Monday, August 17, 2015

ஈஸ்வரப்பட்ட மகரிஷியின் வாக்கு...

புகழ் கண்டு மயங்காதே
புகழ் தேடிச் செல்லாதே
புகழாரம் பாடாதே

இன்னல் கண்டு கலங்காதே
இகழ்ச்சி கண்டு பதறாதே 
இகழ்ந்துரைக்க எண்ணாதே

Wednesday, July 8, 2015

ஓஷோவின் விளக்கம்


தியானயுக்திகள்
1.திடீரென விழிப்புணர்வடை
கோபமாக இருக்கும்போதுகூட திடீரென நீ அதைப்பற்றிய விழிப்புணர்வு அடைந்தால் அது விழுந்துவிடும். முயற்சி செய்து பார். கோபம் உச்சியில் இருக்கும்போது, யாரையாவது கொலை செய்துவிடலாம் என்பது போல மிகவும் சூடாக இருக்கும் சமயம் திடீரென விழிப்படை, அப்போது ஏதோ ஒன்று மாறுதலடைவதை நீ உணர்வாய். ஒரு நிலைமாற்றம் – ஒரு அசைவை உன்னால் உணர முடியும். ஏதோ ஒன்று மாறும், இப்போது அது முன்பு இருந்ததுபோல இருக்காது, உன்னுடைய உள் இருப்பு நிலை தளர்வு பெற்று விட்டது, உனது வெளி வட்டம் தளர்வு பெற சிறிது நேரம் பிடிக்கலாம், ஆனால் உனது உள்ளிருப்பு ஏற்கனவே தளர்வடைந்துவிட்டது. அந்த தொடர்பு அறுந்து விட்டது, இப்போது நீ அதனுடன் அடையாளப்படுவதில்லை.
2.புகை பிடித்தலை தியானமாக செய்
எவிவளவு புகை பிடிக்க விரும்புகிறாயோ அவ்வளவு புகை பிடி. ஆனால் அதை தியானமாக செய். ஜென் மக்கள் டீ குடித்தலை தியானமாக செய்யும்போது ஏன் நீ புகை பிடித்தலை தியானமாக செய்யக்கூடாது உண்மையில் சிகரெட்டில் என்ன பொருள் உள்ளதோ அதுவேதான் டீயிலும் உள்ளது. அதே தூண்டும் பொருள்தான் சிகரெட்டிலும் உள்ளது. அதிக வித்தாயாசமில்லை. புகை பிடித்தலை தியானமாக செய், மிகவும் பக்தியோடு செய். அதை ஒரு பிரார்த்தனையாக மாற்று.
3.சுவாசத்தையும் வயிற்றையும் லயப்படுத்திக்கொள்
சுவாசத்தைப் பற்றிய விழிப்பு கொள். சுவாசம் உள்ளே போகும்போது வயிறு வெளியே வரும், சுவாசம் வெளியே வரும்போது வயிறு உள்ளே போகும்.
வயிறு உள்ளே போவதையும் வெளியே வருவதையும் பற்றிய கவனம் கொள். மேலும் வயிறு உனது வாழ்வின் ஆதாரத்துடன் மிக நெருங்கி உள்ளது, ஏனெனில் ஒரு குழந்தை தனது தாயுடன் தொப்புள் மூலமாகத்தான் இணைக்கப்பட்டுள்ளது. அந்த தொப்புளில்தான் அவனது வாழ்வின் ஆதாரமே உள்ளது. அதனால் வயிறு வெளியே வரும்போது அது உண்மையிலேயே அது வாழ்வின் சக்தி, வாழ்வின் வசந்தம் எழுவதும் வீழ்வதும் ஒவ்வொரு சுவாசத்திலும் இருக்கிறது. நீ வயிறை பற்றிய உணர்வு அதிகம் பெற பெற மனம் அதிக அமைதியடையும், இதயம் சாந்தமாகும், மனோநிலை மாற்றமடையும், காணாமல் போகும்.
போதிதர்மரின்வழிகள் – ஓஷோவின் கதை - 43 - பகுதி - 1
புத்தருக்கு 600 ஆண்டுகளுக்குப் பிறகு போதி தர்மர் சீனா போய் சேர்ந்த பொழுது அங்கு ஏற்கனவே 30,000 புத்தமத கோவில்களும் மடாலயங்களும் மேலும்2,00,000 புத்த பிட்சுக்களும் சீனாவிலிருந்தனர். இரண்டு லட்சம் புத்த பிட்சுக்கள் எனபது சிறிய எண்ணிக்கையல்ல. அது சீனாவின் மொத்த மக்கள் தொகையில்சதவிகிதம்.
பிரயக்தாரா, போதிதர்மருடைய குரு, அவரை சீனாவுக்கு அனுப்பினாள், ஏனெனில் அவருக்கு முன்பு சீனாவுக்கு சென்ற மக்கள் ஞானமடைந்தவர்களாக இல்லாத போதிலும் ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தனர். அவர்கள் சிறந்த பண்டிதர்கள், மிகவும் கட்டுக்கோப்பான மக்கள், மிகவும் அன்பானவர்கள், அமைதியானவர்கள், கருணை கொண்டவர்கள் ஆனால் யாரும் ஞானமடைந்தவர்களல்ல. மேலும் இப்போது சீனாவுக்கு இன்னொரு கௌளதமபுத்தர் தேவைப்பட்டார், நிலம் தயாராயிருந்தது. சீனாவை சென்றடைந்த முதல் ஞானமடைந்த மனிதர் போதிதர்மர்தான்.
நான் தெளிவாக்க விரும்பும் விஷயம் என்னவென்றால் கௌளதமபுத்தர் அவருடைய சங்கத்தில் பெண்களுக்கு தீட்சையளிக்க அச்சப்பட்டார். போதிதர்மர் கௌளதமபுத்தரின் பாதையில் வந்த போதிலும் ஒரு பெண்ணால் தீட்சை பெறும் அளவுக்கு தைரியமுடையவராயிருந்தார். அங்கு மற்ற ஞானமடைந்த மக்கள் இருந்தனர். ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்தார். இந்த காரணம் என்னவென்றால் ஒரு பெண்ணாலும் ஞானமடைய முடியும், அது மட்டுமல்ல, அவளுடைய சீடர்களும் ஞானமடைய முடியும் என்பதை காட்டுவதற்காகவே. எல்லா புத்தமத ஞானமடைந்த மக்களுக்கிடையிலும் போதிதர்மர் பெயர் தனித்து நிற்கிறது. அது கௌளதமபுத்தருக்கு அடுத்ததாக இருக்கிறது.
இந்த மனிதரைப்பற்றி பல செவிவழி செய்திகள் உள்ளன. அவை அனைத்திலும் ஏதோ ஒரு முக்கியத்துவம் உள்ளது.
முதல் செவிவழி செய்தி : அவர் சீனாவை அடைந்தபோது - சீனாவை சென்றடைய அவருக்கு மூன்றாண்டுகள் ஆயின. – அவரை வரவேற்க சீனப்பேரரசர் வூ வந்திருந்தார். போதிதர்மருடைய புகழ் அவருக்கு முன்பாக அங்கு சென்றடைந்திருந்தது. பேரரசர் கௌதமபுத்தருடைய தத்துவத்திற்கு சிறந்த சேவை செய்திருந்தார். ஆயிரக்கணக்கான பண்டிதர்கள், புத்தமத புத்தகங்களை பாலிமொழியிலிருந்து சீனமொழிக்கு மொழிபெயர்த்துக் கொண்டிருந்தனர், மேலும் பேரரசர் மொழிபெயர்ப்புகளுக்கு ஒரு சிறந்த காவலராக விளங்கினார். அவர் ஆயிரக்கணக்கான கோவில்கள் மற்றும் மடாலயங்களை கட்டியிருந்தார். மேலும் அவர் ஆயிரக்கணக்கான பிட்சுக்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தார். அவர் அவருடைய முழு பொக்கிஷத்தையும் கௌதமபுத்தரின் சேவைக்காக செலவழித்துக் கொண்டிருந்தார். அதனால் போதிதர்மருக்கு முன்பு அங்கு சென்ற புத்தபிட்சுக்கள் அனைவரும் பேரரசரிடம் அவர் பெரிய புண்ணியத்தை சம்பாதித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் சொர்க்கத்தில் ஒரு கடவுளாக அவதரிப்பார் எனவும் சொல்லி வந்திருந்தனர்.
