Friday, September 21, 2012

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

திருமூலர், திருவள்ளளுவர், தாயுமானவர், இராமலிங்கப் பெருமாள் இவர்தம் மரபு நெறி நின்று ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்ட சமுதாயப் பணி ஆற்றி வருபவர் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்கள். மகரிஷி அவர்கள் சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரி கிராமத்தில் 1911-ஆம் ஆண்டு எளிய நெசவாளிக் குடும்பத்தில் பிறந்தார்.
சிறுவயதிலிருந்தே அவருக்குக் கடவுள் யார்? உயிர் எ...ன்றால் என்ன? வறுமை எதனால் ஏற்படுகிறது? என்ற கேள்விகளுக்கு விடைகாண வேண்டுமென்ற வேட்கை எழுந்தது. பல ஆண்டுகள் மேற்கொண்ட அயரா ஆராய்ச்சியின் வாயிலாக இக்கேள்விகளுக்கான விடையைத் தானும் உணர்ந்து உலகிற்கும் உணர்த்தி வருகிறார்.
சுய முயற்சியின் மூலமே வாழ்க்கையில் முன்னேறிய அவர் தியான முறைகளில் சிறந்ததான எளிய முறைக் குண்டலினி யோகம், அவயங்களை வருத்தாத உடற்பயிற்சி, தளராத தற்சோதனை, உயிர்ச்சக்தியைப் பாதுகாப்பதன் மூலம் வயோதிகத்தைத் தள்ளிப்போடும் சித்தர்கள் கண்ட நெறியான காயகற்ப யோகம் - இவை இணைந்த வாழ்க்கை நெறியைப் போதித்து, மனிதகுலம் உய்ய அருட் தொண்டாற்றி வருகிறார்.
மேலும் காந்தத் தத்துவத்தின் மூலம் தெய்வநிலை, உயிர்நிலை, அறிவுநிலை இவற்றைப் பொது அறிவு படைத்த சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கி வருகிறார். மனிதகுல நலனுக்குக் தேவையான கருத்துகளை எளிய நடையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பலநூல்களை எழுதி விளக்கி வரும் மகரிஷி அவர்கள் சுமார் ஆயிரத்து ஐந்தூறுக்கும் அதிகமான கவிகளையும் இயற்றியுள்ளார்.
மனிதகுலம் அமைதியாக வாழ ஏற்ற கருத்துகளையும் சாதனை முறைகளையும் உலகமெங்கும் பரப்பிட 1958-ஆம் ஆண்டில் வேதாத்திரி மகரிஷி அவர்கள் நிறுவிய உலக சமுதாய சேவா சங்கம் இன்று இந்தியாவியிலும், மலேசியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, போன்ற நாடுகளிலும் பல கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.
இல்லறத்தில் இருந்தவாறே துறவற மனப்பான்மையை மேற்கொண்ட மகரஷி அவர்கள் தமது 81 வயதிலும் உலக சமாதானத்திற்காக அயராத சேவை புரிந்து வருகிறார். பல வருடங்களாக வௌ நாடுகளுக்கும் சென்று ஆன்மீகப் பணியாற்றி வருகிறார்.
தத்துவத்திலே அவ்தைதத்தையும் யோகத்திலே ராஜ யோகத்தையும் பாமர மக்களுக்கும் உணர்ந்து கொள்ளும் வகையிலே அவர் கற்பிக்கும் உளப்பயிற்சி அமைந்திருக்கின்ற காரணத்தால், 'பாமர மக்களின் தத்துவ ஞானி' (Common Man's Philosopher) என்று போற்றப்படுகிறார்.
மகரிஷி அவர்கள் வெளியிட்டுள்ள எந்த ஒரு கருத்தும் பகுத்தறிவிற்கோ விஞ்ஞானத்திற்தோ புறம்பானதல்ல என்பது குறிப்பிடத்தக்கது

Wednesday, September 12, 2012

மகான் பூஜ்ய ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள்

 

