Saturday, September 17, 2011

நம்மை பெற்றெடுத்த தந்தை மட்டும் தந்தை இல்லை, ஒன்பது பேர்!!!

த‌ந்தை என்றாலே ந‌ம்மைப் பெற்ற‌வ‌ர் ம‌ட்டும்தான். ஆனால் ந‌ம் ப‌ழ‌ந்த‌மிழ் நூல்க‌ள், இன்னும் ஓர் எட்டு பேர்க‌ளைச் சேர்த்து, அவ‌ர்க‌ள் அனைவ‌ரையும் த‌ந்தையாக‌வே எண்ணி ம‌ரியாதை செலுத்த‌ வேண்டும் என‌க் கூறுகின்ற‌ன‌.

முத‌ல் த‌ந்தை ‍‍‍‍‍‍‍-‍ பெற்றெடுத்த‌வ‌ர்.
இரண்டாவ‌து த‌ந்தை ‍- ஒரு வேளை, த‌ந்தையை இழந்த‌வ‌ராக‌ இருந்தால்.. ஆத‌ரித்து வ‌ள‌ர்த்த‌வ‌ர்.
மூன்றாம் த‌ந்தை - அன்போடு க‌ல்வியைச் சொல்லிக் கொடுத்த‌வர்.
நான்காம் த‌ந்தை - ஞான உப‌தேச‌ம் செய்த குருநாத‌ர்.
ஐந்தாம் த‌ந்தை - குற்றம் குறைக‌ள் இல்லாம‌ல் நல்ல‌ முறையில் ஆட்சி செய்யும் அர‌ச‌ர்.
ஆறாம் த‌ந்தை ‍- ஆப‌த்து‍ நேரும்போது, "ப‌ய‌ப்ப‌டாதே!" என்று சொல்லி ஆப‌த்திலிருந்து காப்பாற்றித் துய‌ர‌த்தைத் தீர்த்த‌வ‌ர்.
ஏழாம் த‌ந்தை ‍‍‍- (ந‌ம்மிட‌ம்) அன்பு கொண்ட‌ உள்ள‌ம் உடைய‌வ‌ர்.
எட்டாம் த‌ந்தை - ந‌ம‌து ம‌னைவியைப் பெற்றெடுத்த‌வ‌ர்.
ஒன்ப‌தாம் த‌ந்தை - ந‌ம‌து வ‌றுமையைத் தீர்த்த‌வ‌ர்.
இந்த‌ ஒன்ப‌து பேர்க‌ளையும் தின‌ந்தோறும் த‌ந்தையாக‌க் க‌ருதி ம‌ரியாதை செலுத்துவ‌தே நீதியாகும்.

இதைச் சொல்லும் "கும‌ரேச‌ ச‌த‌க‌ம்" ஆறாம் பாட‌ல் இதோ:
த‌வ‌ம‌து செய்தே பெற்றெடுத்த‌வ‌ன் முத‌ற்பிதா
  த‌னை வ‌ள‌ர்த்த‌வ‌ன் ஒரு பிதா
 த‌யையாக‌ வித்தையைச் சாற்றின‌வ‌ன் ஒரு பிதா
  சார்ந்த‌ ச‌ற்குருவொரு பிதா
அவ‌ம் அறுத்து ஆள்கின்ற‌ அர‌சு ஒரு பிதா ந‌ல்ல
  ஆப‌த்து வேளை த‌ன்னில்
 அஞ்ச‌ல் என்று உற்ற‌ துய‌ர் தீர்த்துளோன் ஒரு பிதா
  அன்புள‌ம் உளோன் ஒரு பிதா
க‌வ‌ள‌ம் இடு ம‌னைவியைப் பெற்றுளோன் ஒரு பிதா
  க‌லி த‌விர்த்த‌வ‌ன் ஒரு பிதா
 காசினியில் இவ‌ரை  நித்த‌ம் பிதாவென்றுள‌ம்
  க‌ருதுவ‌து நீதியாகும்
ம‌வுலித‌னில் ம‌தி அர‌வு புனைவிம‌ல‌ர் உத‌வு சிறு
  ம‌த‌லையென‌ வ‌ரு குருப‌ரா!
 ம‌யிலேறி விளையாடு குக‌னே! புல் வ‌ய‌ல் நீடு
  ம‌லை மேவு கும‌ரேச‌னே!

 

No comments:

Post a Comment