Wednesday, July 18, 2012

இயற்கையின் சூசனைகள் .........

அவதூத கீதை என்பது ஆன்மீக இலக்கியத்தில் ஒரு முக்கியமான அங்கமாகும். அதில் அன்றாடம் நாம் காணும் சிறு நிகழ்சிகளையும் ஆன்மீகக் கண்ணோட்டத்தினோடேயே விளக்கப்பட்டிருக்கிறது. கபீர் அவதூதர் வகையில் சேராதவராயினும் இயற்கையின் எல்லா காட்சிகளிலும் பாடம் கற்கும் நோக்குடையவராயிருந்தார். ஒரு குயவனாகட்டும், தோட்டக்காரனாகட்டும் அல்லது மாவரைக்கும் பெண்களாகட்டும் ஏன் சர்வ சாதாரணமான இலையுதிர் மரமாகட்டும் அவர் உலகோருக்கு நிலையாமையை சுட்டிக்காட்ட ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்கிறார். கீழ் காணும் தோஹாக்கள் ஹிந்தி பேசும் மக்களிடையே மிகப் பிரபலமானவை.

குயவன் கைமண் கூறும் பிசைமின் பிசைமின் இன்று
கூப்பிடு நாளில் உம்மை பிசைவேன் பிசைவேன் என்று


கதைகளில் பறவைகள் பேசும். மிருகங்கள் பேசும். மரங்கள் பேசும். இங்கே "அசித்" ஆன மண் பேசுகிறது. இது கபீரின் மனம் எந்த அளவுக்கு இயற்கையோடு ஒன்றிவிட்டிருந்தது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
"you cannot digest a bacteria but the bacteria can digest you" என்பது உயிரியல் அறிந்தவர்களுடைய கூற்று. தன்னைச் சுற்றி எங்கும் "சித்" சக்தியை கண்ட கபீருக்கு- மண் மனிதனை ஜீரணத்துக்கொள்ளும் சக்தி, ஒரு அப்பட்டமான நினைவிலிருந்து அகற்றமுடியாத உண்மை- குயவனைக் கண்டதும் பீறிட்டுக் கொண்டு வருகிறது. மண்ணுக்குள் இருக்கும் உயிரணுக்கள் தான் அதன் ஜீரணிப்பிற்கு பின்னால் ஒளிந்திருக்கும் இரகசியம் என்பதை விஞ்ஞானிகள் சொல்லி நமக்குப் புரிகிறது. ஆனால் அங்கே தான் மனித மனம் ஆன்மிகத்தை மறந்து வழி தவற ஆரம்பிக்கிறது. தனக்கு எல்லாம் புரிந்து விட்டது போல் பேச தொடங்கி விடுகிறது. கபீருக்கு அந்த கவலை இல்லை. இறைவனிடம் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு விட்டவர். அதனாலேயே 'அசித்'துள்ளும் 'சித்'தைக் கண்ட அவருடைய வாசகங்கள் பல நூற்றாண்டுகளாக ஜீவித்து நிற்கின்றன.
கபீர் தம் வழக்கம்போல் தறியில் துணி நெய்து கொண்டிருந்தார். உள்ளம் ராம நாம ஜெபத்தில் ஈடுபட்டிருந்தது. அதை கலைக்கும் வகையில் வீட்டிற்குள்ளிருந்து வம்பும் வேடிக்கைப் பேச்சுமாக கல் திருகையில் மாவரைத்துக் கொண்டிருந்த பெண்களின் பேச்சுச் சத்தம் வந்து கொண்டிருந்தது. இறைவன் கொடுத்திருக்கும் பொன்னான பிறவியை புரியாது வீணடிக்கிறார்களே என்ற ஏக்கம் கபீருள் ஒரு ஈரடியாக வெளிப்படுகிறது. அதுவும் அவர்கள் ஈடுபட்டிருந்த செயலைக் கண்டே வடிக்கிறார்.

திருகும் அரவை எந்திரம் கண்டு, கலங்கும் கபீரின் அந்தரம்
இருபெரும் கற்களுக்கிடையே, தப்பிய தினைகள் இலையே

இரு பெரும் கற்கள் என்பது பாவம் புண்ணியம் என இருவினைகளை குறிப்பனவாகக் கொள்ளலாம். பகல் இரவு என்பதாகவும் கருதலாம். வேறு சிலர் இதை ஆகாயம் மற்றும் பூமியாகவும் கொள்வர். எப்படியோ உலகோரெல்லாம் இந்த அரவையில் சிக்கி மடிகின்றனர். இதிலிருந்து தப்பியவர் எவரும் இல்லை.

இன்னுமொரு எளிய தோஹா தோட்டக்காரனை வைத்து ;

அண்டிடும் ஆரங்காரன் கண்டு, அயர்வனவே அரும்புகள்
ஆய்வனே இன்றலர் பூக்களை, நாளைய முறையும் நமதே
ஆரம் என்பது நந்தவனம். தோட்டக்காரனை ஆரங்காரன் என்று வைத்துக்கொள்ளலாம். அவனை இங்கே எமனுக்கு இணையாகச் சித்தரிக்கிறார் கபீர். பூமியில் வந்திருப்பவரின் காரண காரியங்கள் முடிவதைத் தெரிந்து அவர்களை கொண்டு செல்ல வந்து விடுகிறான் அவன். இங்கே எவரும் நிரந்தரம் இல்லை. இதை அரும்புகள் பேசிக் கொள்வதைப் போல் நம் முன் நிறுத்துகிறார் கபீர். ( 'கலியா'- மொக்கு ;'பூல்' -மலர்ந்த பூ ; சுன்-லியா- தேர்ந்தெடுத்தல்)
வேறொரு தோஹாவில் இளம் தளிருக்கு மரம் உபதேசிக்கிறது :

தருவுரைத்ததுத் தளிரிடம் என்சொல் கேளாய் பிள்ளாய்
வருமொன்று போமொன்று அறிநீ இம்மனை முறையாய்

இங்கே மரம் என்பது பூமிக்கு உவமையாக்கப் பட்டுள்ளது. ஜனன மரணமென்பது அன்றாட நிகழ்ச்சி இங்கே. இதனை புதிதாய் முளைவிடும் தளிருக்கு மரம் கூறும் அறிவுரையாய் எளிமையாய் சுட்டிகாட்டுகிறார் கபீர்.
ஒரு சலவைத் தொழிலாளியைக் கண்டும் கபீருக்கு அருமையான பாடம் கிட்டியது. அது நிலையாமையைப் பற்றி அல்லவாததால் அதை மற்றோர் சமயம் காண்போம்.

Tuesday, July 17, 2012

வேட்டைத் திருவிழா.

