Saturday, May 31, 2014

ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற....

ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெரு நெறி பிடித்தொழுக வேண்டும்
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும்; நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்
தரும மிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவ மணி
சண்முகத் தெய்வமணியே! சண்முகத் தெய்வமணியே!

Wednesday, May 21, 2014

ஓஷோவின் முத்துக்கள்...


1.யின் – யாங் 
பிரபஞ்சம் இரண்டுவித சக்திகளால் ஆனது. மேல்மட்டத்தில் இரண்டும் எதிரெதிரானவை, ஆனால் ஆழத்தில் அவை எதிரெதிரானவை அல்ல. இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அவற்றை யின் – யாங் என்றோ, எதிர்மறை – நேர்மறை என்றோ, ஆண் – பெண் என்றோ கூறலாம். உண்மையில் யின் – யாங் எல்லா விதமான எதிரெதிரானவற்றையும் இணைத்துச் செல்கிறது. அடிப்படை உண்மை என்னவென்றால் எதிரெதிரானவை எதிரெதிரானவை அல்ல, முரண்பாடுகளல்ல, அவை ஒன்றோடு ஒன்றோடு இணைந்தவை, ஒன்றை ஒன்று சமன் படுத்துபவை.
ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் உள்ள எதிர்மறை சக்தியை கண்டுபிடித்து ஒன்றாக இணைய தியானம் உதவுகிறது.
மனிதன் எனபவன் ஆண் பாகமும் பெண் பாகமும் ஒன்றாய் உள்ளே இணைந்தவன்தான்.
இந்த உலகின் பிரிவினைகள் அனைத்தும் மனதின் பிரிவினைகள்தான்.
யின் – யாங் என்பது ஒரு வட்டம், ஆண் தன்னுள் பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும், பெண் தன்னுள் ஆணை கண்டு பிடிக்க வேண்டும்.
அரிஸ்டாட்டிலின் தர்க்கத்தின் அடிப்படையில் மட்டுமே வாழ்க்கை அமைவதில்லை, அதில் இரண்டும் கலந்திருக்கிறது.

இன்றே நல்ல நாள் தான் - சின்மயானந்தர்

!



வாழ்வில் எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும் என்றோ முற்றிலும் விலகி விட வேண்டும் என்றோ ஆன்மிகம் போதிக்கவில்லை. செல்வம் நமக்கு தகாதது அல்ல. அதை மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்று தணியாத ஆசை தான் கூடாது. சேர்த்த செல்வத்தை நல்ல முறையில் சமூகத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்றே ஆன்மிகம் வலியுறுத்துகிறது. பொறுப்பினை இறுகப் பற்றிக் கொண்டு விடாப்பிடியாக தொங்கக்கூடாது. ஜனகர் சக்ரவர்த்தியாக இருந்தாலும், அரண்மனையிலே வாழ்ந்தாலும், மனதை எதிலும் ஒட்டாத வகையில் ஞானமார்க்கத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தார். இதனால் தான் அவரை ராஜா என அழைக்காமல், "ராஜ ரிஷி' என்று அழைத்தனர். ராமனுக்கு மாமனாராகும் தகுதியே இதனால் தான் கிடைத்தது. ஞானமார்க்கத்தில் எப்படி நுழைவது என்று கேட்காதீர்கள். உடனே முயற்சியைத் தொடங்குங்கள். ஆரம்பித்தால் தானாகவே ஞானம் மெல்ல தலைகாட்டத் தொடங்கிவிடும். இன்றை விடச் சிறந்த நாள் வேறு இல்லை. பலரும் ஓய்வு பெறும் வயது வரை காத்திருக்கின்றனர். அப்படி காத்திருக்கத் தேவையில்லை. அப்போது வேறு பல சங்கடங்கள் குறுக்கிடக்கூடும். ஆன்மிக வழியில் செல்ல விரும்புபவர்கள் எளியமுறையில் இயன்றவரை முயற்சிகளைப் படிப்படியாக பின்பற்றத் தொடங்குவதே சிறந்தது

Thursday, May 15, 2014

ஓஷோவின் முத்துக்கள்


மேல் நோக்கி செல்லுதல்
உனது சக்தி மேல் நோக்கி செல்ல ஆரம்பிக்கும்போது புவியீர்ப்பு விசை உனது சக்தியை பாதிப்பதில்லை என எல்லா ஞானிகளும் விளக்கி கூறுகின்றனர். உனது சக்தி வேறொரு விதியின் படி செயல்பட ஆரம்பிக்கிறது, ஒளியின் விதி. நீ மேல் நோக்கி எழ ஆரம்பிக்கிறாய், பின் மனிதனுக்கு ஒரு புதுவிதமான வித்தியாசமான உலகத்தைப்பற்றி தெரிய வருகிறது.
ஜென்குரு உன்னை அடிக்கும்போது உனது சக்தி மேல் நோக்கி எழுகிறது, நீ கவனமடைகிறாய்.
புத்திசாலித்தனம் மேல் நோக்கி எழுகிறது, அறிவுஜீவித்தனம் கீழ் நோக்கி செல்கிறது.
எந்த அளவு உன்னிடம் தன்னுணர்வு இருக்கிறதோ அந்த அளவு உனது சக்தி மேல் நோக்கி பாய்கிறது.
குணடலினி என்பது ஒரு மையம், அது சக்தி மேல் நோக்கி எழும்போது செயல்பட ஆரம்பிக்கிறது.
தண்ணீரும் மேல் நோக்கி போகும். ஆனால் அதற்கு சிறிதளவு சூடு தேவை, அவ்வளவுதான்.

Wednesday, May 7, 2014

வேருக்கு நெக்கு விடும் பாறை

ஐக்கிய நாட்டுச் சபை பொதுக்குழுவின் முதல் பெண் தலைவர் என்ற பெருமை பெற்றவர் திருமதி விஜயலக்ஷ்மி பண்டிட். பல நாடுகளில் இந்திய தூதராகப் பணியாற்றியவர். இவர் நேருவின் உடன் பிறந்த சகோதரியும் ஆவார். மகாத்மா காந்தியின் ஒரு அறிவுரை பல சந்தர்பங்களில் தன்னை எப்படி நிலைக்கு கொண்டு வந்தது என்பதை ஐம்பது வருடங்களுக்கு முன் எழுதிய கட்டுரையில் விவரித்திருக்கிறார். முதற் பகுதி மட்டும் இங்கே.

என் வாழ்க்கையின் மிகச் சிறந்த அறிவுரையை சுமார் பத்து வருடங்களுக்கு முன் (~1945) கொடுத்தவர் உலகத்தில் மிக உத்தமர்களுள் ஒருவராகப் போற்றப்படும் மஹாத்மா காந்தி அவர்கள்.
பெரும்பாலோர்க்கு மனத்துன்பம் அனுபவிக்கும் காலங்களில் மனித வர்க்கத்தின் மீது நம்பிக்கை மிகக்குறைவாக இருக்கும். அது போல என்னுடைய சோதனைக் காலம் அது. கணவனை இழந்து இரண்டு பெண்களுடன் அனாதரவாய் நின்றேன். இந்திய சட்டத்தின் கண்களில் பெண்கள் ஆண்களைச் சார்ந்தவர்கள்தான். அவர்களுக்கென்று எந்த தனி உரிமையோ நிலையோ சமுதாயத்திலோ சட்டத்திலோ இல்லை.
இதனால் நான் சந்தித்த போராட்டங்களும் அவமானங்களும்தான் எத்தனை! விடுதலைப் போரில் ஆண்களுக்கு சமமாக ப்ங்கேற்று குடும்பத்தைத் துறந்து சிறைவாசங்களை அனுபவித்து நாங்கள் போராடுகையில் அனைவரும் சமம். ஆனால் கணவர் மறைந்ததனால், மகனில்லாத விதவைக்கு குடும்பச் சொத்தில் எவ்வித பாத்யதையும் கிடையாது. கணவன் வீட்டார்கள் விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டனர். அதனால் உறவின் விரிசல் வளர்ந்து கொண்டே போனது. நெஞ்சில் கசப்பு நிறைந்திருந்தது.

