Wednesday, October 1, 2014

கோயில் கருவறை முன்பு இரு பெரிய சிலைகள் இருக்கிறதே.

 

அந்தச்சிலைகள் அங்கு நிற்பதன் தத்துவம் என்ன?
அவை துவாரபாலகர் சிலைகள். சிவன் கோவிலில் ஆட்கொண்டார், உய்யக் கொண்டார் என்றும், விஷ்ணு கோவில்களில் ஜய, விஜயர் என்றும் இவர்கள் அழைக்கப்படுவர். வாசலில் நிற்கும் இவர்கள் கைலாயம், வைகுண்டத்தில் காவல் புரிவதாக ஐதீகம். இவர்களை வணங்கி அனுமதி பெற்ற பின், கடவுளை தரிசிப்பது மரபு. 

தர்ப்பத்தை பற்றி தெரிந்துக்கொள்ளுவோம் -

அதில் உள்ள தேவதாம்ஸம், மகத்துவம், வேதத்தில் தர்ப்பம், உபயோகம், பவித்ரமும் அதன் ரூபமும், கூர்ச்சம், நியமங்கள், மற்ற உபயோகங்கள் போன்ற பல விஷயங்கள்
(”வேதமும் பண்பாடும்” புஸ்தகத்திலிருந்து)
பிராஹ்மணன் வாழ்க்கையில் இன்றியமையாத வஸ்து குசம் என்று அழைக்கப்படும் தர்ப்பங்கள். பொதுவாக க்ருஹத்தில் தர்ப்பங்கள் இருப்பதே பெரும் ஐஸ்வர்யமாகும். இதில் சந்தேகமே வேண்டாம். பாவங்களைப் போக்கக் கூடியது தர்ப்பம். நம்மைச் சுத்தமாக்கும் சக்தி இதற்குண்டு.
குச ப்ரசம்ஸை
தர்ப்பத்தின் நவீன விஞ்ஞான பெயர் போவா சைநோசுராய்ட்ஸ் என்பதாகும், நவீன் ஆராய்ச்சியாளர்களும் தர்ப்பங்கள் தன்னகத்தே கொண்டுள்ள அறிய குணாதிசயங்களையும் நல்ல ஒளிர் வீச்சுக்களையும் எடுத்துக் கூறி வருவதும் நம் கண்ணில்படுகின்றது.
தேவதாம்ஸம்
தர்ப்பத்தின் அடியில் பிரஹ்மாவும். மத்தியில் கேசவனும் நுனியில் சங்கரனும், நான்கு திசைகளில் எல்லா தேவர்களும் ஸான்னித்யம் கொண்டுள்ளதாக ஐதீகம். ஹாரீதர், மார்க்கண்டேயர், அத்ரி, கௌசிகர், வ்யாஸர், சாதாதபர், ஸம்வர்த்தர், காத்யாயனர், பரத்வாஜர், சாலஸ்காயனர், யாக்ஞவல்க்யர், ஆஸ்வலாயனர், ஆபஸ்தம்பர் போன்ற மகரிஷிகள் தர்ப்பத்தின் விசேஷ தன்மை பற்றி அருள் செய்துள்ளனர். கர்மானுஷ்டானங்களிலும், தேவ, பித்ரு கார்யங்களிலும் தர்ப்பங்களை உபயோகப்படுத்தும் வழிகளில் ஓரிரு வித்யாசங்கள் இவர்களிடையே தென்பட்டாலும், பொதுவாக தர்ப்பத்தின் மகிமையை இம்மகான்கள் அருள் பாலித்துள்ள விதம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றது. இது நமது பாக்யமே.
வேதத்தில் தர்ப்பம்
தர்ப்பத்தின் மகிமை பற்றியும், அதனது அபரிமிதமான சக்தியைப் பற்றியும் வேதம் எடுத்துரைக்கின்றது. இதைவிட நமக்கு வேறு என்ன வேண்டும்? இதன் விசேஷமான சக்தியைப் புரிந்து கொள்வதற்கு இது ஒன்றே போதுமே. யஜுர் வேத ப்ராஹ்மணத்தில் (அச்சித்ரம்) நேரிடையாகவே தர்ப்ப ப்ரசம்ஸையைக் காண்கின்றோம்.
மேலும் ஸாரசமுச்சம், ஸம்ருதிஸாரம், ஸ்ம்ருதி ரத்னம், ஸ்ம்ருதி சந்தாமணி, ஸ்ம்ருதி பாஸ்கரம், விஷ்ணுபுராணம் போன்ற கிரந்தங்களிலும் தர்ப்பத்தின் விவரங்கள் காணக்கிடைக்கின்றன.
தர்ப்பத்தைச் சுற்றி நிறைய புராண சம்பவங்களும் உண்டு.
மஹாபாரதம் (கருடன் & அம்ருதம் & நாகர்கள் சம்பவம்), ராமாயணம் (இந்த்ரபுத்ரன் ஜயந்தன் & காகம் & சீதாதேவி சம்பம்), கூர்மாவதாரம் (ஸமுத்ர மந்தன்), வானமாவதாரம் (மஹாபலியின் தான சம்பவம்) போன்றவைகள் சில உதாரணங்களாகும். புத்த சம்பிரதாயத்தில் தர்ப்ப அம்சம் உண்டு.
பவித்ரம்
தர்ப்பத்தினால் விதிப்படி செய்யப்பட்ட பவித்ரத்தை அணிந்துதான் ஜபம், தானம், ஹோமம், தேவ, பித்ரு மற்ற சில கார்யங்கள் செய்ய வேண்டும். யாகங்களில் மிக அவசியம். தர்ப்ப பவித்ரம் இல்லாத கார்யம் செல்லுபடியாகாது. பொதுவாகவே  ப்ராஹ்மணன் எப்பொழுதுமே பவித்ர பாணியாக இருப்பது ச்ரேஷ்டம் என்று ஒரு வாக்யமும் உண்டு. அதனால் தானோ என்னமோ காத்யாயனர், ஹாரீதர் போன்ற ரிஷிகள் மோதிர விரலில் ஸ்வர்ண பவித்ரத்தை பிராஹ்மணன் தரிக்க «வ்டும் எனக் கூறியுள்ளனர்.