சித்தர்கள், யோகிகள், ஞானிகள் போன்றோர் வாழ்ந்த பெருமை மிக்க  இந்து ஞான மரபில் சதா பிரம்ம நிலையிலேயே இருந்து, அந்த இறைநிலையோடு ஒன்றி வாழ்க்கை நடத்தியவர்கள் பிரம்ம ஞானிகள் என அழைக்கப்பட்டனர். சுகப் பிரம்ம மகரிஷி, ஜனக மகரிஷி போன்ற அந்த அவதூத ஞானிகளின் வரிசையில் குறிப்பிடத் தகுந்தவர் ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள்.

சுவாமிகள் ஒரு மாபெரும் அவதார புருடர். ஆனால் ஒன்றுமே அறியாத பித்தர் போன்று காசி நகரத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருப்பார். அவரது முதுகில் மூன்று லிங்க வடிவிலான குழிகள் காணப்பட்டதால் பக்தர்கள் அவரை த்ரைலிங்க சுவாமிகள் என அழைத்தனர். குள்ளமான உருவம். நீண்ட கைகள். உருண்டையான முகம். பெரிய வயிறு என்று சுவாமிகளின் தோற்றம் மிக வித்தியாசமானதாக இருக்கும். சுவாமிகள் யாருடனும் எதுவும் பேச மாட்டார். உணவு உண்பது என்பது எப்போதாவது ஒருமுறைதான். பல நாட்கள் பட்டினியாக இருப்பார். சமயங்களில் அன்பர்கள் கொண்டு வரும் தயிர்ப்பானைகளை சளைக்காமல் குடம் குடமாகக் குடிப்பார். மணிகர்ணிகா படித்துறையில் உச்சி வெயிலில் சுடும் பாறை மீது அமர்ந்திருப்பார். அவதூதர் என்பதால் உடலில் ஒட்டுத் துணி இருக்காது. அதைப் பற்றி எந்த வித அக்கறையுமின்றி கடும் வெயிலில் அமர்ந்திருப்பார். தான், தனது, தன்னுடைய உடல்  என்ற உணர்வுகள் அற்றவராக அவர் இருந்தார். சமயங்களில் கடும் குளிரில் தண்ணீருக்குள் இறங்குவார். உள்ளேயே மூச்சடக்கி அமர்ந்திருப்பார். இல்லாவிட்டால் தண்ணீரின் மீது சப்பணமிட்டு அமர்ந்து கொண்டோ அல்லது தண்ணீரில் படுத்த வாக்கில் மிதந்து கொண்டோ இருப்பார். சில சமயம் உச்சி வெயிலில் அவதூதராய் காசி மாநகரத்துத் தெருக்களைச் சுற்றி வந்து கொண்டிருப்பார். காலத்தை, இயற்கை விதிகளை வென்ற மகாபுருடராக இம்மகான் விளங்கி வந்தார்.
இறையனுபூதி பெற்ற இம்மகானை பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தரிசனம் செய்திருக்கிறார். காசி, பிருந்தாவனம் போன்ற பல புண்ணிய தலங்களுக்கு யாத்திரையை மேற்கொண்ட ராமகிருஷ்ணர், காசியில் ஒரு மடத்தில் தங்கியிருந்த த்ரைலிங்க சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார். காசியில் ராமகிருஷ்ணர் தரிசித்த ஞானிகளில் மகான் த்ரைலிங்க சுவாமிகள் ஒருவரே பிரம்ம ஞானியாக விளங்கியவர். இதனை சுவாமி விவேகானந்தரிடம், ’ஒரு மிகப் பெரிய மகானைச் சந்தித்தேன்’ என்று சொல்லி விளக்கிக் கூறியிருக்கிறார் பரமஹம்சர். பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தரும் மகான் த்ரைலிங்க சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார். மஹா அவதார் பாபாஜியின் நேர் சீடரான மகான் ஸ்ரீ ஸ்ரீ லாஹரி மஹா சாயர், த்ரைலிங்க சுவாமிகளின் உற்ற நண்பராகத் திகழ்ந்தவராவார்.
லாஹரி மஹா சாயர் (1828-1895), ராமகிருஷ்ண பரமஹம்சர் (1836-1886), விவேகானந்தர் (1863-1902) என பல காலகட்டத்தைச் சேர்ந்தவர்களும் சுவாமிகளை தரிசித்துச் சென்றிருக்கின்றனர். பரமஹம்ச யோகானந்தர் தனது ’ஒரு யோகியின் சுயசரிதம்’ நூலில் த்ரைலிங்க சுவாமிகள் கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று  குறிப்பிட்டிருக்கிறார்.
