Tuesday, October 30, 2012

குரு பெருமை

குரு பெருமையை பேசாத ஆன்மீக வழிகாட்டிகளே இல்லை. கபீரின் குரு ராமானந்தர். வளர்ப்பால் கபீர் இஸ்லாத்தை கடைபிடித்த ஒரு எளிய நெசவு குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது வாழ்க்கையின் பெரும் பகுதி வாராணசி எனப்படும் காசியிலியே கழிந்தது. இயல்பிலேயே அவரது மனம் இறைவன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்ற உண்மையை உணர்ந்திருந்தது. அவருக்கு குருவின் அவசியமும் புரிந்திருந்தது. ராமானந்தரின் முற்போக்கான கருத்துகளும், மனத்தூய்மையையும் கண்ட அவர் அவரையே மனத்தால் குருவாக வரித்து விட்டார். அவரிடம் மந்திர உபதேசம் பெறுவது எப்படி ? அவரோ ஆழ்ந்த இந்து. இவரோ முற்றிலும் வேறு சமய நம்பிக்கை உடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர். . அவரை அணுகி எவ்வாறு கேட்பது ?

கபீர் ஒரு தீர்மானத்திற்கு வந்தார். உத்தமர்கள் வாயில் எப்போதும் இறைநாமமே இருக்கும் ஆதலால் அவர்கள் எதிர்பாராது நிகழும் போது கூட அதுவே வெளிப்படும். (காந்திஜி சுடப்பட்ட நிலயிலும் அவர் சொன்னது "ஹே ராம்" ). இதை உணர்ந்த கபீர் ஒரு நாள் ராமானந்தர் கங்கையில் அதிகாலையில் நீராடி வரும் பொழுது படித்துறையின் ஒரு படியில் குறுக்கே படுத்து விட்டார். இருள் விலகாத நிலையில் தெரியாமல் கபீரை மிதித்து விட்டார் ராமானந்தர். அனிச்சையாக "ராம் ராம்" என்று சொல்லிக் கொண்டே அவர் காலை பின் வாங்கிக்கொண்டார். உடனே கபீர் எழுந்து அவரை வணங்கி அவரது திருவடி தன் மீது பட்டு சொல்லப்பட்ட ராம நாமத்தையே தன் உபதேச மந்திரமாகக் கொள்ள ஆசி வேண்டினார்.

"தாள் தந்து அளிக்கும் தலைவனே சற்குரு" என்பார் திருமூலர் (2049).
"குரு பரிசித்த குவலயமெல்லாம் திரிமலம் தீர்ந்து சிவகதியாமே" (2054)

என்றும் உரைப்பார். கபீருக்கு இவைகள் அவரது ஆழ்ந்த பக்தியின் காரணமாக இயல்பாகக் கூடியது. அதை புரிந்து கொண்ட ராமானந்தரும் அவரை தம் சீடராக ஏற்றுக் கொண்டார்.
வினோதமான சீடன். வினோத முறையில் உபதேசம். பிற்காலத்தில் ராமானந்தரின் தலையாய சீடராகக் கபீர் போற்றப்பட்டார்.

Wednesday, October 24, 2012

தூய்மையான பக்தி ஒருவருள் வளரவேண்டுமானால் ஐம்புலன்களையும் வெட்டித் திருத்த வேண்டியது அவசியம்

உலைக்கல்லே திருடுவான், செய்வனே ஊசி யளவு தானம்
உயரே ஏறித் தேடுவான், எதுவரை வந்தது விமானம்

அஹிரன் என்பது கொல்லன் உலைக்களத்தில் பயன் படுத்தப்படும் உலைக்கல். இதுவும் இரும்பால் ஆனது. மிகவும் எடையுள்ளது. காய்ச்சிய இரும்புத் துண்டை இதன் மேல் வைத்தே சம்மட்டியால் அடித்து விரும்பிய வடிவமைப்பை கொண்டு வருவர். இதை ஆங்கிலத்தில் anvil என்று உரைப்பர்.

அடிப்படையில் நம் கவிதை நாயகனுக்கு கொஞ்சம் திருட்டு குணம் அதிகம். எங்கே வேண்டுமானாலும் சென்று எதை வேண்டுமானாலும் சாமர்த்தியமாக தூக்கிக் கொண்டு வந்து விடுவான். அவனுக்கு உலைக்கல் போன்ற தூக்குவதற்கே சிரமமான பொருள் ஒன்றும் பெரிய விஷயமில்லை. அத்தகையவன் எப்பொழுதோ ஒரு கதை கேட்க நேரும் பொழுது ஏழைகளுக்கு தானம் செய்பவர்களை வைகுண்டத்திற்கு புஷ்பக விமானத்தில் விஷ்ணு தூதர்கள் அழைத்து செல்வார்கள் என்று கேள்விப் பட்டிருந்தான். அவனுக்கும் ஏதோ ஒரு நாளில் ஒரு ஏழைக்கு சிறிய தானம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அவன் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. சொர்க்கத்திற்கு டிக்கெட் கிடைத்து விட்டதாகவே நினைக்கிறான். அவன் வீட்டு மாடி ஏறி வைகுண்டம் வானத்தில் எந்த திசையில் உள்ளது என்று தேடுகிறான். விஷ்ணு தூதர்கள் எந்த பக்கத்திலிருந்து வரக்கூடும் என்றும் ஆராய்கிறான். கண்டிப்பாக இவன் புத்திசாலியாக இருக்க முடியாது. அவன் தன் கற்பனை உலகில் வாழ்பவன். ஆனாலும் நகைச்சுவைக்கு குறைவில்லை.
அதிபுத்திசாலிகளின் விதம் இன்னொரு வகை.
திலகம் மாலை வேடமோ பலே, இராம பக்தியே வேறே
திகழும் பக்தி அவருளே கபீரா, ஐந்தும் அடக்குவார் உள்ளே

'ஐந்தும் அடக்குவாருள்ளே' என்பது ஐம்புலன்களையும் தம் கட்டுக்குள் வைத்திருப்பவர்களை குறிப்பதாகும்.
பலரும் பெரும் பக்திமான்கள் போல திருநீறு அல்லது திருமண், ருத்திராட்ச மாலைப் போன்ற பல சமயச் சின்னங்களைப் பகட்டாக வெளிக்காட்டிக் கொண்டு தினம் முழுவதும் வலம் வருவார்கள். ஆயின் உள்ளத்திலே சிறிதளவும் கட்டுப் பாடின்றி புலன் வழி போக்கிலேயே காலத்தைக் கழிப்பர். இவர்களைப் பொருத்தவரை இறைவன் அவனுடைய இடத்திலிருந்து நமது பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டு நமக்கு அருள் புரிபவன் (ஒரு வேளை அது அவனுடைய கடமை என்றும் நினப்பார்களோ). நாம் வேளைக்கு தக்கபடி கிடைத்ததை அனுபவிப்போம் என்ற வகையில் அவர்கள் போக்கு இருக்கும். செய்கின்ற உபதேசத்திற்கும் செயலுக்கும் ஒரு தொடர்பும் இருக்காது.
ராமகிருஷ்ணர் சொல்லிய கதையில் ஒரு பகுதி. ஒரு பசு தோட்டத்தில் நுழைந்து செடிகளையெல்லாம் மேய்ந்து விடுகிறது. அந்தத் தோட்டம் ஒரு பிராமணனுக்கு சொந்தமானது. அவனுக்கு வந்த கோபத்தில் அடி அடியென்று அடித்து அந்த பசு இறந்து விடுகிறது. பசுவின் சொந்தகாரன் வந்து '"கடவுளுக்கு அருகே" இருக்கும் ஒரு பிராமணனுக்கு இப்படி ஏன் புத்தி போயிற்று என்று சண்டைக்கு வருகிறான். பிராமணன் சளைத்தவனா என்ன ? இதோ பார். மனிதனின் ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒரு தேவதை அதிபதி. கண்ணுக்கு சூரிய சந்திரர்கள், கையிற்கு இந்திரன், காதுக்கு வாயு இத்தியாதி. ஆகவே உன் பசுவை கொன்றது கைக்கு அதிபதியான இந்திரனே. அவனைப் போய் கேள்." என்று சண்டைக்கு வந்தவனை மடக்கினான். சிறிது நேர வாக்குவாதத்திற்குப் பிறகு, இத்தகைய அதி புத்திசாலிகளுடன் பேசுவதில் தன் நேரம் விரயமாகும் என்றுணர்ந்த மாட்டின் சொந்தக்காரன் பிராமணனைத் திட்டிக் கொண்டே சென்று விட்டான். கோபம் என்ற உணர்ச்சியின் மீது சிறிதும் கட்டுப் பாடற்ற தன் செயலை அந்த பிராமணன் நியாயப் படுத்த முனைவது தான் நகைப்பிற்கு உள்ளாகிறது. வெளிப் பார்வைக்கு சாத்வீகன் போல காட்சியளித்தாலும் உள்ளே குரூர மனப்பான்மையும் பொய் பேசுதலும் குணமாகக் கொண்ட இத்தகையவர் எப்படி இறைவன் அருளுக்கு பாத்திரமாக முடியும் என்பதே கபீரின் கேள்வி.

