Thursday, May 10, 2012

துவாரகா ராமதாசர்

கண்ணன் அரசு செய்த துவாரகாபுரிக்கு அருகில் டாங்கேர் என்ற கிராமத்தில் ராமதாசர் என்று பெயர் கொண்ட அந்தணர், உஞ்சவிருத்தி எடுத்து ஜீவித்து வந்தார். அன்றைக்கு அமுதுபடி செய்ய வேண்டிய அரிசி கிடைத்தவுடன் திரும்பி விடுவார். அடிக்கடி துவாரகை சென்று துவாதசியில் ஏழைகளுக்கு அன்னமிட்டும், பாகவத புராண கதைகளை மக்களுக்கு எடுத்துரைத்தும் பஜனை செய்தும், தூய்மையான பக்தியுடன் இறைவழிபாட்டில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரது நல்லொழுக்கத்தையும், அவரையும் புகழ்ந்தும், இவர் அடிக்கடி துவாரகை சென்று வந்ததால் இவரை துவாரகா ராமதாசர் என்ற பெயரில் மதிப்புடனும், மரியாதையுடனும் கொண்டாடி வந்தார்கள்.இப்படியே 25 ஆண்டுகள் கழிந்தது. அவருக்கு முதுமை வந்ததால் அடிக்கடி துவாரகை செல்ல முடியவில்லை. ஒரு சமயம், உடல்நிலை சரியில்லாதநிலையில், பிடிவாதமாக துவாரகை சென்று, கண்ணன் சன்னதியில் நின்று மெய்யுருக கிருஷ்ணா ! அடுத்த துவாதசிக்கு நான் வர முடியாவிட்டால், என் வீட்டிற்கு வந்து அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். பரந்தாமன், ராமதாசர் முன் தோன்றி, உன் பக்திக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நீ எனது சிலையை என்னுடைய தேரில் வைத்து உங்கள் ஊருக்கு அழைத்து சென்றால் வருகிறேன், என்றார்.
சிலையை துவாரகையிலிருந்து எடுத்துச் சென்று விட்டால், விக்ரகத்தை காணாமல், அர்ச்சகர்கள், நான் திருடிவிட்டதாக நினைத்து எனக்கு தண்டனை தந்தால் என்ன செய்வது, என்று குழம்பினார் ராமதாசர். கடைசியில் நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று மனதை தேற்றிக் கொண்டு, நடுநிசியில் அங்கு வந்து சிறிய தேரில் கிருஷ்ண விக்ரகத்தை எழுந்தருளச் செய்து, துவாரகையிலிருந்து டாங்கேர் வந்து, வீட்டின் கூடத்தில் வைத்து பூஜை செய்தார். மறுநாள் விடியற்காலையில், அர்ச்சகர்கள் கோயில் கதவை திறந்து பார்த்தவுடன். அங்கு கிருஷ்ணன் விக்ரகத்தை காணவில்லை. முதல் நாள் இரவு, அதிக நேரம். ராமதாஸ் துவாரகை கோயிலில் இருந்தததால், அவர்தான் எடுத்துச் சென்றிருப்பார். என தீர்மானித்து கோஷ்டியாக எல்லாரும் டாங்கரே வந்தனர். இவர்கள் வருவதை அறிந்து ராமதாஸ். பயந்து ஒரு பெட்டியில் அந்த விக்ரகத்தை வைத்து தன் வீட்டு கிணற்றிற்குள் இறக்கிவிட்டார். அர்ச்சகர்கள். கிருஷ்ணர் விக்ரகத்தை எடுத்து செல்ல ராமதாசர் வீட்டிற்கு வந்தனர். வந்தவர்கள் இவரிடம் எதுவும் கேட்கவில்லை. வீடு முழுவதும் சோதனை செய்தனர். வீட்டில் கிடைக்கவில்லை. ராமதாசரது பக்தியை உலகுக்கு எடுத்துக்காட்ட நினைத்த பரமாத்மா, கிணற்றுக்குள்ளிலிருந்து, நான் இங்கே தான் இருக்கிறேன். இந்த ராமதாஸ் என்னை இங்கே ஒளித்து வைத்திருக்கிறான் என்று குரல் கொடுத்தார். இதைக்கேட்ட அர்ச்சகர்கள், கிணற்றுக்குள் இறங்கி, விக்ரகத்தை எடுத்துவந்து ஆனந்தத்துடன் தேரில் எழுந்தருளச் செய்தனர்.
ராமதாஸ் இறைவனை வணங்கி, கிருஷ்ணா ! உன் சொற்படிதானே நான் விக்ரகத்தை எடுத்து வந்தேன். நீ எனக்கு திருட்டு பட்டம் வாங்கி கொடுத்துவிட்டு, என்னையும் விட்டு செல்வது சரியா ? என்று மனமுருகி வேண்டினார். பக்தர்கள் துயரை தீர்க்கும் பகவான், தாசரிடம் அவருக்கு மட்டும் கேட்கும்படியாக என் எடை அளவு பொருள் தருவதாக இந்த அர்ச்சகர்களிடம் சொல் ! அர்ச்சகர்கள் விக்ரகத்தை இங்கேயே விட்டுச் செல்வார்கள், என்று அருளினார். ராமதாசரும், அர்ச்சகர்களை வணங்கி, இறைவனின் எடைக்குஎடை துலாபாரமாக பொன் தந்தால், விக்ரகத்தை எனக்கு தருவீர்களா? என்று கேட்டார். அவர்கள் தாசரிடம், நீரோ அன்னக்காவடி. உஞ்சவிருத்தி எடுத்து ஜீவிப்பவர். உம்மால் எப்படி விக்ரகம் அளவு பொன் தர முடியும், எனக்கேட்டு விட்டு, தைரியத்துடன் சம்மதித்தனர். இதற்குள் இந்த விபரம் தெரிந்தவுடன், ஊர்முழுவதும் அங்கு கூடிவிட்டது. தராசுக்கோல் கொண்டு வரப்பட்டு. அதில் ஒரு தட்டில் கிருஷ்ண விக்ரகம் வைக்கப்பட்டது. ஊரில் உள்ளவர்கள் ராமதாசர் எப்படி இவ்வளவு பவுன் தரப்போகிறார் என ஆச்சரியப்பட்டனர். தாசர், உள்ளே சென்று மனைவியின் மூக்குத்தி திருகாணியுடன் வந்தார். இது என்னது, தாசரே, பொன் என்று அர்ச்சகர்கள் கேட்கவும், தாசர், காண்பித்த மூக்குத்தி திருகாணியை கண்டு நகைத்தனர். இறைவனிடம், அசையாத பக்தியுடைய, ராமதாசர், அந்த மூக்குத்தி திருகாணியை தட்டில் வைத்து, இறைவா உன் வாக்கு பொய்யாகக்கூடாது, என வேண்டினார். எல்லாரும் ஆச்சரியப்படும் வகையில் இரு தட்டும் ஒரே சமநிலையில் நின்றது. அர்ச்சகர்கள், தாசரது பக்தியை மெச்சி, இறைவன், இங்கேயே இருக்க இசைந்துள்ளான் என எண்ணி, கிருஷ்ண விக்ரகத்தை தாசரிடம் கொடுத்து சென்றனர். பக்தி உண்மையானதாக இருந்தால் பகவான் நம்மோடு எப்போதும் இருப்பான்.

No comments:

Post a Comment