மிகச் சிறந்த தவயோகியாகத் திகழ்ந்த இம்மகான் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார்.
அவதூதர் என்பதால் எப்போதும் சுவாமிகள் நிர்வாணமாகவே இருப்பார். ஆனால் சுவாமிகள் இவ்வாறு நிர்வாணமாகச் சுற்றி வருவது காவல்துறையினருக்குப் பிடிக்கவில்லை. ஒருநாள் அவர்கள் சுவாமிகளைப் பிடித்து சிறையில் அடைத்துப் பூட்டி விட்டனர். ஆனால் சற்று நேரத்தில் சுவாமிகள் வழக்கம் போல் வெளியே சுற்றிக் கொண்டிருந்தார்.
பூட்டிய கதவு பூட்டியபடி இருக்க, சுவாமிகள் எவ்வாறு வெளியேறினார் என்பது தெரியாமல் காவலர்கள் திகைத்தனர். அதனால் சீற்றமுற்ற அவர்கள், மீண்டும் சுவாமிகளைப் பிடித்து வந்து கதவை பலமாகப் பூட்டி, காவலுக்கு என்று தனி ஆளையும் நியமித்தனர். ஆனால் சுவாமிகளோ சற்று நேரத்தில் சிறையிலிருந்து மாயமாய் மறைந்து, அதன் மாடிப் பகுதியில் நடமாடிக் கொண்டிருந்தார். இதனால் சலிப்புற்ற காவலர்கள் சுவாமிகளைச் சிறையில் அடைப்பதை நிறுத்தினர். சுவாமிகளும் காசி மாநகரத்தின் தெருக்களில் வழக்கம் போலச் சுற்றி வர ஆரம்பித்தார்.
******
காசியில் பிராம்லி என்ற வெள்ளைக்காரர் அப்போது சப்கலெக்டராக இருந்தார். ஆடையின்றி அவதூத கோலத்தில் காசி நகரத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்த சுவாமிகளைப் பார்த்ததும் அவருக்குக் கோபம் பொங்கியது. தன்னிடமிருந்த சவுக்கால் சுவாமிகளை அடித்தார். ஆனால் அந்த அடி சுவாமிகளின் மேல் விழவில்லை. மாறாக அவர் மனைவி மீது விழுந்து அவர் வலி தாளாமல் அலறினார். அதனால் சுவாமிகளை ஒரு மாயாவி என்று நினைத்த பிராம்லி, தன் வீட்டிற்கு அவரை இழுத்துச் செல்லுமாறு தன் சேவகர்களுக்கு உத்தரவிட்டார். கலெக்டரின் வீட்டிலும் உறவினர்கள் அனைவரது உடலில் இருந்தும் சாட்டையடி பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அது கண்டு மிகவும் சீற்றமுற்ற பிராம்லி துரை ‘இந்த மாயாவியை இருட்டறையில் அடையுங்கள்’ என்று தனது சேவகர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு, அந்த அறையைப் பூட்டிச் சாவியைத் தானே வைத்துக் கொண்டார். பணி நிமித்தமாக மீண்டும் வெளியே புறப்பட்டுச் சென்றார்.
சற்று நேரத்தில் அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது. சுவாமிகள் வழக்கம் போல் அவதூதராய் அவர் முன்னால் சாவதானமாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஆச்சரியம் மேலிட அருகிலுள்ளோரிடம் சுவாமிகளைப் பற்றி விசாரித்தார் கலெக்டர். அப்போது தான் மகானின் மகிமை பற்றி அவருக்குத் தெரிய வந்தது. சுவாமிகளைப் பணிந்து வணங்கிய பிராம்லி, தான் செய்த அவச்செயலுக்காக தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். சுவாமிகளும் அவரை மன்னித்தார். தனது அஞ்ஞானம் நீங்கிய அன்றைய தினத்தன்று வருடம் தோறும் சுவாமிகளுக்கு ஆராதனை நடத்திக் கொண்டாட ஒரு கட்டளையையும் பிராம்லி ஏற்படுத்தினார். அது ‘பிராம்லி கட்டளை’ என்ற பெயரில் இன்றறளவும் காசியில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
வெகுகாலம் வாழ்ந்து காசியில் பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்திய இம் மகான் பின் நேபாளத்தில் பசுபதிநாத் அருகில் ஜீவசமாதி அடைந்தார்.
மகான்களின் பெருமை பேசவும் இனிதே!