எனவே அவர் போதிதர்மரிடம் கேட்ட முதல் கேள்வியே, நான் பல மடாலயங்களை கட்டியுள்ளேன், பல பண்டிதர்களுக்கு உணவளித்து வருகிறேன், புத்த தத்துவங்களை படிப்பதற்காக நான் ஒரு பல்கலைகழகத்தையே நிறுவியுள்ளேன், நான் இந்த முழு பேரரசையும் அதன் பொக்கிஷங்களையும் கௌதமபுத்தரின் சேவைகளுக்காக அர்ப்பணித்துள்ளேன். அதற்குப் பரிசாக எனக்கு என்ன கிடைக்கும்?” என்பதாக இருந்தது.
போதிதர்மரைப் பார்த்து அவருக்கு சிறிது அதிர்ச்சியாகவே இருந்தது. மனிதர் இப்படி இருப்பார் என அவர் நினைக்கவேயில்லை. போதிதர்மர் மிகவும் கோபக்காரராக காட்சியளித்தார். அவர் மிகப்பெரிய கண்களை கொண்டிருந்தார். ஆனால் அவர் ஒரு மென்மையான மலர் போன்ற இதயத்தை – ஒரு தாமரை மலரை போன்ற இதயத்தை – கொண்டிருந்தார். ஆனால் அவருடைய முகம் உன்னால் எவ்வளவு அபாயகரமாக கற்பனை செய்ய முடியுமோ அவ்வளவு கடுமையானதாக காட்சியளித்தது. ஒரு கண்ணாடி போட்டிருந்தால் அவர் ஒரு மாபியாகும்பல்காரரைப் போல இருந்திருப்பார்.
மிகுந்த அச்சத்துடன் பேரரசர் வூ அந்த கேள்வியை கேட்டார். அதற்கு போதிதர்மர்,எதுவுமில்லை, எந்த பரிசுமில்லை அதற்கு பதிலாக நீ ஏழாவது நரகத்தில் விழ தயாராக இரு என்று கூறினார். பேரரசர்,நான் எந்த தவறும் செய்யவில்லையே? எதற்காக ஏழாவது நரகம்? புத்த பிட்சுக்கள் கூறும் எல்லாவிஷயங்களையும் நான் செய்து வருகிறேனே என்று கேட்டார். அதற்கு போதிதர்மர்,நீ உன்னுடைய சொந்த குரலை கேட்கத் தொடங்கும்வரை உனக்கு யாரும் உதவ முடியாது. அது புத்த மதத்தை சேர்ந்தவர்களாயினும் சரி, சேராதவர்களாயினும் சரி. மேலும் நீ இன்னும் உனது உள் குரலை கேட்கவில்லை. நீ அதைக் கேட்டிருந்தால் நீ இப்படி முட்டாள்தனமான கேள்வியை கேட்டிருக்க மாட்டாய்.
கௌதமபுத்தரின் பாதையில் எந்த வெகுமதியும் கிடையாது. ஏனெனில் வெகுமதிக்கான ஆசையே ஒரு பேராசையாக மனதிலிருந்துதான் வருகிறது. கௌதமபுத்தரின் முழு கற்பித்தலும் ஆசையற்ற தன்மையே. மேலும் புண்ணிய செயல்கள் என்று கூறப்படும் கோவில்கள் மற்றும் மடாலயங்கள் கட்டுதல், ஆயிரக்கணக்கான துறவிகளுக்கு உணவிடுதல் போன்ற எல்லா செயல்களும் உள் மனதில் ஒரு ஆசையோடு நீ செய்திருந்தால் நீ நரகத்தை நோக்கிச் செல்லும் உனது பாதையை தயார் படுத்துகிறாய். நீ இந்த செயல்களை உனது ஆனந்தத்தின் விளைவாக, உனது ஆனந்தத்தை முழு பேரரசுடன் பகிர்ந்து கொள்ளும் விதமாக செய்தால், எந்த வெகுமதிக்குரிய ஒரு சிறு ஆசைகூட உனக்கு இல்லாமல் இருந்தால் அந்த செயலே அந்த செயலின் வெகுமதியாகும். இல்லாவிடில் நீ முழுவிஷயத்தையும் தவறவிட்டுவிடுகிறாய். என்றார்.
பேரரசர் வூ,என் மனது எண்ணங்களால் நிரம்பி வழிகிறது. நான் எனது மனதை அமைதிபடுத்த முயன்று வருகிறேன், ஆனால் நான் தோற்றுவிடுகிறேன். இந்த எண்ணங்களாலும் அதன் சத்தத்தின் காரணமாகவும் நீங்கள் உள்குரல் என்று கூறும் விஷயத்தை என்னால் கேட்க முடியவில்லை. எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. “ என்று கூறினார்.
போதிதர்மர்,அப்படியென்றால் நாளை அதிகாலை மணிக்கு நான் மலையில் தங்கப்போகும் இடத்திற்க்கு எந்த மெய்க்காப்பாளனும் இல்லாமல் தனியாக வா. அங்கு நான் உனது மனதை எப்போதும் அமைதியோடு இருப்பதாக ஆக்கிவிடுகிறேன்“ என்று கூறினார்.
பேரரசர் இந்த மனிதர் உண்மையிலேயே வரம்புமீறிய மூர்க்கத்தனமானவர் என்று எண்ணினார். அவர் ஏராளமான பிட்சுக்களை சந்தித்திருக்கிறார். அவர்கள் மிகவும் பரிவு காட்டுபவர்கள். ஆனால் இவரோ ஒரு பெரிய தேசத்தின் பேரரசர் என்று கூட கவலைப்படவில்லை. மேலும் அதிகாலை இருட்டில் மணிக்கு அவரிடம் செல்வது என்பது............... மேலும் இந்த மனிதன் ஆபத்தானவனாக தோன்றுகிறான். போதிதருமர் எப்போதும் தன்னுடன் ஒரு கைத்தடியை வைத்திருப்பார். பேரரசர் முழு இரவும் தூங்கவில்லை. போவதா? வேண்டாமா? இந்த மனிதன் என்ன வேன்டுமானாலும் செய்யக்கூடும், அவர் நம்பமுடியாத மனிதராக தோன்றுகிறார் மற்றும் இன்னொரு பக்கம் அவரது இதயத்தின் ஆழத்தில் அவர் போதிதருமருடைய நேர்மையை உணர்ந்தார். அவர் நடிப்பவரல்ல, அவர் நீ ஒரு அரசர், தான் ஒரு புத்தபிட்சு என்பதைப்பற்றி ஒரு துளிகூட கவலைப்படவில்லை. அவர் தான் ஒரு பேரரசர் போலவும் அவருக்கு முன்பு நீ ஒரு பிச்சைக்காரன் என்பது போலவும் நடந்து கொள்கிறார். நான் உனது மனதை எப்போதும் அமைதியாக இருக்கும்படி செய்துவிடுகிறேன் என்று சொன்ன விதமும்......
பேரரசருக்கு புதிராயிருக்கிறது, ஏனெனில் இந்தியாவிலிருந்து வரும் ஞானவான்களை கேட்டு வருகிறேன். அவர்கள் அனைவரும் எனக்கு யுக்திகளையும் வழிமுறைகளையும் அளித்தனர், அவற்றை நான் பயிற்சி செய்து வருகிறேன், ஆனால் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் இந்த புதிய மனிதன் கிட்டத்தட்ட ஒரு கிறுக்கனைப்போல, மது அருந்தியவனைப்போல, அவ்வளவு பெரிய கண்களையுடைய, பயத்தை உருவாக்கக்கூடிய ஒரு வித்தியாசமான முகத்தைக் கொண்டவராக இருக்கிறார். ஆனால் அவர் நேர்மையானவராகவும் தோன்றுகிறார். அவர் ஒரு காட்டுத்தனமான மனிதன். ஆனால் இந்த அபாயம் தகுதியுடையதே.! அவர் என்ன செய்யக்கூடும், அதிகபட்சம் அவர் என்னைக் கொல்ல முடியும் என்று எண்ணினார். முடிவில் அவரால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. ஏனெனில் அந்த மனிதன் நான் உனது மனதை எப்போதும் அமைதியாக இருக்கும்படி செய்துவிடுகிறேன் என்று வாக்களித்துள்ளார்.