உண்மை பக்தியை, சிவ போகத்தை, வளர்த்துக் கொள்ளும் முறையை பட்டினத்தார் கூறுகிறார்.

அஞ்சக் கரம் எனும் கோடாலி கொண்டு இந்த ஐம்புலனாம்
வஞ்சப் புலக்காட்டை வேர் அற வெட்டி வளங்கள் செய்து
விஞ்சத்திருத்தி சதாசிவம் என்கின்ற வித்தை இட்டுப்
புஞ்சக் களை பறித்தேன் வளர்த்தேன் சிவ போகத்தையே


(அஞ்சக்கரம் = நம: சிவாய என்ற நாமம், ஐந்து அட்சரம்; அக்ஷரம் என்பது அக்கரம் ஆகும்
வஞ்சப் புலக் காட்டை = ஐம்புலன்கள் வஞ்சகம் செய்து மனதை திசைதிருப்பும் இவ்வுலகப் பற்றை
புஞ்சக் களை= காமம் என்கின்ற களை)

தூய்மையான பக்தி ஒருவருள் வளரவேண்டுமானால் ஐம்புலன்களையும் வெட்டித் திருத்த வேண்டியது அவசியம் என்பது பட்டினத்தடிகளின் வரிகளிலிருந்தும் தெளிவாகிறது.

Saturday, October 13, 2012

கடவுள் நமக்கு உறவினர்

* ஏதோ ஒரு நினைவுடன் கோடிக்கணக்கில் நாம ஜபம் செய்வதைவிட,     இறைவனின் நினைவில் ஊறி ஒருமுறை நாம ஜபம்
செய்வது கோடிக்கணக்கில் செய்ததற்குச் சமமாகும்.
* இறை வழிபாட்டுக்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டும். கடமையின் சுமை
எவ்வளவு அழுத்தினாலும் இறைவழிபாட்டைத் தவறாமல் ஒழுங்காகச் செய்ய வேண்டும்.
* இறைவனின் செயல்படி அனைத்தும் நடந்தாலும், நம்முடைய வேலையை நாம் தான் செய்தாக வேண்டும். காரணம், இறைவனின் திருவுளம் மனிதனின் செயல் மூலமே வெளிப்படுகிறது.
* இறைவன் அனைவருக்கும் உரியவர். இறை நாமத்தைக் கணக்கிட்டு
ஜபித்து அதன் மூலம் புனிதம் அடைவதற்காகவே இறைவன் நமக்கு விரல்களைத் தந்துள்ளான்.
* கடவுள் நமக்கு மிகவும் நெருங்கிய உறவுக்காரர். இந்த உறவு எவ்வளவு ஆழமாக ஒருவனுக்கு இறைவனிடம் இருக்கிறதோ, அவ்வளவு தூரம் அவன் அவரை நெருங்குகிறான்.

பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா

ஹரே ராமா.... ஹரே கிருஷ்ணா !
ஜலதூதா எனும் பெயர் கொண்ட கப்பல், 1965 - ஆம் வருடம், இந்திய தேசத்திலிருந்து அமெரிக்கக் கரையை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தது. அதில், 69 வயது பெரியவர் ஒருவர், பயணம் மேற்கொண்டு இருந்தார். குடை, கைப்பை, சாப்பிடுவதற்குக் கொஞ்சம் தானிய வகை உணவுகள் மற்றும் பெட்டிகள் சிலவற்றில் புத்தகங்கள்; தவிர, 300 ரூபாய் மதிப்புள்ள ஏழு அமெரிக்க டாலர்கள்; இவையே அவருடைய உடைமைகள் !
அமெரிக்கக் கரையை நெருங்கிக்கொண்டிருந்தது கப்பல். தான் எதிர்கொள்ளவேண்டிய புதியதொரு சூழல் அவருக்குள் கவலையையும் மலைப்பையும் தந்தது ! கொண்டு வந்திருந்த பெட்டிகளில் ஒன்றினைத் திறந்து, நாட்குறிப்பேட்டை எடுத்தார். அன்றைய தினத்தின் பக்கத்தில், இன்று, என்னருமைத் துணைவன் கிருஷ்ணனிடம் உள்ளத்தில் இருப்பதைக் கொட்டித் தீர்த்தேன் என்று குறிப்பு எழுதினார். பிறகு, மண்டியிட்டுக் கண்கள் மூடி, கிருஷ்ணா, உனக்கு இங்கே ஆற்றவேண்டிய செயல்கள் ஏராளமாக இருக்கவேண்டும். இல்லையெனில் முற்றிலும் புதிதான இந்த பூமிக்கு என்னை ஏன் அழைத்துவந்தாய் ? நான் எளியவன்; சக்தியேதும் இல்லாதவன்; உனது பணியை நிறைவேற்ற எனக்குக் கருணை காட்டுவாயாக என்று மனமுருகிப் பிரார்த்தித்தார். அவருக்குள் கண்ணனின் கருணை, வெள்ளமெனப் பாய்ந்தது. கிருஷ்ண பக்தி எனம் அமுதூற்று உலகளாவிய கிருஷ்ண விழிப்பு உணர்வு சங்கம் (இண்டர்நேஷனல் சொசைட்டி ஃபார் கிருஷ்ணா காண்சியஸ்நெஸ்) எனும் பெயரில் (இஸ்கான்), சிறு வித்தாய்த் தோன்றியது; பிறகு அதுவே பேரியக்கமாகப் பல்கிப் பெருகி, நாடுகளையும் கண்டங்களையும் தாண்டி, அனைவரையும் அரவணைத்தது ! இவை அனைத்துக்கும் அடிகோலிய அந்த முதியவர்... பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா ! 1896 ஆம் வருடம், கிருஷ்ண ஜன்மாஷ்டமிக்கு மறுநாள், செப்டம்பர் 1-ஆம் தேதியன்று, கொல்கத்தாவில்... கௌர் மோஹன் டே - ரஜனி டே ஆகிய வைணவத் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, அபய் சரண் எனப் பெயரிட்டு, அன்புடன் வளர்த்தனர். தெய்வ பக்தியும், தேச பக்தியுமாக வளர்ந்தான், அபய் சரண். பள்ளிக் கல்வி முடித்ததும், கொல்கத்தாவில் ஸ்காடிஷ் சர்ச் கல்லூரியில் ஆங்கிலம், தத்துவம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் பட்டப் படிப்பை முடித்தான். ஆங்கிலத்தில் புலமை, தலைமையேற்று நடத்தும் திறமை, சம்ஸ்கிருதத்தில் பாண்டித்யம் என சிறந்து விளங்கினான் அபய் சரண். ஆனாலும் காந்திய வழியில், கதராடைகளையே உடுத்தி வந்தான். அது மட்டுமா ?! ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும்விதமாக, தன் படிப்புக்கு உரிய பட்டத்தையும் ஏற்க மறுத்தான் ! உரிய வயது வந்ததும், தந்தை சொல்படி, ராதா ராணி தத்தா என்பவளை மணந்தான்; அடுத்து ஆண் குழந்தைக்கும் தந்தையானான். ஆனாலும், ஆன்மிகத்தில் திளைப்பதிலும், ஸ்ரீ கிருஷ்ணரை நினைப்பதிலுமாக வாழ்ந்தான் அபய் சரண் ! 1922 - ஆம் வருடம் சுவாமி பக்தி சித்தாந்த சரஸ்வதி எனும் மகானைச் சந்தித்தான் அபய் சரண். அவரைத் தரிசித்த மாத்திரத்திலேயே வெகுவாகக் கவரப்பட்டு, அவரை தனது குருவாக ஏற்றான். அதுவே, அவனது வாழ்வின் மிகப் பெரிய திருப்புமுனை ! வேதங்கள், உபநிஷதங்கள் ஆகியவற்றில் உள்ள கருத்துக்களையும், சைதன்ய மகாபிரபுவின் ஸ்ரீகிருஷ்ண பக்தி சாரத்தையும், ஆங்கிலப் புலமையால், உலக மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். என விரும்பினார் குருநாதர். அதன்படி, தனது வாழ்க்கையை அதற்காகவே அர்பணிக்க முடிவு செய்தார் அபய் சரண். அடுத்த சில வருடங்களில், பகவத்கீதைக்கு ஆங்கிலத்தில் உரை எழுதினார். அப்போது முதல், அபய் சரணின் ஆன்மிகப் பயணம், கிருஷ்ண பக்தி எனும் பாதையில் சீராகச் செல்லத் துவங்கியது. பரத கண்டத்தின் கலாசாரப் பொக்கிஷங்கள் அனைத்தும், அபய் சரணின் ஆங்கிலப் புலமையால், புத்தகங்களாக வெளிவந்தன; உலகெங்கும் பரவத் துவங்கின !
இவருடைய புலமை, மனித குலத்துக்கு ஆற்றி வரும் சேவை ஆகியவற்றின் காரணமாக, பக்தி வேதாந்த... பிரபுபாதா ஆகிய பட்டங்கள் இவரது பெயருடன் இணைந்தன. ஒரு கட்டத்தில், பக்தி வேதாந்த சுவாமி பிரபுபாதா என அனைவராலும் அழைக்கப்பட்டார். மனம் ஏற்காத சம்சார வாழ்வைத் துறந்தார். ஸ்ரீகண்ணன் லீலைகள் செய்த பிருந்தாவனத்தை, 1950-ஆம் வருடத்தில் தனது இருப்பிடமாக்கிக் கொண்டார் சுவாமிஜி. 59 - ஆம் வருடத்தில் தீட்சை பெற்று, காவியுடை அணிந்து, துறவறம் பூண்டார் பிரபுபாதா. ராதா தாமோதர் கோயிலும், கௌடியா மடத்திலும் வாழ்ந்துகொண்டே, உன்னிடம் எப்போது பணம் சேர்ந்தாலும், புத்தகத்தை வெளியிடு என்ற குருநாதரின் கட்டளைப்படி, தனது பக்தி இலக்கிய சேவையை முனைப்புடன் தொடர்ந்தார். சம்ஸ்கிருதம், ஹிந்துஸ்தானி போன்ற மொழிகளில் இருந்த பாகவத புராணம் முதலான அற்புதமான வைணவ கிரந்தங்கள், இவரது மொழிபெயர்ப்பில் விரிவான உரையுடன், ஆங்கில நூல்களாக வெளியாகின. கிருஷ்ண பக்தியை உலகெங்கும் பரவச் செய்யும் நோக்கில், 1965-ஆம் வருடம் கொல்கத்தாவில் கப்பலேறினார் பிரபுபாதா. கையில் அதிகம் பணமில்லை; வெளிநாட்டில் வரவேற்பாரும் இல்லை; உதவுபவர்களும் கிடையாது. நியூயார்க்கை அடைந்தவர், ஏழைகள் குடியிருக்கும் பகுதியில் பொது இடத்தில் ஓரு மரத்தடியில் காவியுடையும் நெற்றியில் சந்தனக் கீற்றுமாக அமர்ந்தார்; கையில் தாளத்தைத் தட்டிக்கொண்டே... ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே எனும் கிருஷ்ண நாமத்தைப் பாடத் தொடங்கினார். பாடலைக் கேட்டவர்கள் நின்றனர்; அருகில் வந்தனர்; அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளின் லீலைகளையும் கீதையையும் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில், ஆங்கிலத்தில் தெளிவாக எடுத்துரைத்தார். இதில் கிறங்கிப்போன பலரும், அவருடன் இணைந்து கிருஷ்ண நாமாவளியைப் பாடத் துவங்கினர். இப்படி எளிமையாய்த் துவங்கியதுதான் பிரபுபாதாவின் அமைப்பு ! தன்னை மதித்து அழைப்பவர் வீட்டில் தங்குவது, கொடுப்பதை உண்பது, பொது இடங்களில் கிருஷ்ணனின் நாமத்தைச் சொல்லி சொற்பொழிவு ஆற்றுவது என அவரது வாழ்க்கை முறை மாறியது.
அதுமட்டுமா ?! மது, போதை மருந்துகள், பாலியல் வன்முறைகள் எனச் சீரழிந்துகொண்டு இருந்த அமெரிக்க இளைஞர்களிடமும், யுவதிகளிடமும் பேசினார்; கிருஷ்ண பக்தி, நல்லொழுக்கம் மற்றும் நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றால் அவர்களைத் திருத்தி வெற்றி கண்டார். இதனால் பிரபுபாதாவின் புகழ் பரவியது. இவரது பக்தி இலக்கியங்களும் சொற்பொழிவுகளும் அனைவரையும் வசீகரித்தன. இதையடுத்து, 1966 - ஆம் வருடம், ஜூலை மாதம், நியூயார்க் நகரில், இஸ்கான் எனும் அமைப்பு உதயமானது. அடுத்து, சான்பிரான்சிஸ்கோ மற்றும் அமெரிக்காவின் பல நகரங்களிலும் இஸ்கான் கிளைகள் துவக்கப்பட்டன. ஸ்ரீகிருஷ்ணருக்கு ஆலயங்கள், பிரார்த்தனைக் கூடங்கள், கல்விச் சாலைகள், தொழில் மற்ணும் விவசாய மையங்கள் என கிளை பரப்பியது இஸ்கான் அமைப்பு. இங்கிலாந்தில் இந்த இயக்கத்தில், பீட்டில்ஸ் எனும் புகழ்பெற்ற பாப் இசைக் குழுவினர் இணைந்ததால், லண்டன் போன்ற முக்கிய நகரங்களிலும் இந்த இயக்கம் வேரூன்றியது. 1971-ஆம் வருடம் இந்தியா திரும்பிய பிரபுபாதா, இங்கேயும் பல நகரங்களில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அற்புதமான ஆலயங்களை அமைத்தார். நூற்றுக்கணக்கான ஆன்மிகப் புத்தகங்களை மொழிபெயர்த்தும் உரை எழுதியும் சேவையாற்றிய சுவாமியின் நூல்கள், இதுவரை 80-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன. இந்திய பக்தி இலக்கி யங்களைப்பிரசுரித்த வகையில், இன்றைக்கும் முன்னிலையில் நிற்கிறது இஸ்கான் அமைப்பு. உலகெங்கும் ஐந்நூறுக்கும் மேற்பட்ட மையங்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களையும் கொண்டு விளங்கும் ஹரே கிருஷ்ண இயக்கத்தைத் துவக்கி வழி நடத்திய சுவாமி பிரபுபாதா, 77-ஆம் வருடம் நவம்பர் 14-ஆம் நாள், பிருந்தாவன மண்ணில், தனது வாழ்வை நிறைவு செய்துகொண்டார். எளிமையாக வாழ்ந்து, அரிதான செயல்களை நிகழ்த்தி, ஸ்ரீ கிருஷ்ண பக்தி சாம்ராஜ்ஜியத்தை உலகெங்கும் நிறுவிய சுவாமி பிரபுபாதாவை உலகமே போற்றுகிறது; கிருஷ்ண பக்தி இருக்கும்வரை, பிரபுபாதாவின் புகழும் இருக்கும்

Friday, October 12, 2012

சிவானந்தர் சீரிய வாழ்விலிருந்து...........



