Wednesday, June 18, 2014

ஸ்ரீ ஸப்த மாதாக்களுக்கு உரிய காயத்ரி மந்திரங்கள்..

ப்ராம்ஹி..
ஓம் ஹம்ஸ யுக்தாய வித்மஹே
மஹா சக்தியைச தீமஹி
தந்நோ ப்ராம்ஹீ: ப்ரசோதயாத்||
மாஹேஸ்வரி..
ஓம் மஹா தேவ்யைச வித்மஹே
ருத்ர பத்னியைச தீமஹி
தந்நோ மாஹேஸ்வரி: ப்ரசோதயாத்||
கௌமாரி..ஓம்சக்தி தராயை வித்மஹே
காமரூபாயை தீமஹி
தந்நோ கௌமாரி: ப்ரசோதயாத்||
வைஷ்ணவி..
ஓம் கதாஸங்கராயை வித்மஹே
மஹாவல்லபாயை தீமஹி
தந்நோ வைஷ்ணவீ: ப்ரசோதயாத்||
வாராஹி..
ஓம் உக்ர ரூபாயை வித்மஹே
தம்ஷ்ட்ராகாரன்யை தீமஹி
தந்நோ வாராஹீ: ப்ரசோதயாத்||
இந்த்ராணி..
ஓம் மஹர் வஜ்ராயை வித்மஹே
ஸஹஸ்ர நயநாயை தீமஹி
தந்நோ இந்த்ராணீ: ப்ரசோதயாத்||
சாமுண்டி..
ஓம் கராள வதநாயை வித்மஹே
சிரோமலாயை தீமஹி
தந்நோ சாமுண்டீ: ப்ரசோதயாத்||

Sunday, June 15, 2014

ரிஷ்யசிருங்கர்

                                                    
ஒரு காலத்தில் ரிஷ்யசிருங்கர் என்ற முனிவர் இருந்தார். இவரது காலடி எங்கு பட்டாலும் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விடும் என்கிறது புராணம். இவரது வரலாற்றை வால்மீகி முனிவர் சுவைபடச் சொல்லியிருக்கிறார்.
விபண்டகர் என்ற முனிவர் மகாகீர்த்திமான். யாக, ஹோம காரியங்களில் மிக மிக சிறந்தவர். அவரது புத்திரன் ரிஷ்யசிருங்கர். தாய் முகம் அறியாதவர். பிறந்தது முதல் தந்தையை மட்டுமே தெரியும். மழை இல்லாத இடத்தில் அவர் காலடி பட்டாலே போதும். வானம் பொத்துக் கொண்டு ஊற்றும். இவர் பிறந்தது முதல் காட்டிலுள்ள தங்கள் ஆசிரமத்திலேயே வசித்தார். தந்தையும், மகனும் மட்டுமே அங்கு வசித்தனர். அவரது நண்பர்களெல்லாம் காட்டில் வசிக்கும் சிங்கம், புலி, கரடி, மான்கள், மற்ற விலங்குகள் மட்டுமே. இதைத்தவிர வேறு எந்த உலகப் பொருளையும் அறியாதவர் அவர். தந்தையைத் தவிர பிற மனித முகங்களை அவர் பார்த்ததே இல்லை. தந்தைக்கு சேவை செய்வது மட்டுமே இவரது பணி. யாகம், ஹோம முறைகளை தந்தையார் மகனுக்கு கற்றுக் கொடுத்தார். தந்தையார் கொடுக்கும் கனிவகைகள், எப்போதாவது தயாரிக்கும் பட்சண வகைகளைத் தவிர வேறு எந்த உணவையும் பற்றி தெரியாதவர். ஆசை என்ற சொல்லையே அறியாதவர். எனவே, பாவங்கள் செய்ய வழியே இல்லாத <உத்தமராக இருந்தார். இப்படிப்பட்ட அப்பழுக்கற்றவரின் காலடிகள் பட்ட இடத்தில் மழை கொட்டுவதில் வியப்பென்ன! இந்நிலையில் தான் அங்கதேசத்து அரசன் ரோமபாதன் மழையின்றி நாட்டு மக்கள் வாடுவதைக் கண்டு தானும் வாட்ட முற்றான். என்னவெல்லாமோ யாகங்கள் நடத்திப் பார்த்தான். வருண பகவான் மசியவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல, பத்தாண்டுகள் மழை தொடர்ந்து பொய்த்து விட்டது. குளங்களில் தேக்கி வைத்த தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தியும் வற்றி விட்டது. மக்கள் இடம் பெயர முடிவெடுத்தனர். அரசன் அவர்களைச் சமாதானம் செய்தான். சிறிதுகாலம் பொறுத்திருக்க வேண்டினான். எப்படியேனும் மழை பெய்ய வைக்க பூஜைகள் நடத்த உறுதியளித்தான். அமைச்சர்களையும், அவ்வூரில் மிகச்சிறந்த பிராமணர்களையும் அழைத்து ஆலோசித்தான். அவர்கள் ரிஷ்யசிருங்கர் பற்றி தாங்கள் கேள்விப்பட்டதைக் கூறினர். அந்த மகான் நம் ஊருக்குள் நுழைந்தாலே, மழை கொட்டிவிடும். ஆனால், அதற்காக ஒரு பிரதி உபகாரம் செய்ய வேண்டும், என்றனர். மழைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதாக மன்னன் வாக்களித்தான்.
அரசே! ரிஷ்ய சிருங்கரை எவ்வகையிலாவது அழைத்து வருவது எங்கள் பொறுப்பு. ஆனால், அவருக்கு உங்கள் மகள் சாந்தையை கன்னிகாதானம் செய்து தர வேண்டும். சம்மதமா? என்றனர். காட்டுவாசியாக இதுவரை காலம் கழித்த முனிவருக்கு பெண் கொடுக்க எனக்கு எப்படி மனம் வரும்? அதிலும் நாட்டின் இளவரசியை மணம் செய்து கொடுப்பதென்றால்... என்றெல்லாம் அரசன் பேசவில்லை. முழு மனதுடன் சம்மதித்தான். எனக்கு நாட்டு மக்களின் சுகம் தான் முக்கியம். என் குடும்ப சுகம் அதற்கு பிறகு தான். சாந்தையை உறுதியாக முனிவருக்கு திருமணம் செய்து வைக்கிறேன், என சத்தியம் செய்தான். இதன்பிறகு முனிவரை அழைத்து வர யார் செல்வது என்ற சிக்கல் ஏற்பட்டது. பிற மனித முகங்களையே கண்டறியாத அந்த மகானை தாங்கள் போய் அழைத்தால் வரமாட்டார் என அமைச்சர்களுக்கு தோன்றியது. பிராமணர்களும் அவரை அழைத்து வரத் தயங்கினர். அவர்கள் ஒரு உபாயம் செய்தனர். இவ்வுலகில் பெண்ணால் ஆகாதது எதுவுமில்லை. எனவே தாசிகளை அனுப்பி அவரை மயக்கி அழைத்து வருவதென்று முடிவு செய்யப்பட்டது. தாசிகள் காட்டிற்கு அனுப்பப்பட்டனர். சந்தனம், அகில், வாசனைத் திரவியங்கள் பூசி, அலங்காரம் செய்து, மனதை மயக்கும் அழகுடன், அந்நாட்டிலேயே மிகச்சிறந்த தாசிப் பெண்கள் காட்டிற்கு சென்றனர். அவர்கள் விதவிதமான பட்சணங்களையும் தயாரித்திருந்தனர். காட்டிற்கு சென்ற தாசிகள் ரிஷ்யசிருங்கரின் தந்தை எங்காவது வெளியே போகட்டும் என ஒளிந்து காத்திருந்தனர். அவர்கள் நினைத்தது போலவே, விபண்டகர் வெளியே போய் விட்டார். அந்தப் பெண்கள் இதுதான் சமயமென்று ஆஸ்ரமத்திற்குள் சென்று, முனிவரைப் பணிவாக வணங்கினர். ரிஷ்யசிருங்கருக்கு ஆச்சரியம். உலகத்தில் இத்தனை அழகான ஜீவன்கள் இருக்கிறதா? இவையெல்லாம் நம்மைப் போல் இல்லையே. கண், காது, மூக்கு, கை, கால்கள் அப்படியே இருக்கிறது. ஆனால், உடை மாறியிருக்கிறது. இன்னும் சில வேற்றுமைகள் தென்படுகின்றன. இவர்கள் உடலில் நறுமணம் கமழ்கிறது, என ஆச்சரியப்பட்டார். அப்பெண்களை அவர் உபசரித்தார். ஆஸ்ரமத்திலுள்ள கனிகள், கிழங்குகளைக் கொடுத்தார். அவர்களுக்கு பூஜை செய்தார். அப்பெண்களும் பதிலுக்கு தாங்கள் கொண்டு வந்த பட்சணங்களைக் கொடுத்து சாப்பிடும்படி வேண்டினர். அவர் சாப்பிட்டுப் பார்த்தார். தினமும் ஒரே வகையான பழமும், கிழங்கும் தின்றவருக்கு இந்த பட்சணங்கள் தேனாய் சுவைத்தன. ருசியோ ருசி.
தன்னை மறந்த நிலையில் இருந்த சிருங்கரிடம், மகாமுனிவரே! தாங்கள் எங்களுடன் எங்கள் ஆஸ்ரமத்திற்கு வாருங்கள். அங்கு வந்தால், வித விதமான பட்சணங்கள் கிடைக்கும், என்றனர். ரிஷ்யசிருங்கர் ஒரு வித்தியாசமான உலகம் எங்கோ இருப்பதைப் புரிந்து கொண்டார். தந்தை வரும் முன் கிளம்புவது உசிதமென அப்பெண்கள் தாபத்துடன் தூபம் போட, அவர் அங்கதேசத்துக்கு கிளம்பினார். அந்நாட்டு எல்லையில் நுழைந்தாரோ, இல்லையோ, மழை ஊற்றித் தள்ளியது. பத்து ஆண்டுகளாக தலைமறைவான மழை, ஒரே நாளில் கொட்டி தீர்த்து விட்டது. மக்கள், மன்னன் மகிழ்ந்தனர். கால்நடைகள் குதித்தாடின. சிறுவர்கள் மழையில் நனைந்து விளையாடினர். மன்னன் ரிஷ்யசிருங்கரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான். தங்கள் நிலையை எடுத்துச் சொன்னான். ஒரு நல்ல காரியத்திற்காக தாசிகளை அனுப்பி உங்களை வரவழைக்க வேண்டியதாயிற்று. இதற்காக எங்களை மன்னிக்க வேண்டும். தங்களைப் போன்ற தவசீலர்கள் அவர்களிடம் நட்பு கொள்ளாலாகாது. தாங்கள் என் மகள் சாந்தையை திருமணம் செய்து கொள்ள வேண்டும், என்றான். உலகம் என்றால் இன்னதென்று அறிந்து கொண்டு, நீண்ட நாட்களாக அங்கு தங்கியிருந்த முனிவர், சாந்தையை திருமணம் செய்து சுக வாழ்வு வாழ்ந்தார். அந்நாடு என்றும் செழித்திருந்தது. ரிஷ்ய சிருங்கரின் கதையைப் படித்த நாமும் நம் தமிழகத்தில் தேவையான மழை கொட்டுமென நம்புவோம்.