பேரரசர் வூ அதிகாலை 4 மணிக்கு தனியாக இருளில் அவரது இடத்தைச் சென்றடைந்தார். அந்த கோவில் படிகளில் போதிதர்மர் அவருடைய தடியுடன் நின்று கொண்டிருந்தார், அவர்,இரவு முழுவதும் போவதா வேண்டாமா என்று குழம்பினாலும் நீ வருவாய் என எனக்குத் தெரியும். ஒரு ஏழை பிட்சுவைப் பார்த்து, ஒரு ஏழை பிச்சைக்காரனைப்பார்த்து, இந்த உலகத்தில் ஒரு தடியைத் தவிர ஏதும் இல்லாதவனைப் பார்த்து இவ்வளவு பயப்படும் நீ எப்படிப்பட்ட பேரரசன் ?நான் இந்த தடியை வைத்து உனது மனதை அமைதியாக்கப் போகிறேன்.  என்று கூறினார்.
பேரரசர்,கடவுளே ஒரு தடியை வைத்து மனதை அமைதிபடுத்துவதை யாராவது எப்போதாவது கேள்விபட்டதுண்டா? அவனை முடித்துவிடலாம், தலையில் ஓங்கி அடிக்கலாம், பிறகு முழு மனிதனும் அமைதியாகிவிடுவான். ஆனால் மனம் அமைதி அடையாதே. ஆனால் இப்போது திரும்பி போவது என்பது முடியாத காரியம் என எண்ணினார்.
போதிதர்மர்,இங்கே கோவில் வராண்டாவில் உட்கார், சுற்றிலும் ஒரு மனிதன் கூட இல்லை, கண்களை மூடிக்கொள், உனக்கு முன்னால் நான் எனது தடியுடன் உட்கார்ந்து கொள்கிறேன். மனதை பிடிப்பதே உனது வேலை. வெறுமனே உனது கண்களை மூடிக்கொண்டு உள்ளே சென்று அது எங்கே இருக்கிறதென்று தேடு. நீ அதனை பிடிக்கிற நொடியில் வெறுமனே எனக்கு அது இங்கே இருக்கிறதென்று கூறு, மற்றதை எனது தடி பார்த்துக்கொள்ளும்என்று கூறினார்.
உண்மையை, அமைதியை, மௌனத்தை தேடும் தேடுதலையுடையவன் அடையக்கூடிய, அடைந்த அனுபவங்களிலேயே மிகவும் வித்தியாசமான அனுபவம் அது. பேரரசர் வூக்கு இப்போது வேறு வழியில்லை. கண்களை மூடி அங்கே அமர்ந்தார். போதிதர்மர் சொல்வதை செய்யக்கூடியவர் என்பதை பேரரசர் நன்றாக உணர்ந்தார். அவர் தன்னுள்ளே எல்லாபக்கமும் தேடினார், அங்கு மனமில்லை. அந்த தடி அதன் வேலையை செய்துவிட்டது.
முதன்முறையாக அவர் அப்படி ஒரு சூழலில் இருந்தார். செய்தாகவேண்டும்
...... நீ மனதை ஒருவேளை கண்டுபிடித்தால், இந்த மனிதன் அவருடைய தடியை வைத்து என்ன செய்யப்போகிறார் என்று உனக்குத் தெரியாது. மேலும் அந்த மௌனமான மலைப்பகுதியில், போதிதர்மருடைய இருப்பில்.... அவருக்கென ஒரு சக்தி வட்டமிருந்தது....... பல ஞானமடைந்த மக்கள் இருந்திருக்கிறார்கள், ஆனால் போதிதர்மர் தனியாக எதிலும் ஒட்டாமல் எவரெஸ்ட் சிகரம் போல தனித்து நிற்கிறார். அவருடைய ஒவ்வொரு செயலும் தனித்துவமானது மற்றும் ஆணித்தரமானது. அவருடைய ஒவ்வொரு அசைவும் அவருடைய சொந்த கையெழுத்தைக் கொண்டது, அது கடன் வாங்கப்பட்டதல்ல.
பேரரசர் மனதை கடுமையாகத் தேடினார், ஆனால் முதன்முறையாக அவரால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒரு சிறிய தந்திரம். நீ ஒருபோதும் உன் மனதை தேடாததால் மட்டுமே அது அங்கே இருக்கிறது. நீ ஒருபோதும் அதைப்பற்றிய விழிப்புணர்வோடு இருப்பதில்லை என்பதாலேயே அது அங்கே இருக்கிறது. நீ அதைத் தேடும்போது, நீ அதைப்பற்றிய விழிப்புணர்வோடு இருக்கும்போது விழிப்புணர்வு நிச்சயமாக அதனை முழுமையாக கொன்று விடுகிறது.
மணிநேரங்கள் கடந்துவிட்டன. சூரியன் மௌனமாக மலைகளின் மீது, ஒரு குளிர்ந்த தென்றலுடன் உதயமாகிக்கொண்டிருக்கிறான். போதிதர்மரால் பேரரசர் வூ வின் முகத்தில் அப்படி ஒரு அமைதியையும், அப்படியொரு மௌனத்தையும், அப்படியொரு அசைவற்ற தன்மையையும் அவர் ஒரு சிலையைப் போல இருப்பதையும் பார்க்க முடிந்தது. போதிதர்மர் வூ வை உலுக்கி, நிறைய நேரமாகிவிட்டது. நீ மனதை கண்டுபிடித்துவிட்டாயா?” என்று கேட்டார்.
பேரரசர் வூ,உங்களது தடியை உபயோகிக்காமலேயே நீங்கள் எனது மனதை முழுமையாக அமைதிபடுத்திவிட்டீர்கள். எனக்கு எந்த மனமுமில்லை, நீங்கள் கூறிய உள் குரலை நான் கேட்டேன். இப்போது நீங்கள் கூறியது சரி என்று நான் உணர்கிறேன். எதையும் செய்யாமலேயே நீங்கள் என்னை நிலை மாற்றமடையச் செய்துவிட்டீர்கள். இப்போது எல்லா செயல்களுக்கும் அதைச் செய்வதே அதன் வெகுமதியாக இருக்க வேண்டும், இல்லாவிடில் அதனை செய்ய வேண்டியதில்லை என்று நான் உணர்ந்து கொண்டேன். உனக்கு வெகுமதியளிக்க அங்கு யார் இருக்கிறார்கள்? இது ஒரு குழந்தைதனமான சிந்தனை, அங்கு தண்டனை கொடுக்க யார் இருக்கிறார்கள்? உன்னுடைய செயலே தண்டனை. உன்னுடைய செயலே வெகுமதி. நீ சென்றடையும் இடத்தை தீர்மானிக்கும் அதிகாரம் உன்னிடமே உள்ளது என்பதை நான் அறிவேன் இப்போது. என்று கூறினார்.
போதிதர்மர், நீ ஒரு அபூர்வமான சீடன். வெறும் ஒரு அமர்தலிலேயே மனதின் எல்லா இருட்டும் மறைந்துவிடும் அளவிற்கு விழிப்புணர்வையும் மிகுந்த ஒளியைக் கொண்டுவரும் துணிச்சலும் உள்ள மனிதனாக இருக்கிறாய். நான் உன்மீது அன்பு செலுத்துகிறேன், நான் உன்னை மதிக்கிறேன், ஆனால் ஒரு பேரரசனாக அல்ல. என்று கூறினார்.
வூ அவரை அரண்மனைக்கு வருமாறு வற்புறுத்தினார். போதிதர்மர், “அது என்னுடைய இடமல்ல, நான் காட்டுத்தனமானவன். நான் என்ன செய்வேன் என்று எனக்கேத் தெரியாது என்பதை நீ பார்க்கலாம். நான் நொடிக்கு நொடி இயல்பாக வாழ்கிறேன். நான் மிகவும் கணிக்க இயலாதவன். நான் தேவையில்லாமல் உனக்கும் உனது சபைக்கும் உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் பிரச்னைகளை உருவாக்கலாம். நான் அரண்மனைகளுக்காக ஆக்கப்பட்டவனல்ல. என்னை என்னுடைய காட்டுத்தனத்தில் வாழவிடு.” என்று கூறினார்.

