Thursday, May 31, 2012

அருணாசல கவிராயர்



ஸ்ரீமத் ராமாயணத்தை ஆதிகவி வால்மீகி வடமொழியில் எழுதினார். கம்பர் கவிநயம் சொட்ட தமிழில் இயற்றி அதை ஸ்ரீரங்கப்பெருமாள் முன்பாகவே அரங்கேற்றினார். துளசிதாசர் இந்தி மொழியில் ராமாயணத்தை எழுதினார். குலசேகர ஆழ்வார் போன்றவர்களும் பக்திச் சுவை ததும்ப ராமனைப் பாடி இன்புற்றார்கள். ஒவ்வொருவர் பக்தி ஒவ்வொரு விதம். இசையால் இறைவனை அடைந்துவிடலாம். இசை மூலம் பரந்தாமனைப் பணிந்தவர்கள் பலர். சுவையான தமிழில் ராமபிரானைப் பாடி அவர் அருளைப் பெற்றவர்களுள் அருணாசலக் கவிராயரும் ஒருவர். ஞானசம்பந்தருக்கு அம்பிகை ஞானப்பால் அருளிய சீர்காழியில் பிறந்தவர் அருணாசலக் கவிராயர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டதால் சகோதரனின் ஆதரவில் வளர்ந்தார். ஏழ்மையான குடும்பம். அருணாசலத்திற்கு இசையில் ஆர்வம் அதிகமாக இருந்தது; நல்ல குரல் வளமும் இருந்தது. தமையனின் வார்த்தைக்குப் பணிந்து, அந்த ஊரிலிருந்த அம்பலவாணக் கவிராயரிடம் சைவத் திருமுறைகளையும், வடமொழியையும், தமிழ் சாத்திரங்களையும் கற்று வந்தார். இசையில் ஆர்வம் அதிகம் இருந்ததால் எல்லாவற்றையும் பாடலாக மாற்றிப் பாடுவதில் மிகவும் விருப்பம் கொண்டிருந்தார்.
நீராடுவதற்கு நதிக்குச் சென்றால், தனிமையில் இருந்து தன் இனிமையான குரலில் பாடி மகிழ்வார். நேரம் போவது தெரியாமல் பாடிக் கொண்டிருப்பார். அருணாசலத்தின் இறை பக்தியையும் இனிய குரலையும் கண்ட தருமபுரம் ஆதீனம், அவரை துறவு கொள்ளச் செய்து இறைப்பணியில் ஈடுபடுத்த விழைந்தார். ஆனால் அருணாசலத்தின் தமையன் அதற்கு சம்மதிக்கவில்லை. அருணாசலம் கம்ப ராமாயணத்தை மிகுந்த ஆர்வமாகப் படித்தார். எப்போதும் ராம சிந்தனையுடனேயே இருந்தார். ராமனை இசையால் பாடி இன்புற வேண்டும் என்று மனம் துடித்தது. ஒருநாள் இரவு அருணாசலம் கனவில் ஒரு தெய்வீகக் காட்சியைக் கண்டார். கோதண்டத்தை ஏந்திய ராமபிரானும் லட்சுமணனும் தரிசனம் தந்து, ராமாயணத்தை கர்நாடக இசையில் பாடு என்று சொல்லி அருள்பாலித்தார்கள். அருணாசலத்திற்கு மேனி சிலிர்த்தது. கண்களில் நீர் வழிந்தது. அடுத்த வினாடியே அவருடைய மனதில் இசை பிரவாகமாகப் பொங்கிற்று. யாரோ இவர் யாரோ என்ன பேரோ அறியேன் என்ற பாடல் இசை வடிவில் வந்தது. ஸ்ரீராமன் மிதிலா நகருக்குள் வரும்போது, கன்னி மாடத்திலிருந்த சீதாதேவி தன் தோழிகளிடம் கேட்பதாக அமைந்தது இந்தப் பாடல். தன் மனதிற்குள் சுந்தர ரூபமான ஸ்ரீராமனை அனுபவித்துப் பாடிய பாடல்.
இயல், இசை, நாடக நூல்களை 12 ஆண்டுகள் முழுமூச்சாகக் கற்றார் அருணாசலம். அவர் வாலிப வயதை அடைந்தவுடன், அவருடைய தமையன் தனக்குத் தெரிந்த சீலமுள்ள குடும்பத்துப் பெண்ணை திருமணம் செய்து வைத்தார். அருணாசலத்திற்கு கடை ஒன்றை வைத்துக் கொடுத்தார் பெண்ணின் தந்தை. பகல் வேளைகளில் வியாபாரத்தை கவனிப்பார். இரவில் புராண பிரவசனம் செய்வார். அருணாசலத்தின் பிரவசனத்தைக் கேட்க மக்கள் திரளாகக் கூடினார்கள். இனிமையான குரலில் அவர் ராமாயணத்தை இசையுடன் பாடிச் சொல்லும் போது, மக்கள் மெய்மறந்து கேட்பார்கள். அருணாசலம் குறிப்பு எதுவும் எடுப்பதில்லை. ஸ்ரீராமரை தியானித்து மேடையில் வந்து அமர்ந்தவுடன், அவரிடமிருந்து அருவியாகப் பாடல்கள் அமுதம் போன்று கொட்டும். அருணாசலத்தின் முகத்தில் ஒரு தெய்வீக ஒளி பிரகாசிக்கும். நெற்றியில் திருநீறு, தூய வெள்ளை ஆடை, கழுத்தில் துளசிமாலை. தியாகராஜ சுவாமிகள் ராமனை எப்படி அனுபவித்தாரோ அப்படியே அருணாசலமும் அனுபவித்தார். நாளுக்கு நாள் அருணாசலத்தின் புகழ் கூடியது. சீர்காழிக்கு அருகிலுள்ள சட்டநாதபுரத்திலிருந்து கோதண்டராமன், வேங்கடராமன் என்ற இளைஞர்கள் தவறாமல் அருணாசலத்தின் பிரவசனத்தைக் கேட்க வருவார்கள். அருணாசலத்தின் இசையிலும், புராணம் சொல்லும் அழகிலும் தங்கள் மனதைப் பறிகொடுத்தார்கள். அவர்கள் அருணாசலத்தை நமஸ்கரித்து, ஐயா, உங்கள் இசையில் நாங்கள் கட்டுண்டோம். நீங்கள் எங்களுக்கு ராமாயணப் பாடல்களைக் கற்றுத் தரவேண்டும். உங்கள் பாடல்களின் நகல் வேண்டும் என்று பணிவோடு வேண்டினார்கள். அருணாசலம் மகிழ்ந்து அவர்களுக்கு இசையுடன் ராமாயணப் பாடல்களைக் கற்றுக் கொடுத்தார். ராமகதையை தானும் அனுபவித்து அவர்களையும் அனுபவிக்கும்படி செய்தார்.
பிறந்தது முதல் சீர்காழியை விட்டு எங்குமே செல்லாதபோதிலும், அயோத்தியையும், சரயு நதியையும், தண்டகாரண்யத்தையும், கோதாவரி நதியையும் அப்படியே கண்முன்னே கொண்டு நிறுத்தி விடுவார். ஒருநாள் ராமாயண பிரவசனம் சொல்லும்போது, ராமர் காட்டுக்குப் போகும் கட்டத்தில் கைகேயி கோபித்துக் கொண்டு மந்தரையிடம் பாடிய, ராமனுக்கே மன்னன் முடிசூட்டினால் என்ற பாடலைத் திரும்பத் திரும்ப பாடி மெய்சிலிர்த்துப் போனாராம். லட்சுமணன் பொங்கி எழும்போது, நானே ராமனுக்கு முடி சூட்டுவேன் என்று ஆவேசமாகப் பாடியபோது, சபையில் உள்ள அனைவரும் வெலவெலத்துப் போனார்களாம். லட்சுமணனின் சீற்றமும் வில்லின் நாண் ஒலியும் அவரது பாடலில் வெளிப்பட்டதாம். ஸ்ரீராமபிரானைப் பற்றி ராமநாடக கீர்த்தனைகளை நாற்பது ராகங்களில் பாடினார். தவிர தனிப்பாடல்களும் பாடினார். அத்தனை பாடல்களும் மனதை உருக்கும்படியாக அமைந்தன. சரணம், சரணம் ரகுராமா, நீ என்னை தற்காத்து அருள் பரந்தாமா போன்ற பாடல்களை பக்தி ததும்ப பாடியுள்ளார். ராமாயணம் முழுவதையும் பாடலாகப் பாடினார். இவர் இயற்றிய, ஸ்ரீராமச்சந்திரனுக்கு ஜெயமங்களம், திவ்யமுக சந்திரனுக்கு சுபமங்களம் என்ற பாடல் எல்லாரையும் மிகவும் கவர்ந்தது. பல வித்வான்கள் கச்சேரிகளில் இவரது பாடல்களைப் பாடினார்கள். எப்போதுமே கவிஞர்களுக்கு சோதனை உண்டு. கம்ப ராமாயணத்தை கம்பர் அரங்கேற்றும்போது எதிர்ப்பு தெரிவித்தனர். பெருமாள் உத்தரவு கொடுத்தால்தான் அரங்கேற்றம் நடக்கும் என்று கண்டிப்பாகச் சொன்னார்கள்.
அருணாசலக் கவிராயர் ராமனிடமே தஞ்சம் ஆனார். ஸ்ரீராமனை நினைத்து உருகி, ஏன் பள்ளி கொண்டீரய்யா ஸ்ரீரங்கநாதனே என்று மோகன ராகத்தில் மனம் கசிந்து பாடி உருகினார். அந்தப் பாடலில், விச்வாமித்திரர் பின் நடந்த வருத்தமோ என ஆரம்பித்து, ராவணவதம் முடிய ராமாயணத்தில் உள்ள அத்தனை சம்பவங்களையும் பாடி முடித்தார். இறைவன் அருணாசலத்தின் பக்தியோடு கூடிய இசையைக் கேட்டு அருள்புரிந்தார். வைணவ ஆச்சார்யர்களின் கனவில் திருமாலே வந்து அரங்கேற்ற நாளைச் சொல்லி மறைந்தார். கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய அதே பங்குனித் திருநாளில் அருணாசலக் கவிராயரின் ராம நாடக கீர்த்தனைகளும் மிகச் சிறப்பாக அரங்கேறியது. புதுவையில் துபாஷாக இருந்த அனந்தரங்கம் பிள்ளை, கவிராயரை வரவேற்று சிறப்புக்கள் செய்தார். மணலிமுத்துக் கிருஷ்ண பிள்ளை என்பவர் கவிராயரின் பாடல்களைப் பிரபலம் செய்தார். நாடெல்லாம் ஒலிக்க வேண்டிய நாத காவியம் என்று பாராட்டினார். அருணாசலக் கவிராயரின் பாடல்கள் இன்றும் சங்கீத வித்வான்களால் பாடப்படுகிறது. நாமும் கவிராயரது பாடல்களைப் பாடி, ஸ்ரீராமனின் அருளைப் பெறுவோம்.

கிருஷ்ண சைதன்யர்


விருந்தாவனம்.. டில்லி அருகிலுள்ள ஒரு கிராமம். இங்கு மட்டும் இப்போது 5 ஆயிரம் கிருஷ்ணர் கோயில்கள் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இங்கே கிருஷ்ணருடன் ராதையும் எழுந்தருளியிருக்கிறாள். இந்தளவுக்கு ராதையின் மீது கிருஷ்ணருக்கு என்ன பிரியம்? இவ்வுலகில் எத்தனையோ காதலர்கள் உள்ளனர். ஒவ்வொரு கணவன் மனைவியும் கூட காதலர்களே. இவர்களெல்லாம் பகலில் பணத்தைப் பற்றி பேசுகிறார்கள். இரவில் சுகத்தைப் பற்றி பேசுகிறார்கள். இது தான் வாழ்க்கை; இந்த சக்கரம் ஒழுங்காக உருண்டு ஓடினாலே போதும் எனக் கருதுகிறார்கள். இவர்கள் நூறாண்டுகளே வாழ்கிறார்கள் என வைத்துக் கொள்வோமே. ஒரு நாளாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கும். வள்ளுவரின் மனைவி வாசுகி கணவர் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாமல் தான் இருந்தார். ஆனால், அவர்கூட வாழ்வின் கடைசி நாளில், அவர் செய்த சில செய்கைகள் பற்றி கேள்விகள் கேட்டாராம். ஆனால், ராதா அப்படியல்ல. அவள் பேசினால் கண்ணன் பேசியததாகத் தான் நினைப்பாள். பாடினால் கண்ணன் பாடியாகத்தான் நினைப்பாள். சாப்பிட்டால் கண்ணன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகத் தான் கருதுவாள். அவளது நெஞ்சம் அந்த பரந்தாமனுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது. பிறந்தது முதல் கண் விழியாமலே இருந்த அவள், கண்ணனை அவரது அன்னை அவளது வீட்டுக்கு எடுத்து வந்த போது தான் முதன் முதலாக கண்ணைத் திறந்து பார்த்தாளாம். அதன்பிறகு அவரது திருவடிகளைத் தவிர வேறெந்த நினைப்புமில்லை. அவளது இதயம் கிருஷ்ணா என்ற நான்கெழுத்து மந்திரத்தில் மூழ்கிக் கிடந்தது.
கிருஷ்ண பரமாத்மாவுக்கோ அவளது பிரேமையை மதிப்பிட அளவுகோலே கிடைக்கவில்லை. ஊரில் எல்லாரையும் சோதிக்கும் அந்த பரந்தாமனுக்கு அவளுக்கு சோதனை கொடுக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவருக்கு அவளது காதல் மீது பொறாமையே ஏற்பட்டு விட்டது. இப்படி ஒருத்தி நம்மைக் காதலிக்கிறாளே... நம்மை அடையத் துடிக்கிறாளே...இவள் தரும் அன்பை என்னால் தாங்கவே இயலவில்லை. இவள் தரும் காதல் சுவையை நான் அனுபவிக்கிறேன். அனுபவிக்கும் எனக்கே இவ்வளவு சுகம் என்றால், அதைக் கொடுக்கும் உனக்கு, எவ்வளவு சுகமாய் இருக்கும். அதை அனுபவித்து உணர்ந்து கொள்ளப் போகிறேன். அது மட்டுமல்ல. உலகத்து மக்களெல்லாம் என்னை அடையத் துடிக்கிறார்கள். என்னை அடைவதே இன்பமென கருதுகிறார்கள். அப்படி என்ன இன்பம் அதில் இருக்கிறது என்பதையும் அனுபவித்து தெரிந்து கொள்ளப் போகிறேன், என்று தமக்குள் அங்கலாய்த்தார். அது மட்டுமல்ல! கிருஷ்ணர் இப்பூமியில் அவதரிக்க துடித்தமைக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது. இந்த கலியுகத்தில், இவ்வுலகில் இனி மந்திரங்கள் எடுபடாது. பகவத்கீதை படிக்க நேரமிருக்காது. உலகம் ஏதோ ஒரு சுகத்தை நோக்கி நடை போடும். பகவந்நாமா சொல்ல ஆளிருக்காது. இறைவணக்கத்தை எளிமைப்படுத்தி, நாம சங்கீர்த்தனம் என்னும் புதிய சமயத்தை படைக்க வேண்டும். அதன் மூலம் பக்தியைப் பரப்ப வேண்டும் என்பதும் அவரது நோக்கமாயிற்று.
இதற்காக அவர் பூமிக்கு புறப்பட்டார். யார் வயிற்றில் பிறப்பது என யோசித்தார். சாந்திபுரா என்ற இடத்தில் அத்வைத ஆச்சாரியார் ஒருவர் இருந்தார். இவரது இல்லத்தில் தினமும் ஏராளமான பக்தர்கள் கூடுவர். கீதை, பாகவதம் ஆகியவற்றில் இருந்து கருத்துரைகளை ஆச்சாரியார் எடுத்துக் கூறுவார். அங்கு வரும் பக்தர்கள் கிருஷ்ணரைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள். ஆச்சாரியாருக்கு இதிலெல்லாம் திருப்தி ஏற்படவில்லை. இந்த உலக மக்கள் அனைவருமே கிருஷ்ணரைப் பற்றி சிந்திக்க வேண்டும். பிறப்பு இறப்பு இல்லாத ஆனந்த நிலையை அடைய வேண்டும். எல்லாருமே கிருஷ்ணருள் கலக்க வேண்டும், என தனக்குள் சொல்லிக் கொண்டார். ஒருமுறை கௌடாமியா தந்த்ரா என்ற நூலில் சொல்லப்பட்டிருந்த ஒரு வாசகத்தை வாசித்தார். யார் ஒருவன் அபரிமிதமான பக்தியுடன் கிருஷ்ணருக்கு வெறும் துளசி இலையையும், கையளவு தண்ணீரையும் கொடுக்கிறானோ, அவனிடம் பகவான் தன்னையே விற்றுக் கொள்கிறார், என்பதே அந்த வாசகம்.
ஆஹா...எவ்வளவு எளிமையான வழிபாடு. கங்கைக் கரையிலே எவ்வளவோ துளசி செடிகள் உள்ளனவே. அவற்றை பறித்து அவருக்கு அர்ப்பணம் செய்வதைத் தவிர வேறென்ன வேலை. கிருஷ்ணா! இப்பூமிக்கு வந்து அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்களை ஆட்கொள்ள வேண்டும், என வேண்டினார். தினமும் துளசி இலைகளைப் பறித்து வந்து பூஜைகளைச் செய்தார். பகவான் பூமிக்கு வர வேண்டுமென நினைத்தாலும், யாராவது ஒருபக்தன் அழைத்தால் தானே வருவார்! நாராயணா இந்த தூணுக்குள் இருந்து வெளியே வா என பிரகலாதன் அழைத்ததால் தானே நரசிம்ம மூர்த்தியாய் அவர் எழுந்தருளினார். அதுபோல் ஆச்சாரியாரின் துளசி கைங்கர்ய அழைப்புக்கு பகவான் கட்டுப்பட்டார். உபேந்திர மிஸ்ரா என்ற அந்தணரின் குடும்பத்தில் அவதாரம் செய்ய முடிவெடுத்தார். இவர் கிருஷ்ணாவதார காலத்தில் கிருஷ்ணரின் தாத்தாவாக இருந்த பர்ஜன்யரின் மறுபிறவி என கருதப்பட்டார். இவருக்கு ஏழு மைந்தர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் ஜெகந்நாத மிஸ்ரா. இவர் இன்றைய மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியா நகரில் வசித்து வந்தார். இவ்வூர் கங்கைக்கரையில் உள்ளது. இவர் நீலாம்பர சக்ரவர்த்தி என்பவரின் மகள் சச்சிதேவியை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதியர் தீராத சோகத்தில் மூழ்கியிருந்தனர். ஏன்...இவர்களுக்கு பிறந்த எட்டு பெண் குழந்தைகளும் இறந்து விட்டன என்றால் எந்தப் பெற்றவர்களைத் தான் வருத்தம் வாட்டி எடுக்காது?

