Sunday, August 17, 2014

சரியாக புரிந்துகொண்டவர்கள் பெரியவர்கள்!


கர்மா! இது ஒரு மிகப்பெரிய உண்மை. இதை சரியாக புரிந்துகொண்டவர்கள் பெரியவர்கள். பல இடங்களிலும் இதை தெளிவாக சொல்லி போய் இருக்கிறார்கள். கர்மாவுக்கு பலம் சேர்ப்பதே நம்முடைய எண்ணங்கள், அதீதமான ஆசைகள், நிறைவேறாத ஆசைகளினால் மிஞ்சும் வாசனைகள் போன்றவைதான். இறைவனுக்கு நாடகத்தை நடத்த நிறைய கதா பாத்திரங்கள் தேவை. மனிதர்கள் தங்களை இகபர பொருட்களில் ஆசைகளுக்கு அடிமை படுத்திக்கொண்டு , இறைவனுக்கு, அவன் வேலையை எளிதாக்குகிறார்கள்.
சமீபத்தில் ஒரு நண்பருடன் கலந்துரையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதை கீழே தருகிறேன். புரிந்துகொள்பவர்கள் புரிந்து கொள்ளுங்கள்.
"இந்த மனிதர்கள் போகிற போக்கை பார்த்தால், இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லையே! அத்தனை பேரும் பதவி, பொருள், பணம், நிலம் என்பதில் தான் குறியாக ஓடுகிறார்கள். வாழ மறந்து விடுகின்றனரே!".
"சரிதான்! ஆனால், தாங்கள் அடைவதை அனுபவிப்பது தான் வாழ்க்கை என்று எண்ணிக்கொண்டு தான் வாழ்கிறார்களே. அவர்களை பொறுத்தவரை அவர்கள் வாழ மறக்கவில்லையே. ஆனால் அவர்கள் தங்களையே ஏமாற்றிக்கொள்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லையே. அது தான் இறைவன் நடத்தும் நாடகம். "

"நீங்கள் சொல்கிற படி பார்த்தால், நிறைய பேர்கள் எதை நம்புகிறார்களோ அதுவே வாழ்க்கை என்று ஆகிவிடுகிறதே"
"ஆமாம், இந்த உலகத்தில் அப்படி தானே ஜீவிதம் நடந்து கொண்டிருக்கிறது. அரசியல், பொருளாதாரம், ஏன் நாம் உண்ணும் உணவு கூட, மற்றவர்களால் தான் நிச்சயிக்கபடுகிறது. . நம் முன்னால் வீசி எறியப்படுகிற பொருள் சார்ந்த வாழ்க்கையை வேண்டாம், இது எனக்கு தேவை இல்லை என்று விலக்குகிற மனநிலை எத்தனை பேருக்கு இருக்கிறது? பொருள் சார்ந்த நிலையை வேண்டாம் என்று வைத்து, இறை அருள் சார்ந்த வாழ்க்கை தான் எனக்கு வேண்டும் என்று எத்தனை பேரால் தீர்மானிக்க முடிகிறது?"

"உண்மை தான்! ஆனால் எத்தனை பேரால் இறை சார்ந்த வாழ்க்கையை வாழ முடிகிறது. இன்றைய சமூகத்தின் அலட்டுகிற தன்மையின் அழுத்தம் தாங்காமல் தானே மனிதன் நிறைய தவறுகளை செய்கிறான். தவறு செய்தவன், செய்கிறவன் மேலும் மேலும் நன்றாக இருக்க, நமக்கு வேண்டியதை இறையே பார்த்துக்கொள்ளும் என்று காத்திருந்து, அது கிடைக்காமல் போன வருத்தத்தில் தானே எல்லா மனிதர்களும், பொருள் சார்ந்த வாழ்க்கைக்கு தாவுகிறார்கள்."

"அதில் உள்ள மர்மத்தை புரிந்து கொள்ள மனிதனால் முடியவில்லை. அதனால் தான் பொறுமை இழக்கிறான். அமானுஷ்யம் எல்லோருக்குமே பிடித்தமான விஷயம் தான். அதில் இருக்கும் த்ரில் தனிதான். ஆனால் வெற்றி பெறாமல் இருப்பது எதனால் என்று ஒரு முறை தீர விசாரித்தால் உண்மை விளங்கும். வெற்றி பெற நினைப்பவர் மனதில் இறை மீது நிலைத்த நம்பிக்கை இன்மையே காரணம்."
"உண்மை! அப்படியானால் நீங்கள் சொல்ல வருவதென்ன?"
"நீங்கள் கேட்டீர்களே "இன்றைய சமூகத்தின் அலட்டுகிற தன்மையின் அழுத்தம் தாங்காமல் தானே மனிதன் நிறைய தவறுகளை செய்கிறான். தவறு செய்தவன், செய்கிறவன் மேலும் மேலும் நன்றாக இருக்க, நமக்கு வேண்டியதை இறையே பார்த்துக்கொள்ளும் என்று காத்திருந்து, அது கிடைக்காமல் போன வருத்தத்தில் தானே எல்லா மனிதர்களும், பொருள் சார்ந்த வாழ்க்கைக்கு தாவுகிறார்கள்"

