Saturday, June 30, 2012

போஜராஜன்

போஜராஜாவுக்கு ஒரு நாள் விபரீத யோசனை தோன்றியது. காளிதாசன் வாயிலிருந்து எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்டாகிவிட்டது. நான் காலமான பிறகு ஒரு சரம சுலோகம் எழுதுவான் அல்லவா? அதை மற்றவர்கள் கேட்பார்களே தவிர, நான் எப்படிக் கேட்க முடியும்? என்ற எண்ணம் வந்துவிட்டது. உடனே காளிதாசரை அழைத்து வரச் சொன்னான். சரம சுலோகத்தை நான் இப்போதே கேட்க வேண்டும் என்றான். என் வாக்கினாலே ஒன்று பாடினால் அப்படியே நடந்துவிடும். அதனால் நான் சரம சுலோகம் பாட முடியாது. முடியாதா? ராஜ உத்தரவை மீறினால் நீ நாடு கடத்தப்படுவாய். நல்லது மகாராஜா! நீங்கள் நன்றாக இருந்தாலே போதும். தங்கள் உத்தரவை மீறிய பிரஷ்டனாக நான் எங்காவது போய் விடுகிறேன். காளிதாசர் அந்த தேசத்தை விட்டு எங்கோ கிளம்பிவிட்டார். பைத்தியக்காரப் பிச்சைக்காரனைப் போல், சன்னியாசியைப் போல வேஷம் போட்டுக் கொண்டு, ஊர் ஊராகப் போய்க் கொண்டிருந்தார். போஜராஜன், காளிதாசரைக் கண்டு பிடிக்க மாறுவேடம் போட்டுக் கொண்டு புறப்பட்டு விட்டான். குடுகுடுப்பைக்காரன் வேஷத்தில் ஊர் ஊராகச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தான். ஒருநாள் இவர்கள் இரண்டு பேரும் சந்திக்கும் சந்தர்ப்பம் வந்துவிட்டது. இவன்தான் காளிதாசன் என்று போஜன் தெரிந்துகொண்டு விட்டான். நீ எந்த ஊர்? என்று சன்னியாசி கேட்டான். போஜன் பொய் சொல்லவில்லை. நான் இருக்கிறது தாரா நகரம். அங்கிருந்துதான் வருகிறேன் என்று சொல்லி விட்டான். போஜராஜாவின் நகரம் தாரா நகரம். அதனாலே, போஜ ராஜா சவுக்கியமாக இருக்கிறாரா? என்று காளிதாசர் கேட்டார். இதுதான் சமயம், இவன் வாயினாலேயே சரம சுலோகத்தைக் கேட்க என்று போஜராஜாவுக்குத் தோன்றிவிட்டது. அதுவா, அதை ஏன் கேட்கிறாய்? அவர் செத்துப் போய் இன்று ஆறாம் நாள் என்று மிக்க துக்கத்தோடு சொல்வது போலச் சொன்னான்.
உடனேயே காளிதாசர் ஒரு சுலோகம் பாடி விட்டார். பாட்டை காளிதாசர் சொன்னாரோ இல்லையோ, அந்த குடுகுடுப்பைக்காரன் போஜராஜா அப்படியே செத்து விழுந்து விட்டான். ஐயோ, நீயேதானா போஜராஜன்? என்று கவி மிகவும் துக்கப்பட்டார். சரஸ்வதி ஆவிர்ப்பவித்து, நடந்தது நடந்ததுதான். முன்பு பாடியதை வேண்டுமானால் மாற்றிப் பாடு. உனக்காக அவனுக்கு மூன்றே முக்கால் நாழிகை உயிர் கொடுக்கிறேன் என்று அனுக்கிரகம் செய்தாள். காளிதாசர் தாம் முன்பு பாடிய பாட்டை அப்படியே திருப்பிப் பாடினார். போஜராஜன் கண் விழித்து எழுந்தான். காளிதாசர், ராஜா! இப்படிச் செய்து விட்டீர்களே! இன்னும் மூன்றே முக்கால் நாழிகைதான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள் என்று துக்கப்பட்டபோது, நான் இறந்து போனால் என்ன? இறந்து போவதற்கு முன்னால் உன் வாக்கிலிருந்து அந்த அமிர்தத்தைக் கேட்டேனே! இன்னும் மூன்றே முக்கால் நாழிகை இருக்கிறது. ராம சரித்திரத்தையே அந்தக் காலத்துக்குள் பாடி விடுவோம் என்றான் போஜன். உடனே காளிதாசரும் போஜனும் ராமாயணத்தைப் பாடினார்கள். அதற்கு போஜ சம்பூ என்று பெயர். போஜராஜன் தனக்கு கிடைத்த மூன்றே முக்கால் நாழிகையை வீண் பண்ணாமல் செய்த காரியம் ஒன்றுதான் இன்றைக்கும் நாம் அவனை நினைத்துக் கொண்டிருக்கும்படி செய்கிறது

Wednesday, June 27, 2012

பண்டித கோப பந்துதாஸ்


ஒரிஸ்ஸாவில் பண்டித கோப பந்துதாஸ் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் தன்னலமற்று பொது சேவை செய்வதே தன் வாழ்வின் லட்சியமாக கொண்டிருந்தார்.
ஒரு முறை இவரது ஊரில் இடி மின்னலுடன் அடைமழை பெய்து கொண்டிருந்தது. இரவு நெருங்கியது. மழையும் விட்டபாடில்லை. அதோ வருகிறாரே, அவர் வெள்ளத்தில் சிக்கிய அக்கம்பக்கத்து ஊர்களில் நிவாரணப் பணிகளை முடித்துவிட்டு இப்போதுதான் வீடு திரும்புகிறார். ஆனால் அவர் வீட்டிலோ சோகம் குடிகொண்டு இருந்தது. அவரது மகன் தாயின் மடியில் துவண்டு கிடந்தான். அவ்வப்போது இருமுவான். தாயின் கண்ணீர் உலரவேயில்லை. மருந்து மாயம் எல்லாம் செய்து பார்த்து விட்டார்கள். எல்லாம் பயனற்று போய் விடுமோ என்கிற நிலை. வெளியே மழையும் காற்றும் சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருப்பதைப் போலவே அவரது உள்ளத்திலும் சூறாவளி வீசிக் கொண்டிருந்தது. மனப்போராட்டம் வலுத்தது. மகனின் இருமல் ஒலி, ஒரு காதில் அறைந்தது என்றால், வெள்ளத்தில் அடிபட்ட ஆயிரமாயிரம் மக்களின் அவலக் குரல் மறுகாதில் வந்து அறைந்தது. இந்நேரம் அந்த ஆதரவற்ற எளிய மக்களின் கதி என்ன ஆயிற்றோ? இறுதியில் கடமையே பாசத்தை வென்றது.
கையில் குடையை எடுத்தார். வாசல் கதவைத் திறக்கப் போனார். மனைவியார் தடுத்தார். எங்கே புறப்பட்டு விட்டீர்கள்? குழந்தை வாய் ஓயாமல் இருமிக் கொண்டிருக்கிறான். இனியும் என்னால் சகித்துக் கொள்ள முடியாது என்று முறையிட்டார்கள். நான் என்ன செய்வது? மருந்து கொடுத்தாயிற்று. அப்புறம் எல்லாம் இறைவன் திருவுள்ளப்படி நடக்கும். வெளியே ஏராளமான குழந்தைகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தவிப்பு என்னை இழுக்கிறது. கடவுள் விட்ட வழி என்று கூறியபடி புறப்பட்டுப் போய்விட்டார் மனிதர். குழந்தையும் கடைசியாக ஒருமுறை இருமிவிட்டு தாயின் மடியிலேயே உயிரை விட்டு விட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இச்செய்தியை அவரிடம் போய்ச் சொன்னார்கள். அப்போது அவர் சொன்னார் : இது இறைவன் திருவுள்ளம். இவர் தான் பண்டித கோப பந்துதாஸ். உத்தகலமணி என்று ஒரிஸ்ஸா முழுவதும் இன்று இவரை நன்றியோடு நினைத்துப் போற்றுகிறது