Friday, June 12, 2015

பில்வாஷ்டகம்..

த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம்

ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்பணம்.


த்ரிஸாகைர் பில்வ பத்ரைஸ்ச அர்ச்சித்ரை: கோமலை ஸுபை:
தவ பூஜாம் கரிஷ்யாமி ஏக பில்வம் ஸிவார்பணம்.

கோடிகன்யாமஹாதானம் கில பர்வத - கோடய:
காஞ்சனம் ஸீலதாநேந ஏக பில்வம் ஸிவார்பணம்.

காஸிஷேத்ர நிவாஸம் ச காலபைரவ தர்ஸனம்
ப்ரயாகே மாதவம் த்ருஷ்ட்வா ஏக பில்வம் ஸிவார்பணம்.

இந்துவாரே வ்ரதம் ஸ்தித்வா நிராஹாரோ மஹேஸ்வர:
நக்தம் கௌஷ்யாமி தேவேஸ ஏக பில்வம் ஸிவார்பணம்.

ராமலிங்க ப்ரதிஷ்டா ச வைவாஹிக க்ருதம் ததா
தடாகாதி ச ஸந்தானம் ஏக பில்வம் ஸிவார்பணம்.

அகண்ட பில்வபத்ரம் ச ஆயுதம் ஸிவபூஜனம்
க்ருதம் நாம ஸஹஸ்ரேண ஏக பில்வம் ஸிவார்பணம்.

உமயா ஸஹதேவே ச நந்தி வாஹனமேவ ச
பஸ்மலேபன ஸர்வாங்கம் ஏக பில்வம் ஸிவார்பணம்.

ஸாலக்ராமேஷு விப்ராணாம் தடாகம் தஸகூபயோ:
யஞ்ஜகோடி ஸஹஸ்ரம் ச ஏக பில்வம் ஸிவார்பணம்.

தந்திகோடி ஸஹஸ்ரேஷு அஸ்வமேத ஸதக்ருதௌ
கோடிகன்யா மஹாதானம் ஏக பில்வம் ஸிவார்பணம்.

பில்வானாம் தர்ஸனம் புண்யம் ஸ்பர்ஸனம் பாபநாஸனம்
அகோர பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்பணம்.

ஸஹஸ்ர வேத பாடேஷு ப்ரஹ்ம ஸ்தாபனமுச்யதே
அநேக வ்ரத கோடீனாம் ஏக பில்வம் ஸிவார்பணம்.

அந்நதான ஸஹஸ்ரேஷு ஸஹஸ்ரோபநயனம் ததா
அனேக ஜன்ம பாபாநி ஏக பில்வம் ஸிவார்பணம்.

பில்வாஷ்டகம் இதம் புண்யம் ய: படேத் ஸிவஸந்நிதௌ
ஸிவலோக மவாப்நோதி ஏக பில்வம் ஸிவார்பணம்.

பில்வாஷ்டகம் ஸம்பூர்ணம்.

