Monday, September 30, 2013

தன்ணுணர்வின் கதை – ஓஷோவின் கதை

ஒரு உண்மையான ஆன்மீக வாதியின் ஒழுக்கம் எதுவும் அவன்மேல் திணிக்கப்பட்டதாக இருக்காது. அது அவனது தன்னுணர்விலிருந்து எழுந்ததாக இருக்கும். அவன் சரியானதை செய்ய வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டான். தவறானது எதையும் செய்துவிடக் கூடாது எனவும் முயல மாட்டான். அவன் எதையும் விழிப்புணர்வோடு பார்ப்பான், அவனது தன்னுணர்விலிருந்து செயல்படுவான். அதனால் அவன் செய்வது எதுவோ அதுவே சரியானது. உண்மையில் தன்னுணர்வோடு இருக்கும்போது தவறானது எதையும் செய்யமுடியாது.
நாகார்ஜூனா என்ற மிகச் சிறந்த ஞானியைப் பற்றி ஒரு அழகான கதை உண்டு.
அவர் ஒரு நிர்வாணமாக திரியும் பக்கிரி, ஆனால் உண்மையான தேடுதல் உடையவர்கள் அனைவராலும் நேசிக்கப்பட்டார். ஒரு நாட்டின் அரசி கூட நாகார்ஜூனா மீது மிகவும் பக்தியோடு இருந்தாள். அவள் ஒருநாள் நாகார்ஜூனாவை அரண்மனைக்கு விருந்தாளியாக அழைத்தாள். நாகார்ஜூனா அரண்மனைக்குச் சென்றார்.
அரசி தனக்கு ஒரு உதவி வேண்டும் எனக் கேட்டாள். அவர் என்ன உதவி வேண்டும் எனக் கேட்டார். அதற்கு அரசி உங்களது பிச்சைப் பாத்திரம்தான் வேண்டும் என்றாள்.
நாகார்ஜூனா கொடுத்துவிட்டார் – அது ஒன்றுதான் அவரிடம் உள்ள பொருள் – பிச்சைப் பாத்திரம். ராணி உள்ளே சென்று வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான பிச்சைப் பாத்திரம் ஒன்றைக் கொண்டு வந்து நாகார்ஜூனாவிடம் கொடுத்தாள்.
அவள், இதை வைத்துக் கொள்ளுங்கள். வருடக் கணக்காக உங்கள் கைகளில் இருந்த அந்த பிச்சை பாத்திரத்தை நான் வழிபட போகிறேன் – உங்களின் துடிப்பில் சிறிதளவாவது அது கொண்டிருக்கும். இனி அது என் கோவிலாக இருக்கும். உங்களைப் போன்ற மனிதர் ஒரு சாதாரண மரத்திலான பிச்சை பாத்திரத்தை ஏந்தக் கூடாது. இந்த தங்க பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். நான் இதை உங்களுக்காகவே விசேஷமாக செய்தேன். என்றாள்.
அது உண்மையிலேயே விலையுயர்ந்தது. நாகார்ஜூனா சாதாரண முனிவர்கள் போல இருந்திருந்தால், நான் இதை தொட மாட்டேன். நான் துறவி. இந்த உலகத்தை துறந்து விட்டேன் என்று கூறியிருப்பார். ஆனால் அவரைப் பொறுத்தவரை எல்லாமும் ஒன்றுதான், அதனால் அவர் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொண்டார்.
