Thursday, August 22, 2013

ஒரு வாலைப்பெண்

ஓர் வாலைப் பெண்ணின் கதையைச் சொல்கிறேன். இப்பெண்ணைப் பற்றிப் பாடியவர் சென்ற நூற்றாண்டில் இருந்த முத்துக்குமாரு என்பவர்.

அப்பாடல்:

“முடிவிலாதுறை சுன்னாகத்தான்
முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்து
அடைய ஓர் பெண் கொடிகாமத்தான் அசைத்
ஆனைக்கோட்டை வெளிக்கட்டுடை விட்டாள்
உடுவிலான் வரப் பன்னாலையான் மிக
உருத்தனன் கடம்புற்ற மல்லாகத்தில்
இடைவிடாதனையென்று பலாலிகண்
சோரவந்தனள் ஓர் இளவாலையே”
இப்பாடலில் யாழ்ப்பாணத்திலுள்ள பதினொரு ஊர்களின்
(சுன்னாகம், தாவடி, கொக்குவில், கொடிகாமம், ஆனைக்கோட்டை,
கட்டுடை, உடுவில், பன்னாலை, மல்லாகம், பலாலி, இளவாலை)
பெயர்களிருக்கின்றன. ஆனால், இவற்றின் கருத்து வேறுவிதமானது.
கருத்தைப் பார்ப்போம்.
பல துறைகளையுமுடைய வெள்ளிமலைக்குத் (சுல் + நாகம் – வெள்ளிமலை)
தலைவனானவன் முந்தித் தாவுகின்ற பாதங்களையுடைய குதிரை
(கொக்கு – குதிரை) மீது வந்து குறித்த இடத்திற் சேர, ஒரு பெண் கொடி
போன்ற அழகையுடையாள், அசைந்து மார்புக்கட்டை அவிழ்த்து விட்டாள்.
நட்சத்திரக்கூட்டங்களுக்குத் தலைவனான சந்திரன் தோன்ற கருப்புவில்லை
உடைய மன்மதன் மிகுந்த கோபமடைந்தனன். கடப்ப மாலையைத் தரித்த
மார்பகத்தில், இடைவிடாதனையென்று, தனது ஆவி போன்ற கண்களிலிருந்து,
ஆனந்தக் கண்ணீர் சொரிய ஓர் வாலைப் பெண் வந்து சேர்ந்தாள்.
இதே போன்று தமிழ்நாட்டில் ஒரு புலவர் பாடியிருக்கிறார். அவர் ஊர்களின்
பெயர்களை வைத்துப் பாடவில்லை. ஒரு கிழமையிலுள்ள ஏழு நாட்களையும்
ஒழுங்காக அமைத்துப் பாடுகிறார். தமிழ்நாட்டில் “தளசிங்கமாலை” என்ற
நூலிலுள்ளது அப்பாடல்.
“ஞாயிறு போய்விழத் திங்கள் வந்தெய்திடச்செவ்
வாயனல் சோரப் புதன் அம்பு தூவ நல்வியாழன் வர
வேயுறு வெள்ளி வலை சோர, நானுன்னை மேவுதற்குத்
தாய் சனியாயினளே, ரகுநாத தளசிங்கமே”
இப்பாடலின் பொருள்:
சூரியன் அஸ்தமிக்கச் சந்திரன் தோன்ற, சிவந்த வாயிலிருந்து
விரக தாபத்தினால் வெப்பக்காற்று வீச, மன்மதன் பாணமெய்ய,
தென்றல் வீச, மூங்கிலையத்த அழகிய வளையங்கள், விரக
தாபத்தினால் சோர்ந்து விழ, நான் உன்னை வந்து சேர்வதற்குத்
தாய் குறுக்கே நிற்கின்றாளே என்பதாம்.
இதில் ஒரு கிழமையின் ஏழு நாட்களும், ஒழுங்காக வந்துள்ளமை
காண்க. இது “தாய் துஞ்சாமை” என்னும் அகப்பொருட் குறையச்
சுட்டும் பாடலாகும்.
இவ்வகைச் செய்யுள்களை “நாமாந்திரிகை” என்னும் யாப்பு
வகையில் அடக்குவர்.

Saturday, August 17, 2013

இறைவனிடம் சேர்க்கும் மதம் எது?