பாலசந்திரன் அவர்களது கட்டுரை......

அய்யன் விரும்பும் பிச்சைக்காரன்
திருவண்ணாமலையில் தேரடி மண்டபத்திலோ புன்னை மரத்தடியிலோ தனது அய்யனின் விருப்பப்படி யோகிராம் சூரத்குமார் காலம் கழித்த வருடங்கள் அவை. பெரும் தமிழ் அறிஞர்களான கி.வா.ஜகன்னாதன், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பெரியசாமி தூரன் போன்றவர்கள் அடிக்கடி அவரை சந்தித்து சத்சங்கம் நடத்திய காலம். ஞானானந்த கிரி அவர்களின் தபோவனத்திலிருந்து சிவராமகிருஷ்ண ஐயர் என்பவரும் அவ்வப்போது பங்கு பெறுவதுண்டு.
ஆன்மீகத்தின் சிகரங்களான தபோவன ஞானானந்த கிரி சுவாமிகளிடமும் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி மஹாசுவாமிகளுடனும் தனிப்பட்ட முறையில் யோகிராம் ஆழமான தொடர்பு வைத்திருந்தார். அவர்கள் இருவரிடமும் பெரும் அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார்.
சில அன்பர்கள் மயிலாடுதுறை அருகிலுள்ள வனகிரி என்ற ஊருக்கு மஹாப் பெரியவரின் சொற்பொழிவைக் கேட்பதற்காக புறப்பட்ட பொழுது யோகிராமும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். மண்டபத்தில் பெரியவர் தரிசனம் நன்கு கிடைக்கும் வகையில் ஒரு தூண் அருகே அமர்ந்திருந்தார். அன்றைய சொற்பொழிவில் பெரியவர் அந்தர்முகம் (உள்முகம்) கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கொண்டிருந்தார். இடையே யோகிராம் பக்கம் கையைக் காட்டி “ஒரு நல்ல உதாரணம், இதோ இங்கேயே ஒரு அந்தர் முகி” என்று குறிப்பிட்டார். உடனே கூட்டம் யோகிராம் சூரத்குமாரை சூழ்ந்து கொள்ளத் தொடங்கியது. அதை பெரியவரே அன்புடன் தடுத்து யோகியருக்கு சிரமம் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.
யோகிராம் சூரத்குமார் ஒரு சரித்திரப் பட்டதாரி. ஆங்கிலம் நன்கு அறிந்த ’பிச்சைக்காரர்’. அவர் வடநாட்டவர் என்றறிந்த சில ஹிந்தி எதிர்ப்பு விஷமிகள் அவருக்கு விடாமல் தொந்தரவு கொடுத்தனர். பைத்தியம் என்று அடித்து துன்புறுத்தினர். அவரது ஆடைகளை கிழித்து வேடிக்கை பார்த்தனர். பதிமூன்றுமுறை அவர் தங்கியிருந்த வீட்டுப்பூட்டு உடைக்கப்பட்டது. அவரை கொலை செய்யவும் முயற்சி நடந்தது. இவை எதுவுமே அவரை பாதிக்கவில்லை. யாரிடமும் கோபம் பாராட்டவில்லை.
ஒரு பக்கம் ஞானிகள் தமக்கு சமமாக அவரை மதித்துப் போற்றினர். மறுபக்கம் அஞ்ஞானிகள் அவருக்கு தீங்கிழைக்க அஞ்சவில்லை. கபீர்தாஸரின் ஈரடி ஒன்று அவருடைய நிலமையை பொருத்தமாக எடுத்துக் காட்டுகிறது.
ஞானியை ஞானி காணில் பெரும்ஞான ரசக்கொண் டாட்டம்
ஞானியோடு அஞ்ஞானியோ பாழும் சிரநோவுத் திண்டாட்டம்