Saturday, June 14, 2014

20ம் நூற்றாண்டின் இணையற்ற சித்தர்

ஞானானந்தகிரி. இவர் சென்ற நூற்றாண்டின் இணையற்ற சித்தர். 100 வயதுக்கு மேல் வாழ்ந்த இவர் மக்களிடையே தியானம், கூட்டு வழிபாடு, நாம பஜனை மூலம் பக்தியை பரப்பியவர் திருவண்ணாமலை மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஞானானந்த தபோவனம் அமைத்து குருகுல முறைப்படி கல்வி கற்க ஏற்பாடு செய்தவர். இன்றும் இந்த தபோவனத்தில் இவர் கூறியபடி ஆராதனை நடந்து வருகிறது. கர்நாடக மாநிலம் மங்களபுரியில் வெங்கோபகணபதி, சக்குபாய் தம்பதியினர் வசித்தனர். இவர்களின் செல்வப் புதல்வராக தை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் இவர் அவதரித்தவர். இவரது இயற்பெயர் சுப்பிரமணியம். ஞானக்கல்வியை மக்களிடையே போதிக்க பிறந்தவராதலால், சிறுவயதில் ஏட்டுக் கல்வியில் நாட்டம் கொள்ளவில்லை. தன் 12ம் வயதில் குருநாதரை தேடி வீட்டை விட்டு வெளியேறி நடந்தே பண்டரிபுரம் வந்து, சந்திரபாகா நதிக்கரை மணலில் அமர்ந்து உறங்கிவிட்டார். இறைவன் ஒரு முதியவர் வடிவில் வந்து இவரை எழுப்பி, பண்டரிபுரத்தில் ஆதி சங்கரர் நிறுவிய ஜியோதிர் மடத்தின் தலைவர் சுவாமி சிவரத்னகிரியை குருவாக ஏற்கும்படி கூறி மறைந்தார். சிவரத்னகிரியிடம் சீடராக சேர்ந்த சுப்ரமணியம், தன் பணிவிடையாலும், குருபக்தியாலும் அவரது பாராட்டை பெற்றார். அந்த ஆசான் இவருக்கு ஞான ஒளி வீசும் விளக்காக திகழ்ந்து. அஷ்டாங்க யோகம், சாஸ்திரங்கள் உபநிஷத் உண்மைகளை கற்பித்தார். அஷ்டாங்க யோகத்தில் தனித்திறமை பெற்று ஞான உணர்வை நாடி அடிக்கடி உணவும், உறக்கமும் மறந்து தியானத்தில் அமர்ந்து விடுவார். சிவரத்னகிரி சுவாமிகள் இவருக்கு தீட்சை அளித்து ஞானானந்தகிரி என்ற நாமம் சூட்டி, தனக்கு பின் பீடாதிபதியாகும் பொறுப்பையும் தந்து முக்தியடைந்தார்.
பீடாதிபதி ஆன பிறகும். அதில் சுவாமி மகிழ்ச்சி கொள்ளவில்லை. மக்களிடையே பக்தியை பரப்ப விரும்பி, ஆனந்தகிரி என்பரிடம் மடத்தின் பொறுப்பை ஒப்படைத்து விட்டு புனித யாத்திரை கிளம்பினார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்றார். தன் புனித யாத்திரையின் போது ராமகிருஷ்ண பரமஹம்சர், சீரடி சாய்பாபா, ராமலிங்க அடிகள், அரவிந்தர், ரமணர் போன்ற மகான்களை சந்தித்தார். காடுகளிலும் மலைகளிலும், கங்கை நதிக்கரையிலும் தவம் செய்து இறைவன் அருள்பெற்று மாபெரும் சித்தராக விளங்கினார். இவர் பல மொழிகளில் புலமை பெற்றிருந்ததால் நாடெங்குமிருந்து பல பக்தர்கள் இவரை நாடி வந்தனர். இவர் தமிழகம் திரும்பி வந்த போது வயது 100. சேலத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் தங்கி, அங்குள்ள ஏழை நெசவாளிகளுக்கு வேதாந்த வகுப்புகள் நடத்தி அவர்கள் வாழ்க்கை மேன்மை அடைய செய்தார். பின் 1954 முதன் திருக்கோவிலூர் அருகே பெண்ணாற்றங்கரையில் ஒரு ஆஸ்ரமம் அமைத்து நிலையாக தங்கி விட்டார். இதுவே பிற்காலத்தில் ஞானானந்த தபோவனம் என அழைக்கப்பட்டது. தபோவனத்தில் சுவாமி அதிகாலையில் எழுந்து நீராடி, தியானம், கூட்டு வழிபாடு, நாம சங்கீர்த்தனம் போன்ற நெறி முறைகளை ஏற்படுத்தி, அங்கு வந்து தங்குபவர்களுக்கு எளிமையான உபதேசங்களை கூறி, அவர்களுக்கு அமைதியும், ஆனந்தமும் நிம்மதியும் கிடைக்கும்படி செய்தார்.
முதிர்ந்த வயதிலும் சிரித்த முகத்துடன், சுறுசுறுப்புடன் ஆசிரமத்தின் அனைத்து பொறுப்புக்களையும் கவனித்து கொண்டார். சுவாமியின் தவ வலிமையாலும், அயராத உழைப்பாலும் தபோவனத்தின் புகழ் எங்கும் பரவி பக்தர்களின் கூட்டம் பெருகியது. இரவு வேளைகளில் சுவாமி தனது தவ வலிமையால் ஆசிரமத்திலிருந்து மறைந்து, தான் விரும்பிய திருத்தலங்களுக்கு சென்று இறைவனை தரிசித்து திரும்புவார். ஆசிரமத்து குழந்தைகளுக்கு தன் அனுபவத்தை கதையாக கூறுவார். ஆசிரமத்தில் ஞானகணேசர், ஞானஸ்கந்தர், ஞானபுரீஸ்வரர், ஞானாம்பிகை என பல தெய்வங்களின் சன்னதிகளை ஏற்படுத்தினார். தனது உலக வாழ்க்கை முடிவுக்கு வருவதை அறிந்த சுவாமி, 1973 முதல் கூட்டத்திலிருந்து ஒதுங்கி தியானத்தில் அதிக நேரம் செலவழித்தார். 1974 ஜனவரி 6ல் சுவாமிகளின் உடல்நலம் குன்றியது. அன்று விடியற்காலை சித்தாசனத்தில் அமர்ந்த பிறகு எழுந்திருக்கவில்லை. ஜனவரி 10ல் சுவாமி பரம்பொருளுடன் கலந்து விட்டார். அந்த மகான் சமாதி நிலையில் இருந்து, மறையாத கருணையுடன் அனைவரையும் காத்து வருகிறார். ஹரி தாஸ் சுவாமிகள், சுவாமி நாமாநந்தகிரி ஆகியோர் இவரது சீடர்களாவர். திருக்கோவிலூரிலிருந்து 6 கி.மீ. தூரத்தில் உள்ள இந்த தபோவனத்திற்கு அடிக்கடி பஸ் வசதி உண்டு