Sunday, June 24, 2012

சிரஞ்ஜீவி அஸ்வத்தாமா

பூதவுடல் அகன்றாலும் புகழுடன் நிரந்தரமாக இருப்பவர்களை சிரஞ்ஜீவீ என்பார்கள் அப்படி, ஏழு சிரஞ்ஜீவிகளில் முதலாமவன் அஸ்வத்தாமா ! 60-ஆம் கல்யாண வைபவத்தில், அஸ்வத்தாமானை வணங்குவது உண்டு. தனது தவத்தால் ஈசனை மகிழ்வித்த துரோணாச்சார்யர், இறையருள் அம்சத்துடன் இணைந்த மகனைப் பெற்றார். அவன் தான் அஸ்வத்தாமா. இவன் பிறந்ததும், உச்சை : ஸ்ரீ அவஸ்ஸீ என்ற தேவலோக குதிரையின் சத்தம் போன்ற ஒலியை எழுப்பியதால், அஸ்வத்தாமா எனப் பெயர் அமைந்ததாம் ! சக்தியின் அளவை, குதிரை வேகத்துக்கு ஒப்பிடுவார்கள், அல்லவா ?! போர்க்களத்தில் குதிரைபோல் செயல்படும் தகுதி கொண்டவன், இவன். வேதம் ஓதும் பரம்பரை, ஆயுதம் ஏந்தாது. அரசாணை காரணமாக அஸ்திரத்தை ஏந்தினான் அஸ்வத்தாமா. ஸ்ரீமந் நாராயணரின் அருளால், நாராயண அஸ்திரத்தை அஸ்வத்தாமாவுக்கு வழங்கினார் துரோணர். அத்துடன், இதனை தற்காப்புக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; அதுவும், தருணத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார், அஸ்திர பலத்துடன் அவனது பலமும் சேர்ந்தது. தனுர் வேதம் கற்றதால், அஸ்திரத்தின் முழு அறிவும் அவனிடம் இருந்தது. மந்திரத்தின் மூலம் தேவதைகளின் அம்சம் அஸ்திரத்தில் இணைவதால், எதிரியை அழிப்பதிலான நம்பிக்கை உறுதிப்பட்டுவிடும். மகாபாரத யுத்தத்துக்காகவே பிறந்தவன்போல், போரில் பெரும் பங்காற்றினான் அஸ்வத்தாமா; பீமனின் புதல்வன் கடோத்கஜனையும், அவனுடைய மகன் அற்ஜனபர்வாவையும் அழித்தான்; இதனால், பீமனின் பரம்பரையே நிர்மூலமானது. அதுமட்டுமா ? துருபத ராஜகுமாரன், சத்ரும்ஜயன், பலாநீகன், ஜயாநீகன், ஜயாச்வான், அரசன் சிருதாஹு போன்றவர்களை அழித்து, வெற்றிக்கு உரமூட்டினான், துரியோதனனுக்கு ! குந்திபோஜனின் பத்து மகன்களையும் அழித்து, எதிரிகளுக்கு தனது வீரத்தை உணர்த்தினான். கோழைகள், ஏமாற்று வழியில் தன்னுடைய தந்தையை அழித்த சேதி கேட்டு, கொதித்தெழுந்தான்.
நாராயண அஸ்திரத்தைப் பயன்படுத்தி, த்ருஷ்டத்யும்னனை அழிக்க முற்பட்டான். இந்த அஸ்திரத்தைப் பயன்படுத்தினால், போரின் போக்கினை திசைதிருப்பிவிடும் என அறிந்த ஸ்ரீ கிருஷ்ணர், அனைத்து வீரர்களையும் தேரில் இருந்து இறங்கி, ஆயுதங்களைக் களைந்து, அஸ்திரத்துக்கு அடிபணியும்படி உத்தரவிட்டார். அப்படிச் செய்தால் தான், அஸ்திரத்துக்கு இரையாகாமல் தப்பிக்க முடியும் ! ஆனால், ஸ்ரீகிருஷ்ணரின் வார்த்தையை பீமன் கேட்கவில்லை. நாராயணாஸ்திரம், அவனைத் தாக்க முயன்றது. அப்போது, அவனை வலுக்கட்டாயமாக தேரிலிருந்து இறக்கிக் காப்பாற்றினார். கிருஷ்ண பகவான் ! நாராயணாஸ்திரம் வலுவிழந்தும்கூட, பதறவில்லை அஸ்வத்தாமா. முழு நம்பிக்கையுடன் ஆக்னேயாஸ்திரத்தை ஏவினான். நெருப்பை உமிழும் அந்த அஸ்திரத்தால், திக்குமுக்காடிப் போனார்கள் எதிரிகள், பகவான் கிருஷ்ணரையும் அர்ஜுனனையும் நெருங்கவில்லை அஸ்திரம். அதுமட்டுமின்றி, த்ருஷ்டத்யும்னனையும் அழிக்க இயலவில்லை. இதைக் கண்டு அதிர்ந்தான் அஸ்வத்தாமா. அப்போது வியாசர் தோன்றி, ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமந் நாராயணன் ஆவார். அர்ஜுனன், அவரது அம்சத்துடன் விளங்கும் நரன். நர நாராயணரை வெல்வது சுலபமல்ல என அறிவுறுத்தினார். எனவே, நர நாராயணர்களை மனதில் வேண்டி, படைகளுடன் வெளியேறினான் அஸ்வத்தாமா, பிறகு, கர்ணனின் தலைமையில் போரில் இணைந்தவன், த்ருஷ்டத்யும்னனை அழிக்காமல் அஸ்திரத்தைக் களையமாட்டேன் என சூளுரைத்தான். 18-ஆம் நாள் யுத்தம். பீமனும் துரியோதனனும் கதாயுதத்தால் சண்டையிட்டனர். இதில் அடிபட்டு தரையில் வீழ்ந்தான் துரியோதனன். அவனை அங்கேயே விட்டுவிட்டு, பாண்டவர்கள் வெளியேறினர். வேதனையுடன் இருந்த துரியோதனனுக்கு அருகில் ஸஞ்சயன் வந்தார். அஸ்வத்தாமா, கிருபாசார்யர், கிருதவர்மா ஆகியோரை அழைத்தான் துரியோதனன்; நடந்தவற்றை விளக்கினான். அறத்துக்குப் புறம்பான வழியில் துரியோதனனை பீமன் வீழ்த்தியதை அறிந்து, கோபமுற்றான்; பாண்டவர்களைப் கூண்டோடு அழிப்பேன் எனக் கொக்கரித்தான் அஸ்வத்தாமா. இதையடுத்து, கௌரவப் படையின் சேனாதிபதியானான்.
பதவியேற்ற அன்றைய இரவு, அஸ்வத்தாமா தூங்கவே இல்லை. கொடுத்த வாக்குறுதியால் தூக்கம் வரவில்லை. தன்னுடன் இருவரை அழைத்துக்கொண்டு, அருகில் இருக்கும் காட்டுக்குச் சென்றான். உடன் இருந்த இருவரும் உறங்கிவிட, இவன் மட்டும் மரத்தடியில் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். திடுமென ஆந்தையின் ஒலி கேட்டு, மரக்கிளையை கவனித்தான். ஆந்தை ஒன்று, கூட்டினில் உறங்கிக்கொண்டிருந்த காக்கைக் குஞ்சுகளை அழித்துவிட்டு வெளியேறியது. சட்டென்று அவனுக்குள், பாண்டவர்களின் வாரிசுகளையும் அப்படித்தான் அழிக்கவேண்டும் எனச் சிந்தித்தான். இது தெய்வம் காட்டிய வழி எனச் சிலிர்த்தான். தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி, தனது திட்டத்தை எடுத்துரைத்தான். ஆனால் கிருபாசார்யர், தவறான வழியில் பழிவாங்குவது தவறு; கௌரவ அழிவுக்குக் காரணமாகிவிடும். வேண்டாம். எதையும் போர்க்களத்தில் சந்திப்போம்; சாதிப்போம் என்றார். அவற்றைக் கேட்கும் மனநிலையில் அஸ்வத்தாமா இல்லை. வேறுவழியின்றி, மூவரும் அன்றிரவே பாண்டவர்களின் கூடாரத்தை நெருங்கினர். இருவரையும் காவலுக்கு வைத்துவிட்டு, தனியே உள்ளே நுழைந்தான் அஸ்வத்தாமா. அங்கே இருந்த காவலன் ஒருவன் தடுத்து நிறுத்த, அஸ்வத்தாமாவிடம் இருந்த அஸ்திரங்கள் யாவும் மறைந்தன. அந்தக் காவலாளி, ஈசனே என அடையாளம் கண்டு கொண்டான் அஸ்வத்தாமா ! அவரைப் பணிந்து வணங்கி, எனது செயலில் வெற்றி பெற ஒரு வாள் தந்து உதவுங்கள் என வேண்டினான். அதன்படி உடைவாள் ஒன்றைத் தந்து மறைந்தார் ஈசன். அந்த வாளுடன் உள்ளே நுழைந்தான் அஸ்வத்தாமா. ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த த்ருஷ்டத்யும்னன், உத்தமோஜா, யுதாமன்யு, சிகண்டி மற்று திரௌபதியின் ஐந்து புதல்வர்கள் ஆகியோரைக் கண்டதுண்டமாக வெட்டி வீழ்த்தினான். அதையடுத்து, துரியோதனனிடம் சென்று, வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாகச் சொன்னான். அந்த நிம்மதியுடன் செத்துப் போனான் துரியோதனன். மகன்கள் இறந்த சேதி கேட்டுக் கலங்கித் தவித்தாள் திரௌபதி. அஸ்வத்தாமாவின் சிரசைக் கொய்து உன்னிடம் தருகிறேன் என சூளுரைத்தான் அர்ஜுனன். ஸ்ரீகிருஷ்ணருடன் தேரில் ஏறிச் சென்று, அஸ்வத்தாமாவுடன் போரிட ஆயத்தமானான்.
அஸ்வத்தாமாவுக்கு பிரம்மாஸ்திரத்தை ஏவத் தெரியும். ஆனால் அதனைத் திரும்பப் பெறத் தெரியாது, நேருக்குநேர் போர் புரியும் வேளையில், தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும். அர்ஜுனனை வீழ்த்தவும் வேறு வழியின்றி பிரம்மாஸ்திரத்தை ஏவினான் அஸ்வத்தாமா. அதேவேளையில், அர்ஜுனனும் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அப்போது வியாசரும் நாரதரும் வந்து, உலகை அழிவிலிருந்து காப்பாற்ற, இருவரிடமும் பிரம்மாஸ்திரத்தை திரும்பப் பெறும்படி வேண்டினர். அதற்கு இணங்க, அர்ஜுனன் அஸ்திரத்தைத் திரும்பப் பெற்றான். ஆனால், அஸ்வத்தாமாவால் அஸ்திரத்தைத் திரும்பப் பெற இயலவில்லை. முழு அழிவிலிருந்து திசை திருப்பும் வகையில், உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவை நோக்கித் திருப்பினான். அப்போது, பகவான் கிருஷ்ணர், அந்த சிசுவைக் காத்தார்; பரீக்ஷித்து உதயமாவதற்கு உதவினார். பிறகு அஸ்வத்தாமாவைச் சிறைப்பிடித்து, திரௌபதியிடம் நிறுத்தினான் அர்ஜுனன். இரக்க சுபாவம் கொண்ட திரௌபதி, அவனை மன்னிக்கும்படி கூறினாள். அவனது சிரசில் உள்ள ரத்தினத்தை எடுத்து,திரௌபதியிடம் வழங்கினான் அர்ஜுனன். பின்னர், பாண்டவர்களுடனான பகையை மறந்தான் அஸ்வத்தாமா என்கிறது புராணம்! அரசனாகப் பிறக்கவில்லை; அரசனாகவும் ஆசைப்படவில்லை. காலத்தின் தூண்டுதலால் களம் இறங்கினான். அரசாணையை மதித்தான். எடுத்த காரியத்தை முடிப்பதில் வெற்றி கண்டான். பாண்டவர்களின் தலைமுறையை வேரோடு அழித்தான். உத்தரையின் கர்ப்பத்தை அழிக்க முனைந்தான். அதில் அவனுக்குத் தோல்வி இல்லை. பகவான் கிருஷ்ணரின் தலையீட்டால், இறந்த குழந்தை உயிர் பெற்றது. மரணப் படுக்கையில் இருந்த துரியோதனனுக்கு பாண்டவர்களின் இந்த அழிவு சொல்லப்பட.... நிம்மதியுடன் இறந்தான் துரியோதனன். ஆக, இறக்கும் தருணத்தில் அவனுக்கு நிம்மதியைத் தந்தான் அஸ்வத்தாமா. போரில் கலந்து கொள்ளமாட்டேன் என்ற ஸ்ரீகிருஷ்ணரை, திரைமறைவில் அவர்களுக்கு உதவி செய்யத் தூண்டியது, அஸ்வத்தாமாவின் வீரம். தனது அழிவை பொருட்படுத்தாமல், திரும்பப் பெற முடியாது என்று தெரிந்தும் அஸ்திரத்தைத் திசை திருப்பிவிட்ட அவனது நெஞ்சுரம், வாக்குறுதியைச் செயல்படுத்துவதில் இருந்த உறுதி ஆகிய இரண்டுமே வெளிப்பட்டது !
தகாத வழியில் தந்தையைக் கொன்றவர்களை, அதே வழியில் அழிப்பதில் தவறொன்றுமில்லை. உள்நோக்குடன் செயல்படுபவனை அதே வழியில் எதிர்கொள்ளலாம் என்கிறார் சாணக்யன் (சடே சாட்யம் ஸமாசரேத்). தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் மோதலை ஏற்படுத்தி, கடைசியில் தர்மம் வெல்லும் எனும் தத்துவத்தை உணர்த்த மகாபாரதத்தைப் பயன்படுத்தினார் கிருஷ்ணர். பாண்டவர்களைக்கொண்டு, கௌரவர்களை அழிக்க முடிந்தது. ஆனால், பாண்டவர்களை கிருஷ்ண பரமாத்மா அழிப்பது பொருந்தாது. அன்பைச் செலுத்திய பாண்டவர்களை அன்பு செலுத்தியவன் அழிப்பது முரணல்லவா ?! விஷச் செடியாக இருந்தாலும், அதை வளர்த்தவன் அழிக்கத் தயங்குவான் (விஷ விரு÷ஷாபிஸம்வர்...). இரு சாராரும் அழிவைச் சந்திக்க வேண்டும் என்பதே கிருஷ்ணரின் எண்ணம். அதை நிறைவேற்ற கிருஷ்ணருக்கு மறைமுகமாக உதவினான் அஸ்வத்தாமா. தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் எனும் நோக்கில், அவன் துயரத்தைச் சந்தித்தது அவனது பெருந்தன்மை, வீரத்தின் மறுஉருவமும் அவனே ! அவனது மனஉறுதியை எவராலும் குலைக்க முடியவில்லை. செயல்படுத்துவதில் சுயமாக இறுதி முடிவெடுக்கு திறன்ம் அவனிடம் உண்டு. அதர்மத்தின் மூலம் தந்தையையும் துரியோதனனையும் கொன்றனர். இது, ஆறாத காயத்தை உண்டு பண்ணியது; இலக்கினை அடைவதற்கான வழியை ஆராய முற்படவில்லை அவன். மாற்று வழியில் சென்றால், இலக்கை அடையமுடியாது. அஸ்வத்தாமாவின் சரித்திரம், நாம் சிந்தித்துச் செயல்படுவதற்கான திறவுகோல்; வழிகாட்டி ! மனோவலிமையும் செயல்படுவதில் தீவிரமும் கொண்டு தன்மானத்துடன் வாழ வேண்டும்; உலக நன்மைக்கு பங்கம் வராதபடி செயலாற்ற வேண்டும். அஸ்வத்தாமா நிலைத்த புகழுடன் இருப்பதற்குக் காரணங்கள், இவைதான்