இதற்கு பின் சில விஷயங்கள் இருக்கிறது.
மனிதனை படைத்தாகிவிட்டது. நாடகம் நடந்து கொண்டிருக்கிறது. ஒருவரின் நடத்தை இன்னொருவருக்கு பாடமாக இருக்கட்டும் என்று இறைவன் பல லீலைகளை நடத்துகிறான். அவன் கையில் பலவித கயிறு இருக்கிறது. உதாரணமாக கோயில் உண்டியலில் போட தந்த காசை நீங்கள், அவனிடம் இல்லாத காசா! இதை போட்டுத்தான் அவன் வாழவேண்டுமா என்று நினைத்து, அதை கொண்டு போய் வியாபாரம் பண்ணி நன்றாக இருந்தால், அதையும் அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான். நீங்கள் மேலும் மேலும் வளர வழி வகை செய்து உங்களை மிக உயரத்தில் ஏற்றி உட்கர்த்துவான். அப்படி உட்கார்ந்த நீங்கள் "ஆஹா! நம் முயற்ச்சியால் இத்தனை தூரம் ஏறி வந்து விட்டோம்" என்று நினைக்கும் போது, மேலிருந்து ஒரேடியாக கீழே தள்ளிவிட்டு உங்கள் கதையை முடிப்பான். ஏன்? உங்கள் கர்மாவில் கொஞ்சம் புண்ணியம் இருந்திருக்கும். அதன் பயனாக உங்களை மேலே ஏற்றி விட்டு தான் ஆகா வேண்டும். அந்த கணக்கு சரியான பின், உங்கள் கெட்ட கர்மா வின் கணக்கு சரி பார்க்க படும். குறுகிய உயரத்தில் இருந்தால் அடி படாது, சின்ன காயத்துடன் போய் விடும். உயரத்தில் இருந்து விழ்ந்தால் தான் கணக்கை முடிக்க முடியும். இதை மறைமுகமாககூட நாம் உணருவதில்லை. மறைத்து வைக்கப்பட்ட உண்மைகளை புரிந்துகொள்ளும் சக்தி இறையை நாடாமல் எப்படி மனிதனுக்கு தெரிய வரும்? அதற்கும் அவன் அருள் வேண்டுமே. இந்த உண்மையை உணர்ந்தவர்கள் தான் ஞானியாக ஆகிறார்கள். இதை எல்லாம் நீயே வைத்துக்கொள் என்கிறார்கள். ஞானத்தை கொடு, இவற்றில் பற்றை அறுத்தெறி என்று இறையிடமே வேண்டுகிறார்கள். அந்த இறையே நம்மை பார்த்து பயப்படவேண்டும். "என்னடா இது, இவனுக்கு இத்தனை வாய்ப்பை கொடுத்தும் அதை அவன் பற்றாமல் இருக்கிறானே என்று யோச்கிக்க வைக்க வேண்டும்." அப்படி நாம் நேர்மையாக இருந்தால் இறை முன் கூட நெஞ்சு நிமிர்த்தி நிற்கலாம். ரகசியமாக இறையிடம் வேண்ட வேண்டாம். பிறரை கெடுத்தோம் என்கிற நிலை வராது. நம்மை கண்டாலே இறையே யோசிக்கும். ஏன், ஒரு நாள் கூட நாம் மனம் புலம்ப வேண்டிய நிலை வராது. நான் என்கிற கர்வம் அறவே ஒழிந்துவிடும். என்னுடையது எதுவம் இல்லை. எல்லாம் உன்னுடையது என்கிற பலமான அஸ்திவாரம் உருவாகும். அதுவே முன்னேற்றத்தின் முதல் படி. இதை தெளிவாக புரிந்து கொண்டால், நடக்கிற நாடகம் மிக நன்றாக எல்லாருக்கும் புரியும். புரியாத நிலையில் உருவாகும் குழப்பம் தான் தவறுகளை செய்ய வைக்கிறது"

"இறை நாடகத்தை நடத்த ஆசை படட்டும். நீங்கள் தெளிவடைந்து விலகி நில்லுங்கள். நீங்கள் கரை ஏறலாம். உங்களுக்கு பதிலாக அந்த பாத்திரத்தில் வேறு ஒருவர் நடிப்பார். அது அவர் தலை எழுத்து. அவரும் புரிந்து கொண்டு விலகி விட்டால், வேறு ஒருவர் அவர் இடத்தை பிடிப்பார். இது தான் கால சக்ரம். சாட்சி பூதம், வேறு விதத்தில் சொல்வதானால், "நடப்பதெல்லாம் நாராயணன் செயல்" என்று பெரியவர்கள் சொல்லி போனது - நாராயணனை "காக்கும்" கடவுளாக அவர்கள் அறிந்ததால்.
உங்களுக்கு புரிந்ததா இந்த கலந்துரையாடல்? இல்லை என்றால் கால் இல்லாத ஒருவரையும், நன்றாக இருக்கும் உங்கள் கால்களையும் பார்த்துக்கொள்ளுங்கள்! அப்பொழுது புரியும்!

No comments:

Post a Comment