Friday, May 25, 2012

சூரதாசர்

சூரதாசர், கவியரசர் என்று புகழப்பெற்றவர். பிறவியிலேயே பார்வையற்ற இந்த அருட்கவி அருளிய கவிதைகள் ஏராளம். எல்லாம் கருத்தாழம் மிக்கவை. அர்த்தம் பொதிந்தவை. அவைகளின் பெருமைகளையும், உயர்வையும் கருதி அவற்றிற்கு சூரஸாகரம் என்று பெயரிட்டுள்ளனர். துளசிதாசர், கேசவராயர் போன்ற மகான்களின் கவிதைகளுக்கு ஈடாக இவரது கவிதைகளும் சிறப்பாக கருதப்படுகிறது. இவர் முற்பிறவியில் கண்ணனுடைய அன்பிற்கு உகந்த அக்ரூரராக இருந்தவர். துவாரகையில் கண்ணனுடன் வசித்துவந்தார். ஒரு சமயம் இவர் கண்ணனின் அந்தப்புரத்திற்கு சென்றபோது சத்தியபாமா மிகவும் துக்கத்துடன், தன்னைக் கண்ணன் மிகவும் அலட்சியப்படுத்துவதாக குறைசொன்னாள். இன்னும் ஒரு நாழிகை பொழுதிற்குள் தன்னை அவர் தேடி வராவிட்டால் உயிர் துறக்கப்போவதாக புலம்பினாள். சத்தியபாமா சொன்னதை செய்பவள் என்பதை ஏற்கனவே அறிந்திருந்த அக்ரூரர், ஒரு நாழிகைக்குள் கண்ணனை தேடி கண்டுபிடித்துவர புறப்பட்டார். ஆனால் கண்ணனை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே தானே கண்ணனைப்போல் வேடமிட்டு சத்தியபாமாவின் முன் தோன்றி அவளை சமாதானம் செய்தார். பிறகு கண்ணனை தேடிபிடித்துவிட்டார். அவரிடம் தான் செய்த தந்திரத்தை கூறினார். கண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது.
நீ பூலோகத்தில் பார்வையற்றவனாக பிறப்பாய் என்று சபித்துவிட்டார். சத்தியபாமாவை அழைத்து, நீ செய்த தவறுக்காக ஒரு அரசனின் பணிப்பெண்ணாக பிறப்பாய், என சாபமிட்டார். இருவரும் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி கண்ணனிடம் மன்னிப்பு கேட்டனர். கண்ணன் அவர்கள் மீது இரக்கம் கொண்டு, நான் கொடுத்த சாபத்தை திரும்பப் பெற முடியாது. இருப்பினும் உங்களை பூலோகத்தில் வந்து தடுத்தாட்கொள்வேன், என்று அருளினார். கண்ணனின் சாபப்படி சூரதாசர் மதுரா நகரில் பிறந்தார். தன் அகக்கண்களினால் இறைவனைக் கண்டு அவனது திருவிளையாடல்களையெல்லாம் கவிதையாக்கி, தனது இனிய குரலால் மக்கள் நெஞ்சில் பதியும்படி பாடிவந்தார். முற்பிறவியில் இவர் சிறந்த பக்திமானாக இருந்ததால் நல்ல சங்கீத ஞானத்துடன் பாடிய சுவை கொட்டும் கீதங்களை மக்கள் அமுதமாக மதித்தனர். இவர் பாடும்போதெல்லாம் கண்ணனே நேரில் வந்து கேட்டு இன்புறுவது வழக்கமாயிற்று. அவ்வூர் அரசனுக்கு சங்கீதத்தில் அபரிமிதமான ஆவல் இருந்தது. பல வித்வான்களை அழைத்து பாடச்சொல்லி அவர்களை கவுரவித்து வந்தான். சூரதாசரின் திறமையைக் கேள்விப்பட்ட அரசன் தனது அரசவைக்கு அவரை சகல மரியாதைகளுடன் அழைத்துவரச் சொல்லி பாட வேண்டினான். சூரதாசர் பாடத் தொடங்கியவுடன் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. வீணையுடன் கலைவாணியும், ஜால்ராவுடன் விநாயகரும் வந்து அமர, தேவகன்னிகைகள் நாட்டியமாடினர். மனமோகன வேணுகோபாலன் சங்கு, சக்ர பீதாம்பரதாரியாய் அங்கு வந்து அமர்ந்து சூரதாசரின் பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார். காணக்கிடைக்காத