Saturday, March 31, 2012

என்னை விட்டால் உயர்ந்த பக்தன் யாரு???

தூக்கத்தில் கூட "கிருஷ்ணா, ராமா' என்று தானே கத்துகிறேன்,'' என்ற ஆணவம் சிலரிடம் இருந்தது. அவர்கள் தான் நாரதர், பிரகலாதன், திரவுபதி, அர்ஜுனன் ஆகியோர் இந்த நான்கு பேருக்குமே பாடம் புகட்ட கிருஷ்ணர் எண்ணினார். அர்ஜுனனை தேரில் ஏற்றிக் கொண்டு, காட்டுவழியே போய்க் கொண்டிருந்தார். வழியில், ஒரு மகரிஷி கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார்.
""கண்ணா! கமண்டலம் ஏந்த வேண்டிய இந்த மகான் ஏன் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறார். உனக்கு ஏதாச்சும் தெரியுமா?''
""எனக்கென்ன தெரியும்! நானும் உன்னோடு தானே வருகிறேன். இப்போது அது தெரிந்து நமக்கென்ன ஆகப்போகிறது. போவோம் நம் வேலையைப் பார்த்துக்கொண்டு..'' என அதில் அக்கறையே இல்லாதவர் போல் நடித்தார் அந்த மாயவன்.
அர்ஜுனன் அடம் பிடிக்கவே, தேரை நிறுத்தி விட்டு அவர் அருகே சென்று வணங்கினார்கள்.
""மகரிஷி! சாந்தமூர்த்தியான தாங்கள் தாங்கள் கத்தியைத் தீட்டும் நோக்கமென்ன!'' என்றனர்.
""அதுவா! நாரதன்னு ஒருத்தன் இருக்கிறானே! அவன் என் சுவாமி தூங்கும் நேரம் கூட பார்க்காமல், அவன் இஷ்டத்துக்கு வைகுண்டத்துக்குப் போய் "நராõயணா நாராயணா' என்று கத்தி தூக்கத்துக்கு இடைஞ்சல் செய்கிறான். அவனை குத்தப் போகிறேன்,'' என்றவரிடம், ""ஓஹோ!'' என்ற கண்ணன் கிளம்பத் தயாரானார்.
அவரை மகரிஷி நிறுத்தினார்.
""இன்னும் கேள்! பிரகலாதன்னு ஒரு பொடியன். எங்க சாமி எங்கேயும் இருக்கிறார்னு சொல்லி, எல்லா இடத்திலும் அவரை நிற்க வைத்து பதறடித்தான்.
ஒரு தூணுக்குள் இருப்பதாகச் சொல்லி அவரை மூச்சு விட முடியாமல் செய்தான். இப்படி அவரைத் துன்பப்படுத்திய அவனுக்கும், இந்தக் கத்தி பதில் சொல்லப்போகிறது,'' என்றவரிடம் "கிளம்பட்டுமா!'என்றார்கண்ணன்.
""இன்னும் கேளுங்க!'' என்று அவர்களை நிறுத்திய மகரிஷி, ""திரவுபதின்னு ஒருத்தி. அவளது சேலையை துச்சாதனன் பறித்தான். ஒன்றுக்கு அஞ்சு புருஷன் உள்ள அவள் புருஷன்மாரை கூப்பிட வேண்டியது தானே! கண்ணனைக் கூப்பிட்டாள். அவன் கை வலிக்க புடவை தந்தான். அவளும் என் கையில் சிக்கினால்...,'' என்று பற்களைக் கடித்த அவரை சாந்தம் செய்ய முயன்றான்கண்ணன்.
""இன்னும் கேளுங்கப்பா!'' என்றவர், ""இன்னும் ஒருத்தன் இருக்கிறானே,'' என்றார்.
""அட...சீக்கிரம் சொல்லுங்க சாமி! உங்க பட்டியல் நீண்டுகிட்டே போகுது. எங்க வேலையைப் பார்க்க போகணும்,'' என்ற கண்ணனிடம், ""அர்ஜுனன்னு ஒரு பயல் இருக்கிறானாம். அவனை இதுவரை நான் பார்த்ததில்லை. அவன் என் பரமாத்மாவையே தேர் ஓட்ட வைத்திருக்கிறான். உலகத்துக்கே எஜமான், அந்தச சிறுவனுக்கு வேலைக்காரனாக இருக்கிறார். கண்ணனையே வேலைக்காரனாக்கியவனுக்கு காத்திருக்கிறது கத்திக்குத்து,'' என்று முடித்தார்.
""பார்த்தாயா அர்ஜுனா! நீ மட்டுமே என்னிடம் பக்தி கொண்டதாக எண்ணாதே! இவரைப் போன்ற ஆயிரம் பக்திமான்கள் உலகில் இருக்கிறார்கள். அவர்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு எல்லையே கிடையாது,'' என்றார் கண்ணன்.
அர்ஜுனன் தன் அறியாமையை எண்ணி தலை குனிந்தான்

Friday, March 30, 2012

அன்பு செலுத்துவதில் உள்ள ஆனந்தம் வேறு எங்கினும் இல்லவே இல்லை-- காஞ்சி முனிவர்

தனக்கென்று பொருள் சேர்ப்பதில், புகழ் சேர்ப்பதில், அலங்காரம் செய்து கொள்வதில் தற்காலிக இன்பம் கிட்டலாம். ஆனால், இவற்றால் உள்ளம் நிறைவு பெறுவதில்லை. உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே உண்டாகிறது. அன்பு இல்லாமல், வெறும் மரம், மட்டை, கல் மாதிரி ஜடமாக இருப்பதில் பிரயோஜனம் இல்லை. அன்பில்லாத வாழ்வில் ருசியே இல்லை. அன்பு செலுத்தும்போது நமக்கு எத்தனை கஷ்டம் வந்தாலும், தேக சிரமம் வந்தாலும், பணச்செலவானாலும் தெரிவதில்லை. அன்பு செலுத்தாத வாழ்க்கை வியர்த்தமே. ஆனால், அன்புக்குரிய ஒருவரை விட்டுப் பிரியும்போது துக்கம் உண்டாகிறது. அன்புக்குரிய வஸ்து நம்மை விட்டு என்றும் பிரிந்து போகாததாக இருக்கவேண்டும். என்றும் மாறாத வஸ்துவாக இருப்பவர் பரமாத்மா மட்டுமே. அவர் மீது பூரணமான அன்பைச் செலுத்த வேண்டும். நம் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்தாலும் அவரை விட்டு நாம் பிரிவதில்லை. இதுவே சாஸ்வதமான அன்பாகும். ஈஸ்வரனிடம் இந்த அன்பை அப்பியாசிக்க ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக சமஸ்த ஜீவராசிகளுக்கும் (உலக உயிர்கள்) விஸ்தரிக்கவேண்டும். இதுவே ஜென்மம் எடுத்ததன் பயன்

இறைவனின் நாமத்திற்குச் சிறப்பு அதிகம்.

