Thursday, January 1, 2015

சேஷாத்ரி சுவாமிகள் - சிறை செய்தால் அறை விழும்!

இது போன்ற சித்து விளையாடல் ஒன்றை சற்று வேறுவிதமாக சுவாமிகள் 1928ஆம் ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழாவின் போது நிகழ்த்தினார். ஈ மொய்த்த தின்பண்டங்களை விற்றுக் கொண்டிருந்த கடைக்காரனிடம் சுவாமிகள் ‘இதை விற்காதே’ என்று எச்சரித்தார். அவருடைய எச்சரிக்கையை அலட்சியப்படுத்தினான் கடைக்காரன். இரண்டு முறை எச்சரித்த சுவாமிகள் மூன்றாவது முறை கடையில் இருப்பவற்றை எடுத்து வீதியில் கொட்டிவிட்டுச் சென்றார்.
கடைக்காரன் வெளியூரிலிருந்து வியாபாரம் செய்ய வந்தவன். சேஷாத்திரி சுவாமிகளின் பெருமை அறியாத அந்த முரடன் காவல் துறையில் புகார் செய்தான். போளூரிலிருந்து திருவண்ணாமலைக்கு திருவிழா பணிசெய்ய வந்த இன்ஸ்பெக்டர், மகானின் பெருமை அறியாமல் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டார்.
அடுத்த அரைமணியில் அந்தச் செய்தி ஊர்முழுவதும் பரவி, மக்கள் கொதிப்படைந்து, காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சுவாமிகளை வெளியே விடச்சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் பிடிவாதமாக திருவிழா முடிந்தபிறகே சுவாமிகளை வெளியே விடமுடியும் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார். சுவாமிகளுக்கு கெடுதல் செய்தால் பெரும் அபாயத்தைச் சந்திக்க வேண்டிவரும் என்று மக்கள் எச்சரித்தனர். இன்ஸ்பெக்டர் அதை இலட்சியம் செய்யவில்லை.
ஆனால் அடுத்த அரைமணியில் போளூரிலிருந்து அவருக்குத் தந்தி வந்தது. அவர் மனைவி கொடுத்திருந்தாள். இன்ஸ்பெக்டரின் ஐந்து வயது மகன், அறைக்குள் சென்று கதவைத் தாழ் போட்டுக் கொண்டான். “கதவைத் திறக்கத் தெரியாமல் பயந்து அழுது, மூர்ச்சையாகக் கிடக்கிறான். உடனே புறப்பட்டு வரவும்” என்று தந்தி தெரிவித்தது.
இன்ஸ்பெக்டர் அவசரமாகக் புறப்பட்டு போளூருக்குச் சென்றார். வீட்டின் முன்னால் பெரும் கூட்டம் கூடியிருந்தது. அறையில் ஜன்னல் எதுவும் இல்லை. மேலும் கதவை உடைத்து எடுக்கமுடியாத வகையில் அந்த அறை அமைந்திருந்தது.
அந்த நிலையில் திருவண்ணாமலையிலிருந்து அவருக்கு ஒரு தந்தி வந்திருந்தது. அதில் மகானை சிறையில் அடைக்காமல் விடுதலை செய்யும் படியாக மக்கள் கேட்டிருந்தனர். அவர் மனைவி இந்த விஷயத்தை அறிந்து பதறினாள். அவளுக்கு சேஷாத்திரி சுவாமிகளைப் பற்றித் தெரியும். “மகானின் பெருமை அறியாமல் அவரைச் சிறையில் அடைத்து விட்டீர்கள். அந்தப்பாபம் தான் நம் மகன் இப்போது அறைக்குள் சிக்கிக் கொண்டான். அவரை முதலில் வெளியே விடச் சொல்லுங்கள்” என்று அழுதாள்.
இன்ஸ்பெக்டருக்கு தன் தவறு புலப்பட்டது. சுவாமிகளை விடுவிக்கும்படி திருவண்ணாமலைக்கு தந்தி ஒன்று கொடுத்தார். அவரே வியந்து போகும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
அடுத்த இரண்டாவது நிமிடம் அறைக்குள் கிடந்த அவருடைய மகன் மயக்கம் தெளிந்து எழுந்தான். வெளியே இருப்பவர்கள் சொல்லியதைப் புரிந்து கொண்டு, முரண்டு செய்யாமல், அச்சம் கொள்ளாமல் தானே கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். இது எப்படி நடந்தது? ஆச்சரியப்பட்டுப் போனார் இன்ஸ்பெக்டர். சுவாமிகளின் மகத்தான சக்தியை அறிந்த அவர் அன்றே குடும்பத்தோடு புறப்பட்டுச் சென்று, சேஷாத்திரி சுவாமிகளை வணங்கி தன் செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment