Thursday, April 16, 2015

நம்பினார் கெடுவதில்லை!

ஒரு மடத்தில் இருந்த துறவி, ஏழைகளுக்கு விருந்தளிக்க விரும்பினார். ஆனால், கையில் பணமில்லை.
""கடவுளே! விருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று மட்டும் வேண்டிக் கொண்டார். 
தன் சீடர்களை அழைத்து, விருந்துக்கான ஏற்பாட்டைச் செய்யும்படி கூறினார்.
விருந்து அன்று ஏராளமான முதியவர்கள் ஆசையோடு காத்திருந்தனர். தட்டு, தண்ணீர் வைத்தாகி விட்டது.
சீடர்கள், தங்கள் மனதிற்குள், ""நம் குருவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது போலும்! உணவே இல்லாமல் வெறும் தட்டு முன் 
முதியோர்கள் அமர்ந்தால், அவர்கள் ஏமாந்து போவார்கள் என்பது கூட இவருக்கு தெரியாதா...'' என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.
நேரம் கடந்தது.
சீடன் ஒருவன் குருவிடம், "இப்போது என்ன செய்வது?'' என்றான்.
"கவலை வேண்டாம். உணவு அளிப்பது கடவுளின் பொறுப்பு. எல்லாரையும் அமரச் சொல்லுங்கள்'' என்றார்.
என்ன நடக்கப்போகிறதோ என எல்லாரும் திகைத்து நிற்க, குரு மனஒருமையுடன் கடவுளைப் பிரார்த்தித்தார். அப்போது, வாசலுக்கு வாகனம் ஒன்று வந்தது. அதில் தேவைக்கு நிறைய உணவும் இருந்தது.
அந்த வண்டியை ஓட்டி வந்தவர் குருவிடம், ""குருவே! எங்கள் முதலாளி இந்த விருந்தை உங்களிடம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்'' என்றார்.
நடந்த விஷயம் இது தான். பணக்காரரான அந்த முதலாளி, தன் நண்பர்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் ஏதோ காரணத்தினால் விருந்து தடைபட்டதால், உணவை ஏழைகளுக்கு வழங்க முடிவெடுத்து அனுப்பி வைத்தார்.
"பெரிய முதலாளியான கடவுளின் உத்தரவால், இந்த உணவு கிடைத்துள்ளது. அவருக்கு நன்றி சொல்லி விருந்தை பரிமாறுவோம்,'' என்று சீடர்களுக்கு உத்தரவிட்டார். எதிர்பார்த்ததை விட விருந்து நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. 

Monday, April 13, 2015

நாம் பேசுவதை பற்றி விதுரர் சொன்னது ....

விதுரர் எம தர்மராஜரின் அம்சமாவர். அவர் தருமத்தைத் தவிர எதையும் சொன்னதில்லை. திருதராஷ்டிரன் பாண்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய ராஜ்யத்தை பிரித்து கொடுக்கவில்லை. அதில் திருதராஷ்டிரனுக்கு இஷ்டமும் இல்லை. அவருக்கு உபதேசிப்பதே விதுர நீதி ஆகும்.
பேசுவதில் சிறந்தது எது என விதுர நீதியில் விதுரர் என்ன கூறியிருக்கிறார் என பார்ப்போம்..
நம்மை யாரும் வசவு பாடினாலோ நம்மை யாரும் நிந்தித்தாலோ நாம் பதிலுக்கு எதுவும் கூறாமல் இருக்க வேண்டும். நாம் தர்ம வழியில் இருக்கும்போது நம்மை யாரும் வசவு பாடினால் நாம் அதற்காக துன்பமோ மன வேதனையோ பட வேண்டியதில்லை. அவ்வாறு நம்மை ஒருவர் திட்டினால் நாம் செய்த பாவங்கள் அவருக்கு சென்று விடும்.
மேலும் அவர் செய்த புண்ணியங்கள் நம்மை வந்து சேர்ந்து விடும் என்று கூறியுள்ளார். நம்மை ஒருவர் திட்டினால் அவர் நம் மீது அம்பு விடுவதாக நினைத்து நாம் ஒதுங்கி விட வேண்டும். நாம் அதை தடுத்தால் நாமும் போருக்கு தயார் என்று அர்த்தம். அவ்வாறு சண்டை ஏற்பட்டால் நாமும் சண்டை போடுவதற்கு தயார் ஆகி விட்டோம் என்று அர்த்தம் ஆகி விடும். எனவே நாம் புத்திசாலியாக இருந்து நம்மை யாரும் திட்டினாலோ வசவு பாடினாலோ பேசாமல் இருந்து புண்ணியத்தை தேடிக் கொள்ள வேண்டும்.
அடுத்து எது உத்தமம் என்று கூறுகிறார்.
பேசக் கூடாத இடத்தில் பேசாமல் இருந்தால் நல்லது. அவ்வாறு பேச வேண்டிய கட்டாயம் ஆகி விட்டால் உண்மை பேசுவது சிறந்தது. உண்மை பேச வேண்டிய கட்டாயம் ஆகி விட்டால் பிறருக்கு பிரியம் ஏற்படுமாறு பேசுவது சிறந்தது. அதுவும் கட்டாயம் ஆகி விட்டால் தர்மம் பேசுவதே சிறந்தது என்று கூறியுள்ளார்.

