகிறது. என் றாலும் இந்தக் கோட்பாட்டை உபதேசிப்பது என்பது மனித குலத்தின் பெரும் பகுதியை நிந்திப்பதற்கே சமமாகும்.

*அதுமட்டுமல்ல,தாங்கள் எப்போதும் தவறையே செய்கிறோம் என்ற எண்ணத்தை அது மனிதர்களிடம் உண்டாக்கிவிடும். அவர்கள் எந்த வேலையைச் செய்தாலும் அவர்களின் மனசாட்சியில் சந்தேகங்கள் எழுந்த வண்ணமே இருக்கும். இது அவர்களை பலவீனப்படுத்துகிறது.

*இவ்வாறு தொடர்ந்து தங்களை மறுப்பது, மற்ற பலவீனங்கள் உண்டாக்கும் தீமையை விட அதிக தீமையைத் தரும். எந்த மனிதன் தன்னைத்தானே வெறுக்கத் தொடங்கிவிட்டானோ, அவனுக்கு அழிவின் வாசல் எப்போதோ திறந்துவிட்டது. இது ஒரு நாட்டிற்கும் பொருந்தும். நமது முதல் கடமை நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான். ஏனென்றால் நாம் முன்னேற வேண்டுமென்றால் முதலில் நமக்கு நம்மிடம் நம்பிக்கை வேண்டும். பிறகு கடவுளிடம் நம்பிக்கை வேண்டும்.
*தன்னிடம் நம்பிக்கை இல்லாதவன், கடவுளிடமும் ஒரு போதும் நம்பிக்கை வைக்க முடியாது.

*நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் (அதற்காக சிங்கமாக ஆகவேண்டும் என் நினைத்தால் அது முடியாது). உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! (ஆனால் முயற்சி தேவை).


*"உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!" "'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.

*பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!

*கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.

*உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி.

*அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.

*மிருக பலத்தால் அல்லாமல் ஆன்மிக பலத்தால் மட்டுமே எழுச்சி பெறமுடியும்.

*சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர, கடவுளுக்கும் சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை.

*நீ செய்த தவறுகளை வாழ்த்து. அவைகள், நீ அறியாமலே உனக்கு வழிகாட்டும் தெய்வங்களாக இருந்திருக்கின்றன.

*அன்பின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீரும்.

*உங்களால் யாருக்கும் உதவி செய்ய முடியாது. மாறாகச் சேவைதான் செய்ய முடியும்.
*உனக்குத் தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.

*எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ் அந்த நாடும் பாழ்.

*நமக்குப் பல அனுபவங்களை பெற்றுத்தர இந்த உலகம் படைக்கப்பட்டது. இங்கிருக்கும் ஒவ்வொரு பொருளும் நம்மால் அனுபவிக்கப் பட வேண்டியது என்பதில் சந்தேகமில்லை. அதற்காக அது வேண்டும், இது வேண்டும் என யாரிடமும் கேட்காதே. வேண்டுதல் ஒரு பலவீனமாகும். இந்த வேண்டுதல்தான் நம்மை பிச்சைக்காரர்களாக்குகிறது. நாம் அனைவரும் ராஜகுமாரர்கள். பிச்சைக்காரர்கள் அல்ல.


*இயற்கை என்றும், விதி என்றும் எதுவும் கிடையாது.கடவுள் என்ன நினைக்கிறாரோ அதுவே நடக்கும்.

* கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது. ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.

* ஏதாவது தவறு செய்துவிட்டால், ""ஐயோ! நான் தீயவன் ஆகிவிட்டேனே!'' என்று வருத்தப்பட வேண்டாம். நீ நல்லவன்தான். ஆனால், இன்னும் உன்னை நல்லவனாக்க முயற்சி செய்ய வேண்டும்.
* உலக மக்கள் இன்று கடவுளை கைகழுவி வருகிறார்கள். காரணம் கேட்டால், "கடவுள் எங்களுக்கு என்ன செய்தார்? அவரால் எங்களுக்கு என்ன பயன்?' என்று கேட்கிறார்கள். நீங்கள் கேட்பதை எல்லாம் செய்வதற்கு கடவுள் ஒன்றும்நகரசபை அதிகாரி அல்ல.
*மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சமபங்கு வகிக்கின்றன. சில நேரங்களில் இன்பத்தை விட துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசானாக அமைகிறது. நன்மையைப் போல் தீமையில் இருந்தும் மனிதன் பாடம் கற்றுக்கொள்கிறான்.

* உலக இன்பம் மனிதவாழ்வின் லட்சியமாக இருக்கக்கூடாது. ஞான இன்பம் அடைவதையே வாழ்வின் லட்சியமாகக் கொண்டிருக்க வேண்டும். ஞானம் என்பது ஆண்டவனை உணர்வதும், சக மனிதர்களை ஆண்டவனாய் காண்பதுமாகும்.

* உதவி செய், சண்டை போடாதே, ஒன்றுபடுத்து, அழிக்காதே, சமரசமாய் இரு, சாந்தம் கொள், வேறுபாடு காட்டாதே.

* உலகம் எவ்வளவு பெரிதோ அவ்வளவு பெரிதாக உங்கள் இதயத்தை விரிவாக்குங்கள். தன்னைச் சரிப்படுத்திக் கொள்பவனே உலகைச் சரிப்படுத்த தகுதியானவன்.

* பலவீனமாக இருக்கிறோமோ என வருத்தப்படாதீர்கள். பயந்து கொண்டே வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பயத்திற்கு ஒரே பரிகாரம் வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். அளவற்ற தன்னம்பிக்கை பயத்தை விரட்டிவிடும். பயங்கரமான வேகத்துடன் செயல்புரிவதன் மூலமே வெற்றி இலக்கை விரைவில் அடைய முடியும்.

* சுடுகாட்டுக்கு அப்பாலும் நம்மைத் தொடர்ந்து வருகிற ஒரே நண்பன் நல்லொழுக்கமே. மற்றவை யாவும் மரணத்துடன் முடிந்துவிடும்.

