Thursday, October 14, 2010

அறிமுகம்

அன்பு கொண்ட அனைத்து உலக ஆன்மாக்களுக்கும் என் வணக்கம்!
உலகில் பல ஆன்மாக்கள் தோன்றி மறைகின்றன. பல ஆன்மாக்கள் கல்வி, செல்வம், புகழ், அரசியல், விஞ்ஞானம், தொழில் என்று பல வகையான விஷயங்களில் முன்னேறி தன் அனுபவங்களை இவ்வுலகிற்கு தந்துவிட்டுச் செல்கிறது. இதில் மனித வாழ்க்கையின் மிக உயர்ந்த வாழ்க்கையான ஆன்ம (ஞான) வாழ்க்கை தான் மிகப்பெரிதும் மதிக்கப் படுகின்ற வாழ்க்கையாகும். ஆகவே இந்த வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களை இவ்வுலகிற்கு பல ஞானிகள் வெளிப்படுத்திச் சென்று இருக்கிறார்கள். இவையெல்லாம் மனிதனுடைய வாழ்க்கையையும், அறிவையும் மேம்படச் செய்வதற்காகத் தான், இந்த வகையில் நான் சொல்லப் போகும் விஷயங்கள் என்னுடைய ஆன்ம அனுபவத்தால் அறிந்த விஷயங்கள். ஆகவே நான் சொல்லப்போகும் இவ்விஷயங்கள் உலகத்தின் எந்த ஒரு மதத்திற்கோ, இனத்திற்கோ, கலாச்சாரத்திற்கோ எதிரான விஷயம் அல்ல. இது முற்றிலும் ஆன்மாவின் அனுபவமும், ஆன்ம ரகசியமும் ஆகும். எல்லோரும் இதைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும், மேலும் இதைபற்றி ஆராய்ச்சி செய்யவேண்டும். இதுவே ஒவ்வொரு ஆன்மாவின் கடமையாகும். நானும் இந்த ஆன்ம இரகசியத்தை ஆராய்ச்சி செய்து அதன் உண்மையை கண்டறிந்து இவ்வுலகிற்கு சொல்ல விரும்புகிறேன்.

உலகத்தில் உயிரினங்கள் தோன்றி பல்வேறு பரிணாமங்களை அடைந்து அது மனிதன் வரை உருபெறுகிறது. அதனால் ஒரு ஆன்மாவுக்கு பல்வேறு அனுபவங்கள் ஏற்படுகிறது. அதவாது பசி, தன்னை காப்பாற்றிக்கொள்ளுதல், உணவை வேட்டை ஆடுவது, மழை-வெய்யில் இவற்றிலிருந்து தப்பிக்க இருப்பிடம் அமைத்துக் கொள்வது, மேலும் உயிர் உற்பத்தி, வாழ்க்கை முறை, இன்பம்-துன்பம், சமூகம், கல்வி, ஆன்மீகம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற அனுபவங்களை ஒரு ஆன்மா ஒரு அணு முதல் மனிதன் வரை அதாவது தான் வாழ்ந்து கொண்டு இருக்கும்வரை பல்வேறு அனுபவங்களை பெறுகிறது. மேலும் இந்த அனுபவங்களைக் கொண்டு மனிதன் தன் வாழ்க்கையை நடத்துகிறான்

இப்படியாக ஒரு ஆன்மா பல ஜீவராசிகளில் பயணம் செய்து மனிதனாக உருவாகும் போது அது பிரம்மத்தை முழுமையாக அறிய ஆரம்பிக்கிறது. அப்படி ஆரம்பிக்கும் போது, அந்த பிரமத்தின் தேடலில் பல அனுபவங்கள் ஏற்படுகிறது. அதை அந்த ஆன்மா யோகத்திற்க்கு பயன் படுத்துகிறது. அந்த பிரம்ம அனுபவத்தில் முழுமை அடையவில்லை என்றால் அந்த ஆன்மா மீண்டும் மனிதனாக பிறவி எடுத்து தன் பயணத்தை தொடர்கிறது. இப்படி பல பிறவிகள் அதாவது அதன் வாழ்க்கை, குடும்ப சூழ்நிலை, தொழில், கல்வி போன்ற பலவகையான அனுபவங்களின் அடிப்படையில் அது ஆன்மீகத்தின் முழுமைநிலையான முக்தி நோக்கி பயணிக்கிறது. அப்படி பயணிக்கும் போது ஏற்படும் ஆன்மீக அனுபவங்களை இந்த உலகிற்கு வாய்வழியாகவோ, எழுத்து மூலமாகவோ தெரிவித்து செல்கிறது. அந்த ஆன்மா தான் கடந்து வந்த பாதை, மேலும் தான் கடக்க வேண்டிய நிலை இரண்டையும் சேர்த்து தனது அனுபவமாக அந்த ஆன்மா விட்டுச் செல்கிறது. அந்த அனுபவங்களை பல ஆன்மாக்கள் பின்பற்றுகிறது.
அந்த அனுபவங்களை பின்பற்றும் ஆன்மாக்கள் அது தான் கற்றுக் கொண்ட அனுபவங்களையும், தனக்குள் இருக்கும் பதிவுகளையும் கொண்டு புதிய ஆன்மீக பாதையை வகுக்கிறது. இப்படி ஆன்மீக பாதையை கடைப்பிடிக்கும் ஆன்மாக்கள் தன் தகுதிக்கும், அனுபவத்திற்க்கும் ஏற்ப அதனுடைய நிலைகள் நின்றுவிடுகிறது. அதிலே, சில ஆன்மாக்கள் முக்தி வரை தன்னுடைய அனுபவங்களை இந்த உலகிற்கு வெளிப்படுத்துகிறது. ஆனாலும் சில முக்தியடைந்த ஆன்மாக்கள், அந்தந்த பகுதியில் வாழும் மக்களின் தகுதிக்கு ஏற்ப அவர்களுடைய வாழ்க்கை சூழ்நிலைக்கு ஏற்ப, அவர்களின் பண்பாடு, கலாசாரம், குணம் இவைகளுக்கேற்ப யோகத்தை முழுமையாக கூறாமல் சில வழிமுறைகளை மட்டும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

இதற்கு உதாரணம் என்னவென்றால் ஒரு மலையின் சிகரத்திற்கு பயணம் செய்யும் போது வழியில் பல இயற்கை காட்சிகளை ரசித்து செல்கிறோம். ஆனால பயணத்தின் முடிவு சிகரத்தின் உச்சியை அடைவது தான். மலையில் ஏறும்பொது சிலர் சிகரத்தின் உச்சியை அடைய முடியவில்லை என்றால், அவர்கள் தான் அடைந்த இடத்திலிருந்து கீழே பார்த்து நாம் இவ்வளவு தூரம் வரை வந்திருக்கிறோம், இதுபோதும் என்று நினைப்பார்கள். மேலும் அங்கிருந்தபடியே அங்கிருக்கும் நிலைகளை ரசிக்க தொடங்கி அங்கேயே நின்று விடுவார்கள். இப்படித்தான் பல ஆன்மாக்கள் தனது முழுமை நிலையிலிருந்து கீழ்நிலை வரைக்கும் தனது ஆன்மீக அனுபவங்களை தான் அடைந்தவரை தெரிவித்துவிட்டு போயிருக்கிறார்கள்.

அநேக ஆசிகளுடன்,

No comments:

Post a Comment