Saturday, June 23, 2012

ஆண்டவனை அச்சுறுத்திய ஆச்சார்யர்!

உதயணாச்சாரியார் தர்க்க சாஸ்திரத்தில் மகாபண்டிதர். சிறந்த பக்தர். நாஸ்திகவாதம் பிரபலமாக இருந்த காலம் அது. கடவுள் இல்லை என நாத்திகர்கள் பிரச்சாரம் செய்து வந்தார்கள். உதயணாச்சாரியார் அவர்களை மறுத்து வாதம் புரிந்தார். வாதத்திற்கு யார் நடுவராக இருப்பது என்ற கேள்வி வந்தது. இவர்களிடையே சிலர் கேலியாக, உங்கள் கிருஷ்ணனே நடுவராக இருக்கட்டுமே என்றனர். உதயணாச்சாரியார் பூஜித்து வந்த பொன்னாலான கிருஷ்ண விக்கிரகத்தை நடுவராகக் கொண்டு வாதம் நடந்தது. ஸ்ரீகிருஷ்ண விக்கிரகம் ஒரு தாம்பாளத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வைக்கப்பட்டது. நாத்திகர்கள் கடவுள் நம்பிக்கையைக் கண்டனம் செய்யச் செய்ய ஸ்ரீகிருஷ்ண விக்கிரகம் உருக ஆரம்பித்தது ! உதயணாச்சாரியார் இந்த வாதத்திற்கு எதிர்வாதம் செய்து நாத்திகர்களின் நிரீஸ்வரவாதம் சரியல்ல என்று நிரூபணம் செய்த போது உருகிப் போயிருந்த சிலை மீண்டும் முன்போலவே மாறியது. இதுபோல 21 முறைகள் நடந்தன. முடிவில் உதயணாச்சாரியாரின் வாதமே வென்றுவிட்டதால் கிருஷ்ண விக்கிரகம் பழையபடியே ஸ்திரமானது. ஒருமுறை உதயணாச்சாரியார் பூரி ஜகந்நாதரைத் தரிசிக்கச் சென்றார். அவர் சென்றபோது இரவு நேரமானதால் கோயில் நடை சாத்தப்பட்டு இருந்தது. மூடிய கதவைத் திறந்து அவருக்குத் தரிசனம் செய்து வைப்பதற்கு ஒருவரும் முன் வரவில்லை. அதனால் அவர் கீழ்க்கண்ட சுலோகத்தை இயற்றினார்:
ஐச்வர்யமத மத்தோஸி மாமவஞாய லக்ஷ்யஸே
புனர் பௌத்தே ஸமாயாதே மததீனா தவஸ்திதி:
(ஜகந்நாதா) ஐச்வர்யப் பெருமையினால் நீ என்னிடம் அலட்சியமாக இருக்கிறாய் போலுள்ளது. இருக்கட்டும். மீண்டும் பவுத்தர்கள் புறப்பட்டு வந்தால் உன் நிலை என்னவாகும்? அப்போது உன்னை நான்தான் காப்பாற்ற வேண்டும் என்பது ஞாபகம் இருக்கட்டும். இதைப் பாடியதும் கோயில் சன்னதியின் கதவுகள்தானே திறந்து கொண்டன ! உதயணாச்சாரியாரும் ஜகந்நாதரைக் கண் குளிரத் தரிசித்து மகிழ்ந்தார். பக்தர்களுக்கு எப்போதும் அருள் புரியும் பகவானை மிரட்டுவதற்கும் கூட ஒரு மகான் இருந்திருக்கிறாரே!

அப்பைய தீட்சிதர்

                                            
 
அப்பைய தீட்சீதருக்கு எல்லா சாஸ்திரங்களும் தெரியும். அவர் மாதிரி எல்லா சாஸ்திரங்களுக்கும் புஸ்தகம் எழுதினவர் ஒருவரும் இல்லை. அத்தகைய பெரியவருக்குத் தம்முடைய பக்தியை சோதித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டாகி விட்டது. பைத்தியம் பிடித்தால் அந்த சமயத்தில் கெட்ட வார்த்தைகள் சொல்லாமல், காம வார்த்தைகளைச் சொல்லாமல், ஈசுவர பக்தி பண்ணினால் அப்போது நம்முடைய பக்தி மெய்யானதுதான் என்று தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தார். ஊமத்தங்காய், ஊமத்தம்பூ இவற்றைச் சாப்பிட்டால் பைத்தியம் பிடித்துவிடும் என்று அவருக்குத் தெரியும்.
பைத்தியம் பிடிக்கிற மருந்தைச் சாப்பிட்டார். அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. உடனே உளற ஆரம்பித்துவிட்டார். அவர் சொன்னவற்றை எல்லாம் சிஷ்யர்கள் எழுதிக் கொண்டார்கள். ஊமத்தம் பூவின் குணத்தை மாற்றக்கூடிய மருந்தைக் கொடுத்தார்கள். பைத்தியம் தெளிந்துவிட்டது. அவருக்கு பைத்தியம் பிடித்திருந்த காலத்தில் என்ன பிதற்றினார் என்று பார்த்தால் ஐம்பது சுலோகங்கள் ஈசுவரன் மேல் பாடியிருந்தார். அந்த கிரந்தத்துக்கு ஆத்மார்ப்பண ஸ்துதி அல்லது உன்மத்த பஞ்சாசத் என்று பெயர். உன்மத்தம் என்றால் ஊமத்தம் பூ.

