Thursday, April 24, 2014

பன்னிரு ஆழ்வார்கள்..

இந்த ஆழ்வார்கள் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்திருந்தாலும், அவர்கள் போற்றிப் பணிந்ததெல்லாம் ஒரே பரமனைத்தான். இந்த ஆழ்வார்கள் திருமாலின் அம்சமாகவே கருதப்படுகின்றனர். பெருமானைப் போற்றுவதும், மங்களாசாஸனம் செய்வதுமே அவர்களின் வாழ்க்கை முறையாக அமைந்தது. இப்பன்னிருவரில்

"மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்"
என்று கண்ணனைச் சரணடைந்த ஸ்ரீ ஆண்டாள் மட்டுமே பெண் ஆவார்.
1) பொய்கை ஆழ்வார்
2) பூதத்தாழ்வார்
3) பேயாழ்வார்
4) திருமழிசை ஆழ்வார்
5) நம்மாழ்வார்
6) திருமங்கையாழ்வார்
7) தொண்டரடிப் பொடி ஆழ்வார்
8) பெரியாழ்வார்
9) ஸ்ரீ ஆண்டாள்
10) குலசேகர ஆழ்வார்
11) மதுரகவி ஆழ்வார்
12) திருப்பாணாழ்வார்

இவர்களுள் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் மற்றும் பேயாழ்வார் மூவரையும் முதல் ஆழ்வார்கள் என்று குறிப்பது வழக்கம்.

Monday, April 21, 2014

வித்தியாரண்யர்

வித்தியாரண்யர் பிரம்மசாரியாக இருந்த காலத்தில் பரம ஏழையாக இருந்தவர். மகாலட்சுமியைக் குறித்து கடுமையான தபஸ் பண்ணினார். மகாலட்சுமி பிரசன்னமானாள். உனக்கு என்ன வேண்டும்? என்று கேட்டபோது, உலகத்தில் யாரிடத்திலும் இல்லாத அளவு ஐசுவரியத்தைக் கொடு என்று இவர் கேட்டார். மகாலட்சுமி, அப்பா உனக்கு இந்த ஜன்மத்தில் ஐசுவரியம் கிடைப்பதற்கு இல்லையே; வேண்டுமானால் அடுத்த ஜன்மாவில் கொடுக்கிறேன் என்று சொன்னாள். வித்தியாரண்யர் உடனே சன்னியாசம் வாங்கிக் கொண்டு, சன்னியாசம் வாங்கிக் கொண்டால் சாஸ்திரப்படி மறு ஜன்மமாகப் போய்விடாதா? இப்போது ஐசுவரியத்தைக் கொடு என்றார். மகாலட்சுமியும் சொர்ணத்தை வர்ஷித்தாள். நிலம் முழுக்க எங்கே பார்த்தாலும் ஒரே தங்கமாக நவநிதியும் தெரிந்தது. அவற்றைப் பார்த்தவுடன் வித்தியாரண்யர், ஆசிரமம் வாங்கிக் கொண்டபின் நமக்குத் தங்கம் எதற்காக? சன்னியாச ஆசிரமத்தில் இதைத் தொடவும் கூடாதே என்று அழுதாராம்.
அப்போதுதான் மாலிக்காபூர் தென்னாட்டுக்குப் படையெடுத்து வந்து, எல்லா ராஜ்யங்களும் எல்லா கோயில்களும் சிதறுண்டு போகும்படியாக பண்ணிவிட்டுப் போயிருந்தான். சரி, இந்த ஐசுவரியத்தைக் கொண்டு அவற்றை எல்லாம் ஒழுங்கு செய்வது என்று வித்தியாரண்யர் தீர்மானம் பண்ணிக் கொண்டார். அப்போது அங்கே ஹரிஹரன் - புக்கன் என்ற இரண்டு பேர் அண்ணன், தம்பி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு குறும்பர்களையும் அழைத்து, அந்த துங்கபத்திரை பிரதேசத்திலேயே ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்து, அதற்கு ராஜாக்களாக அவர்களை ஏற்படுத்தினார். அந்த ராஜ்யம்தான் விஜயநகர சாம்ராஜ்யம்.

Tuesday, April 15, 2014

ஸ்ரீ சந்திரன் சுப்ரபாதம்

சூரியனுக்குத் தென்கிழக்கில் சதுரமான
ஆசனமிட்டு சுபக்கிரகமாய் அமர்ந்திருக்கும்
சுந்தரமுகத்தோனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்.