இவ் விழாவை மிருக யாத்திரை எனவும் கூறுவர். துட்ட மிருகங்களை கொன்றொழித்து,மக்களை காத்தற்காக மன்னர்கள் வேட்டையாடுதலைக் கொண்டிருப்பர். இதே போல், எம்மை துன்புறுத்தும் அறுபகைகள், மும்மலங்கள் முதலிய விலங்குகள் ,நோய்கள் அவற்றை வேட்டையாடி அழிப்பதற்காக இறைவன் வேட்டைத் திருவிழாவை மேற் கொள்ளுவதாக ஐதீகம். ஆயுதங்களுடன் மூர்த்தியை அலங்கரித்து எழுந்தருளச் செய்து பூந்தோட்டத்திலே அல்லது இதற்கென தயார் செய்த வேட்டைக்கான இடத்திலோ மிருகங்களின் உருவங்களை வைத்து அங்கு அஸ்த்திர தேவரைப் பூஜித்து நீற்றுப் பூசணிக்காயை பலியிடுவது வழக்கம். வேட்டையிலிந்து திரும்பியதும் பிராயச்சித்த அபிஷேகம் செய்யப்படும்.
- ''பக்திமலர்''

Thursday, July 12, 2012

Saturday, July 7, 2012

சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள்

இசைக்கலையில் உச்சநிலையாக கர்நாடக சங்கீதம் விளங்குகிறது. கர்நாடக சங்கீதத்தின் மூலம் இறைவழிபாட்டில் சிறப்புத் தன்மையை ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர், புரந்தரதாசர், மீராபாய், கபீர்தாஸ், குருநானக் போன்ற மகான்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களை நாதயோகிகள் என்பார்கள். இவர்களுள் முதன்மையானவர் என போற்றப்படுபவர் சங்கீத ஜோதி, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். 1759 முதல் 1847 வரை உள்ள 88 ஆண்டுகளை தியாகராஜ சாகாப்தம் என்று அழைப்பது பொருத்தமானதாக இருக்கும். திருவாரூரில் ராமபிரும்மம் என்பவருக்கும், சாந்தாதேவியாருக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார் தியாகராஜர். இவர்கள் மூலகநாடு திரைலிங்க தெலுங்கு பிராமணர் வகுப்பை சேர்ந்தவர்கள். இவருக்கு ஜப்யேசன், ராமநாதன் என்ற சகோதரர்கள் இருந்தனர். இவரது தந்தை சிவ, விஷ்ணு பக்தியில் ஈடுபட்டு, திவ்யநாத பஜனை செய்துவந்தார். திருவாரூரில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தியாகராஜர் தனது ஆரம்பக்கல்வியை பயின்றார். பிறகு பெற்றோருடன் திருவையாறு சென்றுவிட்டார். 8ம் வயதில் உபநயனம் செய்வித்தபோது, காயத்ரியுடன், ராமதாரக மந்திரத்தையும் தன் தந்தையிடம் உபதேசம் பெற்றார். தன் தந்தை வைத்திருந்த ராமவிக்ரகத்திற்கு அன்றுமுதல் பூஜை செய்ய ஆரம்பித்தார். ராமகிருஷ்ணானந்தரிடம் உபதேசம் பெற்ற ராம சடாட்சரி மந்திரத்தை லட்சக்கணக்கில் ஜபம் செய்தார். இவரது தந்தையார் பரமபாகவதர். சங்கீதம் அவரது ரத்தத்தில் ஊறி இருந்தது. சிறு வயதிலேயே தியாகராஜரும் இசைத்திறமை கொண்டவராக விளங்கினார். இனிமையான குரலும் கைகொடுத்தது. தன் தாயாரிடம் ராமதாசர் மற்றும் புரந்தரதாசரின் கீர்த்தனைகளை கற்றார். திருவையாற்றில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ராமாயணம் படித்தார். வால்மீகி ராமாயணத்தை படிக்கப்படிக்க, ராமபக்தியில் மூழ்கி, ராம சைதன்யர் ஆனார். ஜோதிடமும் கற்றார்.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி சங்கீதத்தில் ஈடுபாடு உள்ளவர். அவரது அரசசபை வித்வானான ஸொண்டி வெங்கட ரமணய்யாவிடம் தியாகராஜர் சங்கீதம் கற்றார். அரசசபையில் பல பாட்டுக்களை பாடி பாராட்டு பெற்றார். அவர் பாடிய முதல் பாட்டு நமோ நமோ ராகவாய அதிசம் என்பதாகும். தியாகராஜர் தினமும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ராம நாமம் சொல்லி 38ம் வயதிற்குள் 96 கோடி ராம ஜபம் உருவேற்றினார். தனது 38ம் வயதின் கடைசி நாளில் உள்ளம் உருகி ஸ்ரீ ராமனை பாடும்போது கதவு தட்டிய சப்தம் கேட்டது. திறந்து பார்த்தபோது ராம லட்சுமணர்கள் விஸ்வாமித்திரர் நடத்திய யாகத்திற்கு செல்வது போன்ற காட்சியை கண்டார். அப்போது பாடியதுதான் ஏல நீ தயராது என்று புகழ் பெற்ற பாடல். தியாகராஜர் முதலில் பார்வதி அம்மையாரை மணந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்துவிட்டதால் அவரது தங்கையான கமலாம்பாள் என்ற உத்தமியை மணந்தார். இவர்களுக்கு சீதாலட்சுமி என்ற பெண் பிறந்தார். தியாகராஜரின் தந்தை இறக்கும் தருவாயில் மகனை