Thursday, June 21, 2012

பாஸ்கர ராயர்

பாஸ்கர ராயர் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பாகா என்னும் ஊரில் கி.பி., 1690ல் பிறந்தார். தந்தையின் பெயர் கம்பீர ராயர். தாயாரின் பெயர் கோனாம்பிகா. விச்வாமித்ர கோத்திரத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் 1690 முதல் 1785 வரை இருக்கலாம் என்று உத்தேசமாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். தந்தை கம்பீரராயர் பெரிய பண்டிதர். ஒழுக்க சீலர். சாஸ்திரங்களையும், புராணங்களையும் கரை கண்டவர். அவர் தமது திருக்குமாரனுக்கு இளவயதிலேயே சரஸ்வதி உபாசனை செய்து வைத்தார். பின்னர், காசிப் பட்டணத்திற்கு அவரை அழைத்துச் சென்று நரசிம்மானந்த நாதர் என்னும் பெரியாரிடம் வித்தியாப்பியாசத்திற்காக விட்டுவைத்தார். அவரிடம் தமது ஏழாவது வயதிற்குள்ளேயே சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தார். மகா வித்வானான சபேச்வரர் என்ற அரசரின் நன்மதிப்பைப் பெற்றார். பின்னர் கங்காதர வாஜ்பேயீ என்பவரிடம் கௌடதர்க்க சாஸ்திரத்தைப் பயின்றார். அதிகமாகப் பழக்கத்திலில்லாத அதர்வண வேதத்தை முறையாகக் கற்றுக் கொண்டு பிறகு அதை சொல்லித் தந்தார். தேவி பாகவதத்தைப் பிரவசனம் செய்து அதன் புகழை ஓங்கச் செய்தார். பாஸ்கர ராயர் ஆனந்தி என்ற பெண்ணை மணந்து கொண்டார். தங்களுக்குப் பிறந்த குழந்தைக்கு பாண்டுரங்கன் என்று பெயரிட்டார்.
இவருக்கு வித்யையை <உபதேசம் செய்து, பாஸுராநந்த நாதர் என்று தீட்சா நாமம் அளித்தவர் சிவதத்த சுக்லர் என்ற மகான். பின்னர் பாஸ்கரராயர் தம் மனைவி ஆனந்திக்கு வித்யையை உபதேசம் செய்து பத்மாவதி அம்பிகா என்ற தீட்சா நாமத்தை அளித்தார். கூர்ஜர தேசத்திற்குச் சென்று வல்லபாசாரிய மதத்தைச் சார்ந்த வித்வான் ஒருவரை வாதத்தில் வென்றார். அடுத்து மத்வ மதத்தைச் சார்ந்த பண்டிதர் ஒருவரையும் வெற்றி கண்டு, அவரது <உறவினர் பெண் பார்வதியை இரண்டாம் தாரமாக மணந்து கொண்டார். காசியில் தங்கியிருந்தபோது இவர் பெரியதொரு சோமயாகம் செய்ததாகத் தெரிகிறது. பின்னர் சந்திரசேனன் என்ற மன்னனின் வேண்டுகோளுக்கிணங்கி, கிருஷ்ணா நதிக்கரையில் சில காலம் வாழ்ந்து வந்தார். அதற்குப் பிறகு தஞ்சை மன்னர் இவரை அன்புடன் அழைக்கவே, தமிழகத்திற்கு வந்து குடியேறினார். இவரது குருவான கங்காதர வாஜ்பேயீ, அப்போது காவிரியின் தென்கரையில் <உள்ள திருவாலங்காட்டில் வசித்து வந்ததால் அவர் அருகிலேயே வாசம் செய்ய பாஸ்கரராயர் விரும்பியிருக்க வேண்டும். அதற்கிணங்க தஞ்சை மன்னரும், திருவாலங்காட்டுக்கு வடகரையில் உள்ள செழிப்பான கிராமத்தை மகானுக்கு அளித்திருக்கிறார். அது பின்னர் பாஸ்கரராஜபுரமாக மாறியிருக்கிறது.
பாஸ்கரராஜபுரத்தில் வெகுகாலம் வசித்து, அம்பாளின் உபாசனையில் திளைத்து, தமது இறுதிக்காலத்தை மத்யார்ஜுனம் என்ற திருவிடைமருதூரில் கழித்த பாஸ்கரராயர், அங்கு தமது 95-வது வயதில் தேவி சரணங்களை சென்றடைந்தார். அவர் காலத்திற்குப் பிறகு, அவரது துணைவியார் பாஸ்கரராஜபுரத்தில் பாஸ்கரேச்வர் ஆலயத்தை நிர்மாணித்திருக்கிறார். இந்த ஆலயம் கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில் உள்ள திருவாலங்காடு அருகே அமைந்துள்ளது. ஸ்ரீவித்யை உபாசகர்களில் தலைசிறந்தவரான பாஸ்கரராயர் அம்பாளின் வரப்பிரசாதத்தைப் பூர்ணமாகப் பெற்றிருக்கிறார். நமது சநாதன வைதீக மார்க்கத்தில் அசையாத பற்றுக் கொண்டிருந்தவர். குப்தவதீ என்னும் தமது சப்தசதீ வியாக்கியானத்தில் ஆதிசங்கர பகவானை வெகுவாகத் தோத்திரம் செய்துள்ளார். பாஸ்கரராயர் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் பல எழுதியுள்ளார் என்றும், அவற்றில் பெரும்பகுதி தற்போது கிடைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள். வேதாந்தம், மீமாம்ஸை, வியாகரணம், நியாயம், சந்தஸ், காவியம், சுருதி, ஸ்மிருதி, புராணம், தோத்திரங்கள், மந்திர சாஸ்திரம் முதலிய துறைகளில் இவர் இயற்றியுள்ள நூல்களை ஆராய்ந்தோர், இம்மகானுக்குத் தெரியாத வித்தையோ, சாஸ்திரமோ இல்லை என்று தீர்மானமாகச் சொல்கிறார்கள். மந்திர சாஸ்திர ரகசிய நுணுக்கங்கள் பற்றி அவர் அறியாதது ஒன்றுமேயில்லை. மந்திர சாஸ்திரத்திலேயே பதினேழு நுண்ணிய ஆராய்ச்சி நூல்களை இவர் இயற்றியுள்ளார்.
இவற்றில் ஒன்றுதான் சௌபாக்ய பாஸ்கரம் என்ற லலிதா சகஸர நாமம் விளக்க உரை நூல். இவர் லலிதா சகஸ்ரநாமத்திற்கு விளக்க உரை எழுதியதற்கு ஒரு சிறப்பு காரணம் உண்டு. ஒரு முறை இவர் திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மன் முன் நின்று லலிதா சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்து கொண்டிருந்தார். இவர் பாராயணம் செய்ததை கேட்டு மகிழ்ந்த அம்பாள், இவர் முன் தோன்றி, இவருக்கு ஆசிர்வாதம் தந்து இதற்கு விளக்கவுரை எழுதும் படி கூறினாள். அம்மன் கூறியதை சிரமேற்கொண்ட பாஸ்கரராயர் திருக்கோடிக்காவல் என்ற கோயிலில் லலிதா சகஸ்ர நாமத்தின் விளக்க உரையை அரங்கேற்றி அதற்கு "சௌபாக்ய பாஸ்கரம் என்ற நாமம் சூட்டினார். அவர் இந்த பாஷ்யத்தைப் பன்னிரெண்டு பாகங்களாப் பிரித்து ஒவ்வொரு பாகத்திற்கும் சூரியனுடைய பன்னிரண்டு கலைகளின் பெயர்களை வரிசையாகக் குறிப்பிட்டிருக்கிறார். தமது பாஷ்யத்தின் முன்னுரை சுலோகம் ஒன்றில் பாஸ்கரராயர், கிழக்கில் பிரம்ம புத்திரா நதி ஓடும் காமரூபம் என்ற அஸ்ஸாம், மேற்கில் சிந்து நதி ஓடும் காந்தார தேசம், தெற்கில் ராமரால் கட்டப்பட்ட சேது, வடக்கில் பனி மூடிய கேதாரம், இவற்றுக்கு இடையே உள்ள பிரதேசத்தில் வாழும் வித்வான்களுக்கு இந்த எனது லலிதா சகஸ்ரநாம வியாக்யானம் மகிழ்ச்சியைத் தரட்டும் என்று கூறியுள்ளார்.
பாரதம் பெற்றெடுத்த மாமேதைகளில் ஒருவர் பாஸ்கரராயர். அவரது மகிமைகளை அறியும்போது, ஆதிசங்கர பகவத்பாதருக்கும், அப்பய்ய தீட்சிதருக்கும் அடுத்தபடியாக இந்த மகானை மதிப்பிடத் தோன்றும். வித்யையின் உட்பொருளையும், மந்திர சாஸ்திர ரகஸ்யங்களையும் மிக ஆழமாக அறிந்திருந்த இவருக்கு அடுத்தபடியாகச் சொல்ல வேண்டுமானால் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான நாதஜோதி முத்து சுவாமி தீட்சிதரைத்தான் குறிப்பிட வேண்டும். காசியிலிருந்தபோதே பாஸ்கரராயர் வாமாசர சம்பிரதாயப்படி தேவி உ<பாசனை செய்து வந்திருக்கிறார். இதை அங்குள்ள பண்டிதர்கள் ஆட்சேபித்திருக்கிறார்கள். அவரை அவமானப்படுத்த எண்ணம் கொண்டு, அவர் செய்த மகா யாகத்திற்குச் சென்று, மந்திர சாஸ்திர சம்பந்தமான கேள்விகளை சரளமாகக் கேட்டு அவரை மடக்கப் பார்த்தனர். ஆனால், அவர்களது முயற்சி பலிக்கவில்லை. எல்லா கேள்விகளுக்கும் பாஸ்கரராயர் சரியாக பதில் சொன்னார். அப்போது அங்கு இருந்த குங்குமானந்த ஸ்வாமி என்ற மகான், பண்டிதர்களை நோக்கி, பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் அமர்ந்து விடையளித்து வருவதால் நீங்கள் தோற்பது நிச்சயம், பேசாமல் இருங்கள் என்று எச்சரித்தார். அப்போது நாராயண பட்டர் என்ற பண்டிதர், பாஸ்கரராயரின் தோளில் அம்பாள் பிரசன்னமாயிருப்பதைத் தரிசனம் பண்ணவேண்டும் என்று விரும்பவே பாஸ்கரராயர் காலையில் அம்பிகைக்குச் செய்த அபிஷேக நீரால் நாராயண பட்டரின் கண்களைத் துடைத்தார் குங்கும சுவாமி. அடுத்த கணம் பட்டரின் கண்களுக்கு, பாஸ்கரராயரின் தோளின் மீது அமர்ந்திருந்த பராசக்தி தரிசனம் அருளினாள். நாராயண பட்டர் பரவசத்தில் மூழ்கி, கண்ணீர் உகுத்தபடி, மகானின் காலில் விழுந்து வணங்கினார். இதர பண்டிதர்களும் அறியாமையால் செய்த தங்கள் தவற்றுக்கு பாஸ்கரராயரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்கள்.
பாஸ்கர ராயரின் வாழ்க்கையில் மற்றொரு நிகழ்ச்சியும் கூறப்படுவது உண்டு. அவர் திருவிடைமருதூர் மகாதானத் திண்ணையிலுள்ள தூணில் சாய்ந்து கொண்டு <உட்கார்ந்திருப்பது வழக்கம். அப்போது தினமும் வேப்பத்தூரிலிருந்து ஒரு சந்நியாசி அந்த இல்லத்தைக் கடந்து கொண்டு மகாலிங்கசுவாமி தரிசனத்திற்குப் போவார். ஆனால், பாஸ்கர ராயர் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செய்யமாட்டார். இது அவ்வூர் மக்களுக்கு சற்று வியப்பை ஊட்டியது. சிலர் ஆத்திரமடைந்தார்கள். ஒருநாள் கோயிலில் பாஸ்கர ராயரும் அந்த சந்நியாசியும் சந்தித்துக் கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிலர், துறவியிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்வதற்கு பாஸ்கரராயரிடம் விளக்கம் கேட்டனர். அப்போது பாஸ்கரராயர், இல்லறத் தர்மத்தின்படி தாம் சந்நியாசிக்கு நமஸ்காரம் செய்திருந்தால், அவரது தலை சுக்கு நூறாக உடைந்திருக்கும் என்றும், அவரது உயிரை காப்பாற்றுவதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் கூறினார். பின்னர் அதை நிரூபிப்பதற்காக அத்துறவியின் தண்டம், கமண்டலம், காஷாய வஸ்திரம் முதலியவற்றை ஓரிடத்தில் வைத்து அவற்றிற்கு சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து எழுந்தார். அடுத்த கணம் அவை மூன்றும் சுக்கு நூறாக உடைந்து சிதறின. அதைக் கண்டதும் அத்துறவி பாஸ்கரராயரின் மகிமையை உணர்ந்தார். பொது மக்களும் அவர் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர்.