கிருஷ்ணருடன் நட்புடன் பழகியவர்கள் இருவர்

கிருஷ்ணருடன் நட்புடன் பழகியவர்கள் இருவர். வசுதேவரின் சகோதரி குந்தியின் மகன் அர்ஜுனன். மற்றவர் வசுதேவரின் சகோதரர் தேவபகாரின் மகனான உத்தவர்.  ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்குப் போர்க்களத்தில் உபதேசித்தது பகவத் கீதை.   தன் அவதாரம் முடிந்து வைகுண்டம் செல்லும் முன் உத்தவருக்கு உபதேசித்தது உத்தவ கீதை. பாகவதத்தில் ஹரிதாஸர் என்ற பட்டத்தைப் பெற்றவர்கள் உத்தவர், யுதிஷ்டிரர், கோவர்த்தனகிரி ஆகிய மூவரே. கம்ச வதத்திற்குப் பின் கிருஷ்ணர் பிருந்தாவன கோபிகைகளுக்கு உபதேசிக்க உத்தவரை அனுப்பினார். உத்தவரின் உபதேசம் கேட்ட ராதை முதலானோர் தம் பக்தியை மனமுருக எடுத்துச் சொன்ன பாடல்தான் ப்ரமர கீதை (வண்டின் கீதம்). அவதாரம் முடியப் போகிற நிலையில் கிருஷ்ணர் உத்தவர் விரும்பியதைக் கேட்கும்படி கோரினார். எதையும் அவர் கேட்டதில்லை. இனி கேட்கவும் விரும்பாதவர். ஆயினும் தயங்கி, கிருஷ்ணா, எனது நீண்ட கால ஒரு சந்தேகத்தைத் தீர்ப்பாயா? என்றார். கிருஷ்ணர் ஊக்குவிக்க உத்தவர் கேட்டார். 

கண்ணா, உன்னை லோக ரட்சகன், பரந்தாமன் என்று உலகம் போற்றுகிறது. ஆனால் நீயோ உடன் படித்த குசேலனை நீண்ட நாள் வறுமையில் வாடச் செய்தாய். கோபிகைளைத் தவிக்க விட்டு கோபிகா கீதம் பாடி ஆடச் செய்தாய். உன்னிடமே தஞ்சம் புகுந்த பாண்டவர்களைச் சூதாட்டத்தில் அனைத்தையும் சகுனியிடம் இழக்க வைத்து வனவாசம், அஞ்ஞாத வாசம் என அலைய வைத்தாய். திரௌபதியை மான பங்கத்தில் வாட்டி, கடைசியில்தான் காப்பாற்றினாய். நீ நினைத்திருந்தால் இவற்றையெல்லாம் நடக்காமல் தடுத்து அவர்களுக்குச் சுகம் அளித்திருக்க முடியாதா?கிருஷ்ணர் பொறுமையாகக் கூறினார்: அன்பு நண்பா, நீ சொன்னது உண்மையே. ஆனால் ஒவ்வொரு நிகழ்வின் பின்னாலும் இருந்த காரணத்தை நீ அறியாததால் இப்படிப் பேசுகிறாய்.  நானும் குசேலனும் சமித்துக்களைத் திரட்டக் காட்டுக்குப் போனோம். அப்போது குருபத்தினி எங்கள் இருவருக்கும் நான்கு பிடி அவலை குசேலனிடம் கொடுத்தனுப்பினாள். நல்ல மழையில் நாங்கள் குளிரில் வாடியபோது குசேலன் என் பங்கான இரு பிடி அவலையும் சேர்த்துச் சாப்பிட்டான். அதே இரண்டு பிடி அவல் அவன் எனக்குத் தரும் வரை அவன் ஏழ்மையில் வாடும்படி அவனது வினை செயல் பட்டது. 