*தியானம்
எல்லாவற்றையும் தவிர்க்கும் சக்தியைக் கொடுப்பதுதான் தியானம். “பார் அங்கே..அதோ ஒரு அழகான பொருள்” என இயற்கை கூறுகிறது. “கண்களே பார்க்காதீர்கள்!” என்று நான் கண்களுக்கு உத்தரவிடுகிறேன். கண்கள் பார்ப்பதில்லை. “இதோ நல்ல நறுமணம், இதை முகர்ந்து பார்” என இயற்கை கூறுகிறது. “அதை முகராதே!” என நான் என் மூக்கிற்கு உத்தரவிடுகிறேன். மூக்கு அதை முகர்வதில்லை. இயற்கை ஒரு கொடிய காரியம் செய்கிறது. என் குழந்தைகளில் ஒன்றைக் கொல்கிறது. “இப்போது என்ன செய்வாய்? மடையா உட்கார்ந்து அழு. துக்கத்தின் ஆழத்திற்குப்போ!” என்று இயற்கை சொல்கிறது. ஆனால் நான் சொல்கிறேன், “நான் போக வேண்டிய அவசியம் இல்லை!” என்று குதித்து எழுந்து சுதந்திரமாக இருக்கவேண்டும். இதைப் பயிற்சி செய்து பாருங்கள். ஒரு நொடையில் தியானத்தில் இந்த இயற்கையை நீங்கள் மாற்ற முடியும். இந்த சக்தி உங்களுக்குக் கிடைத்தால் அதுவே பரலோகமாகாதா? சுதந்திரமாகாதா? தியானத்தின் சக்தி அதுதான்!

*ஞானதீபம்
ஓ மனிதா! இதை நம்பு. உள்ளத்தில் இதை ஊன்றச் செய். மாண்டவர் மீள்வதில்லை. கழிந்த இரவு வருவதில்லை. வீழ்ந்த அலை எழுவதில்லை. ஒரு முறை பெற்ற உடலை மீண்டும் மனிதன் பெறுவதில்லை. எனவே, ஓ மனிதா இறந்துபோன பழங்கதையை வணங்காதே! வா இங்கு வாழும் நிகழ்காலத்தை வனங்கு. சென்றதை நினைத்து புலம்பாதே. இன்று உள்ளதைக் கண்டு அதில் பங்கு கொள். அழிந்துபோன கரடு முரடான பாதையில் சென்று உனது சக்தியை வீணாக்காதே. உன்னருகே உள்ள புதிய செப்பனிடப்பட்ட நன்கு வகுக்கப்பட்ட ராஜபாதையில் செல். வா! உன்னை அழைக்கிறோம். அன்புள்ளவன் இதை அறிந்து கொள்வான்!

*மனதை அடக்கு

எல்லா பேய்களும் நம்முடைய மனத்திலேதான் இருக்கின்றன. மனம் கட்டுப்பட்டு அடங்கி இருந்தால் எந்த இடத்தில் நாம் இருந்தாலும் எங்கிருந்தாலும் அது சொர்க்கமாக மாறிவிடும். மூடப்பட்டுள்ள கதவை எப்படி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி தாக்கவேண்டும் என்பது மட்டும் நமக்கு தெரிந்து இருந்தால் உலகம் தனது ரகசியங்களை வெளியிடத் தயாராக இருக்கிறது. அத்தகைய வலிமையும் தாக்கும் வேகமும் எல்லோருக்கும் கிடைத்து விடாது. மனதை ஒருமுகப் படுத்துபவனுக்கே இந்த வலிமை கிட்டும். மனித உள்ளத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.

Tuesday, April 17, 2012

யானும் தானாய் ஒழிந்தானே

 அகோரமணி தேவி எனும் பெண்மணி ஒருத்தி இளம் வயதிலேயே கணவனை இழந்திருந்தாள் . அவளுக்கு ஒரு வைஷ்ணவ குரு மூலமாக கோபால மந்திர உபதேசம் கிடைத்து. பால கோபாலனே அவளுக்கு பிடித்த தெய்வம். குழந்தைப் பேறு வாய்க்க இயலாத அவளுக்கு குட்டி கிருஷ்ணன் லீலைகளைக் கேட்பதே ஆனந்தப் பொழுது போக்கு. அதனால் கோபாலனின் மந்திரமே அவள் வாழ்க்கைக்கு பிடிப்பாயிற்று. அவளுடைய அண்ணன் நீல்மாதவ் பட்டாச்சாரியா பணியாற்றிய ராதாமாதவ் கோவிலுக்கு தினமும் வந்து சிறு சிறு கைங்கரியங்கள் செய்வது அங்கேயே அமர்ந்து வெகு நேரம் செபம் செய்வது என வழக்கப்படுத்திக் கொண்டாள்.

ராதா மாதவ் கோவிலை நிர்வகித்த கோவிந்த தத்தரின் மனைவிக்கு அகோரமணியின் எளிமை, மனத்தூய்மை மிகவும் பிடித்துப் போனது. அதனால் அவளை கோவிலினுள்ளே இருந்த ஒரு சிறிய அறையில் வசிக்குமாறு அழைப்பு விடுத்தாள். அடுத்த முப்பது வருடங்களுக்கு அதுவே அவளது வாசஸ்தலமாகியது. இருவருக்குமிடையே இருந்த வயது வித்தியாசம் சத்சங்கத்திற்கு தடையாகவில்லை. அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து தியானம் செபம் செய்வது அகோரமணி தேவிக்கு வெகு இயல்பாக கைகூடியது. சில நாட்கள் இரவு வெகு நேரம் வரையிலும் கோபாலனின் நாமசெபத்தில் தன்னை மறந்து ஈடுபட்டதுண்டு.

குருபலம் உடையவர்களுக்கு நாட்கள் அப்படியே போய்விடுமா என்ன!

