Friday, January 30, 2015

ஓஷோவின் விளக்கம்


கேள்வி – பதில்
தியானம் என்றால் என்ன - பகுதி – 1
தியானம் என்ற இந்த வார்த்தை தவறாகவும் குழப்பமானதாகவும் இருக்கலாம், ஏனெனில் தியானம் என்பதற்கு ஆங்கிலத்தில் மூன்று வார்த்தைகள் உள்ளன. கான்சென்ட்ரேஷன் – கான்டெம்லேஷன் – மெடிடேஷன் – அதாவது ஒருமுகப்படுத்துதல், சிந்தனை, தியானம். ஆனால் இந்த மூன்று வார்த்தைகளுமே சமஸ்கிருத வார்த்தையான தியானா என்ற வார்த்தையை மொழிபெயர்க்க போதுமானதாக இல்லை. புத்தர் உபயோகித்த பாலி மொழியில் முதலில் அது ஜானா என்று கூறப்பட்டது. ஜானா என்ற பாலி மொழி வார்த்தைதான் சமஸ்கிருத மொழியில் தியானா என்று உச்சரிக்கப்பட்டது. போதிதர்மர் புத்தரின் கொள்கைகளை சீனாவுக்கு எடுத்துச் சென்றபோது அது ஜானாவிலிருந்து சானா என்று மாறியது. ரின்ஜாய் சீனாவிலிருந்து அந்த கொள்கையை ஜப்பானுக்கு எடுத்துச் சென்ற போது சானா என்பதிலிருந்து அது ஜென் என்று உருமாறியது. அது புத்தரின் ஜான் அல்லது ஜானா என்பதற்கு அருகில் வருகிறது.
ஆனால் அதற்கிணையான வார்த்தை ஆங்கிலத்தில் இல்லை. ஏனெனில் மெடிடேஷன் என்ற ஆங்கில வார்த்தை எதன் மீதாவது கவனம் வைப்பது என்ற அர்த்தத்தை கொடுக்கிறது. எதன் மீதாவது கவனத்தை குவிப்பது, எதைப் பற்றியாவது சிந்தனை செய்வது, எதைக் குறித்தாவது தியானம் செய்வது என்பது போல – ஆனால் தியான் அல்லது ஜென் என்றால் எந்த பொருளும் இல்லை.
ஜென் என்றால் ஒருமுகப்படுத்துவதோ, சிந்தனை செய்வதோ, எதன் மீதாவது தியானம் செய்வதோ அல்ல. ஏனெனில் அதற்கு எந்த பொருளும் இல்லை. நீ இருக்கிறாய், அவ்வளவுதான். மௌனமாக, மனமின்றி, எந்த எண்ணங்களுமின்றி இருக்கிறாய்.
இதனால்தான் சிகிடோ தியானத்தைப் பற்றி கூறும்போது ஒருவர் ஞானமடைய தியானமோ அல்லது எந்த வித இடைவிடாத முயற்சியுமோ தேவையில்லை. என்று கூறுகிறார்.
ஆனால் உங்களுடைய புரிதலுக்காகவும் தெளிவுக்காகவும் நான் தியானத்தைப் பற்றி பேசும்போது மெடிடேஷன் என்ற இந்த வார்த்தையைத்தான் உபயோகிக்க வேண்டி வருகிறது. இது ஒரு பொருளற்ற வார்த்தை, இதற்கு தியானம் அல்லது ஜென் ஆகியவற்றின் குணம் கிடையாது. ஆனால் ஆங்கிலத்தில் வேறு வார்த்தை இல்லாததால் நான் இதை உபயோகிக்கிறேன்.
வேறு எந்த வார்த்தையும் இல்லை என்பதற்கு ஒரு காரணம் உண்டு. மேற்கத்திய நாடுகளில் தியானம் என்ற நிலை வரை வரவேயில்லை. ஒருவர் வெளியுகத்திலும் உள்உலகத்திலும் எதுவும் செய்யாமல் வெறுமனே தானாயிருக்கும் நிலை வரை வளரவேயில்லை. ஒருவர் வெறுமனே ஒரு ஆழ்ந்த அமைதியில் இருப்பில் இருத்தல். அது உன்னை உன் மையத்தினுள் கொண்டு வரும், நீ உள் மையத்தில் இருக்கும் கணம் நீயும் ஒரு புத்தனாக ஞானமடைந்த ஒருவராக வளர்கிறாய். உன்னுடைய விழிப்புணர்வு முதல் முறையாக, எப்படி இரவு முடிந்து சூரியன் உதயமாகி காலை வந்தவுடன் ஒரு தாமரை தனது இதழ்களை விரிக்கிறதோ அப்படி தனது இதழ்களை விரிக்கிறது.
சிகிடோ கூறியது மிகவும் சரிதான் எந்த வித முக்கியமான ஒழுங்குமுறையும் தேவையில்லை. எந்த வித குறிப்பிட்ட விதிமுறையும் தேவையில்லை. எந்த வித மனம் குறித்த முயற்சியும் தேவையில்லை. அதைத்தான் அவர் தியானம் என்று குறிப்பிடுகிறார். எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்தல் மட்டுமே தேவை. மனம், உடல், இதயம் ஆகிய எல்லாவற்றையும் கடந்து விடு. இதுதான் சாலையின் எல்லை என்ற இடம் வரை எல்லாவற்றையும் கடந்து சென்று கொண்டே இரு. அந்த எல்லையில் நீ மட்டுமே இருப்பாய்.