இந்நிலையில் ஒரு கருத்தரங்கத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு அமெரிக்காவிற்கு செல்ல ஆயத்தமானேன். அதற்கு முன் விடைபெறும் வகையில் மஹாத்மாவை சந்தித்தேன். பலவிஷயங்களை பேசிய பிறகு ஒரு கேள்வி எழுப்பினார் “உன் உறவினர்களுடன் சமாதான்ம் செய்து கொண்டாயா ?”
இது எனக்கு பெரும் ஆச்சரியத்தை தந்தது. அவர் அவர்களின் பக்கம் பரிந்து பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.”நான் யாருடனும் சண்டையிட்டதில்லை.ஆனால் தங்களது தனிப்பட்ட வசதிக்காக பழமையான சட்டத்தின் உதவியைத் தேடும் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள எனக்கு விருப்பவில்லை “என்று பதிலளித்தேன்.

சில கணங்கள் சன்னலுக்கு வெளியே பார்த்திருந்தார்.பின்னர் என் பக்கம் திரும்பி ஒரு புன்னகையுடன் “நீ கண்டிப்பாக அவர்களை சந்தித்து விடைப் பெற்றுக்கொள். பண்பாடும் இங்கிதமும் இதை எதிர்பார்க்கிறது. இன்னமும் இந்திய பண்பாட்டில் இவை முக்கியமானவை.”
“அது முடியாது. தங்களை திருப்தி செய்வதற்காகக் கூட எனக்கு இன்னல் விளைவிப்பவர்களை என்னால் சந்திக்க இயலாது”
“உன்னைத் தவிர உனக்கு இன்னல் விளைவிக்க வேறொருவரால் முடியாது” என்றார் புன்னகை மாறாமல். "உன் இதயத்தில் இருக்கும் காழ்ப்பு உணர்ச்சிகளை விரைவிலேயே நீ தடுக்காவிட்டால் மேலும் கெடுதலை விளைவித்துக் கொள்வாய்.”
நான் மௌனமாயிருந்தேன். அவர் மேலும் தொடர்ந்தார்.
“சந்தோஷமற்ற இச்சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொள்ள நீ வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறாய். ஆனால் யோசித்துப்பார். உன்னிடமிருந்து நீயே தப்பித்துக்கொள்ள முடியுமா ? உன் உள்ளம் கசப்பான எண்ணங்களால் நிறைந்து இருக்கும் போது வெளியிலிருந்து மகிழ்ச்சி கிடைக்குமா? சிறிது தாழ்மையுடன் நடந்து கொள். உன் அன்பிற்குரியவரை நீ இழந்துவிட்டாய். அதுவே பெரும் துக்கம். உன் உள்ளத்தை தூய்மைப்படுத்திக் கொள்ளும் தைரியம் இல்லாததால் அதையும் மீறிய துன்பத்தை உனக்கு நீயே இழைத்துக் கொள்ளலாமா?”
காந்திஜீயின் வார்த்தைகள் மனதை விட்டு அகல மறுத்தன.
சில தினங்களின் மனப் போராட்டத்திற்குப் பின் என் கணவரின் சகோதரரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பயணத்திற்கு முன்பாக அவர்களை சந்திக்க விழைவதாகக் கூறினேன். அங்கே சென்று ஐந்து நிமிடங்களுக்குள்ளாக என் வருகையால் அனைவரின் மன இறுக்கமும் விலகியதைக் கண்டேன்.என் எதிர்காலத் திட்டங்களை கூறி அவர்களிடம் ஆசி வேண்டினேன். அது என்னுள் ஒரு அற்புதத்தை விளைவித்தது. ஒரு பெரும் மனப்பாரத்தை இறக்கி வைத்தது போன்ற உணர்வு உண்டானது. பிற்காலத்தில் என்னுள் ஏற்பட்ட பெரும் மாறுதல்களுக்கு அந்த சிறு நிகழ்ச்சி வித்திட்டது. 