மோதிர விரலில் தங்கத்தாலான பவித்ரம் தரிப்பதோடு ஆள்காட்டி விரலில் தர்ஜனி எனப்படும் வெள்ளி மோதிரத்தையும் அணிய வேண்டும். ஆனால் ஜீவஜ்யேஷ்டன் வெள்ளியினாலான தர்ஜனியைத் தவிர்க்க வேண்டும். ஒருவன் தங்கத்தினாலான பவித்ரத்தை நிரந்தரமாக அணிந்திருந்தாலும் கர்மாக்களில் தர்ப்ப பவித்ரம் இன்றியமையாதது. பவித்ரம் எனப் பொதுவாக கூறினால் அது தர்ப்பத்தினால் செய்த பவித்ரம்தான். கர்மா முடியும் வரையில் குச பவித்ரபாணியாக இருந்துதான் ஆக வேண்டும். கர்மா முடிவில் முடிச்சை அவிழ்த்துவிட்டு பரிஹரிக்க வேண்டும்.
எந்தவிதமான கர்மாவாக இருப்பினும் பவித்ரத்தை வலது கை மோதிர விரலில் தான் அணிய வேண்டும். பொதுவாக நமக்கு நாமே பவித்ரத்தை கர்மாக்களில் தயார் செய்து அணிந்து கொள்வதில்லை ஆச்சார்யன் மூலமாகவோ அல்லது வயதில், யோக்யாம்சத்தில் சிறந்தவர் மூலமாக மந்த்ர பூர்வமாக பவித்ரத்தைப் பெற்றுக் கொண்டு அணிவது சம்பிரதாயம். தவிர்க்க முடியாத நேரங்களில் நமக்கு  நாமே பவித்ரம் தயார் செய்து அணிந்து கொள்வதில் தோஷமில்லை.
பவித்ரத்தில் அடங்கியுள்ள தர்ப்பங்களின் ஸங்க்யை அமைவதற்கு விதிமுறை உண்டு. கர்மாவின் தன்மையைப் பொருத்து ஸங்க்யை வித்தியாசப்படும். அதன் விவரங்கள்
கர்மாவின் பெயர் ஸங்க்யை
ஜபம், தேவ பூஜைகள்,
ஹோமங்கள் இத்யாதி 2 புல்
ச்ராத்தம், தர்ப்பணாதிகள் 3 புல்
ப்ரேத கார்யங்கள் 1 புல்
பவித்ரத்தில் அடங்கியுள்ள புல்லின் எண்ணிக்கை மாறினாலும் ரூபம் (செய்யும் விதம்) மாறாது. பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் பொதுவாக எல்லாவிதமான பவித்ரமும் அமைந்திருக்கும்.
நியமங்கள்
பவித்ரம் அணிவதற்கு முன்பு ஆசமனம் சொல்லியுள்ளது. அதே மாதிரி கர்மா முடிவில் பவித்ர முடிச்சை அவிழ்த்த பிறகு ஆசமனம் செய்ய வேண்டும். இங்கு ஒன்றை கவனித்தல் நல்லது. முடிச்சை அவிழ்ப்பதற்கு முன்பு பவித்ரத்தைக் காதில் வைத்துக் கொண்டு ஓர் ஆசமனம் செய்ய வேண்டும். பிறகு பவித்ர கிரந்தியை அவிழ்த்துவிட்டு அதை கீழே «£ட்ட பிறகு மீண்டும் ஓர் ஆசமனம் செய்ய வேண்டும்.
பவித்ரத்தின் முடிச்சை அவிழ்த்து கையிலிருந்து நாம் எப்போதெல்லாம் கீழே போடுகிறோமோ போடுகிற திசை நிர்ருதி மூலையாகத்தான் போடச் சொல்லியுள்ளது. அது மாத்திரம் அல்ல. எந்தத் தர்ப்பங்களை விஸர்ஜனம் செய்தாலும் (கையில் இடுக்கிக் கொண்டிருந்த தர்ப்பங்கள், பத்னியிடமிருந்து வாங்கும் தர்ப்பங்கள் முதலியவை) நிர்ருதி மூலையில்தான் போட வேண்டும். எந்தக் கர்மாவாக இருந்தாலும் இதுதான் விதி.
கையில் பவித்ரம் அணிந்திருக்கும் போது (கர்மா நடுவில்) நீர் அருந்த நேரிட்டால், பவித்ரத்தை வலது காதில் வைத்துக் கொண்டு ஜலபாணம் செய்ய வேண்டும். பிறகு காதிலிருக்கும் பவிரத்தைத் தானே கையில் தரித்துக் கொண்டு கர்மாவைத் தொடர்ந்து செய்யலாம். (பவித்ரத்தை வலகு காதில் அல்லாது வேறு இடங்களில் வைப்பதோ, மற்றவர்களிடம் கொடுத்து வைப்பதோ உசிதமல்ல)
ப்ராஹ்மணர்களின் பாதங்களை அலம்பும் போதும். பவித்ரம் வலது காதில்தான் இருக்க வேண்டும்.
மற்ற உபயோகங்கள்
தர்ப்ப பவித்ரம் அணிவது மிகவும் ச்ரேஷ்டம் என ஏற்கெனவே பார்த்தோம். தர்ப்ப பவித்ரத்தைத் தவிர மேலும் பல இடங்களிலும் தர்ப்ப உபயோகத்தை நமக்கு சாஸ்த்ரம் விதித்துள்ளது. அவை
தர்ப்பத்தினாலான ஜப ஆஸனம் மிகவும் விசேஷம்.
