Wednesday, February 8, 2012

கலிகாலத்தில் கீதோபதேசத்தின் மதிப்பு என்ன?

 பாரத யுத்த்ததிற்குக் காரணமாக நிகழ்ந்த விஷயங்கள் இன்றும் நம்மிடையே தோன்றுகின்றன. எத்தனை அனாசாரங்கள், எவ்வளவு கொலை கொள்ளைகள், எப்பேர்ப்பட்ட துராசாரங்கள்? அந்தக் காலத்தில் நடந்த எல்லா விதமான் துர் நடவடிக்கைகளும் இப்பொழுதும் நடைபெறுகின்றன. குடும்ப சச்சரவு, ராஜ்யத்தில் கலகம், சமூஹத்தில் அனாசாரம், நீதியின்மை, பலாத்காரம், உயிர்ப் பொருள் சேதங்கள் என்னென்ன? எல்லோரும் தங்கள் சுகத்தை நாடியே வாழ்கிறோம். மற்றவருக்கு இழைக்கப்படும் தீங்கைப் புறக்கணிக்கிறோம். இதைவிட துஷ்கர்மாக்கள் வேறு என்ன வேண்டும்? அதர்மம் தலைவிரித்தாடுகிறது.. இந்த சமயத்தில் இந்த கீதோபதேசம் மிக ஆதரவாக அமைந்துள்ளது. இதில் சொன்ன ஒவ்வொரு நீதியும் இந்தக் கலியுகத்திலும் கடைபிடிக்கக் கூடியதாக உள்ளது. இந்தக் காலத்திற்கும் அவை மிகப் பொருத்தமாகத் திகழ்கின்றன. அர்ஜுனனை வியாஜமாக வைத்து நமக்கு இந்தக் காலத்தில் நடக்க வேண்டிய தரும வ்ருத்திகளைப் பறைசாற்றுகின்றன. ஆகையால் தான் கீதாஸாரம் எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் எல்லோராலும் எப்பொழுதும் பின்பற்றக் கூடிய, பின்பற்ற வேண்டிய ஒரு பெரும் உபதேசமாகக் கருதப்படுகிறது. விவேகத்தால் காம, க்ரோத, லோப, மோஹ, மத, மாத்ஸ்ர்யாதி துஷ்ட குணங்களை வென்று, மனதை ஓர் நிலையில் வைத்து, தருமம், ப்ரேமை, கருணை, ஸமபாவம், பரோபகாரம், வைராக்யம், த்ருட நிச்சயம் என்ற நல்வழியில் வாழ்ந்து, அஹம் என்ற பாவத்தை விட்டு, பகவானிடம் பூரண சரணாகதி அடைந்து, பக்தியெனும் ஓடத்தில் ஞானமெனும் துழவுகோலின் உதவியால், ஸம்ஸாரம் எனும் மஹா சமுத்திரத்தைக் கடந்து ப்ரம்ம நிலையை அடைய உதவி புரியும் மஹா காவியம் இந்த பகவத்கீதை.

No comments:

Post a Comment