Friday, June 13, 2014

ஞானிக்கும் சித்தருக்கும் என்ன வித்தியாசம்?

இளஞ்சூரியன் தனது கதிர்களை சுருக்கிக்கொண்டிருக்கும் மாலை வேளை. தனது சிஷ்யர்களுடன் பயணப்பட்டு கொண்டிருந்தார் பிரபுலிங்கா எனும் ஞானி.
கோகர்ணம் எனும் அழகிய நகரத்தை அடைந்தார்கள்.


கடற்கரையோரம் அமர்ந்து சிஷ்யர்களுடன் சத்சங்கமித்தார் ஞானபுருஷர். தனது சிஷ்யர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவரிடமிருந்து விரிவானதும் ஆழமானதுமான பதில்கள் வெளி வந்தவண்ணம் இருந்தது.


அவரின் முதன்மை சிஷ்யன் பணிவுடன் அவர் முன்வந்து கேள்வி கேட்க துவங்கினான்..

“சத்குரு பல சித்துகள் கைவரப்பட்ட சித்தர் கோரக்நாத் இந்த ஊரில் வாழ்ந்து வருகிறார். அவரின் ஆன்மீக நிலைக்கும் உங்கள் ஆன்மீக நிலைக்கும் என்ன வித்தியாசம்?”

“அனந்தா... எனக்கு எப்படி அவரின் நிலை தெரியும்? ”...தனது உடலை சுட்டிகாட்டி தொடர்ந்தார் ஞானி, “...இதற்கு இதை தவிர அன்னியமான வஸ்து கிடையாது”.

சிஷ்யனுக்கோ அவரின் பதில் திருப்தியை கொடுக்கவில்லை. குருவுக்கு தெரியாமல் சித்தர் கோரக்நாதை சந்தித்து தனது குரு சொன்ன கருத்துக்களை கூறினான்.
எனது அருமை தெரியாமல் உனது குரு அவ்வாறு கூறி இருக்கலாம். நாளை அவர் இருக்கும் இடத்திற்கு நான் வந்து சந்திக்கிறேன். அப்பொழுது அவர் என்னை பற்றி அவர் மட்டுமல்ல அனைவரும் புரிந்துகொள்வீர்கள்” என்றார் கோரக்நாத் சித்தர்.
அதிகாலை நேரம் தனது சிஷ்யர்களுடன் தியானத்தில் இருந்தார் ஞானி பிரபுலிங்கா... சித்தர் அவரின் இருப்பிடத்திற்கு வந்தார்...
கண்களை திறந்து பார்த்த ஞானி அவரை வரவேற்று அமரவைத்தார்.அவர் வந்த காரணத்தை கேட்டார்.

“எனது பெயர் கோரக்நாத், என்னை பற்றி தெரியாது என உங்கள் சிஷ்யர்களிடம் சொன்னீர்களாமே? என்னை பற்றி கூறவே வந்திருக்கிறேன். அஷ்டமா சித்தியை கைவரப்பட்டவன் நான். எனது உடலை காயகல்பமாக்கி இருக்கிறேன்...” என கூறியவாரே தனது இடுப்பில் வைத்திருந்த வாளை எடுத்து தனது மார்ப்பில் குத்தினார்....அனைத்து சிஷ்யர்களும் அந்த பயங்கரமான செயலால் அதிர்ச்சி அடைந்து எழுந்து நின்றார்கள்...
ஆனால் கோரக்நாத் கையில் இருந்த வாள் வளைந்து போயிற்று. அவர் உடல் காயகல்பம் ஆனதால் வாளைவிட கடினமாக மாறியிருந்தது.
கோரக்நாத் ஞானி பிரபுலிங்காவை பெருமையுடன் பார்த்தார்...அவர் பார்வையில் உன்னால் இதுபோல முடியுமா என்று கேட்பது போல இருந்தது.

தனது சிஷ்யர்களிடம் வாள் கொண்டு வர சொன்னார். அதை கோரக்நாத்திடம் கொடுத்து தனது உடலில் பாய்ச்ச சொன்னார்....
முழுவேகத்துடன் வாள் வீசினார் கோரக்நாத்.... வாள் பிரபுலிங்காவின் உடலில் புகுந்து மறுபுறம் வெளியே வந்தது...
மெல்ல வாளை சுழற்றினாலும் காற்றில் சுழலுவதை போல சுழன்றது...அவர் உடல் அங்கு இருந்தாலும் வாள் அதை தொட முடியவில்லை...
ஞானி பிரபுலிங்கா மெல்ல புன்புறுவலுடன் கூறினார்....”சித்த நிலை என்பது உனது சித்தத்துடன் நின்றுவிடுவது...ஞான நிலை என்பது நான் எனும் அகந்தையை வேறுடன் எடுத்து சித்தத்தை கடந்து சுத்த வெளியில் இருக்கும் தன்மை... ஒருவன் ஞானம் அடைந்ததும் ஆகாசத்தை போல ஆகிவிடுகிறான்..அவனை எதுவும் தடுக்கவோ அசுத்தப்படுத்தவோ முடியாது...ஞானி எல்லை அற்றவன்...சித்தன் உடல் எனும் எல்லைக்கு உட்பட்டவன்..”

