Friday, October 15, 2010

தண்ணீரின் மேல் நடப்பது - தினம் ஒரு ஸென் கதை

மூன்று துறவிகள் சேர்ந்து தியானம் புரிவது என முடிவெடுத்தனர். ஏரியின் ஒரு கரையில் உட்கார்ந்து கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பித்தனர். அதில் ஒருவன் தீடிரென எழுந்து "என்னுடைய பாயை எடுத்து வர மறந்து விட்டேன்" என்று சொல்லி விட்டு எழுந்து சர்வ சாதரணமாக ஏரியின் மீதுள்ள தண்ணீரில் நடந்து மறுகரையில் இருந்த தன்னுடைய குடிசைக்கு சென்றான்.

அவன் திரும்பிய போது, இரண்டாவது துறவி எழுந்து நின்று, "நான் என்னுடைய உள்ளங்கியை உலர்த்த மறந்து விட்டேன்" என்று கூறியவன் ஏரியின் ஒரு பக்கத்திலிருந்து மறுகரைக்கு தண்ணீரின் மீது நடந்து சென்று துணிமணிகளை உலர்த்தப் போட்டு விட்டு எந்தக் கடினமும் இல்லாமல் திரும்பி வந்தான்.

இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மூன்றாவது துறவி தன்னுடைய தியானம் மற்றும் தவ வலிமையும் சோதித்து பார்த்து விடுவது என முடிவெடுத்தான். "உங்களுடைய பயிற்சி என்ன என்னை விட சிறந்ததா? நானும் உங்களுக்கு சளைத்தவன் அல்ல, நீங்கள் செய்வது போல் என்னாலும் செய்ய இயலும்" என்று சத்தமாக அவர்களைப் பார்த்துக் கூறியவன் வேகமாக ஏரியிலிருந்த தண்ணீரை நோக்கி ஒடினான். அவனும் மற்ற துறவிகளைப் போல் தண்ணீரில் நடக்க முயற்சித்தான். ஆனால் "தொபிர்" என்ற சத்தத்துடன் ஏரிக்குள் இருந்த தண்ணீருக்குள் விழுந்தான்.

முயற்சியில் சிறிதும் தளராமல் தண்ணீரில் இருந்து எழுந்தவன், மறுபடியும் தண்ணீரில் நடப்பதற்கு முயற்சித்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தண்ணீருக்குள் விழுந்து முழுகினான். இது போல் கொஞ்ச நேரம் நடந்து கொண்டிருந்ததை மற்ற இரண்டு துறவிகளும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரம் கழித்து, இரண்டாவது துறவி முதல் துறவியைப் பார்த்து, "நீ என்ன நினைக்கிறாய்? தண்ணீரில் எங்கு பாறைகள் இருக்கிறது என்பதனை சொல்லலாமா? வேண்டாமா?" என்று புன்முறுவலுடன் கேட்டான்.

No comments:

Post a Comment