கொடுத்து மகிழ்பவர்
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் அவதரித்தவர் சிவானந்தர். பலரும் இவரைக் குருவாக ஏற்றனர். இவரைக் காணவரும் பக்தர்கள் கூடை கூடையாகப் பழங்களைக் கொண்டுவந்து சமர்ப்பித்துக் கொண்டே இருப்பர். அவரும் அவற்றை தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கும், சீடர்களுக்கும் வழங்கிக் கொண்டே இருப்பார். உலகின் பல பாகங்களில் இருந்தும் பணமும், அன்பளிப்புகளும் ஆஸ்ரமத்திற்கு வரும். அதன்மூலம் துறவிகளுக்கு வேண்டிய உணவு, மருத்துவ உதவி, சிறந்த நூல்கள் என்று வேண்டியவற்றைச் செய்து மகிழ்ச்சி காண்பார். தம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுத்து மகிழவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் சிவானந்தரை, கவியோகி சுத்தானந்த பாரதியார், கிவ்ஆனந்தர் (கொடுத்து மகிழ்பவர்) என்று போற்றினார்.
பிறருக்குச் சொல்லிக் கொடுங்கள்
இடைவிடாத ஆன்மிகப்பயிற்சியாலும், தியானத்தாலும் சிவானந்தரிடம் எப்போதும் ஞானம் குடிகொண்டிருக்கும். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எப்போதும் பரந்த மனப்பான்மையுடன் ஞானவிஷயங்களை வழங்கிக்கொண்டிருப்பார். இருபது முக்கிய ஆன்மிக போதனைகள், நாற்பது நல்லுரைகள், சாதன தத்துவம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். ஞான தானத்தை எப்போதும் எல்லோருக்கும் கொடுங்கள்! இவ்வாறு செய்தால், யார் யாருக்கு எதெது வேண்டுமோ அத்தனையையும் அவர்களுக்குக் கொடுத்தவர்கள் ஆவீர்கள், என்கிறார் சிவானந்தர்.
நாத்திகனுக்கே முக்கியத்துவம்
தரம் குறைந்த செய்திகளுடன் வரும் பத்திரிகைகளுக்கும் சிவானந்தர் கட்டுரை அனுப்புவது வழக்கம். இதனால் சிவானந்தரை பலரும் விமர்சித்தனர். சிலர் கண்டனமே தெரிவித்தனர். அந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சிவானந்தர், ஒரே தராசில் ஆன்மிக விஷயத்தையும், காமச் சுவையையும் எடை போட்டுப் பார்க்கும் வாசகர்கள் விரைவிலேயே ஆன்மிகவாதிகளாக மாறிவிடுவார்கள். முதலில் நாத்திகர்களையும், நம்பிக்கையற்றவர்களையும் தான், நான் ஆன்மிகவாதியாக மாற்ற வேண்டும், என்று பதிலளித்தார். அவரது கட்டுரைகளைப் படித்து விட்டு, இந்தியா, இலங்கை, பர்மா, மலேசிய நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் அன்பர்கள் சிவானந்தரை நாடி வந்தனர்.
வாங்க குழந்தையே!
யாரும் எளிதில் அணுகும் விதத்தில் சிவானந்தர் மிக எளிமையான மகானாக வாழ்ந்தார். தரிசனநேரம் என்று தனியாக நேரம் எதையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை. தம்மிடம் வரும் பக்தர்களிடம் அவரவருடைய தாய்மொழியிலேயே பேசுவார். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலாய், ஜெர்மன், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் வரவேற்று உபசரிப்பார். சிறுகுழந்தைகளையும் நீங்கள் என்று மதிப்புடன் உபசரிப்பார். ஒருமையில் அழைப்பதை அவர் விரும்புவதில்லை. மனிதர் மட்டுமில்லாமல் பறவை, விலங்குகளிடம் கூட அன்புடன் கவனிப்பார். பசித்த உயிர்களுக்கு உணவிடுவதை ஒரு தாய்போல செய்வதில் அவருக்கு இணை அவரே. தன்னை பெரிய மகானாக எண்ணிக்கொள்ளாமல் சாதாரண மனிதராகவே பழகுவார்..
கொலைகாரனிடமும் இறைவன்
1950, ஜனவரி 8 மாலையில், சிவானந்தரின் ஆஸ்ரமத்தில் சத்சங்க கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மின்விளக்கு அதிகம் இல்லாத காலம் அது. அரிக்கேன் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் வெளிச்சம் மங்கலாக இருந்தது. அப்போது கோவிந்தன் என்னும் முரடன் சிவானந்தரைக் கொல்லும் நோக்கத்தில் கோடரியால் தாக்கினான். ஆனால், சிவானந்தர், தலைப்பாகை அணிந்திருந்ததால் அடி விழவில்லை. போலீசார் உடனே வந்து அவனைப் பிடித்தும் கூட அவனை தண்டிக்க சிவானந்தருக்கு மனமில்லை. பழங்கள், விபூதிபிரசாதம் கொடுத்து அவனை வழியனுப்பினார். திருடர், கொலைகாரர்களிடமும் இறைவன் இருக்கிறார் என்று எல்லாருக்கும் உபதேசம் செய்தார்.
மவுனமான நேரம் மனதில் ஏது பாரம்
* எளிமையான அதே சமயத்தில் சத்துள்ள ஆகாரங்களை உண்ணுங்கள். உண்ணும் முன் கடவுளுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள். சரிவிகித உணவை உட்கொள்வதும் அவசியம்.
* மிளகாய், பூண்டு, புளி போன்ற உணவுவகைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். காபி, டீ, மாமிசம், மது போன்ற உணவுவகைகளை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.
* தினமும் பத்து பதினைந்து நிமிடங்களாவது யோகசனப் பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்யுங்கள். நீண்ட தூர நடைபயிற்சியை அன்றாடம் மேற்கொள்ளுங்கள். முடிந்தால், சுறுசுறுப்பை உண்டாக்கும் விளையாட்டில் ஈடுபடுங்கள்.
* தினமும் இரண்டு மணி நேரமாவது மவுனத்தை கடைபிடியுங்கள். விடுமுறை நாட்களில் நான்கு மணி முதல் எட்டுமணி நேரம்வரை மவுனம் நல்லது. இது மனதுக்கு நல்லது. கண், வாய், செவி, மூக்கு, நாக்கு ஆகியவற்றை முடிந்தளவுக்கு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது.
* உண்மையே பேசுங்கள்.இரக்கமும், கனிவும் கொண்டிருங்கள். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் அனைவரிடமும் அன்பு காட்டுங்கள். ஒளிவுமறைவின்றி திறந்த மனத்துடன் எல்லோரிடமும் பழகுங்கள்.
* நெஞ்சில் நேர்மையைப் பின்பற்றி வாழுங்கள். நன்மைக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். உழைத்துப் பணம் சேருங்கள். நியாயமான வழியில் வராத எப்பொருளையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். பெருந்தன்மை உணர்வுடன் செயல்படுங்கள்.
* கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். சகிப்புத்தன்மையுடன் பிறர் குற்றங்களை மன்னிக்கவும் மறக்கவும் செய்யுங்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்களுடனும், சூழ்நிலைகளுடனும் ஒத்துப்போக கற்றுக் கொள்ளுங்கள்.
* தீயவர்களின் தொடர்பை விட்டு விலகுங்கள். உங்கள் சாதனைகளையும், ஆன்மிக எண்ணங்களையும் குறை கூறுபவர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்களிடம் இருந்து விலகி விடுங்கள்.
* உங்கள் தேவைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடைமைகளை அளவோடு வைத்துக் கொள்ளுங்கள். எளிய வாழ்க்கையையும், உயர்ந்த சிந்தனையையும் பெற்று வாழுங்கள்.
* பிறருக்கு நன்மை செய்து வாழ்வது தான் உயர்ந்த வாழ்வு. தன்னலமில்லாமல் பிறருக்கு சேவை செய்யுங்கள். நீங்கள் செய்யும் பணியையோ, தொழிலையேயோ கடவுளுக்குச் செய்யும் வழிபாடாகச் செய்யுங்கள். அதை அவருக்கே அர்ப்பணித்து விடுங்கள்.
* உங்கள் வருமானத்தில் இரண்டு முதல் பத்து சதவீதத்தை தானம் செய்யுங்கள். உலகமே உங்கள் குடும்பம் என்ற பரந்த நோக்குடன் வாழுங்கள்.
* பணிவுடன் எல்லா உயிர்களையும் மானசீகமாக வணங்குங்கள். ஆடம்பரம், போலி கவுரவம், டம்பம், கர்வம் போன்றவற்றை அறவே கைவிடுங்கள்.
* கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளுங்கள். கடவுளிடம் பூரண சரணாகதி அடைந்து விடுங்கள். எல்லா நிலைமையிலும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
* கண்ணில் காணும் அனைத்திலும் கடவுளையே காணுங்கள். காலை எழும்போதில் இருந்தே கடவுள் சிந்தனையோடு அன்றாடப் பணிகளைத் தொடங்குங்கள்.
* அன்றாடம் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டு தெய்வப் பாடல்கள் பாடுங்கள். எளிய மந்திரங்களைச் சொல்லுங்கள். வாரம் ஒருமுறையாவது கோயிலுக்குச் சென்று மனதார வழிபாடு செய்யுங்கள்.
-இதயத்தை இதமாக்குகிறார் சிவானந்தர்