கர்மாக்களின் துவக்கத்தில் கணவன் ஸங்கல்பம் செய்யும் போது மனைவி கணவனை நேரிடையாக தொட்டுக் கொள்வதில்லை. தர்ப்பங்களினால் தான் கணவனை ஸ்பரிக்கச் சொல்லியுள்ளது. தர்ப்பங்கள் தான் அவர்களுக்கு அங்கே இணைப்பாக உபயோகப் படுத்தப்படுகிறது.
க்ரஹண காலங்களில் (சூர்ய மற்றும் சந்திர) இல்லத்தில் ஏற்கெனவே பக்குவமாக்கி இருக்கும் பதார்த்தங்களிலும் குடிநீரிலும், தர்ப்பங்களைப் போட்டு வைத்தால் எந்த தோஷமும் அவற்றுக்கு ஏற்படாது.
ஹோமங்களில் பரிஸ்தரணம், ஆயாமிதம், ப்ரணீதா போன்றவைகளிலும் தர்ப்பங்கள் இடம் பெற்றுள்ளன, ச்ராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆஸனம், கூர்ச்சம் போன்றவைகள் தர்ப்பங்களினால்தான் செய்யப்படுகின்றன. குறிப்பாக தர்ப்பங்களில் தர்ப்ப கூர்ச்சத்தினால்தான் (அல்லது தர்ப்ப ஸ்தம்பம்) ப்த்ருக்களை ஆவாஹணம் செய்யச் சொல்லியுள்ளது.
கலச ஸ்தாபனம் போதும். மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பது இன்றியமையாதது. கல்யாணத்தில் கல்யாண பெண்ணிற்கும், அதே மாதிரி உபநயனனத்தில் விடுவிற்கும் இடுப்பில் தர்ப்பங்களினாலான கயிற்றை மந்த்ர பூர்வமாக கட்டும் ப்ரயோகமும் இருந்து வருகின்றது.
உபயோகப்படுத்தும் தர்ப்பங்களின் நுனி உடையாமல் இருக்க வேண்டும். ப்ரயோகங்களில் நுனி இல்லாத தர்ப்பங்கள் (ஆஸனத்தைத் விர) உபயோகப்படுவதில்லை.
தர்ப்ப முஷ்டியிலிருந்து (கட்டிலிருந்து) நமக்குத் தேவையான தர்ப்பங்களை எடுத்துக் கொள்ளும் போது மேலிருந்து (நுனி பக்கம்) எடுக்கக்கூடாது. மேலிருந்து எடுப்பது வசதியாக இருந்தாலும் அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். கட்டின் அடியிலிருந்து தான் உருவ வேண்டும்.
தர்ப்பங்களைக் கீழே வைக்கும் போது (அல்லது சேமித்து வைக்கும் போது) அதன் நுனி மேற்கு அல்லது தெற்கு நோக்கி இருக்கக்கூடாது. கிழக்கு அல்லது வடக்கு நோக்கித்தான் நுனி இருக்கும்படி வைக்க வேண்டும்.
தர்ப்ப முஷ்டியையோ அல்லது தர்ப்பங்களையோ வெறும் தரையில் வைக்கக்கூடாது. கால் மதிபட்ட தர்ப்பங்கள். பரிஸ்தானம் போன்றவைகளில் உபயோகப்படுத்தப்பட்ட தர்ப்பங்களை வர்ஜிக்க வேண்டும். மீண்டும் உபயோகப்படுத்தக்கூடாது.
தர்ப்பங்களை விரல் நகத்தினர் கிள்ளக்கூடாது. உபயோகத்திற்காக சேமித்து வைத்திருக்கும் தர்ப்பங்களை அலட்சியமாக பார்க்கக் கூடாது.
மகத்துவம்
குச பவித்ரம் நம்மை சுத்தமாக்குகின்றது. கர்மா நன்கு நடைபெற நமக்கு நல்ல பாதுகாப்பாகவும் செயல்படுகின்றது. பவித்ரபாணி சுத்தமானவன். இதில் சந்தேகம் வேண்டாம். குசத்தை ஹஸ்தத்தில் தரித்துச் செய்த ஜபம், தானம், ஹோமம் ஆகியவற்றின் புண்யத்திற்கு கணக்கில்லை என்கிறார் மகரிஷி ஹாரீதார். மற்றுமொரு ரிஷி குசத்தைப் பற்றி கூறுவதைக் கேளுங்கள்.
இந்த்ரனின் கையில் வஜ்ரம் போலவும், பரமேஸ்வரனின் கையில் சூலம் போன்லவும், விஷ்ணுவின் கையில் சக்ரா£யுதம் போலவும், பிராஹ்மணன் கையில் குசமுள்ளது. பூதங்கள், பிசாசங்கள், ப்ரேதங்க்ள வேறு ப்ரஹ்மராக்ஷசர்கள் என்ற எல்லோரும் ப்ராஹ்மணன் கைவிரலில் உள்ள குசங்களைப் பார்த்தால் தலைகுனிந்தவர்களாய்த் தூரத்தில் செல்லுகின்றனர்.
இப்பேர்ப் பட்ட தர்ப்பங்களின் மகத்துவத்தை நாம் தெரிந்து கொள்வதே நமக்கு புண்ணியமாகும். இனி தர்மாக்களின் பவித்ரத்தை மந்த்ர பூர்வமாகப் பெற்றுக் கொள்ளும் போதும், மற்ற நேரங்களில் தர்ப்பங்களைப் பார்க்கும் போதும் தர்ப்பங்களின் முக்கியத்துவத்தை  நினைவில் கொள்வோமாக, நன்மையடைவோமாக.