Monday, June 18, 2012

சித்ரகுப்தன் கதை சூட்சுமமும் பௌர்ணமி தினமகிமையும்

சித்ரகுப்தன் என்பவர் நம் வாழ்வில் நாம்  செய்த பாவ, புண்ணிய பலன்களைக் கணக்கிட்டு நமது வாழ்நாள் மற்றும் வாழ்க்கை முடிந்தபின் சொர்கவாழ்வா? நரக வாழ்வா? என தீர்மானித்து எமனுக்கு சொல்பவர். சுருங்கச்சொன்னால் எமதர்மராஜனின் கணக்குப்பிள்ளை. இவரைப்பற்றிய கதைகளை கீழ்வருமாறு வகைப்படுத்தலாம். 
பார்வதி தேவி வரைந்த சித்திரம் அவராலேயே உயிர் கொடுக்கப்பட்டது, சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதினால் சித்திரகுப்தா என பெயர் பெற்றார்.
சித்திரை மாதத்தில் பிறந்த புத்திரன் ‘சித்திரபுத்திரன்’ சித்ரகுப்தன் எனப்பட்டார். 
இவற்றை விட இவரது பெயர் கூறும் இன்னொரு விடயம் என்ன வெனில் "சித்ரம்" என்றால் வரையப்பட்டது என்று பொருள், குப்தம் என்றால் மறைக்கப்பட்டது என்று பொருள். 
இனி இவர் பற்றிய மேற்கூறிய புராணக்கதை பற்றிய சூட்சுமத்திற்கு வருவோம்; 
முதலாவது பார்வதி தேவி வரைந்த சித்திரத்திற்கு உயிர் கொடுக்கப்பட்டார் என்பது, பார்வதி தேவி உலகினை படைத்த சக்தி, அந்த சக்தியின் ஒருபகுதி தான் மனச்சக்தி, மனச்சக்தி தெய்வமனம் (divine mind), ஆகாய மனம் (Cosmic mind), மனித மனம் (Human mind) என இயங்குகிறது. தெய்வமனத்தின் ஒரு கூறுதான் ஆகாய மனம், ஆகாய மனத்தின் ஒரு கூறுதான் மனித மனம். ஆக மனித மனம் எண்ணும் எண்ணங்கள் ஆகாயமனத்தில் பதியப்பட்டு சேமிக்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்பட்ட எண்ணங்கள் பிரபஞ்சமனதிற்கு செல்லும் போது அதன் செயலாக்கம் நடைபெறுகிறது. இவ்வாறு மூன்று மனங்களும் இணைக்கப்படும் போது ஒருவனுடைய பாவ புண்ணிய கணக்குகள் செயல் பெறத்தொடங்குகிறது. ஆக இந்த மூன்று மனங்களை இணைக்கும் சக்தி அல்லது சேமிப்பகம் தான் "சித்ரகுப்தன்" - அதாவது மனித எண்ணங்கள் சேமிக்கபடும் சித்தம் எனப்படும் ஆழ்மனம் (Subconsciousness mind) சித்ரகுப்தரின் ஒரு பகுதி, இது போல் ஆகாய மனத்தில் சேமிக்கப்படும் "ஆகாய சித்தம்" சித்ரகுப்தனின் ஒரு பகுதி. பார்வதி தேவி வரைந்த சித்திரத்திலிருந்து தோன்றினார் என்பது பிரபஞ்ச மனசக்தியிலிருந்து பகுக்கப்பட்ட ஒரு பகுதி என்பதேயாகும். நவீன உளவியல் சற்று தெரிந்தவர்களுக்கு புரியும் மனம் என்பதின் ஒரு கூறுதான் "சித்தம்" எனும் ஆழ்மனம் என்று. அதாவது பகுக்கமுடியாதபடி மனமும் சித்தமும் இரண்டறக்கலந்தவை. ஆக சித்ரகுப்தன் என்பது நம் எல்லாருடைய சித்தம் எனப்படும் ஆழ்மனமேயாகும். 

இரண்டாவது சித்திரை மாதம் தொடர்பான கதை, நாம் எல்லோரும் அறிவோம் சித்திரை மாத பௌர்ணமி சித்ரகுப்தரிற்கு விஷேடம் என்று. சோதிடம் அறிந்தவர்களுக்கு தெரியும் சந்திரன் மனக்காரகன், அதாவது பூமியில் வாழும் மனிதரனைவரது மனமும் சந்திரனால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. பௌர்ணமி அன்று மனச்சக்தி அதிகரிக்கும். அதனால் தான் அதனை தாங்கும் வலிமையற்ற நோயாளிகளுக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. சித்தபிரமை பிடித்தவர்களுக்கு அதிகமாகிறது. அதே நேரம் மனதினை அடக்கி ஆளதெரிந்தவர்களுக்கு சாதனை புரிய ஏற்ற நாள். இதனால் தான் பௌர்ணமி அம்பிகைக்கு விஷேடமாக கருதப்படுகிறது. ஏனேனில் மனச்சக்தி தான் அனைத்திற்கும் அடிப்படை.  ஆக பௌர்ணமி அன்று நாம் மனதில் எண்ணும் எண்ணம் அதிக வலிமையுடையதாக எமது சித்தத்திற்கூடாக ஆகாய மனத்தில் பதியப்பட்டு, பின்பு பிரபஞ்ச மனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு காரியம் நிறைவேறுகிறது. இதனால் தான் பௌர்ணமி அன்று விரத நாளாகவும், புனித நாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. புத்தர் ஞானம் பெற்ற வழிமுறையும் இதுதான். இது சித்ராபௌர்ணமி அன்று மட்டும் என்பதில்லை, எந்த பௌர்ணமி தினத்திலும் இதே விளைவுதான். குறைந்தது வருடம் ஒருமுறையாவது இந்த இரகசியத்தினை பயன்படுத்தி மக்கள் பயன்பெறட்டும் என்று சித்தர்கள், ரிஷிகள் இவ்வாறு கதைகளாக கூறியுள்ளார்கள். 

வைகுண்ட சுவாமி

அவதார புருஷர்கள், காலத்தின் குழந்தைகள். இவர்கள் மக்களின் சமூக, சமய நெருக்கடிகளைத் தீர்த்து வைக்கும் மகாத்மாக்களாக மண்ணில் மலர்கிறார்கள். அவர்கள் தமக்கென வாழாமல் பிறருக்கென வாழ்கிறார்கள். குணமென்னும் குன்றில் வீற்றிருக்கிறார்கள். யான், எனது என்னும் செருக்கறுத்து வையத்துள் வாழ் வாங்கு வாழ்வதால் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுகிறார்கள். பகவான் வைகுண்டர், கி.பி., 1809ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமரைக்குளம் என்னும் ஊரில் பொன்னு நாடர், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் முத்துக்குட்டி என்பதாகும். தன் வீட்டிலேயே திருமால் கோயில் வைத்து வைணவராகத் தம் ஆன்மிக வாழ்வைத் தொடங்கிய அவர், 1833 மார்ச் முதல்நாள் வெள்ளிக்கிழமை திருச்செந்தூர் கடலுள் மூழ்கி ஞானம் பெற்று, மூன்று நாள் கழித்து (மாசி 20-ம்தேதி) வைகுண்டசுவாமியாக வெளிப்பட்டார். பின்னர் தீவிர சமய வாழ்வில் ஈடுபட்டார். சாதியில் பெயரால் ஒரு மத மக்கள் பிரியக்கூடாது என்றும்; ஒரு மதத்தின் உட்பிரிவுகளுக்குள் பகைமை கூடாது. இதை மக்களுக்குத் தெளிவாக உணர்த்தி, சாதி சமய ஒருமைப்பாட்டிற்கு வழி வகுத்தார் வைகுண்டர். அவர் வைணவ சம்பிரதாயத்தில் ஈடுபாடு கொண்டவராயினும், சைவத்தையும் தழுவி, சிவ சிவ அரஹர என்ற வழி பாட்டுப் பாடலை இயற்றி மக்களிடையே பழக்கத்துக்குக் கொண்டு வந்தார்.
ஒரு முறை இவர் திருவிதாங்கூர் அரசால் கைது செய்யப்பட்டு 110 நாட்கள் சிறைவாசம் செய்து பல அற்புதங்கள் புரிந்து பின் விடுதலை பெற்றார். அவருக்கு ஏற்பட்ட சிறைச் சோதனைகள் பல.அதனால் அவர் புகழ் பெருகிவிட்டது. விடுதலைக்குப் பின் அவர் பணி தீவிரமடைந்து ஓர் இயக்கமாகவே உருவாகிவிட்டது. வைகுண்டரைப் பின்பற்றுவோர் அய்யா வழியினர் என்ற புதுப் பெயரால் அழைக்கப்பட்டனர். கல்வி வளம் பெறாத ஏழை எளிய மக்களிடையே ஆன்மிகப் பணிபுரிந்த வைகுண்ட சுவாமி தனக்குத் துணைப் பணியாளர்களாக ஐந்து சீடர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குப் பாண்டவர் எனப் பெயரிட்டு அழைத்தார். அவர்களில் தர்மசீடர் எனப் புகழ் பெற்ற சிவனாண்டி என்பவரும், அரிகோபாலன் சீடர் என்ற இயற்பெயர் உடைய சகாதேவன் சீடரும் வைகுண்டர் கொள்கைகளைப் பரப்பப் பெரிதும் உழைத்துள்ளனர். தர்மசீடரின் திருவுருவம் கோயிலிலேயே சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பெரிய கவிஞராகத் திகழ்ந்தவர் அரிகோபாலன் சீடர். இத் தொண்டர்களின் துணையோடு வைகுண்டர் நாட்டுமக்கள் மனதில் சமய உணர்வை நிறைக்கவும், ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தவும் துவையல் பந்தி என்ற துறவுக் குழுவை அமைத்தார். அக்காலத்திலேயே சாதி பேதங்களை மறந்து 700 குடும்பங்கள் துவையல் பந்தியில் பங்கேற்றனர். முற்றிலும் சைவத் துறவு நிலையை மேற்கொண்ட இக் குடும்பங்கள் வைகுண்ட சுவாமியின் தலைமையில் கன்னியாகுமரிக்கு 2 கி.மீ. வடக்கே கடற்கரையில் அமைந்துள்ள வாகைப்பதி என்ற இடத்தில் தனிக்குடியிருப்பு அமைத்து துறவுப் பயிற்சி பெற்றன. இவர்களே பின்னாளில் வைகுண்டர் நெறி பெரு வளர்ச்சி பெறக் காரணமாயினர். ஏழை எளிய மக்களின் பக்தி வளர்ச்சியோடு கல்வி வளர்ச்சிக்கும் பணிபுரிய விரும்பிய வைகுண்டர் நிழல் தாங்கல் என்ற புதிய அமைப்பொன்றை உருவாக்கினார். நிழல் தாங்கல் என்பது மரநிழலில் அமைந்த வழிபாட்டு இடமாகவும், கல்வி நிலையாகமாவும் திகழ்ந்தது. மக்களுக்கு இதிகாச-புராணங்களும் சமய உண்மைகளும் கற்பிக்கப்பட்டன. இவ்வமைப்பின் மூலம் அய்யாவழி ஆல்போல் தழைத்துவிட்டது.
வைகுண்டர் ஒப்பற்ற தவஞானியாக விளங்கினார். சாமித்தோப்பில் ஆறு ஆண்டுகள் அருந்தவம் புரிந்தார். தவ ஆற்றலால் செய்த அற்புதங்கள் பல. மண்ணும் தண்ணீரும் கொடுத்தே மக்களின் நோய் நொடி தீர்த்தார். குறை களைந்து நிறைபுகழ் எய்தினார். இந்து சமய மக்களின் கட்டுக்கோப்புக் குலைந்துவிடாமல் இருப்பதற்காகவும் ஆன்மிக வளர்ச்சிக்காவும் சுவாமிகள் பல இடங்களில் பெரிய கோயில்களையும் அமைத்துக் கொடுத்துள்ளார். அக்கோயில்கள் பதி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. இப்பதிகளும், தாங்கல்களும் 150 வருடங்களாக இந்து சமயத்தின் அரண்களாகவும், வைகுண்டர் நெறியின் கேந்திரங்களாகவும் விளங்கி வருகின்றன. இந்து சமயத்தின் ஒரு மறுமலர்ச்சி இயக்கமாக விளங்கும் வைகுண்டர் நெறியை பல லட்சம் மக்கள் பின்பற்றுகின்றனர். வைகுண்டர் 1851 ஜூன் 2ல் சமாதியானார். தம் இறுதியை இதற்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே சீடர்களுக்கு வெளிப்படுத்தினார். வைகுண்டரின் வரலாற்றுப் புராணமாக அவர் சீடர் அரிகோபாலன் படைத்துள்ள அகிலத் திரட்டு அம்மானை 1841ல் படைக்கப்பட்டது. அந்நூல் 1851 ஜூன் 2ம் தேதி வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளை யாவரும் வியக்கும்படி விளக்கிக் காட்டுகிறது. இந்நூல் மற்றொரு வகையிலும் தனிச்சிறப்பு உடையது. தமிழில் உள்ள அம்மானைகளில் பெரியது. சுவைகளில் தன்னிகரற்றது. வைகுண்டர் சமாதியடைந்த பின் அவர் பென்மேனிக் கூட்டைப் பொதிந்து மணிக்கோயில் செய்து நாராயணசுவாமி கோயிலாகப் பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். கோயிலில், அவர் பயன்படுத்திய திரும்பிரம்பு, சுரைக்குடுக்கை, கடயம் என்ற கைக்காப்பு முதலியன புனிதமாகக் காக்கப்பட்டு வருகின்றன. சுவாமித் தோப்பில் உள்ள நாராயணசுவாமி கோயிலில்,வைணவக் கோயில் சம்பிரதாயங்கள் யாவும் வழுவாமல் பின்பற்றப்படுகின்றன. தமிழில் பெரிய அம்மானை இக்கோயில் தலபுராணமாக அமைந்திருப்பது போல தமிழகத்தில் பக்தர்களால் சுமக்கப்படும் வாகனங்களில் பெரியதான இந்திர விமான வாகனம் இங்குதான் உள்ளது. மாசி 20 ல் நடக்கும் வைகுண்டர் ஜெயந்தி விழாவும், ஆவணி, தை, வைகாசி மாதங்களில் நடைபெறும் பதினொரு நாள் திருவிழாக்களும் முக்கிய விழாக்களாகும். சுவாமித் தோப்பு அய்யா வழிபாடுசக்தி மிக்க வழிபாடாக விளங்குகிறது.