கமார்ஹட்டியில் வசித்த இந்த பெண்மணிகளுக்கு தட்சிணேஸ்வரத்தில் ராமகிருஷ்ணரைப் பற்றி யாரோ சொல்லவே அவரை சந்திக்கும் ஆர்வம் பற்றிக் கொண்டது. இவர்களைக் கண்ட மாத்திரத்திலேயே அன்புடன் அவர்களை வரவேற்றார் குருதேவர். அவரே சில பாடல்களைப் பாடி அவர்களது மனதை கொள்ளை கொண்டார். அவர்களை அடிக்கடி வந்து போகும்படி அன்பாய் அழைப்பும் விடுத்தார். காந்தம் இரும்பை ஈர்க்கத் தொடங்கியது.

சில நாட்களுக்குள் அவரை சந்திக்கும் ஆர்வம் அதிகமாகவே கடையில் சிறிது தின்பண்டம் வாங்கிக் கொண்டு குருதேவரை அடைந்து நமஸ்கரித்தாள். தயக்கத்துடன் தின்பண்டங்களை அவர் முன் வைப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே உரிமையுடன் அதை பறித்துக் கொண்டு ராமகிருஷ்ணர் சுவைக்கத் தொடங்கினார். அதை பாராட்டியதுடன் அடுத்த முறை வரும்போது தேங்காய் பர்பி நீயே செய்து கொண்டு வா என்று அன்புடன் கட்டளையிட்டார். தேங்காய் பர்பிக்கு பிறகு லட்டுக்கு ஆசைப்படுவது அதற்கப்புறம் வேறொரு தின்பண்டம் என்றவாறு ஒவ்வொரு முறையும் அவளிடம் வெறும் தின்பதை பற்றியே பேச்சு சுற்றி சுற்றி வந்தது. ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. அகோரமணிக்கு ஏமாற்றம் ஏற்படத் துவங்கியது. தனக்கு ஆன்மீக சாதனையில் வழிகாட்டுவார் என்றால் இந்த மனிதர் எப்போதும் தின்பதைப் பற்றியே பேசுகிறாரே..இனிமேல் இவரை சந்திப்பதில் அர்த்தமில்லை என்று நினைக்கத் தொடங்கினாள்.

ஒருநாள் அதிகாலையில் தன் தியானத்தை முடித்து கண் திறந்தபோது அவளுக்கு பெரும் ஆச்சரியம். சற்று தூரத்தில் குருதேவர் வலது முஷ்டியை இறுகப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார். கனவா நிஜமா என்று ஊர்ஜிதம் செய்ய அவரைத் தொட முயற்சித்தபோது மாயமாய் மறைந்து போனார். அவர் இருந்த இடத்தில் இப்போது பாலகிருஷ்ணன் அதே வலது முஷ்டியை இறுகப் பிடித்தவாறு அவளை நோக்கி ஓடி வந்தான். தின்பதற்கு வெண்ணெய் கொடு என்றான். விடியலுக்கு காத்திருக்கும் இருட்டில் அந்த ஏழை வெண்ணெய்க்கு எங்கு போவாள். அவனோ விடுவதாயில்லை.அடுக்கப்பட்டிருந்த சட்டிகளை துழாவிக் கிடைத்த பிட்டு மாவை தேங்காயும் சர்க்கரையும் சேர்த்து உருண்டை பிடித்து கொடுத்தாள். அதுவே போதும் என்பது போல் தின்று விட்டு விளையாடத் தொடங்கி விட்டான். அகோரமணி செபம் செய்ய அமர்ந்தால் அவளுடைய செபமாலையை பறித்துக் கொண்டு ஓடுவது, அவளை அமர விடாமல் தன்னுடன் விளையாட அழைப்பது, கூச்சலிட்டுக்கொண்டு அறைக்குள்ளே சுற்றி சுற்றி வருவது என்பதாக அகோரமணியின் இஷ்ட தெய்வம் அவள் முன்னே ஓடியாடத் தொடங்கினான். அவளுக்கு தரையில் கால் பாவவில்லை. விடிந்ததும் கோபாலனைத் தூக்கிக் கொண்டு குருதேவரை காண ஓடினாள்.

அவரைக் கண்டதுமே மடியில் இருந்த கோபாலன் அவருள் மறைந்து போனான். ராமகிருஷ்ணரோ பாவசமாதியில் கோபாலனைப் போலவே தவழ்ந்து வந்து அவளது மடியில் படுத்துக் கொண்டார். தன்னை விட பதினான்கு வயது இளையவரான குருதேவரை வாத்ஸல்ய பாவத்துடன் அணைத்துக் கொண்டார் அகோரமணிதேவி. உடல் நினைவிருந்தால் தானே வயது, ஆண், பெண் என்ற வித்தியாசமெல்லாம். அந்த நேரத்தில் அது பெரும் உணர்வுக்குள்ளே தோய்ந்து போன இரு பெரும் ஆத்மாக்களின் சங்கமம். உடல் என்னும் கருவி உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் விடாது. அவளது கண்களிலிருந்து ஆறாய் நீர் பெருகி குருதேவரை நனைத்தது. குழந்தையற்ற தனக்கு தாய்மை பாசத்தை வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பை எண்ணி எண்ணி அவள் மனம் உருகியது. சிறிது நேரம் கழித்து குருதேவர் எழுந்து கட்டிலின் மீது அமர்ந்து கொண்டார். அவளது தலையை அன்புடன் நீவி கொஞ்சம் கொஞ்சமாக நினைவுலகுக்கு கொண்டு வந்தார். அன்றிலிருந்து அவளுடன் குட்டி கோபாலன் விளையாடுவது, நீர் கொண்டு வர அல்லது சுள்ளி பொறுக்கப் போகும்போது கூடவே வருவது, அவளுடைய கையையே தலையணையாகக் கொண்டு உறங்குவது என்பதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. தனக்கென குழந்தை ஒன்று இருந்திருந்திருந்தால் என்னென்ன இன்பம் கிட்டியிருக்குமோ அத்தனையும் குருதேவரின் அருளால் அவளுக்கு கிட்டியது. சில மாதங்களுக்குப் பிறகு ராமகிருஷ்ணர் அவளுக்குக் கொடுத்த அந்த காட்சியை சிறிது சிறிதாக குறைத்து விட்டார். மானுட உடல் ஒரு அளவுக்கு மேல் இத்தகைய நிலையில் நிலைக்க இயலாது என்பதை புரிய வைத்தார். அவளுக்கு தியானம் செபம் போன்றவை எதுவும் தேவையில்லை விட்டு விடலாம் என்று அறிவுறுத்தினார். பழக்கதோஷத்தால் விட முடியாவிட்டால் குருதேவருக்காக செய் என்ற வழிமுறையையும் சொல்லிக் கொடுத்தார்.

