Wednesday, March 14, 2012

தமிழில் ஆத்ம போதம்

பா 68:
திக்கிடங் காலமுதற் றேம லென்றுமெத்
திக்குமார்ந் தேக்குளிர்மு றிப்பதா - யெக்களங்கமு
மற்றநித் யானந்த வான்மதீர்த் தத்துதோய்
உற்றவ னார்செய்கை யொன்றின்றி - மற்றவன்
யாவு மறிந்தொணா யெங்குநிறைந் தாரமிர்த
நாவ னெனவே யறி.

பதம் பிரித்து:
திக்கு, இடம், காலம் முதற்றே அமலென்றும்
எத்திக்கும் ஆர்ந்தேக் குளிர் முறிப்பதா(ம்) - எக்களங்கமும்
அற்ற நித்யானந்த ஆன்ம தீர்த்தத்து
தோய்வுற்றவனார் செய்கை ஒன்றின்றி மற்றவன்
யாவும் அறிந்தொணா எங்கு(ம்) நிறைந்த ஆரமிர்தன்
ஆவன் எனவே அறி.


பொருள்:
திசை, இடம், காலம், போன்றவற்றுள் மட்டும் அடக்கிவிடாத முடியாததும்,
எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும் நிறைந்ததுமான,
எதிர்மறையான வெப்பத்தினையும், குளிரையும் கூட அழிப்பதுமான,
களங்கமில்லா, நிலையான, அழிவிலா இன்பத்தை இகத்தில் தருவதுமான, பரம்பொருளை,
எவனொருவன் எல்லா செய்கைகளையும் துறந்து, தன் ஆன்மாவெனும் தீர்தத்தில் மூழ்கித் தோய்கிறானோ,
அவன், எல்லாமும் அறிந்தவனாய், எங்கெங்கும் நிறைந்தவனாய்,
அமிர்தமாய் அழிவில்லாததாய் ஆகிறான்.

விளக்கம்:
பரம்பொருளானது காலம், இடம், திசை போன்ற குணங்களால் குறுக்கப்படாமல், எல்லாவற்றையும் தாண்டி எல்லா இடத்திலும், எல்லா திசையிலும் நிறைத்திருக்கிறதாம்.
அப்பரம்பொருளை, தன் ஆன்மாவான 'தீர்த்தத்தில்' - புனித நீரில் மூழ்கி - தன்னைத்தானே, அதில் தோய்த்துக் கொள்கிறானோ, அவன் அந்த பரம்பொருளாகவே, அதன் அழிவிலா நிலையினை அடைகிறானாம்.
புனிதமான எந்த ஒரு இடத்துக்கும் செல்ல வேண்டாமல், தன் இகத்திலேயே பரத்தினைக் காண ஏதுவாகிறது ஞானிக்கு. அது அவனுக்கு நித்யமான ஆனந்தத்தினை நிரந்தரமாய் அடையவும் செய்கிறது.

பகவான் இரமணரின் திருவருளால், இப்பகுதிகளை இங்கே தர இயன்றது

 

No comments:

Post a Comment