சித்தர் கோரக்நாத் ஞானியின் கால்களில் பணிந்தார்...தனக்கு ஞானத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்...

சத்குரு பிரபுலிங்கா பிரம்ம சொரூபத்தை அவருக்கு அளிக்கதுவங்கினார்...
---------------ஓம்---------------
ஆன்மீகத்தை தேடிவரும் பக்தர்கள் அனைவரும் சரியான பாதையில் செல்வதில்லை.
ஞானத்தை தேடாமல் சிலர் காட்டும் போலி வித்தையில் மதிமயங்கி மாயத்தில் விழுகிறார்கள்.
வாயிலிருந்து லிங்கம் எடுப்பவருக்கும் , கடன் தொல்லை நீங்க தீட்சை தருகிறேன் என விளப்பரம் செய்பவர்களிடம் செல்லும் மக்கள் உண்மை நிலையை விளக்கும் ஞானிகளிடன் செல்வதில்லை. அந்த ஞானி சமாதி அனதும் அவர் சமாதியில் தூமம் காட்டும் இழிநிலையிலேயெ இருக்கிறார்கள்..
உள்ளத்தில் உள்ளே உளபல தீர்த்தங்கள் என திருமூலர் கூறியவாக்கை கருத்தில் கொண்டு பிரம்ம ஞானத்திற்கு பாடுபடுவோம்...

Tuesday, June 10, 2014

ஹரிதாஸ்

முகலாய மன்னர் அக்பரது அவையில் மாபெரும் இசைக் கவியாகவும் சகல கலைகளில் விற்பன்னராகவும் விளங்கியவர் தான்சேன். இவரது குருதான் ஹரிதாஸ். ஒரு முறை தான்சேனிடம், இசையில் இந்த அளவுக்கு சிறப்புற்றுத் திகழ்கிறாயே தான்சேன்... உண்மையிலேயே நீ எனக்குக் கிடைத்த பெரும் கொடை என்று புகழ்ந்தார் அக்பர். அப்போது தான்சேன், மன்னா ... நான் இந்த அளவுக்கு புகழ் பெற்றுத் திகழ்கிறேன் என்றால் அதற்கு என் குருநாதர்தான் காரணம் என்றார். அதற்கு அக்பர், குருநாதரா... யார் அவர் ? அவரை ஒரு நாள் என் அரசவைக்கு அழைத்துப் பாடச் சொல்கிறாயா... நான் கவுரவரம் செய்கிறேன் என்றார் ஆர்வமாக. அதற்கு தான்சேன், மன்னா... அவர் அப்படிப்பட்டவர் இல்லை. நாம் கூப்பிட்டால் எல்லாம் வந்துவிட மாட்டார். அவர் இருப்பது வனாந்திரம் போன்ற ஒரு பகுதியில் கிருஷ்ண பக்திதான் அவருக்கு பிரதானம் என்று ஆரம்பித்து, தன் குருநாதரான ஹரிதாஸ், ஸ்ரீபாங்கே பிஹாரிஜிக்கு சேவை செய்து கொண்டிருப்பது பற்றி சொன்னார் தான்சேன். தான்சேன்... நான் எப்படியாவது உன் குருநாதர் ஹரிதாஸை சந்திக்க வேண்டும். ஏற்பாடு செய் என்றார் அக்பர். மன்னா... தாங்கள் மன்னர் என்கிற அடையாளத்துடன் அங்கே சென்றால், என் குருநாதரின் தரிசனம் கிடைக்காமல் போகலாம். எனவே, சாதாரண ஆளாக மாறுவேடத்தில் என்னுடன் வாருங்கள். பிருந்தாவனத்தில் ஸ்ரீபாங்கே பிஹாரிஜி ஆலயத்தில் ஹரிதாஸ் நிகழ்த்தும் பஜனையைக் கேட்பதற்கென்றே நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிவது வழக்கம். உங்களது விருப்பப்படி அவரது சங்கீதத்தை நீங்கள் அங்கே கேட்கலாம் மகிழலாம் என்றார் தான்சேன்.
மிகப் பெரிய சாம்ராஜ்யத்தையே ஆளுகின்ற மன்னன் என்றாலும், ஒரு தெய்வ சங்கீதத்தைக் கேட்க வேண்டும் என்கிற ஆசையில், தான்சேனுடன் மாறுவேடத்தில் புறப்பட்டார் அக்பர். என்ன வேடம் தெரியுமா ? தான்சேனுக்கு உதவியாளராக ! அதாவது, தான்சேனது தம்பூரா மற்றும் அவரது மூட்டை முடிச்சுக்களை சுமந்து வர வேண்டிய பணி. அக்பரும் தான்சேனும் பிருந்தாவனத்தை அடைந்தனர். அன்று எக்கச்சக்க கூட்டம். பக்தர்கள் அனைவரும் யமுனையில் நீராடிவிட்டு, ஸ்ரீபாங்கே பிஹாரிஜி ஆலயம் வந்து ஹரிதாஸையும் வணங்கி, கிருஷ்ணரை தரிசித்தனர். அன்றைய தினம் ஹரிதாஸுக்கு உடல்நலக் குறைவு. எனவே, அவரது சங்கீதத்தைக் கேட்க வேண்டும் என்கிற ஆசையில் வந்தவர்கள் ஏமாந்து போனார்கள் - அக்பர் உட்பட. தான்சேனும், அக்பரும் ஹரிதாஸை விழுந்து நமஸ்கரித்தனர். தன் சீடனான தான்சேனை ஆசிர்வதித்து அன்றைய பஜனையைத் தலைமை தாங்கி நடத்துமாறு உத்தரவிட்டார் ஹரிதாஸ். ஒரு புன்னகையுடன் அக்பரையும் ஆசிர்வதித்தார். மகா ஞானியான ஹரிதாஸுக்கு மன்னரை அடையாளம் தெரியாதா ?! ஆனால், தான்சேன் அன்று அபஸ்வரமாகப் பாடினார். கூடி இருந்த அனைவருக்கும் வியப்பு. ஆனால், குருநாதரான ஹரிதாஸுக்கு மட்டும் இதற்கான காரணம் புரிந்தது. தப்பும் தவறுமாகப் பாடிய தான்சேனை நோக்கி, நிறுத்து என்பது மாதிரி கை காண்பித்து விட்டு, ஹரிதாஸே பாட ஆரம்பித்தார்.
ஹரிதாஸ் கணீரென்று பாடப் பாட.... அந்த நாத இன்பத்தில் தன்னையே மறந்தார் அக்பர். பாடல் முடிந்ததும் அக்பர் ஓடோடிச் சென்று, ஹரிதாஸுக்கு நமஸ்காரம் செய்தார். பிறகு, என்ன மன்னரே.... உம் ஆசைப்படி என் சங்கீதம் கேட்டாயிற்று. திருப்திதானே ? என்று கேட்டார். ஹரிதாஸ். அக்பர் சிலிர்த்துப் போனார். பகவான் ராமகிருஷ்ணர் பரமஹம்சரும் ஸ்ரீபாங்கே பிஹாரி ஆலயத்துக்கு வந்து, இந்த கிருஷ்ணனின் அழகில் மயங்கி, தன்னையே பறி கொடுத்தாராம். பிருந்தாவனத்தில் கிடைத்த இந்த அற்புத தரிசனத்தை விடுத்து, கல்கத்தா புறப்பட அவருக்கு மனமே வரவில்லை. பிருந்தாவனத்தின் அமைதியும், பாங்கே பிஹாரிஜியின் அழகும் பரமஹம்சரைக் கட்டிப் போட்டது. இந்த ஸ்ரீகிருஷ்ணனின் சன்னதிக்கு அருகே அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தாராம். ஸ்ரீபாங்கே பிஹாரிஜியின் சன்னதியில் இருந்து கிளம்ப முற்படும்போதெல்லாம், மாயவனான இந்த ஸ்ரீகிருஷ்ணன், பரமஹம்சரைத் தன் அருகே வரவழைத்து, அவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வேறெங்கும் செல்ல விடாமல் தடுத்து நாடகம் ஆடினானாம். வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மதுரா மாவடத்தில்தான் ஸ்ரீ கிருஷ்ணருடைய எண்ணற்ற திருவிளையாடல்களும் லீலைகளும் நடந்துள்ளன. மதுரா மாவட்டத்தில் இருக்கும் பிருந்தாவனம் என்கிற திவ்ய ÷க்ஷத்திரம், ஸ்ரீகிருஷ்ணன் இன்றைக்கும் நடமாடும் புனித பூமியாகக் கருதப்படுகிறது. இந்த பிருந்தாவனத்தில் கிருஷ்ணனுக்கு எண்ணற்ற திருக்கோயில்கள் அமைந்துள்ளன. அதில், மிகுந்த சாந்நித்தியம் கொண்டதும், புராதனமானதுமான ஆலயம் - பாங்கே பிஹாரிஜி மந்திர் ஆகும் (கிருஷ்ணனை இங்கு பாங்கே பிஹாரிஜி என்கிறார்கள்.) ஹரிதாஸ் என்கிற துறவியின் முயற்சியால்தான் இந்த பாங்கே பிஹாரிஜி கோயில் பிருந்தாவனத்தில் கட்டப்பட்டது. பிரபலம் அடைந்தது. ஸ்ரீகிருஷ்ண பகவானை பிருந்தாவனத்தில் நேருக்கு நேர் தரிசனம் செய்தவர் ஹரிதாஸ். இப்படி பல மகான்களோடு சம்பந்தப்பட்டது இந்த பாங்கே பிஹாரிஜி ஆலயம். பிருந்தாவனம் வருபவர்கள் எத்தனையோ கிருஷ்ணன் ஆலயங்களை தரிசித்தாலும், இந்த ஆலயத்துக்கு கூடுதல் மகத்துவம் உண்டு

குகை நமசிவாயர்

திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் வழியில் - அண்ணாமலையார் ஆலயத்துக்கு நேர் பின்புறம் பேகோபுரத் தெரு (பேய் கோபுரத் தெரு என்பது மருவி உள்ளது) அருகே உள்ள சிறு தெரு வழியாக சுமார் ஐந்து நிமிடம் நடந்து சென்றால், மலை தெரியும். அந்த மலையின் மையத்தில் ஒரு சிறு ராஜகோபுரம் தெரியும். இதுவே குகை நமசிவாய சுவாமிகளின் ஜீவ சமாதி ஆலயம் ஆகும். மலை அடிவாரத்தில் இருந்து சுமார் பத்து நிமிடம் மேலே நடந்தால், குகை நமசிவாயரின் ஜீவ சமாதியை அடைந்து விடலாம். மாபெரும் சித்த புருஷரான குகை நமச்சிவாயர் அருணகிரிநாதருக்கும் முற்பட்டவர் என்று கூறப்படுகிறது. குகை நமசிவாயரின் வாரிசுதாரர்கள் தற்போது இந்த ஜீவ சமாதி ஆலயத்தைப் பராமரித்து வருகிறார்கள். சைலத்தில் இருந்து தெற்கே வந்த கன்னட தேசத்து வீர சைவ மரபைச் சேர்ந்தவர் குகை நமசிவாயர். கன்னட தேசத்தில் திருப்பருப்பதம் (தற்போதைய ஸ்ரீசைலம்) என்கிற புண்ணிய ÷க்ஷத்திரத்தில் அவதரித்தார் நமசிவாயர். தாய்மொழி - கன்னடம். லிங்காயத்து எனப்படும் பரம்பரையைச் சேர்ந்தவர். இந்த மரபில் வந்தவர்கள் தீவிர சைவர்கள். ஆண், பெண் என்று லிங்காயத்து பிரிவில் உள்ள அனைவருமே கழுத்தில் சைவச் சின்னமான லிங்கத்தை ஒரு கயிற்றில் கோர்த்து அணிந்திருப்பார்கள். கழுத்தில் இருக்கும் லிங்கத்துக்குத்தான் முதல் வழிபாடு நடத்துவார்கள்.
நமசிவாயர் பக்திப் பாரம்பரியத்துடன் வளர்ந்தார். இவர் குழந்தையாக இருக்கும் காலத்தில் இருந்தே ஈசன் ஆட்கொண்டு விட்டார். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார். உரிய பருவம் வரும்போது திருவண்ணாமலை அண்ணாமலையாரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஞான குருவாக நீ விளங்குவதற்கு இங்கேயே தங்கி இருத்தல் கூடாது. உடனே திருவண்ணாமலை புறப்படு. தாமதிக்காதே என்று ஒரு நாள் நமசிவாயரின் கனவில் தோன்றி அவருக்கு உத்தரவிட்டார் அண்ணாமலையார். கனவில் இருந்து விழித்தெழுந்தார். ஆனந்தம் கொண்டார். தன்னை வழிநடத்தும் ஈசனை வணங்கினார். திருவண்ணாமலை ÷க்ஷத்திரத்தைத் தான் தரிசிக்கும் நாள் எந்நாளோ என்று ஆவலுடன் இருந்தார். ஈசன் உத்தரவை நிறைவேற்றுவதற்காக அடுத்த நாளே திருவண்ணாமலை நோக்கித் தன் யாத்திரையைத் தொடங்கினார் நமசிவாயர். சிவனருள் பெற்ற இந்த சீலரின் மகத்துவம் புரிந்த சில அடியார்களும், திருவண்ணாமலை என்கிற சித்தர் பூமியில் தவம் இருந்து சிவன் அருள் பெறுவோம் என்கிற வைராக்கியத்துடன் நமசிவாயரைத் தொடர்ந்து சென்றனர். பல கிராமங்களைக் கடந்து பயணித்த அவர்கள் ஒரு கிராமத்தை அடைந்தனர். நமசிவாயரின் சித்து திறமைகளை வெளிக்கொணர ஈசன் விரும்பினான் போலும். அந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் முகப்பில் வாழைமரம், தோரணம் கட்டப்பட்டு மங்கலகரமாக இருந்தது. நமசிவாயருடன் சென்ற அடியார்கள் ஆர்வத்துடன் விசாரித்தபோது அந்த வீட்டில் திருமணம் அப்போதுதான் முடிந்ததாகத் தகவல் சொன்னார்கள். முகம் நிறைய தேஜஸோடு, நெற்றியிலும் உடலிலும் திருநீறு பூசிக் கொண்டு, சிவப் பழமாக ஒரு தவசீலர் தன் அடியார் கூட்டத்துடன் திருவண்ணாமலை சென்று கொண்டிருக்கிறார் என்கிற தகவலை அறிந்த திருமண வீட்டுக்குச் சொந்தக்காரர், வீதிக்கு வந்து நமசிவாயரின் திருப்பாதங்களில் விழுந்து பணிந்தார். புன்னகைத்த நமசிவாயர் அவரை ஆசிர்வதித்து, திருநீறு கொடுத்தார். விபூதியைத் தன் நெற்றியில் அணிந்து கொண்ட அந்த வீட்டுத் தலைவர், நமசிவாயரைப் பார்த்து, சிவனருட் செல்வரே.... இப்போதுதான் என் இல்லத்தில் திருமணம் நிகழ்ந்துள்ளது. தாங்கள் என் வீட்டுக்கு எழுந்தருளி, எல்லோருக்கும் திருநீறு தந்து ஆசிர்வதிக்க வேண்டும். மணமக்கள் வாழ்வாங்கு வாழ உங்களின் ஆசி வேண்டும் என்று கெஞ்சும் முகத்துடன் வேண்டுகோள் வைத்தார்.
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்த நமசிவாயரும், அவரது வேண்டுகோள்படி, திருமண வீட்டுக்குள் நுழைந்தார். அங்கு இருந்த அனைவருக்கும் திருநீறு கொடுத்து விட்டு, சிவ நாமம் முழங்கிக் கொண்டு வெளியே வந்தார். அடுத்த கணம் நடந்த செயல், அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. திருமண வீடு திடுமெனத் தீப்பற்றி எரிந்தது. என்ன சாபமோ தெரியவில்லை! வீட்டுக்குள் இருந்த மணமக்கள் உட்பட அனைவரும் அடித்துப் பிடித்து வெளியே ஓடி வந்தனர். அவர்களில் ஒருவன், இதோ... இந்த சாமியார் கொடுத்த திருநீறினால்தான் வீடு தீப்பற்றி எரிந்தது என்று கூற ஒட்டுமொத்த கூட்டமும் சேர்ந்து, நமசிவாயரைத் திட்டித் தீர்த்தது. மனம் நொந்த நமசிவாயர், அதே இடத்தில் அமர்ந்து சிவ தியானத்தில் ஈடுபட்டார். கயிலைவாசனே... நான் என்ன தவறு செய்தேன்? ஏன் எனக்கு இப்படி ஒரு அவப்பெயர் வாங்கித் தருகிறாய்? இவர்கள் என்னை மட்டுமா அவமதிக்கிறார்கள்? உன்னையும் சேர்த்து அல்லவா அவமதிக்கிறார்கள்? இந்த பழியும் பாவமும் உனக்கும்தானே வந்து சேரும்? ஈசா... கருணைக் கடலே... கண் திறந்து பார்க்க மாட்டாயா? என்று கண்ணீர் மல்க பிரார்த்திக்க... அடுத்த விநாடியே - எரிந்து போன வீடு, பழைய நிலைமையை அடைந்தது. சற்று நேரத்துக்கு முன் அந்த வீடு, தீயினால் பாதிக்கப்பட்டதற்கு உண்டான எந்த ஒரு சுவடும் இல்லை. திருமண வீட்டில் இருந்தவர்கள் மீண்டும் கலகலப்பானார்கள். சுற்றிலும் நின்று இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் திக்பிரமை அடைந்தனர்.
ஆஹா.... இவர் சாதாரணப்பட்டவர் இல்லை. சிவபெருமானே இவரது உருவில் வந்திருக்கிறார். நம்மை எல்லாம் ஆசிர்வதித்திருக்கிறார். இவரை எல்லோரும் நமஸ்கரியுங்கள் என்று ஊர்க்காரர்கள் பரவசம் மேலிடச் சொல்லி, விழுந்து வணங்கினார்கள். கூனிக் குறுகி வெளியே நடந்தார் நமசிவாயர். தன்னை ஈசனோடு ஒப்பிட்டுப் பேசியது அவருக்குப் பிடிக்கவில்லை. இனி நான் எவர் வீட்டுக்குள்ளும் நுழைய மாட்டேன் என்று ஆக்ரோஷமாக ஒரு சபதம் செய்து விட்டு, யாத்திரையைத் தொடங்கினார். திருவண்ணாமலை நோக்கி வந்த அவர் வழியெங்கும் தென்பட்ட பக்தர்களை ஆசிர்வதித்தார். பலரது பிணிகளைத் தீர்த்தார். எண்ணற்ற ஸித்து விளையாடல்களை நிகழ்த்திக் கொண்டே வந்தார். பூந்தமல்லியை அடைந்த அவர்கள் நமசிவாயரிடம் இருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்வதற்காக அருகில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று மணம் வீசும் மலர்களைப் பறிக்க ஆரம்பித்தனர். இந்த நிகழ்வு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஊர் மக்கள் தங்கள் ஊரில் உள்ள ஆலய இறைவனுக்கு கொஞ்சம் கூட பூக்களை வைக்காமல் அனைத்தையும் பறித்து விட்ட சிவனடியார்களைப் பற்றி ஊர்த் தலைவரிடம் சென்று முறையிட்டனர். அவரும் நமசிவாயர் இருக்கும் இடம் நோக்கி விரைந்து வந்தார்.
நமசிவாயர் அப்போது சிவ பூஜையில் திளைத்திருந்தார். தங்களை மறந்து சிவ சகஸ்ரநாமத்தை துதித்துக் கொண்டிருந்தனர் அடியார்கள். நேராக நமசிவாயரிடம் வந்த ஊர்த் தலைவர், ஐயா... ஒரு நிமிடம்... என் கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு உங்கள் பூஜையைத் தொடருங்கள் என்றார். ஊர்த் தலைவரைப் பார்த்துப் புன்னகைத்த நமசிவாயர், கேளுங்கள்... என்ன உமது கேள்வி? என்றார். கிராமத்தில் உள்ள ஆலய பூஜைக்காக வளர்க்கப்பட்டிருந்த அனைத்து பூச்செடிகளில் இருந்தும் உம் ஆட்கள் அனுமதியே இல்லாமல் மலர்களைப் பறித்துக் கொண்டு போய் விட்டார்கள். எம் ஆலய சிவனுக்கு அணிவிப்பதற்குப் பூக்களே இல்லை. இது நியாயமா? என்று கோபம் கொப்பளிக்கக் கேட்டார். அவரைச் சுற்றி நின்றிருந்த ஊர்மக்கள் நமசிவாயர் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தனர். எல்லாம் சிவனே... நந்தவனத்தில் பூக்கும் பூக்கள் இறைவனுக்கு உரியவை. உங்கள் ஆலய இறைவனுக்கும் அவை சூட்டப்பட்டுள்ளன. எமது பூஜைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார் நிதானமாக. உமது பூஜைக்கு எமது கிராமத்து நந்தவனத்தில் இருந்து பறிக்கப்பட்ட பூக்கள் பயன்படுத்தப்பட்டது பற்றித்தான் இப்போது கேள்வியே. உமது சிவலிங்க பூஜைக்கு இந்தப் பூக்கள் அணிவிக்கப்படுவதற்கு எம் ஆலய இறைவன் ஒப்புக் கொள்ள மாட்டான். நீங்கள் தவறு இழைத்து விட்டீர்கள் என்றார் ஊர்த் தலைவர். எங்கும் நிறைந்தவன், எத்தகைய பூஜையையும் ஏற்றுக் கொள்வான். உங்கள் ஊர் சிவன், எம் சிவன் என்று பிரித்துப் பார்க்க வேண்டாம். இதெல்லாம் பேச்சுக்கு நன்றாக இருக்கும். சரி, நீங்கள் சொல்வது உண்மையானால் - அதாவது உமது சிவ பூஜைக்கு எம் ஆலய நந்தவனத்துப் பூக்கள் பயன்படுத்தியதை எம் கிராமத்து இறைவன் ஏற்றுக் கொண்டு விட்டான் என்றால், உமது செயலை நான் ஏற்றுக் கொள்கிறேன். வணங்குகிறேன் என்றார் ஊர்த் தலைவர். அப்படியே... உம் இறைவன் இதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் நமசிவாயர். இதோ, எம் ஆலய இறைவன் திருமேனியில் ஒரு மலர் மாலை இருக்கிறதே... அந்த மலர்மாலை இங்குள்ள பலரும் காணுமாறு தானாக வந்து உம் கழுத்தில் விழ வேண்டும். அப்படி நிகழ்ந்து விட்டால், உமது பூஜை முறை அனைத்தும் அந்த சிவனாரின் ஒப்புதலோடுதான் நடைபெறுகிறது என்பதை நான்மனமார ஏற்றுக் கொள்கிறேன் என்றார். ஊர்மக்கள் அனைவரும் பெரும் குரல் எழுப்பி இதை ஆமோதித்தனர்.