(Smt Vijayalakshmi Pundit's article republished in Readers'Digest November 2006; original was in 1955 when she was High Commissioner for India )
சான்றோர்கள் சாதாரணமாகச் சொல்லும் சிறிய அறிவுரைகளும் பல அரிய மாற்றங்களை நம் மனதில் ஏற்படுத்த வல்லது என்ற உண்மையை இந்நிகழ்ச்சி மூலம் அறிகிறோம்.

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

அறம் அறிந்த சான்றோர்களின் இனிய சொற்கள் வஞ்சகம் இல்லாமலும்,மனதிற்கு குளிர்ச்சி உடையதாகவும் இருக்கும் என்று வள்ளுவர் கூறுகிறார். இரண்டு காரணங்களை சொல்கிறார். முதலாவது மனதை குளிர்விப்பது. இரண்டாவது அவர்கள் சொல்லில் உள்ள நேர்மை.
மனித மனங்கள் வறண்டு போகாமல் நல்வழிக்கு திருப்பப்படும் அதிசயத்தை ஏற்படுத்துவதால் தான் சாதுக்களின் பேச்சை அமுத மழை என்று சொல்கிறார் கபீர். 
கடுஞ்சொல் யாவினும் கொடிது, அதனால் அச்சொல் விடுவாய்
சிட்டர் வார்த்தை நீர்போலே, தாரையும் விழுமே இன்னமுதாய்
(சிட்டர் = சிரேஷ்டர், ஞானி, மேலோர்; தாரை= தொடர்ச்சியாய் வருவது, உதாரணம்- எண்ணெய் ஒழுக்கு)
மாற்று :
வன்சொல் தருமே தாபம், வேண்டாம் என்றும் வெவ்வுரை
இன்சொல் ஆகுமே சீதளம், சாது சொல்வதும் அமுதவுரை 

(தாபம் = வெம்மை; வெவ்வுரை=கடுஞ்சொல்; சீதளம்=குளிர்ந்தது)
நம் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் உள்ளத்தில் வெறுப்பின் சுவடுகளை சுமக்காமல் வாழ்க்கையை நடத்துவது மிக அவசியம். ஒருவர் எந்தத் துறையை சேர்ந்தவராய் இருப்பினும் மகாத்மாவின் அந்த எளிய அறிவுரை பொருந்தும்.
“No one can harm you but yourself" :
அவர் திருமதி பண்டிட்டிடம் உள்ளத்தை தூய்மைப்படுத்திக் கொள்ளும் தைரியம் இல்லை என்று ஏன் கூறினார்? ஏனெனில் பணிவு மனப்பான்மையை ஏற்கவொட்டாது மனதை நான் என்னும் அகங்காரம் ஆட்டுகிறது. அது மனிதர் மேல் தனக்கிருக்கும் பிடியை விட மறுக்கிறது. வாழ்வில் ஏற்றுக் கொள்ள வேண்டிய சில கட்டாயங்களை ஏற்க முடியாமல் சங்கடப்படுத்துகிறது.
Prayer for Serenity என்று ஒன்று உண்டு. அதன் வாசகங்கள் இப்படி வரும்.God! give me courage
-to change things that I can;
-accept those I cannot and
-the wisdom to know the difference
.
இந்த பிரார்த்தனையின் நோக்கமே மனதில் பணிவு வர வேண்டும் என்பதே. பணிவற்ற மனதில் விவேகம் குடிகொள்ள முடியாது.
பணிவான மனப்பான்மையே நல்லவழி என்ற நம்பிக்கை இருந்தால்தான் வாழ்க்கையின் நிஜங்களை எதிர்கொள்ளும் தைரியம் வரும்.திருமதி பண்டிட்டுக்கு அந்த தைரியத்தை கொடுத்தது காந்திஜியின் கனிவான அறிவுரை.
அதே அறிவுரையை வேறு யாராவது சொல்லியிருந்தால் திருமதி பண்டிட் அதை ஏற்றுக் கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே.
மஹாத்மா சொன்னதோ மிக மிக மென்மையான வார்த்தைகள்தான்.
மென்மை என்ற காரணத்தினால் வலிமையில்லை என்று குறைத்து எடை போட முடியாது. யானையைக் கொல்லும் வல்லமை உடைய ஈட்டி பஞ்சு பொதியை ஊடுருவ முடியாது. கடப்பாரையால் பிளக்க முடியாத பாறையை பசுமரத்தின் வேர் பிளந்து விடும் என்கிறது ஔவையின் நல்வழி பாடல்.
வெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது-நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.