ஒவ்வொருமுறையும் குருதேவரை சந்திக்கப் போகும்போது ஏன் அவர் தின்பண்டத்தைப் பற்றியே பேசினார் என்பது அகோரமணிக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத்தொடங்கியது. அவளைக் கண்டதும் அவர் பாலகோபாலனின் மனநிலையை அல்லவோ அவர் அடைந்து விடுகிறார். குழந்தையின் புத்தி தின்பதும் விளையாடுவதும் தானே. அது பல வருடங்களாக அவள் செய்த நாமசெபத்தின் முதிர்ந்த நிலை. குருவே அவள் முன் குழந்தையாக மாறிப்போனார். இதற்கு இடம் காலம் என்பனவெல்லாம் தடையல்ல.

இந்த மன நிலையை கபீர் அழகாக சித்தரிக்கிறார்.

कहैं कबीर गुरु प्रेम बस, क्या नियरै क्या दूर ।
जाका चित्त जासों बसै, सो तेहि सदा हज़ूर ॥

பத்தி போதும் குருவுக்கு, கபீரா, அருகென்ன தூரமென்ன ?
சித்தம் அவனுள் தோய்ந்தால், உடனே அருகில் இருப்பான்


மாற்று
குருவுக்கு அருகோ தூரமோ கபீரா, பக்தி செய்தால் போதும்
உணர்வும் அவனுள் கரைந்தால், முன்னே நிற்பான் எப்போதும்


குருவும் இறைவனும் வேறு வேறு அல்ல. அவனே இவன், இவனே அவன். ஆகையால் அவனையே நினைத்திருப்பவர்களுக்கு அவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இறையருள் கிடைத்துக் கொண்டே இருக்கும். ஏனென்றால் அவர்கள் வெளியே இல்லை. பக்தரின் உள்ளத்தின் உள்ளிருந்தே அல்லவோ செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதையே “யானும் தானாய் ஒழிந்தானே” என்று நம்மாழ்வார் போற்றுகிறார்.

உணர்வில் உம்பர் ஒருவனை
அவன தருளால் உறல்பொருட்டு என்
உணர்வின் உள்ளே இருத்தினேன்.
அதுவும் அவனது இன்னருளே
உணர்வும் உயிரும் உடம்பும்மற்
றுலப்பி லனவும் பழுதேயாம்
உணர்வைப் பெற வூர்ந்திறவேறி
யானும் தானாய் ஒழிந்தானே.


இந்த உடம்பு , உணர்வு, உயிர் மற்று உலகில் உள்ள எல்லா கவர்ச்சிகளும் பழுதுடையவையே என்ற உணர்வை என்னுள் தூண்டி அவனின்றி நானில்லை என்று ஆத்மாவில் நிலைப்பெறச் செய்து எனக்கும் அவனுக்கும் வித்தியாசமில்லாமல் செய்த இந்த அருள்கூட அவனது இன்னருளால் அன்றோ நடைபெறுகிறது என்று வியந்து பாடுகிறார் நம்மாழ்வார். ’உணர்வின் உள்ளே இருத்துதலைத்தான் தலையாயக் கடமையாக கபீரும் சொல்கிறார்.

ஜடாதரி வழங்கிய ராம்லாலா விக்ரகத்தில் தன் உணர்வை பதித்து குழந்தை ராமனை நேரில் தரிசித்து விளையாடி மகிழ்ந்த ராமகிருஷ்ணருக்கு அகோரமணியின் ஆன்ம சாதனை உள்ளம் கவர்ந்ததாயிற்று. அவளை எப்போதும் கோபாலேர்-மா [கோபாலனின் தாய்] என்றே குறிப்பிடுவார்.

நாத்திகம் பேசிய நரேந்தரிடம் அவளைக் கண்டு பேசுமாறு பணித்தார். கிராம மக்களுக்கே உள்ள எளிமையுடன் எழுத்தறிவில்லாத அகோரமணி குருதேவரின் அருளைக் கூறக்கூற நரேனுக்கு கண்ணில் நீர் பெருகியது. அவள் சொல்வது யாவும் சத்தியம் என்று அவர் உள்ளம் சொல்லியது. இறைவன் அன்பருக்கு எப்போதும் எளியவனே என்ற உண்மை புரிந்தது. அவளுடைய கடைசி காலம் வரை விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதா அவளுக்கு பணிவிடை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Monday, April 16, 2012

ராமநாமத்தின் மகிமை

ருமுறை ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தேடி ஒரு இளைஞன் வந்தான். அப்போது, அவர் ஆஸ்ரமத்தில் இல்லை. அருகிலுள்ள நதிக்கரைக்கு தியானத்துக்காக சென்றுவிட்டார்.பரபரப்புடன் வந்த இளைஞன், அங்கிருந்த சீடரிடம்,""ஐயா! என் குழந்தைக்கு உடம்பு சரியில்லை. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. குருதேவர் இங்கு இல்லை. நீங்களாவது அதைக் காப்பாற்ற வழி சொல்லுங்கள்,'' என்றான்.சீடர் அவனிடம்,""ஒரு காகிதத்தில் மூன்றுமுறை "ராம' என்று எழுது. அதைச் சிறிது தண்ணீரில் நனைத்து, அந்த நீரை குழந்தைக்குப் புகட்டு. சரியாகி விடும்,'' என்றார்.இளைஞன் சென்று விட்டான். மறுநாள், அவன் ஆஸ்ரமத்திற்கு மகிழ்ச்சியுடன் வந்தான். ராமகிருஷ்ணர் அங்கே இருந்தார். முந்தைய நாள் நடந்த விஷயத்தைச் சொல்லி, தங்கள் சீடரின் அறிவுரைப்படி மூன்றுமுறை ராமநாமம் எழுதிய காகிதத்தை நீரில் நனைத்து, அந்த நீரை குழந்தைக்குப் புகட்டியதையும், குழந்தை உயிர் தப்பியதையும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.ராமகிருஷ்ணருக்கு கோபம் வந்துவிட்டது. சீடனை அழைத்தார்.
""
முட்டாளே! ராமநாமத்தின் மகிமை உனக்கு தெரியாதா! ஒரு குழந்தையை உயிர் பிழைக்க வைக்கும் சின்ன விஷயத்துக்கா மூன்றுமுறை ராமநாமம் எழுதச் சொன்னாய். ஒரு தடவை எழுதினால் போதாதா! ராமநாமத்தின் மகிமை தெரியாத நீ ஆஸ்ரமத்தை விட்டு போய்விடு'' என்று கடிந்து கொண்டார்.சீடர் அவரது பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ராமகிருஷ்ணரும் அவரை மன்னித்தார். ராமநாமத்தின் உயர்வுக்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்!