குருநாதரின் பதில் இதற்கு என்னவோ? என்கிற குழப்பத்துடன் அடியார்கள் நமசிவாயரைப் பார்க்க, அந்த மகானும் இதற்கு ஒப்புக் கொண்டார். அப்படியே ஆகட்டும். எம் கூற்றும் செயலும் உண்மை என்பதை இதோ, இந்த இறைவன் ஏற்றுக் கொண்டு விட்டான் என்றால், நீர் சொன்னது அப்படியே நடக்கும் என்று கண்களை மூடி சிவ தியானம் செய்யலானார் நமசிவாயர். இந்த நேரம் பார்த்து ஆலயத்தில் உள்ள அர்ச்சகர்கள் சிலர், இறைவன் திருமேனியில் இருந்த மலர்மாலையில் ஒரு உறுதியான கயிற்றைப் பிணைத்து, அதன் மறுமுனையை ஒருவரிடம் கொடுத்து, இறுக்கிப் பிடித்திருக்கச் சொன்னார்கள். சிவன் கழுத்தில் இருக்கும் மாலை எப்படி நமசிவாயர் கழுத்தில் போய் விழும்? அதையும்தான் பார்த்து விடுவோம் என்று கிண்டலாகப் பேசியபடி நடக்கின்ற நிகழ்வை வேடிக்கை பார்ப்பதற்காகத் தயாரானார்கள் ஊர்க்காரர்கள். அடியார்கள் அனைவரும் மனதுக்குள் சிவ நாமம் துதித்தபடி அமைதியாக இருந்தனர். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. குகை நமசிவாயர் ஈசனின் பஞ்சாட்சர மந்திரத்தை மனமுருக ஜபித்தபடி லிங்கத் திருமேனியின் முன் கரம் கூப்பியபடி நின்றிருந்தார். தன்னையே கதி என்று நம்பி வந்தவர்களை அந்த சிவபெருமான் ஒரு போதும் ஏமாற்ற மாட்டார். அதுதான் நமசிவாயரின் வாழ்க்கையிலும் நடந்தது. ஒரு சில நொடிகளில் இறைவனின் கழுத்தில் இருந்த மாலையைப் பிடித்துக்கொண்டிருந்தவர்களின் பிடி தளர்ந்து கயிறு அறுபட்டு, மலர்மாலை நமசிவாயரின் கழுத்தில் வந்து விழுந்தது. நமசிவாயரின் கண்கள் கலங்கி விட்டன. கைகளை உயர்த்தி ஈசனுக்கு நன்றி சொன்னார். உடன் இருந்த அடியார்கள் அனைவரும், சிவகோஷம் எழுப்பினார்கள். ஊர்த்தலைவர் நமசிவாயரின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். அனைவரையும் ஆசிர்வதித்து விட்டு, அங்கிருந்து யாத்திரையைத் துவக்கினார். திருவண்ணாமலையை அடைந்த நமசிவாயாருக்கு தமிழ்ப் புலமையைத் தந்து அருளினான் ஈசன். நல்ல கவிகளை இயற்றும் புலமையும், வெண்பா பாடுவதில் வல்லமையையும் வழங்கினான். அண்ணாமலையாரை மனதார தரிசிப்பதும், பூஜைக்குப் பூமாலைகள் கட்டித் தருவதும் நமசிவாயரின் அன்றாடப் பணிகள். இவ்வாறு ஈசனுக்குப் பணிவிடைகள் செய்து வந்த நமசிவாயர் மலை அடிவார குகைக்குள் சென்று தங்கினார். அன்று முதல் குகை நமசிவாயர் என அழைக்கப்படுகிறார். இவருடைய சீடர்களுள் விருபாட்சி தேவரும், குரு நமசிவாயரும் முக்கியமானவர்கள் ஆவர்.
இவ்வாறு அண்ணாமலையாரின் அற்புதங்களை அனுதினமும் பருகியபடி எண்ணற்ற சித்து விளையாடல்கள் மூலம் பலருக்கும் அருள்புரிந்து வந்த குகை நமசிவாயர் ஒரு கட்டத்தில், தான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று தீர்மானித்தார். எனவே, அண்ணாமலையாரிடம் சென்று தான் ஜீவசமாதி ஆக விரும்புவதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டினார். அதற்கு அண்ணாமலையார், நமசிவாயா..... எல்லாம் சரி தான். உன் காலத்துக்குப் பிறகு பூஜை செய்வதற்கு ஒரு வாரிசு வேண்டாமா? திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே இருந்து காலம் தள்ளிவிட்டாய் என்று சொன்னவர், நமசிவாயர் திருமணம் செய்து கொள்வதற்குத் தானே ஒரு ஏற்பாடு செய்தார். ஸ்ரீசைலத்திலிருந்து குகை நமசிவாயரின் மாமன் மகளை வரவழைத்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார். சில காலத்திற்கு பிறகு முதல் வாரிசு பிறந்தது. ஈசனின் விருப்பப்படி வாரிசு பிறந்தாயிற்றே! எனவே அண்ணாமலையாரின் ஒப்புதலின் பேரில் தான் வாழ்ந்த குகையிலேயே ஜீவசமாதி அடைந்தார். இவருக்கு அவரது பரம்பரையில் வந்தவர்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் அண்ணாமலையாரின் மேல் ஏராளமான பாடல்கள் எழுதி இருக்கிறார் குகை நமசிவாயர். அருணகிரி அந்தாதி, சாரப் பிரபந்தம், திருவருணை தனி வெண்பா, அண்ணாமலை வெண்பா போன்றவைக் குறிப்பிடத்தக்கவை.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி பூராட நட்சத்திரம் கூடிய தினத்தில் கும்ப லக்னத்தில் குருபூஜை நடந்து வருகிறது. அன்றைய தினத்தில் குகை நமசிவாயர் தன் கைப்பட எழுதிய சில ஓலைச்சுவடிகளை குருபூஜையின் போது வைத்து வணங்குகிறார்கள். அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்கள் குகை நமசிவாயரையும் தரிசித்து விட்டுச் செல்கிறார்கள். தன்னை தரிசிக்க வரும் பக்தர்களிடம் குகை நமசிவாயர் கூறுவது; அண்ணாமலையாரின் பாதத்தை சரண் அடைந்து விடு. எத்தகைய பாவம் இருந்தாலும் சரி... கர்மா உன்னைத் துரத்தினாலும் சரி... நீ புனிதம் அடைந்து விடுவாய். திருவண்ணாமலைக்குச் சென்றால் அண்ணாமலையாரின் திருவருளையும், குகை நமசிவாயரின் குருவருளையும் பெறுங்கள். ஆனந்த வாழ்வு பெற இவர்கள் இருவரும் உங்களை ஆசிர்வதிப்பார்கள்

