Tuesday, October 19, 2010

பதிலா உயிரா? - தினம் ஒரு ஸென் கதை

ஒரு நாள் எல்லாராலும் உயர்வாக கொண்டாடப் பட்ட சா'ன் ஆசிரியர் ஷிஷைன் தன்னுடைய சீடர்களை சோதித்து பார்ப்பது என முடிவெடுத்து, "உண்மை வழியினை அடையத் தேடும் போது, ஒரு உயரமான மரத்தின் கிளையினைப் பல்லால் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிற மனிதனுக்கு சமமாவோம்" என்றவர், "கீழே சவகாசமாக அமர்ந்திருக்கும் மற்றொரு மனிதன், மேலேத் தொங்கிக் கொண்டிருக்கிறவனைப் பார்த்து, 'மேற்கிலிருந்து போதிதர்மா சைனாவிற்கு வந்ததன் காரணம் என்ன?' என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்வோம் அப்பொழுது மேலேயிருப்பவன் பதில் சொல்லவில்லையென்றால் முட்டாளாக கருதப் படுவான். ஆனால் வாயைத் திறந்தாலோ எமனுக்கு இரையாகிவிடுவான். சொல்லுங்கள், இதிலிருந்து தப்பிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார்.

அங்கிருந்த சீடர்களில் ஒருவனது பெயர் ஹு டோ சாவோ, அவன் எழுந்து நின்று, "எங்களுக்கு அந்த மனிதன் உயரமான மரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைப் பற்றியக் கவலையில்லை. எங்களுக்குத் தேவையானதெல்லாம் யார் அவன், மரத்தின் மேலே ஏறுவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தான்?" என்று பதிலுக்கு ஆசிரியரைப் பார்த்துக் கேள்வி கேட்டான்.

அவன் கூறியதைக் கேட்ட ஷிஷைன் அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினார். சீடனின் பதிலில் திருப்தி அடைந்தவரானார்.

No comments:

Post a Comment