Friday, April 13, 2012

கடவுளின் கையில் தான் இருக்கிறது-சுவாமி விவேகானந்தர்

மனிதன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அது நல்ல கடமையாகக் கூட இருக்கலாம். ஆனால், அது நிறைவேறுமா, நிறைவேறாதா என்ற முடிவு, கடவுளின் கையில் தான் இருக்கிறது.
கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, சிலருடன் ஆன்மிகம் குறித்த விவாதம் ஏற்பட்டது. ""கடவுள் நினைப்பதே நடக்கும், நம்மால் எதுவும் செய்ய முடியாது,'' என்று வாதிட்டார் சுவாமிஜி. இதை இரண்டு பயணிகள் மறுத்தனர். சுவாமிஜி, தன் கருத்தில் உறுதியாக நிற்கவே, ஆஜானுபாகுவான உடல் வாகு கொண்ட அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது.
""உம்மை தூக்கி கடலில் எறிகிறோம், உமது கருத்து சரியானால், கடவுள் உம்மைக் காப்பாற்றட்டும்,'' என்றபடியே, அவரருகே சென்று தூக்க முயன்றனர். ஆனால், மனபலம் மிக்க சுவாமிஜி, இருவரையும் சேர்த்துக் கட்டி தூக்கினார். கடலுக்குள் வீச முயற்சிக்கையில், ""மன்னியுங்கள்! மன்னியுங்கள்! நீர் சொன்னது சரி தான்! விட்டு விடுங்கள்!'' என்று கதறினர்.
அவர்களை சுவாமி விட்டு விட்டார்.
""இப்போது சொல்லுங்கள், என்னை கடலில் எறிய முயன்றது நீங்கள். ஆனால், உங்களை நோக்கியே அந்த அஸ்திரத்தைத் திருப்பினார் கடவுள். அது மட்டுமல்ல! உங்களை நான் கடலில் எறிய முயன்றேன். அதை உங்கள் கெஞ்சல் மூலம் தடுத்து நிறுத்தியதும் அவரது சித்தமே!'' என்றார்.
அவர்கள் வாய் திறக்காமல் சென்று விட்டனர்.

Wednesday, April 11, 2012

குருபெருமையைக் கூறும் கபீரின் தோஹாக்கள்....

குருவும் கோவிந்தனும் சேரவரின் பற்றும் சேவடி எவரதுவே
குருவின் கழலை வரித்திடு கோவிந்தன் வரவும் அவனருளே
கடவுளிடம் மனிதனை அழைத்துச் செல்வதே குருவின் திருவருள் தான். அதை எக்காலத்தும் மறக்கக்கூடாது என்பதை வேடிக்கையாகவும் நாசூக்காகவும் குறிப்பிடுகிறார் கபீர். கோவிந்தன் வடிவமாக கடவுளை உருவகித்து கபீர் சொல்வது என்னவெனில் கடவுளே நேரிலே வந்து விட்டாலும் குருவின் திருவடிகளை ஒருவன் மறக்கக் கூடாது என்பதே.
துவைப்பவன் ஆசான் துணிசீடன் திட்பமே கல்லாம்
துவைப்பின் மந்திர உறைக்கூட்டி ஒளிரும் சிவமேயாம்
( திட்பம் = மன உறுதி : உறை = அழுக்கு அகற்றும் உவர் நீர், மந்திர உறை என்பது மன மாசை அகற்றும் செபமந்திரம் )குருவன்றி ஞானமும் உண்டோ குருவன்றி வருமோ மோக்கம்
குருவன்றி சத்தியம் புரியுமோ குருவன்றி மாயுமோ மும்மலம்
(மோக்கம் = மோட்சம்)ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மலங்களும் மனிதன் தாண்டிச் செல்லவேண்டிய முப்பெரும் தடைகள். இவைகளால் சேர்ந்துள்ள மனமாசை துவைத்து சுத்தம் செய்யும் வல்லமை குரு ஒருவருக்கே உண்டு. துணியை கல்லின் மேல் அடித்து துவைக்க வேண்டும். குரு வைக்கும் ஒவ்வொரு சோதனையும் சீடனுடைய மனவுறுதி என்ற கல்லில் அடிப்பதற்கு ஒப்பாகும். அப்போது அவனுடைய துணைக்கு நிற்பது குரு உபதேசித்த செபமந்திரமே. அதை உறுதியாகப் பிடித்து கொண்டால் மன அழுக்குகள் கரைந்து சத்தியம் அசத்தியம் என்பவனெல்லாம் புரிய ஆரம்பிக்கிறது. ஆகவே குருவை விட வேறு யார் ஒரு சாதகனை கரையேற்ற வல்லார் ? சத்தியம் இல்லாதவனுக்கு ஞானம் எங்கிருந்து வரும் ? ஞானமும் குரு அருளும் இல்லாமல் மோட்சம் எப்படி வரும்? இப்படியாக ஒவ்வொரு நிலையிலும் வழிகாட்டுதல் என்பது இல்லாமல் முடியாது என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டுகிறார். 'ஸ்வாமி ராமா'வின் "Life with Himalayan Masters" என்ற புத்தகத்தை வாய்ப்பு கிடைப்பவர்கள் அவசியம் படியுங்கள். குரு கொடுக்கும் சோதனைகள் புரியும்