தெய்வீகக் கதைகள் .....

சேவையே மேலான பாக்கியம்
மனிதனாகப் பிறந்தவனுக்கு எவ்வளவோ பாக்கியங்கள் உண்டு. எல்லா பாக்கியங்களுக்கும் மேலான பாக்கியம் பிறருக்குச் சேவை செய்வதே.
'''சேவை''' என்று தெரியாமலே அவரவரும் தமது குடும்பத்துக்காகச் சேவை செய்கிறோம். அதோடு நமக்குச் சம்பந்தமில்லாத குடும்பத்துக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, சர்வ தேசத்துக்கும் நம்மால் முடிந்த சேவை செய்யவேண்டும் . நமக்கு எத்தனையோ கஷ்டங்கள், உத்தியோகத்தில் தொந்திரவு, சாப்பாட்டுக்கு அவஸ்தை, வீட்டுக் கவலை - இத்யாதி இருக்கின்றன. நாம் சொந்தக் கஷ்டத்துக்கு நடுவில், சமூக சேவை வேறா என்று எண்ணக்கூடாது. உலகத்துக்குச் சேவை செய்வதாலேயே சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும். அதோடுகூட 'அசலார் குழந்தைக்குப் பாலூட்டினால், தன் குழந்தை தானே வளரும்' என்றபடி, நம்முடைய பரோபகாரத்தின் பலனாக பகவான் நிச்சயமாக நம்மை சொந்தக் கஷ்டத்திலிருந்து கைதூக்கி விடுவான். ஆனால் இப்படி ஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல், பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மாலானதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்து விட்டால் போதும். அதனால் பிறத்தியான் பெறுகிற பலன் ஒரு பக்கம் இருக்கட்டும்! நமக்கே ஒரு சித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும், சந்தோஷமும் ஏற்படும்.
-''தெய்வத்தின் குரல்''

Monday, June 9, 2014

குரு நமச்சிவாயர்

நினைத்தாலே முக்தியளிக்கும் திருவண்ணாமலை....
அண்ணாமலையானின் மடியில் இருப்பதை போல அமைத்திருந்தது அந்த குகை.
பெரிய கோவிலின் கோபுரங்கள் பார்க்கும் வண்ணம் இருந்த குகையின் வெளியே அமர்ந்திருந்தார் குகை நமச்சிவாயர்.
அடிக்கடி நமச்சிவாய நாமத்தை சொல்வதாலும் , குகையில் வசிப்பதாலும் அம்முனிவரை அனைவரும் குகை நமச்சிவாயர் என அழைத்தனர்.
அவருக்கு அருகில் அவரது சிஷ்யன் தனது குருவிக்கு உதவ அருகில் நின்று இருந்தான்.
"குளுக்"
ஆழ்ந்த அமைதி சூழ்ந்திருந்த வேலையில் சிஷ்யன் சிரிக்கும் ஒலி கேட்டு நிமிர்ந்தார் குகை நமச்சிவாயர்.
"என்னப்பா அவ்வளவு சிரிப்பு? அந்த வேடிக்கையை எனக்கும் சொல்ல கூடாதா?" என்றார் குகை நமச்சிவாயர்.
"குருவே எனது இடையூருக்கு மன்னிக்கவும். திருவாரூர் தேர் வரும் பொழுது அதன் முன் ஆடிய பெண் ஒருவள் கால் தடுக்கி விழுந்தால் , அனைவரும் சிரித்தனர் அதனால் நானும் சிரித்தேன் " என்றார்.
குகை நமச்சிவயருக்கோ ஒரே ஆச்சரியம். திருவண்ணாமலை வசித்துக்கொண்டு எப்படி நம் சிஷ்யன் திருவாரூரை ரசிக்கிறான் என நினைத்து கொண்டார்.
சில நாட்கள் சென்றன...
குகை நமச்சிவாயர் அமர்ந்து சிஷ்யனுடன் ஞான கருத்துக்களை விளக்கி கொண்டிருந்தார்.
திடீரென பதற்றமாக சிஷ்யான் தோளில் கிடக்கும் துண்டை எடுத்து உதறி மீண்டும் அணிந்து கொண்டார்.
சிஷ்யனின் பதட்டத்தை கண்ட குரு அதன் காரணத்தை கேட்டார்.
"சிதம்பரத்தில் நடராஜர் சந்நிதியில் தீபாராதனை காட்டும் பொழுது அங்கு இருந்த திரை சீலை தீ பற்றி கொண்டது . அதை அணைத்தேன், அதனால் உங்கள் பேச்சை நடுவில் தடுத்ததற்கு என்னை மன்னியுங்கள்" என்றார்.
சிஷ்யனின் செயல் வினோதமாக இருப்பதால் அவனது குரு பக்தி உண்மையா எனவும் சோதிக்க எண்ணினார்.
சிஷ்யன் அருகில் இருக்கும் பொழுது திடீரென வாந்தி எடுத்தார். சிஷ்யனை அழைத்து "இதை யார் காலிலும் படாத இடத்தில் போட்டுவிட்டு வா" என பணிந்தார்.
சிறிதி நேரத்திக்கு பிறகும் சிஷ்யன் எங்கும் செல்லாமல் அங்கு இருப்பதை கண்டு நான் இட்ட பணியை செய்தாயா? என கேட்டார்.
"ஐயனே அதை அப்பொழுதே செய்துவிட்டேன்" என்றான் சிஷ்யன்.
"எங்கு அதை போட்டாய்?" என்றார் குகை நமச்சிவாயர்
"குருவே யார் காலும் படாத இடம் எனது வயிறு மட்டுமே. எனவே நீங்கள் கொடுத்ததை விழுங்கி விட்டேன்" என்றான் குரு பக்தியில் சிறந்த சிஷ்யன்.
தன்னை விட பக்தியிலும் ஞானத்திலும் சிறந்து விளங்கும் சிஷ்யனை பெருமிதத்துடன் பார்த்தார் குரு.
சிஷ்யனனே உனது பக்தியால் என்னையே மிஞ்சிவிட்டாய் , இனிமேல் உன்னை அனைவரும் குரு நமச்சிவாயர் என அழைப்பார்கள் என ஆசிர்வதித்தார் குகை நமச்சிவாயர்
------------- ஓம்-------------------
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக
உள்ள பொருளுடன் ஆவியுடன்ஈக
எள்ளத்தனையும் இடைவேடா தேநின்று
தெள்ளி யறியச் சிவபதந் தானே
திருமந்திரம் - 1692

குருவிடம் காட்டும் பணிவு நம்மை உயர் நிலைக்கு கொண்டுசெல்லும்.

குருவின் அருள் இருக்குமானால் நமது ஆன்ம சாதனையில் பல முன்னேற்றம் இருக்கும். அதை தவிர வேறு என்ன வேண்டும் இப்பிறவியில்?

Wednesday, June 4, 2014

சும்மா இருப்பது சிரமம்!


  1. கடவுளும், குருவும் உண்மையில் வேறு வேறு அல்ல, புலி வாயில் பிடிபட்டது எப்படி      திரும்பாதோ, அதேபோல் குருவின் அருட்பார்வையில் விழுந்தவர்களும்  கைவிடப்படமாட்டார்கள்.
  2. நீ விரும்புவது அனைத்தையும் பகவான் உனக்குத் தருவார் என்று நம்பினால், உன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிடு. கடவுளை உணர்வதற்கு நாம் செய்ய வேண்டியது சும்மா இருப்பது தான், சும்மா இருப்பதைப் போல சிரமமான செயல் வேறு இல்லை.
  3. அமைதியே நமது இயல்பான சுபாவம். எனவே அதைத் தேடவேண்டாம். உபத்திரவப்படுத்தும் எண்ணங்களை ஒழித்தாலே போதும்.
  4. நாமே தான் நமது பிரச்னைகளுக்கு மூலகாரணம், எனவே, நாம் யார் என்பதை நன்கு புரிந்து கொண்ட பிறகு, கடவுள் ஆராய்ச்சியில் இறங்குவது நல்ல பயன் தரும்.
  5. மனதை மெதுவாக சிறுகச் சிறுக அடக்கி தன் வழிக்குக் கொண்டு வரவேண்டும், இதற்கு கடும் பயிற்சியும் வைராக்கியமும் தேவை.அறிவு, நம்மிடத்திலுள்ள அறியாமையைப் போக்குகிறது, அது புதிதாக எதையும் உருவாக்குவதில்லை.