மனம் தெளிந்த நீராகட்டும்



* யாரிடமும் கோபம் கொண்டு, சண்டை போடாதீர்கள். சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் மனதில் நிம்மதி கெடுவதை தவிர, பயன் ஏதும் ஏற்படுவதில்லை. பண்பட்ட மனம் உடையவர்கள் யாரிடமும் சண்டையிடுவதில்லை. அவர்கள் கோபப்படும் விதமாக ஏதேனும் நிகழ்ந்தாலும்கூட அமைதியாக இருந்து விடுவர். 
* ஒருவர் உயர்கல்வி கற்றாலோ, சமூகத்தில் உயரிய பொறுப்பில் இருந்தாலோ அவரிடம் கோபப்படும் குணம் இருக்குமானால் அவர் கற்ற கல்வியும், சமூக நற்பெயரும் அந்த நொடியிலேயே அழிந்து விடும். சிறுவிஷயங்களுக்காக சண்டையிடுவது மரியாதையைக் குறைக்கிறது. இதனால் உறவு, அன்பு, பாசம் ஆகியவை அழிந்து, அனாதையாக நிற்கும் உணர்வு ஏற்படுகிறது.
* கோபம், மனதில் பல தீய எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. பொறாமை, வஞ்சகம், ஒழுக்கமின்மை போன்ற பல தீய குணங்களையும் உண்டாக்கி விடுகிறது. வீண் விபரீதங்களையும், பொருள் இழப்பையும் ஏற்படுத்துகிறது. எனவே, கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
* மனிதர்களின் மனம் தண்ணீர் போன்றது. கோபம், ஆற்றாமை போன்ற தீய குணங்கள் கழிவு போன்றவை. தண்ணீர் நல்ல நிலையில் இருக்கும்போது அதனை நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தலாம். அதே நீரில், கழிவு சேர்ந்துவிட்டால் அதன் தன்மையே மாறிவிடுகிறது. எதற்கும் பயன்படுத்தவும் முடியாது. உங்கள் மனம் தெளிந்த நீரைப் போல இருப்பதற்கு முதலில் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்

Tuesday, October 9, 2012

கன்மாவை அனுபவி....ஆணவத்தை அழி,..மாயையை விலக்கு .....

இறுதியாக ஞானம் மலர்கின்ற ஒவ்வொரு சாதகரின் வாழ்க்கையும் போராட்டங்கள் நிறைந்த களமாக ஆன்மீக வரலாற்றின் பக்கங்களில் விவரிக்கப் படுகிறது. ஒவ்வொரு பிறவிகளிலும் மனிதன் அனுபவிக்கின்ற நிகழ்வுகளுக்கு உட்பட்டு ஞானம் அடைகின்ற காலம் வாய்க்கிறது.....

கன்மாவை அனுபவி.

ஆணவத்தை அழி 
மாயையை விலக்கு 

என்பதே  முனிபுங்கவர்களின் கொள்கையாகும். அந்த வழியிலே ஞானம் அடைகின்ற பாதை ,அடையப் படுகின்ற பாதை சீராக ,தெளிவாகவே  இருக்கிறது.  ஆன்ம ஞானம் அடைகின்ற சாதர்களுக்கு இப்பிரபஞ்சமே ஆன்மாவின் பிரதி பலிப்பாக தெரிவதால் புகழ்ச்சியும், இகழ்ச்சியும் ஒன்றாக தோன்றுகிறது. 

எனவே இதுவரை தாங்கள் தர்மத்தின் பொருட்டு மேற்கொண்ட பணியால் விளைந்த புண்ணியத்தையும் இறைவனின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து நான் அல்ல ,எல்லாம் நீயே என்ற சரணாகதி நிலைக்கு ஞானிகள் வந்துவிடுகின்றனர்.

தஞ்சை பெரிய கோவிலை பற்றி விவரிக்கும்போது எவ்வாறு மாமன்னர் ராஜ ராஜ சோழனைப் பற்றி கூறாமல் இருக்க முடியாதே அதைப் போல நமது காசி விஸ்வநாதர் திருக்கோவிலை பற்றி விவரிக்கும்போது கிருஷ்ணனைப் பற்றி சிறிது விவரித்தே ஆக வேண்டும். அந்த வகையிலே தான்

கடலின் பரப்பை எவ்வாறு கைகளால் விளக்க முடியாதே அதே போன்று இறைவனின் சிறப்பையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

நீக்க மற எங்கும், எவ்வுயிரிலும் சத் சித் ஆனந்த சொரூபியாய் இறைவன் குடிகொண்டிருந்தாலும், இப்பரந்த பூவுலகின் சில இடங்களில் தான் அவனுடைய அருட் கடாட்சம் பரவி நிற்கிறது.  அவ்வாறு நிற்கக் காரணம் என்னவென்றால் அது குருமார்களின் பிரார்த்தனையினால் மட்டுமே ஆகும். 

 உண்மை ஞானம் என்பது மனிதர்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவாய் காணக்கூடியது. சாதி, இனம், மதம், மொழி, என்ற பேதங்களை விடுத்து அனைவரையும் வேறுபாடு நீங்கி அரவணைத்துக் கொள்ளும். ஒரு சாதகன் ஞான வாயிலை மிதிக்கத் தொடங்கும்போதே இத்தகைய பண்புகள் அவனிடம் குடிகொண்டிருக்கும். 

எந்த பணியினை ஒருவர் மேற்கொல்கிராரோ அதற்கு ஏற்ப அந்தப் பணியானது அவரது கன்மாவை அனுசரித்து ஏற்றத் தாழ்வுகளை காண்கிறது. 

தொன்று தொட்டு வந்த பாண்டிய மன்னர்களின் காலத்தில் சீரும் , சிறப்புடன் விளங்கி வந்த நமது ஆலயம் காலம் செல்லச் செல்ல மிகவும் சிதிலம் அடைந்து கேட்பாரற்ற நிலைக்கு வந்தது. பின்புவந்த தலைமுறைக்கும் அந்த ஆலயத்தை பற்றி சிறப்பித்துச் சொல்ல பெரியோர்கள் இல்லாமல் போனதால்தான் இந்த நிலை நிகழ்ந்து வந்தது.

அரசர்கள் அனைவரும் இவ்வாலயத்திற்கு  பல்வேறு பூசைகளும் நிகழும் வண்ணம் நிலபுலன்களையும், வாரிசுதாரர் வழியாக பொறுப்பாளர்களையும் நியமித்து விட்டுச் சென்றனர். அப்படி இருந்தும் இந்த நிலைக்கு ஆலயம் சென்றதற்கு வினைப் பயனோ அல்லது அதை ஏற்று நடத்தியவர்களின் விதிப் பயனே என்று தெரியவில்லை.

பண்புகளால் முழுமையான மனிதத்துவம் பெற்ற ஒருவரால் , விலங்கு நிலை மனோபாவம் கொண்ட மனிதர்களை சமாளிப்பது ஒரு கலை என்று கூட கூறலாம்.

 
ஒவ்வொரு பிறவிகளிலும் நிகழ்கின்ற அனுபவத்தால் மனித மனம் முன்னேறுமே தவிர, ஞானிகளின் அடி பற்றி தர்மத்தின் வழி நிற்கும் பாக்கியம் பெரும்பாலோனருக்கு கிடைப்பதில்லை.   நல்லவர்கள் நம்மைச் சுற்றி இருந்தாலும் நமது ஆழ்ந்த தேடல் இல்லாமல்  கன்மா மனிதர்களின் கண்ணை மறைக்கிறது.


அகங்காரத்தின் விளைவாக நல்லவர்களையும், தீயவர்களையும் ஒரு சேர பார்க்கும் மனோ நிலை மனிதனுக்கு இயல்பாக வந்தமைகிறது.

தர்மம் என்பது மனித மனத்தின் இயல்பாக இருக்க வேண்டும்.   

வேறுபாடுகள் அற்று சமத்துவ சமுதாயம் படைக்க வேண்டும் என்பது ஞானிகளின்  நோக்கம்.

எங்கே அஞ்ஞானம் இருக்கிறதோ அங்கேதான் ஞானத்தின் தேவை அதிகரிக்கிறது.