சூரத்குமார் அவர்களுக்கு துன்பம் இழைக்கப்பட்ட காலத்தில் இருபெரும் தவசிகளும் தத்தம் வழியில் யோகியாருக்கு பக்கபலமாக இருந்ததாக அறிகிறோம்.
யோகி ராம்சூரத்குமார் சில வேளைகளில் திருக்கோவிலூர் தபோவனத்திற்கு விஜயம் செய்வதுண்டு. ஸ்ரீ ஞானானந்தகிரியும் யோகியாரும் அவ்வப்போது செய்த பல புதிரான நிகழ்வுகளை- ஞானரசக் கொண்டாட்டத்தை- அவர்களுடைய பழங்கால அடியார்கள் சந்தோஷமாக நினைவு கூர்வதுண்டு.
தென்னாங்கூர் ஸ்ரீ நாமானந்த கிரி சுவாமிஜி சொல்லிய ஒரு நிகழ்ச்சி. ஒருமுறை கூடியிருந்த பக்தர்களிடம் ”கபீரை தரிசிக்க விருப்பமா ?”என்று ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் கேட்டாராம்.
யாவரும் ஸ்ரீ ஞானனந்தகிரியையே ஆவலுடன் என்ன சொல்லப் போகிறாரோ என்று எதிர்பார்த்த வேளையில் யோகி ராம்சூரத்குமாரை சுட்டிக்காட்டி “ இவர்தாம் அப்போது கபீர் இப்போது யோகி ராம்சூரத்குமார்” என்று சொன்னார்.
ஞானானந்த கிரி சுவாமிகள் அவ்வாறு சொன்னதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கபீரைப் போலவே ராம்சூரத்குமாரும் கங்கை கரையில் பிறந்து வளர்ந்தவர். கபீரைப் போலவே இளமையிலேயே ஆன்மதாகத்தில் பல குருக்களிடம் ஞானத்தைத் தேடியவர்.
கபீருக்கு ராமானந்தர் குரு, யோகியரின் குருவோ ராமதாஸர். அவர் பெற்ற உபதேச மந்திரமும் ராம நாமம் இவருக்கு கிடைத்த மந்திரமும் ராமநாமம்.
கபீரைப் போலவே எந்த மதத்தினரும் தம்மவர் என்று யோகியர் மேல் உரிமை கொண்டாட இயலாது.
காவி உடை இல்லை நெற்றியில் மத சின்னங்கள் எதுவும் இல்லை. அழுக்கு உடையுடன் திரிந்த அருள் வேந்தன் அவர்.
தலையிலோர் பாகை உள்ளான்,
தாடி உளான், கையிலோர்
அலைவுறுமோர் விசிறிஉளான்
அங்கையிலோர் ஓடெடுப்பான்
நிலையுள்ள இன்பத்தை
நித்தம் அனுபவிக்கும்
கலையாளன் ராம்சுரத்
குமாரனை நீர்காண்மினரோ
(கி.வா.ஜகன்னாதன்)பேட்ரிக் என்ற பெயருடைய கராத்தே மாஸ்டர் யோகியரை சந்தித்தபோது அவருக்கு பேட்ரிக் என்ற பெயரில் வெளி நாட்டில் வாழ்ந்த ஞானியைப் பற்றிய விவரமெல்லாம் தெரிவித்தார். சந்திப்புக்குப் பின்னர் யோகியரின் அருள் நோக்கில் ஏசு பிரானையே கண்டதாகப் பேட்ரிக் கூறினார்.