Tuesday, June 12, 2012

சதாசிவப் பிரம்மேந்திரர்

 
 
                                                    
 
 
மக்களுக்கு நல்வழி காட்ட காலந்தோறும் அவதரித்து வரும் மகான்களில் ஒருவராக 17-ஆம் நூற்றாண்டில் தோன்றியவர் சதாசிவப் பிரம்மேந்திரர். காஞ்சி மடத்தின் 57-ஆவது பீடாதிபதியான சதாசிவேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சீடராக இருந்தவர். சதாசிவப் பிரம்மேந்திரர் திகம்பரராக வாழ்ந்தவர். ராமேஸ்வரத்தில் குடிகொண்டிருக்கும் ராமநாத சுவாமியின் அருளால் பிறந்த இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சிவராமன் என்பது. அவர்களது குலதெய்வமான கிருஷ்ண பகவானின் பெயரையும் இணைத்து சிவராம கிருஷ்ணன் என்று அழைக்கப் பெற்றார். இளம் வயதிலேயே வேதம், புராணம், இதிகாசம், உபநிடதம், சாத்திரம், தர்க்கம் போன்றவற்றில் சிறந்த புலமை பெற்றார் சிவராம கிருஷ்ணன். இவரது தந்தை சோமநாத யோகி இல்லறத்தைத் துறந்து இமயம் சென்றுவிடவே, தாய் பார்வதியின் ஆதரவில் வளர்ந்து வந்தார். சிவராமனின் பரந்த அறிவாற்றலைக் கண்ட தாய் அவரை காஞ்சி பீடாதிபதி சதாசிவேந்திர சுவாமிகளிடம் ஒப்புவித்தார். அங்கே இவரது அறிவு மேலும் சுடர்விட்டுப் பிரகாசித்தது. தர்க்கத்தில் தன்னிகரற்றவராக விளங்கினார். பல இடங்களுக்கும் சென்று மிகச்சிறந்த வித்வான்கள் பலரையும் தன் வாக்கு சாதுர்யத்தால் மடக்கித் தோல்வியுறச் செய்தார். இதைக் கேள்விப்பட்ட குரு சதாசிவேந்திரர், இவ்வாறு தர்க்கத்தில் ஈடுபட்டு வெற்றிமேல் வெற்றி பெற்றால், சிறந்த கல்விமானாக இருந்தாலும் அவன் மனதில் ஆணவம் குடியேறிவிடும்; அதனால் ஆன்ம முன்னேற்றம் தடைப்படும் என்றெண்ணி சிவராமனை காஞ்சிக்கு வரும்படி கட்டளையிட்டார். அங்கு வந்த சிவராமன் வித்வான்களிடம் மிகப்பெரிய தர்க்கத்தில் ஈடுபட, குருவானவர் அவரை அழைத்து, ஊரார் வாயெல்லாம் அடக்க கற்ற நீ உன் வாயை அடக்க கற்கவில்லையே என்றார். அதுவே வேத வாக்காக- குரு ஆணையாக சிவராமனுக்குத் தோன்றியது. அந்த நொடியிலிருந்து பேசுவதையே நிறுத்திவிட்டார் சிவராமன். சீடனின் பண்பட்ட நிலையை அறிந்து மகிழ்ந்த குரு, சிவராம கிருஷ்ணனுக்கு சதாசிவப் பிரம்மேந்திரர் என்று பெயர் சூட்டி சந்நியாச தீட்சையும் வழங்கினார். அதன்பின்னர் அத்வை தானந்த நிலையில் மூழ்கிய சதாசிவர் சிவன் சம்பந்தமான பல கிரந்தங்களை இயற்றினார்.
சுமார் நூறாண்டு காலம் அவர் வாழ்ந்திருந்தார் என்று கூறுகிறார்கள். ஒருநாள் வழக்கம்போல் நிர்வாணமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அது ஒரு முகம்மதிய மன்னரின் அந்தப்புரம். ராணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். ராஜாவும் அங்கே இருந்தார். சதாசிவப் பிரம்மேந்திரர் அந்தப்புரத்தின் வழியாக நடந்து அந்தப்புறம் போய்க் கொண்டே இருந்தார்! எந்தப் புறத்திலும் இறைவனையே தரிசிப்பவர் கண்களில் கடவுளைத் தவிர வேறு எதுவும் பட வாய்ப்பில்லை அல்லவா? ஆனால் முகம்மதிய மன்னர் தொலைவிலிருந்து அவரைப் பார்த்துவிட்டார். யார் இந்த ஆசாமி? ராணிகள் குளிக்கும் குளக்கரையில் நிர்வாணமாக- எதிலும் லட்சியமே இல்லாதவர்போல் நடந்து செல்கிறாரே! என்ன ஆணவம்! ஓடிச்சென்று அவரைப் பிடித்த மன்னர் அவரது வலக் கரத்தைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தினார். குளித்துக் கொண்டிருந்த ராணிகள் எல்லாம் பதறியவாறு தங்கள் துணிகளை எடுத்துப் போர்த்திக் கொண்டு திகைத்து நின்றார்கள். அவர்கள் திகைத்து நிற்கும்படி ஒரு விந்தையான செயல் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. வலக்கரம் கீழே துண்டாய் விழுந்தபோதும், சதாசிவப் பிரம்மேந்திரர் தன் உடலில் நடந்தது என்னவென்றே தெரியாதவராய்த் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தார்! அவர் வேதனையில் துடிதுடிக்கவும் இல்லை. வலக்கரம் துண்டுபட்டதைப் பற்றி லட்சியம் செய்யவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், இறைவனையே அகக்கண்ணால் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த அவருக்கு வலக்கரம் வெட்டுப்பட்டதே தெரியவில்லை! ராணிகள், நடந்து செல்பவர் யாரோ பெரிய மகானாக இருக்கவேண்டும். தெய்வக் குற்றமாகிவிடும். ஓடிப்போய் அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள்! என்று அரசரிடம் வேண்டினார்கள். அவர்கள் சொல்லாவிட்டாலும்கூட, உடனடியாக மன்னிப்புக் கேட்கும் எண்ணத்தில்தான் திகைத்தவாறு அந்த அரசர் நின்றுகொண்டிருந்தார். கண்முன் நடந்துசெல்லும் அந்த அற்புதத்தை அவரால் நம்பமுடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை. துண்டுபட்ட வலக்கரம் கீழே கிடக்கிறதே!
வலக்கரத்தை எடுத்துக் கொண்டு பிரம்மேந்திரர் பின்னே ஓடினார் அரசர். அவரை நிறுத்தி அவர் உடலைப் பிடித்து உலுக்கினார். மெல்ல மெல்ல பிரம்மேந்திரருக்கு இந்த உலக நினைப்பு வந்தது. அரசரிடம், என்ன வேண்டும்? என்று பிரியமாகக் கேட்டார் பிரம்மேந்திரர்! அவர் பாதங்களில் விழுந்து வணங்கிய அரசர், தான் அவர் வலக்கரத்தை வெட்டிய செயலைக் கூறி வருந்தினார். கண்ணீர் சொரிந்தவாறே மன்னிப்புக் கேட்டார். அதனால் என்ன? பரவாயில்லை. போனால் போகிறது. இந்த உடல் முழுவதுமே ஒருநாள் போகத்தானே போகிறது. வலக்கரம் கொஞ்சம் முந்திக் கொண்டுவிட்டது போலிருக்கிறது! என்று சொல்லி நகைத்தார் பிரம்மேந்திரர். மன்னரின் துயரம் ஆறாய்ப் பெருகியது. .
சுவாமி! ஒரு மகானின் வலக்கரத்தை வெட்டிய குற்ற உணர்ச்சி என் வாழ்நாள் முழுவதும் என்னை வருத்தும். இதற்கு என்ன பரிகாரம் என்று சொல்லுங்கள்! என்று கேட்டார் மன்னர். ஓ! எனக்கு வலக்கரம் இல்லை என்பது உனக்குக் கஷ்டம் தரும் என்கிறாயா? அப்படியானால் என் வலக்கரத்தை அது இருந்த இடத்தில் வைத்துவிடு! என்றார் பிரம்மேந்திரர். முகம்மதிய மன்னர் ஜாக்கிரதையாக தான் கையில் வைத்திருந்த அவரது வலக்கரத்தை அவரது வலது தோளில் பொருத்தினார். பிரம்மேந்திரர் தன் இடக்கையால் வலது தோளைத் தடவிக் கொண்டார். மறுகணம் வலக்கரம் முன்புபோலவே உடலோடு இணைந்துவிட்டது! சரி; இனி உனக்குக் குற்ற உணர்ச்சி இருக்காதில்லையா? என்று அன்போடு கேட்ட பிரம்மேந்திரர் அவர் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். குளக்கரையில் கைகூப்பியவாறு தன்னைத் தொழுதுகொண்டிருந்த ராணிகளுக்கும் புதிதாய் ஒட்டிக் கொண்ட தன் பழைய வலக்கரத்தைத் தூக்கி ஆசி வழங்கினார். பிறகு மீண்டும் இறை தியானத்தில் மூழ்கியவராய் விறுவிறுவென்று நடந்து போய்விட்டார். மன்னர் கைகூப்பியவாறு அவர் செல்வதைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தார்.
இன்னொரு சமயம், காவிரிக்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, மணலில் ஆழமாகப் பள்ளம் தோண்டச் சொன்னார். அவ்வாறு தோண்டியவுடன் அதிலிறங்கி அமர்ந்து கொண்டவர் மண்ணைப் போட்டு மூடிவிடும்படிக் கூறினார். சிறுவர்களும் மூடிவிட்டுச் சென்று விட்டனர். இது நடந்து சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து அங்கிருந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், இங்கு ஒரு சாமியார் இருந்தாரே... ரொம்ப நாட்களாகக் காணவில்லையே என்று பேசிக்கொண்டார்கள். அப்போதுதான் சிறுவர்கள் காவிரி மணலில் அவரைப் புதைத்த விஷயத்தைக் கூறினார்கள். இதைக் கேட்டு பதைத்துப் போன கிராம மக்கள் காவிரிக் கரைக்குப் போய் சிறுவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் மணலை மெதுவாக அகற்ற, நிஷ்டையிலிருந்த பிரம்மேந்திரர் சிரித்தபடி எழுந்து சென்றார். அதேபோல ஒரு முறை சில குழந்தைகளை அழைத்து, நாமெல்லாம் மதுரை மீனாட்சி கல்யாண உற்சவத்தைக் காணப் போகலாமா? என்றார். குழந்தைகள் குதூகலத்துடன் போகலாம் என்றனர். என்னைக் கட்டிக் கொண்டு கண்களை மூடிக் கொள்ளுங்கள் என்றார். குழந்தைகள் அவ்வாறே செய்ய, அடுத்த நிமிடம் அவர்களெல்லாம் மீனாட்சி அம்மையின் திருமண உற்சவ விழாவில் இருந்தனர். விழா முடிந்ததும் முன்புபோலவே தன்னைக் கட்டிக்கொள்ளும்படி கூறினார். அவர்களும் அவ்வாறே செய்ய, மறு நிமிடம் எல்லாரும் தத்தமது வீடுகளுக்கு வந்து சேர்ந்தனர். இதுபோல பல அற்புதங்களை அவர் நிகழ்த்தியிருக்கிறார். தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். பிரசித்தி பெற்ற வேண்டுதல் தலமான இக்கோவிலில் உள்ள மாரியம்மனின் திருமேனி புற்று மண்ணால் ஆனது. அதனால் அதற்கு அபிஷேகம் செய்யமாட்டார்கள்; புனுகு மட்டுமே சாற்றுவார்கள். தஞ்சை மன்னரின் நோயைத் தீர்க்க சதாசிவப் பிரம்மேந்திரர் அமைத்த திருவுருவம்தான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன்!
கரூர் அருகே மூன்று கி.மீ. தூரத்தில், தான்தோன்றி மலையில் அமைந்துள்ளது கல்யாண வேங்கடேசப் பெருமான் ஆலயம். பெயருக்கேற்ப இங்கே விளங்கு பவர் உற்சவமூர்த்தி. இந்தத் திருவுருவிற்கு உயிரூட்டி கும்பாபிஷேகம் செய்வித்தவர் சதாசிவப் பிரம்மேந்திரர்தான். இதுவும் தற்போது சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறது. திருப்பதி செல்ல இயலாத வர்கள் தங்கள் வேண்டுதலை இங்கே நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
புதுக்கோட்டை மன்னரின் வேண்டு கோளை ஏற்று, அவருக்கு சிறிது மணலை மந்திரித்துக் கொடுத்தார் சதாசிவர். அதை ஒரு தங்கப் பேழையில் வைத்து இன்றளவும் பூஜையறையில் பாதுகாத்து வருகின்றனர் அந்த வம்சத்தினர். இத்தகைய பெருமை வாய்ந்த சதா சிவப் பிரம்மேந்திரர் தன் சீடர்களிடம் ஒரு குழியை வெட்டச் சொல்லி, சித்திரை மாத சுத்த தசமி நாளில் ஜீவசமாதி அடைந்தார். மறுநாள் காலை காசியிலிருந்து சிவலிங்கம் ஒன்றை அங்கே ஒருவர் கொண்டு வந்தார். அதை அங்கே பிரதிஷ்டை செய்தனர். வில்வமரம் ஒன்றையும் நட்டனர். இவையெல்லாம் ஜீவசமாதி அடையும்முன் பிரம்மேந்திரர் சீடர்களிடம் கூறியபடி நடந்தவைதான். வில்வமரம் உள்ள இடமே அவர் ஜீவசமாதி ஆன இடம். எனவே நெரூர் பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் எனலாம்.