Saturday, May 26, 2012

அவுர்வர்

அவுர்வர் என்ற சொல்லுக்கு தொடையிலிருந்து பிறந்தவர் என்று பொருள். இவரைப் பெற்ற தாய் தியாகத்தின் சின்னமாகத் திகழ்ந்தவள். எல்லாரும் வயிற்றில் பத்து மாதம் தான் கருவை சுமப்பார்கள். ஆனால், இந்த தாய் இவரை சில வருடங்கள் சுமந்தார். வயிற்றில் இருந்தால் ஆபத்து என்பதால் தனது தொடையில் வைத்து கருவை காப்பாற்றினார் என புராணங்கள் சொல்கின்றன. அவுர்வரின் தந்தை அப்நவாநர். பிருகு மகரிஷியின் வம்சத்தில் தோன்றியவர். மிகப்பெரிய ரிஷி. அப்நவாநர் பற்றிய தகவல்கள் புராணங்களில் அதிகமாக கிடைக்கவில்லை. பெரும்பாலும் இவர் தனிமையையே விரும்புவார். தவவலிமை அதிகம் உள்ளவர். ஆயினும், மிகுந்த பொறுமை உள்ளவர் என்பதால் தன் தவவலிமையை தவறான வழியில் பயன்படுத்துவதில்லை. யாரையும் சபித்ததும் இல்லை. இவர் மீது எல்லா ரிஷிகளும் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தனர். இந்த சமயத்தில் தங்கள் வளர்ச்சிக்கு தடையாக இருந்த பிருகு வம்சத்தாரை க்ஷத்திரியர்கள் கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். அப்நவாநரும் பிருகு வம்சத்தை சேர்ந்தவர் என்பதால் அவரைத் தேடி அலைந்தனர். ஆனால், அவர் கிடைக்கவில்லை. பிருகு வம்ச பெண்கள் கருவுற்றிருந்தால் அவர்களை கொல்லவும் க்ஷத்திரியர்கள் தயங்கவில்லை. அவுர்வரின் தாயும் கர்ப்பமானாள். அவளைக்கொல்ல க்ஷத்திரியர் படை அலைந்தது. மறைந்து வாழ்ந்த இந்த பெண்மணி தனது வயிற்றில் இருந்த கருவை தனது சக்தியாலும், பதிபக்தியாலும், குழந்தை பாசத்தாலும் தொடைக்கு கொண்டு வந்துவிட்டாள். க்ஷத்திரிய படையினரும் இவளைக் கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் வயிற்றில் கர்ப்பம் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. உடையால் தொடையை மறைந்திருந்ததால் அங்கு கர்ப்பம் தங்கியிருப்பதை அவர்களால் அறிந்தகொள்ள முடியவில்லை. அவர்களிடம் தப்பித்த அந்த பெண் அவுர்வரை பெற்றெடுத்தாள்.
அவுர்வர் இளவயது முதலே வேத சாஸ்திரங்களில் சிறந்து விளங்கினார். தனது மூதாதையர் பலர் க்ஷத்திரியர்களால் கொல்லப்பட்டதை அறிந்து ஆவேசம் கொண்டார். அவர்களை பழிவாங்க முடிவெடுத்தார். உலகில் ஒரு மனிதன் கூட உயிர்வாழ முடியாத அளவிற்கு அவர் தவம் செய்தார். அந்த தவத்தின் வலிமையால் பிரபஞ்சமே நடுங்கியது. க்ஷத்திரியர்கள் தங்கள் கண்பார்வையை இழந்துவிட்டனர். இதைப்பார்த்த அவுர்வரின் முன்னோர்கள் மொத்தமாக வந்து சேர்ந்தனர். குழந்தை அவுர்வா ! நீ இந்த உலகத்தின் மீது கோபப்படுவதில் அர்த்தமில்லை. இந்த உலக வாழ்க்கை வேண்டாமென நாங்கள்தான் முடிவெடுத்தோம். எனவே க்ஷத்திரியர்கள் மூலமாக எங்களை நாங்களே அழித்துக் கொண்டோம். அதற்குரிய முன்னேற்பாடுகளை நாங்களே செய்து கொண்டோம். திட்டமிட்டு செய்யப்பட்ட இந்த செயலுக்காக நீ கோபமோ, வருத்தமோ அடையவேண்டாம். இதற்கு க்ஷத்திரியர்களை பொறுப்பாளிகள் ஆக்கமுடியாது. எங்கள் ஆசை எல்லாம் இந்த பூலோகத்தை துறந்து புண்ணிய லோகத்திற்கு செல்ல வேண்டும்என்பதே ஆகும். ஒருவன் தற்கொலை செய்துகொண்டால் அவன் புண்ணியலோகத்தை அடைய முடியாது. எனவே தற்கொலை முடிவுக்கு வராமல் நாங்களே அழிந்துபோகும்படியாக க்ஷத்திரியர்களின் மனதில் எங்களை அழிக்க வேண்டும் என்ற விபரீத எண்ணத்தை உருவாக்கினோம். அதன்படியே இது நடந்தது, என்றனர். இதைக்கேட்ட பிறகுதான் அவுர்வருக்கு ஓரளவு கோபம் தணிந்தது.
அவர் தனது முன்னோர்களிடம், ஒருவனுக்கு கோபம் வந்துவிட்டால் அதை நியாயமான காரணங்களால்கூட அடக்கிவிட முடியாது. தனது கோபத்தை அவன் வெளிப்படுத்தியே தீருவான். க்ஷத்திரியர்கள் மீது தவறு இல்லை என உங்கள் மூலமாக நான் தெரிந்து கொண்டாலும், அவர்கள் மீதான கோபம் முழுமையாக தீரவில்லை. எனவே என் கோபத்தை எந்த இடத்தில் சென்று தணிப்பது ? என்று கேட்டார். அதற்கு முன்னோர்கள், இங்கிருந்து சில மைல் தூரம் செல். பெரிய கடலை பார்ப்பாய். அந்த சமுத்திர வெள்ளத்தில் உனது கோபத்தை விட்டுவிடு. உனக்கு தெளிந்த மனம் கிடைக்கும் என்றனர். அதன்படியே அவுர்வர் சமுத்திரத்திற்கு சென்று தனது கோபக்கனலை அதில் செலுத்தினார். அவரது மனம் தெளிவடைந்தது. இப்போதெல்லாம் அமாவாசை காலங்களில் கடலில்சென்று நீராடுகிறோம். இதற்கு காரணம் நமது பித்ருக்களை மனம் குளிர வைக்கத் தான். அவுர்வரும் தனது பித்ருக்கள் சொன்னபடி கடல் நீராடி மனத்தெளிவு பெற்றார். அவரது கோபம் தணிந்தபிறகு பார்வை இழந்த க்ஷத்திரியர்கள் அனைவரும் அவர் முன்னால் வந்தனர். தங்கள் தவறுக்கு மன்னிப்பு கேட்டனர். அவர்களிடம், அவுர்வர், மனதில் கெட்ட எண்ணங்களே உருவாகக்கூடாது. எதிரியாக இருந்தாலும் அவனை அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள். தவறு செய்பவர்களை திருத்துவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், கொல்வதற்கு தெய்வ சட்டத்தில் இடம் இல்லை என்றார். அவரது அறிவுரையை க்ஷத்திரியர்கள் ஏற்றனர். இந்த அவுர்வர்தான் ரிசீகர் என்று சொல்லப்படுகிறார். இவரது மகன்தான் ஜமதக்னி முனிவர். ஜமதக்னியின் மகன் தான் பரசுராமர். மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டவர் அவுர்வர். அவுர்வரின் வரலாற்றைப் படித்த நாம் எதிரிகளுக்கு கூட துன்பம் செய்யாமல் வாழக் கற்றுக்கொள்வோம்

ரிஷ்ய சிருங்கர்

ஒரு காலத்தில் ரிஷ்யசிருங்கர் என்ற முனிவர் இருந்தார். இவரது காலடி எங்கு பட்டாலும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விடும் என்கிறது புராணம். இவரது வரலாற்றை வால்மீகி முனிவர் சுவைபடச் சொல்லியிருக்கிறார்.
விபண்டகர் என்ற முனிவர் மகாகீர்த்திமான். யாக, ஹோம காரியங்களில் மிக மிக சிறந்தவர். அவரது புத்திரன் ரிஷ்யசிருங்கர். தாய் முகம் அறியாதவர். பிறந்தது முதல் தந்தையை மட்டுமே தெரியும். மழை இல்லாத இடத்தில் அவர் காலடி பட்டாலே போதும். வானம் பொத்துக் கொண்டு ஊற்றும். இவர் பிறந்தது முதல் காட்டிலுள்ள தங்கள் ஆசிரமத்திலேயே வசித்தார். தந்தையும், மகனும் மட்டுமே அங்கு வசித்தனர். அவரது நண்பர்களெல்லாம் காட்டில் வசிக்கும் சிங்கம், புலி, கரடி, மான்கள், மற்ற விலங்குகள் மட்டுமே. இதைத்தவிர வேறு எந்த உலகப் பொருளையும் அறியாதவர் அவர். தந்தையைத் தவிர பிற மனித முகங்களை அவர் பார்த்ததே இல்லை. தந்தைக்கு சேவை செய்வது மட்டுமே இவரது பணி. யாகம், ஹோம முறைகளை தந்தையார் மகனுக்கு கற்றுக் கொடுத்தார். தந்தையார் கொடுக்கும் கனிவகைகள், எப்போதாவது தயாரிக்கும் பட்சண வகைகளைத் தவிர வேறு எந்த உணவையும் பற்றி தெரியாதவர். ஆசை என்ற சொல்லையே அறியாதவர். எனவே, பாவங்கள் செய்ய வழியே இல்லாத <உத்தமராக இருந்தார். இப்படிப்பட்ட அப்பழுக்கற்றவரின் காலடிகள் பட்ட இடத்தில் மழை கொட்டுவதில் வியப்பென்ன! இந்நிலையில் தான் அங்கதேசத்து அரசன் ரோமபாதன் மழையின்றி நாட்டு மக்கள் வாடுவதைக் கண்டு தானும் வாட்ட முற்றான். என்னவெல்லாமோ யாகங்கள் நடத்திப் பார்த்தான். வருண பகவான் மசியவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல, பத்தாண்டுகள் மழை தொடர்ந்து பொய்த்து விட்டது. குளங்களில் தேக்கி வைத்த தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தியும் வற்றி விட்டது. மக்கள் இடம் பெயர முடிவெடுத்தனர். அரசன் அவர்களைச் சமாதானம் செய்தான். சிறிதுகாலம் பொறுத்திருக்க வேண்டினான். எப்படியேனும் மழை பெய்ய வைக்க பூஜைகள் நடத்த உறுதியளித்தான். அமைச்சர்களையும், அவ்வூரில் மிகச்சிறந்த பிராமணர்களையும் அழைத்து ஆலோசித்தான். அவர்கள் ரிஷ்யசிருங்கர் பற்றி தாங்கள் கேள்விப்பட்டதைக் கூறினர். அந்த மகான் நம் ஊருக்குள் நுழைந்தாலே, மழை கொட்டிவிடும். ஆனால், அதற்காக ஒரு பிரதி உபகாரம் செய்ய வேண்டும், என்றனர். மழைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதாக மன்னன் வாக்களித்தான்.
அரசே! ரிஷ்ய சிருங்கரை எவ்வகையிலாவது அழைத்து வருவது எங்கள் பொறுப்பு. ஆனால், அவருக்கு உங்கள் மகள் சாந்தையை கன்னிகாதானம் செய்து தர வேண்டும். சம்மதமா? என்றனர். காட்டுவாசியாக இதுவரை காலம் கழித்த முனிவருக்கு பெண் கொடுக்க எனக்கு எப்படி மனம் வரும்? அதிலும் நாட்டின் இளவரசியை மணம் செய்து கொடுப்பதென்றால்... என்றெல்லாம் அரசன் பேசவில்லை. முழு மனதுடன் சம்மதித்தான். எனக்கு நாட்டு மக்களின் சுகம் தான் முக்கியம். என் குடும்ப சுகம் அதற்கு பிறகு தான். சாந்தையை உறுதியாக முனிவருக்கு திருமணம் செய்து வைக்கிறேன், என சத்தியம் செய்தான். இதன்பிறகு முனிவரை அழைத்து வர யார் செல்வது என்ற சிக்கல் ஏற்பட்டது. பிற மனித முகங்களையே கண்டறியாத அந்த மகானை தாங்கள் போய் அழைத்தால் வரமாட்டார் என அமைச்சர்களுக்கு தோன்றியது. பிராமணர்களும் அவரை அழைத்து வரத் தயங்கினர். அவர்கள் ஒரு உபாயம் செய்தனர். இவ்வுலகில் பெண்ணால் ஆகாதது எதுவுமில்லை. எனவே தாசிகளை அனுப்பி அவரை மயக்கி அழைத்து வருவதென்று முடிவு செய்யப்பட்டது. தாசிகள் காட்டிற்கு அனுப்பப்பட்டனர். சந்தனம், அகில், வாசனைத் திரவியங்கள் பூசி, அலங்காரம் செய்து, மனதை மயக்கும் அழகுடன், அந்நாட்டிலேயே மிகச்சிறந்த தாசிப் பெண்கள் காட்டிற்கு சென்றனர். அவர்கள் விதவிதமான பட்சணங்களையும் தயாரித்திருந்தனர். காட்டிற்கு சென்ற தாசிகள் ரிஷ்யசிருங்கரின் தந்தை எங்காவது வெளியே போகட்டும் என ஒளிந்து காத்திருந்தனர். அவர்கள் நினைத்தது போலவே, விபண்டகர் வெளியே போய் விட்டார். அந்தப் பெண்கள் இதுதான் சமயமென்று ஆஸ்ரமத்திற்குள் சென்று, முனிவரைப் பணிவாக வணங்கினர். ரிஷ்யசிருங்கருக்கு ஆச்சரியம். உலகத்தில் இத்தனை அழகான ஜீவன்கள் இருக்கிறதா? இவையெல்லாம் நம்மைப் போல் இல்லையே. கண், காது, மூக்கு, கை, கால்கள் அப்படியே இருக்கிறது. ஆனால், உடை மாறியிருக்கிறது. இன்னும் சில வேற்றுமைகள் தென்படுகின்றன. இவர்கள் உடலில் நறுமணம் கமழ்கிறது, என ஆச்சரியப்பட்டார். அப்பெண்களை அவர் உபசரித்தார். ஆஸ்ரமத்திலுள்ள கனிகள், கிழங்குகளைக் கொடுத்தார். அவர்களுக்கு பூஜை செய்தார். அப்பெண்களும் பதிலுக்கு தாங்கள் கொண்டு வந்த பட்சணங்களைக் கொடுத்து சாப்பிடும்படி வேண்டினர். அவர் சாப்பிட்டுப் பார்த்தார். தினமும் ஒரே வகையான பழமும், கிழங்கும் தின்றவருக்கு இந்த பட்சணங்கள் தேனாய் சுவைத்தன. ருசியோ ருசி.
தன்னை மறந்த நிலையில் இருந்த சிருங்கரிடம், மகாமுனிவரே! தாங்கள் எங்களுடன் எங்கள் ஆஸ்ரமத்திற்கு வாருங்கள். அங்கு வந்தால், வித விதமான பட்சணங்கள் கிடைக்கும், என்றனர். ரிஷ்யசிருங்கர் ஒரு வித்தியாசமான உலகம் எங்கோ இருப்பதைப் புரிந்து கொண்டார். தந்தை வரும் முன் கிளம்புவது உசிதமென அப்பெண்கள் தாபத்துடன் தூபம் போட, அவர் அங்கதேசத்துக்கு கிளம்பினார். அந்நாட்டு எல்லையில் நுழைந்தாரோ, இல்லையோ, மழை ஊற்றித் தள்ளியது. பத்து ஆண்டுகளாக தலைமறைவான மழை, ஒரே நாளில் கொட்டி தீர்த்து விட்டது. மக்கள், மன்னன் மகிழ்ந்தனர். கால்நடைகள் குதித்தாடின. சிறுவர்கள் மழையில் நனைந்து விளையாடினர். மன்னன் ரிஷ்யசிருங்கரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான். தங்கள் நிலையை எடுத்துச் சொன்னான். ஒரு நல்ல காரியத்திற்காக தாசிகளை அனுப்பி உங்களை வரவழைக்க வேண்டியதாயிற்று. இதற்காக எங்களை மன்னிக்க வேண்டும். தங்களைப் போன்ற தவசீலர்கள் அவர்களிடம் நட்பு கொள்ளாலாகாது. தாங்கள் என் மகள் சாந்தையை திருமணம் செய்து கொள்ள வேண்டும், என்றான். உலகம் என்றால் இன்னதென்று அறிந்து கொண்டு, நீண்ட நாட்களாக அங்கு தங்கியிருந்த முனிவர், சாந்தையை திருமணம் செய்து சுக வாழ்வு வாழ்ந்தார். அந்நாடு என்றும் செழித்திருந்தது. ரிஷ்ய சிருங்கரின் கதையைப் படித்த நாமும் நம் தமிழகத்தில் தேவையான மழை கொட்டுமென நம்புவோம்.