 

நடப்பதெல்லாம் அவன் செயல்



* ஒவ்வொருவரும் குருவை சார்ந்து வாழுங்கள். அவரது சொல்கேட்டு அப்படியே நடந்து கொள்ளுங்கள். அவர் உங்களுக்கு செய்யும் துன்பத்தை கூட நன்மையாக கருதி ஏற்றுக் கொள்ளுங்கள். குரு, தீமையான ஒருவிஷயத்தை உங்களுக்கு சொல்கிறார் என்றால் அதனால் மிகப்பெரும் நன்மை ஒன்று காத்திருக்கிறது என்பது உண்மை.

* ஒருவருக்கு ஏற்படும் இன்பமும், துன்பமும் அவர்களது கர்மபலன்களுக்கு ஏற்பவே நிகழ்கிறது. ஆனால், இறைவனின் நாமத்தை சொல்லிக்கொண்டிருப்பதால் அதனை முழுமையாக நம்மிடமிருந்து விலக்க முடியாவிட்டாலும், அதன் வலிமையையாவது குறைத்து விடலாம். கர்மபலன்படி, உங்களுக்கு பெரிய காயம் ஒன்று ஏற்படுவதாக இருந்தால், இறைநாமத்தை சொல்லி அவரை வழிபட்டதன் பலனால் மிகச்சிறிய காயம் மட்டும் ஏற்படும்படி அமைந்துவிடும். 
 
* நீங்கள் இங்கு இருப்பதும், இல்லாததும், ஒரு செயலை செய்வதும், செய்யாமல் இருப்பதும் உங்களது விருப்பப்படி நிகழ்வது இல்லை. அது இறைவனின் விருப்பப்படி நடக்கிறது. அவர் நீங்கள் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று தீர்மானித்திருந்தால் நீங்கள் அதன்படிதான் நடப்பீர்களே தவிர, வேறு வழியில் நிச்சயமாக செல்ல முடியாது. எனவே, உங்களை இறைவனிடம் அர்ப்பணித்து விடுங்கள்.

* லாபம் கிடைக்கிறது என்பதற்காக பொய் பேசாதீர்கள். உண்மை பேசுபவன் இறைவனுக்கு பிடித்தமானவன் ஆகிறான். விரைவாகவே அவரை அடைந்து விடுகிறான்.

வாழ்க்கையே போர்க்களம்- புத்தர்

தூய்மையான எண்ணத்துடன் ஒருவன் பேசினாலும், செயல் புரிந்தாலும், அவனை விட்டு விலகாத நிழல் போல, மகிழ்ச்சி அவனைப் பின்தொடர்ந்து செல்லும்.
* பகை, பகையால் நீங்காது. அன்பு ஒன்றினாலேயே நீங்கும்.
* உண்மை பேசுங்கள், கேட்பவர்களுக்கு முடிந்ததைக் கொடுங்கள். இந்த இரு வழிகளாலும் ஒருவன் இறைவனை அடையலாம்.
* எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேறுவான்.காற்றாடி(பட்டம்) காற்றை எதிர்த்துத்தான் மேல் எழும்புகிறது. வாழ்க்கை என்பது போராட்டக்களமாகவே இருக்கிறது.
* ஒருவரது வெற்றி, அவரிடம் தோல்வியடைந்தவருக்கு வெறுப்பை மூட்டுகிறது. அவர் வேதனையிலும் வாழ்கிறார். வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் மனதை ஒரே நிலையில் வைத்திருப்போர் இன்பமாக வாழ்வர்.
* அறியாமையுடனும் தன்னடக்கமில்லாமலும், ஒருவன் நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட, அறிவுடன் தன்நினைவோடு ஒரே நாள் வாழும் வாழ்க்கையே மேலானது.
* கோபத்தை நயத்தாலும், தீமையை நன்மையாலும், கஞ்சனை தானத்தாலும், பொய்யை உண்மையாலும் வெல்ல வேண்டும்.
* நல்ல வழியில் நன்கு நிர்வகிக்கப்பட்ட மனம் தான் நமக்கு மாபெரும் உதவி செய்யும். தாய், தந்தை, உறவினர்களால் அந்த அளவு உதவியைச் செய்ய முடியாது.
* உடலையும், நாக்கையும், மனதையும் அடக்கியுள்ளவர்களே அறிவாளிகள். ஏழைகள் கூட மாளிகையில் வசிப்பதாக மனதில் நினைத்தால் பணக்காரர்களாகி விடுகிறார்கள்.
* வயலுக்குத் தீமை களை; சமுதாயத்திற்கு தீமை ஆசை. ஆதலால் ஆசையில்லாதவர்களுக்குச் செய்யும் உதவி பெரும் பயனை ஏற்படுத்தும்.
* செயலில் காட்டாமல் ஒருவன் தன்னுடைய வாயால் தேன் ஒழுகப் பேசுவது, அழகும் நிறமும் அமையப்பெற்ற மலர், வாசனை இழந்து காணப்படுவது போல் பயனற்றதாகும்.
* நம்மால் இவ்வளவு பெரிய செயலை எப்படி செய்ய முடியும் என்று நினைத்து நல்ல செயலைச் செய்யாமல் இருந்து விடாதே. நீர் துளித் துளியாகக் கொட்டியே குடம் நிரம்பிவிடும்.
* சிறிய இன்பத்தை விடுவதன் மூலம், பெரிய இன்பத்தை அடைய முடியும் என்றால் பெரியதற்காகச் சிறியதை விட்டுக் கொடுப்பவன் அறிவாளி.
* பண்புள்ள மனிதன் <இம்மை, மறுமை இரண்டிலும் ஆனந்தமடைகிறான்.
* சமூகம் நலமுடன் வாழ வேண்டும். துக்கமும் துயரமும் நீங்க வாழ வேண்டும். சமூகத்தின் பகையான தனியுடைமை ஒழிக்கப்பட வேண்டும்.
* உலகத்தில் ஆசையைப் போன்ற நெருப்பில்லை. வெறுப்பை போன்ற பகை இல்லை. மயக்கம் போன்ற வலை இல்லை, காமத்தைப் போன்ற புயல் இல்லை.
* விழிப்புடன் இருப்பவனுக்கும், அசைவற்ற மனம் உடையவனுக்கும் நன்மை தீமை என்னும் இரண்டையும் ஒதுக்கியவனுக்கும், அச்சம் எப்போதும் ஏற்படுவதில்லை.
* ஆழமாகவும், திறமையாகவும் படித்தல், நல்ல வார்த்தைகளைப் பேசுதல், மரியாதையுணர்வு, அடக்கம், மனதிருப்தி, நன்றி, நல்ல அறிவுரைகளைக் கேட்டல் இவையே ஒரு மனிதன் செய்த நல்ல அதிர்ஷ்டம்.

Monday, October 1, 2012

தெய்வீக கதைகள்.....