Monday, June 1, 2015

ராமகிருஷ்ணர்: கிரீச சந்திரகோஷர்

ஒருவனிடத்துள்ள அறிவு, அவன் அடைந்துள்ள பண்பாடு யாவும் அவன் பழகும் நண்பரையும், அவன் வாழும் சூழ்நிலையையும் பொறுத்து உருவாகின்றது... தான் தெய்வத் தன்மை வாய்ந்தவன் என்பதை மனிதன் தெரிந்து கொள்ளுவதில்லை. மனிதனிடத்து மறைந்து கிடக்கும் தெய்வத் தன்மையை வெளிப்படுத்த உதவுவதே சமயம்... காந்தத்தைச் சார்ந்த இரும்பானது காந்த மயமாக மாறியமைவதைப் போல, சான்றோரைச் சார்ந்த கொடியவனும் நாளடைவில் சான்றோனாக மாறியமைகின்றான்... கிரீச சந்திரகோஷரிடம், "நீ செய்யும் செயல்கள் அனைத்தையும் நினைவு வரும்பொழுது மட்டும் எனக்கு அர்ப்பணம் செய்துவிடு" என்றார் ராமகிருஷ்ணர்.
சேரிடம் அறிந்து சேர் என்பது கோட்பாடு. சார்ந்தவன் வண்ணமாதல் உயிர்களின் இயல்பு. தீயைச் சார்ந்த இரும்பானது தீமயமாக மாறியமைகின்றது. ஒன்றுக்கும் உதவாத கரி தீயுடன் சேருமிடத்துத் தீயின் தன்மையைப் பெறுகின்றது. நிலத்திற்கேற்ப நீரின் தன்மை வேறுபடுகின்றது. நல்ல நிலத்தில் தூய நன்னீரும், உவர் நிலத்தில் உப்பு நீரும் இருக்கக் காணுகின்றோம். இந்த உண்மை மானுட வாழ்விற்கும் பொருந்துவதாகும். மனிதனுடைய சேர்க்கைக்கேற்ப அவனுடைய வாழ்வு மாறியமைகின்றது. ஒருவனிடத்துள்ள அறிவு, அவன் அடைந்துள்ள பண்பாடு யாவும் அவன் பழகும் நண்பரையும், அவன் வாழும் சூழ்நிலையையும் பொறுத்து உருவாகின்றது. சேர்க்கைக்கேற்ப ஒருவனுடைய வாழ்வு மேலானதாகவோ அல்லது கீழானதாகவோ வடிவெடுக்கின்றது.
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு
என்பது மறைமொழி.
ஆடுகளுக்கிடையில் வளர்ந்து வந்த சிங்கக்குட்டி ஆடுகளைப்போலவே நடந்துகொள்ளவும் ஆடுகளைப்போலவே கத்தவும் செய்ததாகக் கேட்டிருக்கின்றோம். ஆற்றலே வடிவெடுத்த சிங்கம் ஆடுகளுடன் வளர்ந்த காரணத்தால் ஆடுகளின் இயல்பைப் பெற்றுவிட்டது. சிங்கத்தின் ஆற்றல் அதனிடத்திருந்து அழிந்து போய்விடவில்லை. ஆற்றல்கள் அனைத்தும் அதனிடத்திலே மறைந்து கிடக்கின்றன. தன்னுடைய நிஜசொரூபத்தை அறியாத காரணத்தால் அது தன்னையும் ஆட்டு இனத்துடன் சேர்த்துக்கொண்டு ஆடுகளைப் போலவே வாழ ஆரம்பித்து விட்டது. இவ்வாறு ஆடுகளுக்கிடையில் வளர்ந்து வந்த சிங்கத்தை மற்றொரு சிங்கம் கண்டது. அதன் பரிதாபகரமான நிலையினைக் கண்டு இரக்கமும், ஆச்சரியமும் கொண்டது. உடனே அதை அப்பால் கடத்திச் சென்றது. அதனுடைய நிஜசொரூபத்தை அதற்கு எடுத்துப் புகட்டிற்று. நீ அவைகளைப்போன்று ஆட்டு இனத்தைச் சார்ந்தவனன்று. என்னைப்போன்று சிங்கத்தின் இனத்தைச் சார்ந்தவன் என்று உணர்த்திற்று. தன்னுடைய நிஜசொரூபத்தை அறிந்த அதனிடத்து மறைந்து கிடந்த ஆற்றல்கள் வெளிப்படலாயின. உடனே அது கர்ஜிக்கவும் செய்தது.
ஒவ்வொரு மனிதனிடத்தும் தெய்வீக இயல்புகள் புதைந்து கிடக்கின்றன. மனிதனிடத்து மறைந்து கிடக்கும் தெய்வத்தன்மையை வெளிப்படுத்த உதவுவதே சமயம். ஆனால் இந்த மேலாம் உண்மையை மனிதன் உணர்ந்து கொள்வதில்லை. தான் தெய்வத் தன்மை வாய்ந்தவன் என்பதை அவன் தெரிந்து கொள்ளுவதில்லை. தான் ஆற்றல்கள் அனைத்தின் உறைவிடம் என்பதையும் அவன் அறிந்து கொள்ளுவதில்லை. ஒவ்வொரு மனிதனும் தன்னை ஓர் அற்ப ஜீவனாகவே கருதுகிறான். என்னால் என்ன ஆகும் என்று எண்ணுகிறான். தன்னம்பிக்கை என்பது அவனிடத்துக் கொஞ்சமும் இருப்பதில்லை. மக்களுள் பெரும்பாலோர் இந்த இழி நிலையில் இருக்கின்றனர். இவ்வாறு மக்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளுவற்கு அவர்களிடத்துள்ள அறியாமையே காரணமாகும். மக்களிடத்துள்ள இந்த அறியாமையாம் இருளைப் போக்குவதற்கு அவ்வப்பொழுது சான்றோர்கள் பலர் தோன்றுகின்றனர். அவர்கள் மக்களுக்கு அறவுரைகள் பல எடுத்துரைக்கின்றனர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து காட்டுகின்றனர். அச்சான்றோர் காட்டும் செந்நெறியைப் பின்பற்றுவோர் நாளடைவில் சான்றோராக மாறியமைகின்றனர். சான்றாண்மை அவர்களுக்குரிய சொத்தாகின்றது. கெட்டவனும் பெரியோர்களுடன் இருக்கும்பொழுது நல்லவனாகக் கருதப்படுகிறான். நல்லவனும் கெட்டவர்களுக்கிடையே இருக்கும்பொழுது தீயவனாகக் கருதப்படுகின்றான். பனை மரத்தடியில் நின்றுகொண்டு பால் அருந்தினாலும் கள் குடிப்பதாகத்தான் கருதப்படுவான். மாட்டுத் தொழுவத்தில் இருந்து கொண்டு கள் குடித்தாலும் பால் அருந்துவதாகத் தான் எண்ணப்படுவான். காந்தத்தைச் சார்ந்த இரும்பானது காந்தமயமாக மாறியமைவதைப் போல, சான்றோரைச் சார்ந்த கொடியவனும் நாளடைவில் சான்றோனாக மாறியமைகின்றான். சென்ற நூற்றாண்டில் வங்காளத்தில் வாழ்ந்த கிரீச சந்திரகோஷரது வரலாறு இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கு, துறவிகள் மட்டுமின்றி இல்லறத்தாரில் சிலரும் சீடர்களாய் அமைந்தனர். அவர்களுள் கிரீச சந்திரகோஷரும் ஒருவராவார். அவர் நன்கு கற்றவர்; சிறந்த நாடகாசிரியரும், நடிகருமாவார். நாடகம் எழுதுதலிலும், தாம் எழுதிய நாடகத்தை மக்களிடையே திறம்பட நடித்துக்காட்டுதலிலும் வல்லவராய் விளங்கினார். நாடகம் பார்ப்பவர்களைத் தாங்கள் பார்ப்பது நாடகம் என்பதையே மறந்துவிடச் செய்யும் அளவிற்கு அவ்வளவு திறமையாகவும் உருக்கமாகவும் நடித்துக் காட்டுவார். அவர் காலத்தில் வங்காளத்தில் அவருக்கு நிகரான நாடகாசிரியர் வேறொருவருமில்லை எனப் பகரலாம்.
மானுடர் அனைவரிடத்தும் உயர்ந்ததும் தாழ்ந்ததுமான குணங்கள் அமைந்து கிடக்கின்றன. கிரீச சந்திரகோஷரிடமும் நல்லதும் தீயதுமான பலகுணங்கள் தென்பட்டன. அவற்றுள் நற்குணங்கள் எண்ணிக்கையைவிடத் தீய குணங்கள் எண்ணிக்கையே மிகுந்திருந்தன. அவர் ஆற்றிய செயல்களில் நல்ல செயல்களைவிடப் புல்லிய செயல்களே மிகுந்திருந்தன. நெறியற்ற வாழ்வு, கொலை, களவு, போன்ற பயங்கரமான கொடிய செயல்களையும் அவர் தயக்கமின்றிச் செய்திருக்கின்றார். சுருங்கக்கூறின் பஞ்சமா பாதகங்களையும் அவர் புரிந்திருக்கின்றார் என்று பகரலாம்.
சிருஷ்டியில் நிகழும் செயலிலும் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கின்றன. உயிர்கள் அனைத்தும் நன்மை, தீமை இன்ப துன்பம் என்னும் இருமைகளுக்கு உட்பட்டவைகளேயாகும். மக்களால் தீயோரென்று புறக்கணிக்கப் படுபவரிடத்தும் சில நற்குணங்கள் இருக்கக் காணுகின்றோம். கிரீச்சந்திரகோஷரிடத்து அமைந்திருந்த கெட்ட குணங்களுக்கிடையில் நல்ல குணமும் இருந்தது. மானுடர் அனைவரிடத்தும் இருக்கவேண்டிய மிகவுயர்ந்த குணம் ஒன்றை அவர் பெற்றிருந்தார். அதுதான் வாய்மை அல்லது சொன்னசொல் தவறாமையாகும். உலகில் பெரும்பாலான மக்களிடத்து இக்குணத்தைக் காண்பது அரிதினும் அரிதாக இருக்கின்றது. மக்களுள் பெரும்பாலோர் சொல்லுவதொன்றும் செய்வது வேறொன்றுமாகக் காட்சியளிக்கின்றனர். அவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இருப்பதில்லை. வாழ்க்கையில் முன்னேற விரும்பும் ஒருவன் இத்தகையவர்களுடைய தொடர்பைப் புறக்கணிக்க வேண்டும்.
