Friday, July 6, 2012

பக்த ராக்கா

பண்டரீபுரத்தில் பாண்டுரங்க பக்தரான ராக்கா தன் மனைவி பாக்கா மற்றும் மகளுடன் வசித்து வந்தார். ராக்கா மண்பாண்டங்கள் செய்யும் குயவர். ஒரு சமயம் பானைகளை சூளையில் அடுக்கி விட்டு வந்து தன் மனைவியை தீ மூட்டச்சொன்னார். மறுநாள் ஒரு தாய்ப்பூனை சூளையைச் சுற்றி சுற்றி வந்து கத்திக்கொண்டே இருந்தது. இதை கவனித்த பாக்கா, சுவாமி! ஒரு வேளை சூளையில் இந்தப் பூனையின் குட்டிகள் இருக்குமோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது. ஆம் பாக்கா, அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஐயோ! என்ன பெரும்பாவம் செய்து விட்டேன் பாண்டுரங்கா! சுடாத பானைகளில் பூனைக்குட்டிகள் இருந்தால், எரியும் அரக்கு மாளிகையில் இருந்து பாண்டவர்களைக் காப்பாற்றியதுபோல இவற்றையும் நீதான் காப்பாற்ற வேண்டும் விட்டலா! நீ அவ்வாறு காப்பாற்றினால் நான் இந்தத் தொழிலையே விட்டுவிடுகிறேன் என்று இரண்டு நாட்கள் ராக்கா பிரார்த்தனையிலேயே இருந்தார். மூன்றாம் நாள் சூளையின் அனல் தணிந்ததும், பானைகளை எடுத்துப் பார்த்தபோது ஒரு பானையில் பூனைக்குட்டிகள் பத்திரமாக இருந்தன. நம் ஐயன் பண்டரிநாதன் நம்மை மாபெரும் பாவத்திலிருந்து காப்பாற்றி விட்டான். இனி நாம் அந்தப் பண்டரிநாதனுக்காகவே வாழ்வோம் என்ற ராக்கா தனது உடைமைகளையெல்லாம் தானம் செய்து விட்டு, குடும்பத்துடன் ஒரு குக்கிராமத்தில் வசிக்க சென்றார். ராக்கா உடுத்தியிருந்த ஒரே ஆடை நைந்து போனது. ஒருநாள் தெருவில் கிடந்த ஒரு கந்தல் துணியை எடுக்கும் போது, அங்கு ஒரு பரம ஏழை ஓடிவந்து... இதை எடுக்காதே. இந்தக் கந்தைத் துணி நான் தீப்பந்தம் சுற்றப் பயன்படும் என்று எடுத்துக் கொண்டார். ராக்கா இலைகளைக் கோர்த்துத் தன் உடலை மறைத்துக் கொண்டார்.
சந்திரபாகா நதிக்கரையில் ராக்காவின் மகளும், நாமதேவரின் மகளும் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவர்க்கும் தங்கள் தந்தையில் யார் பண்டரிநாதனின் சிறந்த பக்தர் என்ற விவாதம் ஏற்பட்டது. வீட்டிற்குச் சென்ற நாமதேவரின் மகள் நடந்ததை தன் தந்தையிடம் கூறி, அவரிடம் முறையிட்டாள். யார் சிறந்த பக்தர் என்பதை பாண்டுரங்கன் தான் முடிவுசெய்வார் மகளே, நீ ஒன்றும் வருத்தப்படாதே என்று கூறினார். ஆனால் அவர் மகளோ சமாதானமாகவில்லை. மகள் விடாமல் வற்புறுத்தவே, நாமதேவர் பாண்டுரங்கனிடமே சென்று யார் சிறந்த பக்தர்? என்று கேட்டுவிடமென்று முடிவு செய்தார். பொதுவாகவே பாண்டுரங்க விட்டலன் மீது நாமதேவர் அநேக பக்திப்பாடல்களைப் பாடித் துதிப்பவர். அதனால் மகிழ்ந்து பாண்டுரங்கன் அவரோடு நேரில் பேசுவார். பாண்டுரங்கனிடம், நாமதேவர் சுவாமி! ராக்கா என்னை விட சிறந்த பக்தனா என்று வினவினார். ராக்காவிற்கு இணையான ஒரு பக்தன் இல்லை என்று பாண்டுரங்கன் கூறினார். அப்படியானால் எனக்கு அதை காட்டி அருளுங்கள் என்று நாமதேவர் கூறினார். நானும் ருக்மிணியும் ராக்காவின் இருப்பிடம் செல்கிறோம். நீ அங்கு வந்துவிடு என்று பாண்டுரங்கன் கூறிவிட்டு மறைந்தார். காட்டில் ராக்கா சுள்ளி பொறுக்கிக் கொண்டிருந்தார். அப்போதும் அவர் விடாமல் விட்டலா, விட்டலா என்று நாமஜபம் செய்து கொண்டிருந்தார். நாமதேவா! நாம் வந்ததையும் கவனிக்காமல் ராக்கா எவ்வளவு பக்தியுடன் ஜபம் செய்கிறான் பார்த்தாயா என்றார். நம் சுவாமியின் திருநாமத்தைச் சொல்ல எல்லாவற்றையும் துறந்து விட்ட ராக்காவின் பக்தியை மேலும் பார் என்று ருக்மிணி கூறினாள்.
ருக்மிணிதேவி தனது விலைமதிக்க முடியாத மாணிக்க வளையலை ஒரு சுள்ளியின் கீழே மறைத்து வைத்தாள். பிறகு மூவருமாக ஒரு மரத்தின் மறைவில் இருந்து கொண்டு ராக்காவைக் கவனித்தார்கள். ராக்கா அந்த சுள்ளியை எடுத்தார். அதனடியில் மாணிக்க வளையலைச் சாதாரணப் பொருளைப் பார்ப்பது போல் பார்த்தார். தன் மனைவி பாக்காவிடம், பாக்கா! இதோ ஒரு மாணிக்க கங்கணம். உனக்கு இது வேண்டுமா? என்றார். வேண்டாம் சுவாமி, பாண்டுரங்கன் நம்மை சோதிக்கிறார். இனி நாம் இங்கிருக்க வேண்டாம் என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். நாமதேவரே! ராக்காவின் பற்றற்ற தன்மையைப் பார்த்தீர்களா? ராக்கா கல்வியறிவு இல்லாதவர்தான். இருந்தாலும் சுயநலமற்ற ஆழ்ந்த பக்தி கொண்டவர். சுவாமி! என் அறியாமையினால் ராக்காவைத் தவறாக நினைத்து விட்டேன். மன்னித்தருளப் பிரார்த்திக்கிறேன் என்று நாமதேவர் கூறினார். பாண்டுரங்க விட்டலன், ருக்மிணித் தாயார் சகிதமாக ராக்காவின் முன் பிரத்தியட்சமானார். ராக்கா, பாக்கா, அவர்களது மகளும் மெய்சிலிர்த்தனர். ராக்கா! நீங்கள் மூவரும் ஒருவருக்கொருவர் பக்தியில் குறைந்தவர்கள் இல்லை. ஐயனே! இந்த எளியேனையும் ஒரு பொருட்டாக மதித்துக் காட்சி அருளினீர்களே! எனது தவம் வீண் போகவில்லை என்று ஜெய ஜெய விட்டல, பாண்டுரங்க விட்டல என ஜபம் செய்து கொண்டே இருந்தார்.

No comments:

Post a Comment