“No one can harm you but yourself"
கீதையிலும் (6:5)அதே கருத்துதான் சொல்லப்படுகிறது.
आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः ஆத்மாவுக்கு ஆத்மாவே பந்து, ஆத்மாவுக்கு ஆத்மாவே எதிரி
. பகைவர் எவரும் வெளியில் இல்லை. நமக்கு நாமே பகை.ஆகையால் வரும் இன்னல்கள் வெளியிலிருந்து வருவது முடியாது.
இப்படி படி்த்தும் ஆராய்ந்தும் கூட மனதில் வேர் விடாத கருத்து எப்படி ஒரு சாதாரண உரையாடல் மூலம் மனதிற்குள் நிரந்தரமாகப் புகுந்து கொள்கிறது ?
செபமந்திரம் சித்தியானவரின் மூலம் உபதேசம் பெறும் போதுதான் சீடருக்கும் மந்திரம் சித்திக்கும் என்று கூறப்படுவதுண்டு. (சீடருக்கு அதில் சிரத்தையும் இருக்க வேண்டும் என்பது வேறு விஷயம் !:))
அது போல் கனிவாகப் பேசுவதையே வாழ்வின் சாரமாக்கிக் கொண்டவர் வாய்வழியாக அறிவுரைகள் வரும் பொழுது அதனோடு அவர்களின் ஆன்ம சக்தியும் சேர்ந்து வருகிறது. அது விதையில் அடங்கிய ஜீவசக்தி போன்றது. புலன்களுக்கு புரியாது. அது ஆன்மாவைத் தொடுவது. அதனால் தான்அது துயர் தீர்க்கும் மருந்தாகிறது.
இனியவைக் கூறல் என்பதை ஒரு பெரும் தர்மம் என்றே திருக்குறளும் திருமந்திரமும் சொல்கின்றன.
முகத்தான் அமர்ந்தினிது நோக்கி, அகத்தானாம்
இன்சொலினதே அறம் 
திருமந்திரம்:

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுரை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே

சாதுக்கள் விதைக்கும் நல்லெண்ணங்கள், கபீர் சொல்லும் அமுத மழையான இன்சொற்களோடு வரும் போது எந்த வறட்டு மனமும் ஈரமாகி தன்னுள் அந்த விதையை ஏற்று கொள்கிறது.
அவ்விதையிலிருந்து தாழ்மையெனும் வேர் விடுகிறது. அதன் மூலம் மண்ணில்(உலகில்) சுற்றிக் கிடக்கும் ’குப்பைச் சத்தை’களையே எருவாக ஏற்று அதிலிருந்து பயனுள்ள சத்தை(அனுபவத்தை)உறிஞ்சி ஆரோக்கியமான தாவரமாய் வளர்கிறது. வேர் வெறும் சத்தை உறிஞ்சிட மட்டுமல்ல. தாவரத்தின் பலமே அது தான். மண்ணோடு பிடித்து நிலை நிறுத்துவது.
காலப்போக்கில் அது மலர்கள் தரும் செடியாகவோ,பசி தீர்க்கும் பயிராகவோ ஏன் கனிகளும் நிழலும் தரும் மரமாகவோ வளர்ந்து பரிணமிக்கிறது.
அப்படி இறைவன் அளித்துள்ள திறமைகளை மீண்டும் உலகின் நன்மைக்காக வழங்கும் போது மனிதப்பிறவியும் பயனுள்ளதாகிறது.
மனதில் தாழ்மையிருந்தால் வாக்கில் இன்சொல் தானே வந்திடும்.