Tuesday, October 8, 2013

கபீரின் கனிமொழிகள்!

துயரில் துய்வர் அவன் நாமம் உயர்வில் உன்ன மறந்தனர்
உயர்விலும் உன்னுவராயின் துயரின் சாயலும் தொலையுமே
மாயா மாயை மரியா மனம் உழன்று ஓய்ந்ததே தேகம்
ஓயாதுரைப்பான் கபீர் ஒழியாதே அவாவெனும் தாகம்
குயவன் கைமண் கூறும் பிசைமின் பிசைமின் இன்று
கூப்பிடு நாளில் உம்மை பிசைவேன் பிசைவேன் என்று
ஓங்கி உயர்ந்து விட்டாலென்னே ஈச்சந்தரு போலே
ஒதுங்க இல்லை நிழலே எட்டாதே இச்சைதரு பழமே
தீயவன் ஒருவன் எங்கே தேடிக் கண்டிலேன் இங்கே -
தேடிக்கொண்டேன் என்னுளே என்னிலும் தீயவன் இலையே
பொறு மனமே பொறு காலத்தேதான் நிகழும் யாவும் -
நூறு குடம் நீரே இறைப்பினும் பருவத்தே தான் பழுக்கும் பழம்
திருகும் அரவை எந்திரம் கண்டு கலங்கும் கபீரின் அந்தரம்
இருபெரும் கற்களுக்கிடையே தப்பிய தினைகள் இலையே
நவில்வீர் நயமுடனே, தானடங்கி தனுவடக்கி,
தம்மன் பர்தம் உள்ளங் குளிரும் உரைகளே
துவைப்பவன் ஆசான், துணி சீடன், திட்பமே கல்லாம்
துவைப்பின் மந்திர உறை கூட்டி ஒளிரும் சிவமேயாம்
அளப்பிலா நூல் பல தெரிந்து ஆன பண்டிதர் எவரும் இல்லை
அன்பின் அருமை தெளிந்தார் அன்றே பண்டிதர் ஆனாரே
நானிருந்த போது அரி இல்லை, அரி வந்தபின்னே நானில்லை
நாடகம் முடிந்தது, ஒளி வந்த பின்னே இருளங்கு இல்லை
சிகை செய்த பாவமென், மழிப்பரதை நூறு முறை
சிறுமைதனை மழியாரோ, மனக்கண் வளரும் நூறு வகை
நாளையென்பதை இன்றே செய்மின், இன்றென்பதை இப்பொழுதே
நொடியில் வருமே ஊழி, செய்வது பின் நீ எப்பொழுது
விரலில் உருளுமே மணி அக்கு, நாவில் புரளுமே செம்மந்திரம்
வீணில் திரியுதே மனம் அங்கு, நவில்வரே இதனை செபமென்று
தான் செய்து நடப்பன இல்லை, கபீர் செய்யாமலே நடந்தன வன்றோ
தான் செய்து நடப்பன போல் காண்பீர், செய்விப்பவன் அவன் யாரோ
ஒன்றே எனில் சரியன்று, இரெண்டென்று உரைப்பின் தவறேயாம்
சொல்லற்று மொழிவான் கபீர், அது என்றும் எதுவோ அதுவேயாம்
செருக்கு வீணில் எதற்கு கபீரா, வானளாவும் மாடம் என்று
எருக்கு விளைய காண்பரா , காலன் கிடத்தும் இடம் கண்டு
சிந்தையைத் தின்னும் கவலைப் பேய், மரந் தின்னும் சிதல் அன்னே
எந்தையே தீர்வேயிலாப் பிணியிது, பேதை மருத்துவன் செய்வது மென்னே
எள்ளுள் உறைவது தைலம் சிக்கிமுக்கியுள் வெந் தழலே
உள்ளுள் உறைவான் ஈசன், விழிப்பரோ உணர்வில் இவரே
கபீர் மனது நிர்மலம் ஆனது தூய கங்கை நீர் போலே- கபீர்
கபீரெனக் குழைந்தே அரி, திரிவான் இவன் பின்னே பின்னே
எமக்கு இத்தனை அருள்வாய் ஈசா, எமை சார்ந்த குடி நலம் கா
யாமும் பசித்திராமலும் அடியார் பசித்துச் செல்லாதிருக்கவுந் தா

No comments:

Post a Comment