Thursday, March 21, 2013

மனதற்ற பரிசுத்த நிலை அருள்வாய்".

 
கடவுளின் மகத்துவத்தை உணர்ந்தவர்க்கு அதன் பின் உலகத்தின் பிற விஷயங்களில் உள்ள நாட்டம் போய்விடும். தன் இஷ்ட தெய்வமான திருமாலைப் போற்றிப் பாடும் தொண்டரடி பொடியாழ்வாரும்.
..இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
என்று பாடுகிறார்.
இதையே மாற்றி சொல்வதானால் அவன் படைப்பில் உள்ள பிறவிஷயங்களில்- இந்திர லோகமே ஆயினும்- மனம் நாட்டம் கொள்ளும் வரை இறைவன்பால் நாம் சொல்லிக்கொள்ளும் பக்தி பூரணமானதல்ல. ஒருவிதத்தில் அவை ஒரு நிபந்தனைக்குட்பட்டது (conditional) என்றே சொல்லலாம். பூரண சரணாகதி வரும் பொழுது மட்டுமே அஞ்ஞானம் ஒழிந்து ஞானம் பிறக்கிறது. இதையே mutually exclusive என்கிறோம். இருளும் ஒளியும் போல.
இந்த உண்மையை ஒரு எறும்பின் செயலை வைத்துச் சொல்லுகிறார் கபீர்.
தினைதனை ஈர்த்த உழுவம், வழியில் கண்டது முரியும்
உரைப்பன் ஈங்கு கபீரும், இரண்டில் ஒன்றே முடியும்

( உழுவம் =எறும்பு, ஈர்த்தல்= இழுத்தல், முரி =அரிசி நொய் ) அரிசி தூக்கிச் செல்லும் எறும்பு வழியில் காணும் பருப்புக்கு ஆசைப்பட்டால் இரண்டும் இல்லாமல் போகும் அபாயம் உண்டு( தோ ந மிலை) என்று கபீர் எச்சரிக்கிறார். அதாவது அந்த எறும்பு மாற்றி மாற்றி சிறிது சிறிதாக இரண்டையும் இழுத்துச் செல்ல பார்க்குமாம். அப்படி செய்யும் போது் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது வேறு எறும்புகள் இரண்டையும் தூக்கிச் சென்றுவிடுமாம்.

எறும்பின் சக்திக்கு தினை அல்லது அரிசி இரண்டில் ஒன்றை மட்டுமே எடுத்து செல்ல முடியும். அதுபோல நாம் பிறவி எடுத்ததன் பலன் இறைவன் பால் திரும்ப வேண்டுமானால் இயற்கையின் ஈர்ப்புகளுக்கு மனதில் இடம் கொடுக்கக்கூடாது என்பதே மகான்களின் அறிவுரை. அதனால் தான்

"ஆசைக்கோர் அளவில்லை; அகிலமெல்லாம் கட்டி ஆளினும் அலைகடல் மீதே ஆணை செலவே நினைவர் ; அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் ; நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இன்னுங் காயகற்பம் தேடி நெஞ்சு புண்ணாவர்; ............ ஒன்று விட்டு ஒன்று பற்றி பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற பரிசுத்த நிலை அருள்வாய்".
என்று பரிபூரணானந்தத்தில் தாயுமானவர் வேண்டுகிறார்