அருகில் அழைத்து, ஸ்ரீ ராமமூத்தியை எப்போதும் பாடு என்று கட்டளையிட்டார். தந்தை இறந்தபிறகு தியாகராஜரின் சகோதரர்களுக்கு தம்பியின் பாட்டும் பக்தியும் பைத்தியக்காதரத்தனமாக தோன்றவே, அவரை ஊர் கோடியில் இருந்த கூரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர் சொத்துக்களை அவர்களே எடுத்துக் கொண்டனர். தியாகராஜர் தனது தந்தை பூஜை செய்த ராம விக்ரகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த சிறிய வீட்டில் ராமனை கொலுவிருக்கச் செய்தார். சதா ராம நாமமும், ராம கானமுமாகவே வாழ்ந்து வந்தார். தினமும் உஞ்சவிருத்தி (பிøக்ஷ) செய்து, அதில் வரும் வருமானத்தைக்கொண்டு ஜீவித்து வந்தார். பல சீடர்கள் அவரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டனர். யாரிடமும் எதுவும் அவர் பெற்றுக்கொண்டதில்லை. தனது சீடர்களுடன் ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய நாட்களைக் கொண்டாடுவார். ஒரு சமயம் ஒரு சிஷ்யன் தவறு செய்த போது, அவனை கோபித்துக்கொண்டார். ஆனால் அவரது மனைவியோ கோபத்தினால் ஏற்படும் தீமையை எடுத்துக்கூறி சாந்தப்படுத்தினார். அப்போது தன் தவறை உணர்ந்து அவர் பாடிய பாட்டு தான் சாந்தமுலேக சவுக்கியமுலேது (சாந்தம் இல்லாமல் சவுக்கியம் இல்லை).
முதலில் ராமனை மட்டுமே பாடி வந்த தியாகராஜர், சிவபக்தையான அவரது மனைவியின் அறிவுரையை ஏற்று, மற்ற தெய்வங்களைப்பற்றியும் பாடலானார். சம்போ மஹாதேவ, சிவேபாஹிமாம் என்ற பாடல்கள் அதற்கு <<உதாரணமாகும். தியாகராஜரின் மகிமையும், கானச்சிறப்பும் நாடெங்கும் பரவியது. பலர் அவரை புகழ்ந்தாலும், பொறாமைக்காரர்களான அவரது சகோதரர்களுக்கு, அவர் புகழும், பெருமையும் பெறுவது சங்கடத்தைக் கொடுத்தது. மூத்த சகோதரர் ஜப்சேயன் அவர் எழுதிய பாட்டு புத்தகங்களை தீயிட்டு கொளுத்தி விட்டார். ஏராளமான கீர்த்தனைகள் அதனால் மறைந்துவிட்டன. அவரது வீட்டிற்குள் புகுந்து ராம விக்ரகத்தை திருடிக்கொண்டு போய் காவிரியில் போட்டுவிட்டார். ராம விக்ரகத்தை காணாமல் தியாகராஜர் திகைத்து உள்ளம் உருகி அற்புதமான கீர்த்தனங்களால், ஸ்ரீ ராமனிடமே தன் வருத்தத்தை முறையிட்டார். அநியாய முஸேயகுரா ரானிது ராது என்ற பாடல் அப்போது பாடப்பட்டது. அன்ன பானம் இல்லாமல் உறங்காமல் துடித்தார். ஒருநாள் கனவில் ஸ்ரீராமன் தோன்றி ஆற்று மணலில் தான் புதைந்திருக்கும் இடத்தை சொல்லி மறைந்தார். விக்ரகம் கிடைத்த ஆனந்தத்தில், தொரிகிதிவோ (நீ எப்படித்தான் மீண்டும் கிடைத்தாயோ) ரகுவீர, ரணதீர என்ற பாடல்களால் ராமனை ஆராதித்தார். சரபோஜி மன்னர் தன்னை புகழ்ந்து பாட வேண்டும் என நிறைய பணத்துடன் ஒரு அதிகாரியை அனுப்பினார். அரசரின் அழைப்பை நிராகரித்து இறைவனைத் தவிர வேறு யாரையும் பாடமாட்டேன் என சொல்லி அவர்பாடிய சிறப்பான பாடல்தான் நிதிசால சுகமா ? ராமுனி சந்நிதி ஸேவசுகமா? என்பதாகும். பிறகு சரபோஜி மன்னர் மாறுவேடத்தில் வந்து மற்றவர்களுடன் அமர்ந்து அவரது பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார். திருவிதாங்கூர் மன்னரான சுவாதி திருநாள் மகாராஜா தியாகராஜரை அழைத்ததும் செல்ல மறுத்து விட்டார். பின்பு தியாகராஜர் திருப்பதி, காஞ்சி, மதுரை ஆகிய ÷க்ஷத்திரங்களுக்கு சென்று பாடினார். திருப்பதியில் திரை போட்டு மறைந்திருந்த பெருமாளைப்பற்றி ஒரு பெண்ணின் கணவனை கீர்த்தனை பாடி உயிர்பெறச் செய்தார். மனைவி இறந்தவுடன் பற்றற்ற துறவியாக வாழ்ந்த தியாகராஜர் பகுளபஞ்சமி தினத்தன்று பஜனை பாட்டுகளை கேட்டுக்கொண்டே நாதஜோதியாக மாறி இறைவனுடன் கலந்தார். அவர் சொல்லியபடி 60 ஆண்டுகள் கழித்து அவரது கீர்த்தனைகள் புகழ்பெற்றன. 1925ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த நாகம்மாள் என்பவர் தியாகராஜருக்காக திருவையாற்றில் கட்டிய சமாதியில் இன்றும் தியாகராஜ ஆராதனை ஒரு தூய கலைவிழாவாக சிறப்புடன் நடக்கிறது. இசையின் நோக்கம் பக்தியை வளர்க்கவே என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் சத்குரு தியாகராஜ சுவாமிகள்.

