Thursday, January 1, 2015

சேஷாத்ரி சுவாமிகள் - நோய் என்ன செய்யும்? சிறை என்ன செய்யும்? - 2

சுவாமிகள் எப்போதும் ஓர் இடத்தில் நிலையாக நிற்க மாட்டார். அரை மணிக்கு மேல் அவரை யாரும் ஒரே இடத்தில் பார்க்க முடியாது. கால் போன போக்கில் எங்காவது சுற்றிக் கொண்டே இருப்பார். மரத்தின் அடியில் அமர்ந்து ஞானம் அடைந்த புத்தரைப் போல அல்லாமல் நடந்து நடந்தே ஞானமடைந்த அதிசயப் புயல்காற்று அவர்.
கிழிந்து போன ஆடைகளும், குளிக்காத உடலும், அழுக்கடைந்த தலைமுடியும். பார்ப்பதற்கு பைத்தியக் காரனைப் போன்ற தோற்றமும் கொண்டவர் மகான் சேஷாத்திரி சுவாமிகள். இதனால் அவரைப் பற்றித் தெரியாதவர்கள், அவரை விரட்டிவிடுவதும் உண்டு. சில பண்டிதர்களும், படாடோபப் பேர்வழிகளும் ‘இந்தக் கிறுக்கனை சித்தபுருஷன் என்று மூளையில்லாத மக்கள் நம்புகிறார்களே’ என்று கேலி செய்வதும் உண்டு.
1928ஆம் ஆண்டு, திருவண்ணாமலையில் உள்ள மக்களை அம்மை நோய் தாக்கியது. பெரியம்மைநோய் பரவியதில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தனர். நாளுக்கு நாள் அந்த நோய் கட்டுக்கடங்காமல் பெருகி மக்களை பலிவாங்கிக் கொண்டிருந்தது. சேஷாத்திரி சுவாமிகளையும் அம்மை நோய் தாக்கியது. அவர் ஓரிடத்தில் நிலையாக இருக்க மாட்டாரே! நோய் கண்ட சுவாமிகளை ஒரே இடத்தில் இருக்கும்படியாகவும், வெளியே சுற்றக்கூடாது என்றும் சுகாதார இலாகாவினர் எச்சரித்தனர்.
இதற்கெல்லாம் கட்டுப்படுபவரா நம் சுவாமிகள்? அவர் தன் வழக்கப்படியே வெளியே சுற்றித் திரிந்தார். அதனால் நோய் எல்லாருக்கும் பரவும் என்று பயந்த அதிகாரிகள் அவரை இழுத்துச் சென்று வழக்குமன்றத்தில் நிற்க வைத்தனர். நீதிபதி அவரை ஒரு மாதம் சிறையில் வைக்கும்படியாக உத்தரவிட்டார். அதனால் சுதந்தரமாகத் திரிந்த பறவை கூண்டுக் கிளியாகி விட்டது.
மறுநாள் காலையில் தண்டனை வழங்கிய நீதிபதி காரில் திண்டிவனம் அருகே சென்றபோது, சேஷாத்திரி சுவாமிகள் சாலையில் ஒரு புளியமரத்தின் அடியில் நிற்பதைக் கவனித்து ஆச்சரியம் அடைந்தார். தன் உதவியாளரிடம் அது குறித்துப் பேசும் போது, திருவண்ணாமலை நகைக்கடை செட்டியார் இராமசுவாமி என்பவர் அங்கே வந்தார். சுவாமிகளைக் கண்டு வணங்கினார். நீதிபதியிடம் அவர் மகானின் பெருமைகளைக் கூறினார்.
அவற்றை நம்பாத நீதிபதி தன் உதவியாளரை அனுப்பி சிறையில் சேஷாத்திரி இருக்கிறாரா? என்று பார்த்து வரும்படியாகச் சொல்லி அனுப்பி வைத்தார். மகானைக் கண்காணிக்க அவர் அங்கேயே தங்கிவிட்டார்.
“மகான் சேஷாத்திரி சுவாமிகளை யாராலும் சிறையில் அடைக்க முடியாது. அவர் பெருமையை அளவிட முடியாது” என்று செட்டியார் நீதிபதியிடம் எடுத்துக் கூறினார். நீதிபதி அவர் சொல்வதைக் கேட்கவில்லை. எனவே செட்டியார் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார்.
சிறிது நேரத்தில் சிறைக்குச் சென்ற உதவியாளர், பூட்டியிருந்த சிறைக்குள்ளே சுவாமிகள் கண்களை மூடியவண்ணம் படுத்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அச்சத்தால் வெளிறிப்போன முகத்தோடு மரத்தின் அடிக்கு வந்து நீதிபதியிடம் நடந்ததைச் சொன்னார். அப்போதும் நம்பாத நீதிபதி விரைந்து வந்து சிறைக்குள் பார்த்தார். சுவாமிகள் சிறையில் நின்றிருந்தார்.

மகானின் பெருமையை உணர்ந்த நீதிபதி, அவரை விடுதலை செய்து, தான் செய்த தவறுக்காக மன்னிக்கும்படியாகவும் வேண்டிக்கொண்டார். சுவாமிகள் மௌனமாக சிறையிலிருந்து வெளியேறினார்.

No comments:

Post a Comment