Friday, July 25, 2014

மனம்....


இன்று உலகம் எதிர்நோக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இந்த மனம் தான் காரணம் என்றால் மிகையல்ல. ஏனனில் மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பு. சிறைக்கூடம். இதில் புதிய எண்ணங்கள் மட்டும் கைதிகளல்ல. பழம் பெரும் கைதிகளும் இருக்கின்றன. சிலர் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். சிலர் தேவையானபோது மட்டும் வெளிவருவர். சிலர் வெளிவரும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். நம் மனதில் இவ்வளவு காலமும் இது இருந்ததா என. இந்த மனதிலிருந்தே உலகத்தில் உள்ள எழுத்துக்கள் சொற்கள் அதிலிருந்து வசனங்களும் எண்ணங்களும் சிந்தனைகளும் பிறந்தன. இவற்றின் பிறப்பில் ஒருதவறும் இல்லை. இவை நம்மை வழிநடாத்த நாம் எருமை மாடுகள் போல் இயந்திரமாக இதன் பின் இயங்கிக்கொண்டிருப்பது தான் தவறு.
நமது பிரக்ஞையின் கட்டுப்பாட்டில் நம் மனம் இருக்கவேண்டும். மனம் சிறந்த சேவையாற்றும் உறுப்பு நுட்ப வேலைதிறன் கொண்டது. ஆனால் மிக மோசமான முதலாளி. நம் அனைவரினதும்இன்றைய முதலாளி நம் மனமே. மனதை நாம் சரியான வழியில் பயன்படுத்த தவறிவிட்டோம். நம் பிரக்ஞையின்றி நம் மனதிலிருந்துதான்தோன்றித்தனமான எண்ணங்களும் சிந்தனைகளும் வெளிவருவதற்கு நாம் காரணமாகிவிட்டோம். இன்று இவற்றை இல்லாது செய்வது பெரும் பணியாக உள்ளது. நம் மனம் எப்பொழுது தான்தோன்றித்தனமாக சிந்தனைகளை வெளிவிடுவதை நிறுத்தி நம் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றதோ அன்று நாம் சரியான பாதையில் செல்கின்றோம் என்பதை உத்தரவாதப்படுத்தலாம். நம் மனதை முதலாளி பதிவியிலிருந்து கீழ் இறக்கி நம் வேலையாளாக மாற்றிவிடுவோமானால்
நம் பிரச்சனைகளில் தொன்னூறுவீதம் இல்லாமல் போய்விடும் என ஓசோ கூறுகின்றார்.ஏனனில் நமக்காகவே மனம் செயற்படவேண்டும். மனதிற்காக நாம் வாழவில்லை.
மனம் என்றால் என்ன எவ்வாறு இயங்குகின்றது என்ற ஆழ்ந்த புரிதலே நாம் மனதிலிருந்து விடுபட வழி வகுக்கும். மாறாக மனதுடன் சண்டையிடுதோ அல்லது அடக்குவதோ மனதை மேலும் பலப்படுத்தும்.
நம் பிரஞையற்ற தன்மை நமக்குள் கீழ் நோக்கி ஆழமாக வேருண்டியுள்ளது.
பிரக்ஞையின்மை (unconscious)
உபபிரக்ஞையின்மை (sub unconscious)
கூட்டுப்பிரக்ஞையின்மை (Collective unconscious)
பிரபஞ்ச பிரஞையின்மை (Cosmic unconscious)
என நமக்குள் நம்மையறியாமலே பல இருக்கின்றன.
ஒவ்வொன்றாக இவற்றை நாம் அகற்றவேண்டும்.
இவை ஒவ்வொன்றும் நம் கடந்தகாலங்கள். நம்மால் அடக்கப்பட்டவை. ஒதுக்கப்பட்டவை.

No comments:

Post a Comment