அவர் அரண்மனையை விட்டுப் போகும்போது, ஒரு திருடன் அவரைப் பார்த்தான். அவனால் அவனது கண்களையே நம்ப முடியவில்லை. ஒரு நிர்வாண சந்நியாசியிடம் இவ்வளவு விலையுயர்ந்த பொருளா இவரால் எவ்வளவு காலம் இதை பாதுகாக்க முடியும் அதனால் திருடன் அவரை பின்தொடர்ந்தான்.
நாகார்ஜூனா ஊருக்கு வெளியே உள்ள ஒரு பாழடைந்த கோவிலில் தங்கியிருந்தார் – கதவுகளும் இல்லை, ஜன்னல்களும் இல்லை. மிகவும் பாழடைந்தது. திருடன் அதைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். சீக்கிரமே அவர் தூங்கப் போய்விடுவார். பின் எந்த கஷ்டமும் இல்லை. நான் அந்த பாத்திரத்தை எடுத்துக் கொள்வேன் என நினைத்தான்.
திருடன் கதவுக்கு வெளியே ஒரு சுவறின் அருகில் பதுங்கியிருந்தான். நாகார்ஜூனா அந்த பாத்திரத்தை வெளியே விட்டெறிந்தார். திருடனால் நடந்ததை நம்பவே முடியவில்லை.
நாகார்ஜூனா இந்த திருடன் தன்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்திருந்தார். இவன் தனக்காக வரவில்லை, இந்த பாத்திரத்திற்காகத் தான் வருகிறான் என்பதை நன்கு அறிந்த அவர் அதை வெளியே வீசி விட்டார். எதற்கு அனாவசியமாக அவன் காத்திருக்க வேண்டும் எடுத்துக் கொண்டு அவன் போகட்டும், நானும் ஓய்வெடுக்கலாம் என நினைத்தார்.
இவ்வளவு விலையுயர்ந்த பொருளை நாகார்ஜூனா இவ்வளவு சுலபமாக வீசி விட்டாரே என ஆச்சரியப்பட்ட திருடனுக்கு அது தனக்காகத் தான் வீசப்பட்டது என நன்றாகத் தெரிந்தது. அதனால் அவருக்கு நன்றி சொல்லாமல் அவனால் போக முடியவில்லை.
அவன், தலையை உள்ளே நீட்டி, சாமி, மிகவும் நன்றி. ஆனால் நீங்கள் மிக வித்தியாசமான மனிதர் – என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. மேலும் எனக்கு ஆழமான ஆசை ஒன்று எழுகிறது. ஒரு திருடனாக இருந்து என் வாழ்நாளை நான் வீணடித்துவிட்டேன். ஆனால் உங்களைப் போன்றவர்களும் இருக்கிறார்களா நான் உள்ளே வந்து உங்கள் காலில் விழலாமா எனக் கேட்டான்.
நாகார்ஜூனா சிரித்தார், அவர், வா, அதற்காகத்தான் அந்த பாத்திரத்தை வெளியே வீசினேன். அப்போதுதான் நீ உள்ளே வருவாய். என்றார்.
திருடன் மாட்டிக் கொண்டான். உள்ளே வந்து பாதங்களை தொட்டான். அந்த சமயத்தில் திருடன் மிகவும் வெளிப்படையாக இருந்தான். ஏனெனில் இவர் சாதாரண மனிதர் அல்ல என்பதை அவன் கண்டான். அவன் மிகவும் மென்மையாகவும், திறந்தும், நன்றியோடும், திகைத்தும், உள்வாங்கத்தயாராகவும் இருந்தான். அவன் அவர் காலில் விழுந்து வணங்கிய போது, வாழ்க்கையில் முதன்முறையாக அவன் தெய்வீகத்தை உணர்ந்தான்.
