Saturday, June 23, 2012

ஆண்டவனை அச்சுறுத்திய ஆச்சார்யர்!

உதயணாச்சாரியார் தர்க்க சாஸ்திரத்தில் மகாபண்டிதர். சிறந்த பக்தர். நாஸ்திகவாதம் பிரபலமாக இருந்த காலம் அது. கடவுள் இல்லை என நாத்திகர்கள் பிரச்சாரம் செய்து வந்தார்கள். உதயணாச்சாரியார் அவர்களை மறுத்து வாதம் புரிந்தார். வாதத்திற்கு யார் நடுவராக இருப்பது என்ற கேள்வி வந்தது. இவர்களிடையே சிலர் கேலியாக, உங்கள் கிருஷ்ணனே நடுவராக இருக்கட்டுமே என்றனர். உதயணாச்சாரியார் பூஜித்து வந்த பொன்னாலான கிருஷ்ண விக்கிரகத்தை நடுவராகக் கொண்டு வாதம் நடந்தது. ஸ்ரீகிருஷ்ண விக்கிரகம் ஒரு தாம்பாளத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வைக்கப்பட்டது. நாத்திகர்கள் கடவுள் நம்பிக்கையைக் கண்டனம் செய்யச் செய்ய ஸ்ரீகிருஷ்ண விக்கிரகம் உருக ஆரம்பித்தது ! உதயணாச்சாரியார் இந்த வாதத்திற்கு எதிர்வாதம் செய்து நாத்திகர்களின் நிரீஸ்வரவாதம் சரியல்ல என்று நிரூபணம் செய்த போது உருகிப் போயிருந்த சிலை மீண்டும் முன்போலவே மாறியது. இதுபோல 21 முறைகள் நடந்தன. முடிவில் உதயணாச்சாரியாரின் வாதமே வென்றுவிட்டதால் கிருஷ்ண விக்கிரகம் பழையபடியே ஸ்திரமானது. ஒருமுறை உதயணாச்சாரியார் பூரி ஜகந்நாதரைத் தரிசிக்கச் சென்றார். அவர் சென்றபோது இரவு நேரமானதால் கோயில் நடை சாத்தப்பட்டு இருந்தது. மூடிய கதவைத் திறந்து அவருக்குத் தரிசனம் செய்து வைப்பதற்கு ஒருவரும் முன் வரவில்லை. அதனால் அவர் கீழ்க்கண்ட சுலோகத்தை இயற்றினார்:
ஐச்வர்யமத மத்தோஸி மாமவஞாய லக்ஷ்யஸே
புனர் பௌத்தே ஸமாயாதே மததீனா தவஸ்திதி:
(ஜகந்நாதா) ஐச்வர்யப் பெருமையினால் நீ என்னிடம் அலட்சியமாக இருக்கிறாய் போலுள்ளது. இருக்கட்டும். மீண்டும் பவுத்தர்கள் புறப்பட்டு வந்தால் உன் நிலை என்னவாகும்? அப்போது உன்னை நான்தான் காப்பாற்ற வேண்டும் என்பது ஞாபகம் இருக்கட்டும். இதைப் பாடியதும் கோயில் சன்னதியின் கதவுகள்தானே திறந்து கொண்டன ! உதயணாச்சாரியாரும் ஜகந்நாதரைக் கண் குளிரத் தரிசித்து மகிழ்ந்தார். பக்தர்களுக்கு எப்போதும் அருள் புரியும் பகவானை மிரட்டுவதற்கும் கூட ஒரு மகான் இருந்திருக்கிறாரே!

No comments:

Post a Comment