 மந்திரம்,ஸ்தோத்திரம், ஹோமம் இவை எல்லாவற்றையும் விட, இறைவனின் நாமம் (பெயர்) சொல்வது மிக எளிமையானது. ராமா, கிருஷ்ணா என்று சொல்வதில் என்ன சிரமம்! இது அபரிமிதமான பலன் தரவல்லது என பெரியோர்கள் கூறுகின்றனர்.
* கலியுகத்தைக் கடப்பதற்கு நாமஸ்மரணம் என்னும் இறைநாமத்தை ஜெபிப்பதே சிறந்தது என ஞானிகள் கூறுகின்றனர்.
* நாரதர், சுகபிரம்மம், பிரகலாதர், உத்தவர் போன்ற மகான்கள் ஆதிகாலத்தில் இறைநாமத்தின் மகிமையை உலகிற்கு எடுத்துரைத்தனர்.
* வைகுண்டபதியான நாராயணனே நாம சங்கீர்த்தனத்தின் சிறப்பை எடுத்துக்காட்ட கிருஷ்ண சைதன்யராக அவதரித்தார். நாமத்தின் பெருமையை, ""கேட்டதை தரும் கற்பக விருட்சம்'' என குறிப்பிடுகிறார்.
* கபீர்தாசர், சூர்தாசர், துக்காராம், ஞானேஸ்வரர், ஏக்நாத், சோகாமேளர், ஜக்குபாய், மீரா முதலிய ஞானிகள் கலியுகத்தில் அவதரித்து நாமசங்கீர்த்தனத்தின் பெருமையை நிலைநாட்டியுள்ளனர்.
* போதேந்திர சுவாமிகள், சத்குரு ஸ்ரீதர ஐயாவாள், மருதாநல்லூர் சத்குருசுவாமி பஜனை சம்பிரதாயத்தை தென்னகத்தில் பரப்பினர்.
* கடலிலேயே பெரிய கடல் பிறவிக்கடல். நாமஸ்மரணத்தில் ஈடுபடுவர்கள் பிறவிக்கடலை சுலபமாக தாண்டி விடுவர். கோடி ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பயனாக மட்டுமே, ஒருவரது மனம் இதில் ஈடுபடும் என துளசிதாசர் கூறுகிறார்.
* எங்கெல்லாம் ராமநாமம் ஜெபிக்கப்படுகிறதோ அந்த இடத்தில் ராமதூதர் ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்புரிவார்.
* ஹரிநாமம் ஜெபிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. காலநேரம் பார்க்கத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் ஜெபிக்கலாம். இதனால் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும். அந்த வீடே வைகுண்டம் போலாகிவிடும் என்று ஞானேஸ்வரர் குறிப்பிடுகிறார்.
* ராமானுஜர் எல்லோரும் மோட்சத்திற்குச் செல்லவேண்டும் என்பதற்காக, ""ஓம் நமோ நாராயணாய' என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்து அருள்செய்தார்.
* ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் பகவான் நாம மகிமையைக் கூற முடியாமல் ஓய்ந்து விட்டதாக ஸ்ரீதர ஐயாவாள் குறிப்பிடுகிறார்.
* எட்டெழுத்து மந்திரமான நாராயணநாமத்தின் பெருமையை திருமங்கையாழ்வார், ""நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்,'' என்று போற்றுகிறார்.
* இறைநாமத்தை ஜெபித்தால் உயிரும் உள்ளமும் உருகுவதாக கூறுகிறார் வள்ளலார்.
* இதயத்தின் ஆழத்தில் இருந்து பக்தியுடன் தனியாகவோ, கோஷ்டியாகவோ நாமசங்கீர்த்தனம் செய்யும்போது இறைவன் நம்மைத் தேடி வருவது உறுதி.
* இசையோடு நாமசங்கீர்த்தனம் செய்யும் போது இறைவனும் நம் இசைக்கேற்ப நர்த்தனமாடி வருவான். நம் இதயக்கோயிலில் ரத்தினசிம்மாசனம் இட்டு அமர்வான். அப்போது பரமானந்தம் நம்முள் ஊற்றெடுக்கும்.
* இந்த ஆனந்த அனுபவத்தை பிறருக்கு எடுத்துரைக்க முடியாது. கரும்பின் இனிமையை வார்த்தைகளால் எப்படி வர்ணித்தாலும் கரும்பைச் சுவைத்தவரைத் தவிர மற்றவர்க்கு அதனை உணரமுடிவதில்லை.
* இறைநாமத்தின் சிறப்பை "நாமருசி' என்று குறிப்பிடுவர். இதனை ரசித்து ருசித்தால் தான், நம் பிறவி அர்த்தமுள்ளதாகும்.

Sunday, March 25, 2012

ஒருவர் தான் செய்த தவறுக்கு கடவுள் எப்படிப் பொறுப்பாவார்???

ரு ஆஸ்ரமத்தில், வேதாந்த பாடம் நடத்திக் கொண்டிருந்த குரு, ""உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் கடவுளின் அம்சம்,'' என்று போதித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பசு தோட்டத்தில் உள்ள பயிர்களைத் தின்று கொண்டிருந்தது. சிஷ்யர்களின் கவனம் பசுவின் மீது செல்லத் தொடங்கியது.
ஆத்திரமடைந்த குரு, பசுவை தடியால் பலமாக அடித்தார். அந்த இடத்திலேயே பசு இறந்து போனது. பசுவின் உரிமையாளர் குருவிடம் வந்து நஷ்ட ஈடு கேட்டார். அதற்கு குருவோ, ""பசுவும் பிரம்மம். நானும் பிரம்மம். உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் பிரம்மம் (கடவுள் அம்சம்). பிரம்மத்தைப் பிரம்மம் அடித்தது. பிரம்மம் பிரம்மத்திடம் சென்றுவிட்டது, அவ்வளவு தான்,'' என்று பதில் அளித்தார்.
பதிலைக் கேட்ட பசுவின் உரிமையாளர் செய்வதறியாமல், வழியில் சென்ற துறவி ஒருவரை அழைத்து குருவிடம் நியாயம் கேட்கும்படி வேண்டினார்.
துறவி குருவிடம், ""இங்கே பாடம் நடத்துவது யார்?'' என்றார்.
""நான் தான்'' என்றார் குரு.
""இந்த தோட்டம், ஆஸ்ரமம் இவற்றை எல்லாம் பராமரிப்பவர் யார்?''
அதற்கும், ""நான் தான்'' என்றார் குரு.
சந்நியாசி குருவிடம், ""இதற்கெல்லாம் பதில் "நான்' என்றால் பசுவைக் கொன்றதும் தாங்கள் தானே!'' என்றார்.
தவறை உணர்ந்த குரு, பசுவின் உரிமையாளருக்கு நஷ்டஈடு தர ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டார்.
ஒருவர், தான் செய்த தவறை, கடவுள் தான் செய்ய வைத்தார் என்று சொல்லி காரணம் கற்பிக்கக்கூடாது, புரிகிறதா!

Saturday, March 24, 2012

மனதை நான் கொடுக்கிறேன்

கருடவாகனத்தில் பவனி வந்தார் பெருமாள். பக்தர்கள் வெற்றிலை, பாக்கு, துளசி, பழம், கல்கண்டு சமர்ப்பித்து வணங்கினர். ஒருவர் மட்டும் பூஜைக்காக எதுவும் வாங்கி வைக்கவில்லை. ""பெருமாளே! எல்லாரும் உனக்கு பூ, பழம் என தந்தார்கள். இவையெல்லாம் உன்னிடம் இல்லையா என்ன! உன்னிடம் இல்லாததைக் கொடுத்தால் தானே பெருமை! அதை நான் தருகிறேன்,'' என்றார். பகவான் ஒரு கணம் அசந்து அவரைப் பார்த்தார். ""பகவானே! துவாபரயுகத்தில் உன் மனதை கோபியர்களிடம் பறி கொடுத்துவிட்டாய். உன்னிடம் இல்லாத மனதை நான் கொடுக்கிறேன், ஏற்றுக் கொள்,'' என்றார் அவர். அவர் தான் சுவாமி தேசிகன். தான் பாடிய யதிராஜ ஸப்ததியில் இப்படி குறிப்பிடுகிறார்

Friday, March 23, 2012

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் 1836-ல் பிறந்தவர். 
நமது ஆன்மிக இந்தியாவில் சாதுக்களுக் கும் தபஸ்விகளுக்கும் குறைவே இல்லை. ஆனால் எல்லாருடைய பெயர்களையும் யாவரும் அறிவதில்லை; பிரபலமாவதும் இல்லை. பொதுவாக ஞானிகள் தங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். என்றாலும் சீடர் களாலும் அன்பர்களாலும் அவர்கள் வெளியுலகுக்குத் தெரிய வருகின்றனர்.

காஞ்சி மகா பெரியவரும் பால் பிரண்டனும் சொல்லாமலிருந்தால், ரமண மகரிஷியை உலகம் பரவலாக அறிந்திருக்காது. பரமஹம்ச யோகாநந்தர் இல்லாவிட்டால் மகா அவதார் பாபாவைப் பற்றி அறிய நேர்ந்திருக்காது. அதுபோல சுவாமி விவேகானந்தர் இல்லாவிடில் ராமகிருஷ்ண ரைப் பற்றியும் வெளியுலகுக்கு பரவலாகத் தெரிந்திருக்காது.

இன்று உலகெங்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள் ஆன்மார்த்தமாக வணங்கும் ஆன்மிக குருவாக விளங்கிக் கொண்டிருக் கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அவ்வளவு பேருக்கும் அருவ நிலையில் நின்று அருள்புரியும் பேராற்றல் யாருக்கு இருக்கும்? இறை அவதாரத்துக்கே இருக்கும். ராமகிருஷ்ணரும் ஒரு அவதாரமே.
ராமகிருஷ்ணரின் தந்தை க்ஷீ திராம் சத்தியசீலர். ஒரு பொய் கூற மறுத்ததால், தன் எஜமானரால் ஊரைவிட்டு வெளியேற்றப் பட்டவர். ஒருமுறை அவர் தனது முன்னோர் களுக்கு சிரார்த்த கர்மங்கள் செய்ய கயையில் உள்ள விஷ்ணுபாதம் தலத்துக்குச் சென்றிருந்தார். அன்று இரவு அவர் கனவில் தோன்றிய மகாவிஷ்ணு, "உமது பக்திக்கு மகிழ்ந்தோம்; உமக்கு மகனாக அவதாரம் செய்வோம்' என்று கூறினாராம். அவரோ, "சுவாமி, நான் பரம ஏழை. என்னால் உங்களை சிறப்பாகப் பராமரிக்க இயலாதே...' என்று கூற, "நீ பக்தியுடன் அளிக்கும் எளிய உணவே போதும்' என்று சொல்லி மறைந் தாராம். கண்விழித்தெழுந்த க்ஷீ திராம் கனவில் கண்டதை எண்ணி பிரம்மித்தார். திருமாலின் பெருங்கருணையை நினைத்து உள்ளம் பூரித்தார். அந்த மனநிறைவோடு தான் வசித்த கமார்புகூர் வந்து சேர்ந்தார்.
அங்கு அவர் மனைவி கூறிய செய்தி அவரை மேலும் ஆச்சரியப்படுத்தியது.
அதாவது- அவ்வூரிலுள்ள சிவாலயத்துக்கு அவள் வழிபடச் சென்றபோது, சிவலிங்கத் திலிருந்து ஒரு பேரொளி தோன்றி அவளுக் குள் புகுந்ததாகவும்; அவள் நெடுநேரம் அங்கேயே மூர்ச்சித்துக் கிடந்ததாகவும்; பின்னர் கண்விழித்தபோது தான் கருவுற்றி ருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் கூறினாள். நெகிழ்ந்த க்ஷீ திராம், "இந்த ஆன்மிக ரகசியத்தை யாரிடமும் கூற வேண்டாம்' என்றார். அவ்வாறு இறையருளால் அவதரித்தவரே ராமகிருஷ்ணர்.