Monday, April 9, 2012

வேதாத்திரி மகரிஷி



கடவுள் யார்.... வாழ்க்கை என்றால் என்ன உலகில் ஏன் வறுமை உள்ளது என்ற கேள்விகளை தனக்குள் கேட்டு, அதற்கான பதிலை சமுதாயத்திற்குத் தந்தவர் தான் வேதாத்திரி மகரிஷி. 1911 - ஆகஸ்ட் 14ல் சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரியில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். பல ஆண்டுகளாக தொடர்ந்து அவர் மேற்கொண்ட தவம் மற்றும் ஆராய்ச்சியால் 35-வது வயதில் ஞானம் பெற்றார். தமிழகத்தில் வாழ்ந்த திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், வள்ளலார் போன்ற சித்தர்களின் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவர். மக்கள் அனைவரும் இன்பமாக வாழவே விருப்பப்படுகின்றனர். இயற்கையில் எல்லாம் இன்பமயமாகவே உள்ளன. ஆனாலும் மனிதன் தொடர்ந்து துன்பங்களையே அனுபவித்து வருவதாக உணர்கிறான். இத்துன்பங்களை போக்க மன நிறைவு பெற 4 விதமான பயிற்சியை மகரிஷி உருவாக்கியுள்ளார். எளியமுறை உடற்பயிற்சி, தியானப்பயிற்சி காயகல்பப்பயிற்சி, அகத்தாய்வுப்பயிற்சிகள் இவைகளை கற்றுத்தர 1958ல் உலக சமுதாய சேவா சங்கத்தை உருவாக்கினார். தனிமனித அமைதி, ஆகிய நோக்கங்களை கொண்டது தான் இம்மையம். 6 வயது முதல் 60 வயதுவரையுள்ள ஆண், பெண் அனைவருக்கும் கற்றுத்தரும் எளிய பயிற்சிகள் இவை. மகிரிஷி சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஆன்மிக, தத்துவப்பாடல்களை தமிழ், ஆங்கிலத்தில் இயற்றியுள்ளார். 1984-ல் பொள்ளாச்சி, அருகே ஆழியாற்றில், வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவி அங்கு ஓம் என்ற வடிவில் அறிவுத்திருக்கோயில் நிறுவப்பட்டுள்ளது. அங்கிருந்து தற்போது தனது சேவையை செய்து வருகிறார் மகரிஷி. இச்சங்கத்தின் கிளைகள் உலகம் முழுவதும் 225 ஊர்களில் செயல்படுகிறது

Thursday, April 5, 2012

Wednesday, April 4, 2012

மனிதமும் சனாதனமும்..................

மனிதம் என்பது அதிசயங்களும் அற்புதங்களும் கொண்ட ஒரு பேராற்றல் மிக்க அறிவு ஜீவிகளின் பொதுச் சொல்லாகும்.
மனிதம் தவிர்த்த ஏனைய உயிரிகள் அனைத்தும் கிட்டத்தட்ட மனிதத்தைப் போலவே ஒத்த வாழ்க்கையை வாழ்கின்றன.

உண்பதில் , உறங்குவதில், உய்வதில், உறவு கொள்வதில் என்று அத்தனை செயல்களிலும் எந்த வித்தியாசமும் இன்றி அவைகள் நிறைவேற்றிக் கொள்கின்றன. 

ஆம் , நமக்குப் பசிக்கிறது 
. அவைகளுக்கும் பசிக்கிறது . நமக்கும்  உடற்பசி உண்டு . 

 அவைகளுக்கும் உண்டு . நாமும்  வாழ்கின்றோம்.  அவைகளும் வாழ்கின்றன. நமக்கு உறக்கம் வாழ்கின்றதோ இல்லையோ பெரும்பாலும் அவைகள் கவலையின்றி உறங்குகின்றன. ஏன் மனிதன் மட்டும் சிறப்புள்ளவனாக கருதப் படுகின்றான். பிற உயிரினங்களில் இருந்து  எது நமக்கு சிறப்புத் தன்மையினை தருவதாக உள்ளது. 

அது ஆறாவது அறிவு என்ற ஒன்றா ?
அவ்வாறெனில் நம்மைவிடக் குறைந்த அறிவே உள்ள அவைகள் நம்மை விடக் குறைந்த அறிவே உள்ள அவைகள் நம்மை  விட நிம்மதியும் , கவலையும் இன்றி வாழ்கின்றனவே

 ஒருவேளை மானிடத்திற்கு உடல் பலமா, எனில் யானையும் சிங்கமும் சிறுத்தையும் போன்ற மிருகங்கள் நம்மை  விட பலமிக்கவையாக இல்லையா?

தீட்சண்யப் பார்வை சீரிய முகர்ச்சித் தன்மை (முகரும் தன்மை ) போன்றவைகள் நம்மை விட பறவைகளும் விலங்குகளும் பெற்றிருக்கின்றனவே.

ஒருவேளை மனமும் நினைவும் என்று சொன்னால் மனிதம் அல்லாத உயிர்கள் அவை வாழ்வதற்கு ஏற்ற படி எந்தவகை அறிவைப் பெற்றுள்ளன ? 

நம்மைப் போல் வருத்தமோ, துன்பமோ, கவலையோ கொள்வதாக தெரியவில்லையே . இவை அத்தனையும் மீறி ஏதோ ஒன்று சிறப்புற்றதாக இருக்க வேண்டும். அதுவே நம்மை உயர்ந்த அறிவுஜீவியாக்கி உள்ளது.

மனித உடல் இயல்பினில் மன இயல்பினில் பல மடங்கு நம்ப முடியாத அளவுக்கு உடலாற்றல் , மன ஆற்றல்களை  எழுச்சி பெறச் செய்வதோடு, அவ்விரண்டின் துணை கொண்டும் மூன்றாவதாக ஒரு பேராற்றலை பெறவியலும் என்பதே அது. 