பாஷோ கூறுகிறார் :
அமைதியாக அமர்ந்திரு
எதையும் செய்யாதே
வசந்த காலம் வரும்
புல் தானாகவே வளரும்.
நீ எதையும் செய்ய வேண்டிய அவசியமில்லை, வெறுமனே அமர்ந்திரு, எதையும் செய்யாதே. ஏனெனில் நீ செய்யும் எதுவும் உன்னை உன்னிடமிருந்து எடுத்து சென்று விடும். நீ எதையும் செய்யாத போது முழு சக்தியும் உள்ளே சேருகிறது, அது வேறு எங்கும் செலவிடப்படுவதில்லை. நீ உனது மனதை கடக்கும் போது உனது எண்ணத்தில் செலவிடப்பட்டுள்ள சக்தி விடுவிக்கப்படுகிறது. நீ உனது இதயத்தை கடக்கும்போது உனது உணர்ச்சிகளில், உணர்வுகளில், பந்தபாசங்களில், பிடிப்புகளில் சிக்கியுள்ள சக்தி விடுவிக்கப்படுகிறது.
நீ இப்போது அளவற்ற சக்தியால் நிரம்பி இருக்கிறாய். இந்த அளவற்ற சக்தி உனக்கு பிரபஞ்சத்தின் முதல் சுவையை தரும். இந்த அளவற்ற சக்தி மிகபிரம்மாண்டமான தூண் போல விண்ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நிற்கும் போது நீ அண்டத்துடன் உள்ள தொடர்பை காண்கிறாய். நீ இனிமேலும் தனியானவன் அல்ல. உண்மையில் நீ என்பது இல்லை. பிரபஞ்சம் மட்டுமே இருக்கிறது. பின் இந்த பிரபஞ்சம், இந்த அண்டம், இந்த வாழ்வு எல்லாமே ஒரு நடனம்தான்.
நான் உங்களுக்கு நடனமாட சொல்லிக் கொடுக்கிறேன்.
நான் உங்களுக்கு நேசமானவர்களாக இருக்க சொல்லிக் கொடுக்கிறேன்.
நான் முழுக்க முழுக்க வாழ்வுக்கு ஆதரவானவன், உங்களது அனைத்து மதங்களும் வாழ்க்கைக்கு எதிரானவை.
நான் இந்த நிகழ்கால கணத்திற்கு முழுக்க முழுக்க ஆதரவானவன். இறந்த காலத்தில் நுழைய வேண்டியதில்லை, ஏனெனில் அது நினைவு மட்டுமே. உனது நினைவு எந்த விதத்திலும் பிரபஞ்சத்துடன் தொடர்புடையதல்ல. எதிர்காலத்தில் நுழைய வேண்டியதில்லை, ஏனெனில் அது கற்பனை மட்டுமே.
இங்கே மட்டுமே இரு, நீ ஆச்சரியப்படுவாய். நீ இப்போது இங்கே மட்டுமே இருந்தால் எல்லா எண்ணங்களும் மறைந்து விடும். ஏனெனில் எல்லா எண்ணங்களும் இறந்த காலத்தை சேர்ந்ததாகவோ எதிர் காலத்தை சேர்ந்ததாகவோ தான் இருக்கும். எந்த எண்ணமும் நிகழ்காலத்தை சேர்ந்ததில்லை.
நிகழ்காலம் மிகவும் தூய்மையானது, சுத்தமானது, தெளிவானது, அது அண்டத்துடன் இணைய ஒரு இணைப்பு. இதுதான் ஜென். இதுதான் நிலையான வாழ்வினுள் நுழைய இருக்கும் சாவி. நிலையான வாழ்வின் உணர்வே எல்லா பதட்டங்களையும், முதுமை இறப்பு பிறப்பு நோய் ஆகியவற்றின் வேதனைகளையும் உன்னிடமிருந்து எடுத்துவிடும்.
நீ பிறக்கவேயில்லை, மேலும் நீ இறப்பதேயில்லை.
இந்த உடல் மட்டும் தான் மாறிக் கொண்டேயிருக்கிறது
நீ வீடுகளை மட்டும்தான் மாற்றிக் கொண்டேயிருக்கிறாய்
ஆனால் நீ உண்மை, நிஜமானவன்.
சத்தியம் வெளியே எங்கோ இல்லை, அது ஆழ் மையத்தில் உள்ளே இருக்கிறது.
அதனால் ஜென் என்பது எதையும் செய்யாமல் வெறுமனே இருப்பது. அந்த ஆழ்ந்த மௌனத்தின் இருப்பில் நீ தளர்வு கொள்ள கொள்ள வசந்த காலம் வரும், புல் தானாகவே வளரும். நீ திடீரென மலர்வாய் – உனது கண்களில் ஒரு ஆழம் வரும். உனது தோற்றத்தில் ஒரு புதிய பொலிவு வரும், உனது ஒவ்வொரு செயலும் சந்தோஷமானதாக மாறும். அது மரம் வெட்டுவதாக இருந்தாலும் சரி, கிணற்றிலிருந்து நீர் இறைப்பதாக இருந்தாலும் சரி அது என்னவாக இருந்தாலும் சரிதான்.
I celebrate myself : God is no where life is nowhere che # 1

No comments:

Post a Comment