வலக்கரத்தில் கதையும் இடக்கரத்தில்
வரத முத்திரையும் கொண்டு முத்து
விமானத்தில் பவனி வரும்
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

பேரெழிலுக்கு முதன்மையானவனே
புதபகவானைப் புத்ரனாகப் பெற்றவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்


ஒரு முகம் கொண்ட எழில்
திருமுகத்தோனே மஞ்சள் கலந்த
வெள்ளை நிறத்தில்  அமிர்தமாய்
விளங்குபவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்

வெண்ணிற ஆடைப் ப்ரியனே
முத்தை ரத்தினமாக கொண்டவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

வளமான வாழ்வும் சுகபோகமும்
தந்தருளும் சந்திரபகவானே எழுந்தருள்வாய்

இருளில் மிளிர்ந்து இதயத்துள் அமர்ந்து
வளர்ந்தும் தேய்ந்தும் அருள்பவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ஆயுள் விருத்தியை தந்து அற்புத
வாழ்வை தந்து அருள்பவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ஆயிரம் பிறை கண்டு ஆனந்தமாய்
நான் வாழ அருள்புரியும்
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

மனிதனின் ஜாதகத்தில் மாத்துர்காரனாக
நின்று அழகும் ஆடையும் ஆபரணமும் தந்து
அருள்பவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ரோஹினி ஹஸ்தம் திருவோணம்
நட்சத்திரத்துக்கு அதிபதியானவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

திருப்பதியை ஷேத்திரமாகக் கொண்டு
வெங்கடேசப் பெருமாளை மூர்த்தியாகக்
கொண்டவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்

ராஜசூய யாகம் செய்து நாராயணனின்
அருள் பெற்று தேஜோமயமாய்
திகழ்பவனே சந்திரபகவானே எழுந்தருள்வாய்

பத்து குதிரைத் தேரில்
இருசக்கிரங்கள் பூட்டி பவனிவரும்
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

அத்ரி புத்ரனே ஆத்ரேயனே
அமைதியான பார்வை கொண்டவனே
சந்திரபகவானே எழுந்தருள்வாய்

பிரதி திங்களும் பௌர்ணமி நாளிலும்
விரதமிருந்து வெண் அலரி மலரால்
அர்ச்சித்து வணங்கிட நலம் உண்டாகும்.

பச்சரிசி பால்சாதம் நிவேதனம் செய்து
சந்ர பகவானுக்குரிய தான்யமான
நெல்லை தானம் செய்திட கார்ய சித்தியாகும்.

மூன்றாம் பிறையில் சந்த்ர தரிசனம்
செய்து வந்தால் ஆயுள் விருத்தியாகும்.

சந்திரனுக்கு உகந்த ஷேத்திரமான திருப்பதி
சென்று ஸ்ரீனிவாசப் பெருமாளை
தரிசித்தால் சர்வ ஜெயம் உண்டாகும்.

சரணம் சரணம் சந்ரபகவானே சரணம் 
சரணம் சரணம் சோமனே சரணம்
சரணம் சரணம் லக்ஷ்மி சோதரனே சரணம்
சரணம் சரணம் சந்ரனே நின் பத மலரே சரணம்

சரணம் சரணம் சந்ரபகவானே சரணம் 
சரணம் சரணம் சோமனே சரணம்
சரணம் சரணம் லக்ஷ்மி சோதரனே சரணம்
சரணம் சரணம் சந்ரனே நின் பத மலரே சரணம்

Monday, April 14, 2014

ராமபக்தர் ராமச்சந்திர பட்டர்


கோசல நாடு சரயுநதி பாயும் மிகச் செழிப்பான பூமி. சரயு நதிக்கரையில் உள்ள அமலாபுரம் என்ற சிற்றூரில் ராமச்சந்திர பட்டர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் நான்கு வேதங்களையும் கற்றறிந்தவர். கோசல நாட்டு மன்னர் இவரை தனது குருவாக கொண்டார். ஆனாலும் ராமச்சந்திரபட்டர் ஆடம்பர வாழ்வை விரும்பவில்லை. அரசகுரு என்ற பதவியை தவறாக பயன்படுத்தியதே கிடையாது. தினமும் உஞ்சவிருத்தி (பிச்சையெடுத்தல்) சென்று அதில் கிடைக்கும் உணவில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு கொடுத்துவிட்டு மீதியை தன் மனைவியிடம் கொண்டு கொடுப்பார்.கணவர் கொண்டு வரும் உஞ்சவிருத்தி அரிசியை இவரது மனைவி விருந்தினர்களும் விரும்பி உண்ணும் வகையில் பக்குவமாக சமைப்பாள்.ஒருமுறை இனிய பாடல்களை பாடியபடி உஞ்சவிருத்தி செய்தபடி வந்து கொண்டிருந்தார் ராமச்சந்திர பட்டர். இதை உப்பரிகையிலிருந்து மன்னனின் மனைவி பார்த்தாள். அவரது எளிய தோற்றத்தைக் கண்ட அரசி மன்னரிடம், தாங்கள் குருவாக ஏற்றிருக்கும் இந்த பெரியவரை நீங்கள் உஞ்சவிருத்தி செய்ய விடலாமா ? இது மிகப் பெரிய பாவமல்லவா ? என்று கேட்டாள். அதற்கு பதிலளித்த அரசன், அவர் பெரிய மகான். ஆசைகள் இல்லாதவர். எவ்வளவு பொன்பொருள் கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார். எனவே என்னால் எதுவும் செய்வதற்கில்லை, என்றான்.எனவே அரசி அவரது மனைவிக்கு பொருட்களை அனுப்பலாமா என ஆலோசனை செய்தாள். அதன்படி பட்டாடைகள், விலையுயர்ந்த ஆபரணங்களை ராமச்சந்திரபட்டரின் மனைவியிடம் ஒப்படைக்கச் சென்றாள்.
அரசியை பட்டரின் மனைவி வரவேற்றாள். அவள் கொடுத்த பொருட்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டாள். வெளியில் சென்றிருந்த பட்டர் வீடு திரும்பினார். நடந்த விபரங்களை அறிந்தார். அடி அசடே ! அரசியிடம் நீ ஏன் பொருட்களை பெற்றாய் ? பணமும் காசும் கொடிய விஷம் என்பதை நீ அறியவில்லையா ? என்றார். மறுநாள் ஹோமம் செய்யும்போது ஹோமத்தின் முடிவில் பூர்ணாஹுதி கொடுக்கும் போது அரசி கொடுத்த பட்டாடைகளையும், ஆபரணங்களையும் ஹோம குண்டத்தில் போட்டு விட்டார். பட்டரின் மனைவிக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. மன்னனுக்கும் இந்த செய்தி எட்டியது. அவன் பட்டரின் வீட்டிற்கு வந்தான். பட்டரின் மனைவி கலங்கிப்போனாள். மன்னர் கொடுத்த பரிசுப்பொருட்களை ஹோமத்தீயின் இட்டதால் தண்டனை கொடுப்பதற்காக அரசர் வந்துள்ளார் எனக் கருதினாள். மன்னன் பட்டரிடம், என் மனைவி அளித்த பொருட்கள் தங்களுக்கு வேண்டாம் என்று சொன்னதாக அறிந்தேன். அதை திருப்பி தாருங்கள், என்றான். பட்டர் சிறிது தயங்கினார். ஏதோ ஒரு தைரியத்தில், நீங்கள் அளித்த பொருட்களை இன்னும் சற்று நேரத்தில் தந்துவிடுகிறேன். பொறுத்திருங்கள், என சொல்லிவிட்டு ஹோமகுண்டத்தின் முன்பு கண்மூடி தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார். சற்று நேரத்தில் குண்டத்திலிருந்து ஆடைகளும், ஆபரணங்களும் ஊற்று நீர்போல பொங்கி வெளியே வந்தது. அனைவரும் திகைத்து நின்றனர். மன்னன் பட்டரின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அந்த பொருட்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தனர். பட்டர் ராமநாமமும், ஹரிநாமமும் சொல்லியபடியே காலத்தைக் கழித்தார்