சைதன்ய மகாப்பிரபுவும் இவ்வாறு அவதரித்தவர்தான். ராமகிருஷ்ணரே தான் சைதன்யரின் மறு அவதாரம் என்று கூறினார். சைதன்யர்போல பலருக்கு காட்சி யும் கொடுத்தாராம். சைதன்யர் ஒரு காஷ்ட சந்நியாசி; இருதாரம் மணந்தவர்; படித்த மேதை. ராமகிருஷ்ணரோ கல்வி பயிலாதவர். ஆனால் அவர் பேசியது எல்லாமே வேதாந்தம், உபநிடதம். ராஜாஜி அவர்கள் ராமகிருஷ்ணரின் வாக்குகளை "ஸ்ரீராமகிருஷ்ண உபநிடதம்' என்று கூறியிருக்கிறார்.

ராமகிருஷ்ணரின் அண்ணன் ராம்குமார் தட்சினேஸ்வர காளி கோவிலில் பூசாரியாக பணி செய்து வந்தார். அருகே சிவன், ராதாகிருஷ்ணர் சந்நிதிகளும் உண்டு. இளம் வயது ராமகிருஷ்ணருக்கு கல்வியில் நாட்டமில்லாததால், அண்ணனுக்கு உதவியாக காளி கோவிலுக்குச் சென்றார். ராதாகிருஷ்ணர் சந்நிதியில், சுவாமியின் பாதங்களுக்கு அருகே பாகவதமும், வால்மீகி ராமாயணமும் வைக்கப்பட்டிருக்கும். பாகவதம் கண்ணனின் லீலைகளை விரிவாகக் கூறும் நூல். அங்கு அமர்ந்து ராமகிருஷ்ணர் தியானம் செய்யத் தொடங்கி னார். அவரது பக்தி ஈடுபாட்டின் காரண மாக அந்த ராதாகிருஷ்ணன் பாகவதத்தில் புகுந்தார்; பாகவதம் ராமகிருஷ்ணருக்குள் புகுந்தது. அவர் கூறினார்: "பகவான், பாகவதம், பாகவதன் யாவும் ஒன்றே!' எத்தகைய அத்வைத தத்துவம்!
ராமகிருஷ்ணர் காளி தேவிக்கு பூஜை செய்ய நியமிக்கப்பட்டார். அந்த அன்னையை தியானித்து வணங்கிய ராமகிருஷ்ணர், அவளது தரிசனத்தை வேண்டினார். ஆனால் தரிசனம் கிட்டாமல் நாட்கள் கடந்தன. ஒருநாள் அவரது பக்தி மிகவும் முற்றியது. பவதாரிணி அன்னையின் தரிசனம் காணாமல் இந்த உயிர் எதற்கு என்று தீர்மானித்த அவர், அன்னையின் கரத்திலிருந்த வாளையே எடுத்து தன் தலையை வெட்டப்போக, அன்னை அவருக்கு பிரத்தியட்சமாகக் காட்சி தந்தருளினாள்
ராமகிருஷ்ணரைப் போன்ற உச்சநிலை பக்தர்களைக் காண்பது அரிது. அன்னைக்கு பூஜை, நிவேதனம் செய்யும் சமயம் பாவ சமாதி நிலை ஏற்பட்டுவிட்டால், தனக்கே பூஜையும் நிவேதனமும் செய்துகொள்வாராம்.
 
ஒருமுறை அவர் அன்னைக்குப் பூஜை செய்து கொண்டிருக்கும்போது, அரசி ராஸ்மணி தேவி வந்தாளாம். அவளது மனம் முழுமையாக அன்னையிடம் ஈடுபடவில்லை. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருந்தது. அதுபற்றிய கவலை அவள் மனதை ஆக்ரமித்திருந்தது. இதையுணர்ந்த ராமகிருஷ்ணர், "அன்னையின் சந்நிதியில் வேறு நினைவா?' என்று அரசியின் கன்னத் தில் அறைந்தாராம். பார்த்த அனைவரும் என்ன ஆகுமோ என்று அஞ்சி நிற்க, அரசியோ, "தவறு என்மீதுதான்' என்றாளாம்.
பைரவிப் பிராம்மணி என்றொரு யோகினி. அவள் ராமகிருஷ்ணரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைக் காண தட்சிணேஸ் வரத்துக்கு வந்தாள். ராமகிருஷ்ணரின் நடை, பாவனை, முக லட்சணங்களைப் பார்த்ததுமே அவர் ஒரு அவதார புருஷர் என்பதைக் கண்டு கொண்டாள். முதிர்ந்த ஞானிகள் கொண்ட சபையைக் கூட்டி, அவரை பரிசீலனை செய்யச் சொல்லி, அவர் ஒரு அவதார புருஷர் என்று உணர்த்தினாள். சாக்த வழிபாட்டை ராமகிருஷ்ணருக்கு தீவிரமாக போதித்தவள் இந்த யோகினியே. ராமகிருஷ்ணர் எந்த குருவையும் தேடிச் சென்றதில்லை. குருமார்களே இவரைத் தேடிவந்து போதித்தனர்.
ஒருமுறை சீதாராம தரிசனம் காண, பஞ்சவடியில் தன்னை அனுமனாக பாவித்து தவம் மேற்கொண்டார். தீவிர உபாசனையில் அவரருகே ஒரு கருங்குரங்கு வந்து அமர்ந்த தாம். இந்த நிலையில் சீதை அவருக்கு தரிசனம் தந்து அவருள் மறைந்தாளாம்.
அதன்பின் ராமரும் தரிசனம் தந்து அவருள் மறைந்தாராம். எனவே, அனுமனைத் துதித் தால் சீதாராம தரிசனம் காணலாம் என்பர்.
அதுபோல கிருஷ்ண தரிசனம் காண, தன்னை ராதையாக பாவித்து தியானம் செய்தாராம். பெண்களைப்போலவே புடவை, ரவிக்கை, அணிகலன்கள் பூண்டு, பெண்கள்போலவே பேசிப் பாடினாராம்.
அந்த தீவிர மாதுர்ய பக்திரச சாதனையில், ராதா தேவி தரிசனம் தந்து அவருள் மறைய, அவளைத் தேடி வந்த கிருஷ்ணரும் காட்சி தந்து அவருள் மறைந்தாராம்.
சம்புசரண் மல்லிக் என்பவர் ஒரு ஆழ்ந்த கிறிஸ்துவ பக்தர். அவர் ஒருமுறை ராமகிருஷ்ணருக்கு பைபிளைப் படித்துக் காட்டினார். அதைக் கேட்ட ராமகிருஷ்ண ருக்கு ஏசுமீது ஈடுபாடு உண்டாயிற்று. சம்புசரண் வீட்டில் மேரியுடன் உள்ள குழந்தை ஏசுவின் படம் இருந்தது. அதையே உன்னிப்பாக தியானித்தார் ராமகிருஷ்ணர். படம் உயிருடன் பிரகாசித்தது. அதிலிருந்து தோன்றிய ஒளி ராமகிருஷ்ணருக்குள் புகுந்தது. ஏசுவின் நினைவிலேயே மூன்று நாட்கள் மூழ்கியிருந்தாராம். பிரபுதயாள் சர்மா என்ற ஏசுபக்தர் 31-8-1885-ல் அவரைக் கண்டு, ஏசுதான் இந்த ராமகிருஷ்ணர் என்று பூஜித்து வணங்கினாராம்.
அவருக்கு அல்லாமீதும் ஈடுபாடு இருந்தது. தனது ஒன்பதாவது வயதிலேயே கமார்புகூரில் இருந்த மசூதிக்கு நமாஸ் செய்யச் சென்றிருக்கிறார்.
அங்குள்ள அரச மரத்துக்குக் கீழே ஒளிமயமான ஒருவரை தரிசித்து, அந்த உன்மத்த நிலையில் இரண்டரை மணி நேரம் இருந்தாராம். பின்னர், பஞ்சவடியில் 1866-ல் கோவிந்த ராய் என்ற ஸுபி யோகி, குரானைப் பற்றியும் ஸுபி தத்துவங்களையும் ராமகிருஷ்ணருக்கு போதித்திருக்கிறார். அப்போது இஸ்லாமியத்தின்பால் ஈர்க்கப்பட்ட அவர், அவர்களைப்போலவே உடையணிந்து "அல்லா அல்லா' என்று ஆழ்ந்து துதித்து நமாஸும் செய்திருக்கிறார். அந்த உச்ச நிலையில் மூன்று நாட்கள் கழிந்தபோது, பெரிய தாடியுடன் கூடிய- ஒளி மிகுந்த முகம்மதுவையும் தரிசித்தாராம்; அவரும் ராமகிருஷ்ணருள் புகுந்தாராம்.
இவ்வாறு எண்ணற்ற தெய்வீக அனுபவங்களைக் கண்டவர் ராமகிருஷ்ணர். அவர் மற்றவர்களுக்கு தெய்வ வடிவங்களில் காட்சியளித்த சம்பவங்களும் ஏராளம்.
அவரது வாழ்க்கை ரகசியம் ருசிக்க ருசிக்கத் திகட்டாத ஆன்மிகப் பேரமுதம்!