Friday, July 6, 2012

பக்த ராக்கா

பண்டரீபுரத்தில் பாண்டுரங்க பக்தரான ராக்கா தன் மனைவி பாக்கா மற்றும் மகளுடன் வசித்து வந்தார். ராக்கா மண்பாண்டங்கள் செய்யும் குயவர். ஒரு சமயம் பானைகளை சூளையில் அடுக்கி விட்டு வந்து தன் மனைவியை தீ மூட்டச்சொன்னார். மறுநாள் ஒரு தாய்ப்பூனை சூளையைச் சுற்றி சுற்றி வந்து கத்திக்கொண்டே இருந்தது. இதை கவனித்த பாக்கா, சுவாமி! ஒரு வேளை சூளையில் இந்தப் பூனையின் குட்டிகள் இருக்குமோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. ஆம் பாக்கா, அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஐயோ! என்ன பெரும்பாவம் செய்து விட்டேன் பாண்டுரங்கா! சுடாத பானைகளில் பூனைக்குட்டிகள் இருந்தால், எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்களைக் காப்பாற்றியதுபோல இவற்றையும் நீதான் காப்பாற்ற வேண்டும் விட்டலா! நீ அவ்வாறு காப்பாற்றினால் நான் இந்தத் தொழிலையே விட்டுவிடுகிறேன் என்று இரண்டு நாட்கள் ராக்கா பிரார்த்தனையிலேயே இருந்தார். மூன்றாம் நாள் சூளையின் அனல் தணிந்ததும், பானைகளை எடுத்துப் பார்த்தபோது ஒரு பானையில் பூனைக்குட்டிகள் பத்திரமாக இருந்தன. நம் ஐயன் பண்டரிநாதன் நம்மை மாபெரும் பாவத்திலிருந்து காப்பாற்றி விட்டான். இனி நாம் அந்தப் பண்டரிநாதனுக்காகவே வாழ்வோம் என்ற ராக்கா தனது உடைமைகளையெல்லாம் தானம் செய்து விட்டு, குடும்பத்துடன் ஒரு குக்கிராமத்தில் வசிக்க சென்றார். ராக்கா உடுத்தியிருந்த ஒரே ஆடை நைந்து போனது. ஒருநாள் தெருவில் கிடந்த ஒரு கந்தல் துணியை எடுக்கும் போது, அங்கு ஒரு பரம ஏழை ஓடிவந்து... இதை எடுக்காதே. இந்தக் கந்தைத் துணி நான் தீப்பந்தம் சுற்றப் பயன்படும் என்று எடுத்துக் கொண்டார். ராக்கா இலைகளைக் கோர்த்துத் தன் உடலை மறைத்துக் கொண்டார்.
சந்திரபாகா நதிக்கரையில் ராக்காவின் மகளும், நாமதேவரின் மகளும் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவர்க்கும் தங்கள் தந்தையில் யார் பண்டரிநாதனின் சிறந்த பக்தர் என்ற விவாதம் ஏற்பட்டது. வீட்டிற்குச் சென்ற நாமதேவரின் மகள் நடந்ததை தன் தந்தையிடம் கூறி, அவரிடம் முறையிட்டாள். யார் சிறந்த பக்தர் என்பதை பாண்டுரங்கன் தான் முடிவுசெய்வார் மகளே, நீ ஒன்றும் வருத்தப்படாதே என்று கூறினார். ஆனால் அவர் மகளோ சமாதானமாகவில்லை. மகள் விடாமல் வற்புறுத்தவே, நாமதேவர் பாண்டுரங்கனிடமே சென்று யார் சிறந்த பக்தர்? என்று கேட்டுவிடமென்று முடிவு செய்தார். பொதுவாகவே பாண்டுரங்க விட்டலன் மீது நாமதேவர் அநேக பக்திப்பாடல்களைப் பாடித் துதிப்பவர். அதனால் மகிழ்ந்து பாண்டுரங்கன் அவரோடு நேரில் பேசுவார். பாண்டுரங்கனிடம், நாமதேவர் சுவாமி! ராக்கா என்னை விட சிறந்த பக்தனா என்று வினவினார். ராக்காவிற்கு இணையான ஒரு பக்தன் இல்லை என்று பாண்டுரங்கன் கூறினார். அப்படியானால் எனக்கு அதை காட்டி அருளுங்கள் என்று நாமதேவர் கூறினார். நானும் ருக்மிணியும் ராக்காவின் இருப்பிடம் செல்கிறோம். நீ அங்கு வந்துவிடு என்று பாண்டுரங்கன் கூறிவிட்டு மறைந்தார். காட்டில் ராக்கா சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தார். அப்போதும் அவர் விடாமல் விட்டலா, விட்டலா என்று நாமஜபம் செய்து கொண்டிருந்தார். நாமதேவா! நாம் வந்ததையும் கவனிக்காமல் ராக்கா எவ்வளவு பக்தியுடன் ஜபம் செய்கிறான் பார்த்தாயா என்றார். நம் சுவாமியின் திருநாமத்தைச் சொல்ல எல்லாவற்றையும் துறந்து விட்ட ராக்காவின் பக்தியை மேலும் பார் என்று ருக்மிணி கூறினாள்.
ருக்மிணிதேவி தனது விலைமதிக்க முடியாத மாணிக்க வளையலை ஒரு சுள்ளியின் கீழே மறைத்து வைத்தாள். பிறகு மூவருமாக ஒரு மரத்தின் மறைவில் இருந்து கொண்டு ராக்காவைக் கவனித்தார்கள். ராக்கா அந்த சுள்ளியை எடுத்தார். அதனடியில் மாணிக்க வளையலைச் சாதாரணப் பொருளைப் பார்ப்பது போல் பார்த்தார். தன் மனைவி பாக்காவிடம், பாக்கா! இதோ ஒரு மாணிக்க கங்கணம். உனக்கு இது வேண்டுமா? என்றார். வேண்டாம் சுவாமி, பாண்டுரங்கன் நம்மை சோதிக்கிறார். இனி நாம் இங்கிருக்க வேண்டாம் என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். நாமதேவரே! ராக்காவின் பற்றற்ற தன்மையைப் பார்த்தீர்களா? ராக்கா கல்வியறிவு இல்லாதவர்தான். இருந்தாலும் சுயநலமற்ற ஆழ்ந்த பக்தி கொண்டவர். சுவாமி! என் அறியாமையினால் ராக்காவைத் தவறாக நினைத்து விட்டேன். மன்னித்தருளப் பிரார்த்திக்கிறேன் என்று நாமதேவர் கூறினார். பாண்டுரங்க விட்டலன், ருக்மிணித் தாயார் சகிதமாக ராக்காவின் முன் பிரத்தியட்சமானார். ராக்கா, பாக்கா, அவர்களது மகளும் மெய்சிலிர்த்தனர். ராக்கா! நீங்கள் மூவரும் ஒருவருக்கொருவர் பக்தியில் குறைந்தவர்கள் இல்லை. ஐயனே! இந்த எளியேனையும் ஒரு பொருட்டாக மதித்துக் காட்சி அருளினீர்களே! எனது தவம் வீண் போகவில்லை என்று ஜெய ஜெய விட்டல, பாண்டுரங்க விட்டல என ஜபம் செய்து கொண்டே இருந்தார்.