அவன் நாகார்ஜூனாவிடம், நானும் உங்களைப் போல மாற இன்னும் எத்தனை பிறவிகள் ஆகும் எனக் கேட்டான்.
நாகார்ஜூனா, எத்தனை பிறவிகளா அது இங்கேயே இப்போதே, இன்றே நடக்கலாம் என்றார்.
திருடன், நீங்கள் கிண்டல் செய்கிறீர்கள். அது இப்போது எப்படி நிகழமுடியும் நான் ஒரு திருடன், நாடே அறியும். அவர்களால் என்னை பிடிக்க முடிய வில்லை. அரசர் கூட என்னை பார்த்து பயப்படுவார். ஏனெனில் மூன்றுமுறை பொக்கிழத்திற்குள் நுழைந்து திருடிக் கொண்டு போயிருக்கிறேன். அவர்களுக்கு அது நான் தான் எனத் தெரியும். ஆனால் அத்தாட்சியில்லை. நான் ஒரு பக்கா திருடன் – நீங்கள் இந்த பகுதிக்கு அன்னியராக இருப்பதால் உங்களுக்கு இவை தெரியாமலிருக்கலாம். இப்போதே நான் எப்படி மாற முடியும் என்றான்.
நாகார்ஜூனா ஆயிரக்கணக்கான வருடங்களாக வெளிச்சமே இன்றி இருண்டு கிடக்கும் ஒரு வீட்டிற்க்குள் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிக் கொண்டு வந்தால், இருள் ஆயிரக் கணக்கான வருடங்களாக நான் இங்கே இருக்கிறேன். ஒரு தீபத்தை உள்ளே கொண்டு வந்ததால் மட்டுமே என்னால் வெளியே போக முடியாது. நான் நெடுங்காலமாக இங்கே இருக்கிறேன். எனக் கூற முடியுமா இருள் சண்டையிட முடியுமா ஒருநாள் இருட்டு, ஆயிரக் கணக்கான வருட இருட்டு என இருட்டில் பேதம் உண்டா எனக் கேட்டார்.
திருடனால் அதை புரிந்து கொள்ள முடிந்தது, இருள் வெளிச்சத்தை எதிர்க்க முடியாது. வெளிச்சம் வரும்போது, இருள் மறைந்துவிடும். நாகார்ஜூனா, நீ பல பிறவி பிறவியாக இருளில் இருந்திருக்கலாம். – அது ஒரு பொருட்டேயல்ல. நான் உனக்கு ஒரு ரகசியத்தை கொடுக்கிறேன். அதன்மூலம் நீ உன் இருப்பில் வெளிச்சத்தை கொண்டு வர முடியும். என்றார்.
திருடன், என் தொழில் அதை நான் விட வேண்டுமா எனக் கேட்டான்.
நாகார்ஜூனா அதை நீதான் தீர்மானிக்க வேண்டும். எனக்கு உன் தொழிலைப் பற்றியோ உன்னைப் பற்றியோ அக்கறையில்லை. உன் இருப்பில் வெளிச்சத்தை கொண்டுவரக்கூடிய ஒரு ரகசியத்தை நான் உனக்குத் தருவது மட்டுமே நான் செய்வது. மற்றபடி எல்லாமே உன்னை பொறுத்தது. என்றார்.
திருடன், ஆனால் நான் மற்ற சன்னியாசிகளிடம் சென்றபோது, அவர்கள் எப்போதும், முதலில் திருடுவதை நிறுத்து – பின்பு தான் தீட்சையளிக்க முடியும் எனக் கூறுவர். என்றான்.
நாகார்ஜூனா சிரித்து, நீ சன்னியாசிகளிடம் செல்லாமல் திருடர்களிடம் சென்றிருக்கலாம். அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.