Thursday, March 22, 2012

இறைவனுடைய புகழைப் பேசுவதாலும், கேட்பதாலும் புனிதர்களாக மாறுகின்றோம்-- காஞ்சி முனிவர்

 இறைவனுடைய அருள் இல்லாமல் உலகம் இயங்காது.
* கடமைகளை ஆன்மிக சிந்தனையோடு செய்தால், ஒழுக்கம், கட்டுப்பாடு, மனத்தூய்மை ஏற்பட்டு, உண்மையான பக்தியும், அறிவும் கைகூடும்.
* நாம் அலங்காரம் செய்தால் அகங்காரம் ஏற்படும். அதே அலங்காரத்தை அம்பாளுக்குச் செய்தால் பாவம் தொலையும்.
* அறிவுச் சக்தியும், அறிவியல் ஆற்றலும் அதிகமாகிக் கொண்டிருப்பதால் தான், உலகிற்கு ஆபத்து அதிகமாகிக் கொண்டிருக்கிறது. பக்தியும், அமைதியும் தான் உலகில் இன்று ஏற்பட்டுள்ள கோளாறுக்கு ஏற்ற மருந்து.
* இறைவனிடம் நாம் பெற்றிருக்கும் மனம், வாக்கு, உடம்பு இவற்றால் செய்யும் செயல்கள் அனைத்தும் தர்ம சிந்தனையுடன் இருக்க வேண்டும். குணத்தாலும், உடலாலும், மனதை தூய்மைப்படுத்திக் கொள்ளும் முறையில் செயல்களைச் செய்ய வேண்டும்.
* "ஹரஹர' என்று ஜெபிப்பதால் துன்பம் நீங்கும் என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நிம்மதி தேடி எங்கெங்கோ அலைகிறோம். இருக்குமிடத்தில் இதைச் செய்ய மனம் மட்டும் ஒத்துழைக்க வேண்டும்.
* நடிகன் பல வேஷம் போட்டாலும், ஆள் ஒருத்தன் தான். அதேபோல் எத்தனை ஜீவராசிகள் இருந்தாலும், அவற்றுக்கு உள்ளேயிருக்கிற ஆள், சுவாமி ஒருத்தர் தான்.
* கவலை, குறை மட்டும் தான் பாரம் என்றில்லை, தன்னைப்பற்றிய பெருமையும் பெரிய பாரம் தான். அதனைக் குறைத்துக் கொள்வது நல்லது.
* வழிபாட்டு முறை எதுவாக இருந்தாலும், பக்தி அனைவருக்கும் பொதுவானதே.
* உலகம் பல வண்ணங்களைப் பூசிக் கொண்டிருக்கிறது. வண்ணம் கலைந்த பிறகு எஞ்சியிருப்பது உண்மைப் பொருளான இறைவன் மட்டுமே.
* ஓடி ஓடி சம்பாதித்தாலும் மறுபிறவிக்கு அவை துணை வருவதில்லை. அதனால் நியாயமான வழியில் பொருள் தேடி, அதன் மூலம் தேவைகளை நிறைவேற்றி மகிழுங்கள்.
* தேவையை எவ்வளவுக்கு எவ்வளவு குறைத்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவளவு அமைதியும், சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கும்.
* பாவம் நீங்க ஒரே வழி தியானம் செய்வது தான். தியானத்திற்காக தினமும் சிறிது நேரமாவது ஒதுக்குங்கள். அதே நேரம் புதிதாகப் பாவம் செய்யாமல் இருப்பதும் அவசியம்.
* தூய்மையோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எங்கு சென்றாலும் அங்கு நல்ல முறையில் மகிழ்ச்சியை உருவாக்க வேண்டும்.
* நல்ல மனமுள்ளவர்கள், ஒருவரைப் பூஜை செய்கிறார்கள் என்றால், அப்படிப் பூஜிக்கப் படுபவரும், ரொம்ப நல்ல மனம் படைத்தவராகத் தான் இருப்பார்.
* புத்தியை சுத்தப்படுத்திக் கொள்ள கல்வி, மனதை சுத்தமாக்க தியானம், வாக்கைச் சுத்தமாக்க ஸ்லோகம் இருக்கின்றன. இவற்றை வாழ்க்கையில் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்

 
 

Wednesday, March 21, 2012

உணவும் உள்ளுணர்வும்!