 இயல்பாகவே வாழ்ந்து இயல்பாகவே மரிப்பதேன்றில்லாமல் நம்மையும் , இந்த நிலவுலகையும் இப்பேரண்டத்தின் பரிமாணத்தில் ஒப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை. அணுப்பொடியிலும் பொடியாக மிகச் சிறிய சொல்லப் போனால் குறிப்பிடுவதற்கு ஏதும் இல்லையென்ற  ஏதோ ஒரு வகைப் பரிமாணம் என்ற நினைவையும் இவ்வனைத்திற்கும் மேலான ஒரு  ஒரு உண்மை. 

இவ்வத்தனை பிரம்மாண்டத்தையும் படைக்கும் அதை ஆள்பவன் ஒருவன் இருப்பதும் அவன் யாராலும் எவற்றினாலும் படைக்கப் படாத நிரந்தரமான ஒரு இருப்பு என்பதோடு அந்த ரகசியத்தை  உணர்ந்து அதனைக் காண விழையும் பேரார்வம் மிக்க ஆன்மீக அறிவை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு ஜீவ எழுச்சியே மனிதத்தின் சிறப்பு. 

மனிதனுள் மறைத்து வைக்கப் பட்டிருக்கும்  ஒரு பேராற்றல் மனிதத்தைப் பிற உயிர்களினின்றும் அவனிடம் விஞ்சி நிற்பதாகும். 

இயற்கையினை அறிவதும் நம் இயல்பின் (சுயத்தின் ) அது ஆன்மாவாக இருப்பதே என்றும் , நம் சாதாரண உடல் , அறிவு சித்தம் என்பவற்றைக் கொண்டே அறியத்தக்கதாய் அமைந்துள்ளது என ஞானத்தைக் கொண்டு அறிந்து சொன்ன பண்டைய சித்தர்கள் , மகா புருஷர்கள் . 

 இவர்களுடன்  இறைவனும், தம் பங்கிற்கு அவசியம் ஏற்பட்ட போதெல்லாம் இறங்கிவந்து அவதாரப் புருஷர்களாய்  பாத்திரம் ஏற்று இப்பாரத பூமியினை , பவித்திரமான ஞான பூமியாக்கி மெய்ஞானச் சுடரை உணர, அதில் கலக்க, பல்வேறு முறைகள் இருப்பதால்  அவரவர்க்கு ஏற்ற மார்க்கத்தை மேற்கொண்டாலுமே உண்மையினை தொட்டு விடலாம் என்று வேதம் அதன் மூலத்தால் வெளிப்படுத்துகிறது

Monday, April 2, 2012

நாராயணனை வணங்குவோம்--ஆதிசங்கரர்

''ஹரியை நான் துதிக்கிறேன். அவன் சர்வவியாபி. இந்த உலகம் தோன்றுவதற்கு காரணமான பிறப்பும் இறப்பும் மாறி மாறி வருவதைக் குறிக்கும் வகையில் தான், சம்சார சக்கரம் அவனிடம் சுழல்கிறது. இந்த உலகம் அவனிடமிருந்தே தோன்றி உள்ளது. அது ஒன்றாக பிணைக்கப்பட்டிருப்பதும், இன்ப துன்பங்களின் மூலம் இயங்குவதும் அவனால்தான். அவன் ஆனந்தமே வடிவானவன். பூரணமாக இருப்பவன். எண்ணற்ற குணங்களை உடையவன். அவனையன்றி வேறு ஏதுமே இவ்வுலகில் இல்லை.அவன் அனைவருக்குள்ளும் வசிக்கிறான். அவனது உடலே நமது உடல். எல்லாம் தெரிந்த அவனை எவராலும் அறிய முடியாது. அவனே உண்மைப்பொருள். பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், அக்னி, சூரியன், சந்திரன், வாயு, வேள்வி என அவன் பலவிதமாக கூறப்படுகிறான்.
ஏக பரமாத்மாவாகிய அவன் விவரிக்க முடியாத இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டித்து அதன் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி ஐக்கியப்படுகிறான்.
சிரத்தை, பக்தி, தியானம், தன்னடக்கம் ஆகியவற்றின் மூலம் ஈசனை நாட முயல்வோர், இவ்வுலகிலேயே அவனை விரைவில் அடைவர். இவை இல்லாதவர்கள் நூற்றுக்கணக்கான பிறவிகள் எடுத்தபோதிலும் அவனை அடைய முடியாது.
விஷ்ணு பிரபுவே! என் கர்வத்தை அழித்துவிடு. என் மனத்தின் தீய போக்குகளை அடக்கு. விஷய இச்சைகளான கானல் நீரை நீக்கு. எவ்வுயிரின்பாலும் உள்ள உன் கருணையை என்னிடமும் காட்டு. இந்த சம்சார சாகரத்தினின்று என்னை விடுவித்துவிடு. பல அவதாரங்கள் எடுத்து உலகை நீ என்றும் காக்கிறாய். இவ்வுலக துன்பங்களைக்கண்டு அஞ்சி, இன்று நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்''.
ஆதிசங்கரர்