Friday, May 25, 2012

குள்ளச்சாமி

பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்தபோது அவருக்கு ஞானகுருவாக விளங்கியவர் குள்ளச்சாமி. வண்ணான் தொழில் என்ற தலைப்பில் பாரதியார் அவரைப் பற்றி எழுதியிருக்கிறார். அவருக்கு நூறு வயதாகிவிட்டது என்றும் பார்ப்பதற்கு நாற்பது வயதானவராகவே காணப்படுகிறார் என்றும் மக்கள் கூறுவர். கறுப்பு நிறமும் உருண்டை முகமும் கொண்ட அவர், நாலரை அடி உயரமே உள்ளவராக இருந்தார். வயிரம் ஏறிய உடல். திக்தித் திக்கி தொடர்பின்றிப் பேசுவார்; தெருவிலே படுத்திருப்பார்; மண்ணிலே புரள்வார்; நாய்களுடன் சண்டை செய்வார்; கள் குடிப்பார்; கஞ்சா தின்பார்; பசித்தபோது சில வீடுகளுக்குச் சென்று பிச்சையெடுத்து உண்பார். பெண்களுக்கு அவர் மேல் இரக்கம் உண்டு. திடீரென்று ஒரு வீட்டினுள் நுழைந்து, அந்த வீட்டிலிருக்கும் குழந்தைகளின் நெற்றியில் திருநீறு பூசிவிட்டு ஓடி விடுவார். யாராவது அவரைத் திட்டினாலும் அடித்தாலும் பொறுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு அகலுவார். அவரிடமிருந்து திருநீறு வாங்கிப் பூசிக்கொண்டால் நோய் அணுகாது என்பது பலருடைய நம்பிக்கை. ஒரு நாள் குள்ளச்சாமியார் கிழிந்த அழுக்குத்துணிகளை மூட்டையாகக் கட்டி, அதை முதுகின்மேல் சுமந்துகொண்டு வந்தார். பாரதியார் அதைக் கண்டவுடன் வழக்கம்போல் வணங்கினார். ஆனால் சாமியார் குறும்புச் சிரிப்பு சிரித்தார். பாரதியார், சாமி, கந்தைகளைக் கட்டி முதுகின்மேல் வைத்து சுமப்பதேன்? என்று வினவினார். சாமியார், நீ நெஞ்சுக்குள்ளே சுமக்கிறாய். நான் முதுகின் மேலே சுமக்கிறேன் என்று விடையளித்துவிட்டு, விரைவில் மறைந்தார்.
குள்ளச்சாமியார் கூறியதன் பொருளை பாரதியார் பின்வருமாறு கூறுகிறார்:
அஞ்ஞானப் பழங் குப்பைகளையும், பழங்கவலைகளையும், பழந்துன்பங்களையும், பழம் சிறுமைகளையும் மனதில் வைத்து வீணாய்ச் சுமந்து திரியும் மனிதனுடைய அறிவீனத்தை விளக்கும் பொருட்டே குள்ளச்சாமி இவ்வாறு கூறினார். ஒருநாள் பாரதியார் குள்ளச் சாமியாரைப் பார்த்து விளையாட்டாக, சாமி. இப்படி பிச்சை வாங்கி உண்ணுகிறீர்கள். ஏதேனும் தொழில் செய்து பிழைக்கலாகாதா? என்றார். சாமியார், தம்பி, நான் வண்ணான் தொழில் செய்கிறேன். ஐம்புலன்களாகிய கழுதைகளை மேய்ப்பதும் அந்தக்கரணம் ஆன துணி மூட்டைகளை வெளுப்பதும் என் தொழில்கள் என்றார். பாரதியார், சாமியாரே, ஞானநெறியில் செல்வோன் எத்தொழிலை முதலில் செய்யவேண்டும்? என்று கேட்டார். சாமியார், முதலில் நாக்கை வெளுக்கவேண்டும். பொய், குறளை, கடுஞ்சொல், இன்னாச்சொல், தற்புகழ்ச்சி ஆகியவை கூடாது. உண்மையே பேசவேண்டும். அச்சத்தை நீக்குவதே அந்தக்கரணத்தை வெளுத்தலாகும் என்றார். சும்மா என்ற கட்டுரையில் பாரதியார் குள்ளச்சாமியைப் பற்றி எழுதுவதாவது : இவர் கலியுக ஜடா பரதர். மகாஞானி. எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொண்டவர். பெண்கள் இவரைத் தெருவில் கண்டவுடன் வணங்குவார்கள். குழந்தைகள் இவரைக் கண்டால் விருப்பத்துடன் ஓடி வருவார்கள்.
பாரதி அறுபத்தாறு எனும் பகுதியில் பாரதியார் பாடியிருப்பதன் கருத்து :
குள்ளச்சாமி புகழ் : குருவின் திருவருளால் பிறப்பு மாறி அமர நிலை அடைந்துவிட்டேன். பராசக்தியின் திறம், சித்தின் இயல்பு, வானத்தைத் தீண்டும் வகை ஆகியவற்றை அவர் உணர்த்திக் காத்தார். அமைதி நிலை அளித்து குப்பாய ஞானத்தால் சாவு எனும் அச்சத்தைப் போக்கினார். தெளிந்த ஞானியான இக்குள்ளச்சாமி பாசத்தையும் அச்சத்தையும் நீக்கியவர்; அவர் பெருமை எவ்வளவு எழுதினும் அடங்காது. காயகற்பம் சாப்பிட்டவராகையால், அவருடைய வயதைக் கணக்கிட்டுச் சொல்ல யாராலும் இயலாது. 1930ஆம் ஆண்டில், பாரதி பாடல்களுக்குத் தகுந்த ஓவியங்கள் மித்திரனில் தொடர்ச்சியாக வெளிவந்தன. கே.ஆர். சர்மா என்ற ஓவியர் வரைந்த படமொன்றில், பாரதியார் தலைப்பாகையைக் கழற்றி வைத்துவிட்டு, தரையில் அமர்ந்து, தம் முன்னுள்ள மேசைப் பெட்டிமேல் உள்ள ஏட்டினில் எழுதிக் கொண்டிருப்பதையும், அருகில் குள்ளச்சாமி நின்று கொண்டிருப்பதையும் காண்கிறோம்

சூரதாசர்

சூரதாசர், கவியரசர் என்று புகழப்பெற்றவர். பிறவியிலேயே பார்வையற்ற இந்த அருட்கவி அருளிய கவிதைகள் ஏராளம். எல்லாம் கருத்தாழம் மிக்கவை. அர்த்தம் பொதிந்தவை. அவைகளின் பெருமைகளையும், உயர்வையும் கருதி அவற்றிற்கு சூரஸாகரம் என்று பெயரிட்டுள்ளனர். துளசிதாசர், கேசவராயர் போன்ற மகான்களின் கவிதைகளுக்கு ஈடாக இவரது கவிதைகளும் சிறப்பாக கருதப்படுகிறது. இவர் முற்பிறவியில் கண்ணனுடைய அன்பிற்கு உகந்த அக்ரூரராக இருந்தவர். துவாரகையில் கண்ணனுடன் வசித்துவந்தார். ஒரு சமயம் இவர் கண்ணனின் அந்தப்புரத்திற்கு சென்றபோது சத்தியபாமா மிகவும் துக்கத்துடன், தன்னைக் கண்ணன் மிகவும் அலட்சியப்படுத்துவதாக குறைசொன்னாள். இன்னும் ஒரு நாழிகை பொழுதிற்குள் தன்னை அவர் தேடி வராவிட்டால் உயிர் துறக்கப்போவதாக புலம்பினாள். சத்தியபாமா சொன்னதை செய்பவள் என்பதை ஏற்கனவே அறிந்திருந்த அக்ரூரர், ஒரு நாழிகைக்குள் கண்ணனை தேடி கண்டுபிடித்துவர புறப்பட்டார். ஆனால் கண்ணனை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே தானே கண்ணனைப்போல் வேடமிட்டு சத்தியபாமாவின் முன் தோன்றி அவளை சமாதானம் செய்தார். பிறகு கண்ணனை தேடிபிடித்துவிட்டார். அவரிடம் தான் செய்த தந்திரத்தை கூறினார். கண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது.
நீ பூலோகத்தில் பார்வையற்றவனாக பிறப்பாய் என்று சபித்துவிட்டார். சத்தியபாமாவை அழைத்து, நீ செய்த தவறுக்காக ஒரு அரசனின் பணிப்பெண்ணாக பிறப்பாய், என சாபமிட்டார். இருவரும் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி கண்ணனிடம் மன்னிப்பு கேட்டனர். கண்ணன் அவர்கள் மீது இரக்கம் கொண்டு, நான் கொடுத்த சாபத்தை திரும்பப் பெற முடியாது. இருப்பினும் உங்களை பூலோகத்தில் வந்து தடுத்தாட்கொள்வேன், என்று அருளினார். கண்ணனின் சாபப்படி சூரதாசர் மதுரா நகரில் பிறந்தார். தன் அகக்கண்களினால் இறைவனைக் கண்டு அவனது திருவிளையாடல்களையெல்லாம் கவிதையாக்கி, தனது இனிய குரலால் மக்கள் நெஞ்சில் பதியும்படி பாடிவந்தார். முற்பிறவியில் இவர் சிறந்த பக்திமானாக இருந்ததால் நல்ல சங்கீத ஞானத்துடன் பாடிய சுவை கொட்டும் கீதங்களை மக்கள் அமுதமாக மதித்தனர். இவர் பாடும்போதெல்லாம் கண்ணனே நேரில் வந்து கேட்டு இன்புறுவது வழக்கமாயிற்று. அவ்வூர் அரசனுக்கு சங்கீதத்தில் அபரிமிதமான ஆவல் இருந்தது. பல வித்வான்களை அழைத்து பாடச்சொல்லி அவர்களை கவுரவித்து வந்தான். சூரதாசரின் திறமையைக் கேள்விப்பட்ட அரசன் தனது அரசவைக்கு அவரை சகல மரியாதைகளுடன் அழைத்துவரச் சொல்லி பாட வேண்டினான். சூரதாசர் பாடத் தொடங்கியவுடன் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வீணையுடன் கலைவாணியும், ஜால்ராவுடன் விநாயகரும் வந்து அமர, தேவகன்னிகைகள் நாட்டியமாடினர். மனமோகன வேணுகோபாலன் சங்கு, சக்ர பீதாம்பரதாரியாய் அங்கு வந்து அமர்ந்து சூரதாசரின் பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார். காணக்கிடைக்காத அந்தக் காட்சியை அனைவரும் கண்டு மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் கண்ணனும், இதர தெய்வங்களும் அப்படியே மறைந்துவிட்டனர். அரசனின் வேண்டுகோளுக்கிணங்க சூரதாசர் அரண்மனையிலேயே தங்கி, மக்களுக்கு பக்தியை இசை மூலம் போதிக்கலானார். அந்தப்புரத்தில் உள்ள அரசிகள் அரசவையில் தோன்றிய அற்புத காட்சி பற்றி கேள்விப்பட்டு தாங்களும் அதைப்பார்த்து இன்புற வேண்டுமென அரசனை வற்புறுத்தினார்கள். அரசனும் சூரதாசரை அந்தப்புரத்திற்கு வரவழைத்து பாடும்படி கேட்டுக்கொண்டான். அந்தப்புர சபா மண்டபத்தில் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக்காலத்தில் அரசனின் அந்தப்புர பெண்கள் கோஷா முறையில் முகத்தை மறைத்து ஆடை அணிந்துகொள்வார்கள். பிற ஆண்களின் முன்னால் உட்கார மாட்டார்கள். பிற ஆண்கள் அந்தப்புர பெண்களை பார்ப்பதை தவிர்ப்பதற்காகவே இந்த முறை கையாளப்பட்டது. கச்சேரிக்கு அரசனைத்தவிர யாரும் அழைக்கப்படவில்லை. சூரதாசருக்கோ கண் தெரியாது. எனவே அவரால் அந்தப்புர பெண்களை பார்க்க முடியாது என்பதால் எல்லா பெண்களும் முகத்தை மறைக்காமல் சாதாரணமாக மண்டபத்தில் வந்து அமர்ந்தனர்.
நிகழ்ச்சி துவங்கியது. சூரதாசர் பாட ஆரம்பித்ததும் அனைவரும் இசை இன்பத்தில் மெய்மறந்து முகத்தில் புன்னகை மலர அதிலேயே மூழ்கிவிட்டனர். சூரதாசர் கல்லும் கனிந்து கனியாகும் வண்ணம் பாடிக்கொண்டிருந்தார். அந்தக்கூட்டத்தில் சாபம் பெற்ற கண்ணனின் மனைவி சத்தியபாமாவும் பணிப்பெண்ணாக அமர்ந்து இசையை கேட்டு ரசித்துக்கொண்டிருந்தாள். இறைவன் தன் மாயையினால் சூரதாசருக்கு கண்ணொளி கிடைக்கும்படி செய்து சத்தியபாமாவை அடையாளம் தெரியும்படி செய்தார். உடனே சூரதாசர், அம்மா தாயே! சத்தியபாமா தேவியே! நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்? என்று கேட்டு பாட்டை பாதியிலேயே நிறுத்தினார். இதைக்கேட்ட அரசனும், அந்தப்புர பெண்களும் திடுக்கிட்டனர். பிறவியிலேயே பார்வையற்ற இவருக்கு எப்படி கண்ணொளி வந்தது? பணிப்பெண்ணை எப்படி அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது என்றெல்லாம் வியந்தனர். வணங்குதற்குரிய கண்ணனின் மனைவியான சத்தியபாமாவை இதுவரை பணிப்பெண்ணாக குற்றேவல் புரியும்படி செய்துவிட்டோமே என மன்னனும் அந்தப்புர பெண்களும் வருந்தி, தங்களை மன்னிக்கும்படி வேண்டினர். அனைவரது வேண்டுகோளுக்கும் இணங்கி, ஸ்ரீமந் நாராயணன் கருட வாகனத்தில் அங்கே தோன்றி அனைவருக்கும் காட்சி தந்தார். சூரதாசருக்கும் நிரந்தரமாக கண்ணொளி தந்து தன் அருளாசியை வழங்கினார். சத்தியபாமாவுடன் மறைந்தார். அதன்பிறகு சூரதாசர் பல பாடல்களை இயற்றி தன் சீடர்களுக்கெல்லாம் கற்பித்தார். அவரது கவிதைத் தொகுப்பாகிய சூரசாகரத்தின் மூலம் பக்தர்களை இறைவனின் திருவடி நிழலுக்கு ஆட்படுத்தி, பள்ளிகொண்ட பெருமாளின் அருளுக்கு பாத்திரமாகும்படி செய்தார்.

