Wednesday, January 11, 2012

ஓம் ஸ்ரீராம் ஜெயராம், ஜெய ஜெய ராம்.

ஆன்மீகத்தில் பல படிகள் இருக்குமே என்ற எண்ணத்தில் ஒரு மேற்கத்தியர், அவதாரம், முனிவர் மற்றும் சாது இவர்களுக்கிடையே உள்ள வேறுபாடு என்னவென்று யோகியரிடம் கேட்டார். பகவான் தனக்கே உரிய எளிமையுடனும் அதே நேரம் முடிவுடனும் “ இந்தப் பிச்சைக்காரனுக்கு அதெல்லாம் தெரியாது. ஒன்று மட்டும் தெரியும், தன் உடலையே தான் என்று நினைத்திருக்கும் வரையில் அவன் இதில் எதுவாகவும் முடியாது. இந்த உடல் தானில்லை என்று உணர்ந்ததும் அவற்றில் வித்தியாசம் கிடையாது”
இதிலிருந்து அவர் தேக உணர்வை முற்றிலும் கடந்து விட்டிருந்த ஒரு முழு யோகி என்பதை அறிய முடிகிறது.
கிருத்துவ மிஷினரிகளை சேர்ந்த சிலர் பகவானிடம் “ கிருத்துவர்களாகிய நாங்கள் மனித குலத்திற்கு சேவை செய்கிறோம். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங்களை நிறுவி உதவுகிறோம். ஆனால் உங்களைப் போன்றோர் எதுவும் செய்யாமல் சும்மா இருக்கிறீர்களே (ஏன்) ? என்று வினவினர்.
பகவான் சொன்னது, ”சூரியன் மருத்துவமனைகளைக் கட்டுகிறானா ? பள்ளிகளை நடத்துகிறானா? அனாதை இல்லங்களை
நிர்மாணிக்கிறானா? ஆனால் சூரியன் இருப்பதனால் தானே இவையெல்லாம் நடைபறுகிறது? யோகி என்பவன் சூரியனைப் போன்றவன்”.
யார் மூலம் எவ்வகையான காரியங்கள் முடிக்கப்படவேண்டும் என்றுணர்ந்து அவர்களுக்கு அந்த ஆற்றலை அளிக்க வல்லவர்கள் யோகிகள். யோகி சூரத்குமார் “என் அய்யன் விரும்புவதால்” என்று அடிக்கடி சொன்னதன் மூலம் இறைவனின் கருவியாக தன்னை வைத்துக் கொண்டு செயலாற்றினார் என்பது புரிகிறது. ஞானானந்த கிரி சுவாமிகள் கபீர் என்று குறிப்பிட்டதற்கு ஏற்ப கபீரின் வரிகளை வாழ்ந்து காட்டியவர் யோகிராம் சூரத்குமார் அவர்கள்.

தான்செய்து நடப்பன இல்லை, கபீர்செய் யாமலே நடந்தன வன்றோ
தான்செய்து நடப்பது போலக் காண்பீர், செய்விப்ப வனவன் யாரோ