Tuesday, April 8, 2014

த‌னது நாட்டை தருமருக்கு தருமமாக தருவதாக சொன்ன‍ துரியோதனன்


அநேகரும் அறியாத  தகவல்....
மகாபாரத‌த்தில் பாண்டவர்களின் வனவாசமும், அஞ்ஞான வாசமும் முடிந்த பிறகு, பாண்டவர்கள் சார்பில் தூதுவந்த கிருஷ்ணன், “துரியோதனா நீ பாண்டவர்களிடம்
சூதில் அபகரித்த நாட்டை திருப்பி அவர்களி டம் ஒப்ப‍டைத்து விடு என்று சொன்னார். அதற்கு துரியோதனன் மறுத்தான். அதன்பிறகு கிருஷ்ணர், போரை தவிர்க்கும் பொருட்டு, பாண்டவர்களுக்கு ஐந்து ஊர்களையாவது கொடு என்றார். அதற்கும் துரியோதனன் மறுத் தான். இதனை கேட்ட கிருஷ்ணர், சரி ஐந்து வீடுகளையாவது பாண்டவர்களுக்கு கொடு என்று கேட்டும், அதற்கும் துரியோதனன் மறுத்து, பாண்டவர்களை போரில் வெல்வதாக கூறினான்.
பாண்டவர்களுக்கு 5 வீடுகளைக்கூட தர மறுத்த‍ துரியோதனன், பாண்டவர்களின் முதல்வனான தருமருக்கு தருமமாக தனது நாட்டை தருவதாக சொல்லியுள்ள‍து ஆச்ச‍ரியமளிக்கும் விஷயமாக இருக்கிறதல்ல‍வா? இதோ அந்த காட்சி
மகாபாரதத்தில் இடம்பெற்ற‍ இறுதிக் கட்ட‍ போரின் முடிவில் துரியோ தனன், தனது படைகள் அழிய, தளபதிகள், உடன் பிறந்தோர் என பலரை இழந்தான். அதுமட்டுமா, பீஷ்மர், துரோணாச்சாரியார் மற்றும் கிருபாச் சாரி யார் போன்றவர்களையும் இழந்தான். தனிமை அவனை உருக்குலைந்தவனாக, போர்க் களத்தையே உற்று நோக்கினான். தன்னைத் தவிர யாரும் இல்லை என உணர்ந்தான். ஒரு கதையை எடுத்துக் கொண்டு நட ந்தான். தன்னைக் காண வந்த சஞ்சயனிடம் ‘நான் ஒரு மடுவில் இருப்பதாகக் கூறி விடு’ என்று அனுப்பி விட்டு மடுவில் புகுந்துக் கொண்டான். பாண்டவர்கள் துரியோதனனைத் தேடினர். அவன் மடுவில் இருப்பதை சில வேடர்கள் தெரிவித்தனர்.
அவன் இருக்குமிடம் வந்த தருமர் ‘துரியோதனா .. சத்ரியனான நீ போர்க்களத்தை விட்டு ஒடிவந்து பதுங்கிக் கொண் டாயே..அதுவா வீரம்.. எழுந்து வெளியே வந்து போர் செய்’ என்றார்.அதற்கு துரியோதனன்.. ‘தருமரே..
நான் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். நாளை வந்து போர் செய்வேன் அல்லது காட்டிற்குச் சென்று தவம் செய் வேன். எனக்குரிய நாட்டை தருமமாகத்தருகிறேன். பெற்றுக் கொள்’ என்றான்.
நடுவே புகுந்த பீமன், ‘வீண் பேச்சை நிறுத்து..கதை யுத்தம் செய்வோம் வா ‘ என்றான்.வேறு வழியின்றி துரியோதனனு ம் சம்மதித்தான்.இருவரும் குருசேத்திரத்தின் மேற்கு பகு தியில் உள்ள புனிதமான சமந்த பஞ்சக மடுவின் கரைக்குச் சென்றார்கள்.சமமாகவே போரிட்டனர்.இரண்டு கதா யுதங்களும் மோதும் போது ஏற்பட்ட ஒலி எட்டுதிக்கும் எதிரொலித்தது. போர் முடிவிற்கு வருவதாகத் தெரியவில்லை.
அப்போது கண்னன், யுத்தநெறிக்கு மாறாகப்போர் செய்தால் தான் அவனை வீழ்த்த முடியும் என்பதை உணர்ந்து.. அவன் தொடையை ப் பிளக்க வேண்டும்.. என அர்ச்சுனனிடம் குறிப்பால் தெரிவிக்க.. அர்ச்சுனனும் பீமன் பார்க்குமாறு தன் தொடையைத் தட்டிக் காட்டினான். குறிப்பறிந்த பீமன்.. தனது கதாயுதத்தால் துரியோதனனின் இரு தொடைகளையும் முறித்தான்.நிற்கவும் இயலாது துரியோதனன் கீழே வீழ்ந்தான்.