Thursday, May 24, 2012

நடனகோபாலநாயகி சுவாமிகள்

நடனகோபாலநாயகி சுவாமிகள், மதுரையில் 1843, ஜனவரி 9 (மார்கழி மிருகசீரிட நட்சத்திரம்) வியாழக்கிழமை அவதரித்தார். இவரது தந்தையார் ரங்கார்யர், தாய் லட்சுமிபாய். பெற்றோர் பிள்ளைக்கு ராமபத்ரன் என்று பெயரிட்டனர். பள்ளியில் படித்த காலத்தில் ஓம் என்ற மந்திரத்தின் பொருளைக் கேட்டு ஆசிரியர்களையே திகைக்கச் செய்தார். அவரது மனம் எப்போதும் இறைச் சிந்னையிலேயே இருந்தது. இளமையில் வணிகர் ஒருவரிடம் கணக்கெழுதும் பணியில் சேர்ந்தார். ஆனால், வணிகர் ராமபத்ரனின் இறைச்சிந்தனையைக் கண்டு வேலையை விட்டு வெளியேற்றினார். பின்னர் தன் வீட்டுத் தொழிலான நெசவுத்தொழிலைச் செய்தார். திடீரென்று ஒருநாள் வீட்டைவிட்டு கிளம்பி, திருப்பரங்குன்றத்தில் துறவியைப் போல யோகத்தில் ஆழ்ந்தார். 12 ஆண்டுகால தவத்திற்கு பின், பரமக்குடி நாகலிங்க அடிகளாரிடம் சதாநந்தர் என்று தீட்சாநாமம் பெற்றார். சித்தரைப் போல பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களிடம் பிரபலமானார்.ஒருமுறை மதுரை அருகில் உள்ள அழகர்கோவில் சுந்தராஜப்பெருமாளை தரிசித்தார். அன்றுமுதல் ஆழ்வார்களின் மீதும், நாலாயிரதிவ்ய பிரபந்தங்களின் மீதும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. நம்மாழ்வார் அவதரித்த ஆழ்வார் திருநகரிக்குச் சென்றார். அங்குள்ள ஆதிநாதசுவாமியை தரிசித்தார். அங்கே, நம்மாழ்வாரின் திருவாய்மொழி பாடல்களை வடபத்ராரீயர் என்ற பக்தர் பாடிக் கொண்டிருந்தார். அந்த வரிகள் சதாநந்தரின் மனதை கொள்ளை கொண்டது. அவர் அந்த பக்தரை சாஷ்டாங்கமாக பணிந்து தமக்கு வழிகாட்டும்படி கேட்டுக் கொண்டார். அந்த பக்தர், அவரைத் தன் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றார். விஷ்ணுவின் அம்சம் நிறைந்த சதா நந்தருக்கு, நடன கோபால் என்று பெயரிட்டார்.
ராமானுஜரின் விசிஷ்டாத்வைதம், கீதாபாஷ்யம், பிரம்மசூத்திர பாஷ்யம், பகவத்கீதை, விஷ்ணு புராணம், நாலாயிரதிவ்ய பிரபந்தம் ஆகியவற்றை அவரிடம் கற்று முடித்தார். தன்னை ஒரு பெண்ணாகவும், திருமாலை ஆணாகவும் கருதி ஹரிபக்தியில் ஆழ்ந்தார். பின், பல திவ்யதேசங்களுக்கு தீர்த்தயாத்திரை புறப்பட்டார். ஸ்ரீரங்க ரங்க நாதர் மீது பாடல்கள் பாடினார். அங்கிருந்த ஸ்ரீரங்கநாராயண ஜீயர் நடனகோபாலை நடனகோபால நாயகி என்று அழைத்தார். தம்முடைய வாழ்நாள் முடிய இருப்பதை முன்கூட்டியே உணர்ந்து, அழகர்கோவில் அருகிலுள்ள காதக்கிணறு என்னுமிடத்தில் தமக்கான பிருந்தா வனத்தை(சமாதி) அமைக்குமாறு கூறினார். 1914 ஜனவரி 8, வைகுண்ட ஏகாதசி நாளில்பகவான் ஹரி வந்து விட்டார் என்று சொல்லிக் கொண்டே மகாவிஷ்ணுவின் திருவடிகளில் இணைந்தார். நடனகோபால நாயகி சுவாமிகள் என்று பக்தர்களால் இன்று போற்றப்படுகிறார். இவர் பிரபந்தப்பாடல்கள், பக்திரச கீர்த்தனைகள், நாமாவளிகள், தமிழ் கீதகோவிந்தம் ஆகியவற்றை இயற்றியுள்ளார். ஸ்ரீமதே ராமானுஜா என்ற மந்திரம் ஜெபித்தால் மனத்தூய்மை உண்டாகும் என்கிறார் சுவாமிகள். ராமானுஜரின் உரைகளையும்,உபதேசங்களையும் படிக்கவேண்டும் என்று நம்மை வேண்டுகிறார். பிருந்தாவனக்கோயிலில் இவர் வழிபட்ட ருக்மணி, சத்யபாமா சமேத நடனகோபால கிருஷ்ணர் விக்ரகம் உள்ளது. இவர் பயன்படுத்திய ஆண்டாள் கொண்டை, துளசிமணிமாலை, பாதுகையை (காலணி) ஆகியவற்றை இங்கு தரிசிக்கலாம். இவரது அவதார தினம் டிசம்பர் 21, மார்கழி மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிருந்தாவனத்தில் கொண்டாடப்படுகிறது

Wednesday, May 23, 2012

மனிதமும் சனாதனமும் - பகுதி 3

முக்தி அல்லது விடுதலை என்றால் பௌதீக உணர்வில் இருந்து சுதந்திரம் பெறுவதே ஆகும்.

அந்த உணர்வு என்பது யாதுஅவ்வுணர்வு நான் இருக்கிறேன் என்பது. எனில் நான் என்பது யாதுகளங்கப்பட்ட நிலையில் நான் காண்பதுதுய்ப்பதுயாவும் என்னால் அடையப்படுகிறது என்பதாகும். 

இறைவனின் இந்த பிரபஞ்சத்தில்  உறுப்பான ஜீவர்கள்ஆள்பவனுடன் இணைந்து செயல்படுபவர்களே.

உதாரணமாக – ஒரு இயந்திரத்தின் உறுப்பு,அந்த முழு இயந்திரத்துடன் இணைந்து செயல்படுகிறது. அது போல இவ்வுடலின் ஒரு அங்கம்இவ்வுடல் முழுவதுடனும் இணைந்து செயல்படுகிறது.
 கை கால்கள்கண்கள் அனைத்துமே உடலின் பாகங்களே. அவை உண்மையில் ஆள்பவை அல்லவயிறு ஆள்கிறது. கால்கள் அசைகின்றன. கைகள் உணவை எடுத்து அளிக்க பற்கள் அரைக்கஉடல் ஜீரண உறுப்புகள் சகிதம் வயிற்றை திருப்தி செய்வதிலே ஈடுபடுகின்றன.
வேரில் நீருற்றுவதில் அத்தாவரம் வளம் பெறுவது என்பது போல்இறைவன் ஆள்பவன்,ஆக்குகின்றவன். 

அவனைத் திருப்தி செய்ய ஒத்துழைக்க வேண்டியவர்களே நாம் 

கைவிரல்கள் வயிற்றுக்கு உணவு அளிப்பதற்குப் பதில்விரல்களே உணவினை உட்கொள்ள வேண்டும் என நினைத்தால் அது ஏமாற்றமே அடையும்.
             ஒரு சாதாரண மனிதனின் குணம் நிச்சயமாக தவறு செய்யக்கூடியதே. அது பெரும்பாலும் மதி மயங்கியே இருக்கின்றது. மற்றவரை ஏய்க்கும் குணமுடையதாலும்,பக்குவமற்ற புலன்களால் கட்டுப்பட்ட ஒருவன் இறைவனை அணுகுதல் எளிதல்ல. 

வேதம்வேதத்தின் சாராம்சமான (மனிதத்திற்காக) உபதேசித்த வேதம்,பகவத்கீதை. இது தவிர அருளாளர்களால்,ரிஷிகளால்சித்த புருஷர்களால்,உபதேசிக்கப்பட்ட பல்வேறு வேத உபன்யாச விரிவுரைகள்அறிவுரைகள்யாவும் சனாதன தர்மத்தின் உண்மை வெளிப்பாடுகளேயன்றி வேறு எதுவும் இல்லை. 
          சனாதன தர்மம் ஒரு மதமல்ல. அனைத்து மதங்களில் ஆணி வேரென அவைகளில் ஆங்காங்கே காணப்படும் அரிய பெரிய நீதிகளையே அவைகள் புகழ்கின்றன. சனாதன தர்மத்தை என்னவேண்டுமானாலும் பெயரிட்டு அழைக்கலாம். காலமற்ற சனாதன தர்மத்தில் கூறப்படாதவைகள் என்பது எதுவும்இல்லை.
தனிமனிதர்களால் சில அருளாளர்களால்,உருவாக்கிய கோட்பாடுமார்க்கங்களில் இல்லாதவைகள் நமது சனாதன தர்மத்தில் உள்ளது. சனாதனம் அல்லாத மத நம்பிக்கைக்கு மனித சரித்திரத்தின் கால அட்டவணையில் ஏதாவது துவக்கம் இருக்கலாம். 

ஆனால் உயிர்களுடன் நிரந்தரமாக இருக்கும் சனாதன தர்மத்தின் சரித்திரத்திற்கு இது போன்ற ஆரம்பமே இல்லை.
சனாதன தர்மம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தின் இன வழியல்ல. நித்யமான கடவுளுடன்நித்யமான ஜீவர்களின்,நித்யமான உறவின்நித்தியமான இயக்கமே ஆகும்.
ஸ்ரீ ராமனுஜ ஆச்சாரியர் அவர்களின் முடிவுக்கு ஏற்ப சனாதனம் என்ற சொல்லுக்கு ஆரம்பமும் முடிவும் அற்றது என்பதே. சனாதன தர்மம் முன்பே குறிப்பிட்டபடி ஜீவனின் நித்யமான கடமை ஆகும்.
நீரில் இருந்து திரவத்தன்மையினை பிரிக்க முடியாது. 

நெருப்பில் இருந்து வெம்மையினையும்,ஒளியினையும் எடுத்துவிட முடியாது என்பது போல

ஆன்மாவின் நிரந்தர இயக்கத்தையும் அதனிடமிருந்து பிரித்துவிட முடியாது.
தர்மம் என்ற சொல் ஒரு பொருளுடன் நிரந்தரமாக இருக்கிறது என்பதே
இது போன்று வாழும் உயிரின் முக்கியமான,இன்றியமையாதஅங்கத்தை எது என்று கண்டுபிடிக்க வேண்டும். வேதம் இதனை வெளிப்படுத்தியது. அது (இறைவன்கடவுள்,பரமாத்மாஈஸ்வரன்) என்றெல்லாம் அதன் நிலையான துணை அவரது ஒரு அங்கமான நமக்கென்றும் இருக்க வேண்டும். 

எப்பிறப்பிலும் எந்நிலையிலும் அதுவே நம் அசைக்க முடியாத நம்பிக்கை எனக் கொள்ளல் வேண்டும். 

இறைவன் நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான். ஆனால் இறைவனை நாம்தான் (மனிதன்) கண்டுகொள்ள நம்மிடம் மட்டுமே உள்ள சிறப்பாற்றலால் முயன்று வெற்றி பெற வேண்டும். அதற்கு வழி பக்தியோ,நற்கருமமோயோகவழியோ,ஞானமார்க்கமோ எதுவாயினும் அவ்வழி நம்மை நிச்சயம் இறைவனிடம் கண்டிப்பாக கொண்டு சேர்க்கும் என நம்புவோம் நம்பிக்கை சனாதனத்தின் ஒரு அங்கம்.
(முற்றும் )

Saturday, May 19, 2012

பரமாத்மா எங்கும் தனியாக இல்லை.

பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.
எது சரி?
மனம், புத்தி, சித்தம், ஆகாசம் அல்லது ஆகாயம்
இவை அனைத்தும் ஆத்மாவின் ஒவ்வொரு படிக்கல்லே.
மனம் என்பது மாயையினால் கட்டுண்ட உயிரின் மயக்க நிலையேயாகும்.
அடுத்த படி புத்தி, இது போதம் அல்லது அறிவு பெற்ற நிலையாகும்.