பாஞ்சாலியையே கனிவாகப் பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன். இன்னமும் தலையை விரித்துப் போட்டவாறுதான் இருக்கிறாள் அவள்.
மகாபாரத யுத்தம் இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. "பாவி துச்சாதனன் செந்நீர், பாழ்த்துரியோதனன் ஆக்கை ரத்தம் மேவி இரண்டும் கலந்த குழல் மீதினில் பூசிக் குளித்த பின் தான் தலைமுடிவேன்' என்று சபதம் செய்திருக்கிறாளே? சபதத்தை நிறைவேற்ற வேண்டியதும் கண்ணன் பொறுப்புத்தான்.
"எல்லாவற்றையும் கண்ணனிடமே விட்டுவிடுபவள் இன்று மட்டும் நான் செல்லுமிடத்திற்கு உடன்வர மறுக்கிறாளே? இவள் மனத்தை மாற்றி நான் இப்போது செல்லுமிடத்திற்குக் கட்டாயம் இவளையும் அழைத்துச் சென்றாக வேண்டும்.
அங்கே தான் இவளுடைய சந்தேகத்திற்கு விளக்கம் கிடைக்கும்'.
கண்ணனிடம் பாஞ்சாலி கேட்டாள்: ""கண்ணா! நடந்துகொண்டிருக்கிற இந்த பாரத யுத்தம் எப்போது முடியும்?''
""முடியும்போது முடியும்!''
""இது ஒரு பதிலா? பீஷ்ம பிதாமகர் மரணப் படுக்கையில் இருக்கிறார். இரு தரப்பு சேனைகளும் திகைத்து நின்றுவிட்டன. இந்தச் சூழலிலும் உன் கிண்டல் மட்டும் போகவில்லை!''
""நான் கிண்டல் செய்யவில்லை. உண்மையைத்தான் சொன்னேன். உன் கூந்தலை நீ முடியும்போது யுத்தம் முடியும் என்றேன்!''
திரவுபதி கலகலவென்று சிரித்தாள்.
""அதுதான் கேட்கிறேன். கூந்தலை நான் எப்போது முடிவது? யுத்தம் என்றைக்கு முடியும்? பீஷ்மர் ஸித்தி அடைந்துவிட்டால் துரியோதன் தரப்பு வலுவிழந்துவிடும் அல்லவா?''
""பீஷ்மருக்குப் பிறகு கர்ணன் இருக்கிறான். அர்ஜுனனுக்கு இணையான வீரன். தர்மம் அவனைக் காத்துக் கொண்டிருக்கிறது. அவனிடமிருந்து அர்ஜுனன் தப்பிக்க வேண்டும். இன்னும் நடக்க வேண்டியவை எத்தனையோ! அதெல்லாம் இருக்கட்டும்.
இப்போது நான் கூப்பிடும் இடத்திற்கு நீ ஏன் வர மறுக்கிறாய்? அதைச் சொல்!''
""எல்லாம் தெரிந்துகொண்டு ஒன்றுமேதெரியாததுபோல் பேசுவதில் வல்லவன் அல்லவா நீ? பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். தான் இறக்க நல்ல நேரத்தைத் தேர்ந்தெடுத்து மரணத்திற்காகக் காத்திருக்கிறார். அவரிடம் அறிவுரை பெற பாண்டவர்கள் ஐவரும் சென்றிருக்கிறார்கள். அங்கே என்னையும் வரச் சொல்கிறாய் நீ. நான் எப்படி வருவேன்?''
அப்பழுக்கற்ற முதியவர். கடும் பிரம்மச்சாரி. உன்னைப்போல் அவரும் என் தீவிர பக்தர். அவரை ஒருமுறை சென்று இறுதியாக தரிசிப்பதில் என்ன தயக்கம்?''
""துரியோதனன் அவையில் துச்சாதனன் என் துகிலை உருவ முனைந்தபோது பீஷ்மர் ஏன் எதுவும் பேசாமல் தலைகுனிந்து நின்றிருந்தார்? இந்த மாபாதகச் செயலைச் செய்யாதே என்று ஏன் அவர் உரத்துக் குரல் கொடுக்கவில்லை? அதர்மத்திற்குத் துணைபோனவர் எப்பேர்ப்பட்ட மகானாகத்தான் இருக்கட்டும். அவரிடம் அறிவுரை பெறவேண்டிய அவசியம் எனக்கில்லை. என் கணவர்களுக்கு அந்த அவசியம் இருந்து அவர்கள் போயிருக்கிறார்கள். அதை நான் தடுக்கவில்லையே?''
கண்ணன் பாஞ்சாலியை மீண்டும்பரிவுபொங்கப் பார்த்து, மெல்லச் சொல்லலானான்: ""துரியோதனன் சபையில் அவர் ஏன் அப்படி நடந்துகொண்டார் என்ற கேள்வியை அவர் மரணமடைவதற்கு முன் அவரிடமே கேள். பதிலைத் தெரிந்து கொண்டால் உனக்கு விவரம் புரியும்!''
திரவுபதி யோசித்தாள். சரி... தன் கேள்வியை பீஷ்மரிடமே கேட்போம் என முடிவுசெய்தாள். கண்ணனைப் பார்த்து நகைத்தாள்: ""எப்படியும் நீ என்ன நினைக்கிறாயோ அதை நீ நடத்திக் கொண்டுவிடுவாய். சரி. நீ முன்னே நட. நான் உன்னைப் பின்பற்றுகிறேன். எப்போதும் நான் உன்னைப் பின்பற்றுபவள் தானே?''
கண்ணனும் பாஞ்சாலியும் பீஷ்மர் படுத்திருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். ஆகாயத்தைப் பார்த்தவாறு அம்புப்படுக்கையில் படுத்திருந்த பீஷ்மர்,
""அர்ஜுனா! தாகமாக இருக்கிறது!'' என்றார்.
மறுகணம், ""இதோ!'' என்ற அர்ஜுனன் பூமியை நோக்கி ஓர் அம்பைச் செலுத்தினான்.
பூமியின் உள்ளிருந்து கங்கை நீர் விர்ரெனப் புறப்பட்டு வெளியே வந்து சரியாக பீஷ்மரின் தாகம் அடங்கும்வரை அவரது வாயில் கொட்டியது. பின் நின்றுவிட்டது.
கண்ணன் திரவுபதியிடம் தணிந்த குரலில் சொன்னான்: ""பாஞ்சாலி! கங்கா மாதா தானே பீஷ்மரின் தாய்? மகன் இறக்கும் தறுவாயில் அந்தத்தாய் பாசத்தில் நீராய் உருகுகிறாள் பார்!''
அந்தச் சூழல் திரவுபதியின் கோபத்தைச் சற்று மாற்றிச் சாந்தப்படுத்தியது. மரணப் படுக்கையிலிருக்கும் வயோதிகரிடம் தனக்கென்ன கோபம் என்றவாறே நெகிழ்ச்சியுடன் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.
பல்வேறு அறநெறிகளை பாண்டவர்களுக்கு உபதேசித்துக் கொண்டிருந்த பீஷ்மர், நீர்வேட்கை தீர்ந்த புத்துயிர்ப்போடு தன் உபதேசத்தை மீண்டும் தொடரலானார். அதைச் சற்றுநேரம் கேட்ட பாஞ்சாலி, திடீரென்று அடக்கமாட்டாமல் "கிளுக்' என்று
சிரித்தாள்.
உபதேசத்தைச் சட்டென்று நிறுத்திய பீஷ்மர், ""யாரோ பெண் சிரித்த சிரிப்புச் சப்தம் கேட்கிறதே? சிரித்தவள் என் முன்னே வரட்டும்!'' என்றார்.
""நான்தான் சிரித்தேன் சுவாமி!'' என்றவாறே பீஷ்மரின் முன்வந்து தலைதாழ்த்திப் பணிந்தாள் பாஞ்சாலி.
""திரவுபதி! உன் கணவர்கள் கட்டிய மாளிகைக்கு முன்பொருமுறை முதல்தடவையாக வந்தான் துரியோதனன். அப்போது நிலம் எது நீர் எது என்று தெரியாத தரையின் வழவழப்பில் மயங்கித் திகைத்தான். நிலமிருக்கும் இடத்தில் ஆடையைத் தூக்கியவாறு நடந்தான். நீரிருக்கும் இடத்தில் நிலமென நினைத்து தொப்பென்று விழுந்து நனைந்தான். அப்போது சிரித்தாய் நீ. அதனால் தானே, உன்மேல் கொண்ட வெஞ்சினம் காரணமாக பாரதப் போர் மூண்டது? அதுசரி. இப்போது ஏன் சிரித்தாய்?''
""சுவாமி! அப்போது நான் சிரித்தது அறியாமையினால். ஒரு குழந்தை விழுந்தால் கூட அதன் தாய் மலர்ந்து சிரிப்பதுண்டு. அது சூழலால் உருவான சிரிப்பே தவிர, விழுந்தவரைக் காயப்படுத்தும் நோக்கம் அதில் இல்லை. தடுக்கி விழுந்தவரைக் கண்டு நகைப்பது எளிய மனித இயல்பு. அந்தச் சிரிப்புக்குத்தான் இத்தனை உயிர்ப்பலி என்றால் அது ஏற்கத்தக்கதல்ல. துரியோதனனுக்கு பாண்டவர்கள் மேல் உள்ள கோபம் என் திருமணத்திற்கும் முற்பட்டது. போகட்டும். இப்போது நான் சிரித்தது உங்களைப்
பார்த்துத் தான்!''
""என்ன காரணம் தேவி? அம்புப் படுக்கையிலிருந்து நான் ஒன்றும் தடுக்கி விழவில்லையே?''
""முன்னொருமுறை வாழ்க்கையில் நீங்கள் தடுக்கி விழுந்துவிட்டீர்களே, அதை நினைத்துச் சிரித்தேன்!''
""நான் தீவிரமான பிரம்மச்சரிய விரதம் காத்தவன்!''
""நான் உங்கள் பிரம்மச்சரிய விரதத்தில் நீங்கள் தடுக்கி விழுந்துவிட்டதாகச் சொல்லவில்லை சுவாமி! உங்கள் நல்லொழுக்கத்தை உலகே அறியும். உங்கள் ஐம்புலன்களில் ஒருபுலன் இப்போது அபாரமாகப் பணியாற்றுகிறது. ஆனால் முன்னொருமுறை தேவைப்பட்ட நேரத்தில் அது பணியாற்ற மறந்துவிட்டது. அதை நினைத்துச் சிரித்தேன்!''
""புரியும்படிச் சொல்! இப்போது பாண்டவர்களுக்கு எல்லா தர்மங்களையும் போதிக்கும் உங்கள் ஐம்புலன்களில் ஒன்றான வாய், கவுரவர் சபையில் துச்சாதனன் என் துகிலை உரிய முற்பட்டபோது பேச்சிழந்து போயிற்றே, என்ன காரணம்? இன்று தர்மம் பேசும் நீங்கள் அன்று ஏன் அதர்மத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை?''
பஞ்சபாண்டவர்கள் அந்தக் கேள்வியின் உக்கிரம் தாங்காமல் மவுனம் காத்தார்கள். கண்ணன் மனத்திற்குள் நகைத்தவாறு பீஷ்மரின் பதிலுக்காகக் காதைத்தீட்டிக் காத்திருந்தான். உலகம் அறியவேண்டிய ஓர் உண்மையை அல்லவா பீஷ்மர் சொல்லப்போகிறார்?
பீஷ்மர் தொண்டையைச் செருமிக்கொண்டு பேசலானார்: ""உன் கேள்வியில் உள்ள நியாயம் புரிகிறது பாஞ்சாலி! ஆனால், மனம் உடலின் கைதி. உடலோ சூழ்நிலையின் கைதி. நான் அன்று துரியோதனனுக்கு விசுவாசமாக இருந்தேன். அவன் அளித்த உணவைச் சாப்பிட்டு வாழ்ந்தேன். கெட்டவர்கள் வழங்கும் உணவை ஏற்றால் உடலில் கெட்ட சத்துத்தான் சேரும். அதனால் மனத்தில் கெட்ட புத்தி தான் வரும். அதனால் தான், அவன் உணவை உண்ட காலத்தில் அதர்மத்தை எதிர்க்கவேண்டும் என்ற வேகம் எனக்கு வராமல் போயிற்று. என் தர்ம சிந்தனை மழுங்கியிருந்தது''.
""இப்போது மட்டும் தர்மசிந்தனை திடீரென்று எப்படி மேலோங்கியது சுவாமி? நீங்கள் இன்னும் அவன் அணியில் தானே இருக்கிறீர்கள்?'' பாஞ்சாலி விடாமல் கேட்டாள்.
பீஷ்மர் சொல்லலானார்: ""என் உடலைப் பார்! உன் கணவன் அர்ஜுனன் விட்ட அம்புகள் என் மேனி முழுவதையும் காயப்படுத்தியிருக்கின்றன.
துரியோதனன் அளித்த உணவால் என் உடலில் ஊறிய கெட்ட ரத்தம் முழுவதையும் அந்த அம்புகள் நீக்கிவிட்டன. இப்போது புது ரத்தம் ஊறியுள்ளது. அதனால் தான் என் இயல்பான தர்ம சிந்தனை இப்போது எனக்குத் தோன்றியுள்ளது. இதுவே உன் கணவர் ஐவருக்கும் நான் அறநெறியைச் சொல்லக் காரணம்''.
பாஞ்சாலி நெகிழ்ச்சியுடன், ""தீயவர் அளிக்கும் உணவை ஏற்கலாகாது என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன் சுவாமி. நான் பேசியதில் தவறிருந்தால் மன்னியுங்கள்,'' என்றவாறு பீஷ்மரைப் பணிந்தாள்.
""நீ பாக்கியசாலி. கண்ணன் உனக்குத் துணையிருக்கிறான். கண்ணனைத் துணையாகக் கொண்டவர்களுக்கு எந்த ஆபத்தும் வராது!'' என்ற பீஷ்மர், திரவுபதி அருகே நின்ற கண்ணனைக் கைகூப்பித் தொழுதார். பின்னர் அவரது வலக்கரம் உயர்ந்து திரவுபதியை ஆசிர்வதித்தது.