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
என்பது மறைமொழி. ஆனால் கிரீச சந்திரகோஷர் இதற்கு முற்றிலும் நேர்மாறானவர். சொல்லுவதொன்றும் செய்வது வேறொன்றும் அவரிடத்து அறவே கிடையாது. இன்னது செய்வேன் என்று அவர் வாக்குக்கொடுத்து விட்டால் தன்னுடைய உயிரையும் கொடுத்து அவ்வாக்கை நிறைவேற்றி விடுவார். அவர் குடிப்பதிலும், கூத்தாடுதலிலும் வல்லவராய் இருந்தது போலவே சொன்ன சொல்லை நிறைவேற்றுதலிலும் வல்லவராய் விளங்கினார். வாய்மை காக்கும் பெரு வீரராய்த் திகழ்ந்தார். மனம், மொழி, மெய் என்னும் திரிகரணங்களை உடையவன் மனிதன். திரகரணங்களைக் கொண்டு மனிதன் செயல் புரிகின்றான். மனத்திற்கு உள்ளம் என்பது மற்றொரு பெயர். உள்ளத்தால் சத்தியத்தைக் கடைப் பிடிக்குமிடத்து அது உண்மை எனப் படுகின்றது. உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி மொழியுமிடத்து அது வாய்மை எனப் படுகின்றது. மொழியால் மொழிந்ததை மெய்யால் செய்யுமிடத்து அது மெய்ம்மை எனப் படுகின்றது. திரிகரணங்களைக் கொண்டு கடைப் பிடிக்கப்படும் உண்மை, வாய்மை, மெய்ம்மை ஆகிய மூன்றும் சத்தியம் என்னும் ஒரு சொல்லில் அடங்கி விடுகின்றன. சத்தியத்திற்கு நிகரான உயர்ந்த குணம் வேறொன்றுமில்லை. குணங்கள் அனைத்தும் சத்தியத்தில்அடங்கி விடுகின்றன.
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்,
வாய்மையின் நல்ல பிற
என்பது மறைமொழி. இறைவனே சத்திய சொரூபியாவான். உலகம் அழியினும் அழியாது எஞ்சியிருப்பது சத்தியம் ஒன்றுதான். மானுட வாழ்விற்கு வெற்றியை நல்குவது சத்தியந்தான்.
சத்தியமே வெற்றிகொள்ளும்; அசத்தியம் அன்று. தேவயானம் என்ற பாதை சத்தியத்தினாலேயே ஆகியுள்ளது என்பது கோட்பாடு. இந்த அரும் பெருங்குணத்தைக் கிரீச சந்திரகோஷர் பெற்றிருந்தார். இந்த ஒரு குணமே அவரைப் பரம பக்தராக, பரவாழ்வு வாழ்பவராக, பரமஹம்ச தாசராக மாற்றியமைத்தது. இவரிடத்திருந்த சொன்ன சொல் தவறாமை என்னும் உயர்குணத்தின் பொருட்டே ஸ்ரீராமகிருஷ்ணரும் இவரைத் தடுத்தாட்கொண்டார்.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைச் சார்ந்த கிரீச சந்திரகோஷர் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையை எண்ணி எண்ணி மனம் வருந்தினார். தான் செய்த தகாத செயல்களைக் குறித்து வெட்கமும் வேதனையும் அடைந்தார். பரமஹம்சரின் பெருமையினையும் தன்னுடைய சிறுமையினையும் நினைந்து நினைந்து நெஞ்சம் புண்ணானார். பரமஹம்சர் மானுட உடல் தாங்கிய தெய்வமாய் விளங்குவதையும், தான் மானுட உடல் தாங்கிய மிருகமாய் இருப்பதையும் கூர்ந்து கவனித்தார். அடிக்கடி ஸ்ரீ ராமகிருஷ்ணரிடத்துச் சென்று அவர் புகட்டும் அருளுரைகளைச் செவிமடுக்கலானார். அதன் விளைவாக அவரிடத்து அருள் நாட்டம் தலையெடுக்கலாயிற்று. பரவாழ்வு வாழவேண்டும் என்னும் பேரவா அவர் உள்ளத்தே உதிக்கலாயிற்று. பெருவாழ்வு வாழவிரும்பிய அவர் தனக்கு ஏதாகிலும் நல்லது செய்ய வேண்டுமென்று ராமகிருஷ்ணரிடத்து விண்ணப்பித்துக் கொண்டார். இது குறித்து இருவருக்குமிடையில் கீழ்வருமாறு சம்பாஷணை நிகழலாயிற்று.
ராமகிருஷ்ணர்: நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கடவுளின் நாமத்தை நூற்றெட்டுமுறை ஐபம் செய்து வருவாயானால் உனக்கு நன்மை விளையும்.
கிரீச சந்திரகோஷர்: அவ்வாறு அனுதினமும் செய்து வர என்னால் முடியாது.
ராமகிருஷ்ணர்: அவ்வாறு செய்வதற்கு உன்னால் ஏன் முடியாது?
கிரீசர்: சொன்னால் சொன்னது போல் செய்தாக வேண்டும். நாள்தோறும் ஜபம் செய்துவர என்னால் முடியாது.
ராமகிருஷ்ணர்: நாள் தவறாமல் மூன்று முறையாகிலும் இறைவனின் நாமத்தை உச்சரித்தாலும் அதற்கேற்ற பலன் உண்டாகும்.
கிரீசர்: அதுவும் என்னால் இயலாது.
ராமகிருஷ்ணர்: தினம் காலையில் எழுந்தவுடன் ஒரு முறை, இரவில் படுக்கச் செல்வதற்குமுன் ஒருமுறை இறைவனின் நாமத்தை ஓதி வருவாயாக.
கிரீசர்: இதுவும் என்னால் சாத்தியமாகாது. தங்களால் ஏதாகிலும் நன்மை செய்ய முடியுமானால் செய்யுங்கள்.
ராமகிருஷ்ணர்: சரி, சரி. அது போகட்டும், மற்றொன்று கூறுகிறேன் கேள். நீ செய்யும் செயல்கள் அனைத்தையும் நினைவு வரும்பொழுது மட்டும் எனக்கு அர்ப்பணம் செய்துவிடு. அவ்வாறு செய்ய உனக்கு இயலுமா?
இதைக்கேட்டு கிரீச சந்திரகோஷர் சற்று நேரம் யோசித்தார். பின்னர் ராமகிருஷ்ணரை நோக்கி, “நினைவு வரும்பொழுது தானே? சரி, நான் செய்யும் செயல்கள் அனைத்தையும் நினைவு வரும்பொழுது மட்டும் தங்களுக்கு அர்ப்பணித்து விடுகின்றேன்!” என்று வாக்குறுதி கொடுத்தார்.
இந்த வாக்குறுதியைத் தந்த பின்னர் அவரால் ஒரு தீய செயலும் செய்ய முடியவில்லை. பழைய நினைவின் தூண்டுதலால் ஏதாகிலும் செய்யப் புகுவார்; ஆனால் உடனே ராமகிருஷ்ணரது நினைவு அவருள்ளத்தில் உதித்துவிடும். அப்பொழுதே அச்செயலை விட்டுவிடுவார். சிறிது நேரத்தில் ராமகிருஷ்ணரது நினைவு அவருள்ளத்திலிருந்து மறைந்துவிடும். மீண்டும் பழைய நினைவுகள் தலையெடுக்க ஆரம்பிக்கும். உடனே மதுப்புட்டியை எடுத்துக் குடிக்கப்போவார். ஆனால் மீண்டும் ஸ்ரீராமகிருஷ்ணரது நினைவு வந்துவிடும். சீ, சீ இநத அற்பச் செயலையா அம்மகானுக்கு அர்ப்பணிப்பது என்று மதுப்புட்டிகளைத் தூக்கி எறிந்து விடுவார். ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கத் தகாதது என்று ஒருமுறை ஒதுக்கிய செயல்களை அவர் மீண்டும் கண்ணெடுத்தும் பாரார். கனவிலுங்கூட அச் செயல்களின் நினைவு அவருக்குத் தோன்றாது. தினந்தோறும் தீமைபுரிவதும் தினந்தோறும் ஆண்டவனிடம் மன்னிப்புக் கேட்பதும் அவருடைய பழக்கமன்று. ஒருமுறை புறக்கணிக்கப் பட்ட செயல்களை அவர் வாழ்வு முழுவதும் மீண்டும் கண்ணெடுத்துப் பாரார். இவ்வாறு அவரிடத்திருந்த ஒவ்வொரு புல்லிய செயலும் அவரிடத்திருந்து விடைபெற்றுச் சென்றன. இறுதியில் அவர் தூய்மையை வடிவெடுத்தவராகத் துலங்கினார். ஸ்ரீராமகிருஷ்ணரைச் சார்ந்த அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் மயமாகவே மாறியமைந்தார். அவருடைய வாழ்வோடு தன்னுடைய வாழ்வையும் இணைத்துக் கொண்டார். தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவருடைய பாதாரவிந்தங்களுக்கு அர்ப்பணம் செய்து விட்டார். பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரும் அவரை முற்றிலும் தனக்குரியவராக ஏற்றுக் கொண்டார். மண்ணாக இருந்த அவரைப் பொன்னாக மாற்றிவிட்டார். மண்ணில் புரண்டு கிடந்த அவரை விண்ணில் வீற்றிருக்கச் செய்துவிட்டார். மதுவைப் பருகி மயக்கமுற்ற அவரை அமுதை அருந்தி ஆனந்திக்கச் செய்துவிட்டார். சான்றோரைச் சார்ந்த சிறியோரும் சான்றோராக மாறியமைவர் என்பதற்குக் கிரீச சந்திரகோஷரது வரலாறு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