அவர் மாபெரும் ஞானி. சென்ற நூற்றாண்டைச் சேர்ந்தவர். அவரிடம் பாடம் கற்க மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தைச் சமாளிக்க ஒரு எளிய உத்தியைக் கையாண்டார் அவர். 
தன்னிடம் வாழ்வியல் தத்துவம் கற்க வேண்டுமென்றால் பல ஆயிரங்களைப் பயிற்சிக் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை போட்டார். ஏற்றுக்கொண்டார்கள். 
ஊருக்கு வெளியே ஒரு பெரிய கட்டடத்தில் ஞானியும், சீடர்களும் தங்கியிருந்தார்கள். 
சீடர்களே சமையல் செய்வது, இடத்தைச் சுத்தம் செய்வது, ஞானிக்குப் பணிவிடை செய்வது என்று அந்தக்கால குருகுல பாணியில் எல்லாம் இனிதே நடந்தன. 
பயிற்சிக்குச் சேர்ந்தவர்களில் ஒரு வயதான செல்வந்தரும் இருந்தார். அவர் மகா முசுடு. 
எந்த வேலையும் செய்யமாட்டார். வகுப்பில் அவ்வளவாகக் கவனம் செலுத்த மாட்டார். 
யாராவது அவரைப் பற்றிக் குறை கூறினால், பயங்கரமாகச் சண்டை போடுவார். 
சில சமயம் ஞானியுடன் கூட சண்டை போட்டிருக்கிறார். "இன்று பாத்திரம் கழுவுவது உங்கள் முறை' என்று யாராவது அவரிடம் மென்மையாக நினைவூட்டுவார்கள். மனிதன் பொங்கி எழுந்துவிடுவார்.
""என்னை யாரென்று நினைத்துக் கொண்டாய்? நான் என்ன உங்களை மாதிரி  கஷ்டப்பட்டவனா ? பாரீஸ்  நகரத்தில் எனக்குப் பல கோடி சொத்து இருக்கிறது. உங்கள் எல்லோருடைய ஆண்டு வருமானத்தைக் கூட்டினால், என் ஒருவனின் ஆண்டு வருமானத்தில் நூறில் ஒரு பகுதி கூட இருக்காது. அப்படிப்பட்ட என்னை ஒரு பிச்சைக்காரனைப் போல் பாத்திரம் கழுவச் சொல்கிறீர்களா? என்ன திண்ணக்கம்? '' நினைவூட்டியவர் பயந்து நடுங்கி விலகிப் போனார். 
நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. செல்வந்தர் மற்ற சீடர்களுடன் மூர்க்கத்தனமாகச் சண்டை போட்டார். உணவின் தரம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் சமையல் செய்தவர்களிடம் சண்டைக்குப் போய்விடுவார். 
மாணவர்கள் அவரை விட்டு மனதளவில் விலகிப் போகத் தொடங்கினார்கள். செல்வந்தர் ஏதாவது கேட்டால் உடனே அவருக்குத் தந்துவிடுவார்கள். பெரும் பொருள் கொடுத்து வாழ்வியல் கற்றுக் கொள்ள வந்திருக்கும் நாம் ஏன் ஒரு வயதானவரிடம் வம்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள் அந்தப் புத்திசாலி மாணவர்கள். 
ஒரு கட்டத்தில் செல்வந்தருக்கு அங்கே இருப்பது சலித்துவிட்டது.. திடீரென்று
ஒரு நாள் அவர் அந்த இடத்தைவிட்டு வெளியேறி பாரீஸ் சென்றுவிட்டார்.
மற்ற மாணவர்களுக்கு பயிற்சி முடியும் நேரம். இன்னும் நான்கு நாட்கள்தான் வகுப்பு பாக்கியிருந்தது. அவர்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு ஞானி, செல்வந்தரைத் தேடிப் பாரீஸ் சென்றார். சிரமப்பட்டு அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தார். பின் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினார். 
""உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும். தயவு செய்து என் வகுப்புக்குத் திரும்பி 
வந்துவிடுங்கள்.''
""எனக்குப் பிடிக்கவில்லை.''
""அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. நான் உங்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து 
தருகிறேன்.''
""அப்படியே வருவதால்தான் என்ன பயன்? எப்படியும் இன்னும் சில நாட்களில் 
வகுப்புக்கள் முடிந்துவிடுமே.''
""அதனால் என்ன? அடுத்து இதே போல் வகுப்புக்களைத் தொடங்கப் போகிறேன்..''
""ஆஹா! மீண்டும் ஒருமுறை என்னிடம் பணம் கறக்கலாம் என்று திட்டமா?''
""அதெல்லாம் இல்லை.''
""பின்னே ஏன் இப்படி என்னை வருந்தி வருந்தி அழைக்கிறீர்கள்? நீங்கள் எவ்வளவு அழைத்தாலும் நான் வருவதாயில்லை.''
""என்னிடம் மாணவனாகச் சேர்வதற்கு நான் உங்களுக்குப் பணம் தருகிறேன். நீங்கள் 
என்னிடம் ஏற்கனவே தந்த பயிற்சிக் கட்டணத்தைப் போல் இரண்டு மடங்கு தருகிறேன். தயவு செய்து வாருங்கள்.''
செல்வந்தருக்குப் பணத்தாசை. ஒத்துக்கொண்டு ஞானியுடன் கிளம்பி வந்துவிட்டார். 
நடந்தது தெரிந்ததும் மற்ற சீடர்கள் கொதித்தார்கள். 
எங்களிடம் பயிற்சிக் கட்டணமாகப் பல ஆயிரங்களைக் கறந்துவிட்டு இந்த ஒன்றுக்கும் உதவாத சிடுமூஞ்சிக் கிழவருக்குக் காசு கொடுத்து அழைத்து வந்திருக்கிறீர்களே! நியாயமா? என்று கேட்டார்கள். 
செல்வந்தர் இல்லாத சமயத்தில் அவர்களிடம் தன்னிலை விளக்கம் கொடுத்தார் ஞானி.
""இவர் முசுடு. மரியாதை தெரியாதவர். கடமை உணர்வு இல்லாதவர். பாடங்களை 
ஊன்றிக் கவனிக்க மாட்டார். எல்லாம் உண்மை.. ஆனால் அவரைப் பார்த்ததும் நீங்கள் அனைவரும் "இவரைப் போல் நாம் இருக்கக் கூடாது' என்று நினைத்தீர்கள். உங்களில் யாராவது சற்றுக் குரலை உயர்த்திப் பேசினால் "ஏன் அந்தப் பணக்காரக் கிழவனைப் போல் எரிந்து விழுகிறாய்?' என்று உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொண்டு உங்களைத் திருத்திக் கொண்டீர்கள். ஒரு கட்டத்தில் "அவர் அப்படித்தான். அதனால் நாம் ஏன் உணர்ச்சிவசப்பட வேண்டும்' என்று அவரோடு சேர்ந்து வாழவும் பழகிக் கொண்டீர்கள்.
இவரைப் பார்க்கும் வரை நீங்கள் பாலாக இருந்தீர்கள். இவர் சிறிது மோராக வந்து 
உங்களிடம் சேர்ந்தார். நீங்கள் பாலிலிருந்து தயிர், வெண்ணெய், நெய் என்று படிப்படியாக ஆன்மிக வளர்ச்சியடைந்தீர்கள்.
உங்களுக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பு அடுத்து என்னிடம் பயிற்சி பெறும் 
மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டுமே என்பதற்காகத்தான் இவரைக் காசு கொடுத்து அழைத்து வந்தேன். புரிகிறதா?''
இந்த நிகழ்வைக் கொஞ்சம் உன்னிப்பாய்க் கவனியுங்கள். இதில் பொதிந்திருக்கும் 
வாழ்வியல் பாடம் நன்றாக விளங்கும். 
ஒரு நோய் வராமல் இருக்க எப்படித் தடுப்பூசி போடுகிறார்கள்? தடுப்பூசியில் மறைந்திருக்கும் தத்துவம் என்ன?
பெரியம்மை நோய்க்குத் தடுப்பூசி போட வேண்டும் என்றால் அந்த நோயின் 
பலவீனமான கிருமிகளை நம் உடலில் ஊசி மூலம் செலுத்திவிடுவார்கள். நம்மிடம் 
இயல்பாகவே அமைந்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அந்தக் கிருமிகளை எதிர்த்துப் போராடும். உள்ளே செலுத்தப்பட்டது பலவீனமான கிருமிவகை என்பதால் அதனை நம் உடல் எளிதாக வெற்றி கொண்டுவிடும். இப்போது நம் உடலுக்குப் பெரிய அம்மை நோய்கிருமியின் அமைப்பு அத்துப்படியாகிவிட்டது. இதை நம் உடல், நாம் சாகும் வரை மறப்பதில்லை. 
பிற்காலத்தில் உண்மையிலேயே பெரியம்மை நோய் நம்மைத் தாக்க முற்பட்டால், நம் உடல் அதனைச் சுலபமாக வெற்றி கொண்டுவிடும். காலகாலத்திற்கும் அந்த நோய் நம்மைத் தாக்காது.
எதற்கெடுத்தாலும் எரிந்து விழும் அந்த சிடு மூஞ்சிச் செல்வந்தர் தீமை என்னும் நோயின் ஒரு பலவீனமான கிருமி. அவரை முதலில் எதிர்கொண்டதால், மாணவர்களுக்குத் தீமையை எதிர்க்கும் சக்தி வந்துவிட்டது. பின்னாளில் பெரிய அளவில் தீமை செய்வோரையும் அவர்களால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும். அந்தக் கிழட்டுச் செல்வந்தர் ஒரு வகையில் தடுப்பூசி. 
மற்ற மாணவர்கள் செல்வந்தரைப் புறக்கணிக்க ஆரம்பித்ததும் அவர் சலித்துப் போய் விலகிக் கொண்டார் அல்லவா? அது போல் பொருட்படுத்தப் படாத தீமையும் விலகிச் சென்றுவிடும். அந்த முறையில் கொஞ்சம் தீமையும் வேண்டும். கொஞ்சம் மோர் இருந்தால் தானே பாலைத் தயிராக்க முடியும்? பால் தயிரானால் தானே வெண்ணெய், நெய் என்று அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியை அடைய முடியும்.

தெய்வீக கதைகள்....


