Friday, January 18, 2013

குருவின் அவசியம் பற்றி......

இந்து கோடி உகுக்கினும் கோடி விண்மணி கூடினும்
அந்தகாரம் அழிவதில்லை ஆசானில்லா அந்தனுக்கே


(இந்து = சந்திரன் ; விண்மணி =சூரியன் ; அந்தகாரம்= இருள் ; அந்தன்= அந்தகன், குருடன்)
(தீமிர் என்ற ஹிந்தி சொல்லும் தமிழில் திமிரம் என்ற சொல்லும் இருள் என்பதை குறிக்கும் !)

பல கோடி ஜென்மமெடுத்து சந்திர சூரியர்களின் ஆதிக்கத்தில் இந்த பூமியில் வந்து போனாலும் நல்ல குரு வாய்க்காதவனுக்கு ஞானமென்பது கிடையாது. அவனென்றென்றும் அஞ்ஞான இருளில் உழலும் குருடனாகவே இருந்திடுவான். இது மேலெழுந்தவாரியான விளக்கம். வேறொரு வகையிலும் பொருள் கொள்ள வழியிருக்கிறது. நாம் மூச்சு விடும் பாங்கில் இடது பக்கம் சந்திர கலை என்றும் வலது பக்கம் சூரிய கலை என்றும் இவையிரண்டும் சேருமிடத்து சுஷும்னை அல்லது சுழுமுனை என்றும் கூறுவர். முறையாக செபத்தின் மூலம் மூச்சைக் கூட்டி சுஷும்னயில் எழுப்புவதை (அக்னி கலை) கற்றறியும் போது சிந்தை தெளிந்து சிவமாவர் என்பதை திருமூலரும் பல இடங்களில் கூறுகிறார்.
ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திர மாரு மறிகிலர்
சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும்
வாயுற வோதி வழுத்தலுமே (2703)


சந்திர கலையும் சூரிய கலையும் "சிவாய நம" என்ற ஐந்தெழுத்து மந்திரத்தால் கூட்டப் படுதலை உணார்த்துகிறார். இன்னுமொரு பாடலில்

சந்திரன் சூரியன்தான் வரின் பூசனை
முந்திய பானுவில் இந்து வந்து ஏய்முறை
அந்த இரண்டும் உபய நிலத்தில்
சிந்தை தெளிந்தார் சிவம் ஆயினாரே (1989)


உபய நிலம் என்பது சக சிரதளத்தை குறிப்பதாகிறது. இப்பெரும் தத்துவத்தை கபீரும் முழுமையாக உணர்ந்திருந்தார் என்பதும் செபம் மற்றும் குருவின் அவசியம் பற்றி அவர் எளிமையாக போதித்தார் என்பதையும் நாம் காண்கிறோம்.

No comments:

Post a Comment