இந்துக்கள்,கிருத்துவர்கள்,முகமதியர்கள் போன்ற எல்லா மதத்தினரும் வந்து அவரிடம் அருளாசி பெற்றுச் சென்றனர். இதிலிருந்து கபீரைப் போலவே கடவுள் மதங்களுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் அப்பாற்பட்டவன் என்பதை உணர்த்த வாழ்ந்து காட்டியவர் என்பதும் புலனாகிறது.
( T பொன்.காமராஜன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )பக்தர் ஒருவர், பலருக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு மனம் வெதும்பி இப்பேற்பட்ட துன்பங்கள் எதற்காக என்று தனிமையில் பகவானிடம் வினவினார். அவரை ஆழ்ந்து நோக்கிய பகவான் வாசலில் மிதியடியாகப் போடப்பட்டிருந்த சாக்குப் பையை சுட்டிக்காட்டினார்.
”போ! அதில் உள்ளதைப் படித்துப்பார்”
தன் கேள்விக்கும் அவருடைய செய்கைக்கும் தொடர்பு புரியாது மிதியடி அருகே சென்று அதைப் படித்தார். படித்ததும் அவர் முகம் புரிந்துகொண்டது போல் நகை முகம் ஆனது. ”ஓ இது தானா! ஒருவர் படும் கஷ்டத்தால் மன அழுக்குகள் களையப்பட்டு தூய்மையானவர்களாகி மனதிடம் பெறுகிறார்கள்” என்று ஏற்றுக் கொண்டார்
அதில் இருந்த வாசகம்“ கல்,குருணை நீக்கிய நெ.1 திடம் அரிசி
 

Friday, September 7, 2012

புலனடக்கம்...


பல ஆன்மீக சாதனைகளுக்கு புலனடக்கம் முக்கியமானதாக பேசப்படுகிறது... அது ஏன்?
நமது கர்மாக்கள் நம் புலன்கள் மூலமே வெளிப்படுகின்றன அல்லது நிறைவேற்றப்படுகின்றன. கர்மாக்களை வெளியேற்ற / புதிதாக சேர்க்க இந்த ஐம்புலன்களும் ஒரு வாசலாக செயல்படுகின்றன..

ஆசையே துன்பத்துக்கு காரணம் என புத்தர் சொல்லி இருக்கிறார்... இந்த ஆசைகள் நம் மனதில் இருந்தாலும் அதைத் தூண்டுவதற்கு புறக் காரணிகள் தேவை இருக்கிறது.. அந்த தூண்டுதல் இந்த ஐம்புலன்கள் மூலமாகவே ஏற்படுகின்றன.

இவ்வாறு தூண்டப்படும் ஆசைகள் நியாயமான முறையில் / அளவாக இருக்கும் போது / வெளிப்படும்போது கர்மாக்கள் குறையவும், அநியாயமான முறையில் / அபரிமிதமாக இருக்கும்போது / வெளிப்படும்போது புதிய கர்மாக்கள் சேரவும் செய்கின்றன...

இந்த புலன்களில் மிக சக்திவாய்ந்த புலன்கள் கண்களும், நாசியும். இவை பிற ஆசைகளைத் தூண்டுவதில் முதலிடம் வகிக்கின்றன. எனவே இவற்றை மிக கவனமாக உபயோகப்படுத்தவேண்டும். இதில் சூழல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

எப்போதும் திறந்திருக்கும் புலன்கள் இரண்டு மூக்கு, செவி. எனவே நுகர்ச்சியும், கேட்டலும் முற்றிலும் நாம் இருக்கும் சூழல் சம்பந்தப்பட்டது.