மகாபாரதத்தில் யட்சனின் கேள்விகளும் தருமர் அளித்த விடைகளும் .........


12 ஆண்டுகால வனவாசம் கிட்டத்தட்ட முடிந்து பாண்டவர்கள் ஓராண்டு மறைந்த வாசம் செய்ய வேண்டிய காலம் நெருங்கி விட்டது. ஒரு நாள் காட்டில் அலைந்து கொண்டிருந்த சமயம் எல்லோருக்கும் தாகம் ஏற்பட, தருமர் நகுலனை அருகில் ஏதேனும் நீர்நிலை தென்படுகிறதா என்பதைப் பார்த்து வரும்படி ஏவுகிறார். நகுலனும் அவ்வாறே செல்ல ஒரு பொய்கையைப் பார்க்கிறான். முதலில் தன் தாகம் தணித்து சகோதரர்களுக்கும் தண்ணீர் எடுக்கும் நோக்கத்துடன் பொய்கைக்குள் இறங்குகிறான். அப்போது "சாகசம் செய்யாதே நகுலா, எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும்" என்று ஒரு அசரீரி கேட்கிறது. அதை அலட்சியம் செய்து தண்ணீரை அருந்த, அவன் நினைவிழந்து கரையில் வீழ்கிறான்.
நகுலனைக் காணாததால் சகாதேவனை தருமர் அனுப்ப அவனுக்கும் அப்பொய்கையருகில் அதே கதிதான். அதே போல அருச்சுனன் மற்றும் பீமனும் மயக்கமடைகின்றனர். இப்போது தருமரே செல்கிறார். அவரிடமும் அந்த அசரீரி எச்சரிக்கை செய்ய, அவரும் கேள்விகளுக்கு பதிலளிக்க சம்மதிக்கிறார்.
யட்சன்: எந்த மனிதன் துணை உள்ளவனாகிறான்?
தருமர்: தைரியமுள்ள மனிதன் துணை உள்ளவனாகிறான்.
யட்சன்: மனிதன் எவ்வாறு புத்திமானாகிறான்?
தருமர்: பெரியோர்களை அண்டுவதால் மனிதன் புத்திமானாகிறான்.
யட்சன்: பயிரிடுபவர்களுக்கு எது சிறந்தது?
பதில்: பயிரிடுபவர்களுக்கு மழை சிறந்தது.
யட்சன்: செல்வமுள்ளவனாக இருந்தாலும், அறிவாளியாக இருந்தாலும் எந்த மனிதன் வாழும்போதே உயிரற்றவனாக இருக்கிறான்?
தருமர்: தேவதைகள், விருந்தாளிகள், வேலைக்காரர்கள், முன்னோர்கள் - இவர்களுக்கு மரியாதையுடன் உணவு தராதவன்.
யட்சன்: தாங்கும் சக்தியில் பூமியை விட அதிக சக்தி வாய்ந்தது எது?
தருமர்: ஒரு தாயின் மனம்.
யட்சன்: ஒரு மனிதனுக்கு ஆகாயத்தை விட உயர்ந்தது எது?
தருமர்: அவனுடைய தந்தை.
யட்சன்: காற்றைக் காட்டிலும் வேகமானது எது?
தருமர்: மனிதனின் மனம்.
யட்சன்: புல்லைவிட அலட்சியமாக கருதிவிடத் தக்கது எது?
தருமர்: கவலை.
யட்சன்: தூங்கும்போது கண்களை மூடாமல் இருப்பது எது?
தெருமர்: மீன்.
யட்சன்: பிறந்தும் அசைவற்று இருப்பது எது?
தருமர்: முட்டை.
யட்சன்: தன்னுடைய வேகத்தினாலேயே வளர்வது எது?
தருமர்: நதி.
யட்சன்: தன் ஊரை விட்டுப் போகிறவனுக்கு நண்பன் யார்?
தருமர்: அவன் பெற்ற கல்வி.
யட்சன்: வீட்டில் இருப்பவனுக்கு தோழமை தருவது யார்?
தருமர்: அவன் மனைவி.
யட்சன்: நோயாளிக்கு நண்பன் யார்?
தருமர்: நல்ல வைத்தியன்.
யட்சன்: சாகப்போகிற நிலையில் இருப்பவனுக்கு யார் உற்ற தோழன்?
தருமர்: அவன் செய்கிற தருமம்.
யட்சன்:புகழ் எதில் நிலை பெற்றிருக்கிறது?
தருமர்: ஒரு மனிதன் செய்யும் தானத்தில் புகழ் நிலை பெறுகிறது.
யட்சன்: மனிதனின் சுகம் எதனால் நிலைபெறுகிறது?
பதில்: நல்லொழுக்கத்தின் மூலமாக.
யட்சன்: சொர்க்கத்தன்மை எதன் மூலம் நிலைபெறுகிறது?
தருமர்: சத்தியத்தைக் காப்பாற்றுவதன் மூலமாக.
யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய லாபங்களுள் எது சிறந்தது?
தருமர்: நோயின்மை.
யட்சன்: ஒரு மனிதன் பெறக்கூடிய சுகங்களில் உயர்ந்தது எது?
தருமர்: மனத்திருப்தி.
யட்சன்: சிறந்த தருமம் எது?
தருமர்: அஹிம்சை
யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் மற்றவர்களுடைய அன்புக்கு பாத்திரமாகிறான்?
தருமர்: கர்வத்தை விட்ட மனிதன் மற்றவற்களது அன்பைப் பெறுகிறான்.
யட்சன்: எதை விடுவதன் மூலம் மனிதன் துன்பத்தைத் தவிர்க்கிறான்?
தருமர்: கோபத்தை விட்ட மனிதனுக்குத் துன்பம் நேராது.
யட்சன்: எதை விடுகிற மனிதன் பொருள் உள்ளவன் எனப்படுகிறான்?
தருமர்: தர்ம விரோதமான ஆசைகளை விடுகிற மனிதனே, உண்மையில் பொருள் உள்ளவனாகிறான்.
யட்சன்: பிராமணர்களுக்குப் பொருள் கொடுப்பது எதற்காக?
தருமர்: தர்மத்திற்காக.
யட்சன்: நடன மற்றும் நாடகக்காரர்களுக்குப் பொருள் கொடுப்பதால் என்ன பயன்?
தருமர்: அவர்களுக்குச் செல்வம் கொடுப்பதால் பொருள் கிட்டும் என்பதே பலன்.
யட்சன்: வேலைக்காரர்களுக்கு எதற்காகப் பொருள் கொடுக்க வேண்டும்?
தருமர்: அவர்களை வசப்படுத்துவதற்காக.
யட்சன்: அரசர்களுக்குக் கொடுப்பது எதற்காக?
தருமர்: அவர்களிடமிருந்து பயமின்றி வாழ்வதற்காக.
யட்சன்: மனிதனால் வெல்ல முடியாத பகைவன் யார்?
தருமர்: கோபம்.
யட்சன்: முடிவே இல்லாத வியாதி எது?