Wednesday, April 2, 2014

தெய்வீக கதைகள்.....


நாரதர் ஒரு சமயம் கிருஷ்ணரைத் தரிசிக்கச் சென்றார். அவரை கிருஷ்ணர் ஆசீர்வதித்தார். 
இருவரும் உரையாடியபடியே உலாவச் சென்றார்கள். 
அப்போது நாரதர், ""கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள். அது உண்மைதானா? "தேவரிஷி' என்று எல்லோரும் என்னை அழைக்கிறார்கள். பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்ம ஞானியாகிய என்னை 
உங்களுடைய மாயை என்ன செய்யும்? மாயையால் நானும் பாதிக்கப்படுவேனா?'' என்று கேட்டார். 
அதைக் கேட்ட கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், சற்று தூரத்திலிருந்த ஒரு குளத்தைச் சுட்டிக்காட்டி, ""நாரதரே! அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்...'' என்று கூறினார். 
கிருஷ்ணர் கூறியபடியே, நாரதர் தன் கையில் இருந்த "மகதி' என்ற வீணையைக் குளக்கரையில் வைத்துவிட்டு, குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார்.
மூழ்கி எழுந்தாரோ இல்லையோ, அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்! "தான் நாரதர்' என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று; குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.
இப்போது நாரதப் பெண், குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள். அந்த வழியாக அந்த நாட்டு அரசன், குதிரையில் வேகமாக வந்தான். அவன் இளைஞன், அழகானவன். நாரதப் பெண்ணை அவன் பார்த்தான். அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான். 
"நான் இந்த நாட்டின் அரசன். உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன், உனக்குச் சம்மதமா?'' என்று கேட்டான். 
நாரதப் பெண் மவுனமாகத் தலையசைத்து, தன் சம்மதத்தைத் தெரிவித்தாள். 
அரசன் அவளைத் தன்னுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். 
இருவருக்கும் முறைப்படி திருமணம் விமரிசையாக நடந்தது. இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு 
அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஒரு சமயம் பக்கத்து நாட்டு அரசன், இந்த நாட்டு அரசன் மீது போர் தொடுத்தான். 
இருதரப்புக்கும் கடுமையாகப் போர் நடந்தது. 
போர்க்களத்தில் நாரதப் பெண்ணின் கணவன் கொல்லப்பட்டான். அதைத் தொடர்ந்து, நாரதப் பெண் இருந்த நாட்டின் தலைநகரைக் கைப்பற்றுவதற்கு பகைவர்கள் விரைந்து வந்தார்கள். 
அப்போது வீரர்கள் சிலர், போர்க்களத்தில் இருந்து தப்பி அரண்மனைக்கு வந்து நாரதப் பெண்ணிடம், ""அரசியாரே! போரில் நமது 
அரசர் கொல்லப்பட்டார்! பகைவர்கள் அரண்மனையைக் கைப்பற்ற நெருங்கி வந்து கொண்டிருக்கிறார்கள்! உங்களையும், நமது அரச குமாரர்களையும் பகைவர்கள் சிறை பிடிப்பதற்குள் இங்கிருந்து நீங்கள் தப்பிச் சென்றுவிடுங்கள்,'' என்று கூறினர்.
நாரதப் பெண்ணும், குழந்தைகளுடன் அரண்மனையிலிருந்து தப்பி ஓடினாள். 
ஆனாலும், பகைவர்கள் இதை அறிந்து விட்டனர். அவளைத் தேடிச் சென்றனர். 
அவர்கள் தன்னைத் துரத்தி வரும் சப்தம் அவளுக்குக் கேட்டது. அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வேக வேகமாக அருகிலிருந்த காட்டிற்குள் ஓடினாள். 