Saturday, May 30, 2015

கடவுளுக்காக கொடுக்கப் படும் பலி.....

கடவுளுக்காக கொடுக்கப் படும் பலியும் மனிதனுக்காக கொடுக்கப் படும் பலியும் (முக்கிய விளக்கங்கள்):

*இந்து தர்மத்தின் ஆணிவேராக விளங்குவது அகிம்சை. 'அகிம்சா பரமோ தர்ம' (அகிம்சையே உச்ச பட்ச தர்மம்) எனும் பிரமாண வாக்கியத்தை மகாபாரதத்தில் பற்பல இடங்களில் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் வியாசர். இந்து தர்மத்தைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் பலரும் ஆலயங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் உயிர் பலி இடுகின்றனர்.
*இது போன்ற செய்திகளைக் கேள்வியுறும் பொழுது நம்மில் பலரும் ஆலயங்களில் பலியிடுவோரை மிகக் கடுமையாக நிந்திப்பதைக் காண்கிறோம். எனினும் புலால் உண்பவர்கள் அத்தகைய விமரிசனத்துக்கு உள்ளாவதில்லை. மேலும் பல நேரங்களில் ஆலய பலியினை எதிர்ப்பவர்களே அசைவ வழக்கத்தினை மேற்கொள்பவராக இருக்கின்றனர். இது புதிரன்றோ?.
*
உயிர் பலியிடுபவரோ 'புலால் உண்பதே கொடிய பாவம்' என்றும் புலால் உண்பவரோ 'ஆலயங்களில் உயிர் பலியிடுவதே கொடும் பாவமென்றும்' வாதிடுவர். இதற்கு முடிவு தான் என்ன? எவ்வகையிலும் உயிர்க் கொலை ஞாயமாகாது. தர்மங்களை நம் விருப்பத்திற்கு ஏற்ப வகுத்துக் கொள்வதை விடுத்து அருளாளர்களின் அறிவுரைகளைச் செவி மடுப்பதே நன்மை பயக்கும்.
*
பிள்ளைப் பெரு விண்ணப்பம் - 63,64ஆம் பாடல்கள் (திருவருட்பா 6ஆம் திருமுறை):
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப் பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புந்தி நொந்து உளம் நடுக்குற்றேன்
-
துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத்
தொடங்கிய போதெலாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
எந்தை நின் திருவுளம் அறியும்!!
*
மேற்குறிப்பிட்ட பாடல்களில் பலியிட எடுத்துச் செல்லப் படும் உயிர்களைக் கண்டு பதை பதைக்கிறார் வள்ளலார். பாடலில் 'குக்குடம்' என்ற பதம் கோழியைக் குறிக்கும். மேலும் மீன் பிடிக்க உதவும் தூண்டில்; வலை இவைகளைக் கண்டால் (அவ்வுயிர்களின் நிலையினை எண்ணி) பயந்து நடுங்குகிறார் வள்ளல் பெருமானார்.
*
நம் நாட்டில் ஆலயங்களில் பலியிடப்படும் பிராணிகள் சுமார் 5 லட்சம் என்று வைத்துக் கொண்டாலும், உலக நாடுகள் முழுவதும் சேர்த்து ஒரு ஆண்டுக்கு மனித இனத்துக்காக (உண்ணும் பொருட்டு) பலியிடப் படும் பிராணிகளோ 65 பில்லியன் (அதாவது சுமார் 6500 கோடி பிராணிகள்). மீன் முதலிய நீர் வாழ் உயிரனங்கள் இந்த கணக்கில் சேராது.
*
மேற்கூறிய கணக்கில், மக்கள் தொகை மிகுந்துள்ள மூன்று நாடுகளுள் ஒன்றான பாரத நாட்டின் பங்கு 10 சதவிகிதம் என்று கொண்டாலும் 'எத்தனை கோடி பிராணிகள் மனித இனத்திற்காக வதைக்கப் படுகிறது' என்று எண்ணும் பொழுது உள்ளம் பதைக்கும். 'சரி நான் ஒருவன் இன்று புலாலை நிறுத்தினால் உயிர்க் கொலை நின்று விடுமா ?' என்ற கேள்வி தோன்றுவது இயல்பு.
*
உயிர்க்கொலையை முற்றிலும் ஒழித்து விட முடியாது. உண்மை; எனினும் நம்மை நாம் பாவச் செயலில் இருந்து விடுவித்துக் கொள்ள இயலும். நம்மைக் கருணையுள்ளவராக பரிணமித்துக் கொள்ள இயலும். இறைவனின் திருவருளுக்குப் பாத்திரமாக்கிக் கொள்ள இயலும். ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்கிறார் வள்ளலார் (சிவ சிவ)..

