Sunday, April 1, 2012

பொருள் பறந்து போய்விடும்-ஆதிசங்கரர்

* ஒளியின் உதவியில்லாமல் எதையும் பார்க்க முடியாது. அதுபோல உள்மனதில் தன்னைப் பற்றிய ஆராய்ச்சியின்றி ஞானத்தை அடைய முடியாது. கண்ணாடி போன்ற தூய்மையான மனதில் ஞானம் தானாகவே விளங்கித் தோன்றும். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் மனதை பரிசுத்தமாக்குவதில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
* நெருப்பிலிட்ட தங்கம் அழுக்கு நீங்கி பிரகாசிப்பது போல், ஒரு குருவிடம் உபதேசம், கேள்வி முதலியவற்றைக் கற்றால், மனமும் அழுக்குகள் நீங்கப்பெற்று ஒளியுடன் பிரகாசிக்கும்.
* பகலும், இரவும், மாலையும், காலையும் பருவகாலங்கள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு காலம் விளையாடுகிறது. வயது கழிகிறது. ஆனால், ஆசை மட்டும் மனிதனை விடுவதில்லை.
* மரணவேளை நெருங்கும் போது இலக்கண சூத்திரங்கள் நமக்கு கைகொடுக்காது. ஆகையால், கோவிந்தனைக் கூப்பிடு. கோவிந்தனைப் பாடி வழிபடு.
* பொருள் தேடும் வரை சுற்றத்தினர் நம்மை நேசிப்பர். நோயினால் உடல் தளர்ந்த பின் யாரும் நம்மை கண்டுகொள்ளமாட்டார்கள். எனவே, பொருள் சேர்ப்பதில் உள்ள ஆசையை விட்டு நல்ல எண்ணங்களை மனத்தில் சிந்தனை செய்வது நல்லது. நம்முடைய நிலைக்கேற்ப பணி செய்து, கிடைக்கின்ற பொருளில் மகிழ்ச்சியாக வாழ்தலே அறிவுடை மையாகும்.

* பொருள், சுற்றம், இளமை முதலியவற்றில் கர்வம் கொள்ளக்கூடாது. காலம் ஒரு கணத்தில் எல்லாவற்றையும் கொண்டு சென்று விடும். அதனால், மறைகின்ற அனைத்தையும் விட்டு இறைவனின் மீது சிந்தனையை செலுத்துங்கள்.
* எதிரி, நண்பன், மகன், உறவினன் என்று பிரித்துப் பார்க்காமல், யாரிடத்தும் நட்பும் பகையும் கொள்ளாமல் எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும்.
* பகவத்கீதையை சிறிதாவது படிப்பவன், கங்கைநீரை துளியாவது பருகியவன், இறைநாமத்தை உள்ளன்போடு ஒருமுறையாவது சொல்பவன் ஆகியோருக்கு உறுதியாக எமபயம் இல்லை.

No comments:

Post a Comment