Monday, June 18, 2012

சித்ரகுப்தன் கதை சூட்சுமமும் பௌர்ணமி தினமகிமையும்

சித்ரகுப்தன் என்பவர் நம் வாழ்வில் நாம்  செய்த பாவ, புண்ணிய பலன்களைக் கணக்கிட்டு நமது வாழ்நாள் மற்றும் வாழ்க்கை முடிந்தபின் சொர்கவாழ்வா? நரக வாழ்வா? என தீர்மானித்து எமனுக்கு சொல்பவர். சுருங்கச்சொன்னால் எமதர்மராஜனின் கணக்குப்பிள்ளை. இவரைப்பற்றிய கதைகளை கீழ்வருமாறு வகைப்படுத்தலாம். 
பார்வதி தேவி வரைந்த சித்திரம் அவராலேயே உயிர் கொடுக்கப்பட்டது, சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதினால் சித்திரகுப்தா என பெயர் பெற்றார்.
சித்திரை மாதத்தில் பிறந்த புத்திரன் ‘சித்திரபுத்திரன்’ சித்ரகுப்தன் எனப்பட்டார். 
இவற்றை விட இவரது பெயர் கூறும் இன்னொரு விடயம் என்ன வெனில் "சித்ரம்" என்றால் வரையப்பட்டது என்று பொருள், குப்தம் என்றால் மறைக்கப்பட்டது என்று பொருள். 
இனி இவர் பற்றிய மேற்கூறிய புராணக்கதை பற்றிய சூட்சுமத்திற்கு வருவோம்; 
முதலாவது பார்வதி தேவி வரைந்த சித்திரத்திற்கு உயிர் கொடுக்கப்பட்டார் என்பது, பார்வதி தேவி உலகினை படைத்த சக்தி, அந்த சக்தியின் ஒருபகுதி தான் மனச்சக்தி, மனச்சக்தி தெய்வமனம் (divine mind), ஆகாய மனம் (Cosmic mind), மனித மனம் (Human mind) என இயங்குகிறது. தெய்வமனத்தின் ஒரு கூறுதான் ஆகாய மனம், ஆகாய மனத்தின் ஒரு கூறுதான் மனித மனம். ஆக மனித மனம் எண்ணும் எண்ணங்கள் ஆகாயமனத்தில் பதியப்பட்டு சேமிக்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்பட்ட எண்ணங்கள் பிரபஞ்சமனதிற்கு செல்லும் போது அதன் செயலாக்கம் நடைபெறுகிறது. இவ்வாறு மூன்று மனங்களும் இணைக்கப்படும் போது ஒருவனுடைய பாவ புண்ணிய கணக்குகள் செயல் பெறத்தொடங்குகிறது. ஆக இந்த மூன்று மனங்களை இணைக்கும் சக்தி அல்லது சேமிப்பகம் தான் "சித்ரகுப்தன்" - அதாவது மனித எண்ணங்கள் சேமிக்கபடும் சித்தம் எனப்படும் ஆழ்மனம் (Subconsciousness mind) சித்ரகுப்தரின் ஒரு பகுதி, இது போல் ஆகாய மனத்தில் சேமிக்கப்படும் "ஆகாய சித்தம்" சித்ரகுப்தனின் ஒரு பகுதி. பார்வதி தேவி வரைந்த சித்திரத்திலிருந்து தோன்றினார் என்பது பிரபஞ்ச மனசக்தியிலிருந்து பகுக்கப்பட்ட ஒரு பகுதி என்பதேயாகும். நவீன உளவியல் சற்று தெரிந்தவர்களுக்கு புரியும் மனம் என்பதின் ஒரு கூறுதான் "சித்தம்" எனும் ஆழ்மனம் என்று. அதாவது பகுக்கமுடியாதபடி மனமும் சித்தமும் இரண்டறக்கலந்தவை. ஆக சித்ரகுப்தன் என்பது நம் எல்லாருடைய சித்தம் எனப்படும் ஆழ்மனமேயாகும். 

இரண்டாவது சித்திரை மாதம் தொடர்பான கதை, நாம் எல்லோரும் அறிவோம் சித்திரை மாத பௌர்ணமி சித்ரகுப்தரிற்கு விஷேடம் என்று. சோதிடம் அறிந்தவர்களுக்கு தெரியும் சந்திரன் மனக்காரகன், அதாவது பூமியில் வாழும் மனிதரனைவரது மனமும் சந்திரனால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. பௌர்ணமி அன்று மனச்சக்தி அதிகரிக்கும். அதனால் தான் அதனை தாங்கும் வலிமையற்ற நோயாளிகளுக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. சித்தபிரமை பிடித்தவர்களுக்கு அதிகமாகிறது. அதே நேரம் மனதினை அடக்கி ஆளதெரிந்தவர்களுக்கு சாதனை புரிய ஏற்ற நாள். இதனால் தான் பௌர்ணமி அம்பிகைக்கு விஷேடமாக கருதப்படுகிறது. ஏனேனில் மனச்சக்தி தான் அனைத்திற்கும் அடிப்படை.  ஆக பௌர்ணமி அன்று நாம் மனதில் எண்ணும் எண்ணம் அதிக வலிமையுடையதாக எமது சித்தத்திற்கூடாக ஆகாய மனத்தில் பதியப்பட்டு, பின்பு பிரபஞ்ச மனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு காரியம் நிறைவேறுகிறது. இதனால் தான் பௌர்ணமி அன்று விரத நாளாகவும், புனித நாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. புத்தர் ஞானம் பெற்ற வழிமுறையும் இதுதான். இது சித்ராபௌர்ணமி அன்று மட்டும் என்பதில்லை, எந்த பௌர்ணமி தினத்திலும் இதே விளைவுதான். குறைந்தது வருடம் ஒருமுறையாவது இந்த இரகசியத்தினை பயன்படுத்தி மக்கள் பயன்பெறட்டும் என்று சித்தர்கள், ரிஷிகள் இவ்வாறு கதைகளாக கூறியுள்ளார்கள். 

No comments:

Post a Comment