Saturday, May 12, 2012

அருணகிரியின் அவதாரம்!

15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதேவ மகாராஜா ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்துவந்த தவயோகியான திருவெண்காடாருக்கும், முத்தம்மைக்கும் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு ஆதிலட்சுமி என்று பெயர்.
முத்தம்மைக்கு முருகக் கடவுள் மேல் அபார பக்தியாதலால், முருகப் பெருமானின் திருப்பாதங்களே சரண் என்று வாழ்ந்து வந்தாள். முருகன் கோயிக்குப் போவதிலும் முருகன் திருநாமத்தை ஜபிப்பதிலும் முருகக் கடவுளுக்குப் பூமாலை கட்டித் தருவதிலும் ஒருநாளும் அவள் தவறியதில்லை. இதென்ன அதிசயமடி இப்படி முருகப் பித்துப் பிடித்துத் திரிகிறாளே இவள்! வள்ளி இவள் மேல் கோபம் கொள்ளப் போகிறாள் பார்! என்று சக பெண்கள் அவளைக் கேலி செய்வதுண்டு. எந்தக் கேலியையும் கிண்டலையும் பொருட்படுத்தாமல் முத்தம்மையின் முருக பக்தி தொடர்ந்து வந்தது. இவளுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தாலும், முருகப் பெருமான் மேல் பக்தி செலுத்தும் ஓர் ஆண்மகவு வேண்டும் என்று நாள்தோறும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்.முத்து செய்து வந்த தொடர் பிரார்த்தனைகளுக்கு அருள வேண்டும் என முருகன் திருவுள்ளம் கொண்டான். மூத்தபெண் ஆதிக்கு நான்கைந்து வயதாக இருக்கும் போது முத்துக்கு இரண்டாவது குழந்தையாக அருணகிரி என்ற ஆண்குழந்தையை ஆனிமாத மூல நட்சத்திரத்தில் அருளினான் முருகன். ஆண்மகவு பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தாள் முத்து. அந்தக் குழந்தையைச் சீராட்டிப் பாராட்டிப் பாலூட்டித் தாலாட்டி வளர்ப்பதில் அவள் செய்த அமர்க்களங்கள் திருவண்ணாமலையையே குலுங்கச் செய்தன. அப்படியொரு பாசம் தன் பிள்ளை மேல் அவளுக்கு. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் காசியாத்திரை கிளம்பினார் திருவெண்காடர். யாத்திரை முடித்து அவர் வெகுகாலம் திரும்பி வரவில்லை காசியிலேயே தங்கி விட்டதாகக் கருதினாள் முத்தம்மை. அத்துடன் விரைவிலேயே கடுமையாக நோய்வாய்ப்பட்டாள் முத்தம்மை. எனவே முத்தம்மைக்கு ஆண்குழந்தை பிறந்த மகிழ்ச்சி அதிக காலம் நீடிக்கவில்லை. இந்த நிலையில் முத்தம்மை திருவண்ணாமலைக்கு வந்து விட்டாள். ஒருநாள் தனக்கு நோய் முற்றி மரணம் நெருங்குவதை அறிந்துகொண்ட அவள் தன் மகள் ஆதியை அன்போடு அழைத்தாள்: மகளே! எந்த வேளையில் உனக்கு ஆதி என்று பெயர் வைத்தேனோ? ஆதி முதல் அந்தம் வரை இந்தக் குடும்பப் பொறுப்பு முழுவதும் உன் தலையில் விழுந்திருக்கிறது அம்மா! நான் சேர்த்துவைத்துள்ள சொத்துகள் உன் வாழ்வைப் பாதுகாக்கும். நீ பாதுகாக்க வேண்டியது உன் தம்பியை. தவமாய்த் தவமிருந்து பெற்ற பிள்ளை. நீ அவன் மனம் நோகாமல் அவனை வளர்த்துவா. நீயே சிறுமி. உன்னிடம் இந்தப் பிஞ்சுக் குழந்தையை ஒப்படைக்கிறேன். இவனை முருக பக்தனாகப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் என்ன? நான் இறந்தாலும் வானிலிருந்து அவன் வளர்ச்சியையும் பக்தியையும் பார்த்து மகிழவே செய்வேன். நீ இவனை நன்றாக வளர்ப்பாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு என்று கூறிய முத்தம்மை, அருணகிரியின் கையைப் பற்றித் தன் மகள் ஆதியின் கரத்தில் வைத்தாள். முத்துவின் விழிகளிலிருந்து முத்து முத்தாய்க் கண்ணீர் வழிந்தது. ஒரு பெருமூச்சோடு முருகா என்று உரத்து முருகன் நாமத்தை ஜபித்தாள்.
மறுகணம் மயில்மேல் அமர்ந்து முருகன் அவள் உயிரை ஏற்க ஓடோடி வரும் காட்சி அவள் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது. பெண்ணே, நான் உன்னையும் ஆட்கொள்வேன். உன் மகன் அருணகிரியையும் பின்னாளில் ஆட்கொள்வேன்! என்று சிரித்தவாறே வாக்குறுதி தந்தான் வேலவன். முத்துவின் முகத்தில் அவளது முத்துப் பற்கள் தெரிய ஒரு மோகனப் புன்னகை மலர்ந்தது. அழிவே இல்லாமல் அந்தப் புன்னகை முகத்தில் உறைய முத்து முக்தியடைந்தாள்.
