Sunday, July 1, 2012

குரு தட்சிணாமூர்த்தி

கீழாவாத்தூர் வேளாளர் மரபில் சிவசிதம்பரம்-மீனாம்பிகை என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். நீண்ட நாட்களாகியும் குழந்தைப்பேறு இல்லாததனால் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை வணங்கி விரதமிருந்தனர். ஒரு நாள் இரவு மீனாம்பிகையில் கனவில் தோன்றிய ஈசன் மகப்பேறின்றி வருந்த வேண்டாம், நாமே அக்குறையைத் தீர்ப்போம் என்று கூறி மறைந்தார். சிறிது நாட்கள் கழித்து அவர்களுக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அருணாச்சலேஸ்வரரின் கிருபையால் பிறந்ததால் அக்குழந்தைக்கு அருணாசலம் என்று திருநாமம் சூட்டினர்.
பிறந்து ஐந்து ஆண்டுகள் செயலற்று பேச்சையும் ஒழித்திருந்த அந்த பாலகனைக் கண்டு பெற்றோர் தம் மகன் பேச்சற்றவனோ ! என்று வருந்தினர். ஒரு துறவி வந்து என்னப்பா செய்கிறாய் என்றதும் பாலகன் சும்மா இருக்கிறேன் அப்பா என்றது. என்னைத் தெரிகிறதா? என்றார் அந்தத் துறவி. குழந்தையோ, ஏன் தெரியாது? நானும் நீயும் ஒன்றுதானே! என்றது. ஒருசமயம் தகப்பனார், மகனே, நான் தில்லை சென்று ஆருத்ரா தரிசனம் செய்துவிட்டு வரலாமா என்று கேட்க, பாலகன், இன்னும் 20 நாழிகையில் உம் மாதா தேகவியோகம் அடையப் போகிறாள் ! என்றது. அதேபோல் அடுத்தநாள் அந்தக் கிழவி மரித்தாள். பெற்றோர் திடுக்கிட்டனர். தம் மகன் துறவியைப் போல் அதிகம் பேசாமலும் நிஷ்டையிலும் இருப்பதையும் மூன்று காலங்களையும் அறிதலையும் கண்டு மகனாக நடத்தாமல் மகானாக பாவித்தனர். அவர்கள், இளைய மகனைப் பள்ளிக்கு அனுப்ப, சுவாமிகள், என்னை ஏன் பள்ளியில் வைக்கவில்லை என்றதால் இரு மக்களையும் பள்ளியில் சேர்த்தனர். சுவாமிகள் சுவடிக்கட்டை முன்னால் வைத்து விட்டு எப்பவும் கண்களை மூடிய வண்ணம் இருப்பதைக் கண்ட ஆசிரியர், தம்பி, படித்தாயிற்றா? என்றார். படித்துவிட்டேன் என்று பதில் வந்தது. படித்ததைச் சொல் என்றதும் அருவி மழைபோல் ஏட்டில் உள்ளதைப் பொழியத் துவங்கியதும் ஆசிரியர் எழுந்து கைகட்டி நின்றார். உட்காரலாமே ! என்றதும் தரையில் உட்கார்ந்தார். ஆசிரியர்களும் மற்றவர்களும் தன்னிடம் மரியாதை காட்டுவதைத் தவிர்க்க சுவாமிகள் பள்ளியை விட்டு நீங்கினார்.