கோபியர் ஒவ்வொருவருக்கும் நான் அடிமை, அவர்களிடம் மயங்கிக் கிடக்கிறேன் என்று கர்வம் கொண்டனர். அந்த எண்ணத்தை அகற்றச் சிறிது நேரம் மறைந்து அவர்களைத் தவிக்கச் செய்தேன். சூதாடுவது தவறு எனத் தெரிந்திருந்தும் எனக்குத் தெரிந்தால் நான் தடுத்து விடுவேன் என எண்ணி நான் அங்கு வந்து உட்கார்ந்து விடக்கூடாதே என்று பாண்டவர்கள் வேண்டியதால் நான் மண்டபத்தின் நுழைவாயிலிலே காத்திருந்தும் உள்ளே செல்ல முடியாது போயிற்று.  எனக்குப் பதிலாக சகுனி ஆடுவார் என்று துரியோதனன் கூறியபோது, எனக்குப் பதிலாக கிருஷ்ணர் ஆடுவார் என்று தர்மபுத்திரர் கூறியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை எவரும் ஊகிக்கலாம்.  தன்னால் தனது மானத்தைக் காத்துக் கொள்ள முடியும் என முதலில் நம்பிய திரௌபதி முடிவில் தன்னால் ஏதும் ஆகாது என்று உணர்ந்து என்னை அழைத்தபோதுதான் என்னால் ரட்சிக்க முடிந்தது.  என் பக்கபலம் இருந்ததால்தான் பாண்டவர்கள் வனவாசம், அஞ்ஞாத வாசம் இவற்றைக் கடந்து போரிலும் வெற்றி பெற முடிந்தது. என்னைச் சரணடைந்தவர்களை நான் என்றும் கைவிடுவதில்லை. 

அவரவர் வினைகளுக்கேற்பவே வாழ்க்கை அமைகிறது. நான் அதை இயக்குவதுமில்லை. அதில் தலையிடுவதுமில்லை. உள்ளே இருந்து நடப்பதை எல்லாம் நெருக்கமாகப் பார்த்து வரும் சாட்சியாக மட்டுமே இருக்கிறேன். நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை எவரும் உணர்ந்து விட்டால் என்னை வைத்துக்கொண்டு எந்தத் தவற்றையோ, பாவத்தையோ செய்யத் தயங்குவார்கள். எனக்குத் தெரியாமல் நடந்து கொள்வதாக நினைத்துக் கொண்டு தவறு செய்யும்போது அதற்கு அவரவர் பொறுப்பேற்க வேண்டும். இல்லை எனில் உணரவும் மாட்டார்கள், மீண்டும் தவறு செய்து கொண்டிருப்பார்கள்.  கீதையில் அர்ஜுனனுக்கு உரைத்தது போலவே உத்தவருக்கும் கிருஷ்ணர் ஆத்ம தத்துவத்தை உத்தவகீதை மூலம் உணர்த்தினார். தெளிவடைந்த உத்தவர் பத்ரிகாச்ரம் சென்று தவமியற்றி பரமபதம் அடைந்தார்.  பக்தி யோகம் மறைந்து அதை முறைப்படி போதிக்கத் தகுந்த குருவின்றி மக்கள் தவித்த நிலையில் ஸ்ரீகிருஷ்ணரின் திருவுளப்படி பண்டரிபுரத்தில் நாமதேவர் என்ற பெயருடன் அவதரித்தவர் உத்தவரே என்பது நம்பிக்கை.