தருமர்: பேராசை.
யட்சன்: எவன் சாது?
தருமர்: எல்லாப் பிராணிகளிடத்திலும் அன்புடன் இருப்பவன்.
யட்சன்: எது தைரியம்?
தருமர்: இந்திரியங்களை அடக்குவதே தைரியம்
யட்சன்: எந்த மனிதன் பண்டிதனாகிறான்?
தருமர்: தர்மங்களை அறிந்து கடைபிடிப்பவனே பண்டிதன்.
யட்சன்: எவன் நாஸ்திகன், எவன் மூர்க்கன்?
தருமர்: நாஸ்திகனே மூர்க்கன்.
யட்சன்: எது டம்பம்?
தருமர்: தான் செய்யும் தர்மத்தை ஊரறியச் செய்வது டம்பம்.
யட்சன்: ஒன்றுக்கொன்று எதிரிடையான வழி முறைகள் கொண்ட அறம், பொருள், இன்பம் - ஆகியவை ஓரிடத்தில் சேர்வது என்பது எப்படி நடக்கும்?
தருமர்: அறமும், மனைவியும் இணைந்து செயல்படும்போது, அந்த இல்லத்தில் அறம், பொருள், இன்பம் மூன்றும் சேர்ந்து விடுகின்றன.
யட்சன்: எந்த மனிதன் அழிவற்ற நரகத்தை அடைவான்?
தருமர்: தானம் கொடுப்பதாகக் கூறிவிட்டு பிறகு இல்லை என்று சொல்பவன்; வேதம், தர்ம வழிச் செயல்கள், முன்னோர்களுக்கான சடங்குகள் இவற்றில் பொய் கூறுபவன்; செல்வம் இருந்தும் பிறர்க்குக் கொடாதவன் - ஆகியோர் அழிவற்ற நரகத்தை அடைவார்கள்.
யட்சன்: பிறப்பு, வேதம் ஓதுதல், தர்ம சாஸ்திரங்களைப் பற்றிய அறிவு, ஒழுக்கம் - இவற்றில் எதன் மூலம் பிராமணத்துவம் உண்டாகிறது?
தருமர்: பிராமணத்துவம் உண்டாவதற்குக் காரணம் பிறப்போ, தர்ம சாஸ்திர அறிவோ, வேதம் ஓதுதலோ அல்ல. ஒழுக்கம்தான் பிராமணத்துவத்திற்குக் காரணம். ஒழுக்கமற்றவன் எவனாக இருந்தாலும் அவன் பாழானவனே! கல்வியும், சாஸ்திர அறிவும் மட்டுமே பயனளிப்பவை என்று நினைத்து, அதை மட்டும் பற்றி நிற்பவர்கள் மூடர்களே! தான் கற்ற சாத்திரப்படி நடப்பவனே பண்டிதன். ஒழுக்கத்துடன் நடந்து கொண்டு, யாகத்தில் பற்றுள்ளனவனாக, இந்திரியங்களை அடக்கியவன் எவனோ அவனே பிராமணன்.
யட்சன்: இனிமையாகப் பேசுகிறவன் எதைப் பெறுகிறான்?
தருமர்: மற்றவர்களின் அன்பைப் பெறுகிறான்.
யட்சன்: ஆலோசித்த பிறகே காரியத்தைச் செய்பவன் எதை அடைகிறான்?
தருமர்: வெற்றியை ஆடைகிறான்.
யட்சன்: தர்மத்தில் பற்றுள்ளனவனுக்கு என்ன கிட்டுகிறது?
தருமர்: அவனுக்கு நல்ல கதி கிடைக்கிறது.
யட்சன்: எவன் சந்தோஷத்தை அடைகிறான்?
தருமர்: கடனில்லாதனாகவும், பிழைப்பதற்காக ஊரை விட்டு ஊர் செல்ல வேண்டிய நிலையில் இல்லாதவனாகவும், தனக்கு வேண்டிய சிறிதளவு உணவாகிலும் வீட்டிலேயே கிடைக்கப் பெறுகிறவனாகவும் எவன் இருக்கிறானோ அவன் சந்தோஷமடைகிறான்.
யட்சன்: எது தினந்தோறும் நடக்கும் நிகழ்ச்சி?
தருமர்: உயிரினங்கள் எமலோகம் சென்று கொண்டே இருப்பது.
யட்சன்: எது ஆச்சரியம்?
தருமர்: உயிரினங்கள் தினந்தோறும் எமலோகம் சென்று கொண்டேயிருப்பதைப் பார்த்தும்கூட, மனிதர்கள் தங்களுக்கு மரணமில்லாதது போல் நினைத்ட்துக் கொண்டு நல்ல கதியை அடைய முயற்சிக்காமலேயே வாழ்நாளைக் கழித்து விடுகிறார்களே - அதுதான் ஆச்சரியம்.
யட்சன்: எவன் புருஷன்?
தருமர்: விருப்பு - வெறுப்பு; சுகம் - துக்கம்; நடந்தது - நடக்க இருப்பது; ஆகிய இரட்டை நிலைகள் எவனுக்கு சரி சமமாக இருக்கின்றனவோ, அவனே புருஷன் எனக் கூறப்படுகிறான்.
யட்சன்: எவன் செல்வம் மிகுந்தவன்?
தருமர்: ஆசையற்று, அமைதியான மனமும் பெற்று, தெளிவான அறிவும் கொண்டு, எல்லாப் பொருள்களையும் சமமாகப் பார்க்கும் மனிதன் எவனோ, அவனே செல்வம் நிறைந்தவன்.
இப்படி கூறிய பதில்களால் திருப்தியுற்ற யட்சன் "யுதிஷ்டிரா! உன் பதில்கள் தெளிவாக உள்ளன. அதற்குப் பரிசாக உன் தம்பிமார்களில் ஒருவரை மட்டும் உயிர்ப்பிக்கிறேன். அவன் யார் என்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது" என்றான்.
தருமர், "நெடிய ஆச்சாமரம் போல வீழ்ந்து கிடக்கும் அழகன் நகுலன் உயிர்பெறட்டும்" எனக் கூறினார். யட்சன் ஆச்சரியமடைந்து, பீமன் அருச்சுனன் ஆகியோரை விட்டு விட்டாயே, உனது அரசைப் பெற அவர்கள் முயற்சி இன்றியமையாததல்லவா"? எனக் கேட்டான்.
தருமர், "யட்சனே, தருமம்தான் முக்கியம். அதற்குத்தான் இறுதி வெற்றி பீமனோ அருச்சுனனனோ அதற்கு முன்னால் ஒன்றுமில்லை. எனது தாயார் குந்தியின் புதல்வனாகிய நான் உயிருடன் உள்ளேன். எனது சிறிய அன்னை மாத்ரியின் பிள்ளை ஒருவனும் பிழைப்பதே தருமம் என" உறுதியாக மறுமொழி கூறினார்.
தருமரது இந்த சொற்களினால் மகிழ்ந்த யட்சன் எல்லோரையுமே உயிர்ப்பித்தான். பிறகு தந்தான் தரும தேவதை என்றும், தனது அம்சமாகிய யுதிஷ்டிரனை பார்த்து சோதிக்கவே வந்ததாகவும் கூறி ஆசியளித்து மறைந்தான்.

