என்ன நான்கு ஸ என்கிறீர்களா ? ஸத்குரு, ஸத்ஸங்கம், ஸாஸ்திரம், ஸகுண பக்தி என்பதே அவை. குருவைத் தேடினார். பலரும் குருவாக தங்களைக் கருதிக் கொண்டார்கள். அல்லது குருவாக பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். உன்னிடம் உண்மை பூரணமாக இருக்குமானால், உன்னால் உண்மையை மட்டுமே ஏற்க முடியும். அதனால்தான் சுவாமி விவேகானந்தரால் ராமகிருஷ்ணரைத் தவிர வேறு யாரையும் குருவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரத்தினத்தைப் பரிசோதிக்கத் தெரிந்தவன், போலி வைரங்களைத் தள்ளி உண்மையான வைரத்தை எப்படிக் கண்டுபிடிப்பானோ, அப்படி துக்காராமால் போலிகளை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. உத்தம உண்மையான குரு, அவருக்கு தியானத்தில் தரிசனம் கொடுத்தார். தன் கரகமலத்தை துக்காராமின் தலையில் வைத்து, விட்டலனின் மூல மந்திரத்தைக் காதில் உபதேசமும் செய்தார். நாற்பத்தைந்து ஆண்டுகளே பூவுலகில் வாழ்ந்த துக்காராமின் முடிவும் அதிசயமானது. பலர் பார்த்துக்கொண்டிருந்தனர், அவர் ஒரு மரத்தடியில் நின்றுகொண்டு, வெளியூருக்குக் கிளம்புவார்கள் நான் போய்விட்டு வருகிறேன் என்று எல்லோரிடமும் எப்படிச் சொல்லிக்கொண்டு போவார்களோ, அதுபோல் எல்லோரிடமும் ராம் ராம் என்று சொல்லிக்கொண்டே வைகுண்டம் கிளம்பினார். எப்படி என்கிறீர்களா ? இறந்தபிறகு அல்ல ! இந்தப் பூத உடலுடன் பாடிக்கொண்டே, அதுவும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே ! அவருடைய அனுக்கிரகத்தின் மகிமை எத்தகையது என்பதை, அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு சம்பவத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
துக்காராம் எப்பொழுதும்போல் தன்னை மறந்த நிலையில் இறைவனைப் பாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவர் வந்து அவரை நமஸ்கரித்தார். துக்காராமோ தன்னை மறந்த நிலையில் பாடிக்கொண்டு பரவசத்துடன் காணப்பட்டார். வந்தவர் துக்காராம் அவர்களின் உடலில் காணப்படும் மயிர்க்கூச்சலைக் கண்டார். ரோமங்கள் எல்லாம் முள்ளம்பன்றியின் முட்கள்போல் புடைத்துக்கொண்டு காணப்பட்டது. விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. ஹ்ருதயத்தில் பக்தியானது, ஊற்றாகக் கிளம்பி காட்டாற்று வெள்ளம்போல கட்டுக்குள் அடங்காமல் கீர்த்தனைகளாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அவருடைய முகத்தில் கருணை, அன்பு, அமைதி, திவ்யமான தேஜஸ் எல்லாம் ஒன்றுசேர்ந்து குடிகொண்டிருந்தது. இப்படி ஒருவரைக் காண முடிந்தால், நமக்கும் அத்தகைய நிலையை அடையவேண்டும் என்ற ஆசை அந்த நேரத்திலாவது ஒருவருக்குத் தோன்றத்தானே செய்யும் ! அப்படித்தான் துக்காராமை நமஸ்கரித்தவருக்கும் ஆசை ஏற்பட்டது. கீர்த்தனம் முடிந்தபிறகு துக்காராமை தனிமையில் தரிசனம் செய்தார். எனக்கும் தங்களைப் போல ஞான வைராக்கியத்துடன் கூடிய பக்தி ஸித்திக்க, தாங்கள் அருள்செய்ய வேண்டும் என்று மன்றாடி பிரார்த்திக்கின்றனர். துக்காரமும் புன்முறுவலுடன் அவருக்கு ஒரு வாழைப்பழத்தை கொடுத்தனுப்பினார். பழத்தைப் பெற்றவருக்கு ஏமாற்றம். நாம் ஞானபக்தியை வைராக்கியத்தைக் கேட்டால், இவர் ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டாரே என்று வருந்தினார். அந்த ஏமாற்றமும் வருத்தமும் எல்லாம் சேர்ந்து வெறுப்பாக மாறியது. வீதியில் அப்பொழுது, ஓர் ஏழை தெருவிலிருக்கும் குப்பைகளைக் கூட்டிக்கொண்டிருந்தார். அதுதான் அவருடைய வேலை. வெறுப்பில் அந்த வாழைப் பழத்தை அவரிடம் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். அந்தப் பழத்தைச் சாப்பிட்டவுடன் அது அவரிடத்தில் தன் வேலையைக் காண்பித்தது. ஆம் ! அவர் மகா பக்தராகிவிட்டார். சாங்கேவர்மன் என்பது அவருடைய பெயர். குருவின் பெருமைகளைப் பாடிய அவருடைய குருத்யாயி என்ற பாடலை பக்தர்கள் இன்றும் பாடிக்கொண்டிருப்பதே இதற்கு சாட்சி. மகான்களின் சம்பந்தம் பெற்ற எதுவுமே மகத்தானது என்பதை இதன்மூலம் அறியலாம்.
No comments:
Post a Comment