நீ வெறுமனே உன் சுவாசத்தை கவனி – இது புத்தரின் முறை – உன் சுவாசம் உள்ளே போவதையும் வெளியேறுவதையும் கவனி. எப்போதெல்லாம் நினைவு வருகிறதோ, அப்போதெல்லாம் உன் சுவாசத்தை கவனி. திருடப் போகும் போது, வேறு யாருடைய வீட்டிற்குள் இரவில் நுழையும் போதும், உன் சுவாசத்தை கவனி. பொக்கிஷத்தை திறக்கும் போதும், வைரங்கள் அங்கே இருப்பதை பார்க்கும்போதும் உன் சுவாசத்தை கவனி. என்ன செய்ய விரும்புகிறாயே அதை செய் – ஆனால் சுவாசத்தை கவனிக்க மறந்து விடாதே. என்றார்.
திருடன், இது மிகவும் எளிதானதாக தோன்றுகிறதே. ஒழுக்கம் தேவையில்லையா குணநலன் வேண்டாமா வேறு எதுவும் தேவையில்லையா என்றான்.
நாகார்ஜூனா, நிச்சயமாக வேறு எதுவுமில்லை. உன் சுவாசத்தை கவனி. அவ்வளவுதான் என்றார்.
பதினைந்து நாட்களுக்கு பிறகு திருடன் திரும்ப வந்தான். ஆனால் அவன் முற்றிலும் புதியவனாக இருந்தான். அவன் நாகார்ஜூனாவின் காலில் விழுந்து வணங்கி, என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் ஒரு துளி கூட சந்தேகப் பட முடியாத விதத்தில் மிக அழகாக என்னை சிக்க வைத்து விட்டீர்கள். நான் இந்த பதினைந்து நாட்களாக முயற்சி செய்தேன் – அது நடக்கவே இல்லை. நான் என் சுவாசத்தை கவனித்தால் என்னால் திருட முடியவில்லை. நான் திருடினால், என் சுவாசத்தை என்னால் கவனிக்க முடியவில்லை. சுவாசத்தை கவனித்தால் நான் மிகவும் மௌனமாக, விழிப்போடு, தன்னுணர்வோடு, கவனமானவனாக இருக்கிறேன். அப்போது வைரங்கள் கூட கூழாங்கற்களாக தோன்றுகிறது. நீங்கள் எனக்கு ஒரு கஷ்டத்தை, அலைபாயுதலை உருவாக்கி விட்டீர்கள். நான் இப்போது என்ன செய்வது என்று கேட்டான்.
நாகார்ஜூனா, வெளியே போ – நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதை செய். அந்த அமைதி, அந்த மௌனம், அந்த ஆனந்தம் என உன் சுவாசத்தை நீ கவனிக்கும் போது கிடைப்பது வேண்டும் என நினைத்தால் அதை தேர்ந்தெடு. அதை விட வைரமும் தங்கமும் வெள்ளியும் விலைமதிப்புள்ளது என முடிவெடுத்தால் அதை தேர்ந்தெடு. நீதான் தேர்ந்தெடுக்க வேண்டும். உன் வாழ்வில் தலையிட நான் யார் எனக் கேட்டார்.
அந்த மனிதன், என்னால் தன்னுணர்வற்ற நிலையை தேர்ந்தெடுக்க முடியாது. இதுபோன்ற கணங்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. என்னை உங்களது சீடனாக ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு தீட்சையளியுங்கள் என்று கேட்டான்.
நாகார்ஜூனா, நான் உனக்கு ஏற்கனவே தீட்சையளித்து விட்டேன் என்றார்.