அரசமரத்தின் முக்கியத்துவம் என்ன?


அரசமரத்தை காலையில் சுற்றுவது நல்லது. இதன் காற்று மலட்டுத்தன்மை, குஷ்டம் போன்ற நோய்களைத் தீர்க்கும் சக்தியுள்ளது. இந்த மரத்தின் கீழ் நிற்கட்டுமே என்பதற்காகத் தான், விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வைத்து, அவரை வணங்க வரும் சாக்கிலாவது நன்மை கிடைக்கட்டுமே என்று சொல்வார்கள். ஒரு சிலர் அரசமரத்தை "அஸ்வத்த நாராயணர்' என்ற பெயரில் வழிபடுகின்றனர். 

தலை குனிந்த கர்வம்....

பாண்டவர்களின் மனைவி  திரௌபதிக்கு கண்ணனின் மீது கொண்ட பக்தியில் தன்னை மிஞ்ச ஆளில்லை என்று கர்வம் உண்டு. 
வெற்றிக்கு தடையாக இருக்கும் கர்வத்தை அகற்ற எண்ணம் கொண்டார் கண்ணன்.
அப்போது பாண்டவர்கள் திரௌபதியுடன் வனவாசத்தில் இருந்தனர். ஒருநாள் திரௌபதியைத் தேடி வந்தார். அவளுக்கு மிக்க மகிழ்ச்சி. 
அவள் கண்ணனிடம், ""அண்ணா! துவாரகையில் இருந்து எப்படி வந்தீர்கள்? தேர், குதிரை, பல்லக்கு என எதையும் காணவில்லையே,'' என்றாள்.
""தங்கையே! உன்னைப் பார்க்கும் ஆவல் உந்தித் தள்ளியது. தங்கை காட்டுக்கு போனாளே, என்ன ஆனாளோ என்று என் அண்ணன் கொஞ்சமாவது என்னைப் பற்றி அக்கறைப் பட்டானா என்று நீ குற்றம் சொல்வாய். அதனால், நடந்தே இங்கே வந்து விட்டேன்,'' என்றார். அதைக் கேட்டு திரௌபதியின் கண்களில் கண்ணீர் அரும்பியது.
""கால்கள் நோக நடந்தே வந்தீர்களா? அவை எந்தளவுக்கு வலிக்கும். சரி.. சரி... நான் வெந்நீர் போட்டுத் தருகிறேன். நீராடுங்கள். உடல் களைப்பு நீங்கும். கால்களுக்கும் இதமாக இருக்கும்,'' என்றாள். 
கண்ணனும் தலையாட்டினார்.
பீமன் தன் பலத்தையெல்லாம் காட்டி, ஒரு பெரிய கொப்பரையை தூக்கி வந்தான். அதில் வெந்நீர் போட்டால் நூறு பேராவது குளிக்கலாம். அதை ஆற்றில் ஒரே அழுத்தாக அழுத்தி தண்ணீர் எடுத்தான். மூன்று பெரிய பாறைகளை உருட்டி வந்தான். அதை அடுப்பாக்கி, 
கொப்பரையை தூக்கி வைத்தான். ஒரு மரத்தையே ஒடித்து வந்து தீப்பற்ற வைத்தான். ஆனால், மதியமாகியும் தண்ணீர் சுடவில்லை. கண்ணன் தங்கையிடம், ""அம்மாடி தங்கச்சி... வெந்நீர் என்னாச்சு?'' என்றார். 
திரௌபதி கண்கலங்க, ""அண்ணா! ஏனோ இது கொதிக்கவில்லை. மாறாக ரொம்பவும் குளிர்ந்திருக்கிறது,'' என்றாள்.
கண்ணன் பீமனிடம், ""பீமா! அந்த தண்ணீரை கீழே கொட்டு,'' என்றார். பீமனும் கொப்பரையை கவிழ்க்க, உள்ளிருந்து ஒரு தவளை ஓடியது.
""திரௌபதி, விஷயம் இதுதான்! அந்த தவளை சுடு நீரில் சிக்கி மாண்டு விடாமல் இருக்க என்னை வேண்டிக் கொண்டே இருந்தது. அதைக் காப்பாற்றவே இப்படி செய்தேன். இப்போது புரிகிறதா? இந்த சாதாரண தவளையின் பக்தி எவ்வளவு பெரியதென்று!'' என்றார். திரௌபதிக்கு சுரீரென உரைத்தது. 
ஆகா! என் பக்தியே உயர்ந்ததென நினைத்தேன். இந்த தவளையின் பக்தி அல்லவா உயர்ந்தது! ஒரு ஜந்து, கண்ணன் மீது கொண்ட பக்தி காரணமாக உயிர் பிழைத்து ஓடுகிறதே! அதன் பக்தியை என் பக்தி எப்படி உயர்ந்ததாக முடியும்,'' என்று எண்ணி கண்ணீர் வடித்தாள். 
பக்திக்கு கூட கர்வம் கூடாது என்பது புரிகிறதல்லவா!