சீடன் ஒருவன் தன் குருவிடம் சென்று 'எந்தனையோ மதங்கள் இருக்கின்றன. அவற்றில் என்னை இறைவனிடம் கொண்டு சேர்க்கும் மதம் எது என எப்படிக் கண்டறிவது?' எனக் கேட்டான். அவர் அவனை ஆற்றங்கரைக்குக் கூட்டிக் கொண்டு போய் 'அடுத்த கரைக்குப் போக படகு தயார் செய். அங்கு உன் கேள்விக்கு விடை கிடைக்கும்' என்றார்.
அவன் தயார் செய்து காட்டிய ஒவ்வொரு படகுக்கும் ஏதோ ஒரு குறை கூறி ஒதுக்கித் தள்ளினார் குரு. சீடனுக்கோ எப்படியாவது அடுத்த கரைக்குப் போய் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற தவிப்பு! பொறுமை இழந்த அவன் ஏதோ ஒரு படகில் ஏறிக்கொண்டு மறுகரைக்குச் சென்றான். அங்கு அவன் கேள்விக்கு விடை கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் தென்படவில்லை. குருவிடம் வந்து மீண்டும் கேட்டான்.
அவர் சொன்னார், 'உனக்கு உண்மையை அறிந்து கொள்ள மறுகரைக்குப் போயாக வேண்டும் என்ற உத்வேகத்தான் முக்கியமாக இருந்ததே தவிர மறுகரைக்குக் கொண்டு போகும் படகு முக்கியமாகப் படவில்லை. மேலும், மறுகரைக்குப் போவதுதான் முக்கியமே தவிர படகு முக்கியமல்ல. அதே போல் இறைவனை அடைய வேண்டும் என்ற தீவிரந்தான் முக்கியமே தவிர பின்பற்றும் மதம் முக்கியமல்ல. எந்தப் படகும் அக்கரைக்குக் கொண்டு சேர்க்கும். எந்த மதமும் இறைவனிடம் கொண்டு சேர்க்கும். 
சீடன் உண்மையை உணர்ந்தான்.

Friday, August 16, 2013

பரந்தாமனின் தலைவலியும், மருந்தாக பக்தரின் பாத தூசியும்...