கிருஷ்ணன் ஆலிலையில் படுத்திருப்பது ஏன்?

 தாவர வகைகளிலேயே மிகவும் உயர்ந்த இடத்தை பெறுவது ஆலமரம். ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து தான் தட்சிணாமூர்த்தி ஞானம் தருகிறார். பொன், பொருள், குடும்ப சுகம் மட்டுமின்றி மறைந்த முன்னோர்கள் மோட்சம் பெற பிதுர் தர்ப்பணத்துக்குரிய பிண்டம்  போடும் சடங்கை ஆலமரத்துக்கு கீழே அமர்ந்து தான் செய்வார்கள்.

எனவே தான் ஞானமும் கர்மத்திற்குரிய பலனையும் தருகின்ற ஆலமரத்தின் இலையில் கண்ணன் படுத்துக் கொண்டான். மேலும் ஆலிலைக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. இது வாடினாலும் கூட நொறுங்கிப் போவதில்லை. சருகானாலும் கூட மெத்தை மாதிரி இருக்கும். இதுவும் கண்ணன் ஆலிலையை தேர்ந்தெடுக்க ஒரு காரணம் ஆகும்.

ஓரளவு காய்ந்த ஆலிலையின் மேல் தண்ணீர் தெளித்தால், அது இழந்த பச்சையை பெறும் சக்தி வாய்ந்தது. கண்ணன் வாடாத வதங்காத ஆத்மா என்பதை இதன்மூலம் நிரூபிக்கிறான். ஆலிலையில் படுத்திருக்கும் கண்ணன் நமக்கு ஒரு பாடத்தையும் போதிக்கிறான். அடே பக்தனே! நீ எதற்கும் கவலைப்படாதே.
என்னைப் போலவே நீ குழந்தை உள்ளத்துடன் இருந்தால், உலக வாழ்க்கை என்ற கொடுமையான அலையால் தாக்கப்படமாட்டாய். குடும்பம் என்ற சம்சாரக்கடலில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு என்னைப் போல் ஆனந்தமாய் இரு என்கிறான். இதுதான் கண்ணன் ஆலமர இலையில் மிதக்கும் தத்துவம் ஆகும்