விரைந்து ஓடியபோது, அவள் தன் மூத்த மகனின் கையைத் தவற விட்டாள். இப்போது அவள் தன் ஒரு குழந்தையை மார்போடு அணைத்தபடியே ஓடிக்கொண்டிருந்தாள். 
இதற்குள் பகைவர்கள் அவளை மிகவும் நெருங்கி விட்ட ஆரவாரம் கேட்டது. இதனால் பயந்து வேகத்தை அதிகரித்த போது, 
அவள் கையில் இருந்த குழந்தையும் தவறி கீழே விழுந்தது. 
குழந்தையை எடுக்க முடியவில்லை. பகைவர்களிடம் சிக்காமல் தப்ப கல்லிலும் முள்ளிலும் விழுந்தாள். அதனால் உடலில் பலமான காயங்கள் ஏற்பட்டன. 
நீண்ட தூரம் ஓடிய பிறகு, பகைவர்கள் துரத்தி வந்த சப்தம் கேட்கவில்லை. பகைவர்களிடமிருந்து தப்பியதை அவள் உணர்ந்தாள். 
காட்டிலிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து தன் நிலையை நினைத்து அவள், "ஐயோ! என் நிலை இப்படி ஆகிவிட்டதே! நான் என் கணவரை இழந்துவிட்டேன்! குழந்தைகளையும் பறிகொடுத்து விட்டேன்.... நாட்டையும் பகைவர்கள் பிடித்து விட்டார்கள். ஆதரவற்ற அநாதையாக நான் இப்போது இருக்கிறேன். இனிமேல் நான் யாருக்காக உயிர் வாழ வேண்டும்? கல்லிலும் முள்ளிலும் அடிபட்டு உடல் முழுவதும் ஏற்பட்ட இந்தக் காயங்களின் வலியை என்னால் பொறுக்க முடியவில்லை. பசியும் தாகமும் என்னை வருத்துகின்றன!'' என்று பலவாறு கூறி கதறி அழுதாள். 
அப்போது கிருஷ்ணர் ஒரு முதியவர் வடிவத்தில் அங்கு வந்து, "அம்மா! நீ யார்? ஏன் இப்படி இந்தக் காட்டில் தனிமையில் அழுது கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார். 
நாரதப் பெண், தன்னுடைய அவல நிலையை அவரிடம் கூறி அழுதாள். 
முதியவர் அவளிடம், "அம்மா! அதோ தெரியும் அந்தக் குளத்தில் நீராடி விட்டு வா! அதனால் உனக்கு நன்மை ஏற்படும்,'' என்று தெரிவித்தார்.
முதியவர் கூறியபடியே நாரதப் பெண் குளத்தில் மூழ்கி எழுந்தாள். உடனே நாரதப் பெண் உருவம் மாறி, பழைய நாரதர் வடிவம் கொண்டார். அவருக்கு நடந்தவை அனைத்தும் நினைவுக்கு வந்தன. 
குளத்தின் படிகளில் ஏறி வந்த நாரதர், குளக் கரையில் தான் வைத்துச் சென்ற வீணையை எடுத்துக் கொண்டார். சற்று தூரத்தில் கிருஷ்ணர் நின்று கொண்டிருப்பதையும் பார்த்தார். 
நடந்ததையெல்லாம் நாரதர் நினைத்துப் பார்த்த படியே கிருஷ்ணரிடம் சென்று, ""பகவானே! நான் கர்வம் கொண்டதற்கு என்னை மன்னியுங்கள். உங்கள் மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்பது உண்மை தான். மாயைக்கு நான் ஒருபோதும் வசப்படாமல் இருக்க 
வேண்டும் என்று என்னை ஆசீர்வதியுங்கள்,'' என்று வணங்கிக் கேட்டுக்கொண்டார். 
கிருஷ்ணரும் நாரதரின் பிரார்த்தனையை ஏற்று ஆசீர்வதித்தார்.
வாழ்க்கை என்ற ஒன்று இருக்கும் வரை இதுபோன்ற மாயை இருந்து கொண்டே இருக்கும். இதில் இருந்து விடுபட ஒரே வழி இறைவனைச் சரணடைவது தான்.
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா! 
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே!!.
"முக்குணங்களால் ஆகிய என்னுடைய இந்த மாயை தெய்வீகமானது, யாராலும் கடக்க முடியாதது. ஆனால் யார் என்னையே சரணடைகிறார்களோ, அவர்கள் இந்த மாயையைக் கடக்கிறார்கள். ''- பகவத்கீதை 7.14