Thursday, May 17, 2012

ஹரி அனந்தர்


வடநாட்டில் உள்ள ஒரு சிற்றூரில் ஹரி அனந்தர் என்பவர் வாழ்ந்து வந்தார். வேத சாஸ்திரங்களில் கரைகண்டவர். இவரிடம் பல மாணவர்கள் படித்தாலும் ஒரு மாணவன் அளவில்லாத அன்பு வைத்திருந்தான். குருகுல முறைப்படி, நாள்தோறும் பிச்சைக்குச் சென்று ஒரு படி ரொட்டிமாவு கொண்டு வருவான். அதை குருவின் திருவடிகளில் சமர்ப்பித்து பின்பு ரொட்டி செய்வான். அந்த ரொட்டிகளில் தாம் சாப்பிட்டது போக மீதியை மற்றவர்களுக்கு கொடுப்பான். ஒரு சமயம் கபீர்தாசின் குருவான சாது ராமானந்தர் அவ்வூரிலுள்ள ஒரு மடத்தில் தங்கியிருந்தார். பிச்சைக்குச் சென்ற மாணவன் அவரை வணங்கினான். அகத்தின் அழகு முகத்திலே தெரியும் என்பது போல, இவ்வளவு அன்பும், பரிவும், நல்ல குணங்களும் கொண்ட இந்த சிறுவன் நாளை காலையோடு ஆயுள் முடிந்து இறந்து போகப்போகிறானே என வருத்தப்பட்டு அந்தோ ! அடடா ! என்றார் ராமானந்தர். இப்படி ஒரு வார்த்தை அவரது வாயிலிருந்த வருமானால் அது ஆபத்துக்கு அறிகுறி என பொருள். இதைக்கேட்டு மாணவனுக்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. குருவே ! நான் நீங்கள் சொன்னதைக் கேட்டு எவ்வித அச்சமும் கொள்ளவில்லை. மரணத்தைக் கண்டு நான் பயப்படவில்லø. எனது மரணத்திற்கு முந்தைய தினமான இன்று உங்கள் தரிசனம் கிடைத்தது நான் செய்த பாக்கியத்தையே குறிக்கிறது என்று சொல்லி மீண்டும் ஒரு முறை வணங்கினான்.
அங்கிருந்து புறப்பட்டு குருவிடம் சென்றான். தனது ஆயுள் முடியப்போகும் விஷயத்தை குருவிடம் விளக்கினான். ஹரி அனந்தர் மாணவனை அருகில் அழைத்து, இன்றைய வேலைகளை வழக்கம் போல செய்துவிட்டு, தியானம் முடித்து தூங்கு. நாளை காலையில் அருணோதயத்திற்கு முன்னதாக என்னை எழுப்பு, என்றார். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்னதாக குருவை எழுப்பினான் மாணவன். இருவரும் நீராடி தியானம் செய்யும் சமயத்தில் மாணவனை அருகில் அழைத்த ஹரி அனந்தர், பத்மாசனத்தில் அமர்ந்தார். தனது புலன்களை ஒவ்வொன்றாய் ஒடுக்கி, சமாதி நிலைக்கு சென்றார். மாணவனும் அதே முறையில் தியானத்தில் ஆழ்ந்தான். இப்படி இருவரும் ஒரே விதமாக தங்கள் இதயத்தில் வாழும் இறைவனை தியானிக்கலாயினர். இறைவன் இவர்களது ஒப்பற்ற தியானத்திற்கு கட்டுப்பட்டவராய், சங்கு, சக்கரங்களுடன் அங்கே எழுந்தருளினார். சக்கரத்தாழ்வாரை குரு, சிஷ்யன் ஆகியோரின் தலைக்கு மேலே சுழன்று கொண்டிருக்கும்படி பணித்து, தானும் அங்கேயே அமர்ந்து விட்டார்.
உரிய நேரம் வந்தது. நீலவண்ணத்தில் உலகம் இருளில் மூழ்க, எருமையின் மீதேறி வந்து நின்றான் எமன். இறைவன் புன்முறுவலுடன் வீற்றிருக்க, எதிரில் குருவும், மாணவனும் மெய்மறந்து தியான நிலையில் அமர்ந்திருப்பதையும், தலைக்கு மேல் வெண்கொற்றக்குடை போல சக்கரம் கம்பீரமாக சுழல்வதையும் கண்டு நடுநடுங்கிப் போனான். இறைவனே இங்கு வந்து அமர்ந்திருப்பதால் நம்மால் எதுவும் செய்ய முடியாது என கருதிய அவன், வந்த வழியே திரும்பிப்போனான். எமன் சென்றதும் குருவும் மாணவனும் கண்விழித்தனர். இருவரையும் நெஞ்சாரத்தழுவி ஆசி கூறி மறைந்தார் கிருஷ்ண பரமாத்மா. அடுத்தநாள் வழக்கம்போல் பிச்சைக்கு, சென்றான் மாணவன். ராமானந்தரின் பாதத்தைத் தொட்டு வணங்கினான். அடடா ! பிழைத்து விட்டாயே ! என்று ஆச்சரியப்பட்டவர். நடந்தவற்றை தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்தார். உன்னைக் காப்பாற்றிய சக்திமிக்க குருவை நான் காணவேண்டும் என்றார். இருவரும் ஹரி அனந்தரின் இருப்பிடத்திற்கு வந்தனர். எமனையே வென்ற உமது பக்தி அற்புதம் ! அற்புதம் ! என பாராட்டிய ராமானந்தர் ஹரியை கண்ணால் கண்ட ஹரி அனந்தரின் பாதங்களில் விழுந்து கண்ணீர் பெருக போற்றினார்

Tuesday, May 15, 2012

ஸ்ரீபடே சாஹிப்

விழுப்புரம் - பாண்டிச்சேரி மெயின் ரோட்டில் (வில்லியனூர் வழி) உள்ளது கண்டமங்கலம். அதாவது கண்டமங்கலத்தில் இருந்து விழுப்புரத்துக்கு சுமார் 20 கி,மீ,; பாண்டிச்சேரிக்கும் சுமார் 20 கி. மீ. தொலைவு. இந்தப் பேருந்து தடத்தில் கண்டமங்கலம் ரயில்வே கேட்டில் இறங்கிக் கொண்டு, சுமார் 2 கி. மீ. தொலைவில் சின்னபாபு சமுத்திரம் என்கிற ஊர் உள்ளது. இங்குதான் ஸ்ரீபடே சாஹிப்பின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இறை நிலையின் அற்புதமான பேராற்றலை உணர்ந்த பின் எல்லா அடையாளங்களையும் துறந்தார். ஜாதி, மதம், இனம் - இவற்றுக்கு அப்பாற்பட்டு விளங்கினார். சாயபு என்பது பொதுவான பெயர். படே என்றால் உயர்ந்த என்று பொருள். உயர்ந்த உத்தமமான மகான் என்கிற பொருளில் இவர் படே சாயபு என்று அழைக்கப்பட்டு வருகிறார். மகான் படே சாஹிப் எவரிடமும் பேசியதில்லை. எப்போதும் மௌனம்தான். தன் வாழ்நாளில் இவர் காத்து வந்த மௌனம், இவருடைய தியானத்துக்குப் பெரும் உதவியாக இருந்திருக்கிறது. தன் வாழ்வில் இவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். மகானின் அருள் பெற்றுத் திரும்பிய பலரின் வாழ்வும் ஜகஜோதியாகப் பிரகாசித்தது. இவரது சந்திப்பிலேயே சகாயம் பெற்றார்கள், இவரைத் தேடி வந்தவர்கள்.
ஆசிர்வாதத்தால் நோயாளிகள் குணமடைந்தனர். தீரவே தீராது என்று பலர் அனுபவித்து வந்த வியாதிகள், இவரது ஸ்பரிசத்துக்குப் பின் நிரந்தரமாக நீங்கி விட்டது. ஒருமுறை இவரை கருநாகம் தீண்டியது. சிறிது நேரத்தில் விஷம் உடல் முழுவதும் பரவி நீல நிறத்தில் காணப்பட்டார். பக்தர்கள் அனைவரும் என்ன நடக்குமோ என்றிருந்த வேளையில் சாஹிப்பை தீண்டிய கருநாகம் வந்து விஷத்தை அனைத்தும் எடுத்து விட்டு அவர் பாதங்களுக்கருகில் விழுந்து வணங்கி உயிர் விட்டது. அந்த கருநாகத்திற்கு மோட்சம் அளித்தார் மகான் அவர்கள். மேலும் திருடுவதையேக் குலத்தொழிலாக வைத்திருந்த திருடர்கள் திருந்தினார்கள். மொத்தத்தில், படே சாஹிப்பின் தரிசனம் பெற்று சகல ஜீவ ராசிகளும் பலனடைந்துள்ளன. மகான் அவர்கள் தன்வந்திரி லோக தும்புரு வீணையுடன் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். வியாதியின் அவஸ்தையுடன் தன்னிடம் வருபவர்களுக்கு விபூதி பிரசாதம் கொடுத்து ஆசிர்வதித்து அனுப்புவார். இன்னும் சிலருக்குத் தன்னிடம் உள்ள கொட்டாங்குச்சியில் இருந்து நீர் தருவார். நோயின் வீர்யம் அதிகம் இருப்பவர்களிடம் அங்குள்ள கொன்னை மரத்தை அடையாளம் காட்டி, அதைச் சுற்றி வா என்று ஜாடையால் சொல்வார்.
படே சாஹிப்பிடம் வந்தாலே, வியாதிகள் தீர்கின்றன என்ற பேச்சு எங்கெங்கும் பரவி, அவர் வாழ்ந்த காலத்தில் தினமும் ஏராளமானோர் இவரைத் தரிசித்து அருள் பெற்றுச் சென்றனர். படே சாஹிப் எங்கே, எப்போது பிறந்தார்? அவருடைய அவதார தினம் எது போன்ற தகவல்கள் தெரியவில்லை, என்றாலும், அவர் ஜீவ சமாதி ஆனது கி.பி. 1868-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி என்கிற குறிப்பு இருக்கிறது. அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை. ஆயில்ய நட்சத்திரம். எனவே, இவரது ஜீவ சமாதியில் செவ்வாய்க்கிழமை மற்றும் ஆயில்ய நட்சத்திர தினங்களில் வழிபாடு விசேஷமாக இருக்கும். மகானின் அருளாசி வேண்டி திரளான பக்தர்கள் குவிவார்கள். வழிபாடுகளும் சிறப்பாக இருக்கும். தவிர குருவாரம் என்பதால் வியாழக்கிழமைகளிலும், விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பிஸ்கெட், சாக்லெட் மிகவும் உகந்த பிரசாதம் என்கிறார் இந்த ஜீவ சமாதியின் பூசாரி. ஜீவ சமாதிக்கு வருகிற பக்தர்கள் வாங்கி வரும் பிஸ்கெட் மற்றும் சாக்லெட்டுகளை அதிஷ்டானத்தில் வைத்து விட்டு பக்தர்களிடம் தருகிறார் பூசாரி. அங்கு இருக்கும் அனைவருக்கும் அது விநியோகிக்கப்படுகிறது. இன்றைக்கும் தன் ஜீவ சமாதி தேடி வரும் பக்தர்களின் பிணியை - அபூர்வ மருத்துவராக இருந்து தீர்த்து வருகிறார் படே சாஹிப். இவரது தரிசனத்தால் பலன் பெற்றவர்களே இதற்கு சாட்சி!

Saturday, May 12, 2012

அருணகிரியின் அவதாரம்!

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதேவ மகாராஜா ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்துவந்த தவயோகியான திருவெண்காடாருக்கும், முத்தம்மைக்கும் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு ஆதிலட்சுமி என்று பெயர்.
முத்தம்மைக்கு முருகக் கடவுள் மேல் அபார பக்தியாதலால், முருகப் பெருமானின் திருப்பாதங்களே சரண் என்று வாழ்ந்து வந்தாள். முருகன் கோயிக்குப் போவதிலும் முருகன் திருநாமத்தை ஜபிப்பதிலும் முருகக் கடவுளுக்குப் பூமாலை கட்டித் தருவதிலும் ஒருநாளும் அவள் தவறியதில்லை. இதென்ன அதிசயமடி இப்படி முருகப் பித்துப் பிடித்துத் திரிகிறாளே இவள்! வள்ளி இவள் மேல் கோபம் கொள்ளப் போகிறாள் பார்! என்று சக பெண்கள் அவளைக் கேலி செய்வதுண்டு. எந்தக் கேலியையும் கிண்டலையும் பொருட்படுத்தாமல் முத்தம்மையின் முருக பக்தி தொடர்ந்து வந்தது. இவளுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தாலும், முருகப் பெருமான் மேல் பக்தி செலுத்தும் ஓர் ஆண்மகவு வேண்டும் என்று நாள்தோறும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்.முத்து செய்து வந்த தொடர் பிரார்த்தனைகளுக்கு அருள வேண்டும் என முருகன் திருவுள்ளம் கொண்டான். மூத்தபெண் ஆதிக்கு நான்கைந்து வயதாக இருக்கும் போது முத்துக்கு இரண்டாவது குழந்தையாக அருணகிரி என்ற ஆண்குழந்தையை ஆனிமாத மூல நட்சத்திரத்தில் அருளினான் முருகன். ஆண்மகவு பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தாள் முத்து. அந்தக் குழந்தையைச் சீராட்டிப் பாராட்டிப் பாலூட்டித் தாலாட்டி வளர்ப்பதில் அவள் செய்த அமர்க்களங்கள் திருவண்ணாமலையையே குலுங்கச் செய்தன. அப்படியொரு பாசம் தன் பிள்ளை மேல் அவளுக்கு. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் காசியாத்திரை கிளம்பினார் திருவெண்காடர். யாத்திரை முடித்து அவர் வெகுகாலம் திரும்பி வரவில்லை காசியிலேயே தங்கி விட்டதாகக் கருதினாள் முத்தம்மை. அத்துடன் விரைவிலேயே கடுமையாக நோய்வாய்ப்பட்டாள் முத்தம்மை. எனவே முத்தம்மைக்கு ஆண்குழந்தை பிறந்த மகிழ்ச்சி அதிக காலம் நீடிக்கவில்லை. இந்த நிலையில் முத்தம்மை திருவண்ணாமலைக்கு வந்து விட்டாள். ஒருநாள் தனக்கு நோய் முற்றி மரணம் நெருங்குவதை அறிந்துகொண்ட அவள் தன் மகள் ஆதியை அன்போடு அழைத்தாள்: மகளே! எந்த வேளையில் உனக்கு ஆதி என்று பெயர் வைத்தேனோ? ஆதி முதல் அந்தம் வரை இந்தக் குடும்பப் பொறுப்பு முழுவதும் உன் தலையில் விழுந்திருக்கிறது அம்மா! நான் சேர்த்துவைத்துள்ள சொத்துகள் உன் வாழ்வைப் பாதுகாக்கும். நீ பாதுகாக்க வேண்டியது உன் தம்பியை. தவமாய்த் தவமிருந்து பெற்ற பிள்ளை. நீ அவன் மனம் நோகாமல் அவனை வளர்த்துவா. நீயே சிறுமி. உன்னிடம் இந்தப் பிஞ்சுக் குழந்தையை ஒப்படைக்கிறேன். இவனை முருக பக்தனாகப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் என்ன? நான் இறந்தாலும் வானிலிருந்து அவன் வளர்ச்சியையும் பக்தியையும் பார்த்து மகிழவே செய்வேன். நீ இவனை நன்றாக வளர்ப்பாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு என்று கூறிய முத்தம்மை, அருணகிரியின் கையைப் பற்றித் தன் மகள் ஆதியின் கரத்தில் வைத்தாள். முத்துவின் விழிகளிலிருந்து முத்து முத்தாய்க் கண்ணீர் வழிந்தது. ஒரு பெருமூச்சோடு முருகா என்று உரத்து முருகன் நாமத்தை ஜபித்தாள்.
மறுகணம் மயில்மேல் அமர்ந்து முருகன் அவள் உயிரை ஏற்க ஓடோடி வரும் காட்சி அவள் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது. பெண்ணே, நான் உன்னையும் ஆட்கொள்வேன். உன் மகன் அருணகிரியையும் பின்னாளில் ஆட்கொள்வேன்! என்று சிரித்தவாறே வாக்குறுதி தந்தான் வேலவன். முத்துவின் முகத்தில் அவளது முத்துப் பற்கள் தெரிய ஒரு மோகனப் புன்னகை மலர்ந்தது. அழிவே இல்லாமல் அந்தப் புன்னகை முகத்தில் உறைய முத்து முக்தியடைந்தாள்.
சின்னஞ்சிறு வயதிலேயே தாய் என்ற உறவு தங்கள் இருவரையும் விட்டு விலகியதை எண்ணித் துயருற்ற சிறுமி ஆதி, கன்னத்தில் வழிந்த கண்ணீரைப் புறங்கையால் துடைத்துக் கொண்டாள். தன் தாய் தனக்கிட்ட கட்டளையை எந்தக் குறைபாடுமின்றி நிறைவேற்றுவதென உறுதி கொண்டாள். அருணகிரியை வாரியெடுத்து முத்தமிட்டுத் தன்னோடு அணைத்துக் கொண்டாள். தம்பி, உனக்குத் தாயில்லை என்று நினைக்காதே. எனக்குத்தான் தாயில்லை. உனக்கு இனி நானே தாய். அவள் உள்மனம் சிறு வயதிலேயே தனக்கு ஒரு மகன் கிடைத்தாக எண்ணிப் பெருமிதம் கொண்டது. ஆதி தன் தம்பியை வளர்க்கும் அழகைப் பார்த்துத் திருவண்ணாமலையே வியந்தது. அவனை நீராட்டுவது, அலங்கரிப்பது, அவனுக்குச் சோறூட்டுவது என ஒரு தாய் செய்யும் எல்லாச் செயல்களையும் சிறுவயதிலேயே தன் தம்பிக்குச் செய்தாள் ஆதி. தாய் இறக்கும்போது தன்னிடம் ஒப்படைத்த பொக்கிஷமாக அவள் தன் தம்பியைக் கருதினாள். தம்பியை வளர்த்தவாறே கூடவே அந்தத் தமக்கையும் வளர்ந்தாள். அருணகிரிநாதர் இளமையிலேயே தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் கற்றார். ஆனால் அதிகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் வீணாய்ப் போவதும் எங்கும் உள்ளதுதானே? அருணகிரி வீணாய்த்தான் போனான். குடி, சீட்டு என எல்லாக் கெட்ட பழக்கங்களும் அவனையே சரண் என்று வந்து குடிபுகுந்தன. அவனும் அவற்றை ஒரு கணமேனும் விட்டுப் பிரியாது ஆதரித்து வந்தான். அவன் வாலிப வயதை அடைந்தபோது அவனைச் சுற்றியிருந்த நண்பர்களில் ஒரு யோக்கியனைக் கூடக் காணோம்.
முத்தம்மை சேர்த்து வைத்திருந்த சொத்து கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தது. ஆதி ரகசியமாக மறைத்துவைத்திருந்த தங்க நகைகளெல்லாம் திடீர் திடீர் என்று வீட்டை விட்டு மாயமாய் மறைந்தன. அருணகிரி தான் அவற்றை எடுக்கிறான் என்பதை அறிந்துகொண்ட ஆதி, அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு அவன் என்னதான் செய்கிறான் என மலைத்தாள். ஒருநாள் இரவுநேரத்தில் மிகத் தாமதமாக வீட்டுக்கு வந்து கதவைத் தட்டிய அருணகிரியைச் சலிப்போடு பார்த்தாள் அவன் அக்கா ஆதி. எங்கே சென்று வருகிறாய்? எனக் கண்டிப்புடன் கேட்டாள். குழறிய குரலில் அக்கா..! நம் குலமே கணிகையர் குலம். நம் குலத்தைச் சார்ந்த கணிகையரை நாம் ஆதரிக்கவில்லையென்றால் வேறு யார் ஆதரிப்பார்கள்? அதனால் ஒவ்வொரு கணிகையையும் ஒவ்வொரு நாள் ஆதரித்து வருகிறேன்! என்று சொல்லியவாறே அருணகிரி குடிமயக்கத்தில் கீழே சாய்ந்தான். ஆதியின் மனமும் சாய்ந்தது. முருகா! என் தாய் முத்தம்மை, உன் பக்தனாக அருணகிரி வளர வேண்டும் என்று விரும்பினாளே? என் தாய் விரும்பியபடி என் தம்பியை என்னால் வளர்க்க முடியவில்லையே! நான் எங்கே தவறு செய்தேன், எப்படித் தவறு செய்தேன் என்று தெரியவில்லையே? முருகன் படத்திற்கு முன் நின்று அவள் கண்ணீர் விட்டுக் கதறினாள். தன் தம்பி மேல் உள்ள தாளாத பாசத்தால், தரையில் விழுந்து கிடந்த அவனை எழுப்பி உணவளித்து உறங்கச் செய்தாள். ஆனால் அவள் கண்கள் தம்பியைப் பற்றிய தீராக் கவலையில் உறக்கத்தை மறந்தன. படத்திலிருந்த முருகன் சிந்தித்தான். அருணகிரியைப் பொறுத்தவரை முருகனுக்கும் ஒரு பொறுப்பு உண்டே? வேலை வணங்குபவர்களுக்கு அருள்புரிவதைத் தவிர அவனுக்கு வேறென்ன வேலை? கந்தனை மட்டுமே சிந்தனை செய்து வாழ்ந்த முருக பக்தையும் அருணகிரியின் தாயுமான முத்தம்மைக்கு அவள் இறக்கும் நேரத்தில் அருணகிரியைத் தன் அடியவனாக்குவதாக முருகப் பெருமான் வாக்குறுதி கொடுத்தானே? அந்த வாக்குறுதியை முருகன் மீற முடியுமா?