பக்கத்து ஊரில் ஒரு தம்பதியர் புத்திரசந்தானம் இல்லாமையால் ஸ்ரீரங்கம் சென்று சேவித்தனர். கனவில் ஒரு பாகவதர் தோன்றி, உங்கள் அருகாமையில் ஒரு சித்தன் அவதரிக்கிறான். அவனுக்கு ஆகாரமாக பால் நிவேதனம் செய்து உட்கொண்டால் புத்திரன் பிறப்பான் என்றார். உடனே அந்தத் தம்பதியர் தங்கள் ஊருக்கு வந்து ஒரு பசுவைக் குளிப்பாட்டி சுத்தமான இடத்தில் மேயவிட்டனர். தாங்களும் ஸ்நானம் செய்து பாலைக் கறந்து காய்ச்சி சுவாமிகளுக்கு அளித்தனர். சுவாமிகள் மீதமில்லாமல் குடித்துவிட்டார். இதுபோல் ஐந்து நாட்கள் சென்றதும் ஆறாம் நாளில் பாதிப்பாலைப் பருகி மீதியை வைத்துவிட்டு கிரகப்பிரவேசம் ஆகிவிட்டது. இனி நீங்கள் வரவேண்டாம் என்றார். அந்த சேஷப்பாலை அருந்திய தம்பதிக்கு அற்புதமான புத்திரன் பிறந்தான். சுவாமிகளின் பெயரையே புத்திரனுக்கும் சூட்டினர் பெற்றோர். இதை எதிர்த்தனர் அவரின் சொந்தக்காரர்களான மற்ற வைணவர்கள். உடனே குழந்தை பேசத் துவங்கியது. அருணாசலம் என்ற பெயரின் முதல் அட்சரம், அரி என்பதன் முதல் அட்சரம். இரண்டாவது எழுத்து பிராட்டியின் பெயரான திருவின் ஈற்றட்சரம். ணா என்ற எழுத்து அஷ்டாட்சரத்தின் கடை அட்சரம். சலம் என்பதோ நீங்கள் எனக்குச் சூட்ட நினைத்த வேங்கடாசலம் என்ற பெயரில் மறுபாதி. இதைக் கேட்ட சுற்றத்தார்கள் வெட்கமும் வியப்பும் அடைந்தனர்.
அடிக்கடி சுவாமிகளிடத்து தகப்பனார், நான் என் மனைவி பிரேதமாக இருக்கப் பார்க்காதிருக்க வரம் தர வேணும் என்று பிரார்த்திப்பார். தாயார் நான், சுமங்கலியாகவே போகவேண்டும் என்று வேண்டுவார். ஒருநாள் சுவாமிகள் பெற்றோரை நோக்கி இன்னும் எட்டு நாளில் நம் கர்மம் முடியும் என்றார். பெற்றோர் மகனுக்கு ஏதேனும் நேருமோ என்று பயந்து எப்பவும் பஞ்சாட்சரம் ஜபித்து வந்தனர். குறிப்பிட்ட நாள் காலையில் சுவாமிகள் தாய் தந்தையரை அழைத்து திருநீறு இட்டனர். பெற்றோர் மூர்ச்சை அடைந்து விழுந்து இறந்தனர். தம் கையால் ஈமக்கடனை முடித்துவிட்டு சுவாமிகள் யாரும் அறியாமல் எங்கோ சென்றுவிட்டார். போகும் இடங்களில் பற்பல அற்புதங்கள் நிகழ்த்தினார். பூட்டியிருக்கும் வீடு எரிய, உள்ளே தொட்டிலில் உறங்கும் குழந்தையை ஒரு துறவி உருவத்தில் காப்பாற்றியது, பாம்பு கடித்து இறக்கும் தருவாயிலிருந்து சிறுவனை உயிர் மீட்டது, விராலிமலையில் முருகனால் நேரில் அளிக்கப்பட்ட பிரசாதத்தின் மீதியை அந்த ஊர் தாசில்தாருக்கு அளித்து அவர் குன்மநோயை குணப்படுத்தியது, ஸ்ரீரங்கம் கொட்டகைப் பந்தலிலிருந்து தவறி விழுந்த ஒரு கொத்தனார், தட்சிணாமூர்த்தி என்று இவர் நாமத்தைச் சொல்லிக்கொண்டே விழும்போது, பல மைல்களுக்கு அப்பாலிருந்த சுவாமிகள் அங்கிருந்தபடியே விழுந்தவரை தாங்கிப்பிடித்து மெதுவாக இறக்கி வைத்தது, சிவஞான போதத்திற்கு சிந்திக்கும் முறையைத் தெளிவாக சிவஞான சிந்தனம் என்ற பெயரில் எழுதி அருளியது. திருவொற்றியூரில் பேய் பிடித்த பெண்ணை மீட்டு பவரோகத்தை நீக்கியது என்பது போன்ற எத்தனையோ அற்புதங்களை சுவாமிகள் நிகழ்த்தினார்.