Wednesday, March 14, 2012

தமிழில் ஆத்ம போதம்

பா 68:
திக்கிடங் காலமுதற் றேம லென்றுமெத்
திக்குமார்ந் தேக்குளிர்மு றிப்பதா - யெக்களங்கமு
மற்றநித் யானந்த வான்மதீர்த் தத்துதோய்
உற்றவ னார்செய்கை யொன்றின்றி - மற்றவன்
யாவு மறிந்தொணா யெங்குநிறைந் தாரமிர்த
நாவ னெனவே யறி.

பதம் பிரித்து:
திக்கு, இடம், காலம் முதற்றே அமலென்றும்
எத்திக்கும் ஆர்ந்தேக் குளிர் முறிப்பதா(ம்) - எக்களங்கமும்
அற்ற நித்யானந்த ஆன்ம தீர்த்தத்து
தோய்வுற்றவனார் செய்கை ஒன்றின்றி மற்றவன்
யாவும் அறிந்தொணா எங்கு(ம்) நிறைந்த ஆரமிர்தன்
ஆவன் எனவே அறி.


பொருள்:
திசை, இடம், காலம், போன்றவற்றுள் மட்டும் அடக்கிவிடாத முடியாததும்,
எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும் நிறைந்ததுமான,
எதிர்மறையான வெப்பத்தினையும், குளிரையும் கூட அழிப்பதுமான,
களங்கமில்லா, நிலையான, அழிவிலா இன்பத்தை இகத்தில் தருவதுமான, பரம்பொருளை,
எவனொருவன் எல்லா செய்கைகளையும் துறந்து, தன் ஆன்மாவெனும் தீர்தத்தில் மூழ்கித் தோய்கிறானோ,
அவன், எல்லாமும் அறிந்தவனாய், எங்கெங்கும் நிறைந்தவனாய்,
அமிர்தமாய் அழிவில்லாததாய் ஆகிறான்.

விளக்கம்:
பரம்பொருளானது காலம், இடம், திசை போன்ற குணங்களால் குறுக்கப்படாமல், எல்லாவற்றையும் தாண்டி எல்லா இடத்திலும், எல்லா திசையிலும் நிறைத்திருக்கிறதாம்.
அப்பரம்பொருளை, தன் ஆன்மாவான 'தீர்த்தத்தில்' - புனித நீரில் மூழ்கி - தன்னைத்தானே, அதில் தோய்த்துக் கொள்கிறானோ, அவன் அந்த பரம்பொருளாகவே, அதன் அழிவிலா நிலையினை அடைகிறானாம்.
புனிதமான எந்த ஒரு இடத்துக்கும் செல்ல வேண்டாமல், தன் இகத்திலேயே பரத்தினைக் காண ஏதுவாகிறது ஞானிக்கு. அது அவனுக்கு நித்யமான ஆனந்தத்தினை நிரந்தரமாய் அடையவும் செய்கிறது.

பகவான் இரமணரின் திருவருளால், இப்பகுதிகளை இங்கே தர இயன்றது

 