துருவன்

ஸ்வாயம்புவ மனுவின் குமாரன் உத்தானபாதன். அவருக்கு சுநீதி, சுருசி என்ற இரு மனைவிகள். சுநீதியின் மகன் துருவன். சுருசியின் மகன் உத்தமன். அரசனுக்கு சுநீதியிடம் பாராமுகம்; சுருசியிடமோ அடக்க முடியாத பற்று. ஒருநாள் துருவன் ஓடிவந்து தந்தையின் மடியில் அமர முயற்சித்த போது அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் சுருசி. அரசரின் மடிமீது அமர நீ எனக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்க வேண்டும். அந்தப் பாக்கியம் இல்லாத நீ இங்கிருந்து ஓடிவிடு. அழுதுகொண்டே துருவன் தனது தாயிடம் சென்று நடந்ததைக் கூறினான். மகனே, எனது துரதிர்ஷ்டம் உன்னையும் பாதித்துள்ளது. வருந்தாதே, மனிதர்களின் மடியில் அமர்வதில் என்ன பெருமை உள்ளது துருவா? நீ பகவானின் குழந்தை. அவரது மடியில் அமர முயற்சி செய். அவரைப் பார்க்கத் தவம் செய். தாயின் அறிவுரைப்படி, ஐந்தே வயதான துருவன் வனம் சென்றான். அங்கே நாரதர் அவனுக்குக் காட்சி தந்தார். துருவா! தந்தையின் அன்பைவிட மேலான அன்பு ஸ்ரீமந் நாராயணனிடம் கொள்ளும் அன்புதான். இந்த மந்திரத்தைப் பக்தியுடன் ஜபித்து வா என்று கூறினார். சுவாமி, நான் தன்யனானேன். அடியேன் எங்கு சென்று தவம் செய்வது என்று நாரதரிடம் துருவன் வினவினான். குழந்தாய், யமுனா நதி தீரத்தில் உள்ள மதுவனத்திற்குச் சென்று தவம் செய். உனக்கு ஸ்ரீமந் நாராயணனின் பரிபூரணமான அருள் கிடைக்கும். துருவன் ஒரு மரத்தடியில் அமர்ந்து, ஏகாக்ர சிந்தையுடன் ஓம் நமோ நாராயணாய எனும் மந்திரத்தை ஜபித்துக் கொண்டு தவம் செய்தான்.
சில நாட்கள் கழித்து அரசன் உத்தானபாதன், தான் செய்துவிட்ட தவறுக்காக வருந்தினான். ஐயோ, என்னவொரு மூடத்தனமான காரியம் செய்துவிட்டேன். ஆவலுடன் வந்த என் குமாரனைக் கட்டித் தழுவாமல் மனைவிக்குப் பயந்து ஒரு கோழையாகி விட்டேனே! குழந்தையின் மனம் என்ன பாடுபட்டதோ! அப்போது அவன் முன் நாரதர் தோன்றினார். வர வேண்டும் மகரிஷியே! தங்களை வணங்குகிறேன் என்று அரசன் வரவேற்றான். அரசே! உன் மகன் துருவன் மதுவனத்தில் தேவர்களும் அஞ்சும்படியான கடும் தவமியற்றுகிறான் என்பது உமக்குத் தெரியுமா? என்ன! ஐந்து வயது பாலகனா வனத்தில் தனியாகத் தவம் செய்கிறான்? என்ன கொடுமை! நான் இப்போதே சென்று அவனை அழைத்து வருகிறேன் என்றான். அரசே! வருந்தாதே; துருவன் உனது மடியையும்விட மிக மேலான பதவியை அடையப் போகிறான். அவன் பகவானால் ரட்சிக்கப்படுவதால் நீ கவலைப்படாதே என்று நாரதர் கூறினார். இருந்தாலும் அவன் சின்னஞ்சிறு பாலகன், அவனால் கடும் தவத்தைத் தாங்க முடியுமா? என்று மன்னன் வருத்தமடைந்தான். நிச்சயமாக முடியும் அரசே, அவன் மிகுந்த ஈடுபாட்டுடன் தவம் செய்கிறான் என்று கூறிவிட்டு நாரதர் அங்கிருந்து சென்று விட்டார். காட்டில் தவம் செய்த துருவன் ஒரு மாதம் கனிகளை உண்டான்; பிறகு ஒரு மாதம் கிழங்குகளை உண்டான்; அதன் பிறகு வெறும் இலைச்சருகுகளை உண்டான்; இறுதியில் காற்றை மட்டும் சுவாசித்துக் கடும் தவம் இயற்றினான்.
துருவனது தவத்தினால் பூவுலகு மட்டுமல்ல, தேவருலகும் தவித்தது. தேவர்கள் ஸ்ரீமந் நாராயணனிடம் சென்று முறையிட்டார்கள். பகவானே! துருவனின் தவம் எங்களை அக்னியாக எரிக்கிறது. தாங்கள் அவனுக்கு அருள் புரிய வேண்டும் சுவாமி என்றனர். வருந்தாதீர்கள் தேவர்களே! துருவன் எம்மைத் தனது இதயத்தில் சிறைப்படுத்திவிட்டான். யாம் சென்று அவனுக்கு அருள் புரியும் காலம் வந்துவிட்டது. ஆழ்ந்த தவத்தில் இருந்த துருவனுக்கு பகவான் ஸ்ரீவிஷ்ணு காட்சியளித்தார். துருவன் சிறுவனானதால், பகவானைத் துதிக்கக்கூட அவனுக்குத் தெரியவில்லை. அதனால் பகவான் தமது பாஞ்சஜன்யம் என்ற சங்கினால் அவனது கன்னத்தை வருடினார். துருவன் ஞானம் பெற்றுப் பகவானைத் துதித்தான். குழந்தாய்! ராஜ்யத்தை விரும்பித் தவமியற்றினாய். ஆகையால் நீண்ட காலம் சகல சவுபாக்கியங்களுடன் ஆட்சியை நடத்தி வா. பிறகு அனைத்திற்கும் மேலானதும் நிலையானதுமான துருவ நட்சத்திரமாக என்றென்றும் ஒளிர்வாய். பகவானே! தங்களால் அனுக்ரஹிக்கப்பட்டேன். எனது தாய் தந்தையருக்கும் மோக்ஷமளித்து அருள் புரியுங்கள் என்றான். பகவான் அவ்வாறே அருளி மறைந்தார். துருவன் நாடு திரும்பினான். அரசன் உத்தானபாதன் உரிய காலத்தில் துருவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, வானப்பிரஸ்தம் சென்றார். காட்டிற்கு வேட்டையாடச் சென்ற துருவனின் தம்பி உத்தமன் ஒரு யக்ஷனால் கொல்லப்பட்டான். அவனைத் தேடிச் சென்ற அவனது தாய் சுருசி காட்டுத்தீக்கு இரையானாள். இதை அறிந்த துருவன் யக்ஷர்களின் மீது போர் தொடுத்தான். பாட்டனார் மனு கூறியதால், போரை நிறுத்திய துருவனிடம், யக்ஷர் தலைவனான குபேரன்... துருவா! போரை நிறுத்து. உனக்கு வேண்டும் வரம் அளிக்கிறேன். யக்ஷர் தலைவனே! பகவானிடம் திடமான பக்தியைக் கொடுங்கள். பக்தி செய்வதில் எனக்குச் சலிப்பே வரக்கூடாது. நல்லது! அப்படியேயாகுக. துருவன் 36,000 ஆண்டுகள் அரசு புரிந்த பின் பகவானுக்கு மிக நெருங்கியவர்களான சுநந்த, நந்தர்கள் திவ்ய விமானத்துடன் துருவனை வைகுந்தத்திற்கு அழைத்துச் செல்ல வந்தனர். ஐயனே! என் தாயையும் என்னுடன் அழைத்துச் செல்ல அனுமதி வேண்டுகிறேன். மாமன்னரே, சற்று விமானத்தைப் பாருங்கள். தங்களது தாயார் முன்னரே அதில் அமர்ந்து உள்ளார். பகவானுக்குத் தங்கள் உள்ளக்கிடக்கை தெரியாதா? ஆஹா, என்னவொரு பேறு பெற்றோம் என்று அதிசயித்தான் துருவன். அந்த துருவனே இன்றும் துருவ நட்சத்திரமாக விளங்குகிறான்.

Friday, May 11, 2012

மனிதமும் சனாதனமும் - பகுதி 2

உண்மையில் நாம் எல்லோருமே அறியாமைப் புலியால் பின் தொடரப்படுகின்றோம். 

இறைவன் உயிர்களின் மீது கடலினும் மிகு கருணை உடையவராய் இருக்கின்றார். மனித வாழ்வின் லட்சியத்தை பக்குவப்படுத்திக் கொள்ள மனிதனால் நிச்சயம் முடியும்.

கடவுள் என்ற ஆள்பவரும்ஜீவர்கள் என்ற ஆளப்படுபவரும் சுயத்தின் இயற்கைக் கட்டாயத்தில் இருப்பவர்கள் அல்லவா?.

 அதாவது கர்ம வினைப்படி (சனாதன தர்மத்தின்) அடிப்படையில் இச் செயல்பாடுகளுக்கும் விளைவுகள் இருக்கத்தான் வேண்டும்.  நான் ஆளப்படவில்லை சுதந்திரமானவன் என்று கூறினால் அவன் ஞானமற்றவனே. குறைந்த பட்ச கட்டுப்பட்ட வாழ்வில் ஒவ்வொரு விதத்திலும் ஜீவன் ஆளப்படுகிறது.
பிரகருதி (பௌதீக இயற்கை) அதன் நிலைப்புக்காலம்,அதன் தோற்றம்பிரபஞ்சத்தின் மொத்தத் தோற்றம்,அதன் நிலைப்புக்காலம்என பல்வேறு கொள்கைகளையும் செயல்களையும் உடையது. 

கடவுள் யார்?,  

உயிர்கள் யாவை?,
பிரகிருதி என்றால் யாது?,  

பிரபஞ்சத்தோற்றம் என்பது என்ன?, 
இவைகள் யாவும் காலத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
உயிர்களின் செயல்கள் யாவை 

அவைகளின் நோக்கம் அவற்றின் இறுதி என்பதெல்லாம் நாம் அறியப்பட வேண்டியது என்பதே வேதத்தின் விளக்கமாய் உள்ளது,
 

 1. இறைவன் (பரம புருஷன்)
2.உயிர்வாழி (ஜீவன்)
3.இயற்கை (பிரகிருதி)
4.காலம் (நித்யம்)
5.செயல். (கர்மம்)

          இந்த ஐந்தில் இறைவனும்உயிர்களும்,காலமும் நித்யமானவைஎப்போதும் இருந்து கொண்டிருப்பவை. செயல்கள் -அதாவது கர்மா,முக்குணங்களால் நிகழப்பெறுபவை. 

இதனை இறைவன்மனிதனுக்கு (நிலையற்றதாய் விளங்கும் பிரகிருதியின்) இயற்கையில் தோன்றிய மனிதனுக்குக் கொடுத்த சுதந்திரத்தின் வழியாக வந்துற்றது. முக்குணங்கள் நற்குணம் (சத்வ)தீவிர குணம் (ரஜோ)அறியாமை (தமோ) நினைவிற்கெட்டாத காலத்தில் இருந்து பல்கோடிப்பிறப்பினின்றும் இயற்கை குணஇயல்பு கலவையாலும்நித்யமான காலத்தின் பார்வையாலும்நம் செயல்களின் பலன்களால்நாம் துன்புறவோ அல்லது இன்புறவோ செய்கின்றோம். 

வாழ்வின்யாவற்று நிலையிலும் நம் செயல்களின் விளைவுகளாலயே துன்பம்இன்பம் என இருவினையை வேண்டியவர்களாகின்றோம். இதுவே கர்மம் எனப்படுவது.

 வைணவ தத்துவப்படி உலகின் தோற்றம் பொய்யாக ஏற்றுக்கொள்ப்படுவதில்லை. அது உண்மையாக ஆனால்,நிலையற்றதாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. 

உவமையாக கூறப்போனால்: வானில் வந்த மேகம் மழை தருகிறது. பயிர்கள் செழிக்கின்றன. அதே சமயம் மழைக்காலம் தீர்ந்தவுடன் மேகங்கள் அகன்று விடுகின்றன. மழையில் வளம் பெற்ற யாவும் வாடியும் விடுகின்றன. இது போலவே பௌதீக தோற்றம் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தோன்றி சில காலம் இருந்து பின்மறைகிறது. இது நிலையற்றதற்கு ஒரு விளக்கம்.

எனவே இயற்கையின் செயல்கள் யாவும் இவ்வாறானவையே. இதுபோல கர்மம் நிலையற்றதே. நிச்சயமாகநித்தியமானதல்ல. எந்த ஒரு செயல்களின் விளைவுகள்பின் விளைவுகள் இவற்றினின்றும் விடுதலை பெற எவ்வித செய்கையினை நாம் செய்ய வேண்டும் என்பதை நாம் சந்தேகமில்லாமல் அறிய மாட்டோம்.

உயிர்கள் தம் உடல் பற்றிய (சம்பந்தப்பட்ட) உணர்வுகளையே உடையவை. ஆனால் இறைவனோ எல்லா உடல்களையும் உணர்பவன். 

தூய்மையில் சத்வ குணத்தில் இருந்து செயல்களின் விளக்கம் யாவை என ஜீவன் புரிந்து கொள்கையில் இந்த கர்மங்களை மாற்றிவிட முடியும். அவ்வாறு செய்வானேயானால் கடந்த கால செயல்களின் விளைவுகளையும் அதன் பின் விளைவுகளையும் மாற்றிவிட முடியும். எனவே கர்மம் நித்யமானதில்லை. முன் கூறியது போல இறைவன் ஜீவன்காலம் இவைகள் மட்டுமே நித்யமானவை. கர்மம் மாறுதலுக்கும்,மாற்றுதலுக்கும் உட்பட்டவை.