Friday, September 20, 2013

கபீர் இன்னொரு வகையான பறவை உதாரணத்தை எடுத்துக் கொள்கிறார்.

 இறையே! இன்னொரு அந்தியும் சாயுதே, புலம்பும் ஒரு சக்வி
பொறையே துக்கு சக்வா, போவோம் இருளில்லா தொருபுவி
(பொறை ஏதுக்கு= பொறுமை எதற்காக)
சக்வா ஆண்பறவை, சக்வி பெண்பறவை. வடநாட்டில் இக்காதல் பறவைகளை வைத்து இப்போதும் கவிதைகள் எழுதுவோர் உண்டு. ஒரு சாபத்தினால் மண்ணுலகில் பிறந்த தேவலோகத்தை சேர்ந்த இருவரைப் பற்றிய கதை. சாபத்தின்படி பறவைகளாகப் பிறந்த இருவரும் பகல் முழுவதும் சேர்ந்திருக்கலாம். அந்தி சாய்ந்ததும் அவைத் தனித்தனியே இரவை கழிக்க வேண்டும். (சேர்ந்திருந்தால்.....ஒரு வேளை சாப விமோசனம் தள்ளிக் கொண்டே போயிருக்குமோ என்னவோ). அந்த தனிமை பெரிதும் வாட்டுகிறது சக்வியை. இருளே இல்லாத ஒரு உலகம் இருந்து விட்டால் பின்னர் பிரிவு ஏது? ஆகையால் அத்தகைய உலகத்திற்கு அழைத்துச் செல்லும்படி சக்வா-வை வேண்டிக் கொள்கிறது சக்வி.
கபீரின் ஆன்மா (நமக்காகவும் சேர்த்து) இறைவனை நோக்கி சொல்லும் வேண்டுதலாக இதைக் கொள்ளலாம்.
உலகில், அஞ்ஞான இருளில் நாம் உள்ளளவும் இறைவன் நம்மை விட்டு விலகியே இருக்கிறான். அந்த அஞ் ஞானத்தை விலக்கி நம்மை ஞானத்திற்கு இட்டுச் செல்வதும் அவன் கையிலே உள்ளது. ஆனால் அதற்கான மனப் பக்குவம், ஏக்கம் நம் உள்ளத்தில் இல்லாத போது அவனும் சும்மா இருந்து விடுகிறான். கபீரைப் போல ஞானிகள் சக்வியின் மன நிலையை அடைந்து பரிதவிக்கின்றனர். ஞானமெனும் விடியலை எதிர் நோக்கி நேரத்தை கழிக்கின்றனர். வாழ்க்கையில் வேறெதுவும் ருசிப்பதில்லை அவர்களுக்கு. உலக விஷயங்கள் என்னும் இருளை வெறுத்து எப்பொழுதும் ஞான ஒளியான இறையின்பத்திலே திளைத்து இருக்க வேண்டுகின்றனர்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒவ்வொரு இரவும் படுக்கும் முன் காளியிடம்’ உன் காட்சி கிடைக்காமல் இன்னொரு தினமும் வீணானதே’ என்று புலம்புவதுண்டாம்.
ஆனால் நமது நிலையோ முண்டக உபநிஷத்தில் குறிப்பிடப்பெறும் பறவையை ஒத்து உள்ளது.
அதில் பரமாத்மா மற்றும் ஜீவாத்மா தொடர்பை விவரிக்கையில் ஒரு மரத்தில் வசிக்கும் இரு பறவைகளுக்கு ஒப்பிடப் பட்டுள்ளது. இதில் ஒன்று அமைதியாக இருந்து இன்னொன்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்.இன்னொன்று அமைதியற்று கிளைகளுக்கு இடையே இங்குமங்குமாய் மாறி மாறி பறப்பதும், பழுத்த பழங்களையும் பழுக்காத காய்களையும் கொத்துவதும் துப்புவதுமாய் நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்கும். இதுவே அல்லவோ நமது நிலை.
இந்த இயலாமையை அழகாக நம் கண்முன் தாயுமானசுவாமிகள் நிறுத்துகிறார்...

.......தமியனேற்கு அருள் தாகமோ
சற்றுமிலை என்பதுவும் வெளியாச்சு......
.....................................................யோகமார்க்க
சித்தியோ வரவில்லை சகச நிட்டைக்கும்
என்சிந்தைக்கும் வெகுதூரம், நான்
ஏகமாய் நின்னோடு இருக்கும் நாளெந்தநாள்இந்நாளில் முற்றுறாதோ
இகபரம் இரண்டிலும் உயிரினுக்கு உயிராகி
எங்குநிறை கின்ற பொருளே (6)