அன்று வைகுண்ட ஏகாதசி நாளாகும். பகவான் கிருஷ்ணரைத் தரிசிக்க, துவாரகை வாசிகளும், மகான்களும், மகரிஷிகளும், பக்தர்களும் பெருமளவில் வந்திருந்தார்கள்.
இந்தக் கூட்டத்தைக் கண்ட நாரதர் "ஆகா... எல்லோருக்கும் எத்தகைய பக்தி! உபவாசமிருந்து பகவானைத் தரிசிக்க வந்திருக்கிறார்களே" என்று பெருமிதப்பட்டார். அங்கிருந்த ருக்மிணிகூட அசந்து போனாள். "இவர்களது பக்திக்கு ஈடேது இணையேது... நம்பமுடியவில்லையே" என்றாள்.
இதைக்கேட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணர், மனதிற்குள் சிரித்தார். பக்தியின் உண்மைத் தத்துவத்தை விளக்க வேண்டும் என்று நினைத்தார். பிறகு தனக்கு தாங்க முடியாத தலைவலி இருப்பதாக நடித்தார்! மஞ்சத்தில் படுத்து துடிதுடித்தார். பரந்தாமனுக்கே தலைவலியா என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
மருத்துவர் "தன்வந்திரி" வந்து மருந்து கொடுத்தார். நாரதர், ருக்மணி எல்லோரும் மனம் கலங்கி நின்றார்கள்! சிறிது நேரத்தின் பின்பும், பரந்தாமன் தலைவலியால் துடிதுடித்தார். வந்தவர்கள் எல்லோரும் கலங்கி நின்றனர். "கிருஷ்ணா! தன்வந்திரிக்கே உன் தலைவலிக்கு மருந்து தெரியவில்லை. நீர் படும் வெதனையை எங்களால் பார்த்துக் கொண்டு இருக்க மடியவில்லை. இதற்கான மருந்தை நீரே கூறும், எங்கிருந்தாலும் போய் கொண்டுவருகிறோம்" என்று கேட்டார் நாரதர்.
"இதற்கு மருந்து என் பக்தர்களிடம்தான் இருக்கிறது. கேட்டால் அவர்கள் தருவார்களோ என்றுதான் அஞ்சுகிறேன்" என்றார் கிருஷ்ணர். "இதென்ன கிருஷ்ணா! நாம் எல்லோருமே உமது பக்தர்கள்தானே, யாரிடம் இருக்கிறது என்று சொன்னால், உடனே தரக்காத்திருக்கிறோம்" என்று நாரதர் உற்சாகமாகப் பதிலளித்தார்.
"அப்படியா நாரதா! எனது பக்தரின் பாத தூசியை எனது சிரசில் தடவினால் இந்த தலைவலி நீங்கிவிடும். உங்களில் யார் தரப்போகிறீர்கள்?" என்று கேட்டார் கிருஷ்ணர். இதைக்கேட்டு, எல்லோரும் திடுக்கிட்டனர்! பரமபக்தரான நாரதரையே எல்லோரும் பார்த்தார்கள்.
நாரதர் வெகுண்டார். "எல்லோரும் என்னை ஏன் பார்க்கிறீர்கள், நான் பரந்தாமனின் பக்தன்தான், ஆனாலும் எனது பாத தூசியை பகவான் தலையில் போட்டு.., பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ள விரும்பவில்லை. அப்படிச் செய்தால் கொடிய நரகம்தான் எனக்குக் கிடைக்கும். ஏன் பரந்தாமனின் பத்தினி அதைச் செய்யலாமே.. என்றார்.
"நான் அந்தப் பாவத்தை ஒருபோதும் செய்யமாட்டேன்" என்றாள் ருக்மிணி. "பிரபு! வேறு மருந்தைச் சொல்லுங்களேன்" என்றார் நாரதர். "நாரதா! பிருந்தாவனம் சென்று கோபிகளைக் கேட்டுப்பாரும், யாராவது தரக்கூடும்" என்றார் கிருஷ்ணர்.
நாரதர் உடனே பிருந்தாவனம் சென்று, செய்தியை கோபிகளுக்குச் சொன்னார். சில கோபிகள் மயங்கி வீழ்ந்தனர். "அட பாவிகளா! இங்கு இருக்கும் வரை அவருக்கு எந்த வருத்தமும் வந்ததில்லையே. துவாரகையில் அவரைச் சரியாகக் கவனிக்க வில்லையா? என்று கேட்டு நாரதரைப் புடைந்து எடுத்தனர். "தங்கள் பாத தூசியை அவரின் தலையில் போட்டு, கொடிய நரகத்திற்குப் போக அங்கு யாரும் விரும்பவில்லை. ஆகவேதான் இங்கு வந்தேன்" என்று பயத்துடன் கூறினார் நாரதர்.
"எங்களில் உண்மையான பக்தை யார் என்று பார்க்க இப்பொழுது நேரமில்லை. எங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, பகவானின் தலைவலி நீங்கினால் போதும்" என்று கூறியவாறு ஒருத்தி துணியை விரிக்க.., மற்றைய கோபியர் அதில் தங்கள் கால் தூசியைச் சேர்த்தனர். அதை ஒரு பொட்டலமாக முடிந்து கொடுத்து, "கதைத்து நேரத்தைப் போக்காமல், உடனடியாகச் சென்று அவரின் தலைவலியைக் குணப்படுத்துங்கள்" என்று நாரதரை அனுப்பி வைத்தார்கள் கோபிகள்.
"எங்களுக்கு என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை, பகவானின் தலைவலி நீங்கினால் போதும்" என்று கோபிகள் சொன்னது நாரதரின் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. பயனை எண்ணாது, பகவானை எண்ணுவதே தூய பக்தி என்பதை புரிய வைக்க பகவான் நடத்திய நாடகம் என உணர்ந்தார் நாரதர்!.
கிருஷ்ணரிடம் சென்று அந்த முடிச்சிலிருந்த கோபியரின் பாத தூசியை தனது தலையிலே போட்டுக்கொண்ட நாரதர், தங்களுக்கு எக்கேடு வந்தாலும் பரவாயில்லை, பரந்தாமனுக்கு எக்கேடும் வரக்கூடாது என்று எண்ணும் கோபியரின் பக்தியே மேன்மையானது என்றார்.