தெய்வீக கதைகள் 1


அர்சுணனும் கிருஷ்ணனும் ஒருமுறை ஊருக்கு வெளியில் உலாவிக் கொண்டிருந்த போது வழியில் மரத்தடியில் உட்கார்ந்திருந்த ஒரு வயோதிகர் ஏதாவது தர்மம் செய்யும் படி கேட்டார்.அர்சுணன் மனமிரங்கி 1000 பொற்காசுக்களை கொடுக்க, ஆகா இது நம் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்காவது உபயோகப்படுமே என்றெண்ணி சந்தோசத்தோடு வீட்டிற்கு எடுத்து சென்ற வயோதிகரிடமிருந்து, இதை தொலைவிலிருந்து கவனித்த கள்வனொருவன் களவாடி சென்று விட்டான்.சுமார் 10 தினங்கள் கழிந்து மீண்டும் அவ் வழியே வந்த அர்சுணன் இதை கேள்விப் பட்டு, இந்த முறை விலையுயர்ந்த நவரத்தினக் கல்லை கொடுத்து இதையாவது பத்திரமாக வைத்திருந்து வாழ்க்கையை சுகமாக களியுங்கள் என்றான். இந்தமுறை மிகக் கவனத்துடன் அதை வீட்டிற்கு கொண்டு சென்றவன் தன் மனைவி பிள்ளைகளிடம் கூட சொல்லாமல் பரணில் இருந்த ஒரு பானையில் போட்டு வைத்து அவ்வப்போது விட்டில் யாருமில்லா சமயம் மட்டும் எடுத்துப் பார்த்துக் கொண்டு கவனமாக பாதுகாத்து வந்தான்.இதையறியாத அவன் மனைவி ஒருமுறை பரணிலிருந்த அந்த பானையே எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆற்றிற்கு நீரெடுக்கச் சென்றாள். அப்போது பானையை கழுவும் போது அது ஆற்றில் தவறி விழுந்து விட்டது.அவள் நீரெடுத்து வீட்டில் நுழையும் சமயம் வெளியே சென்ற வயோதிகர் அந்த குடத்தை பார்த்து அதிர்ச்சியாகி எங்கே அதிலிருந்த கல் என்று மனைவியை கேட்டான்.ஏது மறியாத மனைவி நடந்ததை கூற, உடனே ஆற்றிற்கு சென்ற அவன் அன்றிரவு வரை தேடியும் பலனின்றி வீட்டிற்கு சோகத்துடன் திரும்பினான்.சிலதினங்கள் கழித்து மீண்டும் கண்ணனும் அர்சுனனும் அவனைப் பார்க்கும் போது, அவன் நடந்ததைக் கூற அர்சுன் கண்ணனிடம் இவன் அதிர்ஷ்டமே இல்லாதவன் என்று கூற அதை ஆமோதித்த கண்ணனும் இந்த முறை நீ இவனுக்கு 2 வராகன்களை மட்டும் கொடு என்றார்.ஆச்சர்யப்பட்டான் அர்சுன், ஆனாலும் 2 காசுகள் மட்டும் கொடுத்து அனுப்பி விட்டு கண்ணனைப் பார்த்து, இதென்ன விந்தை….!வெறும் 2 காசுகள் மட்டும் அவனுக்கு என்ன சந்தோசத்தை கொடுத்து விடும் எனக் கேட்டான்…?எனக்கும் தெரியவில்லை..?என்னதான் நடக்கிறது பார்க்கலாம் வா, அவன் பின்னால் செல்லலாம், எனக்கூறி இருவரும் பின் தொடர்ந்தனர்.அவன் வீட்டடிற்குச் செல்லும் வழியில் மீனவன் ஒருவன் உயிருடன் தான் பிடித்து வைத்திருந்த இரண்டு மீன்களை வாங்கி கொள்கிறாயா என கேட்டான்…?உடனே தனக்குள் யோசித்த இவன் இந்த 2 சாதாரண காசு எப்படியும் தன் குடும்பத்திற்கு ஒருவேளை பசியை கூட போக்காது என எண்ணி அந்த மீன்களை விலை கொடுத்து வாங்கி ஆற்றிலே திரும்ப விட வேண்டும் என்ற முடிவுடன் வாங்கி விட்டான்.அப்படி வாங்கியதில் ஒன்றை ஆற்றில் விட்டு விட்டு அடுத்ததை விடும் முன் அது சுவாசிக்க முடியாமல் அதன் தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பதை பார்த்து மீனின் வாயில் விரலை விட்டு சிக்கியிருந்ததை எடுத்தான். அதைப் பார்த்ததும் பிரமிப்பின் உச்சத்திற்கே சென்றான்.ஆம், அவன் மனைவி ஆற்றில் தவற விட்ட விலையுயர்ந்த கல் தான் அது…! உடனே சந்தோசத்தின் மிகுதியால் என்னிடமே சிக்கி விட்டது என்று கூச்சலிட்டான்.அதே நேரம் யதார்த்தமாக அவ்வழியே, இவனிடம் கொள்ளையடித்த கள்வன் வர அவன் திடுக்கிட்டு, தன்னைத்தான் கூறுகிறான் என்றெண்ணித் திரும்ப ஓடுகையில் கண்ணனும் அர்ச்சுணனும் அவனைப் பிடித்து விட்டனர்.அவன் அனைத்தையும் ஒப்புக்கொண்டு இவனிடம் களவாடியது மற்றுமல்லாது மற்ற காசுகள் மற்றும் அணிகலன்கள் அனைத்தையும் கொடுத்து விட்டான். அதையனைத்தையும் வயோதிகருக்கு கொடுத்து அனுப்பிவிட்டு, ஆச்சர்யப் பட்ட அர்சுணன் கண்ணனிடம் இது எப்படி சாத்தியம் எனக் கேட்க…?கண்ணனும் சிரித்துக்கொண்டே…!இதே வயோதிகர் நீ முன்பு கொடுத்ததை தனக்கும் தன் குடும்பத்துக்கு மட்டுமே எடுத்து செல்ல வேண்டும் என எண்ணினார்.அடுத்து நீ கொடுத்த விலையுயர்ந்த கல்லை தானும் உபயோகிக்காமல் மற்றவருக்கும் பயன்படாமல் ஒளித்து வைத்திருந்தார்.ஆகவே அவையிரண்டும் அவரிடம் தங்கவில்லை.ஆனால் இப்போதோ தன்னிடமிருந்தது மிகக்குறைவானது என்பது தெரிந்தும் தனக்கு உதவாவிட்டாலும் இன்னொரு உயிராவது வாழட்டுமே என தன்னலமில்லாது நினைத்ததால்….!!அவனை விட்டு சென்ற செல்வம் அவனுக்கே கிடைத்தது. இதில் எனது செயல் ஏதுமில்லை எனக் கூறினார்….

