Wednesday, February 6, 2013

குருவருளும் சத்தியமும் பாதரசம் போன்று விந்தை புரியக்கூடியவை!


சத்திய மில்லாஸ் மரணையும் கூடா சத்குரு வில்லா பக்தியும் சமையா
நித்தியத் திரையும் நிற்றலு மிடையே பாரதம் செய்யும் கஞ்சனம் வாரா!

( ஸ்மரணை = இறை சிந்தனை ; சமையா= பக்குவப் படாதது ; பாரதம் = பாதரசம்; கஞ்சனம் = பொன், தகம் )
ரச வாதம் என்பது பல விதமான உலோகங்களை பாதரசத்தின் தொடர்பினால் பொன்னாக மாற்றும் கலை. தாயுமானவர் இதை ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். எப்படி ? " அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்". அதாவது
குபேரனுக்கு சமமாக செல்வம் உள்ளவரும் செப்பையும் இரும்பையும் பொன்னாக மாற்றும் கலைக்காக அலைந்திடுவர் என்றார். இந்த ரசாயன மாற்றத்திற்கு தேவையான பாதரசத்தின் தொடர்பை ஒரு மெல்லிய துணியால் பிரித்து விட்டால் பின் இரும்பு இரும்பாகவே இருக்கும். செப்பு செப்பாகவே இருக்கும். விரும்பும் கிரியா மாற்றம் அங்கே நிகழாது என்கிறார் கபீர்.
ஆன்மீக முன்னேற்றத்தில் அசத்தியம் ஒரு திரை. அவநம்பிக்கை ஒரு திரை. சத்தியத்தைக் கடைபிடிக்காமல் என்னதான் பிரார்த்தனைகளும் பூசைகளும் ஒருவன் செய்யினும் அவை என்றும் கைக்கூடாது. அசத்தியம் குறுக்கே வருகிறது. அது போலவே குரு என்பவரிடம் வைக்கப்படும் நம்பிக்கையும் பரிபூரணமாக இருக்க வேண்டும். அதை unconditional என்று சொல்லலாம். அது சற்றே ஆட்டம் கண்டாலும் பக்தி என்பதானது பக்குவப்படாமலே நின்று விடுகிறது. குருவருளும் சத்தியமும் பாதரசம் போன்று விந்தை புரியக்கூடியவை. கீழ் நிலைக்கு ஒப்பான சாதாரண இரும்பைப் போன்ற சாதகனை பொன்னுக்கு நிகரான ஆன்மீக சக்தியுள்ளவராக மாற்றும் வல்லமை அவைகளுக்கு உண்டு. இவைகள் இல்லாமல் ஆணவ மலத்தால் பாதிக்கப்பட்ட யாரும் தமக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு திரையிட்டுக்கொண்டவர்கள் ஆவார்கள். அதை வெற்றி கொள்ள வேண்டுமானால் மானுட உருவத்தில் உலவும் குரு ஒருவரில் அசையாத நம்பிக்கை வைத்து அவரையே கடவுளாகப் பாவித்து சாதனையில் ஈடுபட வேண்டும். இன்னொன்றையும் நினவில் கொள்ள வேண்டும். உண்மையான ஞானப் பசி உள்ளவனுக்கு இறைவனே ஒரு குருவை அனுப்பி தடுத்தாட் கொள்கிறான் என்று பெரியவர்கள் கூறுவார்கள். ஆகையால் நமது முதல் கடமை ஆன்மீகத்தில் முழுமையான நாட்ட முடையவராய் மாறுவது தான்.