சனீஸ்வர தோஷம் - பிடியிலிருந்து விலக - சித்தர் வழி முறை

மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் கண்டறிந்து அவைகளை இன்பமயமான வாழ்க்கையாக மாற்றுவதற்காக சித்தர்களாலும்,முனிவர்களாலும்,ரிசிகளாலும் இறைவனின் அருளால் தங்கள் ஞானத்தால் கண்டறிந்த தெய்வீக கலைகள்தான் மணி,மந்திரம்,அவுஷதம் என்ற முப்பெரும் கலைகள் ஆகும்.

இவை ஜோதிடம்,மந்திரம்,மருத்துவம் எனப்படும் இப்பெரும் கலை  களினால்  மனித குலம் இன்று வரை மனம் ,உடல் ,வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபட்டு பெரும் நன்மை அடைந்து வருகின்றது.

மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு துன்பங்களுக்கு நவக்  கிரகங்களின் பார்வை (கதிர் வீச்சு) ஒரு காரணம் என ஜோதிட சாஸ்த்திரம் வலியுறுத்துகின்றது.

நவகிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை.அவை ராகு,கேது,சனி ஆகும்.இவைகளில் முதன்மையானது சனி என்ற சனீஸ்வர பகவான் தான்.

சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பர்.இறை வனாகிய சிவ பெருமானையே ஒரு கணம் பிடித்ததால் தான் சனி ஈஸ்வர பட்டம் கிடைத்து சனீஸ்வரன் ஆனார்.

பனிரெண்டு இராசிகளில் உள்ள இராசிக்காரர்களுக்கு சுமார் ஏழு இராசி களின் அமைப்பு உள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் ஏழரை சனி, கண்ட சனி,அஷ்டம சனி,போன்ற பாதிப்பு இருந்துகொண்டே இருக்கும். இதனால் அவர்களுக்கு வாழ்வில் எடுத்த காரியங்களில் தோல்வி,பண முடக்கம்,வம்பு சண்டை,வழக்குகள்,அனைத்திலும் சந்தேக மனப் பாண்மை,மனப் பிரம்மை,விரக்தி,தொழில் முன்னேற்றமின்மை,எதிர் காலமே சூன்யமானது போன்ற இன்னல்களுக்கு ஆட்பட்டு வாழ்க்கையை மிகவும் சிரமமாக அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

சனீஸ்வர தோஷத்தின் பிடியில் உள்ளவர்கள் பல்வேறு கோயில் களுக்குச் சென்று நவகிரகங்களுக்கு தீபம் போட்டும்,அர்ச்சனை, அபிசேகம் செய்தும் சரிவர பலன் காணாமல் மனம் நொந்த நிலையில் இருப்பார்கள்.இதற்கு பரிகாரமாக சித்தர்கள் மிக எளிய வழி முறைகள் வகுத்துள்ளனர்.

சனி தோஷம் - பிடியிலிருந்து விலக அகத்திய பெருமான் கூறும் வழிமுறை பாடல் விளக்கம்.