நீடுழி வாழ்க! " என்பதன் அர்த்தம்:

"நீடுழி வாழ்க' என்பது, ஒரு ஆசிச் சொல். நீடுழி என்றால் எவ்வளவு காலம்... கலியுகம் முடியும் வரையிலா அல்லது இவன் விரும்பும் வரையிலா ... நீண்ட நாள், நீண்ட காலம் என்று பொதுவாகச் சொல்லி விடலாம். இதையே,"சதமானம் பவதி' என்பர். இதற்கு பொருள் நூறு வயது வாழ வேண்டும் என்பது. நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் மட்டும் போதுமா... அத்துடன் ஆயுள், ஆரோக்கியம், சவுக்கியம் இம் மூன்றையும் கடவுளிடம் வேண்டச் சொன்னார்கள். ஆரோக்கியமாக இருந்தால் பிறருக்கும், தனக்கும் எவ்வித தொந்தரவும் இருக்காது.
கண் தெரியாமலும், காது கேட்காமலும் இருந்த இடத்தை விட்டு நகர முடியாமல், எத்தனை காலம் வாழ்ந்து என்ன பிரயோஜனம்... இவன் எப்போது போவான் என்று தான் வீட்டில் உள்ளோர் அலுத்துக் கொள்வர். "ஐயோ! நான் இப்படி அவதிப்படுகிறேனே... எமன் வரவில்லையே...' என்று, அந்த உயிரும் ஏங்கும். அதனால், ஆரோக்கியம் முக்கியமானது.
அடுத்தது சௌக்கியம்... எல்லாம் இருக்கிறது; தேவையானது கிடைக்கிறது; குறை எதுவுமில்லாத வாழ்க்கை. இது சௌக்கியத்துக்கான அடையாளம். தன் வேலைகளை தானே செய்து கொள்ளும்படியான உடல் நிலை, தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய செல்வ நிலை, பிறர் தயவில்லாமல் நாட்களைக் கழிக்கும் நிலை தான் சௌக்கியம்.
அது மட்டுமல்ல, இது உடம்புக்கு ஒத்துக் கொள்ளும், இது ஒத்துக் கொள்ளாது என்றில்லாமல், எதை சாப்பிட் டாலும் ஜீரணிக்கும் சக்தி, நல்ல தூக்கம், சுறுசுறுப்பு, இதெல்லாம் இருந்து விட்டால், நீடுழி வாழ்வதில் எந்த வித துன்பமும் இருக்காது.
ஆயுளுடன், ஆரோக்கியம், சவுக்கியம் என்ற இரண்டும் கூடவே இருந்து விட்டால், சுகமாக இருந்து விட்டுப் போய் விடலாம். "ஏதோ கடைசி வரையில் நன்றாகவே இருந்தார். யாருக்கும் எந்த உபத்திரவமுமில்லை. காலம் வந்தது போய் விட்டார்' என்பர். அதனால் தான் பட்டத்ரி, குருவாயூரப்பனிடம், "ஆயுள், ஆரோக்கியம், சௌக்கியம் இம் மூன்றையும் தனக்கு மட்டுமல்ல, மற்ற எல்லா பக்தர்களுக்கும் கொடு' என்று வேண்டிக் கொண்டார். பகவானும் ஆமோதித்தாராம். மனிதனுக்கு ஆயுள், ஆரோக்கியம், சௌக்கியம் இம்மூன்றுமே வேண்டும். ஏதாவது ஒன்று குறைந்தாலும், பிரயோஜனமில்லை என்று வேண்டினார். இதனாலே தான் வாழ்த்தும் போது "நீடுழி வாழ்க! " என்று சொல் வழக்கானது.

சிவபெருமான் ரிஷபவாகனம் ஏறுதலின் உண்மை

ரிஷபம், தர்மரூபம். அறம் இடபம் எனப் பட்டதற்குக் காரணம் ('வ்ருஷ ஸேசநே' வர்ஷணாத் ஸர்வகாமாநாம் வ்ருஷப: - என்பது சிவதத்துவரகசியம்) நாம் விரும்பியவற்றை யெல்லாம் கொடுப்பதே.
இவ் விதம் அறத்தைத் தமக்கு ஊர்தியாகச் சிவபெருமான் கொண்டருளினார். அவர் அறவழியில் நடப்போர்க்கு அவரவர் விரும்பியவற்றை அருள்பவரென்னும் உண்மையைப் புலப்படுத்துவதாகும்.
அன்றியும் , சிவபெருமான் திரிபுர விஜய ம் செய்த காலத்துத் தேவர்களாற் கற்பிக்கப்பட்ட தேர்  பூமியில் அழுந்தி வேதப் புரவி கற்பிக்கப்பட்ட தேர் பூமியில் அழுந்தி வேதப் புரவி இழுக்க முடியாது இளைத்ததாகத், திருமால் விடை வடிவமாகச் சிவபிரானைத் தாங்கியமை இலிங்க புராணத்தில் கூறப்பட்டது.
ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகளும்.
'கடகரியும் பரிமாவுந் தேருமுகந் தேறாதே
யிடபமுகந் தேறியவா றெனக்கறிய வியம்பேடி
தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த வந்நாளி
லிடபமதாய்த் தாங்கினான் றிருமால்காண் சாழலோ'
(திருவாசகம் திருச்சாழல்) என்றருளியதனாலும் அவ்வுண்மை தெளியப்படும்.