Friday, May 22, 2015

கீழே வந்தவன் திளைத்திருப்பான்

உயரே நிலைக்குமோ விண்ணிழி நீரும், விரைந் திறங்கி மடுவாகும்
உயரே நிற்பவன் தவித்திருப்பான், இறங்கி வந்தவன் திளைத்திருப்பான்
(விண்ணிழி = விண் +இழி வானத்திலிருந்து இறங்கிய. மடு =நீர் நிலை)[falls.JPG]
இந்நிலையில் மேலே இருப்பவன் தவித்திருப்பான் என்று எப்படிச் சொல்வது என சிந்தித்துக் கொண்டிருந்த நிலையில் மேலே சொன்ன சம்பவம் மிகச் சரியான உதாரணமாகத் தோன்றியது. கவிஞர்கள், ஞானிகளின் சொற்கள் என்றும் பொய்க்காது. நமது புரிந்து கொள்தலில் வேண்டுமானால் முன்பின் முரண் இருக்கலாம் என்பதும் புரிந்தது. உயரே இருப்பவன் இறங்கி ஆகணும்.
இறைவனின் அருள் மழை எல்லோருக்குமாகத் தான் பொழிந்து கொண்டிருக்கிறது.அதை உணர்ந்து அனுபவிக்க முடிபவர்களுக்கு வாழ்வில் என்றும் மகிழ்ச்சியே. உணராமல் போனவர்களுக்கு துன்பமே.
உணர்பவர்கள் யார், உணராதவர்கள் யார்?
ஈடுபட்டுள்ள செயலோடு தன்னை கர்த்தாவாக ஐக்கியப் படுத்திக் கொண்டு 'எல்லாம் தன்னால் நடக்கிறது, வெற்றிகளுக்கெல்லாம் தன் திறமையே காரணம் என்று நினைத்துக் கொள்வது; வராமல் போன வெற்றிகளுக்கு பலரிடமும் குறை கண்டு பலரையும் தூற்றிக் கொண்டுத் திரிவது ' இவையே பெரும்பாலும் காணப்படும் உலகினரின் இயல்பு. கபீரின் கண்ணோட்டத்தில் கூற வேண்டுமானால் இவர்கள் 'உயரே' வசிப்பவர்கள். இவர்கள் மனம் கரடுமுரடான பாறைகளால் ஆனது. நம்மில் காணப்படும் போட்டி, பொறாமை பாசாங்கு, இவைகளே அப் பாறைகள். அத் தகைய நெஞ்சங்களுக்கு இறைவனின் அருளைப் போற்றவோ தக்க வைத்துக் கொள்ளவோ நேரமும் அவசியமும் தெரிவதில்லை. இதனால் அவர்கள் மனம் வறண்டவர்களாக சுயநலப் போக்குள்ளவர்களாகக் காணப்படுவர். அகந்தையினால் தங்களை மிக உயர்ந்தவர்களாக எண்ணிக் கொள்ளும் போக்கு உடையவர்கள் இவர்கள். இவர்கள் பொதுவாக நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தேடி அலைவர். இவர்களின் நிலை நீருக்காக தவிப்பவர்களை ஒக்கும்.

கீழிருப்பவர்கள் யார்? இவர்கள் மன அடக்கம் உள்ளவர்கள். யாவரையும் சமமாக பாவிக்கக் கூடியவர்கள். பிறருடைய துன்பத்தைக் கண்டபோது மனம் வருந்தி அவர்களுக்கு உதவி செய்ய விரைபவர்கள். இத்தகைய குணங்களால் அவர்களுக்கு மகிழ்ச்சி இயல்பாகக் கூடுகிறது. தங்களுக்கு இறைவன் அளித்திருக்கும் வளமைக்கு இடைவிடாது ....
 அவர்கள் நன்றிக்குக் காரணம் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள வளமைகூட இல்லாது பலரும் வாழ்க்கை நடத்தவில்லையா என்ற எண்ணம் தான். நன்றி பெருகும் மனதில் பிறரை குறைகூறும் குணம் இருக்காது. குறைகளை காணா மனம் மகிழ்ச்சியைத் தவிர வேறென்ன அறியும். அதுவே இறைவனின் கோவில் ஆகிறது. அவர்கள் என்றென்றும் மகிழ்ச்சியில் திளைத்திருப்பவர்கள். அடக்கமுடையவரின் மனநிலையை இராமலிங்க அடிகள் அழகாக எடுத்துரைக்கிறார்.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம் உயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளம் தான் சித்த
சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தெரிந்து கொண்டேன் அவ்
வித்தகர்தம் அடிக்கு ஏவல் புரிந்திட
என் சிந்தை மிக விழைந்ததாலோ

எளியார்க்கு ஏவல் செய்ய விரும்பும் மனம் இன்னும் எத்தனை எளிமையானதாக இருந்திருக்க வேண்டும்.
மகிழ்ச்சியைத் தேடி அலைவோருக்காக சொல்லியிருக்கும் கபீரின் உதாரணம் மிக எளியது. யாவரும் புரிந்து கொள்ளக்கூடியது.

Thursday, April 16, 2015

நம்பினார் கெடுவதில்லை!

ஒரு மடத்தில் இருந்த துறவி, ஏழைகளுக்கு விருந்தளிக்க விரும்பினார். ஆனால், கையில் பணமில்லை.
""கடவுளே! விருந்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று மட்டும் வேண்டிக் கொண்டார். 
தன் சீடர்களை அழைத்து, விருந்துக்கான ஏற்பாட்டைச் செய்யும்படி கூறினார்.
விருந்து அன்று ஏராளமான முதியவர்கள் ஆசையோடு காத்திருந்தனர். தட்டு, தண்ணீர் வைத்தாகி விட்டது.
சீடர்கள், தங்கள் மனதிற்குள், ""நம் குருவுக்கு பைத்தியம் பிடித்து விட்டது போலும்! உணவே இல்லாமல் வெறும் தட்டு முன் 
முதியோர்கள் அமர்ந்தால், அவர்கள் ஏமாந்து போவார்கள் என்பது கூட இவருக்கு தெரியாதா...'' என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.
நேரம் கடந்தது.
சீடன் ஒருவன் குருவிடம், "இப்போது என்ன செய்வது?'' என்றான்.
"கவலை வேண்டாம். உணவு அளிப்பது கடவுளின் பொறுப்பு. எல்லாரையும் அமரச் சொல்லுங்கள்'' என்றார்.
என்ன நடக்கப்போகிறதோ என எல்லாரும் திகைத்து நிற்க, குரு மனஒருமையுடன் கடவுளைப் பிரார்த்தித்தார். அப்போது, வாசலுக்கு வாகனம் ஒன்று வந்தது. அதில் தேவைக்கு நிறைய உணவும் இருந்தது.
அந்த வண்டியை ஓட்டி வந்தவர் குருவிடம், ""குருவே! எங்கள் முதலாளி இந்த விருந்தை உங்களிடம் அளிக்க உத்தரவிட்டுள்ளார்'' என்றார்.
நடந்த விஷயம் இது தான். பணக்காரரான அந்த முதலாளி, தன் நண்பர்களுக்கு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் ஏதோ காரணத்தினால் விருந்து தடைபட்டதால், உணவை ஏழைகளுக்கு வழங்க முடிவெடுத்து அனுப்பி வைத்தார்.
"பெரிய முதலாளியான கடவுளின் உத்தரவால், இந்த உணவு கிடைத்துள்ளது. அவருக்கு நன்றி சொல்லி விருந்தை பரிமாறுவோம்,'' என்று சீடர்களுக்கு உத்தரவிட்டார். எதிர்பார்த்ததை விட விருந்து நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.