Saturday, April 21, 2012

அரியவனோ எளியவனோ இறைவன் ?

அந்த காவியுடை சாது காட்டிலே அமர்ந்து கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்தார். தினமும் காலையும் மாலையும் நிலை கொள்ளாமல் தவிப்பதும் ஏதோ ஒரு வகைத் தேடலிலும் ஈடுபட்டிருந்ததை கவனித்த வேடன் ஒருவனுக்கு அவர் மேல் இரக்கம் பிறந்தது.

அவரை நெருங்கி “ஐயா தாங்கள் தேடுவது என்னவென்று சொன்னால் என்னால் முடிந்த உதவி செய்கிறேன்” என்றான்.

அவருக்கோ சிரிப்பு வந்தது. மந்திர சித்தியைப் பற்றி அந்த வேடனுக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது?
”உன்னால் முடியாதப்பா” என்று சுருக்கமாக பதில் உரைத்தார்.
முடியாது என்று அவர் சொன்னதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.
“எனக்கு இந்த காட்டில் தெரியாத மரமோ செடியோ பிராணியோ கிடையாது. நீங்கள் தேடும் பொருளை அடையாளம் சொல்லுங்கள். மருந்துக்கான பூவா, இலையா அல்லது ஏதேனும் அரிய பொருளா சொல்லுங்கள். நான் எப்பாடுபட்டாவது உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கிறேன்.” என்று விடாமல் சொன்னான். அவன் அன்புத் தொல்லை தாங்க முடியவில்லை.

”நான் தேடுவது ஒரு விசித்திரமான மிருகம். அதற்கு சிங்கத்தின் தலை, மனிதனின் உடல், கூரிய நகங்கள். அடர்ந்த பிடரி. முடிந்தால் தேடிப் பிடித்து வா” என்று அனுப்பினார்.

“அட இப்படி ஒரு மிருகத்தை நான் கண்டதே இல்லையே ! அப்படி ஒன்று இருந்தால் அது இல்லாமல் திரும்பமாட்டேன்” என்று சொல்லி விசித்திரமான அந்த மிருகத்தைத் தேட ஆரம்பித்தான். அன்றைய பொழுதும் சாய்ந்தது. அடுத்த நாள் விடியும் பொழுது அந்த மிருகம் இன்று கிடைக்காவிட்டால் உயிரை விட்டுவிடுவது என்ற முடிவோடு தேட ஆரம்பித்தான். நீரும் உணவும் இன்றி தேடி அலுத்து நிராசையின் விளிம்பில் இருந்தவனுக்கு திடீரென்று ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது.

அந்த திசையில் சென்றதுமே அந்த விசித்திர மிருகம் கண் முன்னே நின்று கொண்டிருந்தது. ”ஓ நீதானா அது” என்றபடியே சந்தோஷத்துடன் அருகேயிருந்த கொடிகளை அறுத்து அதைக் கட்டி தர தர வென்று இழுத்து வந்து முனிவர் முன் நிறுத்தினான். அந்த விசித்திர மிருகம் ஒரு நாயைப் போல இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தது.

“ சாமி இதோ நீங்க தேடுற பிராணி” என்று மகிழ்ச்சியுடன் கூவினான்.

சாதுவுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. அவருக்கு தெரியவில்லை என்பது வேடனுக்கு புரியவில்லை. “இதோ ..இதோ” என்று மீண்டும் மீண்டும் அது நிற்கும் இடத்தைக் காட்டினான்.

அவன் தன்னம்பிக்கையோடு காட்டும் போது குழம்பிய மனதினராய் அவ்வேடனை பரிதாபமாகப் பார்த்தார். தன் கண்களை நம்புவதா அல்லது அந்த வேடனை நம்புவதா என்று புரியாமல் திகைத்தார். அப்போது சிங்கத்தின் கர்ச்சனை மட்டும் மிக அருகிலிருந்து கேட்டது. அந்த தபஸ்விக்கு உண்மை பளிச்செனப் புரிந்தது.

“பிரபோ இந்த எளியவனுக்கு காட்சி தரும் தாங்கள் என்னை கை விட்டுவிட்டீரே !” என்று கதறினார்.

“அப்பனே காலம் கனியும் போது உன்னிலும் என்னைக் காண்பாய்” என்று அசரீரியாய் பதில் வந்தது.

(மீதிக் கதையைப் பின்னர் பார்ப்போம்)
நமக்கு ஒரு குழப்பம். அங்கே இறைத் தாகத்தில் தவிப்பவனுடைய கண்களுக்கு அரியவனாகி நிற்கிறான். ஏதுமறியா அப்பாவிக்கு வேடனுக்கு எளியவனாகி நிற்கிறான். என்ன ஒரு விந்தை ?
இவன் யார் பிடியில் அகப்படுவான் யார் பிடியில் சிக்கமாட்டான் என்பதைத் தீர்மானிக்க யாராலும் இயலாது. எனவே அவனுடைய நிலைப்பாடு இந்நேரத்தில் இப்படித்தான் இருக்கும் என்று எவரும் அறுதியிட்டு கூற முடிவதில்லை.