ஒரு யோகிக்கு ”அய்யனின் ஆணை”யை புரிந்து கொள்ளும் சக்தி இருக்கலாம். ஆனால் சாமானியர்கள் நிலையென்ன?
அதற்கு விடையாக பகவான் யோகி ராம்சூரத்குமார் ஒரு அருமையான கதை சொல்லுவார்.
சமுத்திரக் கரையோரத்தில் இரு தித்திபப் பறவைகள் இருந்தன. முட்டையிட்டு இரை தேடச் சென்ற போது கடல் அலைகள் முட்டைகளை இழுத்துச் சென்று விட்டன. திரும்பி வந்த தித்திபப் பட்சிகளுக்கு ஒரே வருத்தம். கடலின் மீது ஒரே கோபம். கடலைப் பார்த்து முட்டைகளைத் திருப்பித் தா என்று கேட்டால் கடல் அலட்சியப்படுத்தி விட்டது. ”இந்தக் கடலை வற்றச் செய்து முட்டைகளை திரும்பப் பெறுவோம்” என்று தீர்மானித்த பறவைகள் தம் அலகுகளினால் நீரை கரையில் வாரி இறைத்தன. பல மணி நேரங்கள் முயற்சி நீடித்தது. அந்தப்பக்கம் வந்தப் பெரியவர் ” இது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவைகளின் குறிக்கோளைக் கேட்டவர் “இது நடக்கக் கூடிய காரியமா ?”என கேலி செய்தார். பறவைகளோ சற்றும் மனம் தளராமல் “உங்களுக்கு அதில் என்ன சந்தேகம்? கடல் நீரைக் கட்டாயம் வற்றச் செய்து முட்டைகளை மீட்போம்” என உறுதியுடன் கூறின. அவைகளின் உறுதியையும் விடாமுயற்சியையும் கண்டு அந்தப் பெரியவர் தன் தெய்வீகக் கரங்களை கடலில் விட்டு முட்டைகளை மீட்டுத் தந்தார்.
பகவான் இந்தக் கதையை மிகுந்த நெகிழ்வும் அன்பும் மிளிரக் கூறி “விடா முயற்சியும் தளரா மன உறுதியும் கொண்டு செய்யும் முயற்சிகள் இறையருளை ஈர்க்கும் சக்திஉடையவை என்று கூறுவார்.
விடாமுயற்சிக்குத் தேவை வைராக்கியம். அதனுடன் இலக்கை அடையவேண்டும் என்ற தணியாத தாகம், தீராப் பசி அல்லது வெறி அவசியம் இருக்க வேண்டும். நமது லட்சியத்தில் நேர்மை இருந்தால் அது இறையன்பை நம்பால் கொண்டுவர முடியும். இது இருந்தால் நம் சாதனை எளிதாகி விடும்.
இதை நினைவுறுத்தும் கபீரின் ஈரடி ( பாரதி எதிரொலிக்கும் கபீர் )
ஆழியுள் குதிப்பர் ஆழ மூழ்குவர், அள்ளி வருவரே முத்து
கூழையர் கூடுவர் கூசியே நிற்பர், எங்கனம் தருவரே முத்து?

(கூழையர்= அற்ப மக்கள், அறிவற்றவர்; கூசுதல்= பயப்படுதல்)
கடலில் மூழ்கி முத்தெடுப்பது ஒரு கடினமான செயல். துணிச்சல் உள்ளவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் ஒரு காரியம் இது. உள்ளே சென்றவருக்கு மூச்சுக் கட்டும் திறமை அசாதாரணமாக இருக்க வேண்டும். கடல் வாழ் பிராணிகளால் எந்த கணமும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். அதனால் பெரும்பாலானவர் தொழிலில் உள்ள அபாயத்தையும் சங்கடங்களையும் சொல்லி முத்துக்குளிக்க விரும்புவனை தடுக்க முயலுவர். மனத்திண்மையுடையவர் அவற்றைப் பொருட்படுத்தாது துணிந்து செயலில் இறங்குவர். அப்பேர்பட்டவர்கள் தான், கடலின் அரிய பொக்கிஷங்களை உலகுக்கு வெளிக்காட்டுகின்றனர்.

கபீர் இந்த உதாரணத்தை சொல்வதன் நோக்கம் ஆன்மீகத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு சாதனைகளை மேற்கொள்ளாமல் வெறும் பேச்சளவிலே நிற்பதால், பிறவி வந்ததன் பயனான, இறையின்பம் அடையப் படாதது என்பதாகும். சாதனைகளை மேற்கொள்ள பெரிய வைராக்கியமும் திடச்சித்தமும் தேவை என்பதை எல்லா ஞானிகளும் உரைக்கின்றனர். எனவே அதை முத்துக்குளிப்பதற்கு ஒப்பாக்கி காட்டுகிறார். ஆயின் நாம் இதை வெறும் ஆன்மீகத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் எந்த ஒரு உயர்லட்சியத்தை அடைவதற்கான தேவை எனக்கொள்ளலாம்.

தளரா மனம் உள்ளவர்களின் முயற்சிக்கு இறைவன் கரங்களும் விரைந்து உதவிக்கு வரும் என்று நமக்கெல்லாம் நம்பிக்கை தரும் வகையில் தித்திப பறவைகளின் கதை மூலம் அவன் அருளை புரிய வைக்கிறார் இருபதாம் நூற்றாண்டு கபீரான ஸ்ரீ யோகிராம் சூரத்குமார்.
டிசம்பர் ஒன்றாம் தேதி யோகிராம் சூரத்குமார் அவர்களின் ஜன்ம ஜெயந்தி. அவருடைய அருள் வாசகர்கள் அனைவருக்கும் பூரணமாய் கிட்டட்டும்.
ஓம் ஸ்ரீராம் ஜெயராம், ஜெய ஜெய ராம்.
கலிமலம் தீர்க்குமே, சதா செபிப்பீர் ராம நாமமே
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்துத் தேயுமே
சென்மமு மரணமு மின்றித் தீருமே
இம்மையே ராமா வென்றிரண் டெழுத்தினால்
(கம்பராமாயணம்)

No comments:

Post a Comment