                இப்பிரபஞ்ச இயற்கையில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இயற்கையின் சீற்றமோஇயற்கையில் மாறுதலோ,மாறும் இயற்கைச் சூழலோஅதிக வெப்பமோஅதிகக் குளிரோஅதிகக் காற்றோபேரிடர் அழிவுகளோநல் வளங்களோமனித பொது மன மாற்றமோமக்களை சமூக இயக்கமாகவும்அரசின் இயக்கமாகவும் மாற்றும் தலைகீழ் மாறுதல்களோஇவைகளால் எல்லாம் ஏற்படும் புதுப்புது சூழல்களால் எவரும் எதிர்பாராதவாறு நிகழ்பெற்றன என்றால் இறைவனின் கருதுதலால் அன்றி இவைகள் (அதிசயங்கள்)  நிகழந்திருக்க முடியாது

இன்னும் பலப்பல நிகழ இருப்பவையாகவும் இருக்கின்றன. 

இவற்றிற்கெல்லாம் ஒரு நாயகன்ஒரு ஆளுநன் இருக்கின்றான். 

அவனே செயல்படுகிறான். ஆளப்படாத ஒரு பொருளை தோற்றுவிக்க முடியாது. 
ஆண்டவன் இருப்பதை உணராதவரை அவ்விதம் இருப்பவர்கள் சிறுபிள்ளைத்தனம் கொண்டவர்களே. 

குதிரையாலோமாட்டினாலோவேறு ஒரு மிருகத்தாலோ இழுக்கப்படாத நிலையில் ஒரு பேருந்து ஓடுவதை வினோதமாக சிறுகுழந்தை அதன் அறியாத்தன்மையில் பார்க்கலாம். ஒவ்வொரு இயந்திரத்திற்குப் பின்னும் ஒரு மனிதன்இயக்குபவன் உள்ளான் என்று அக்குழந்தை அறிய மாட்டாது.

 மனிதனின் தூய உணர்வின் செயல்கள் இறைவனின் இச்சையுடன் ஒருங்கிணைந்து நிற்கும். அது அவனை மகிழ்விக்கும். அதற்காக உலகியல் செயல்களை எல்லாம் அவன் நிறுத்தி விட வேண்டுமென்பதில்லை. அதே சமயம் அவனுடைய செயல்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

 சுத்தமான செயல்களே பக்தி என்று அழைக்கப்படுவதாலும்பக்தியின் செயல்கள் சாதாரண செயல்கள் போலத் தோன்றலாம். ஆனால் அவைகள் களங்கப்படாததாகும். நடத்தையினை விட மனப்பாங்கே முக்கியத்துவம் பெற்றவையாகும். 

உடல் சம்பந்தமான கருத்துக்களில் இருந்து ஒருவனை விடுதலை செய்வதற்காகவே வேத நூல்களில் பல்வேறு உபதேசங்கள் அருளப்பட்டன

  மானுடனை நேரடியாகவே ஆன்மாவின் தொடர்புடையவனாக்கி ஆன்ம விடுதலை பெற உதவி செய்தவன் கண்ணன். 
அவ்வுதவியைப் பெற பக்குவம் இன்றி அர்ஜுனன் இருந்தான். இறைவனே அவனை வழிநடத்தி மேம்படச் செய்தார். வாழ்வில் உடலோடு தொடர்புடைய எண்ணங்களில் இருந்து ஒருவன் விடுபட வேண்டும். இதுவே ஆன்மீகவாதியின் துவக்கச் செயலாகும். விடுதலை பெற விரும்புவன்முதலில் அவன் இந்த ஜட உடல் அல்ல என்பதை உணர வேண்டும். 
 
 
 

Thursday, May 10, 2012

துவாரகா ராமதாசர்

கண்ணன் அரசு செய்த துவாரகாபுரிக்கு அருகில் டாங்கேர் என்ற கிராமத்தில் ராமதாசர் என்று பெயர் கொண்ட அந்தணர், உஞ்சவிருத்தி எடுத்து ஜீவித்து வந்தார். அன்றைக்கு அமுதுபடி செய்ய வேண்டிய அரிசி கிடைத்தவுடன் திரும்பி விடுவார். அடிக்கடி துவாரகை சென்று துவாதசியில் ஏழைகளுக்கு அன்னமிட்டும், பாகவத புராண கதைகளை மக்களுக்கு எடுத்துரைத்தும் பஜனை செய்தும், தூய்மையான பக்தியுடன் இறைவழிபாட்டில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரது நல்லொழுக்கத்தையும், அவரையும் புகழ்ந்தும், இவர் அடிக்கடி துவாரகை சென்று வந்ததால் இவரை துவாரகா ராமதாசர் என்ற பெயரில் மதிப்புடனும், மரியாதையுடனும் கொண்டாடி வந்தார்கள்.இப்படியே 25 ஆண்டுகள் கழிந்தது. அவருக்கு முதுமை வந்ததால் அடிக்கடி துவாரகை செல்ல முடியவில்லை. ஒரு சமயம், உடல்நிலை சரியில்லாதநிலையில், பிடிவாதமாக துவாரகை சென்று, கண்ணன் சன்னதியில் நின்று மெய்யுருக கிருஷ்ணா ! அடுத்த துவாதசிக்கு நான் வர முடியாவிட்டால், என் வீட்டிற்கு வந்து அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். பரந்தாமன், ராமதாசர் முன் தோன்றி, உன் பக்திக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நீ எனது சிலையை என்னுடைய தேரில் வைத்து உங்கள் ஊருக்கு அழைத்து சென்றால் வருகிறேன், என்றார்.
சிலையை துவாரகையிலிருந்து எடுத்துச் சென்று விட்டால், விக்ரகத்தை காணாமல், அர்ச்சகர்கள், நான் திருடிவிட்டதாக நினைத்து எனக்கு தண்டனை தந்தால் என்ன செய்வது, என்று குழம்பினார் ராமதாசர். கடைசியில் நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று மனதை தேற்றிக் கொண்டு, நடுநிசியில் அங்கு வந்து சிறிய தேரில் கிருஷ்ண விக்ரகத்தை எழுந்தருளச் செய்து, துவாரகையிலிருந்து டாங்கேர் வந்து, வீட்டின் கூடத்தில் வைத்து பூஜை செய்தார். மறுநாள் விடியற்காலையில், அர்ச்சகர்கள் கோயில் கதவை திறந்து பார்த்தவுடன். அங்கு கிருஷ்ணன் விக்ரகத்தை காணவில்லை. முதல் நாள் இரவு, அதிக நேரம். ராமதாஸ் துவாரகை கோயிலில் இருந்தததால், அவர்தான் எடுத்துச் சென்றிருப்பார். என தீர்மானித்து கோஷ்டியாக எல்லாரும் டாங்கரே வந்தனர். இவர்கள் வருவதை அறிந்து ராமதாஸ். பயந்து ஒரு பெட்டியில் அந்த விக்ரகத்தை வைத்து தன் வீட்டு கிணற்றிற்குள் இறக்கிவிட்டார். அர்ச்சகர்கள். கிருஷ்ணர் விக்ரகத்தை எடுத்து செல்ல ராமதாசர் வீட்டிற்கு வந்தனர். வந்தவர்கள் இவரிடம் எதுவும் கேட்கவில்லை. வீடு முழுவதும் சோதனை செய்தனர். வீட்டில் கிடைக்கவில்லை. ராமதாசரது பக்தியை உலகுக்கு எடுத்துக்காட்ட நினைத்த பரமாத்மா, கிணற்றுக்குள்ளிலிருந்து, நான் இங்கே தான் இருக்கிறேன். இந்த ராமதாஸ் என்னை இங்கே ஒளித்து வைத்திருக்கிறான் என்று குரல் கொடுத்தார். இதைக்கேட்ட அர்ச்சகர்கள், கிணற்றுக்குள் இறங்கி, விக்ரகத்தை எடுத்துவந்து ஆனந்தத்துடன் தேரில் எழுந்தருளச் செய்தனர்.
ராமதாஸ் இறைவனை வணங்கி, கிருஷ்ணா ! உன் சொற்படிதானே நான் விக்ரகத்தை எடுத்து வந்தேன். நீ எனக்கு திருட்டு பட்டம் வாங்கி கொடுத்துவிட்டு, என்னையும் விட்டு செல்வது சரியா ? என்று மனமுருகி வேண்டினார். பக்தர்கள் துயரை தீர்க்கும் பகவான், தாசரிடம் அவருக்கு மட்டும் கேட்கும்படியாக என் எடை அளவு பொருள் தருவதாக இந்த அர்ச்சகர்களிடம் சொல் ! அர்ச்சகர்கள் விக்ரகத்தை இங்கேயே விட்டுச் செல்வார்கள், என்று அருளினார். ராமதாசரும், அர்ச்சகர்களை வணங்கி, இறைவனின் எடைக்குஎடை துலாபாரமாக பொன் தந்தால், விக்ரகத்தை எனக்கு தருவீர்களா? என்று கேட்டார். அவர்கள் தாசரிடம், நீரோ அன்னக்காவடி. உஞ்சவிருத்தி எடுத்து ஜீவிப்பவர். உம்மால் எப்படி விக்ரகம் அளவு பொன் தர முடியும், எனக்கேட்டு விட்டு, தைரியத்துடன் சம்மதித்தனர். இதற்குள் இந்த விபரம் தெரிந்தவுடன், ஊர்முழுவதும் அங்கு கூடிவிட்டது. தராசுக்கோல் கொண்டு வரப்பட்டு. அதில் ஒரு தட்டில் கிருஷ்ண விக்ரகம் வைக்கப்பட்டது. ஊரில் உள்ளவர்கள் ராமதாசர் எப்படி இவ்வளவு பவுன் தரப்போகிறார் என ஆச்சரியப்பட்டனர். தாசர், உள்ளே சென்று மனைவியின் மூக்குத்தி திருகாணியுடன் வந்தார். இது என்னது, தாசரே, பொன் என்று அர்ச்சகர்கள் கேட்கவும், தாசர், காண்பித்த மூக்குத்தி திருகாணியை கண்டு நகைத்தனர். இறைவனிடம், அசையாத பக்தியுடைய, ராமதாசர், அந்த மூக்குத்தி திருகாணியை தட்டில் வைத்து, இறைவா உன் வாக்கு பொய்யாகக்கூடாது, என வேண்டினார். எல்லாரும் ஆச்சரியப்படும் வகையில் இரு தட்டும் ஒரே சமநிலையில் நின்றது. அர்ச்சகர்கள், தாசரது பக்தியை மெச்சி, இறைவன், இங்கேயே இருக்க இசைந்துள்ளான் என எண்ணி, கிருஷ்ண விக்ரகத்தை தாசரிடம் கொடுத்து சென்றனர். பக்தி உண்மையானதாக இருந்தால் பகவான் நம்மோடு எப்போதும் இருப்பான்.

எதிர்கால கவலை வேண்டாம் - »சின்மயானந்தர்


எல்லாவற்றையுமே உலக நன்மைக்காகக் கொடுப்பவர்கள்தாம் நமது பெரியோர்கள், ஆச்சார்ய புருஷர்கள், தீர்க்கதரிசிகளான ஞானிகள், அவர்கள் எதையுமே தமக்கு என்று வைத்துக் கொண்டதில்லை. அதனால் தான், உலகமே அவர்கள் பின்னால் அடிபணிந்து போய்க் கொண்டிருக்கிறது.
கடவுள் நமக்கு உடலைக் கொடுத்தார். அதில் உள்ளத்தையும் கொடுத்தார். இரண்டுமே நமக்குப் பிறவியில் கிடைத்த சாதனங்கள்தாம். அவற்றை வைத்துக்கொண்டு நம்மை நாமே உருவாக்கிக் கொள்வது தான் நம் கையில் இருக்கிறது.
நம்மிடம் உள்ள சக்தி, மோசமான பண்புகளான கோபம், ஆசை, பொறாமை போன்றவற்றால் வடிந்துபோகிறது.
உயர்ந்த லட்சியங்களுக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும்போது நமது உள்ளத்தில் அரியதோர் சக்தி தூண்டி விடப்படுகிறது. இவை நமது தீய பண்புகளால் வடிந்துபோய்விடும் அபாயம் உண்டு. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொண்டால் நமது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
நமது வாழ்க்கையில் மூன்றுவிதமான வடிகால்கள் உள்ளன. 1. கடந்த காலத்தையே நினைத்துக் கொண்டிருப்பது. 2. எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கனவு கண்டுகொண்டிருப்பது. 3. நிகழ்காலத்தில் நடப்பதை மிகவும் நிலையானதாக எண்ணி, அதையே கவனித்துக் கொண்டிருப்பது.
நம்முடைய முயற்சியில் அளவுக்கு மீறிய எதிர்கால கவலைகள் இடம் பெறுவது நமக்கு ஏமாற்றத்தையே அளிக்கும்.
வாழ்க்கையில் பிடிவாதமாக ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்ந்து பழகிவிட்டவர்கள் அதை மாற்றிக் கொள்வது சிரமம்தான். ஏனென்றால், பிடிவாதமான சில பண்புகள் அவர்களிடம் ஊறிப்போய் இருக்கின்றன

உலகம் நன்மை பெறட்டும்-சின்மயானந்தர்

* உயர்ந்த லட்சியத்திற்காக நம்மை அர்ப்பணித்துக் கொண்டால் உள்ளத்தில் ஆற்றல் தூண்டப்படுகிறது. இதன் மூலம் லட்சியத்தை நோக்கி விரைந்து செல்ல முடியும்.
* கோபம், ஆசை, பொறாமை போன்ற தீய பண்புகளால் நம் ஆற்றல் வீணாகிவிடும். முயற்சிகளில் முழுவீச்சுடன் ஈடுபட முடியாமல் தடுமாற்றம் ஏற்படும்.
* கடவுள் கொடுத்த உடலும், உள்ளமும் நமக்கான சாதனங்கள். அவற்றை வைத்துக் கொண்டு நம்மை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கான சுதந்திரமும் நம்மிடம் தான் இருக்கிறது.
* தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், உலக நன்மையைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்களே உயர்ந்தவர்கள். அவர்களின் பின்னால் செல்ல உலகமே காத்துக் கொண்டிருக்கிறது.
* பிறருக்காக வாழவேண்டும் என்ற பொது நல உணர்வு கொண்டவர்கள், சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பர்.
* எண்ணத்தில் தூய்மையை வளர்த்துக் கொண்டால், ஒவ்வொரு பொருளிலும் புனிதம் நிறைந்திருப்பதை உணர முடியும்.
-

Thursday, May 3, 2012

காஞ்சிப் பெரியவர் வாக்கு

கந்தையிலே அழுக்கிருந்தா கசக்கி எடுத்துவிடு!
சிந்தையிலே அழுக்கிருந்தா சிவத்தை நினைத்து விடு

* சிறிய தர்மங்கள் அனைத்தையும் நாம் மறந்து விடுகிறோம், குறிப்பாக நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்க வேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல ஆடை இருக்க வேண்டும் என்பதைக் கவனிக்கத் தவறுகிறோம். நமது ஊர் கோயிலில் சுவாமியின் வஸ்திரம், சுத்தமாக அழுக்கில்லாமல் இருக்கிறதா என்பதில் மனதைச் செலுத்தும் போது, நம் மனதில் அழுக்கு போய்விடுகிறது.
* சந்தனமரத்தை சுற்றி பாம்பு இருந்தாலும், அதனுடைய விஷத்தால் சந்தன மரம் கெடுவதில்லை. அதுபோல், நல்லவர்களுக்கு கெட்டவர்கள் சேர்க்கை ஏற்பட்டாலும், கெட்டவர்களாக மாறாமல் சந்தனமரத்தைப் போல்
உலகுக்கு நன்மை புரிவார்கள்.
* இறைவனை நினைத்துச் செய்யும் அனைத்து செயல்களுக்கும் நன்மை உண்டு, அதேபோல் அறியாமல் செய்தால் கூட அதற்கும் பயன் உண்டு.
* மந்திரங்களை உச்சரிக்காமல் இருந்தால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை, நமக்குத் தான் நஷ்டம்.
* குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு சமுதாய கடமை என்று புறப்பட வேண்டியதில்லை. சமுதாயக்கடமை செய்தாலும், குடும்பத்தைக் கவனிப்பதும் கடமை என்ற உணர்வோடு சேர்த்து செய்ய வேண்டும்.
* வாழ்க்கையை எளிதாக்கிக் கொண்டால், பொருளுக்காக அலைய வேண்டிய
அவசியமில்லை.
* "நாம் செய்கிறோம்' என்கிற எண்ணம் போய்விட்டால், அதுவே இறைவனுக்கு சதாகால நமஸ்காரம் ஆகும்.
* நம் அன்பை வெறும் பேச்சாக இல்லாமல் செயலில் காட்டினால், இறைவனின் அன்பு நமக்கு கிடைக்கும்.
* பக்தி இல்லையென்றால் அறிவினால் பயன் இல்லை, எனவே கல்வியின் லட்சியம் ஈஸ்வர பக்தியை வளர்ப்பது தான்.
* இந்து மதம் தவிர மற்ற அனைத்து மதத்தினரும் அமைப்பு ரீதியில் உள்ளனர். நமக்கு அமைப்பு ரீதிபோதாது, இங்கு தனி மனிதனின் சக்தியில் மதம் வாழ்கிறது.
* கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கினால் போகும். ஆனால், சிந்தையில் உள்ள அசுத்தம் நீங்க சிவத்தை நினைக்க வேண்டும். அப்படி செய்தால் மனம் தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும்.
* பணம், பேச்சு, செயல் அனைத்தும் அளவுடன், கணக்குடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது கெட்டதான செயல்களில் ஈடுபடக்கூடாது. ஆத்மாவுக்கோ, உலகத்திற்கோ உபயோகம் இல்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது.
* சத்தியம் என்றால் வாக்கும், மனதும் ஒன்றுபடுவது மட்டுமல்ல, நல்ல மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதாகும். சத்தியம், நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.