Thursday, September 12, 2013

மறு பிறவி

 இந்த பிறவியே வேண்டாம் என்கிறோம் மறு பிறவியா? என யோசிக்காதீர்கள்! இந்த பிறவியோடே பிறவிப்பிணி முடிவுக்கு வரவே மறுபிறவி!?
இங்கு சொல்லப்படும் மறுபிறவி என்பது இந்த பிறவி முடிந்து இனியும் பிறப்பது அல்ல!?
இந்த பிறவி இறுதியாக இருக்க வேண்டும்! அதற்குதான் நம் ஞானிகள் வழி
கூறுகிறார்கள்.
அது என்ன? எப்படி? நாம் ஞான குரு ஒருவரை பெற்று
உபதேசம் பெற்று சூட்சும நிலையில் பிறப்பதே மறுபிறவியாம்! அதாவது
உடலால் பிறந்த நாம் உணர்வால் நம் சூட்சம உடலை பிறப்பிக்க ஒரு
குருவை பெற்றே ஆகவேண்டும்!
யார் நம்மை, சூட்சம சரீரத்தை பிறப்பிக்க செய்கிறாரோ அவரே குரு!
நம் வாழ்வின் பெரும் பேறே இதில்தான் இருக்கிறது! ஞானமடைய
இதுவே வழி!
நம் ஸ்தூல தேகத்தை போலவே, நம் உடலினுள் ஒளிவடிவில் சூட்சும
தேகம் உள்ளது! முதலில் அதை உணரவேண்டும்! குருவானவர் தீட்சையின்
மூலம் சூட்சும சரீரத்தை பிறப்பிக்க செய்கிறார்!
ஸ்தூல தேகத்தில் பிறந்த நாம் சூட்சுமதேகத்தில் பிறப்பதே மறு பிறவி!
பிறந்த இப்பிறவியிலே மீண்டும் பிறப்பது என்பது இவ்வாறு தான்!
இதை யார் உணர்கிறார்களோ அவரே ஞானம் பெறுகிறார்!
வேதங்களில் சொல்லபடுவது "துவிஜன்" இரு பிறப்பாளன் என்பதே!
மறுபிறப்பு பற்றி பைபிளில் தெளிவாக கூறப்படுகிறது!
 "மறுபடியும் பிறவாதவன் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டான்"
மறுபடியும் பிறந்தால் தான் பரலோக ராஜ்யம்!? எப்படி?
எவன் ஒருவன் அக்னியலும் பரிசுத்த ஆவியாலும் ஞானஸ்நானம் பெறுகிறானோ? அவனே மறுபடியும் பிறந்தவன். அவன்தான் பரலோக ராஜ்யத்தை அடைவான்!
அக்னியால் ஞானஸ்நானம் என்பதுதான் அக்னியை பெருக்க வழிகூறும் உபநயனம்!
வெவ்வேறு பாசையில் சொல்லப்பட்ட ஒரே விஷயம்!
துவிஜன் - மறுபடியும் பிறப்பவன்!
பிரம்மமாகிய ஒளியை - கடவுளை அடைய - உணர , பிரம்மத்தின் தன்மையாகிய ஒளி நம் கண்களில் துலங்குவதை அறிந்து உணர்ந்து , இரு கண்கள் வழி ஞான தீட்சை பெற்று, அக்னியால் ஞானஸ்நானம் பெற்று, தியானம் செய்வதே மறுபிறவி பெரும் வழி! இறைவன் அருள்வார்!
குரு மூலமாக உபநயனத்தில் தீட்சை பெற்று தவம் செய்தால் பிறப்பு அறுக்கலாம்.
 "மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை" என அகஸ்தியர் கூறுவதும் இதுவே!
பிறந்த இப்பிறப்பில் குரு மூலம் தீட்சை பெறுவதே மாற்றி பிறப்பதாகும்!

Monday, September 9, 2013

ஆன்மீகத்தில் ஒருவருக்கான பயிற்சி முறைகளும் முன்னேற்றப் பாதையும் இன்னொருவருக்கு முற்றிலும் எதிர்மறையாக அமையக்கூடும்.