பாணினி மாமுனிவர்

கல்லைப் போல் வறட்சியான மொழி அறிவியலை வாடாத மணமுள்ள மலராக்கியவர் பாணினி. பாணினியின் அஷ்டாத்யாயி, நவமணிகள் நன்கு பதித்த ஒரு பெரிய அணிகலன். 395 சூத்திரங்களில் சம்ஸ்கிருதத்தின் சொல்வளம் முழுவதையும் நுணுக்கமாக அமைத்தார் பாணினி. எந்த மொழியிலும் பெயரும் வினையும் முக்கியமான சொல்வகைகள், ஒரே விகுதி கொள்ளும் பல சொற்கள் ஒரு விதிக்குள்ளே அடங்குவதை பாணினி கண்டார். வகை வகையான விதிகளுக்குள் அடங்கும் இத்தகைய பெயர்ச் சொற்களைக் கூட்டங் கூட்டமாக வகைப்படுத்தினார். பெயர்ச்சொற்களின் இக்கூட்டத்துக்கு, கணபாடம் என்பர், உதாரணமாக நத்யா திப்யோ டக் என்ற சூத்திரத்தால், நதியில் உண்டானது - நாதேயம் என்றாகிறது. இது போல, சம்ஸ்கிருதத்திலுள்ள சொற்கள், 2115 தாதுக்களைக் (வினைவேர்களை) கொண்டு இயங்குவதை பாணினி கண்டார். இவற்றை அவர் பத்துப் பிரிவுகளாகத் தொகுத்தார்; தாதுக்களும் அவற்றின் அர்த்தங்களும் அடங்கிய இத்தொகுதி தாதுபாடம் எனப்படும். பெயர்ச் சொற்களில் வரும் வேற்றுமை விகுதிகளை பாணினி ஒரே சூத்திரத்தில் ஸு என ஆரம்பித்து ப் என்று முடித்தார். அதனால் இதற்கு ஸுப் என்று பெயர். இப்படிப் பல எழுத்துக்களை சூத்திரத்திலிருந்து சுருக்கின் கூறும் முறை ப்ரத்யாஹாரம் என்ப்படும். இப்படி வினை விகுதிகள் எல்லாம் ஒரே சூத்திரத்தில் தி என்று தொங்கி ங் என முடிக்கிறார். அதனால் இதற்கு திங் என்று பெயர். ஸுப்திஙந்தம் பதம். ஸுபதம் என்பது பெயர்ச்சொல்; திஙந்தம் என்பது வினைச்சொல்.
பெயரடியாக வந்த பெயர்ச் சொல்லுக்கு தத்திதம் என்றும், வினையடியாக வந்த பெயர்ச் சொல்லுக்கு க்ருதந்தம் என்றும் பெயர். இப்படி சம்ஸ்கிருத மொழியிலுள்ள நுணுக்கங்கள் அனைத்தையும் ஒருங்கே ஆராய்ந்து அறிவியல் முறையில் இலக்கணத்தை அமைத்தவர் பாணினி. அதனால்தான் பதஞ்சலி, பாணினி சூத்திரத்தின் அமைப்பில்தான் என்ன அழகு ! என வியக்கிறார். உழைப்பும் ஆராய்ச்சியும் : பிற்காலத்தில் வியாகரணத்துக்குத் தம்மையே மக்கள் ஆதாரமாகக் கொள்வார்கள் என்று தமது பொறுப்பை நன்கு உணர்த்த பாணினி, தர்ப்பத்தை அணிந்து தூய கையினராக, கிழக்கு முகமாக அமர்ந்து, ஆழ்ந்த ஆராய்ச்சியுடனும் பேருழைப்புடனும் அஷ்டாத்யாயியை இயற்றினார் என மஹா பாஷ்யகாரரான பதஞ்சலி குறிப்பிடுகிறார். பாணினி வாக்கு : பாணினியின் இலக்கணம் சம்ஸ்கிருத மொழியை மட்டுமின்றி, பழங்காலக் கல்வெட்டுக்களையும் நாணயங்களையும் போல் பாரதப் பண்பாட்டைப் பற்றியும் அறிவதற்கு முக்கியச் சான்றாகத் திகழ்கிறது. பாணினி தாம் கண்ட ஐநூறு ஊர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். அந்த ஊர்கள் அத்தனையும் இன்றும் இருக்கின்றன. பாணினி மக்களின் வாழ்க்கையை நேரில் கண்டவர். வாழ்வில் நாம் அன்றாடம் வழங்கும் சொற்களைப் பாணினி விளக்கும் முறை எளிது. பாணினி இலக்கணம், உலகம் கண்ட இலக்கியப் படைப்புகளுள் மிகச் சிறந்தது; பாணினியின் வியாகரணம்உண்மையிலே சமஸ்கிருதத்தின் ஒரு வகையான இயற்கைச் சரித்திரம் என்றார் கோல்ட்ஸ்டுகர்.
அக்காலத்திய பல மொழிகளில் பாணினி வல்லவர்; பாணினியின் வாக்கு, இன்றும் உலகெங்கும் பெருவழக்காக நீடித்திருந்து, மேலோங்கி வாழ்கிறது - பாணிநீ சப்தோ லோகே ப்ரகாசதே என்று காசிகாகாரர் சொன்னது எவ்வளவு உண்மை ! தம்மையே தந்தவர் : பாடலிபுத்திரத்துக்குப் புறப்பட்ட நாளிலிருந்து தமது இறுதி நாள் வரையில், பாணினி சொல்லுலக யாத்திரிகராகவே வாழ்ந்தார். பல மாணவர்களுக்கு பாணினி பாடம் கூறி வந்தார். அவரது மாணவர்களில் முக்கியமானவர் கௌத்ஸர். ஒரு நாள் மாலை, காட்டில் சீடர்களுக்கு பாணினி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். நீரருந்த ஒரு புலி ஏரிக்கு வந்தது. புலி வருவதைக் கண்ட மாணவர்கள் மரங்களில் ஏறிக்கொண்டனர். பாணினி புலியைப் பார்த்தார். ஆனால் அவர் அசையவில்லை. அசைவனவும் நிற்பனவுமான இந்த உலகை விழுங்கி ஆட்கொள்ளும் பரம்பொருளே புலியுருவில் நம்மிடம் வருகிறது - அத்தா சராசரக்ரஹணாத் என் அவர் கருதினார். அக்கணத்திலும், புலியைக் குறிக்கும் ஒரு சொல்லைப் பற்றி அவர் ஆராய்ந்தார் ! புலிக்கு வ்யாக்ர : என்று பெயர். காட்டு விலங்குகள் எல்லாவற்றுக்குமே மோப்பச் சக்தி உண்டு. புலிக்கு அது சிறப்பாக அமைந்தது. புலி சுற்றிச் சுற்றி வந்து மோப்பம் பிடிப்பதால், வ்யாஜிக்ர தீதி வ்யாக்ர: - வ்யாக்ரம் என்று அதைச் சொல்கிறார்கள் என அவர் கண்டுபிடித்தார். இறக்கும் தறுவாயிலும் உலகுக்கு ஒரு சொல்லின் தன்மையை அவர் உணர்த்திச் சென்றார். பாணினி சிங்கத்துக்கு இரையானதாகப் பஞ்ச தந்திரம் கூறும். பாணினி உடலை உகுத்த தினம் திரயோதசி என்பர். மாதமும் பக்ஷமும் தெரியாமையால், இன்றும் காசி முதலிய இடங்களில் ஒவ்வொரு திரயோதசியையும் வியாகரணம் பயிலாத (அநத்யயன) தினமாக வைத்துள்ளார்கள். மக்கள் அறியாமையுடன் பேசும் சொற்களிலுள்ள குறைகளை, பாணினி புனிதமாக்கி, மங்கலச் சொற்களை வழங்க வைத்து, மக்களின் அறியாமையை அறவே நீக்கினார். அந்த மாமுனி பாணினியை நாம் வணங்குவோம்

Thursday, July 5, 2012

Wednesday, July 4, 2012

சுயநலம் உள்ளவரை கஷ்டமே-ஆதிசங்கரர்

-* பக்திவேறு, கர்மம் வேறு அல்ல; கர்மம் வேறு, ஞானம் வேறு அல்ல. அனைத்தும் ஒரே குறிக்கோளான இறைவனை அடைவதற்கான வழிகளே ஆகும். அவரவர் தன்மைக்கு ஏற்ப எந்த வழியைப் பின்பற்றினாலும் இறுதியில் அடையவேண்டிய லட்சியம் எல்லோருக்கும் ஒன்றுதான்.
* வாழ்வில் நாம் படும் துன்பங்களுக்கும், இன்னல்களுக்கும் அடிப்படை காரணம் நான் வேறு, நீ வேறு என்ற இரட்டை மனோபாவம் தான். மனதில் சுயநலம் இருக்கும் வரை துன்பத்திலிருந்து விலக முடியாது. சுயநலம் உள்ள இடத்தில் என்றும் அமைதி இருப்பதில்லை.
* குரு ஒருவரைத் தேடு. அவரது திருவடித் தாமரைகளில் திடமான பக்தி கொண்டவனாகிப் பிறவித் துன்பத்திலிருந்து விரைவில் விடுபடு. குருவருளில் நம்பிக்கை கொண்டு மனதை அடக்கப் பழகினால், உள்ளத்தில் உறைந்திருக்கும் தெய்வத்தைக் காணலாம்.
* செல்வத்தாலும், சுற்றத்தாலும், இளமையாலும் யாரும் கர்வம் கொள்ளாதீர்கள். என்றைக்காவது ஒருநாள் இவையெல்லாம் நம்மை விட்டு விலகிச் சென்று விடும். அதனால், வாழ்நாளுக்குள் கடவுளை அறிய முற்படுங்கள்.
* குழந்தைகள் விளையாடிக் களிக்கிறார்கள். வாலிபர்கள் பெண்ணின்பத்தை நாடுகிறார்கள். வயோதிகர்கள் கவலையில் கழிக்கிறார்கள். ஆனால், கடவுளின் மீது பற்றுவைக்க மறந்து விடுகிறார்கள்.