அக்கரையில் ஒரு முனிவர்

முனைக் கரையில் கண்ணனும் ராதையுமாக அமர்ந்திருந்தார்கள். சிலுசிலுவென்று சுகமான காற்று வீசிக் கொண்டிருந்தது. கண்ணன் தலையில் சூடியிருந்த மயில்பீலி காற்றில் படபடக்கும் அழகை ராதை ரசித்தவாறிருந்தாள்.
ஆனால், கண்ணன் அக்கரையையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
""என்மேல் ஒருசிறிதும் அக்கறையில்லாமல் அக்கரையில் என்ன பார்வை?'' கேட்டாள் ராதை.
""எனக்குப் பசிக்கிறது!''
ராதை பதறினாள்.
""அடடா! இதோ உடனடியாக நானே சமைத்து உங்களுக்கு உணவு எடுத்து வருகிறேன். அதற்கு அக்கரையைப் பார்ப்பானேன்?''
"" அக்கரையிலும் ஒருவருக்குப் பசிக்கிறது!''
""யார் அவர்?'' ராதை கூர்மையாகத் தானும் அக்கரையைப் பார்த்தாள். அங்கே ஆலமரத்தடியில் ஒரு முனிவர் அமர்ந்திருப்பது தெரிந்தது.
""துர்வாச மகரிஷி!'' என்றான் கண்ணன்.
""அறிவேன்! கோபத்திற்கும் அதனால் தாம் கொடுக்கும் சாபத்திற்கும் பெயர்பெற்றவர்!''
""ராதா! என் மனத்தில் நீ இருக்கிறாய். அவர் மனத்தில் நான் இருக்கிறேன்! அவர் என் பக்தர்!''
சரி...சரி... அவருக்கும் சேர்த்தே உணவு சமைத்து எடுத்துவருகிறேன்! அதிருக்கட்டும், உங்கள் மனத்தில் நான் இருப்பது பற்றி மகிழ்ச்சி. ஆனால் அங்கே நான் மட்டும் தான் இருக்க வேண்டும். என்னைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் இருக்கக் கூடாது, ஞாபகமிருக்கட்டும்! கண்ணன் நகைத்தான். ராதை தொடர்ந்தாள்.
""இப்படிச் சொன்னால் எப்படி ராதா? நான் நேசிக்கும் எல்லாப் பெண்களிடமும் உன்னைத் தானே காண்கிறேன்!
"நல்ல நியாயம் இது! உங்கள் தாயார் யசோதையிடம் சொல்லித்தான் உங்களைத் திருத்த முயலவேண்டும்!''
""தாயார் யசோதைக்கும் உனக்கும் ஒரே ஒரு வேற்றுமை தான் ராதா. என் தாய் என்னை உரலில் கட்டிப் போட்டாள். நீ உன் குரலில் கட்டிப் போடுகிறாய். என் புல்லாங்குழலை இனிமை என்பவர்கள் உன் குரலைக் கேட்காத முட்டாள்கள்''.
""போதுமே உங்கள் புகழ்ச்சி. ஆண்களுக்குப் பசிவந்தால் கூடவே கவிதையும் வரும்போல் இருக்கிறது. என்னை அதிகம்
புகழவேண்டாம். எப்படியும் சாப்பாடு உறுதி!''
ராதை நகைத்தவாறே மணலைத் தட்டிக்கொண்டு எழுந்தாள்.
""ஒரு தட்டில் உணவு கொண்டுவா, போதும். துர்வாசர் பசியாறட்டும்!''
ராதை தலையாட்டியபடி, சாப்பாடு செய்து எடுத்து வரப் புறப்பட்டாள்.
ராதை உணவுத் தட்டோடு வந்தபோது யமுனை நதியில் கணுக்காலளவு நீர்தான் இருந்தது. தானே அக்கரைக்குப் போய் முனிவருக்கு உணவு பரிமாறிவிட்டு வருவதாகச் சொல்லி நதியில் இறங்கி நடந்தாள். அவளது நடையழகைப் பார்த்து ரசித்தவாறே இக்கரையில் அமர்ந்திருந்தான் கண்ணன்.
துர்வாச மகரிஷி ஞானதிருஷ்டியால் வந்திருப்பது யார் என்று உணர்ந்துகொண்டார்.
""கண்ணக் கடவுள் மேல் அழியாப் பிரேமை கொண்ட என் தாய் ராதா மாதாவா? என்னைத் தேடித் தாங்களே வந்தீர்களா தாயே?''
""உங்களுக்குப் பசிக்கிறதென்று அவர் சொன்னார். என்னைத் தாய் என்கிறீர்கள் நீங்கள்! பசிக்கும் குழந்தைக்கு உணவு தரவேண்டியது தாயின் பொறுப்பல்லவா?''
""எனக்குப் பசிப்பதைப் பற்றி மட்டும்தானா சொன்னார்? கண்ணனுக்கும் பசிக்குமே? அதைப் பற்றிச் சொல்லவில்லையா?''
""அதையும் தான் சொன்னார். ஆனால், நீங்கள்தான் முதலில் பசியாற வேண்டும். கணவர் காத்திருக்கலாம். குழந்தை காத்திருக்கக் கூடாது!''
ராதை இலைவிரித்து வெகுபிரியமாக உணவு பரிமாறினாள். பசியின் வேகமோ உணவின் சுவையோ எது காரணமோ தெரியவில்லை. பார்க்க ஒல்லியாக இருந்த அந்த மகரிஷி, ஒரு பயில்வான் சாப்பிடுவதுபோல் வயிறாரச் சாப்பிட்டார். இந்தச் சாப்பாட்டு வேளையில் நடந்த இன்னொரு விஷயத்தை அவர்கள் இருவருமே கவனிக்கவில்லை. யமுனையில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்திருந்தது. வெள்ளத்தைப் பார்த்த ராதை திகைத்தாள்.
""தாயே! எப்படித் திரும்பிச் செல்வீர்கள்?'' - முனிவர் கவலையோடு வினவினார்.
""அதுதான் எனக்கும் புரியவில்லை. நான் கண்ணனாக இருந்தால் நந்தகோபர் என்னைக் கூடையில் எடுத்துச் செல்லக் கூடும். ஆதிசேஷனே வந்து மழை, மேலே படாமல் குடைபோல படம் விரித்துக் காக்கக் கூடும். ஆனால், நான் கண்ணனல்லவே? ராதை தானே? எனக்கு இந்த நதி வழிவிடுமா என்ன?''
""ஏன் விடாது? இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால், யமுனை வழிவிடட்டும் என்று சொல்லிப் பாருங்கள். வழி கிடைக்கும். நதியைக் கடந்து கண்ணனிடம் சென்றுவிடுங்கள்!''
ராதை கலகலவென சிரித்தாள்.
""என் கண்ணெதிரே நீங்கள் வயிறார உணவு உண்டிருக்கிறீர்கள். நான் தான் இலைபோட்டுப் பரிமாறியிருக்கிறேன். அப்படியிருக்க இப்படியொரு பொய்யைச் சொல்லச் சொல்கிறீர்களே?''
""தாயே! அது பொய்யா நிஜமா என்பதை முடிவு செய்ய வேண்டியது யமுனை நதியின் பாடு. நீங்கள் ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள்? சொல்லித்தான் பாருங்களேன்!''
ராதை வியப்போடு யமுனை நதியின் கரையில் நின்று, "இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால் யமுனையே வழிவிடுவாயாக!'' என்று கூறினாள்.
மறுகணம் யமுனை இரண்டாகப் பிளந்து ராதை நடந்துசெல்லும் வகையில் வழிவிட்டது. ஆச்சரியத்தோடு விறுவிறுவென்று நடந்து கண்ணன் இருக்கும் கரைக்கு வந்து சேர்ந்தாள் ராதை. மறுகணம் நதி மீண்டும் இணைந்து வழிமறைத்து மூடிக்கொண்டது! ராதையின் முகம் கோபத்தால் சிவந்தது.
""என்ன ராதா? நீ அனைத்தையும் கரைகண்டவள் என்பது உண்மைதான் போலிருக்கிறது? இன்று இக்கரை அக்கரை இரண்டையும் கண்டுவிட்டாயே?''
""நான் கரைகண்ட லட்சணம் இருக்கட்டும். யமுனை இப்படி துர்வாசருக்குப் பயப்பட வேண்டாம். அவர் சபித்துவிடுவாரோ என்பதற்காக அவர் சொன்ன பொய்க்கெல்லாம் இந்த நதி துணைபோகிறது''.
கண்ணன் நகைத்தவாறே கேட்டான்:
""அப்படி என்ன பொய்க்குத் துணைநின்றது இந்த நதி?''
""இன்று இதோ இந்தக் கணம் வரை துர்வாச மகரிஷி எதுவும் சாப்பிடாமல் கடும் உபவாசம் இருப்பது உண்மையானால் யமுனை வழிவிடட்டும் என்று சொல்லச் சொன்னார், என் சாப்பாட்டை வயிறாரச் சாப்பிட்ட உங்கள் பக்தர். அவர் சொன்னதைச் சொன்னேன். இந்தப் பாழும் நதி அந்தப் பொய்க்கு உடன்பட்டு வழிவிட்டிருக்கிறது. இந்த நதியை என்ன செய்தால் தகும்?''
""வா! உண்மையைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்த நதியை மலர்தூவி வழிபடுவோம்!''
""நீங்களுமா அதை உண்மை என்கிறீர்கள்? அப்படியானால் என் கண்ணால் பார்த்தது பொய்யா?''
""கண்ணால் காண்பதும் காதால் கேட்பதும் பொய்யாக இருக்கலாம். தீர விசாரிப்பதுதான் மெய். துர்வாசர் உபவாசமிருந்தார் என்பது சத்தியம் தான்! நதிகள் சத்தியத்திற்குக் கட்டுப்பட்டுத்தான் நடக்கும்''.
""அது எப்படிச் சத்தியமாகும்?'' ராதை வியப்போடுவிசாரித்தாள்.
கண்ணன் சொல்லலானான்:
""அன்பே ராதா! எனக்குப் பசிக்கிறது என்றேன். ஆனால், ஒரு தட்டு உணவே போதும் என்றேன். நீ துர்வாசருக்கு உணவு படைத்தாய். அந்த முனிவர், தன் இதயத்தின் உள்ளிருக்கும் எனக்கு நைவேத்தியம் செய்வதான பாவனையுடன் உணவு
முழுவதையும் உண்டார். அதனால் தான் நான் உண்ணும் அளவு அதிக உணவை அந்த ஒல்லியான முனிவரால் உண்ண முடிந்தது. அவர் உண்ட உணவின் பலம் என் உடலில் கூடிவிட்டது. என் பக்தர்களின் பக்தியால் தான் எப்போதும் எனக்கு பலம் கூடுகிறது. இனி நீ வற்புறுத்தினாலும் கூட என்னால் சாப்பிட முடியாது. வயிறு நிறைந்திருக்கிறது. இந்த ரகசியத்தை என் ராதை
அறியவில்லை. ஆனால் யமுனை அறிவாள். அதனால் தான் அவள் விலகி வழிவிட்டாள்!''
கண்ணன் சொன்னதை, ராதை வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தாள்.
""கண்ணே ராதா! எந்த மனிதன் தான் செய்யும் எந்தச் செயலையும் தன் உள்ளிருக்கும் இறைவனுக்கு சமர்ப்பணம் என நினைத்துச் செய்கிறானோ அவனை எந்தத் துன்பமும் பாதிப்பதில்லை. ஏனெனில் அவனுக்கு நேரும் துன்பத்தையெல்லாம் அவன் இதயத்தின் உள்ளிருக்கும் இறைவன் தாங்கிக் கொண்டு விடுகிறான்!''
ராதை ஒரு பேருண்மையைத் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் மலர்ந்து சிரித்தாள்.
""ஆனால் ராதா! நான் எப்போதும் சூடாக எதையும் சாப்பிடுவதில்லை!''என்றான் கண்ணன்.
""ஏன்?'' என்று கேட்டாள் ராதை.
""நீ என் உள்ளத்தில் இருக்கிறாய். உனக்குச் சூடு பொறுக்காது!'' என்றான் கண்ணன். ராதை கலகலவென மலர்ந்து சிரித்ததைக் கேட்டு அக்கரையில் இருந்த துர்வாசரின் மனம் மகிழ்ந்தது