 
ஆன்மீகப் பாதையில் யாவரும் சாதகர்களே. ஆனால் அவர்களிடையே பெரும் வித்தியாசம் இருக்கும். அதை முறையாக அறிபவர் உயரிய ஆன்மீக நிலை அடைந்த குரு மட்டுமே. மோட்டார்களின் திறன் உள்ளே இருக்கும் கம்பிச் சுற்றுகளின் தரம், எண்ணிக்கை, சுற்றப்பட்ட விதம் போன்ற பல காரணங்களால் வேறு பட்டிருக்கும். ஆனால் வெளிக்கூடு ஏறக்குறைய ஒரே மாதிரி காட்சியளிக்கக்கூடும். அது போல சாதகர்களும் அவர்களது பழவினைச் சுற்றுகளுக்கும் வாசனைகளுக்கும் ஏற்ப தத்தம் திறமைகளில் வேறுபட்டிருப்பர்.
சுவாமி விவேகானந்தர் சிவோஹம் சிவோஹம் என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தமர்ந்தார். "அதெப்படி மானுட வடிவில் இருந்து கொண்டு தன்னை சிவனாக பாவிக்கலாம்?" என்று நாகமகாஷயர் கேள்வி எழுப்பினார். "அவனுக்கு அவன் பாதை சரி. உனக்கு உன்பாதை சரி" என்று ராமகிருஷ்ணர் பதிலளித்தாராம். குரு சொன்னால் சரியாகவே இருக்கும் என்ற நாகமஹாஷயர் "அப்படியானால் சரி" வினயத்துடன் ஏற்றுக்கொண்டாராம்.
மற்றொரு சமயம் நரேந்திரன் இரவு நேர தியானத்தில் உயர்ந்த சமாதி நிலையை எட்டிய நிலையில் அருகிலிருந்த சாரதாநந்தரிடம் 'என்னைத் தொடு 'என்று பரவசத்துடன் அவருக்கும் தன் அனுபவத்தை தெரிவிக்க விழைந்தார். அவரை தொட்டதும் சாரதாநந்தரின் உடலுக்கு அந்த சக்தியின் தாக்கத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் மிகுந்த தேக‌சிரமத்திற்கும் மன சிரமத்திற்கும் உள்ளானார். அதே சமயத்தில் எங்கோ அமர்ந்திருந்திருந்த ராமகிருஷ்ணர் "இந்த நரேன் ஏனிப்படி புத்தியில்லா காரியத்தை செய்கிறான் "என்று அருகிலிருந்தவரிடம் கடிந்து கொண்டாராம்.
குறைந்த வேகத்தில் ஓட வேண்டிய எந்திரத்திற்கு அதிவேக மோட்டர் இணைப்பைக் கொடுத்தால் எந்திரத்தின் உட்பாகங்கள் சிதைந்து போகக்கூடும். கிட்டத்தட்ட அந்த நிலைமைதான் சாரதாநந்தர் அடைந்தது. அதனால்தான் ராமகிருஷ்ணரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
சாரதநந்தருக்கு மீண்டும் ராமகிருஷ்ணர் பலவேறு முறைக‌ளில் பயிற்சியளித்து வெகுநாட்களுக்குப் பின்பே தன் இயல்பு நிலையை அடைந்தார் என்று படித்ததுண்டு. அதாவது ராமகிருஷ்ணர் என்கிற மெக்கானிக் சிதைந்த பகுதிகளை சரி பார்த்து மீண்டும் எந்திரத்தை ஓடச் செய்தார் ! :))
(சாரதாநந்தரின் பெயர் நினைவிலிருந்து எழுதப்பட்டது. ஒரு வேளை வேறு ஒரு சக சாதகராகவும் இருந்திருக்கலாம்)ஆகவே Sauce for the goose is Sauce for the gander என்னும் வழக்கு ஆன்மீகத்தில் சரியாகாது. ஒருவருக்கான பயிற்சி முறைகளும் முன்னேற்றப் பாதையும் இன்னொருவருக்கு முற்றிலும் எதிர்மறையாக அமையக்கூடும்.

