Thursday, January 1, 2015

மகான் சேஷாத்ரி சுவாமிகள்! - 1

சேஷாத்திரி சுவாமிகள் வரதராஜன், மரகதம் தம்பதிக்கு 1870ஆம் ஆண்டு, ஜனவரித் திங்கள் 22ஆம் தேதி மகனாகத் தோன்றினார். சிறு குழந்தையாக இருக்கும் போதே சில சித்து விளையாடல்களை சேஷாத்திரி சுவாமிகள் நடத்தியிருக்கிறார்.
திருவண்ணாமலையில் சேஷாத்திரி சுவாமிகள் ஒரு நாள் கடைவீதியில் வந்து கொண்டிருந்தார். சிறு வியாபாரிகளும் பெரும் வியாபாரிகளும் அவர் தனது கடைக்குள் நுழைய மாட்டாரா? என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தனர். சுவாமிகளின் கரம் ஒரே ஒரு முறை கடைப்பொருள்களை ஸ்பரிசித்தது விட்டால் போதும், அவ்வளவுதான். அத்தனை பொருள்களும் அன்று மாலைக்குள் விற்றுத் தீர்ந்துவிடும். நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு வியாபாரம் நடந்து பணம் குவிந்து விடும். அதனால் தான் வியாபாரிகள் அவரைக் கடவுளைப் போல எண்ணி எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
சுவாமிகள் லேசுப்பட்டவரல்லர். அவ்வளவு எளிதில் ஏதோ ஒரு கடைக்குள் நுழைந்து விடமாட்டார். நல்ல குணமும், நேர்மையும் கொண்ட வியாபாரிகளின் கடைக்குள் மட்டுமே அவர் விஜயம் செய்வார். அவ்வாறே அன்றும் கடைவீதியின் தொடக்கத்திலிருந்து கடைசி வரையில் அவர் நோட்டம் விட்டவாறே சென்றார்.
என்ன நினைத்துக் கொண்டாரோ ஒரு கடைக்குள் நுழைந்தார். அது முத்தியாலு செட்டியாரின் மளிகைக்கடை. சுவாமிகள் உள்ளே சென்று, ஒரு மூலையில் இருந்த பெரிய நெய் டின்னை எடுத்துத் தூக்கிக் குப்புறக் கவிழ்த்தார். நெய் தெருவில் ஓடியது. மண்ணில் கலந்தது.
செட்டியாரோ சிறிதும் கவலை கொள்ளாமல் புன்னகையோடு சுவாமிகளைப் பார்த்துப் பக்தியோடு கும்பிட்டுக் கொண்டிருந்தார். சுவாமிகள் கடையிலிருந்து வெளியெறிச் சென்றார். மறுநாளே செட்டியாருக்கு வராமல் போக்குக் காட்டிய நீண்ட நாளைய கடன் தொகை கேட்காமலேயே வந்து சேர்ந்தது. சேஷாத்திரி சுவாமிகளின் திருவிளையாடல் தான் வராத கடனை வரவழைத்துக் கொடுத்தது என்பதில் செட்டியாருக்கோ திருவண்ணாமலை வியாபாரிகளுக்கோ சிறிதளவும் சந்தேகமில்லை.

No comments:

Post a Comment