கோனவனார் குடியிருந்த பிடரிதன்னில் 
கொள்கிநின்றார் சனியனெனும் பகவான்றானே
தானென்ற சனிபகவான் பிடரிமேலே 
தானேறி நின்றுகொண்டு தலைகால் வேறாய் 
கோனென்ற அறிவுதனை நிலைக்கொட்டாமல் 
குடிலமென்ற குடிலமெல்லாங் கூறாய்ச் செய்து 
நானென்ற ஆணுவமே நிலைக்கப்பண்ணி 
நன்னையென்ற வெளிகளெல்லா மிருளாய்க் கட்டி 
கானென்ற கபடமதுக் கேதுவாய் நின்று 
கரையேற வொட்டாமல் கருதுவானே 
கருதுகின்ற சனிபகவான் பிடரிமேலே 
கவிழ்ந்து நின்ற பாசமதைக் களையவேண்டி 
சுருதிபொரு ளானதொரு நாதன்பாதம் 
தொழுதுமன துறுதியினால் துகளறுத்து 
நிருதியெனுஞ் சாபமது நிவர்த்தியாக 
நீமகனே சொல்லுகிறே னன்றாய்க்கேளு
பருதிஎனும் ரவிதனையே நமஷ்கரித்து 
பாங்குடனே ஓம் கிலி சிவவென்று சொல்லே 
சொல்லிடுவாய் தினம்நூத்தி யிருபத்தெட்டு 
சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில் 
வல்லுடும்பாய் நின்றசனி மாறிப்போகும் 
மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும்  
இறைவன் குடியிருக்கும் அறிவாகிய பிடரிதன்னில் சனி பகவான் ஏறி  நின்று கொண்டு அறிவுதனை தலைகீழாய் மாற்றி தான் என்ற ஆணவத்தை நிலைக்கச்செய்து, உண்மையை பொய்யாய் காட்டி,நல்ல வர்களை கெட்டவர்களாகவும்,கெட்டவர்களை நல்லவர்களாகக் காட்டி, புத்தியை மாற்றி,பொய் ,களவு ,மது ,மாது ,சூது ,போன்ற வைகளுக்கு புத்தியை அடிமையாக்கி வாழ்க்கையை கரையேற விடாமல் தடுப்பார்.
நீரில் பாசம் போல் படிந்து நின்றது போல் நம் மேல் படிந்துள்ள சனீஸ்வர தோஷத்தை நீக்கிக்கொள்ள இறைவனின் பாதம் தொழுது ஒரு உபாயம் கூறுகிறேன் .

அதிகாலை குளித்து முடித்து கிழக்கு நோக்கி நின்று கொண்டு பருதி எனும் சூரிய பகவானை வணங்கி "ஓம்  கிலி  சிவ" என்ற மந்திரத்தை  -128-முறை  செபிக்கவும்.இப்படி ஒரு மண்டலம் - 48-நாட்கள்தொடர்ந்து செபித்து வர உடும்பு போல் பற்றி நின்ற சனீஸ்வர தோஷம் விலகி விடும்.இது ஏராளமானோர் செய்து பயனடைந்த முறை.

சித்தர் நெறி

ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டிலில்லை!

ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று!
ஞானத்தின் மிக்கவை நன்முக்தி நல்காவா!
ஞானத்தின் மிக்கார் நரனின் மிக்கார்! என்ற திருமந்திரம்.
"ஞானத்தைக் காட்டிலும் மிகச் சிறந்த நெறி நாட்டில் இல்லை; ஞானத்தைப் போதிக்காத சமயத்தாலும் நன்மை இல்லை;ஞானத்தைப் போல் மிகச் சிறந்த வழி முக்திக்கு வேறெதுவும் நல்காது; ஞானத்தைத் தழுவாத மனிதன் நல்மனிதனாகான்" என்பது திருமூலர் வாக்கு.

Why a Guru is necessary for Thiruvadi meditation?

Seeing the God inside you is the Ultimate enlightenment.

Get initiation or dhekshai from the Guru and do meditation with opened eyes. Doing meditation you can reach your soul or MeiPorul, which is the Geo Center of your head.
Only the dhekshai can make you to feel the sensation in your eyes during the dhekshai itself. Upadesham is making the shishya to know the secret. Upa means 2. Dhesam means place. Eyes are the 2 places. Upadesam is about 2 eyes.
Guru is a powerful person who can take off your imprints. Only he can penetrate your eyes with his eye power and can reach your soul and initiate. The role of Guru is so Divine and powerful. This type of initiation through eyes is called as Nayana Dhekshai. Nayana means Eyes.
Seek a Guru to show your soul.

Wednesday, August 14, 2013

இருட்டறையில் ஏற்றப்படும் மெழுகுவர்த்தி போன்றவர் குரு....