Monday, July 2, 2012

சேஷாத்திரி சுவாமிகள்

                                                    
 
 
ஆதிகுருவாகிய சங்கரர், காஞ்சிபுரத்தில் காமகோடி பீடத்தை அமைத்து, காமாட்சிதேவியை அமைத்து, காமாட்சி தேவியை ஸ்ரீவித்யா முறைப்படி வழிபாடு செய்ய முப்பது தேவி பக்தர்களை ஏற்பாடு செய்தார். வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்ற இவர்கள் காமகோடி வம்சம் என அழைக்கப்பட்டனர். இந்த வம்சத்தை சேர்ந்த வரதராஜன் - மரகதம்பாள் தம்பதிகளுக்கு 1870, ஜனவரி 22ம் நாள் சனிக்கிழமை அஸ்த நட்சத்திரத்தில், உத்திரமேரூர் அருகே வாவூர் கிராமத்தில் மகான் அவதாரம் நடந்தது. பிறந்த சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாதலால் சேஷாத்ரி என பெயர் சூட்டப்பட்டார். ஒருநாள் சேஷாத்ரி தாயாருடன் கோயிலுக்கு செல்லும்போது, ஒரு வியாபாரி வைத்திருந்த நவநீதகிருஷ்ணர் பொம்மைகளில் ஒன்றை கேட்டார். வியாபாரியும் சேஷாத்ரியை தூக்கிக் கொஞ்சி, இந்த குழந்தைகயின் கை தங்கக்கை நேற்று ஆயிரம் சிலைகளும் விற்றுவிட்டது என்று கொண்டாடினான். அதுமுதல் இவர் கை பட்ட காரியம் வளர்ச்சி அடைந்ததால் நான்கு வயதிலேயே தங்கக்கை சேஷாத்ரி என்று அழைக்கப்பட்டார். சேஷாத்ரி சிறு வயதிலேயே வேதங்கள் கற்று பற்பல சாஸ்திரங்களில் வல்லவராக விளங்கினார். சேஷாத்ரியின் 14ம் வயதில் தகப்பனார் இறந்தார். ஒரு சமயம் வந்தவாசியில் உபன்யாசம் செய்பவர் உடல்நலக் குறைவால் வராததால் சேஷாத்ரி அங்கு சென்று ஓராண்டு ராமாயண பாகவதம் சொற்பொழிவாற்றினார். சேஷாத்ரிக்கு 17 வயதில் தாயார் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார். சேஷாத்ரியின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள் இவருக்கு சன்னியாசி யோகம் தான் உள்ளது. சன்னியாசி ஆகி பிறகு யோகியாக ஆவார் என கூறிவிட்டார்கள்.
தாயார் இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் ஒருநாள் சேஷாத்ரிக்கு தன் முதுகில் ஆதிபராசக்தி பாம்பின் வடிவமாக தன்னை ஆட்கொண்டதை உணர்ந்தார். சில நாட்களில், தாயார் சேஷாத்ரியை அழைத்து, பிறக்க முக்தி திருவாரூர், தரிசிக்க முக்தி சிதம்பரம், இறக்க முக்தி காசி, நினைக்க முக்தி திருவண்ணாமலை என்று பொருள் கொண்ட சுலோகத்தை மகனின் மார்பில் 3 முறை அடித்து அடித்து சொல்லிவிட்டு. அருணாசல, அருணாசல, அருணாசல என்று 3 முறை உருக்க கூவிவிட்டு மகளின் மகனின் மடியில் இயற்கை எய்தினார். தாயின் அந்திமச் சொற்களாகிய அண்ணாமலை அடிமனதில் ஆணிவேர் போல் பதிந்துவிட்டுது. திருவண்ணாமலை மனத்தால் கண்டு, ஒரு அட்டையில் அதைப் போல் வரைந்து, பூஜை அறையில் வைத்து காலை முதல் பிற்பகல் வரை அறையை உள்தாளிட்டு பூஜையில் ஈடுபட்டு விடுவார். சரியாக குளிப்பதில்லை. சாப்பிடுவதில்லை. உடம்பைப்பற்றி கவலைப்படுவதில்லை. ஞானப்பைத்தியம் என்று பலரும் பரிகசித்தனர். 19வது வயதிலேயே உபாசனையும், வைராக்கியமும் மிகுந்த நிலையை மேற்கொண்டு எல்லாவற்றையும் துண்டித்து துறவியாகி, காஞ்சிபுரத்தை விட்டு புறப்பட்டு, ஞானவித்தையை உலகெல்லாம் பரப்ப, அந்த ஞான தபோதனார் அண்ணாமலை நோக்கி வந்தார். தை மாதத்து ரத சப்தமி திருநாளில் திருவண்ணாமலையில் திருப்பாதம் பதித்தார். வந்த உடனே கிரிபிதட்சணம் போனார். கோயிலில் பல இடங்களில் தியானம் புரிந்தார். அங்கு அவர் தவம் செய்ய மிகவும் பிடித்த இடம் துர்க்கையம்மன் கோயில். திருவண்ணாமலை வந்தவுடன் தினசரி சித்து விளையாட்டுகள் செய்யலானார்.
பைத்தியம் போல் வேகமாக சிரிப்பார். நடப்பார். ஓடுவார். வசீகர கண்கள். அழுக்கே இவர் உடையின் நிறம். நிலையான இருப்பிடம் கிடையாது. நல்லவர்கள் வணங்கினால் ஆசிர்வதிப்பார். தீயவர்களை வசைமாரி பொழிவார். எந்த பெண்ணைக் கண்டாலும், என் தாய் என்று சொல்லி வணங்குவார். தூக்கமே கிடையாது. இரவில் சுற்றுவார். அல்லது தியானத்தில் இருப்பார். பக்தர்களுக்கு மும்மூர்த்திகளையும் காட்டி தானே பராசக்தி வடிவமாக காட்சிதந்துள்ளார். விஷத்தை அல்வா போல் விழுங்குவார். வியாதியால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு நிவாரணம் அளிப்பார். இவர் கட்டியணைத்தால் தோஷம் நீங்கும், கன்னத்தில் அறைந்தால் செல்வம் பெருகும். எச்சில் உமிழ்ந்தால் எல்லாம் கைகூடும். தவம் புரிந்த குகை அருகில் சென்று என் குழந்தை கந்தன் உள்ளே தவம் செய்கிறான் என்றார். ரமணரை உலகிற்கு காட்டியவர் சேஷாத்ரி சுவாமிகள், திருப்புகழ்தான் மந்திரம் என்று வன்னிமலை சுவாமிகளுக்கு உபதேசித்து, அவர் மூலம் திருப்புகழ் தமிழெங்கும் பரவச்செய்தார். 1929ம் ஆண்டு ஜனவரி மாதம் தன் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொள்ளும் நாட்களில் மகானின் முகத்தில் பிரகாசமான ஒளி, மூன்று நாட்கள் சிவசக்தி நிலையில் தியானம் செய்து முக்தி அடைந்தார். சுவமிகள் பிறக்கும்போது கிரகங்கள் இருந்த நிலையிலேயே முக்திநாளிலும் அமைந்தது. இது மகான்களுக்கே கிடைக்கூடிய மாபெரும் வாய்ப்பு. செங்கம் சாலை மலையடிவாரத்தில் சமாதி வைக்கப்பட்டார். இன்றும் ஜீவசமாதியில் இருந்துக்கொண்டு பக்தர்களுக்கு அருள்புரிகிறார்