சிருங்கேரி மடாதிபதி சச்சிதானந்த நரசிம்ம பாரதி சுவாமிகளுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டன. அவர் நெரூர் வந்து பிரம்மேந்திரரின் அதிஷ்டானத்தின் அருகே நிஷ்டையில் மூழ்கி னார். அப்போது அவருக்குக் காட்சி கொடுத்த பிரம்மேந்திரர் அவரது சந்தேகங்களைத் தீர்த்து வைத்தாராம். அதைப் பெரும் பாக்கியமாகக் கருதிய நரசிம்ம பாரதி சுவாமிகள், ஸ்ரீசதா சிவேந்திர ஸ்தவம் என்னும் 45 துதிகளால் பிரம்மேந்திரரை வழிபட்டார். அதில் 45-ஆவது துதி, சதாசிவ சுவாமிகளே! தாங்கள் எப்போதும் நிறைந்த மனதுடன் இருப்பவர். இந்த மந்த புத்தியுள்ளவனால் செய்யப்பட்ட துதிகளை ஏற்று மகிழ்வீராக என்பதாகும். இவர் பல நூல்களை எழுதியுள்ளார். கீர்த்தனைகள் பாடியுள்ளார். அத்வைத ரசமஞ்சரி, யோக சுகதாரம், ஆத்ம வித்யா விலாசம், சித்தாந்த கல்பவல்லி ஆகியவை இவரது நூல்கள். இப்படி பல அதிசயங்கள் செய்த அவர் கரூரிலிருந்து 11 கி.மீ. தூரத்தில் வாங்கல் செல்லும் வழியில் உள்ள நெரூரில் சமாதியானதாக தகவல் உண்டு. புதுக்கோட்டை மற்றும் மானாமதுரையில் இவரது அதிஷ்டானம் இருப்பதாகவும் கூறுகிறார்கள். சித்தர்களைப் பொறுத்தவரை, உடல் அவர்களின் ஆன்மாவுக்கான உறை. அவ்வளவுதான். அந்த உறையை அவர்கள் உதறிவிட்டாலும்கூட ஆன்ம ரூபமாக அவர்கள் என்றும் வாழ்வார்கள். வேண்டும்போது அவ்விதமான உடல் என்னும் உறையை அவர்களால் உருவாக்கிக் கொண்டு அதில் புகுந்து காட்சி தரவும் இயலும். உடலுடனோ உடல் இல்லாமலோ தங்கள் அருட்சக்தியின் மூலம் தங்களின் அடியவர்கள் வேண்டும் வரங்களைத் தந்து அவர்களை ரட்சிக்கவும் சித்தர்களால் முடியும். சதாசிவப் பிரம்மேந்திரரின் பாதம் பணிந்து குருவருளும் திருவருளும் பெறுவோம்!