Tuesday, May 1, 2012

கண்ணாகத் தன் அருளே காட்டினான் தன்னடியேற்(கு)நோக்குருவாய் நோக்குள்ளே நுழைவான்‏

நோக்குருவாய் நோக்குள்ளே நுழைவான்

பக்குவமுற்ற சீடனை குருவே வந்து ஆட்கொள்கிறார் என்ற பொதுவான நம்பிக்கை ஆன்மீகத்தில் வலுவாகவே உண்டு. ஒரு சிலருக்கு இது எதிர்பாராதவிதமாக நடைபெறுவதுண்டு என்றும் பலருக்கு ஆண்டாண்டு காலமாய் தேடியப் பின்னரே வாய்க்கிறது என்றும் அறிகிறோம். எதிர்பாராத விதத்தில் நடைபெறும் போது அதை பிந்தைய சென்மங்களில் செய்த முயற்சியின் தொடர்ச்சி என்றும் புரிந்து கொள்ளப் படுகிறது.

எப்படியாயினும் சீடன் பக்குவமுற வேண்டும்.

மேல்தோல் பச்சையாய் இருக்கும் வரை காய். அதில் சற்றே மஞ்சள் காணத் துவங்கும் போது கனியாகிக் கொண்டிருக்கிறது என்கிற குறிப்பு தெரிகிறது. அதைப் பறித்து அரிசி டப்பாவுக்குள்ளோ அல்லது வைக்கோற்புல் கூடைக்குள்ளோ வைத்துப் பழுக்க வைப்பர். இதை மூட்டம் போடுவது என்று சொல்லக் கேள்வி. அதை நல்ல முறையில் செய்வதற்கும் அந்தத் துறையில் தேர்ச்சி இருக்க வேன்டும். குரு ஒருவருக்கே சீடன் கனிந்து கொண்டிருக்கும் பக்குவத்தை முறையாக புரிந்து கொள்ள முடியும்.

பத்திரகிரியார் பாடல் ஒன்று :

தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டெல் லாமறிந்து
குருவையறிந் தேநினைந்து கும்பிடுவது எக்காலம் ?

( தெரிவை terivai : (page 2036) (யாழ். அக.) 4. Appearance, visibility; தோற்றம். (W.) 5. That which is known or ascertained; அறியப்பட்டது )
இதில்காய் கனிந்து கொண்டிருக்கும் நிலையை குறிப்பிடுவதோடு மட்டுமல்லாமல் ’எல்லாமறிந்த அந்த குரு என்னை அடையும் நாள் எப்போதோ’ என்ற காத்திருக்கும் மன அடக்கத்தையும் காட்டுகிறது.

நல்ல சீடர்களாக அறியப்பட்டவரின் வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து அப்பேற்பட்டப் பக்குவம் என்பது என்ன என்பதை ஓரளவு கண்டு கொள்ளலாம்.

அப்படி ஒரு நல்ல சீடர் சுப்பிரமணியன் என்னும் தமிழ் புலவர். உ.வே. சாமிநாதையர், மீனாட்சி சுந்தரம்பிள்ளை போன்ற தமிழறிஞர்களால் சங்ககால இலக்கியங்களுக்கு நிகரான தமிழ் பாடல்கள் படைக்க வல்லவர் என்று பாராட்டப் பெற்றவர்.

அவரைத் தேடி இரண்டு புத்தகங்கள் அவரது மாமனார் வழியே வந்தடைந்தது. குருவின் திருவுள்ளம் யார் மூலம் செயல்படும் என்பதை யாரும் அறியார். பிற்காலத்தில் தன் மகளை விட்டு விட்டு மனையைத் துறந்து பிட்சாடனம் போவதற்கான வழியை அவரே திறந்து விட்டார்.

அருணாசல ஸ்துதி பஞ்சகம் மற்றும் நான் யார் என்ற தலைப்புடைய புத்தகங்களே அவை. சுப்பிரமணியன் போய் முருகனார் என்ற சீடர் கிடைப்பதற்கு வழி செய்தன.

ஸ்ரீ ரமண பகவானின் மிகப்பிரியமான பக்தருள் ஒருவர் முருகனார். சீடன் என்பதன் இலக்கணத்தை அறிய வேண்டுமென்றால் அது முருகனாரின் வாழ்க்கையை அறிவதே எனலாம்.

சென்னையில் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார் சுப்பிரமணியன். பகவானைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த போதெல்லாம் உடனே ஆஸ்ரமத்திற்கு வந்துவிடுவார். ஆனால் திரும்பிப் போகும் போது தேனில் விழுந்த வண்டைப் போல சிக்கித் தவிப்பார்.

கிளம்பிச் சென்றவர் சற்று நேரத்தில் திரும்பி வந்து நிற்பார். இதைக் கண்ட பகவான் யாரையாவது அவர் கூடவே அனுப்பி ரயில்வே ஸ்டேஷனில் விட்டு வரும்படி செய்வார். அப்படி அனுப்பியும் சில நேரங்களில் ஆஸ்ரமத்திற்கு திரும்புவதுண்டு .

இரயில் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் தன்னை மறந்த நிலையில் பிளாட்பாரத்தில் மேலும் கீழும் உலவிக் கொண்டு இருப்பார். அவரது நிலை பரிதாபமாக இருக்கும். அதன் பின்னர் ரயில் ஏற்றிவிட்டு கிளம்பும் வரை கூட இருந்து வழியனுப்புவதை சில நண்பர்கள் வழக்கப்படுத்திக் கொண்டனர்.

அப்பேற்பட்ட மனநிலை வாய்க்காத வரையில், நம்மை ஆன்மீக சாதகர்கள் என்று சொல்லிக் கொள்ளவோ அல்லது குரு அருள் இல்லையே என்று ஏங்கவோக் கூட தகுதியுள்ளவர்களா என்ற கேள்வி மனதில் எழுகிறது.

ஸ்ரீ முருகனார் பகவான் தரிசனத்திற்கு வருவதே ஒரு வினோதம். பகவானைப் பார்த்தமாத்திரத்தில் அவர் உள்ளம் நெகிழ்ந்து உடல் ஒடுங்கி நடை தளர்ந்து விடும். அவரது பார்வை பகவானைத் தவிர வேறெதையும் பார்க்காது. இந்த நெகிழ்வுடன் பகவானைப் பணிந்துவிட்டு ஹாலில் ஒரு பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டு பகவானைப் பார்த்த வண்ணம் இருப்பார். அவரது குருபக்தி காலத்தைக் கடந்து நிற்கிறது.

இங்கே கபீர்தாசரின் அனுபவத்தை முருகனாரில் காண்கிறோம்.

गुरु मूरति गति चन्द्रमा, सेवक नैन चकोर ।
आठ पहर निरखत रहे, गुरु मूरति की और ॥

தண்நிலவாம் குருவுருவம் சீடனுக்கு, சகோரமாய் கண்கள் தொடருது
எண்சாமம் நினைவின்றி போகுது, எல்லாம் குருவுருவில் மறந்து

எட்டு ஜாமம் போவது அறியாமல் வேறெந்த சிந்தனையுமின்றி அமர்ந்திருக்க வேண்டுமானால் அது, குரு சீடனுள் தூண்டிவிட்ட மெய்யுணர்வு அனுபவம் ஆகத்தான் இருக்க முடியும்.

அவ்வாறு அருள் நோக்கால் தம்மை மறக்க நேரிடும் சீடன், மீண்டும் மீண்டும் அதற்காக ஏங்குவதை சகோர பட்சி, நிலவின் ஒளிக்காக ஏங்குவதை ஒப்பிடுகிறார் கபீர்.

வெறும் நிலவின் ஒளியிலேயே அமிர்தத்தை உண்டு வாழ்வது சகோர பட்சி என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. பிற பறவைகள் போல புழு பூச்சிகளை உண்ணாமால், காய் கனிகளிலும் விருப்பம் கொள்ளாத பட்சி அது.

இது பூவுலக ஆகர்ஷணங்களுக்கு ஆட்படாமல் மிக உயர்ந்த ஆன்ம தத்துவத்திற்காக ஏங்கும் சீடனின் நிலையை குறிப்பிடுவதற்காக சொல்லப்படுவது. குரு அருளுக்கு பாத்திரமாவதே மிகப் பெரிய சாதனையாகும்.

இதற்கானக் காரணத்தை முருகனாரின் பாடல் ஒன்றிலேயே காணலாம். முருகனாரின் திருக்கண்ணோக்கம் (9)

நோக்குருவாய் நோக்குள்ளே நுழைந்தானைத் தந்நோக்கால்
நோக்குறுவார் நோக்காரா நோக்காதார் நோக்குதலால்
நோக்கரிய நோக்கானை நோக்கலுறிற் றடையாமந்
நோக்கற வேங்கடனொடு கண்ணோக்க நா(ம்) ஆடாமோ

நோக்குருவாய் நோக்குள்ளே நுழைந்தானை :பார்க்கும் பார்வையில் பார்ப்போனாயிருக்கும் உணர்வுருவாயிருந்து, பார்வையினூடே உள்ளத்தில் நுழைந்தானை
தந்நோக்கால் நோக்கு உறுவார் :தன்னை உணரும் மெய் அறிவினால் அன்பர்கள் காண்பார்கள்.
நோக்காரா நோக்காதார் : நிறைந்த பார்வையிலாதார் காண இயலாது.
நோக்கரிய நோக்கானை :பார்பதற்க்கரிய மெய்யறிவு உடையானைக்
நோக்கலுளில் தடையாம் :காண்பதனால் தன்னைக் காண்பதிலுள்ள தடையாயிருக்கும்
அந்நோக்கற : (அந்த நோக்கு அற) அந்த சுட்டறிவு (அகந்தை) அறவே நீங்கும்.
வேங்கடனொடு கண்ணோக்க நா(ம்) ஆடாமோ:(அத்தன்மையான) வேங்கடனை கண்டு களித்திருப்போம்.
(வேங்கடராமன் ரமணரின் இயற்பெயர்)
குருவின் அருட்பார்வை தம்மை தரிசிக்கும் அடியார்களின் விழிவழியாக ஊடுருவி சென்று, எழும்பும் அகந்தையை எழுமிடத்திலேயே அழித்து விடும் ஆற்றல் உடையது. அகந்தை அழிந்தால் எஞ்சியிருப்பது மெய்யுணர்வே. இந்த மெய்யுணர்வில் நிலைப்பட்டவர்க்கு தனக்கு அன்னியமாய் எதுவும் தோன்றாது.அப்படிப்பட்ட மெய்யுணர்விற்கு ஏதேனும் தடையிருந்தால் அதை அறவே நீக்குவதே பகவானது அருள் நோக்கு என்று கூறுகிறார்.

குருவாகி வந்தானோ குலமறுக்க வந்தானோ
உருவாகி வந்தானோ உருவழிக்க வந்தானோ

என்று குருவருள் பெற்ற சீடன் நிலையை பட்டினத்து அடிகள் அருட்புலம்பலில் (489) சொல்கிறார். உருவழிக்க வந்தானோ என்பதை தன்னோக்கால் நோக்கு உறுவார் என்ற முருகனாரின் வரிகளால் உண்மை என்று அறியலாம். மெய்யுணர்வை அடைந்த நிலையில் புற உருவின் நினைவை இழப்பவன் சீடன் அன்றோ !

[Thanks for photo courtesy : davidgodman.org ] Muruganar seated on the Verandah


அவ்வாறு அவர் அடைந்த அனுபவத்தை ஒரு சிறிய நிகழ்வு மூலம் அறிகிறோம்.

வேறொரு ஆசிரமத்தைச் சேர்ந்த சீடர் ஒருவர் அவர்களது குருவின் வழிமுறையை பகவான் ரமணரிடம் விளக்கிக் கொண்டிருந்தார். அவர்களது முறைப்படி குரு சிஷ்யர்களை தினமும் சில ஆயிரம் செபங்களைச் செய்யச் சொல்லி இறுதியில் அதை குருவிற்கு அர்ப்பணம் செய்யச் சொல்லுவாராம். தான் அதைத் தவறாமல் செய்து வருவதாகவும் ரமணாசிரமத்தின் முறை என்ன என்பதையும் தயங்கிய படியே கேட்டார்.

இதைக் கேட்ட பகவான் சிரித்துவிட்டு “ஓஹோ ! அப்படியா! பரவாயில்லையே! குருவிற்கு சிரமில்லாமலே நாமத்தை சிஷ்யர்கள் சேர்த்துக் கொடுத்து விடுகிறார்களே ! அவருக்கு நல்ல லாபம்தான்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது முருகனார் வந்தார்.

பகவான் அவரிடம் விஷயத்தைச் சொல்லி “. .அப்புறம் அந்த சிஷ்யருக்கு என்ன மிஞ்சுமோ! அசலை வைத்துக் கொண்டு வட்டியைக் கொடுப்பது போல குருவிற்கு காணிக்கைத் தர வேண்டும். எப்படி இந்த ஏற்பாடு!” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

அதைக் கேட்ட முருகனார், “அந்த குரு தேவலையே! முதலையாவது விட்டு வைக்கிறாரே ! வட்டியைத் தானே கேட்கிறார். (பகவானைக் காட்டி) இந்த குருவோ முதலையே விழுங்கி விடுமே! பிறகு வட்டியைக் கொடுப்பதற்கு யார் மிஞ்சி இருக்கிறார்கள்? வட்டியும் முதலும் ஒரு சேர தீர்ந்துவிடும் அப்புறம் என்ன இருக்கிறது " என்று கண்ணீர் மல்க பதில் கூறினார்.

பக்தியின் ஆழத்திலிருந்து வெளியான மிக உயர்ந்த நகைச்சுவை உணர்வு!

பகவானிடமிருந்து புன்முறுவலே பதிலாயிற்று.

கண்ணாகத் தன் அருளே காட்டினான் தன்னடியேற்(கு)
அண்ணாமலை ரமணன்

( திருமதி கனகம்மாள் அருளிய நினைவில் நிறைந்தவை என்ற புத்தகத்தில் காணப்படும் விவரங்களை வைத்து எழுதப்பட்டது. இது ஒரு ரமணாசிரம வெளியீடு)திருக்கண்ணோக்கம் , கடைக்கண்பார்வைக்கு ஞானியர்கள் ஏங்கியதும் இதனால்தானோ! முருகனையே குருவாக அடையப் பெற்ற அருணகிரிநாதரும்

கண்டு வேட்டுப் பொருட்கொண் டாட்டத்
தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத்
தந்து காத்துத் திருக்கண் சாத்தப் ...... பெறுவேனோ
[என்னைப் பார்த்து, என் மீது விருப்பம் கொண்டு, கொண்டாடத் தக்க பொருள் அமைந்த இன்ப உபதேச வார்த்தையை அடியேனாகிய நானும் கேட்டு உணரும்படி போதித்துக் காத்து, உனது திருக் கண்ணோக்கம் அடியேன் மீது படும்படியான பாக்கியத்தைப் பெறுவேனோ? ]
என்று திருச்செங்கோடு முருகனை நோக்கிப் பாடுகிறார்.