சுவாமி கமலாத்மானந்தர்

Tuesday, April 1, 2014

சுவாகா(ஸ்வாஹா) -

சுவாகா என்பது யாக சாலையில் அக்னி குண்டத்தில் யாக பொருட்கள் நிவேதனங்களாக இடும் போது கூறப்படும் சொல் ஆகும். இந்து மற்றும் பௌத்த மதங்களில் அதிலும் குறிப்பாக பௌத்தத்தில் சுவாகா(ஸ்வாஹா स्वाहा) என்பது மந்திரங்களின் இறுதியில் சொல்லப்படும் சொல்லும் ஆகும்.
சுவாகா என்பது சு(सु) மற்றும் ஆ ஆகியவற்றில் இருந்து தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. சு என்பது நன்மையை குறிக்கும் ஆ என்றால் கொடுத்தல் அல்லது கூப்பிடுதல் என பொருள்படும்.
இந்த சொல்லை ஜப்பானியர்கள் சோஹா எனவும் திபெத்தியர்கள் சோவா எனவும் குறிப்பிடுவர்.
வடமொழியில் சுவாகா என்பது பெண்பால் பெயராகும். சுவாகா என்பது சுவாகா தேவி என்ற பெண் தெய்வமாக உருவகப்படுத்தப்படுகிறது.
இவர் அக்னியின் துணையாக கருதப்படுகிறார். யாக நிவேதனங்களை பெற்றுக்கொண்டு அக்னி தேவனுக்கு இவர் அளிக்கிறார் என நம்பப்படுகிறது.
சில புராணங்களில் முருகன் அக்னி மற்றும் சுவாகா தேவியின் மகனாக கூறப்படுகிறார். சுவாகா தேவி தக்ஷனின் மகளாக கருதப்படுகிறார்.
நான்கு வேதங்களும் இவரது உடலாகவும், வேதத்தின் ஆறு அங்கங்களும் ஆறு கரங்களாகவும் உருவகிக்கப்படுகின்றன.
சில நேரங்களில் இவர் ருத்திரனின் மனைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார்.
'ஸ்வாஹா' வுக்கு வேதாந்தப்பொருள்
'ஸ்வத்வ-ஹனனம்' என்று வடமொழியில் இதற்குப்பொருள் சொல்லப்படுகிறது. 'ஸ்வத்வம்' என்றால் 'தான் என்ற தன்மை'[1]; அதாவது, 'தான், தனது' என்று எதைக் குறித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோமோ அந்த பழக்கநடக்கை.நமது உடம்பு, மனது, புத்தி, இவைகளின் சேர்க்கையைத்தான் ஒவ்வொரு மனிதனும் 'தான்' அல்லது 'நான்' என்று பழகுகிறான்.
ஆனால் இந்த 'நான்' ஒரு வரையறைக்குட்பட்டது. வேதாந்தம் இதை மறுத்து, 'நான்' என்பது ஒரு வரையறைக்குட்படாத பரம்பொருள் என்று பறைசாற்றுகிறது. இப்படிச் சொல்லும்போது, எவ்விதம் நாம் இந்த வரையறுக்கப்பட்ட 'தான்' என்ற தன்னை, வரையறுக்கப்படாத பரம்பொருளாகத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு வேதம் பல இடத்தில் மந்திரங்களை போதிக்கிறது. ஒரே ஒரு எடுத்துக்காட்டு:
ஆர்த்ரம்ஜ்வலதி ஜ்யோதிரஹம் அஸ்மி; ஜ்யோதிர்ஜ்வலதி பிரம்ம அஹம் அஸ்மி; யோஹம் அஸ்மி பிரம்ம அஹம் அஸ்மி;அஹம் அஸ்மி பிரம்ம அஹம் அஸ்மி; அஹம் ஏவ அஹம் மாம் ஜுஹோமி ஸ்வாஹா
]
இதன் பொருள்: நீரில் நனைந்தவிதை முளைப்பது போல் எந்த பரஞ்சோதியிலிருந்து இவ்வளவும் தோன்றிற்றோ அந்த சோதியே நான்.அந்த சோதியே என்னுள்ளும் விளங்குகிறது.அந்த வரையற்ற பரம்பொருள்தான் நான். இந்த சிறிய'நான்' என்ற என்னையே அந்த பெரிய 'நான்' என்ற சோதியில் இடுகிறேன். ஸ்வாஹா.
மேற்குறித்த மந்திரம் ஒவ்வொரு நாளும் நீராடும்போது உச்சரிக்கப்படவேண்டிய மந்திரங்களில் ஒன்று. இந்தமந்திரம் வேதத்தில் வரும் இடத்தில் அக்னி, யாகம், சடங்கு ஒன்றுமில்லை. வேதாந்தத்தில் இதைத்தான் ஸ்வாஹாவின் வரையறை (definition) ஆக எடுத்துக்கொள்கிறார்கள்.
கந்தரனுபூதியில் இந்த மந்திரத்தை அழகான தமிழில் சொல்லப்படுகிறது:
யானாகிய என்னை விழுங்கி வெறுந்தானாய் நிலை நின்றது தற்பரமே.

முயற்சிகள் தவறலாம். முயற்சிக்கத் தவறாதீர்கள்.....