Sunday, July 1, 2012

குரு தட்சிணாமூர்த்தி

கீழாவாத்தூர் வேளாளர் மரபில் சிவசிதம்பரம்-மீனாம்பிகை என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். நீண்ட நாட்களாகியும் குழந்தைப்பேறு இல்லாததனால் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை வணங்கி விரதமிருந்தனர். ஒரு நாள் இரவு மீனாம்பிகையில் கனவில் தோன்றிய ஈசன் மகப்பேறின்றி வருந்த வேண்டாம், நாமே அக்குறையைத் தீர்ப்போம் என்று கூறி மறைந்தார். சிறிது நாட்கள் கழித்து அவர்களுக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அருணாச்சலேஸ்வரரின் கிருபையால் பிறந்ததால் அக்குழந்தைக்கு அருணாசலம் என்று திருநாமம் சூட்டினர்.
பிறந்து ஐந்து ஆண்டுகள் செயலற்று பேச்சையும் ஒழித்திருந்த அந்த பாலகனைக் கண்டு பெற்றோர் தம் மகன் பேச்சற்றவனோ ! என்று வருந்தினர். ஒரு துறவி வந்து என்னப்பா செய்கிறாய் என்றதும் பாலகன் சும்மா இருக்கிறேன் அப்பா என்றது. என்னைத் தெரிகிறதா? என்றார் அந்தத் துறவி. குழந்தையோ, ஏன் தெரியாது? நானும் நீயும் ஒன்றுதானே! என்றது. ஒருசமயம் தகப்பனார், மகனே, நான் தில்லை சென்று ஆருத்ரா தரிசனம் செய்துவிட்டு வரலாமா என்று கேட்க, பாலகன், இன்னும் 20 நாழிகையில் உம் மாதா தேகவியோகம் அடையப் போகிறாள் ! என்றது. அதேபோல் அடுத்தநாள் அந்தக் கிழவி மரித்தாள். பெற்றோர் திடுக்கிட்டனர். தம் மகன் துறவியைப் போல் அதிகம் பேசாமலும் நிஷ்டையிலும் இருப்பதையும் மூன்று காலங்களையும் அறிதலையும் கண்டு மகனாக நடத்தாமல் மகானாக பாவித்தனர். அவர்கள், இளைய மகனைப் பள்ளிக்கு அனுப்ப, சுவாமிகள், என்னை ஏன் பள்ளியில் வைக்கவில்லை என்றதால் இரு மக்களையும் பள்ளியில் சேர்த்தனர். சுவாமிகள் சுவடிக்கட்டை முன்னால் வைத்து விட்டு எப்பவும் கண்களை மூடிய வண்ணம் இருப்பதைக் கண்ட ஆசிரியர், தம்பி, படித்தாயிற்றா? என்றார். படித்துவிட்டேன் என்று பதில் வந்தது. படித்ததைச் சொல் என்றதும் அருவி மழைபோல் ஏட்டில் உள்ளதைப் பொழியத் துவங்கியதும் ஆசிரியர் எழுந்து கைகட்டி நின்றார். உட்காரலாமே ! என்றதும் தரையில் உட்கார்ந்தார். ஆசிரியர்களும் மற்றவர்களும் தன்னிடம் மரியாதை காட்டுவதைத் தவிர்க்க சுவாமிகள் பள்ளியை விட்டு நீங்கினார்.
பக்கத்து ஊரில் ஒரு தம்பதியர் புத்திரசந்தானம் இல்லாமையால் ஸ்ரீரங்கம் சென்று சேவித்தனர். கனவில் ஒரு பாகவதர் தோன்றி, உங்கள் அருகாமையில் ஒரு சித்தன் அவதரிக்கிறான். அவனுக்கு ஆகாரமாக பால் நிவேதனம் செய்து உட்கொண்டால் புத்திரன் பிறப்பான் என்றார். உடனே அந்தத் தம்பதியர் தங்கள் ஊருக்கு வந்து ஒரு பசுவைக் குளிப்பாட்டி சுத்தமான இடத்தில் மேயவிட்டனர். தாங்களும் ஸ்நானம் செய்து பாலைக் கறந்து காய்ச்சி சுவாமிகளுக்கு அளித்தனர். சுவாமிகள் மீதமில்லாமல் குடித்துவிட்டார். இதுபோல் ஐந்து நாட்கள் சென்றதும் ஆறாம் நாளில் பாதிப்பாலைப் பருகி மீதியை வைத்துவிட்டு கிரகப்பிரவேசம் ஆகிவிட்டது. இனி நீங்கள் வரவேண்டாம் என்றார். அந்த சேஷப்பாலை அருந்திய தம்பதிக்கு அற்புதமான புத்திரன் பிறந்தான். சுவாமிகளின் பெயரையே புத்திரனுக்கும் சூட்டினர் பெற்றோர். இதை எதிர்த்தனர் அவரின் சொந்தக்காரர்களான மற்ற வைணவர்கள். உடனே குழந்தை பேசத் துவங்கியது. அருணாசலம் என்ற பெயரின் முதல் அட்சரம், அரி என்பதன் முதல் அட்சரம். இரண்டாவது எழுத்து பிராட்டியின் பெயரான திருவின் ஈற்றட்சரம். ணா என்ற எழுத்து அஷ்டாட்சரத்தின் கடை அட்சரம். சலம் என்பதோ நீங்கள் எனக்குச் சூட்ட நினைத்த வேங்கடாசலம் என்ற பெயரில் மறுபாதி. இதைக் கேட்ட சுற்றத்தார்கள் வெட்கமும் வியப்பும் அடைந்தனர்.