Saturday, March 10, 2012

பத்ராசல ராமதாஸர்

ஆந்திரத்தின் நெலகொண்டபள்ளி எனும் கிராமத்தில், லிங்கண்ண மூர்த்தி-காமாம்பா தம்பதிக்கு கி.பி. 1620ல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. கஞ்செர்ல கோபராஜு எனப் பெயரிட்டு வளர்த்தனர் பெற்றோர்; கோபண்ணா என்று செல்லமாக அழைத்தனர். தாய்மொழியாம் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் தேர்ந்த புலமை பெற்றிருந்த கோபண்ணா, இறைநாமத்தைச் சொல்லும் அற்புதக் கவிதைகளை இயற்றினான். இல்லறமே நல்லறம் எனப் பெற்றோர் உபதேசிக்க, நற்குணவதி ஒருத்தியை மனைவியாகப் பெற்றான். மகான் கபீர்தாசர், ஒருமுறை கோபண்ணாவின் கனவில் தோன்றி. ராமநாம உபதேசத்தை அருளினார். அன்று, கோபண்ணாவின் வாழ்க்கை திசை திரும்பியது. எந்நேரமும் ராமநாமத்தை உச்சரித்து வந்தார்; ராம பக்தியில் மூழ்கிப்போனார். ஸ்ரீராமனது அடியவர்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்யும் புண்ணிய காரியமே வாழ்க்கை எனக் கொண்டு வாழ்ந்தார். ஏற்கெனவே வறுமை சூழ்ந்த நிலை. இதில் அன்னதானமும் செய்ய மிகுந்த சிரமப்பட்டார் கோபண்ணா. அவரின் தாய்மாமன் அக்கண்ணா என்பவர், ஹைதராபாத் தேசத்தை ஆட்சி செய்த இஸ்லாமிய அரசன் தானேஷாவிடம் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றினார். அவர் மூலம், வரி வசூலிக்கும் தாசில்தார் வேலை கிடைத்தது கோபண்ணாவுக்கு! அந்த வேலையைச் செவ்வனே செய்து வந்தார் கோபண்ணா. அன்பு, நேர்மை, நல்லொழுக்கம் ஆகியவற்றால் மக்களைக் கவர்ந்தவர், நியாயமான முறையில் வரி வசூலித்து, அரசு கஜானாவுக்கு வழங்கினார்.
பத்ராசலம் எனும் கிராமத்தில், கோதாவரி நதிக்கரையில், வன வாசத்தின்போது குன்றின் மீது பர்ணசாலை அமைத்து, சீதையுடனும் லட்சுமணனுடனும் ஸ்ரீராமர் தங்கியிருந்தாகச் சொல்கிறது புராணம். அங்கே, ஸ்ரீராமருக்குக் கோயில் அமைந்துள்ளது. வேலைநிமித்தமாக அங்கே சென்ற கோபண்ணா, ஸ்ரீராமனை மனமுருகி வழிபட்டார். அந்த ஆலயம், மிகவும் சிதிலமடைந்திருந்தது. மதிலும் மண்டபங்களும் இடிந்து, சுற்றிலும் புல்பூண்டு மண்டிக் கிடந்தது. இதைக் கண்டு வருந்திய கோபண்ணா, அந்தக் கோயிலைச் சீரமைக்கவேண்டும் என உறுதிபூண்டார். அந்த ஊர்மக்கள் தங்களால் இயன்ற பொருள் உதவியைத் தர, தன்னிடம் இருந்த கொஞ்சநஞ்ச சொத்துக்களையும் விற்றுத் திருப்பணிக்குச் செலவிட்டார். ஆனாலும், இன்னும் அதிக பணம் தேவைப்பட்டது. என்ன செய்வது எனும் சிந்தனையில் இருந்தவருக்கு, வரிவசூல் செய்து, கஜானாவில் சேர்ப்பதற்காகத் தன்னிடமிருந்த பணம் நினைவுக்கு வந்தது. அந்தப் பணத்தைக் கோயிலுக்குச் செலவு செய்து விட்டு, அறுவடை முடிந்ததும் அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, கஜானாவில் சேர்த்துவிடுவோம் என எண்ணம் கொண்டவர், மக்களின் ஆதரவுடன் சுமார் 6 லட்சம் ரூபாயைக் கோயில் திருப்பணிக்கு வழங்கினார். பிறகென்ன?! 1652-ஆம் வருடத்தில், அந்தப் பகுதியில் உளிகளின் ஓசையும் பாறை பிளக்கும் சப்தமும் கேட்கத் துவங்கின. கொடிமரம், பிராகாரங்கள், மண்டபங்கள், கருவறை என. அங்கே ஸ்ரீராமருக்கு அழகிய ஆலயம் உருவானது. கோயிலின் அழகைக் கண்டு நெகிழ்ந்த மக்கள், கோபண்ணாவை ராமதாஸர் எனப் போற்றினர்.
இந்த நிலையில், வரிப் பணத்தைக் கொண்டு கோயில் கட்டிய சேதி தெரிந்து கொதித்துப் போனான் தானேஷா. ராமதாஸரைக் கைது செய்து, ஹைதராபாத்தில் இருந்த கோல்கொண்டா கோட்டைச் சிறையில் அடைத்து, வரி வசூல் செய்த பணத்தை உடனே திருப்பித் தரும்படி கொடுமைப்படுத்தினான். சுமார் 12 வருடங்களைச் சிறையிலேயே கழித்தார் ராமதாஸர். அப்போதுதான், ஸ்ரீராமரிடமும் ஸ்ரீசீதையிடமும் தன்னைக் காத்தருளும்படி பாடி வேண்டினார் ராமதாஸர். ஓ ராம நீ நாம ஏமி ருசிரா, ராமசந்த்ருலு நாபாய், நனுப்ரோவமனி செப்பவே சீதம்ம தல்லி போன்ற தெலுங்கு கீர்த்தனங்கள் மூலம், ஸ்ரீராமனின் திருவடிகளைச் சரணடைந்தார். இறைவனின் திருவுளம் கனிந்தது. ஒரு நள்ளிரவில், கம்பீரத் தோற்றமும் கொண்ட இரண்டு இளைஞர்கள், அரண்மனையில் தூங்கிக் கொண்டிருந்த மன்னன் தானேஷாவை எழுப்பினர். கண்களைத் திறந்தவன், சர்வ ஒளியுடன் திகழும் இளைஞர்களைக் கண்டு அதிர்ந்தான். நாங்கள் ராம்ஜீ, லக்ஷ்மண்ஜீ. கோபண்ணாவின் பணியாட்கள். அவர் செலுத்தவேண்டிய பணத்தைக் கொடுக்க வந்துள்ளோம் என்று சொல்லி, பையிலிருந்த தங்க நாணயங்களை அரசனுக்கு எதிரே கொட்டினார்கள். ஸ்ரீராம முத்திரை பதித்த அந்த நாணயங்களின் பேரொளியால், மன்னனின் கண்கள் கூசின; ஆச்சரியமும் அதிர்ச்சியும் மேலிட நின்றவனிடம், பணத்தைப் பெற்றுக் கொண்டதற்கான ரசீது தரும்படி கேட்டனர். மன்னன் தந்த ரசீதை, சிறைச்சாலை அதிகாரியிடம் தந்துவிட்டு மறைந்தனர். திகைப்பும் வியப்புமாக சிறைச்சாலைக்கு ஓடோடி வந்தான் மன்னன்; ராமதாஸரின் பாதம் பணிந்தான். தான் பெற்ற தங்க நாணயங்களை அவரது காலடியில் சமர்ப்பித்து, மன்னிப்புக் கேட்டான்; விடுதலையும் செய்தான். பணத்தைச் செலுத்தியது ஸ்ரீராமனே என அறிந்து நெக்குருகிப் போனார் ராமதாஸர். பிறகு பத்ராசலம் சென்றவர், அங்கேயே தங்கி, இறைவனுக்கும் ஏழைகளுக்கும் தொண்டு செய்தார்; 1688-ஆம் வருடம் ஸ்ரீராமனின் திருவடியில் கலந்தார். ராமச்சந்திர மூர்த்தியின் பரம பக்தனாக விளங்கும் ராமதாஸரைப் போற்றி வணங்குகிறேன் என மகான் தியாகராஜர், தன்னுடைய கீர்த்தனையில் புகழ்ந்ததுபோல, ராம பக்திக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த பத்ராசல ராமதாஸரின் ராமபக்திக்கு ஈடேது; இணையேது!

Friday, March 9, 2012

ராமனை "பரமாத்மா' என்றுகடவுளாக வணங்கிய ஒருத்தி இவள் மட்டுமே


ராவணன் இறந்ததும், அவனது மனைவி மண்டோதரி பதட்டமாக வந்தாள். ""வாழ்வில் நன்மை செய்தவன் நற்கதி அடைகிறான். தீமை செய்தவன் கீழ்நிலை பெறுகிறான். விபீஷணன் ராமனோடு சேர்ந்து நற்கதி பெற்றான். நீங்கள் தீமை செய்து மாண்டு விட்டீர்களே!''என்று கதறினாள்.
அவளுக்கு எதிரில் மரவுரியும், ஜடையும் தரித்த ராமன் வில்லேந்தி நின்றார். அவரைப் பார்த்ததும் ""பராத்மா'' என்றாள். மனிதனாக வாழ்ந்த ராமனை ராமாயணத்தில் "பரமாத்மா' என்று கடவுளாக வணங்கிய ஒருத்தி இவள் மட்டுமே. அவள் பதிவிரதை (கணவன் சொல்லுக்கு மறுசொல் பேசாதவள்) என்பதால், அவளுக்கு மட்டும் இந்த ரகசியம் தெரிந்தது. தன்னுடைய பரதத்துவத்தை(கடவுள் நிலையை) ராமனால் மண்டோதரியிடம் மறைக்க முடியவில்லை. ராமாயணத்தின் 24 ஆயிரம் ஸ்லோகங்களில் மண்டோதரி மட்டுமே, ராமனை "பரமாத்மா' என்று சொல்கிறாள்