Monday, June 11, 2012

திருக்கச்சி நம்பிகள்

சென்னை அருகிலுள்ள பூவிருந்தவல்லியில், 1009ம் ஆண்டு வீரராகவர், கமலாயர் தம்பதிகள் வாழ்ந்தனர். திருமால் பக்தர்களான இவர்களுக்கு நான்காவதாக பிறந்தவர் கஜேந்திர தாசர். இவர் தான் பிற்காலத்தில் திருக்கச்சிநம்பிகள் என்று பெயர் பெற்றார். கஜேந்திரதாசர் திருமாலின் மீது பக்தி கொண்ட வராய் வளர்ந்து வந்தார். முதுமையை எய்தியதும் வீரராகவர், தன் பிள்ளைகள் நால்வருக்கும் சொத்தினை சமமாகப் பிரித்துக் கொடுத்தார். வைசியர்கள் என்பதால் செல்வத்தை மேலும் பெருக்கிக் கொண்டு செல்வந்தர் களாக வாழவேண்டும் என்று வீரராகவர் தன் பிள்ளைகளுக்கு அறிவுரை தந்தார். முதல் பிள்ளைகள் மூவரும் செல்வத்தைப் பெருக்கிக் கொண்டு வாழ்ந்தனர். கஜேந்திரதாசர் மட்டும் பணத்தைப் பற்றி எண்ணாமல் திருமாலுக்கு கைங்கர்யம் செய்வதிலேயே காலத்தைக் கழித்தார். ஒருநாள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த திருக்கச்சிநம்பிகளின் கனவில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் வந்தார். கஜேந்திர தாசரே! நந்தவனம் அமைத்து, பூக்களைப் பறித்து மாலையாக்கி நாளும் புஷ்ப கைங்கர்யம் செய்வாயாக! உனக்கு எம் அருளைப் பூரணமாகத் தந்தோம்! என்று ஆணையிட்டார். பூவிருந்தவல்லியில் தந்தை கொடுத்த நிலத்தில் நந்தவனம் அமைத்தார். பூக்களைப் பறித்து மாலையாக்கி, நடந்தே காஞ்சிபுரம் சென்று வரதராஜருக்கு மாலை அணிவித்து அழகுபார்த்தார். சிலகாலம் கழித்து, பூவிருந்தவல்லிக்கு வராமல், காஞ்சிபுரத்திலேயே தங்கி ஆலவட்டம் என்னும் விசிறி சேவை செய்யவும் செய்தார். திருக்கச்சி நம்பிகளின் மேலான தூய பக்தியை கண்டு பெருமாளே நேருக்கு நேர் அவருடன் பேசத் தொடங்கிவிட்டார். பெருமாளுடனேயே பேசும் சக்திமிக்க திருக்கச்சிநம்பியின் பாதத்தூளியை (கால் தூசு) வணங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் ஒரு அன்பர்.
அவர் ஒருமுறை நம்பிகளிடம்,சுவாமி! அடியேனுக்கு மோட்சம் உண்டா? என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்லுங்கள் என்றார். பெருமாளும், அவருக்கு மோட்சம் உறுதி, என்று பதில் தந்தார். திருக்கச்சி நம்பிகள் பெருமாளிடம், பெருமாளே! அடியேனுக்கும் மோட்சம் உண்டுதானே என்று கேட்டார். பெருமாளோ அவரிடம்,அதெப்படி முடியும்! குருபக்தியோடு சேவை செய்து, பாகவத அபிமானம் பெற்றால் தான் வைகுண்டம் போக முடியும், என்று பதில் தந்தார்.மறுநாளே குரு ஒருவருக்கு சேவை செய்யும் எண்ணத்தில் ஸ்ரீரங்கம் கிளம்பினார் திருக்கச்சிநம்பி. அங்கு குருவாக இருந்த திருக்கோஷ்டியூர் நம்பியிடம் மாடுமேய்க்கும் வேலையாளாக சேர்ந்துவிட்டார். ஒருநாள் மழை கடுமையாகப் பெய்து கொண்டிருந்தது. மழையில் நனைந்த மாட்டிற்கு தன் ஆடையைப் போர்த்திவிட்டு தான் அதன் கீழ் படுத்துக் கொண்டிருந்தார். பசுக்கொட்டிலில் நடந்த இந்த நிகழ்வைக் கண்ட கோஷ்டியூர் நம்பிக்கு கண் களில் கண்ணீர் வந்துவிட்டது. தம்பி, ஏன் உன் ஆடையை பசுவுக்கு கொடுத்தாய்? என்று கேட்டார். மழையில் நனைந்தால் பசுவுக்கு சீதளம் உண்டாகும். அதன் பாலைப் பருகும் உங்களுக்கும் சீதளம் உண்டாகுமே. அதனால் தான் இப்படி செய்தேன், என்றார். இதைக் கேட்ட திருக்கோஷ்டியூர் நம்பி, இவர் மாடுமேய்ப்பவர் அல்ல, பரமஞானி என்று உணர்ந்து கொண்டார். ஸ்ரீரங்கத்திலும் பெருமாளுக்கு விசிறி வீசும் தொண்டு செய்து வந்தார் திருக்கச்சிநம்பி. ரங்கநாதர் அவரிடம், எனக்கு இங்கே காவிரிக்கரையோர காற்று சுகமாக வீசுகிறது. திருமலை (திருப்பதி) செல். அங்கு எனக்கு ஆலவட்டம் வீசு, என்று ஆணையிட்டார். எனவே திருக்கச்சி நம்பி, திருமலை சென்று வெங்கடேசப்பெருமாளுக்கு ஆலவட்டகைங்கர்யம் செய்தார். அங்கே பெருமாள், எனக்கு எதற்கு விசிறி? இங்கே, மலைக்காற்று சுகமாக இருக்கிறது. காஞ்சிபுரம் செல், வரதராஜப்பெருமாளுக்கு இந்த சேவையைச் செய், என்று அனுப்பி வைத்தார். பின்னர் பூந்தமல்லி திரும்பிய கச்சிநம்பி, தினமும் காஞ்சிபுரம் சென்று வரதருக்கு புஷ்பக்கைங்கர்யம் செய்து வந்தார். முதுமையடைந்த பிறகு அவரால் நடக்க முடியவில்லை, இருப்பினும், முழங்காலால் தவழ்ந்து கொண்டே காஞ்சிபுரம் சென்று வந்தார். அவரது வைராக்கியத்தைக் கண்ட வரதராஜப்பெருமாள், அவருக்குக் காட்சி கொடுத்து தன்னோடு ஐக்கியமாக்கிக் கொண்டார்.
ராமானுஜரின் குருவான திருக்கச்சிநம்பிகளின் அவதார தலமான பூவிருந்த வல்லி சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆதிகேசவப்பெருமாள் கோயிலில் திருப்பதி வெங்கடேசர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதிகள் உள்ளது. மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்ஸவம் நடத்தப்படுகிறது. பங்குனியில் வரும் ஒரு ஞாயிறன்று மூவரும் திருக்கச்சிநம்பிக்கு கருடசேவை காட்சி தருவர். இங்குள்ள வரதராஜப்பெருமாள் புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின்தலையில் சூரியனுடன் இருக்கிறார். எனவே, இது சூரியத்தலமாக கருதப்படுகிறது. இங்குள்ள மகாலட்சுமி தாயார் மல்லிகை மலரில் அவதரித்தாள். இவளை புஷ்பவல்லி என்று அழைக்கிறார்கள். இவள் பூவில் இருந்தவள் என்பதால் இவ்வூருக்கு பூவிருந்தவல்லி எனப் பெயர் இருந்தது. இப்போது அது மருவி பூந்தமல்லி ஆகிவிட்டது. ராமானுஜரின் அவதார தலமான ஸ்ரீபெரும்புதூரில் அவரது திருநட்சத்திர விழா நடக்கும்போது, இங்கிருந்து மாலை, பரிவட்டம், பட்டு கொண்டு செல்வர். மாசியில் திருக்கச்சிநம்பியின் அவதார விழா நடக்கும்போது, காஞ்சி வரதராஜர் கோயிலில் இருந்து மாலை, பரிவட்டம், பட்டு இங்கு வரும். அன்று வரதராஜர் இவரது சன்னதிமுன் எழுந்தருளுவார். அப்போது நம்பி இயற்றிய தேவராஜ அஷ்டகம் பாடி விசேஷ பூஜை செய்வர். வருடத்தில் இந்நாளில் மட்டும் மூலவர் நம்பிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும்.ஆனி மிருகசீரிஷத்தன்று 108 கலச பூஜை செய்து, வரதராஜர், புஷ்பவல்லி, ஆண்டாள் மற்றும் திருக்கச்சிநம்பிக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கும். பிரகாரத்தில்உள்ள திருக்கச்சிநம்பியின் குரு ஆளவந்தாருக்கு, ஆடியில் திருநட்சத்திர விழா நடக்கும்.
திருமாலின் தீவிர பக்தரான திருக்கச்சி நம்பிகள் காஞ்சி பெருமாளுக்கு கைங்கரியம் செய்து வந்தார். இவரை ஏழரைச்சனி பிடிக்க வேண்டிய காலம் வந்து விட்டது. இவரிடம் சனி பகவான், சுவாமி, தங்களை பிடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. அதற்கு தங்களது அனுமதி வேண்டும்,என வணங்கி நின்றார். அதற்கு நம்பிகள்,பகவானே, தாங்கள் என்னை பிடிப்பதால் ஏற்படும் கஷ்டங்களை நான் தாங்கி கொள்வேன். அந்த கால கட்டத்தில் நான் பெருமாளுக்கு செய்யும் கைங்கரியத்தில் ஏதேனும் இடைஞ்சல் ஏற்பட்டு விடுமே, எனவே ஏழரை ஆண்டுகள் என்பதை கொஞ்சம் குறைத்து கொள்ள கூடாதா என்றார். அதற்கு சனீஸ்வரர் ஏழரை மாதங்கள் பிடிக்கட்டுமா? என்றார். நம்பியோ ஏழரை மாதம் அதிகம் என்றார். அப்படியானால் ஏழரை நாட்கள பிடிக்கட்டுமா? என்றார் சனி பகவான். வேண்டுமானால் ஏழரை நாழிகை பிடித்துக்கொள்ளுங்கள் என்றார். சனிபகவானும் ஒத்துக்கொண்டார். மறு நாள் நம்பிகள், பெருமாளுக்கு ஆலவட்டம் விசிறி விட்டு தமது இருப்பிடம் திரும்பினார். அப்போது சனிபகவான் நம்பிகளை பிடித்து கொண்டார். கவுன்ட் டவுன் ஆரம்பமாகிவிட்டது. நம்பிக்கு ஏழரை ஆரம்பமாகிவிட்டது. அந்த நேரத்தில் கோயில் கருவறையில் திருவாராதனம் செய்ய ஆரம்பித்தார் ஒரு அர்ச்சகர். அப்போது நைவேத்தியம் வைக்கும் தங்க கிண்ணத்தை காணவில்லை. இதை யார் எடுத்திருப்பார்கள், யோசித்து, யோசித்து பார்த்தார் அர்ச்சகர். அப்போது தான் அவருக்கு ஞாபகம் வந்தது. கடைசியாக பெருமாளுக்கு கைங்கரியம் செய்து விட்டு போனது திருக்கச்சி நம்பி. அவரோ மாபெரும் மகான். அவரா இந்த தட்டை எடுத்திருப்பார். ஒரே குழப்பம். இருந்தாலும் சந்தேகம் மட்டும் தீரவில்லை. கோயில் அதிகாரிக்கு இந்த அர்ச்சகர் தகவல் தெரிவித்து விட்டார். கோயில் ஊழியர்கள் கோயில் முழுவதும் தேடினார்கள். ஆனாலும் கிடைக்கவில்லை. கடைசியாக நம்பிக்கு ஆள் அனுப்பி வரவழைத்து விசாரிப்பது என்ற முடிவுக்கு வந்தனர். நம்பிகள் வரவழைக்கப்பட்டார். தங்க கிண்ணம் என்னாயிற்று? ஆளாளுக்கு கேள்வி கேட்டனர். நெருப்பில் விழுந்த புழுவாய் நம்பிகள் துடித்தார். பெருமாளே, உனக்கு நான் செய்த பணிக்கு, திருட்டுப்பட்டமா எனக்கு கிடைக்க வேண்டும்? எப்போதும் என்னிடம் பேசுவாயே, இப்போது பேசு. எல்லோரது முன்னிலையிலும் பேசுஎன புலம்பினார். ஆனால் பெருமாளோ அமைதியாக இருந்து விட்டார். நம்பிகள் நம்பிக்கை இழக்கவில்லை, பெருமாளே எல்லாம் உன் விருப்பப்படி நடக்கட்டும் என சொல்லிவிட்டு, தண்டனையை ஏற்றுக்கொள்வதற்காக அரசவை நோக்கி காவலர்களால் ரோட்டில் அழைத்து செல்லப்பட்டார் நம்பி. மக்கள் அனைவரும் இவரை மிகவும் ஏளனமாக பார்த்தனர். இவருக்கு மிகவும் அவமானமாக போய்விட்டது. இதற்குள் ஏழரை நாழிகை முடிந்து விட்டது. அப்போது கோயில் அர்ச்சகர்கள் ஓடி வந்தனர். சுவாமி கிண்ணம் கிடைத்து விட்டது. சுவாமியின் பீடத்திற்கு கீழே கிண்ணம் மறைந்து இருந்தது. அறியாமல் நடந்த தவறுக்கு மன்னியுங்கள்என மன்னிப்பு கேட்டனர். சனிபகவானும் இறைத்தொண்டு செய்த நம்பியிடம் நடந்ததை விளக்கி மன்னிப்பு கேட்டு விலகிக் கொண்டார். மாபெரும் மகானுக்கே சனிபகவானால் இந்த பாதிப்பு என்றால், சாதாரணமான நமக்கு சொல்லவே வேண்டாம். எனவே பெருமாளை வழிபட்டு சனிதோஷம் நீங்கப்பெறுவோம்