அந்தக் காட்சியை அனைவரும் கண்டு மகிழ்ந்தனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் கண்ணனும், இதர தெய்வங்களும் அப்படியே மறைந்துவிட்டனர். அரசனின் வேண்டுகோளுக்கிணங்க சூரதாசர் அரண்மனையிலேயே தங்கி, மக்களுக்கு பக்தியை இசை மூலம் போதிக்கலானார். அந்தப்புரத்தில் உள்ள அரசிகள் அரசவையில் தோன்றிய அற்புத காட்சி பற்றி கேள்விப்பட்டு தாங்களும் அதைப்பார்த்து இன்புற வேண்டுமென அரசனை வற்புறுத்தினார்கள். அரசனும் சூரதாசரை அந்தப்புரத்திற்கு வரவழைத்து பாடும்படி கேட்டுக்கொண்டான். அந்தப்புர சபா மண்டபத்தில் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக்காலத்தில் அரசனின் அந்தப்புர பெண்கள் கோஷா முறையில் முகத்தை மறைத்து ஆடை அணிந்துகொள்வார்கள். பிற ஆண்களின் முன்னால் உட்கார மாட்டார்கள். பிற ஆண்கள் அந்தப்புர பெண்களை பார்ப்பதை தவிர்ப்பதற்காகவே இந்த முறை கையாளப்பட்டது. கச்சேரிக்கு அரசனைத்தவிர யாரும் அழைக்கப்படவில்லை. சூரதாசருக்கோ கண் தெரியாது. எனவே அவரால் அந்தப்புர பெண்களை பார்க்க முடியாது என்பதால் எல்லா பெண்களும் முகத்தை மறைக்காமல் சாதாரணமாக மண்டபத்தில் வந்து அமர்ந்தனர்.
நிகழ்ச்சி துவங்கியது. சூரதாசர் பாட ஆரம்பித்ததும் அனைவரும் இசை இன்பத்தில் மெய்மறந்து முகத்தில் புன்னகை மலர அதிலேயே மூழ்கிவிட்டனர். சூரதாசர் கல்லும் கனிந்து கனியாகும் வண்ணம் பாடிக்கொண்டிருந்தார். அந்தக்கூட்டத்தில் சாபம் பெற்ற கண்ணனின் மனைவி சத்தியபாமாவும் பணிப்பெண்ணாக அமர்ந்து இசையை கேட்டு ரசித்துக்கொண்டிருந்தாள். இறைவன் தன் மாயையினால் சூரதாசருக்கு கண்ணொளி கிடைக்கும்படி செய்து சத்தியபாமாவை அடையாளம் தெரியும்படி செய்தார். உடனே சூரதாசர், அம்மா தாயே! சத்தியபாமா தேவியே! நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்? என்று கேட்டு பாட்டை பாதியிலேயே நிறுத்தினார். இதைக்கேட்ட அரசனும், அந்தப்புர பெண்களும் திடுக்கிட்டனர். பிறவியிலேயே பார்வையற்ற இவருக்கு எப்படி கண்ணொளி வந்தது? பணிப்பெண்ணை எப்படி அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது என்றெல்லாம் வியந்தனர். வணங்குதற்குரிய கண்ணனின் மனைவியான சத்தியபாமாவை இதுவரை பணிப்பெண்ணாக குற்றேவல் புரியும்படி செய்துவிட்டோமே என மன்னனும் அந்தப்புர பெண்களும் வருந்தி, தங்களை மன்னிக்கும்படி வேண்டினர். அனைவரது வேண்டுகோளுக்கும் இணங்கி, ஸ்ரீமந் நாராயணன் கருட வாகனத்தில் அங்கே தோன்றி அனைவருக்கும் காட்சி தந்தார். சூரதாசருக்கும் நிரந்தரமாக கண்ணொளி தந்து தன் அருளாசியை வழங்கினார். சத்தியபாமாவுடன் மறைந்தார். அதன்பிறகு சூரதாசர் பல பாடல்களை இயற்றி தன் சீடர்களுக்கெல்லாம் கற்பித்தார். அவரது கவிதைத் தொகுப்பாகிய சூரசாகரத்தின் மூலம் பக்தர்களை இறைவனின் திருவடி நிழலுக்கு ஆட்படுத்தி, பள்ளிகொண்ட பெருமாளின் அருளுக்கு பாத்திரமாகும்படி செய்தார்.

No comments:

Post a Comment