 
குரு ஒரு மனிதனாக அல்லது ஏனைய மற்ற பொருளாக இருக்கலாம். நவீன காலத்தில் குரு என்பவர் தன்னை தனது நிலையை உயர்வான அலங்காரத்தால் அலங்கரித்து கொண்டு மக்களை மாறாத மயக்கத்தில் வைப்பவரகவே இருக்கிறார்கள்.
மனிதனுக்கு மட்டுமே குரு அவசியம். காரணம், மனிதன் இயல்பான அறிவுடன் அணைத்து செயல்களையும் செய்ய முடிந்தவன் இல்லை. மேலும் அவனால் அடுத்தவருடன் உறவாட மொழி மற்றும் சடுங்கு முறைகள் பல நடைமுறை செய்யப்பட்டு உள்ளது .
ஒருவரின் அறியாமையை போக்கும் ஒருவரே குரு. அதே சமயத்தில் அவருக்கு எல்லாம் தெரியும் என்பது சாத்தியம் இல்லை. பலதரப்பட்ட கோணமுடன் பல வகைகளில் வாழ்தலின் அம்சம் இருப்பதால் எல்லா வகைகளிலும் ஒருவர் ஒருவருக்கு உதவ முடியாது. குருவும் எதாவது ஒரு வகையில் அறியாமையுடன் இருக்க வைப்புகள் அதிகம்.
நமக்கு எதைக் குறித்து போதிய தெளிவு இல்லையோ அதை குறித்து நமக்கு போதிக்கும் ஒருவர் குரு. ஆனால் அதை குறித்த அரை குறை அறிவுடன் அவர் இருக்கிறார் என்றால் நாமும் போதிய தெளிவை அவரால் அடைய முடிவது இல்லை. எனவே,உண்மையான அறிவுத் தெளிவு பெற்ற ஒருவரை குருவாக அடைவது அவசியம். 
தனது புரிதலை அடுத்தவருக்கு உரிமையாக்கி தருபவரே குரு. குரு என்பது ஒரு வேடமோ, சடங்கோ,அலங்காரமோ, போதனையோ, விளம்பரமோ இல்லை.
எல்லாம் அறிந்தவர் யாரும் இல்லை, எதுவும் அறியாதவர் யாரும் இல்லை. எனவே, குரு அனைத்தும் அறிந்தவராகவோ, சிடர் எதுவும் அறியாதவரகவோ இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. 
இன்றைய உலகில் பலதரப்பட்ட துறைகள் வந்தவண்ணம் உள்ளது. புதிய கண்டுபிடுப்புகள், புதிய கருவிகள் என்று நித்தம் புதுமைகள் பிறந்தவண்ணம் உள்ளன. ஆனால் அவைகள் மட்டும் நிறைவான வாழ்வை தர முடியாது. எனவே உலக இயக்கத்திற்கு அடிப்படையான காரணம் அறிந்து இன்புறுவது மனிதனுக்கு நல்லது. 
அவ்வகையில் தன்னை அறிந்து தனக்கு மூலம் எது என்பதை அறிந்து அதை அறியும் கலை அறிந்து போதிக்கும் ஒருவரை குரு என்பது சரியானதாக இருக்கும்.

Saturday, August 10, 2013

கந்தசஷ்டி கவசம் உருவான கதை..


கவசம் என்றால் பாதுகாப்பது அல்லது காப்பாற்றுவது என்று பொருள்படும். போரின்போது வீரர்கள் எதிரிகளிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள கவசம் அணிந்து கொள்வார்கள். அவ்வாறு கந்த சஷ்டி கவசம் நம்மை தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும், நோய் நொடிகளிலிருந்தும் காப்பதால் அதை கவசம் என்று அழைக்கின்றோம்.
இந்த கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். தேவராய சுவாமிகள் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா?
தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும்அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை. வாழ்க்கையே வெறுப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார்.
அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார்.
நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார்.
அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும்.
தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார். இவை அனைத்துமே 'கந்த சஷ்டி கவசம்' என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன.
அவர் முதன் முதலில் இயற்றிய 'திருச்செந்தூர் கவசம்' தான் பொதுவாக எல்லோரும் அறிந்த,
'சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்'
என்று தொடங்கும் கவசம்.
இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது. என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத்தரும்.
முருகனுக்கு உகந்தநாள் சஷ்டி. சஷ்டி என்றால் ஆறு. முருகனுக்கு முகங்கள் ஆறு. முருகனின் படை வீடுகள் ஆறு. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஆறு, 'சரவணபவ' என்ற முருகனின் மந்திரம் ஆறெழுத்து, ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு பேன்றவற்றை குறிக்கும்.
இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே. கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்குமே. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா?
இத்த்னை சிறப்பு வாய்ந்தது இந்த கந்த சஷ்டி கவசம். இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும்.
பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் பாடியதுதான் 'சண்முக கவசம்'. இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடதக்கது.