அடிக்கடி சுவாமிகளிடத்து தகப்பனார், நான் என் மனைவி பிரேதமாக இருக்கப் பார்க்காதிருக்க வரம் தர வேணும் என்று பிரார்த்திப்பார். தாயார் நான், சுமங்கலியாகவே போகவேண்டும் என்று வேண்டுவார். ஒருநாள் சுவாமிகள் பெற்றோரை நோக்கி இன்னும் எட்டு நாளில் நம் கர்மம் முடியும் என்றார். பெற்றோர் மகனுக்கு ஏதேனும் நேருமோ என்று பயந்து எப்பவும் பஞ்சாட்சரம் ஜபித்து வந்தனர். குறிப்பிட்ட நாள் காலையில் சுவாமிகள் தாய் தந்தையரை அழைத்து திருநீறு இட்டனர். பெற்றோர் மூர்ச்சை அடைந்து விழுந்து இறந்தனர். தம் கையால் ஈமக்கடனை முடித்துவிட்டு சுவாமிகள் யாரும் அறியாமல் எங்கோ சென்றுவிட்டார். போகும் இடங்களில் பற்பல அற்புதங்கள் நிகழ்த்தினார். பூட்டியிருக்கும் வீடு எரிய, உள்ளே தொட்டிலில் உறங்கும் குழந்தையை ஒரு துறவி உருவத்தில் காப்பாற்றியது, பாம்பு கடித்து இறக்கும் தருவாயிலிருந்து சிறுவனை உயிர் மீட்டது, விராலிமலையில் முருகனால் நேரில் அளிக்கப்பட்ட பிரசாதத்தின் மீதியை அந்த ஊர் தாசில்தாருக்கு அளித்து அவர் குன்மநோயை குணப்படுத்தியது, ஸ்ரீரங்கம் கொட்டகைப் பந்தலிலிருந்து தவறி விழுந்த ஒரு கொத்தனார், தட்சிணாமூர்த்தி என்று இவர் நாமத்தைச் சொல்லிக்கொண்டே விழும்போது, பல மைல்களுக்கு அப்பாலிருந்த சுவாமிகள் அங்கிருந்தபடியே விழுந்தவரை தாங்கிப்பிடித்து மெதுவாக இறக்கி வைத்தது, சிவஞான போதத்திற்கு சிந்திக்கும் முறையைத் தெளிவாக சிவஞான சிந்தனம் என்ற பெயரில் எழுதி அருளியது. திருவொற்றியூரில் பேய் பிடித்த பெண்ணை மீட்டு பவரோகத்தை நீக்கியது என்பது போன்ற எத்தனையோ அற்புதங்களை சுவாமிகள் நிகழ்த்தினார்.
காரைக்காலில் மஸ்தான் சாகிபு என்ற பெரியவர், எப்படி இருந்தால் எங்கும் நிறைந்த பூரணப் பொருளாக ஆகலாம் எனக் கேட்க, சுவாமிகள் சுட்டிறந்தால் சுகமடையலாம் என்றார். பெரியவர் பலமுறை யோசனைகள் செய்தும் நான், நீ அது இது என்ற சுட்டுப்பொருளைக் குறிப்பிடுதலை விடுத்து பரமசுகமடைந்தார். சித்தூர் சோமநாத முதலியாருக்கு ஏற்பட்ட குன்ம நோய் மணி மந்திர ஒளஷதங்களால் தீரவில்லை. ஒவ்வொரு தலமாக தரிசித்து வந்தார். சிதம்பரத்தில் ஓர் இரவு தங்கி சுவாமி சன்னதியில், என் வியாதியை போக்காவிடில் இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று பிரதிக்ஞை செய்தார். திருவாரூர் தட்சிணாமூர்த்தி உன்னைக் குணப்படுத்தும் என்று அசரீரி எழுந்தது. அவர் திருவாரூர் வந்து கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து கொண்டும் வியாதி நீங்கவில்லை. ஒரு நாள் கனவில் ஒரு துறவி அக்ரகாரத்தில் ஒரு அவதூதன் நடமாடுகிறான். அவனிடம் செல் என்றார். முதலியாரும் அக்ரகாரத்தெருவில் ஞமலிகளுடன் எச்சில் இலைகளைப் புரட்டிக் கொண்டிருந்த சுவாமிகளைக் கண்டு இவராகத்தான் இருக்க வேண்டும் என்று நிச்சயித்து அவர் உண்ட உச்சிட்டத்தை தானும் உண்டு, அந்த விநாடியே தான் நோய் நீங்கப் பெற்றார். அது முதல் சுவாமிகளுக்கு குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் என்ற பெயர் பிரபலமாகத் தொடங்கியது.
சுவாமிநாத செட்டியார் என்ற அன்பருக்கு தன் ஒரே பெண் மேக ரோகத்தால் உடல் தடித்து கறுத்து இருப்பதைக் கண்டு மிகவும் வருத்தம். பலரிடம் வேண்டியும் பல மருந்துகளை உபயோகித்தும் நோய் நீங்கவில்லை. ஒரு மடாதிபதி நீங்கள் ஒரு பிரம்மஞானிக்கு ஒரு கவளம் சோறு இட்டால் உங்கள் பெண் நலம் பெறுவாள் என்றார். பிரம்மஞானியை நாடு முழுவதும் தேடினார். பலர் கூறக்கேட்டு திருவாரூர் வந்து சுவாமிகளை அடைந்தார். தானே விசேஷமாகத் தயாரித்த உணவை சுவாமிகளுக்கு நிவேதனம் செய்தார். சிறிது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அந்தப் பெண் அவர் திருவடியைப் பிடித்தது. வாயிலிருந்ததை அந்தப்பெண் மீது துப்பி என்னடி வேணும்? என்று கேட்டார். அவள், உன்னடி வேண்டும் என்று பதில் கூறினாள். அடி பிடித்தால் நோய் பொடியாய் உதிரும் என்றார் சுவாமிகள். ஒரே இரவில் அந்தப் பெண்ணின் ரோகம் நீங்கி, தடித்த கறுத்த சருமங்கள் பொலபொலவென்று படுக்கையில் உதிர்ந்து அவள் பூரண குணமடைந்தாள். உள்ளன்போடு பிரார்த்திக்கும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க நோய் தீர்த்தல், திரவிய சம்பத்து, சந்தான சம்பத்து ஞான சம்பத்து முதலியவைகளை அருளியதோடு அன்றியும் நடை சமாதியினராய், பிரம்ம வித்தாய், ஜீவன் முக்தராய் காட்சியளித்த குருதட்சிணாமூர்த்தி சுவாமிகள் 1836-ஆம் ஆண்டில் ஜீவசமாதி அடைந்தார். அன்னாரின் உயிர்நிலைக் கோயிலை இன்றும் திருவாரூர் மடப்புரத்தில் காணலாம்.