18 ஆண்டுகள் நெறிதவறாமல் மனம் ஒருமித்துத் தவம் செய்தால் இறைவனை அடையலாம்' என்று ஒரு முனிவர் உபதேசம் செய்து கொண்டிருந்தார். அதைக் கேட்ட ஒருவனுக்கு இறைவனைப் பார்க்க ஆசை வந்துவிட்டது. அவன் தனியாள். குடும்பம் ஏதுமில்லை. எனவே, மறுநாளே தவம் செய்யப் புறப்பட்டு விட்டான். 17 ஆண்டுகள் ஆறுமாதங்கள் ஓடிவிட்டது. இன்னும் ஆறே மாதங்கள்தான்... தவம் முடிந்துவிடும். இந்த நிலையில், அவன் கண் முன்னே அழகான மான் ஒன்று ஓடியது. அதைத் துரத்திக் கொண்டு ஒரு அழகான பெண் ஓடினாள். அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்து போனான் தபசி. 
அவளைத் தொடர்ந்து காட்டு வழியே சென்று கொண்டிருந்த போது ஒரு நாகப்பாம்பு அவனைத் தீண்டியது. விஷம் தலைக்கேறி உயிரை விட்டான்.
இறந்தவனின் ஆன்மாவிற்கு அப்போதுதான் தன் உண்மை நிலை விளங்கியது.. "இன்னும் ஆறே மாதங்கள் மூச்சைப் பிடித்துத் தவத்தை முடித்திருந்தால் இறைநிலை எய்தியிருக்கலாம்... கடைசி நேரத்தில் மானையும், மானைப் போன்ற பெண்ணையும் பார்த்ததால் வந்த வினை தவப்பயனைத் தொலைத்துவிட்டேனே... இனி அழுது என்ன பயன்! சே... எல்லாம் வீணாய்ப் போயிற்றே' என்று புலம்பிக் கொண்டிருந்தான்.
அப்போது அசரீரியாக வந்த இறைவன் பேசினார்.
""மானிடனே! உன் தவ முயற்சியால் மகிழ்ந்தோம். மீண்டும் ஒருமுறை நீ மனிதனாகப் பிறந்து மீண்டும் தவமியற்று. இந்த முறை வெற்றி நிச்சயம்.''
அந்த ஆன்மா அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.
""இந்த முறை நிச்சயமாக 18 ஆண்டுகள் உங்களைக் குறித்துத் தவம் செய்து இறைநிலை பெறுவேன். இது சத்தியம்.''
""தேவையில்லையப்பா! நீ ஏற்கனவே பதினேழரை ஆண்டுகள் தவம் செய்துவிட்டாய். அடுத்த பிறவியில் ஆறே ஆறு மாதங்கள் 
தவமியற்றினால் போதும் என்னை வந்து அடைந்துவிடுவாய்.''
""சரி ஐயனே! ஒருவேளை எனக்குத் தவம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே வராமல் இருந்துவிட்டால்... என்ன இருந்தாலும், நான் ஆசாபாசமுள்ள சாதாரண மனிதப் பிறவியாகத்தானே பிறக்கப் போகிறேன்?''
""கவலைப்படாதே. நீ ஏற்கனவே செய்த தவத்தின் பயனாகத் தவத்தின் மேல் இயல்பாகவே ஒரு ருசி பிறக்கும். உனக்கு 12 வயதாவதற்கு முன்பே தவம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்துவிடும். ஆறே மாதங்கள். மனதை ஒரு நிலைப்படுத்தி தவம் செய்தால் போதும்... உனக்கு மோட்சம் கிடைக்கும்.''
""மீண்டும் ஒருமுறை நெறி தவறினால்.. ''
""மீண்டும் ஒரு வாய்ப்புத் தருவேன்.''
இதுதான் இறைவனின் நியதி. இது நம்முடைய உலகியல் வாழ்க்கைக்கும் பொருந்தும். நல்லதை நினைத்து நன்மை செய்தால் அது ஒரு நாளும் வீண் போகாது. இதை நான் சொல்லவில்லை. கண்ணன் கீதையில் ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறான். 
""நம்பிக்கை உடையோன் எனினும், தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்று மனம் வழுவியவன் யோகத்தில் தோற்றுப்போய் அப்பால் என்ன கதியடைகிறான் கண்ணா?'' என்று அர்ஜுனன் கேட்க, ""பார்த்தா! அவனுக்கு இவ்வுலகிலும் மேலுலகத்திலும் அழிவில்லை. மகனே! நன்மை செய்வோன் எவனும் கெடமாட்டான்.'' என்று கண்ணன் உறுதிபடச் சொல்கிறான். (பகவத் கீதை 6-37 மற்றும் 6-40 - பாரதியாரின் தமிழாக்கம்) பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு மென்பொருளை விற்பதில் முனைப்பாக இருந்தேன். சென்னையில் ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்திற்கு அந்த மென்பொருளைப் பற்றி விளக்கிச் சொல்லும் பொன்னான வாய்ப்பு கிடைத்தது. அந்த நிறுவனத்தின் பற்று வரவு பல ஆயிரம் கோடிகளுக்கு மேல்... அவர்களுக்கு எங்கள் மென்பொருள் பிடித்துப்போய்விட்டால், ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆர்டர் எங்களுக்குக் கிடைக்கும்.