Wednesday, September 4, 2013

ஓம் நமசிவாய ஓம்


அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!
அகண்டம்பரி பூரணத்தின் அருளே போற்றி!
மண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!
மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி!...
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி!
குருமுனியின் தாளினையெப் போதும் போற்றி!

Monday, September 2, 2013

சிவபெருமானின் குரு ஒரு பதிவு....


பொதுவாக நம் எல்லோருக்கும் குரு எப்படி அவசியமோ அதுபோல் தான் தெய்வத்துக்கும் குரு அவசியம் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆனால் தெய்வத்துக்கு தேவை இல்லை , இருந்தாலும், தெய்வமே தனக்கு என்று சொன்னால் அந்த குருவின் பெருமையை நாம் புரிந்துகொள்ள சொல்லப்பட்டதாகும் .
ஒரு தடவை பார்வதியும் பரமேஸ்வரரும் கைலாயத்தில் தனியாக இருக்கும் போது பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது , பார்வதி தேவி , சிவனை பார்த்து சொன்னார்கள். எல்லோருக்கும் அனைத்தையும் தான் தருகிறீர்கள். ஆனால் நமகென்று ஒரு ஏன் ஒரு வீடு கூட இல்லை என்றாள் .
சிவபெருமான் சரி என சொல்லி ஒரு அருமையான வீட்டை சிருஷ்டி செய்தார், பார்வதிக்காகவும் தனக்காகவும். எப்போதும் போல் வீடு கட்டிவிட்டால், க்ருஹப்ரவேசம் செய்யணுமே ., அதற்காக , தனது வீட்டு ஐயரை கூப்பிட வேண்டும் அல்லவா. அது போல் தான் தனது ஐயரை கூப்பிட்டு செய்ய சொன்னார் இறைவன். அந்த ஐயர் யார் தெரியுமா, வேறு யாரும் இல்லை., நம்ம ராவணன்தான் .
ராவணன் வந்து க்ருஹப்ரவேசத்தை தடபுடலாக செய்தான் .சிவனுக்கு ஆயிற்றே. ராவணனை மிஞ்சிய சிவ பக்தன் மூன்று உலகிலும் இல்லையே.
காரியங்கள் முடிந்தன. இப்போது ஆசாரியரின் பூஜைக்காக, தக்ஷிணை கொடுக்கவேண்டும் அல்லவா. அதற்காக, ராவணனை சிவ பெருமான் கேட்கிறார். உங்களுக்கு என்ன சன்மானம் வேண்டும் என்று. ராவணன் , தாங்கள் தானே கொடுக்க வேண்டும்,கொடுங்கள் என்றான். அதற்க்கு சிவபெருமான் உனக்கு என்ன வேண்டும் என்று கேளு , என்று சொன்னவுடன், ராவணன் கேட்டான், எது கேட்டாலும் தருவீர்களா என்றான். சிவபெருமான் எது வேண்டுமானாலும் கேள் என்றான்.
அப்படியானால், சிவபெருமானே, உங்கள் வீட்டு க்ருகப்ப்ரவேச தட்சிணையாக, நீங்கள், இந்த வீட்டையே எனக்கு கொடுங்கள் என்றான். இது எப்படி இருக்கு மக்களே ,பாருங்கள். சிவனும் அப்படியே ஆகுக என்று கொடுத்துவிட்டார் தனது வீட்டை. அந்த வீடு எது தெரியுமா அன்பர்களே., அதுதான் இலங்கை ஆகும்.  அதனால்தான் ராவணன் தனது இருப்பிடமாக இலங்கையை வைத்துக் கொண்டான்.