காசி விஸ்வநாதரை வழிபடுங்கள்

* 'நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தின் ஐந்து ழுத்துக்களும் சிவனையே குறிக்கிறது. அச்சிவனை நான் வணங்குகிறேன். அவன் நாகேந்திரனை மாலையாகக் கொண்டவன். முக்கண்ணன்; வெண்ணீறு பூசுபவன்; மகேஸ்வரன், நித்தியன், பூரணன், திசைகளை ஆடையாக உடையவன். நந்தியின் நாதன் அவன். மந்தாரை மலரும் இதர மலர்களும் அவனை அணி செய்கின்றன. தெய்வீக அன்னையான கவுரியின் தாமரை முகத்தை மலரச் செய்யும் உதய சூரியன். சதியை அவமானம் செய்த தக்கனின் வேள்வியை நாசம் செய்தவன். தேவர்களைப் பாதுகாக்க விஷத்தை உண்டு நெஞ்சில் அடக்கிக் கொண்ட நீலகண்டன். தன் கொடியில் எருதைச் சின்னமாகக் கொண்டவன்.
* வசிஷ்டர், அகஸ்தியர், கவுதமர் முதலிய மகரிஷிகளால் மட்டுமின்றி தேவர்களாலும் தேவர்களில் சிறப்பு மிக்கவன் என வழிபடப்பட்டவன்.
* சந்திரனும் சூரியனும் அக்கினியும் அவனுடைய முக்கண்கள். வேள்வியின் சொரூபம் அவன்.
* ஆசைகள் யாவற்றையும் துறந்தும், பிறரை நிந்திக்கும் இயல்பை ஒழித்தும், பாவவினைகள்பால் பற்று விடுத்தும், மனதைச் சமாதி நிலையில் திருப்பியும், இதயத்தாமரையில் அமர்ந்துள்ள விஸ்வநாதன் என்னும் மகேசனை தியானம் செய்யுங்கள். அவன் வாரணாசீபுரத்தின் (காசி) பதி. நாராயணப் பிரியன். தெய்வ அன்னையான கவுரியை தன் இடதுபக்கத்தில் அலங்காரமாகக் கொண்டவன். சந்திரனால் அழகுபெற்ற கிரீடமுடையவன். கங்கையின் நீர்த்திவலைகளுடன் கூடியதும், ரமணீயமானத் தோற்றமளிப்பதுமான சடை முடியுடையவன். முக்கண்ணன், நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட கோபாக்னியால் காமனைச் சுட்டெரித்தவன். இவனை வழிபட்டால் பாவம் நீங்கும்.

பயமில்லாதவர் யார்?


* தந்தைக்குக் கடனைத் தீர்த்து வைப்பதற்கு பிள்ளைகள் இருக்கின்றனர் ஆனால் அறியாமைத் தளையை நீக்கி விடுவிக்க அவரவரால் மட்டுமே முடியும்.
* சிரத்தையும், பக்தியும், தியானயோகமும் முக்திக்குக் காரணங்கள் என வேதம் கூறுகிறது. யார் இவைகளில் நிலைபெற்றிருக்கிறாரோ அவர் உலகத் தளைகளில் இருந்து விடுதலை பெறுகிறார்.
* உலகில் எங்கும் என்னைப் போல் பாவம் செய்தவரும் இல்லை. உன்னைப் போல் பாவத்தைப் போக்கும் சக்தி கொண்டவளும் இல்லை. தேவி! இந்த உண்மையை எண்ணிப் பார்த்து உன் இஷ்டம் போல செய்வாயாக.
* மனிதப்பிறவி, ஞானத்தில் நாட்டம், மகான்களின் தொடர்பு இவை மூன்றும் கிடைப்பது அரிது. தெய்வத்தின் அருள் காரணமாகவே இவை ஒருவனுக்கு கிடைக்கின்றன.
* பகவத் கீதையைச் சிறிதாவது படிப்பவன், கங்கை நீரை ஒரு துளியாவது பருகியவன், பகவானுக்கு ஒரு முறையாவது பூஜை செய்தவன்... இப்படிப்பட்டவனுக்கு எமபயம் கிடையாது.
* பொருள் தேடும்வரை சுற்றத்தினர் நம் மீது அன்பு வைத்திருப்பார்கள். நோயினால் தளர்ந்தபோன பின் யாரும் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.
ஆதிசங்கரர்

Sunday, April 1, 2012

காசி விஸ்வநாதரை வழிபடுங்கள்-ஆதிசங்கரர்

'நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தின் ஐந்து எழுத்துக்களும் சிவனையே குறிக்கிறது. அச்சிவனை நான் வணங்குகிறேன். அவன் நாகேந்திரனை மாலையாகக் கொண்டவன். முக்கண்ணன்; வெண்ணீறு பூசுபவன்; மகேஸ்வரன், நித்தியன், பூரணன், திசைகளை ஆடையாக உடையவன். நந்தியின் நாதன் அவன். மந்தாரை மலரும் இதர மலர்களும் அவனை அணி செய்கின்றன. தெய்வீக அன்னையான கவுரியின் தாமரை முகத்தை மலரச் செய்யும் உதய சூரியன். சதியை அவமானம் செய்த தக்கனின் வேள்வியை நாசம் செய்தவன். தேவர்களைப் பாதுகாக்க விஷத்தை உண்டு நெஞ்சில் அடக்கிக் கொண்ட நீலகண்டன். தன் கொடியில் எருதைச் சின்னமாகக் கொண்டவன்.
* வசிஷ்டர், அகஸ்தியர், கவுதமர் முதலிய மகரிஷிகளால் மட்டுமின்றி தேவர்களாலும் தேவர்களில் சிறப்பு மிக்கவன் என வழிபடப்பட்டவன்.
* சந்திரனும் சூரியனும் அக்கினியும் அவனுடைய முக்கண்கள். வேள்வியின் சொரூபம் அவன்.
* ஆசைகள் யாவற்றையும் துறந்தும், பிறரை நிந்திக்கும் இயல்பை ஒழித்தும், பாவவினைகள்பால் பற்று விடுத்தும், மனதைச் சமாதி நிலையில் திருப்பியும், இதயத்தாமரையில் அமர்ந்துள்ள விஸ்வநாதன் என்னும் மகேசனை தியானம் செய்யுங்கள். அவன் வாரணாசீபுரத்தின் (காசி) பதி. நாராயணப் பிரியன். தெய்வ அன்னையான கவுரியை தன் இடதுபக்கத்தில் அலங்காரமாகக் கொண்டவன். சந்திரனால் அழகுபெற்ற கிரீடமுடையவன். கங்கையின் நீர்த்திவலைகளுடன் கூடியதும், ரமணீயமானத் தோற்றமளிப்பதுமான சடை முடியுடையவன். முக்கண்ணன், நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட கோபாக்னியால் காமனைச் சுட்டெரித்தவன். இவனை வழிபட்டால் பாவம் நீங்கும்.