Friday, October 15, 2010

புறவுணர்வா அகவுணர்வா? - தினம் ஒரு ஸென் கதை

ஹோகன் ஒரு ஸென் ஆசிரியர், சைனாவின் ஒதுக்குப் புரமான கிராமத்தில் இருந்த ஒரு சிறிய கோயிலில் தனியாக வசித்து வந்தார். ஒரு நாள் அந்த வழியாக பயணம் செய்து கொண்டிருந்த நான்கு புத்த மடத்துறவிகள் அவரிடம் வந்து அனுமதி பெற்று அந்தக் கோயிலின் கொல்லைப் புரத்தின் ஒரு ஓரத்தில் நெருப்பு மூட்டி தங்களது கைகளை மிதமான சூட்டில் காட்டி வெதுவெதுப்பாக்கி குளிரின் பிடியிலிருந்து மீள தங்கள் உடம்பினை கதகதப்பாக்கிக் கொண்டிருந்தனர்.
நெருப்பு மூட்டிக் கொண்டே தங்களுக்குள் உள்ளுணர்வு (மனத்தினால் அறியக் கூடிய தன்மை) மற்றும் புறவுணர்வு (புலன்களால் அறியக் கூடிய தன்மை) பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தனர். ஹோகன் அவர்களின் விவாதத்தில் கலந்து கொண்டு, "அங்கே ஒரு பெரிய கல் இருக்கிறது. அந்த கல் உங்கள் மனதின் உள்ளே இருப்பதாகக் கருதுவீர்களா? அல்லது வெளியே இருப்பதாகக் கருதுவீர்களா?" என்று கேட்டார்.
ஒரு துறவி, "ஒரு புத்தத் துறவியின் கோணத்திலிருந்து எல்லாமே மனதினால் அறியப் பட்டக் காட்சிப் பொருளே, அதனால் நான் கல்லானது மனதின் உள்ளே இருக்கிறதாகவே எடுத்துக் கொள்வேன்" என்று தனது கருத்தினைக் கூறினார்.

அதனைக் கேட்ட ஹோகன், "நீங்கள் எப்பொழுதும் இவ்வளவு பெரிய கல்லினை உங்களது மனதில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தால், உங்களது தலையானது எடை கூடி மிகவும் பாரமாக இருக்குமே", என்று ஒரே போடாகா போட்டார்.

No comments:

Post a Comment