Monday, September 9, 2013

ஆன்மீகத்தில் ஒருவருக்கான பயிற்சி முறைகளும் முன்னேற்றப் பாதையும் இன்னொருவருக்கு முற்றிலும் எதிர்மறையாக அமையக்கூடும்.

 
ஆன்மீகப் பாதையில் யாவரும் சாதகர்களே. ஆனால் அவர்களிடையே பெரும் வித்தியாசம் இருக்கும். அதை முறையாக அறிபவர் உயரிய ஆன்மீக நிலை அடைந்த குரு மட்டுமே. மோட்டார்களின் திறன் உள்ளே இருக்கும் கம்பிச் சுற்றுகளின் தரம், எண்ணிக்கை, சுற்றப்பட்ட விதம் போன்ற பல காரணங்களால் வேறு பட்டிருக்கும். ஆனால் வெளிக்கூடு ஏறக்குறைய ஒரே மாதிரி காட்சியளிக்கக்கூடும். அது போல சாதகர்களும் அவர்களது பழவினைச் சுற்றுகளுக்கும் வாசனைகளுக்கும் ஏற்ப தத்தம் திறமைகளில் வேறுபட்டிருப்பர்.
சுவாமி விவேகானந்தர் சிவோஹம் சிவோஹம் என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தமர்ந்தார். "அதெப்படி மானுட வடிவில் இருந்து கொண்டு தன்னை சிவனாக பாவிக்கலாம்?" என்று நாகமகாஷயர் கேள்வி எழுப்பினார். "அவனுக்கு அவன் பாதை சரி. உனக்கு உன்பாதை சரி" என்று ராமகிருஷ்ணர் பதிலளித்தாராம். குரு சொன்னால் சரியாகவே இருக்கும் என்ற நாகமஹாஷயர் "அப்படியானால் சரி" வினயத்துடன் ஏற்றுக்கொண்டாராம்.
மற்றொரு சமயம் நரேந்திரன் இரவு நேர தியானத்தில் உயர்ந்த சமாதி நிலையை எட்டிய நிலையில் அருகிலிருந்த சாரதாநந்தரிடம் 'என்னைத் தொடு 'என்று பரவசத்துடன் அவருக்கும் தன் அனுபவத்தை தெரிவிக்க விழைந்தார். அவரை தொட்டதும் சாரதாநந்தரின் உடலுக்கு அந்த சக்தியின் தாக்கத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் மிகுந்த தேக‌சிரமத்திற்கும் மன சிரமத்திற்கும் உள்ளானார். அதே சமயத்தில் எங்கோ அமர்ந்திருந்திருந்த ராமகிருஷ்ணர் "இந்த நரேன் ஏனிப்படி புத்தியில்லா காரியத்தை செய்கிறான் "என்று அருகிலிருந்தவரிடம் கடிந்து கொண்டாராம்.
குறைந்த வேகத்தில் ஓட வேண்டிய எந்திரத்திற்கு அதிவேக மோட்டர் இணைப்பைக் கொடுத்தால் எந்திரத்தின் உட்பாகங்கள் சிதைந்து போகக்கூடும். கிட்டத்தட்ட அந்த நிலைமைதான் சாரதாநந்தர் அடைந்தது. அதனால்தான் ராமகிருஷ்ணரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
சாரதநந்தருக்கு மீண்டும் ராமகிருஷ்ணர் பலவேறு முறைக‌ளில் பயிற்சியளித்து வெகுநாட்களுக்குப் பின்பே தன் இயல்பு நிலையை அடைந்தார் என்று படித்ததுண்டு. அதாவது ராமகிருஷ்ணர் என்கிற மெக்கானிக் சிதைந்த பகுதிகளை சரி பார்த்து மீண்டும் எந்திரத்தை ஓடச் செய்தார் ! :))
(சாரதாநந்தரின் பெயர் நினைவிலிருந்து எழுதப்பட்டது. ஒரு வேளை வேறு ஒரு சக சாதகராகவும் இருந்திருக்கலாம்)ஆகவே Sauce for the goose is Sauce for the gander என்னும் வழக்கு ஆன்மீகத்தில் சரியாகாது. ஒருவருக்கான பயிற்சி முறைகளும் முன்னேற்றப் பாதையும் இன்னொருவருக்கு முற்றிலும் எதிர்மறையாக அமையக்கூடும்.

No comments:

Post a Comment