காரைக்காலில் மஸ்தான் சாகிபு என்ற பெரியவர், எப்படி இருந்தால் எங்கும் நிறைந்த பூரணப் பொருளாக ஆகலாம் எனக் கேட்க, சுவாமிகள் சுட்டிறந்தால் சுகமடையலாம் என்றார். பெரியவர் பலமுறை யோசனைகள் செய்தும் நான், நீ அது இது என்ற சுட்டுப்பொருளைக் குறிப்பிடுதலை விடுத்து பரமசுகமடைந்தார். சித்தூர் சோமநாத முதலியாருக்கு ஏற்பட்ட குன்ம நோய் மணி மந்திர ஒளஷதங்களால் தீரவில்லை. ஒவ்வொரு தலமாக தரிசித்து வந்தார். சிதம்பரத்தில் ஓர் இரவு தங்கி சுவாமி சன்னதியில், என் வியாதியை போக்காவிடில் இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று பிரதிக்ஞை செய்தார். திருவாரூர் தட்சிணாமூர்த்தி உன்னைக் குணப்படுத்தும் என்று அசரீரி எழுந்தது. அவர் திருவாரூர் வந்து கோயிலில் தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து கொண்டும் வியாதி நீங்கவில்லை. ஒரு நாள் கனவில் ஒரு துறவி அக்ரகாரத்தில் ஒரு அவதூதன் நடமாடுகிறான். அவனிடம் செல் என்றார். முதலியாரும் அக்ரகாரத்தெருவில் ஞமலிகளுடன் எச்சில் இலைகளைப் புரட்டிக் கொண்டிருந்த சுவாமிகளைக் கண்டு இவராகத்தான் இருக்க வேண்டும் என்று நிச்சயித்து அவர் உண்ட உச்சிட்டத்தை தானும் உண்டு, அந்த விநாடியே தான் நோய் நீங்கப் பெற்றார். அது முதல் சுவாமிகளுக்கு குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் என்ற பெயர் பிரபலமாகத் தொடங்கியது.
சுவாமிநாத செட்டியார் என்ற அன்பருக்கு தன் ஒரே பெண் மேக ரோகத்தால் உடல் தடித்து கறுத்து இருப்பதைக் கண்டு மிகவும் வருத்தம். பலரிடம் வேண்டியும் பல மருந்துகளை உபயோகித்தும் நோய் நீங்கவில்லை. ஒரு மடாதிபதி நீங்கள் ஒரு பிரம்மஞானிக்கு ஒரு கவளம் சோறு இட்டால் உங்கள் பெண் நலம் பெறுவாள் என்றார். பிரம்மஞானியை நாடு முழுவதும் தேடினார். பலர் கூறக்கேட்டு திருவாரூர் வந்து சுவாமிகளை அடைந்தார். தானே விசேஷமாகத் தயாரித்த உணவை சுவாமிகளுக்கு நிவேதனம் செய்தார். சிறிது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அந்தப் பெண் அவர் திருவடியைப் பிடித்தது. வாயிலிருந்ததை அந்தப்பெண் மீது துப்பி என்னடி வேணும்? என்று கேட்டார். அவள், உன்னடி வேண்டும் என்று பதில் கூறினாள். அடி பிடித்தால் நோய் பொடியாய் உதிரும் என்றார் சுவாமிகள். ஒரே இரவில் அந்தப் பெண்ணின் ரோகம் நீங்கி, தடித்த கறுத்த சருமங்கள் பொலபொலவென்று படுக்கையில் உதிர்ந்து அவள் பூரண குணமடைந்தாள். உள்ளன்போடு பிரார்த்திக்கும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க நோய் தீர்த்தல், திரவிய சம்பத்து, சந்தான சம்பத்து ஞான சம்பத்து முதலியவைகளை அருளியதோடு அன்றியும் நடை சமாதியினராய், பிரம்ம வித்தாய், ஜீவன் முக்தராய் காட்சியளித்த குருதட்சிணாமூர்த்தி சுவாமிகள் 1836-ஆம் ஆண்டில் ஜீவசமாதி அடைந்தார். அன்னாரின் உயிர்நிலைக் கோயிலை இன்றும் திருவாரூர் மடப்புரத்தில் காணலாம்.

No comments:

Post a Comment