அதே குழப்பம் கபீருக்கும் ஏற்படுகிறது.
भारी कहौं तो बहु डरौं, हलका कहूं तौ झूठ ।
मैं का जाणौं राम कूं, नैनूं कबहूँ न दीठ ॥

அரியவன் என்னலும் தயக்கம்,எளியவன் என்பதும் பொய்யே
அறியேன் யானும் இராமனை, விழிகள் கண்டது மில்லையே


(’டரௌ’ என்று கபீர் பயன்படுத்தியுள்ள சொல் ‘பயத்தைக்’ குறிப்பதாகும். அது ’உண்மையற்றதாகி விடும்’ என்ற பயமே தவிர இறைவனைக் குறித்த பயம் அல்ல. தமிழாக்கத்திற்கு தயக்கம் என்ற சொல் பொருத்தமாகத் தோன்றுகிறது )
அலகிலா விளையாட்டு உடையான் அவனடி சரணாவதைத் தவிர இறைவன் போக்கை ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாது.
சாதுவிற்கு அவன் எளியவன் அல்லன். ஆனால் வேடனின் பார்வையில் அவன் அரியனும் அல்லன்.
ஆகையால்தான் ” அவனைப் பற்றி என்ன சொல்ல முடியும்? இராமனை நான் பார்த்ததும் இல்லை”என்று அவன் மகிமையை உணர்த்த இயலாதவராய் அடக்கத்தோடு உரைக்கிறார் கபீர்.

யாருக்கு எது நன்மை செய்யும் அதை எப்போது தரவேண்டும் என்னும் இறைவன் சித்தத்தை யாராலும் அறிய முடியாது என்பதை திருமூலரும் கூறுகிறார்.

அகன்றார் வழிமுதல் ஆதி பிரானும்
இவன்தான் என நின்ற எளியனும் அல்லன்
சிவன்தாள் பலப்பல சீவனும் ஆகும்
நயன்தான் வரும் வழி நாம் அறியோமே


( அகன்றார் = முனிவர்கள்; நயன்தான் வரும் வழி= நன்மைகள் வருகின்ற விதம்)


இப்போது ’காலம் கனியும் போது உன்னில் என்னை காண்பாய்’ என்று சொன்னக் கதைக்கு வருவோம்.

 
எங்கோ மோனத்தில் ஆழ்ந்திருந்த பத்மபாதரின் மனக்கண் முன்னே காபாலிகன் சங்கரரை பலி கொடுப்பதற்கு நெருங்கி வரும் காட்சி விரிந்தது. அவர் உபாசித்த நரசிம்ம மந்திரம் அவரை முழுவதுமாக ஆட்கொண்டது. தன் குருவை காப்பாற்ற வேண்டி பெரும் கர்ஜனையுடன் ஆகாயத்திலே எழும்பி புயல் போல் காபாலிகனின் குகையுள் புகுந்தார்.

முன்னொரு நாளில் இரண்ய கசிபுவை எப்படி கையால் தூக்கி அவன் குடலை நரசிம்மம் உருவியதோ அதே கதியை காபாலிகனுக்குக் கொடுத்தார்.

மற்றவர்கள் ஓடிவந்து சமாதியிலிருந்த சங்கரரை எழுப்பினர். இரத்தத்தில் தோய்ந்த சீடனின் உக்கிர வடிவில் நரசிம்மனை கண்ட சங்கரர் உடனே பிரஹ்லாதனைப் போல உக்கிரத்தை தணிக்க நரசிம்மத் தோத்திரம் இயற்றினார்.

சங்கரரை சிவனின் அவதாரமாகவே சொல்வதுண்டு.

சிவனிடமிருந்து வரம் பெறுவதற்காகவே காபாலிகன் சங்கரரை அணுகி அவரது முழு சம்மதத்தின் பேரிலேயே பலியிடுவதற்கு முற்பட்டான். அவருடைய சங்கல்பமில்லாமல் பத்மபாதருக்கு அந்த உத்வேகம் வந்திருக்காது. எல்லாம் அறிந்த சங்கரர் அவனுக்கு அப்படி ஒரு முடிவை கொடுத்தது ஏன் ?

அங்கே தந்திர மார்க்கத்தின் வழி வந்த காபாலிகனுக்கு முக்தியும் தரவேண்டியிருந்தது. இங்கே பத்மபாதருடைய மந்திரசித்திக்கும் ஒரு பூரணத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

’நன்மைகள் வரும் வழி நாம் அறியோமே’ என்று திருமந்திரம் சொல்வதும் ”அறியேன் யானும் இராமனை” என்று கபீர் கூறுவதிலும் உள்ள உண்மை ஒன்றுதான்.
 
 

No comments:

Post a Comment