அமைச்சர் வழங்கிய அறிவுரை
பெரிய பணக்காரனிடம், அறிவொளி என்ற அடிமை வேலை செய்து வந்தான். அவன் தன் எஜமானனுக்கு உண்மையானவனாகவும், நேர்மையானவனாகவும், நம்பிக்கைக்குப் பெரிதும் உரியவனாகவும் நடந்துகொண்டான். 
அதனால் மகிழ்ச்சி அடைந்த பணக்காரன், அறிவொளிக்கு விடுதலை கொடுத்தான். மேலும், அவனுக்கு ஒரு கப்பல் நிறைய சரக்குகள் கொடுத்து, "இந்தச் சரக்குகளை நீ வெளிநாட்டில் விற்று, பணக்காரனாகி நன்றாக வாழ வேண்டும்,'' என்றுகூறினான். 
அறிவொளி தன் எஜமானனை வணங்கி, புறப்பட்டான்.
ஒரு நாள் புயலிலும் சூறாவளியிலும் சிக்கிய கப்பல் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்தவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். 
அறிவொளி, உடைந்த கப்பலின் ஏதோ ஒரு கட்டையைப் பிடித்துக்கொண்டு ஒரு தீவில் ஒதுங்கினான். தன்னுடைய ஆதரவற்ற நிலையை நினைத்து கண்ணீர்விட்டு அழுதான். 
"இனி நான் என்ன செய்வேன்? இப்படிப்பட்ட அவல நிலை எனக்கு வந்துவிட்டதே! இனி நான் ஏன் வாழ வேண்டும்?'' என்றெல்லாம் கூறி, அழுது புலம்பினான். 
அப்போது எதிர்பாராத திருப்பம் நிகழ்ந்தது.
அவனை நோக்கிப் பலர் மேளதாளம் முழங்க, "அரசரே வருக, வருக! அரசர் வாழ்க, வாழ்க!'' என்றபடியே ஒரு யானையுடன் வந்தார்கள். 
அறிவொளியின் அருகில் வந்ததும், யானை அவன் கழுத்தில் மாலை அணிவித்தது! பிறகு, தன் முதுகில் வைத்துக்கொண்டு புறப்பட்டது. 
எல்லாரும் அவனை, ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். 
சிம்மாசனத்தில் அமர வைத்து, "இந்த விநாடியிலிருந்து நீங்கள் தான் எங்கள் தீவுக்கு அரசர்!'' என்று கூறினார்கள். 
அறிவொளிக்கு அதிசயமாக இருந்தது. 
தன் அருகில் நின்ற முதியவரிடம், "இது எல்லாம் என்ன? எனக்கும் இந்தத் தீவுக்கும் ஒரு தொடர்பும் இல்லையே! என்னைப் போய் இவர்கள் "ராஜா!' என்கிறார்களே... எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் யார்?'' என்று கேட்டான். 
முதியவர், "அரசே! நான் இந்த நாட்டின் அமைச்சர். எங்கள் தீவில் ஒரு வழக்கம் இருக்கிறது. அது என்னவென்றால், இந்தத் தீவில் அநாதையாக வந்து ஒதுங்குபவரை, நாங்கள் அரசராக்கி விடுவோம். அந்த வழக்கத்தையொட்டி, இப்போது நீங்கள் தான் எங்கள் தீவுக்கு அரசர்,'' என்று தெரிவித்தார்.
அறிவொளி: அப்படியா! இதற்கு முன்பு இந்தத் தீவிற்கு அரசர் இல்லாமலா இருந்தார்?
அமைச்சர்: முன்பு ஒருவர் இருந்தார். 
அறிவொளி: இப்போது அவர் எங்கே? 
அமைச்சர்: எங்கள் தீவில் அநாதையாக வந்து ஒதுங்குபவரை, நாங்கள் அரசராக ஆக்கி விடுவோம் என்று கூறினேன் அல்லவா?'' 
அறிவொளி: ஆமாம், கூறினீர்கள்.
அமைச்சர்: அப்படி அரசரான ஒருவர், இந்தத் தீவில் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும்தான் அரசராக இருக்க முடியும். 
அறிவொளி: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு...?
அமைச்சர்: "ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தத் தீவில் அரசராக இருப்பவரை, தூரத்தில் இருக்கும் ஒரு தீவில் கொண்டுபோய் விட்டுவிடுவார்கள்.
அறிவொளி: "இதற்கு முன்பு இங்கு அரசராக இருந்தவர்கள் எல்லாரும், இப்போது அந்தத் தீவில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?'' 
அமைச்சர்: அவர்கள் எப்படி இப்போது அந்தத் தீவில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்? அவர்கள் அங்கு சென்றதுமே, அங்குள்ள காட்டு மிருகங்கள் அவர்களை அடித்துக் கொன்று விடும் 
அறிவொளி: "ஐயோ! என்னையும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்தத் தீவில் கொண்டுபோய்விடும்போது, காட்டு மிருகங்கள் அடித்துக் கொன்றுவிடுமா? 
அமைச்சர்: ஆமாம். நீங்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், உங்களுக்கும் அந்த நிலை தான் ஏற்படும்! அதில் என்ன சந்தேகம்?'' 
அறிவொளி: நான் எச்சரிக்கையாக எப்படி இருப்பது? நான் எச்சரிக்கையாக இருந்தால், அந்த நிலையை என்னால் தவிர்க்க முடியுமா?
அமைச்சர்: முடியும்... நீங்கள் இப்போது இந்தத் தீவின் அரசர். எனவே உங்கள் விருப்பம் எதுவோ அது உடனே நிறைவேற்றப்படும். நீங்கள் அந்தத் தீவிற்கு இங்குள்ள மக்களை அனுப்பி, காடுகளை அழித்து, மக்கள் வாழ்வதற்கு உரிய இடமாக மாற்றுங்கள். அதன்பின்னர் இப்போது நாம் இருக்கும் இந்தத் தீவில் உள்ள மக்களில் ஒரு பகுதியினரை, அங்கு குடியேறும்படிச் செய்யுங்கள். அங்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்துங்கள். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு உங்களை அங்கு கொண்டுபோய் விடும்போது, நீங்கள் அந்த நாட்டின் அரசராகி விடுங்கள்!'' 
அறிவொளி: இது மிகவும் நல்ல யோசனையாக இருக்கிறதே! இதற்கு முன்பு அரசர்களாக இருந்தவர்களுக்கு, நீங்கள் இந்த யோசனையைச் சொல்லவில்லையா?
அமைச்சர்: சொன்னேன். ஆனால், அவர்கள் நான் கூறிய இந்த யோசனையைப் பின்பற்றவில்லை. 
அறிவொளி: நான் அப்படிச் செய்யமாட்டேன். நீங்கள் கூறிய யோசனையை எழுத்துக்கு எழுத்து அப்படியே நான் பின்பற்றப் போகிறேன். 
நான் இங்கு அரசனாக இருக்கும்போதே, நீங்கள் கூறிய அந்தத் தீவில் ஒரு நாட்டை உருவாக்கப் போகிறேன். 
அமைச்சர்: அரசே! நீங்கள் இங்கு அரசராக இருக்கப் போகும் ஐந்தாண்டு காலத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், நிச்சயமாக நீங்கள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அந்தத் தீவின் அரசர் ஆகிவிடுவீர்கள். இதுபோல்தான் அரசே! மனிதன் இந்த உலகில் அதிகபட்சம் நூறு ஆண்டுகள்தான் வாழ்கிறான். அவன் வாழும் காலத்தில் அற்ப உலக ஆசைகளுக்குத் தன் உள்ளத்தில் இடம் கொடுக்கிறான். அவ்வாறு இல்லாமல் தெய்வபக்தி, ஆன்மிக சாதனைகள், மனஅடக்கம், ஒழுக்கம், தியாகம், தொண்டு போன்ற தெய்விகக் குணங்களுடன் - வாழ வேண்டும். அவ்விதம் வாழ்ந்தால் அவனுக்கு என்றென்றும் அழியாத நிலையாகிய நித்திய வாழ்க்கை, மோட்சம், அமர வாழ்க்கை கிடைத்துவிடும்.'' அமைச்சரின் அறிவுரைப்படி அறிவொளி வாழ்ந்தான். அதனால் அமைச்சர் கூறிய அனைத்து நன்மைகளும் அவனுக்குக் 
கிடைத்தன. நிலையற்ற உலக வாழ்க்கையை முறையாகப் பயன்படுத்தினால், நிலையான இறைவனையே பெற்றுவிட முடியும்.