அந்த மென்பொருள் நிறுவனத்தின் அதிபரும், நானும் அந்த நிறுவனத்திற்குச் செல்வதாக இருந்தது. இரண்டு வாரங்கள் இரவு பகலாக உழைத்து எங்களைத் தயார் செய்து கொண்டோம். அவர்கள் பெரிய நிறுவனம் என்பதால் எப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்பார்கள் என்று ஊகித்து, சுமார் நூறு விதமான கேள்விகளுக்குப் பதில் தயார் செய்து கொண்டோம். 
ஒரு நல்ல நாளில் நிறுவனத்தின் தலைவர், உயர் அதிகாரிகள் பலர் இருந்த உயர் மட்டக் கூட்டத்தில் நானும் அதிபரும் சுமார் ஒரு மணி நேரம் பேசினோம். உங்கள் சந்தேகங்களைக் கேட்கலாம் என்று சொன்னோம். எனக்கோ உள்ளூர பயம். ஏடாகூடமாகக் கேள்வி கேட்டுமாட்டி விடுவார்களோ...! 
முதல் கேள்வியிலேயே நாங்கள் நிலைகுலைந்து போனோம். 
""இந்த மென்பொருள் என்னவெல்லாம் செய்யும்?''
ஒரு மண்டலம் ராமாயணம் உபன்யாசம் கேட்டுவிட்டு, ராமன் யார் என்று கேட்டால்...! 
அடுத்த கேள்வி அதைவிடக் கேவலமாக இருந்தது.
""நீங்கள் போட்டிருக்கும் சட்டை நன்றாக இருக்கிறது. எங்கே வாங்கினீர்கள்.?''
மென்பொருளை வடிவமைத்த என் நண்பரிடம் புலம்பினேன். ""இந்த முட்டாள்களுக்கு விளக்கவா அவ்வளவு கஷ்டப்பட்டோம். இரண்டு வார உழைப்பு வீணாகிவிட்டதே!''
நண்பர் என்னை அணைத்தபடி சொன்னார். ""உண்மையான உழைப்பு என்றுமே வீணாவதில்லை.''
""அது சரி... தெய்வம் நம்பக்கம் இல்லை போலிருக்கிறது'' என்று விரக்தியாகச் சொன்னேன். 
""வள்ளுவர் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். தெய்வம் நம் பக்கம் இல்லாவிட்டாலும் நம் முயற்சிக்குப் பலன் கிடைக்கும்.''
""அது எப்படி?''
""தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் (திருக்குறள் 619) அதாவது விதி நமக்கு உதவமுடியாது 
போனாலும், முயற்சி நம் உழைப்பிற்கான கூலியைக் கொடுத்துவிடும்.
எனக்கு நம்பிக்கையில்லை. ஒரு வாரம் கழித்து மற்றொரு நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. 
""விளக்கக் கூட்டமெல்லாம் வேண்டாம். நேரே வந்து எங்கள் ஆர்டரை எடுத்துக் கொள்ளுங்கள்.''
நேரில் சந்தித்தபோது அந்த நிறுவனத் தலைவர் சொன்னார். ""அன்று அந்தக் கார்ப்பரேட் நிறுவனத்தில் நீங்கள் நிகழ்த்திய விளக்கக்
கூட்டத்தின் வீடியோவைப் பார்த்தேன். உங்கள் மென்பொருள் அற்புதமானது. அது போன்ற ஒன்றைத்தான் நான் தேடிக்கொண்டிருந்தேன்.''
நண்பர் காதில் கிசுகிசுத்தார். ""வள்ளுவர் சொன்னது உண்மையாகிவிட்டது பார்த்தாயா?''
நாம் செய்யும் எந்த நல்ல செயலும் வீணாகாது. நாம் எடுக்கும் எந்த முயற்சியும் பலன் கொடுக்காமல் போகாது. தவம் செய்த அந்த மனிதனைப் போல் கடைசி நேரத்தில் தவறினாலும் நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினாலே போதும். நமக்கு மகிழ்ச்சி தான்.
இரண்டு நண்பர்கள் எப்படியாவது ஐ.ஏ.எஸ் ஆகிவிடவேண்டும் என்று விழுந்து விழுந்து படித்தார்கள். பல முறை தேர்வு எழுதினார்கள். வெற்றி பெறவில்லை. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலும், நேர்காணலில் தோற்று விடுவார்கள். இப்படியே சில ஆண்டுகள் ஓடிவிட்டன. 
"இது வேலைக்கு ஆகாது' என்று இருவரில் ஒருவர் கழன்று கொண்டார். திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட்டார். அடுத்தவர் விடவில்லை... பயிற்சி மையத்தை மாற்றி, இன்னும் கடுமையாகப் படித்து அடுத்த ஆண்டே வெற்றி பெற்றார். இன்று மாவட்ட ஆட்சியராக இருக்கிறார். கைவிட்டவரோ, தனியார் நிறுவனத்தில் ஊழியராகக் காலம் தள்ளுகிறார்.
முயற்சிகள் தவறலாம். முயற்சிக்கத் தவறாதீர்கள். பரந்தாமன் நமக்குச் செய்து கொடுத்த சத்தியம் இது:
அவனுக்கு (முயற்சிப்பவனுக்கு) இவ்வுலகிலும் மேலுலகத்திலும் அழிவில்லை. மகனே நன்மை செய்வோன் எவனும் கெடமாட்டான். (பகவத் கீதை 6- 40)