சின்னஞ்சிறு வயதிலேயே தாய் என்ற உறவு தங்கள் இருவரையும் விட்டு விலகியதை எண்ணித் துயருற்ற சிறுமி ஆதி, கன்னத்தில் வழிந்த கண்ணீரைப் புறங்கையால் துடைத்துக் கொண்டாள். தன் தாய் தனக்கிட்ட கட்டளையை எந்தக் குறைபாடுமின்றி நிறைவேற்றுவதென உறுதி கொண்டாள். அருணகிரியை வாரியெடுத்து முத்தமிட்டுத் தன்னோடு அணைத்துக் கொண்டாள். தம்பி, உனக்குத் தாயில்லை என்று நினைக்காதே. எனக்குத்தான் தாயில்லை. உனக்கு இனி நானே தாய். அவள் உள்மனம் சிறு வயதிலேயே தனக்கு ஒரு மகன் கிடைத்தாக எண்ணிப் பெருமிதம் கொண்டது. ஆதி தன் தம்பியை வளர்க்கும் அழகைப் பார்த்துத் திருவண்ணாமலையே வியந்தது. அவனை நீராட்டுவது, அலங்கரிப்பது, அவனுக்குச் சோறூட்டுவது என ஒரு தாய் செய்யும் எல்லாச் செயல்களையும் சிறுவயதிலேயே தன் தம்பிக்குச் செய்தாள் ஆதி. தாய் இறக்கும்போது தன்னிடம் ஒப்படைத்த பொக்கிஷமாக அவள் தன் தம்பியைக் கருதினாள். தம்பியை வளர்த்தவாறே கூடவே அந்தத் தமக்கையும் வளர்ந்தாள். அருணகிரிநாதர் இளமையிலேயே தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் கற்றார். ஆனால் அதிகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் வீணாய்ப் போவதும் எங்கும் உள்ளதுதானே? அருணகிரி வீணாய்த்தான் போனான். குடி, சீட்டு என எல்லாக் கெட்ட பழக்கங்களும் அவனையே சரண் என்று வந்து குடிபுகுந்தன. அவனும் அவற்றை ஒரு கணமேனும் விட்டுப் பிரியாது ஆதரித்து வந்தான். அவன் வாலிப வயதை அடைந்தபோது அவனைச் சுற்றியிருந்த நண்பர்களில் ஒரு யோக்கியனைக் கூடக் காணோம்.
முத்தம்மை சேர்த்து வைத்திருந்த சொத்து கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தது. ஆதி ரகசியமாக மறைத்துவைத்திருந்த தங்க நகைகளெல்லாம் திடீர் திடீர் என்று வீட்டை விட்டு மாயமாய் மறைந்தன. அருணகிரி தான் அவற்றை எடுக்கிறான் என்பதை அறிந்துகொண்ட ஆதி, அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு அவன் என்னதான் செய்கிறான் என மலைத்தாள். ஒருநாள் இரவுநேரத்தில் மிகத் தாமதமாக வீட்டுக்கு வந்து கதவைத் தட்டிய அருணகிரியைச் சலிப்போடு பார்த்தாள் அவன் அக்கா ஆதி. எங்கே சென்று வருகிறாய்? எனக் கண்டிப்புடன் கேட்டாள். குழறிய குரலில் அக்கா..! நம் குலமே கணிகையர் குலம். நம் குலத்தைச் சார்ந்த கணிகையரை நாம் ஆதரிக்கவில்லையென்றால் வேறு யார் ஆதரிப்பார்கள்? அதனால் ஒவ்வொரு கணிகையையும் ஒவ்வொரு நாள் ஆதரித்து வருகிறேன்! என்று சொல்லியவாறே அருணகிரி குடிமயக்கத்தில் கீழே சாய்ந்தான். ஆதியின் மனமும் சாய்ந்தது. முருகா! என் தாய் முத்தம்மை, உன் பக்தனாக அருணகிரி வளர வேண்டும் என்று விரும்பினாளே? என் தாய் விரும்பியபடி என் தம்பியை என்னால் வளர்க்க முடியவில்லையே! நான் எங்கே தவறு செய்தேன், எப்படித் தவறு செய்தேன் என்று தெரியவில்லையே? முருகன் படத்திற்கு முன் நின்று அவள் கண்ணீர் விட்டுக் கதறினாள். தன் தம்பி மேல் உள்ள தாளாத பாசத்தால், தரையில் விழுந்து கிடந்த அவனை எழுப்பி உணவளித்து உறங்கச் செய்தாள். ஆனால் அவள் கண்கள் தம்பியைப் பற்றிய தீராக் கவலையில் உறக்கத்தை மறந்தன. படத்திலிருந்த முருகன் சிந்தித்தான். அருணகிரியைப் பொறுத்தவரை முருகனுக்கும் ஒரு பொறுப்பு உண்டே? வேலை வணங்குபவர்களுக்கு அருள்புரிவதைத் தவிர அவனுக்கு வேறென்ன வேலை? கந்தனை மட்டுமே சிந்தனை செய்து வாழ்ந்த முருக பக்தையும் அருணகிரியின் தாயுமான முத்தம்மைக்கு அவள் இறக்கும் நேரத்தில் அருணகிரியைத் தன் அடியவனாக்குவதாக முருகப் பெருமான் வாக்குறுதி கொடுத்தானே? அந்த வாக்குறுதியை முருகன் மீற முடியுமா?

No comments:

Post a Comment