ஸ்ரீரகூத்தமர்

வைதம் என்ற மத்வ சித்தாந்தத்தை நிறுவிய மகான் ஸ்ரீ மத்வாச்சாரியாரின் வழிகாட்டுதலின் படி அமைந்த மடங்களில் மிகவும் சிறப்பு பெற்றது உத்திராதிமடம் ஆகும். 16ம் நூற்றாண்டில் இம்மடத்தின் அதிபதியாக ஸ்ரீரகுவர்ய தீர்த்தர் என்ற ஞானி விளங்கிவந்தார். ஒருசமயம் அவர், ஐதராபாத் சமஸ்தானத்திலுள்ள சுவர்ணவாடி என்ற சிற்றூருக்கு விஜயம் செய்தார். அவ்வூரில் வாழ்ந்துவந்த அந்தணர் சுப்ப பட்டர் தமது துணைவியார் கங்காபாயுடன் சென்று மகானை வணங்கி, தங்கள் இல்லத்திற்கு பிøக்ஷ ஏற்க வரும்படி வேண்டினார். சுப்ப பட்டர் தம்பதிகளுக்கு குழந்தை இல்லை. குழந்தை இல்லாத வீடுகளில் துறவிகள் பிøக்ஷ ஏற்கமாட்டார்கள். ஆனாலும், சுப்ப பட்டர் தம்பதியர் வற்புறுத்தி வேண்டினர். கருணைக்கடலான ஸ்ரீரகுவர்யர், அவர்களின் பிøக்ஷயை ஏற்பதாகவும், அதன்பலனாக புத்திரபாக்கியம் ஏற்படும் என்றும் தெரிவித்தார். அதேநேரம் ஒரு நிபந்தனையை விதித்தார். பிறக்கும் குழந்தையை தன்னிடம் ஒப்படைப்பதாக உறுதி தர வேண்டும் என்றார். புத்திர பாக்கியம் கிடைக்காதா என்று ஏங்கிய கணவனும் மனைவியும் அப்படியே செய்வதாக உறுதியளிக்க, மகானும் பிக்ஷயை ஏற்று அருளினார்.
வெகு விரைவிலேயே கங்காபாய் கருவுற்றார். குழந்தை பிறக்கப்போகும் சமயம் வந்தது. பிறக்கும் குழந்தையை தரையில் படாமல், தங்கத்தட்டில் தாங்கிப்பிடிக்க வேண்டும் என்ற மகானின் உத்தரவுப்படி, தங்கத்தட்டில் ஏந்தி மடத்திற்கு எடுத்து வந்தார்கள். மடத்தில் ஸ்ரீராமபிரானுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீரினால் குழந்தை கழுவப்பட்டது. ராமச்சந்திரன் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பால் குழந்தைக்கு கொடுக்கப்பட்டது. ஏழு வயதில் உபநயனம் தரித்து, எட்டுவயதில் சந்நியாசம் வழங்கப்பட்டது. அப்போது ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர், குழந்தைக்கு ஸ்ரீ ரகூத்தம தீர்த்தர் என்ற பெயரைச் சூட்டினார். ஸ்ரீரகூத்தமர் வேதம், உபநிஷத்துக்கள் எல்லாம் கற்று தேர்ந்தார். மர நிழலைகூட ஒதுக்கி பற்றற்று வாழ்ந்தார். இவரது குரு ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர் இறைவனடி சேர்ந்ததும் மடத்தின் அதிபதியானார். பல நூல்களை இயற்றினார். ஜாதி, மத வேறுபாடின்றி மக்களின் துயர் தீர்த்த ஸ்ரீ ரகூத்தம தீர்த்தர் திருக்கோவிலூர் அருகிலுள்ள மணம்பூண்டி என்ற புனிதமான இடத்தில் பிருந்தாவனம் அமைத்தார்.
கி.பி.1595 வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பிருந்தாவனத்தில் எழுந்தருளினார். அவரது ஆணைப்படி பூஜைகள் தினமும் சிறப்பாக நடத்தப்பட்டது. ஒரு சமயம் பெரிய ரயில் விபத்தில் தனது நாக்கின் முன்பகுதி துண்டிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் பேச முடியாமலும், சாப்பிட முடியாமலும் துன்பப்பட்டார். மருத்துவர்களும் நாக்கின் முன்பகுதியை அறுவை சிகிச்சை மூலம் சேர்க்க இயலாது என்று கையை விரித்துவிட்டனர். நாக்கில்லாமல் எப்படி வாழ்வது என்று கவலைப்பட்ட அவர் திருக்கோவிலூர் சென்று ஸ்ரீரகூத்தம தீர்த்தரின் பிருந்தாவனத்திற்கு வந்து தீபமேற்றி வலம் வந்து மன்றாடி வேண்டினர். என்ன ஆச்சரியம்! ஏழாவது நாள் அவரது கனவில் ஸ்ரீரகூத்தமர் காஷாய வஸ்ரம் தரித்த தனது கையினால் துண்டித்தநாக்கினை வைத்து தைப்பது போல் தோன்றியது. சுரீர் என்று ஒரு கணம் வலி தோன்றி மறைந்தது. கடைவாயில் சிறிது ரத்தம் வடிந்தது. நாக்கு நல்லபடியாகி விட்டது. இதில் மிக மிக அதிசயம் என்னவென்றால் மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அவரது நாக்கை அடுத்தநாள் சென்று பார்த்தபோது அது அங்கு இல்லை. இப்படி பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார் ஸ்ரீரகூத்தமர்.
திருக்கோவிலூர் பிருந்தாவனத்திற்குச் சென்று நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் கொடிய கிரக தோஷங்களும், துன்பங்களும் விலகும் என்பதில் வியப்பில்லை