Monday, April 2, 2012

நாராயணனை வணங்குவோம்--ஆதிசங்கரர்

''ஹரியை நான் துதிக்கிறேன். அவன் சர்வவியாபி. இந்த உலகம் தோன்றுவதற்கு காரணமான பிறப்பும் இறப்பும் மாறி மாறி வருவதைக் குறிக்கும் வகையில் தான், சம்சார சக்கரம் அவனிடம் சுழல்கிறது. இந்த உலகம் அவனிடமிருந்தே தோன்றி உள்ளது. அது ஒன்றாக பிணைக்கப்பட்டிருப்பதும், இன்ப துன்பங்களின் மூலம் இயங்குவதும் அவனால்தான். அவன் ஆனந்தமே வடிவானவன். பூரணமாக இருப்பவன். எண்ணற்ற குணங்களை உடையவன். அவனையன்றி வேறு ஏதுமே இவ்வுலகில் இல்லை.அவன் அனைவருக்குள்ளும் வசிக்கிறான். அவனது உடலே நமது உடல். எல்லாம் தெரிந்த அவனை எவராலும் அறிய முடியாது. அவனே உண்மைப்பொருள். பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், அக்னி, சூரியன், சந்திரன், வாயு, வேள்வி என அவன் பலவிதமாக கூறப்படுகிறான்.
ஏக பரமாத்மாவாகிய அவன் விவரிக்க முடியாத இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டித்து அதன் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவி ஐக்கியப்படுகிறான்.
சிரத்தை, பக்தி, தியானம், தன்னடக்கம் ஆகியவற்றின் மூலம் ஈசனை நாட முயல்வோர், இவ்வுலகிலேயே அவனை விரைவில் அடைவர். இவை இல்லாதவர்கள் நூற்றுக்கணக்கான பிறவிகள் எடுத்தபோதிலும் அவனை அடைய முடியாது.
விஷ்ணு பிரபுவே! என் கர்வத்தை அழித்துவிடு. என் மனத்தின் தீய போக்குகளை அடக்கு. விஷய இச்சைகளான கானல் நீரை நீக்கு. எவ்வுயிரின்பாலும் உள்ள உன் கருணையை என்னிடமும் காட்டு. இந்த சம்சார சாகரத்தினின்று என்னை விடுவித்துவிடு. பல அவதாரங்கள் எடுத்து உலகை நீ என்றும் காக்கிறாய். இவ்வுலக துன்பங்களைக்கண்டு அஞ்சி, இன்று நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறேன்''.
ஆதிசங்கரர்

காசி விஸ்வநாதரை வழிபடுங்கள்

* 'நமசிவாய' என்னும் பஞ்சாட்சரத்தின் ஐந்து ழுத்துக்களும் சிவனையே குறிக்கிறது. அச்சிவனை நான் வணங்குகிறேன். அவன் நாகேந்திரனை மாலையாகக் கொண்டவன். முக்கண்ணன்; வெண்ணீறு பூசுபவன்; மகேஸ்வரன், நித்தியன், பூரணன், திசைகளை ஆடையாக உடையவன். நந்தியின் நாதன் அவன். மந்தாரை மலரும் இதர மலர்களும் அவனை அணி செய்கின்றன. தெய்வீக அன்னையான கவுரியின் தாமரை முகத்தை மலரச் செய்யும் உதய சூரியன். சதியை அவமானம் செய்த தக்கனின் வேள்வியை நாசம் செய்தவன். தேவர்களைப் பாதுகாக்க விஷத்தை உண்டு நெஞ்சில் அடக்கிக் கொண்ட நீலகண்டன். தன் கொடியில் எருதைச் சின்னமாகக் கொண்டவன்.
* வசிஷ்டர், அகஸ்தியர், கவுதமர் முதலிய மகரிஷிகளால் மட்டுமின்றி தேவர்களாலும் தேவர்களில் சிறப்பு மிக்கவன் என வழிபடப்பட்டவன்.
* சந்திரனும் சூரியனும் அக்கினியும் அவனுடைய முக்கண்கள். வேள்வியின் சொரூபம் அவன்.
* ஆசைகள் யாவற்றையும் துறந்தும், பிறரை நிந்திக்கும் இயல்பை ஒழித்தும், பாவவினைகள்பால் பற்று விடுத்தும், மனதைச் சமாதி நிலையில் திருப்பியும், இதயத்தாமரையில் அமர்ந்துள்ள விஸ்வநாதன் என்னும் மகேசனை தியானம் செய்யுங்கள். அவன் வாரணாசீபுரத்தின் (காசி) பதி. நாராயணப் பிரியன். தெய்வ அன்னையான கவுரியை தன் இடதுபக்கத்தில் அலங்காரமாகக் கொண்டவன். சந்திரனால் அழகுபெற்ற கிரீடமுடையவன். கங்கையின் நீர்த்திவலைகளுடன் கூடியதும், ரமணீயமானத் தோற்றமளிப்பதுமான சடை முடியுடையவன். முக்கண்ணன், நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட கோபாக்னியால் காமனைச் சுட்டெரித்தவன். இவனை வழிபட்டால் பாவம் நீங்கும்.

No comments:

Post a Comment