Monday, September 19, 2011

துக்காராம் பற்றிய ஒரு குறிப்பு

பண்டரி பக்தர்களில் மிகவும் முக்கியமானவர் துக்காராம். இன்றும் தமிழ்நாட்டில் அவருடைய பெயரைக் கொண்ட தெருக்களும், பஜனை மடங்களும் காணப்படுகின்றன. அவர் பாடிய பாடல்களை மகாராஷ்டிர அரசு, அரசுடைமையாக்கியுள்ளது. பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் இவர். நாமதேவர் என்ற பக்தர்தான் மீண்டும் துக்காராமாக வந்தார் என்று பல பக்தர்களின் நம்பிக்கை. இருபத்திரண்டு வயது வரை தங்கள் குடும்பம் நடத்திவந்த வியாபாரத் தொழிலையே பார்த்து வந்தார் துக்காராம். ஷாஜஹான் ஆட்சி முடிந்தது ஒளரங்கசீப்பின் ஆட்சி ஆரம்பித்த காலம் அது. அப்பொழுது மராட்டிய மாநிலத்தில் கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியது. எந்த அளவுக்குத் தெரியுமா ? இறந்த பிணத்தை மனிதர்கள் உண்டார்கள். தங்கள் குழந்தைகளையும் உணவின் பொருட்டு விற்க ஆரம்பித்தார்கள். சுமார் இரண்டு வருட காலத்துக்கு மழையே இல்லை. கோரமான பஞ்சம் தாண்டவமாடியது. அந்த சமயத்தில்தான் துக்காரமுடைய மனைவி வியாதியினால் பீடிக்கப்பட்டு காலகாதியை அடைந்திருந்தார். தன் வாழ்வில் ஏற்பட்ட தனிப்பட்ட துயரம், நாட்டில் ஏற்பட்ட பஞ்சம் எல்லாம் சேர்ந்து மஹா புருஷரான துக்காராமின் வைராக்கியத்தை அதிகப்படுத்தியது. எப்பொழுதும் தனிமையை நாடினார். தன் கிராமத்திலிருந்து சற்று தொலைவில் இருந்த ஒரு மலையில் பெரும்பாலான நேரத்தைக் கழிக்கலானார். ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை போன்ற புனித நூல்களின் பாராயணத்தில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டார். இந்த நிலை அவருடைய போக்கில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. குடும்பம், வியாபாரம் எல்லாம் அவருக்கு இரண்டாவதாகப் போய்விட்டதால், அதற்கு அவர் முக்கியத்துவம் அளிக்கவில்லை. இறைவனை நேருக்கு நேர் காண வேண்டும். என்ற வேட்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இறைவனை அடைய நான்கு ஸ முக்கியம் என்பார் அவர்.
என்ன நான்கு ஸ என்கிறீர்களா ? ஸத்குரு, ஸத்ஸங்கம், ஸாஸ்திரம், ஸகுண பக்தி என்பதே அவை. குருவைத் தேடினார். பலரும் குருவாக தங்களைக் கருதிக் கொண்டார்கள். அல்லது குருவாக பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். உன்னிடம் உண்மை பூரணமாக இருக்குமானால், உன்னால் உண்மையை மட்டுமே ஏற்க முடியும். அதனால்தான் சுவாமி விவேகானந்தரால் ராமகிருஷ்ணரைத் தவிர வேறு யாரையும் குருவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரத்தினத்தைப் பரிசோதிக்கத் தெரிந்தவன், போலி வைரங்களைத் தள்ளி உண்மையான வைரத்தை எப்படிக் கண்டுபிடிப்பானோ, அப்படி துக்காராமால் போலிகளை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. உத்தம உண்மையான குரு, அவருக்கு தியானத்தில் தரிசனம் கொடுத்தார். தன் கரகமலத்தை துக்காராமின் தலையில் வைத்து, விட்டலனின் மூல மந்திரத்தைக் காதில் உபதேசமும் செய்தார். நாற்பத்தைந்து ஆண்டுகளே பூவுலகில் வாழ்ந்த துக்காராமின் முடிவும் அதிசயமானது. பலர் பார்த்துக்கொண்டிருந்தனர், அவர் ஒரு மரத்தடியில் நின்றுகொண்டு, வெளியூருக்குக் கிளம்புவார்கள் நான் போய்விட்டு வருகிறேன் என்று எல்லோரிடமும் எப்படிச் சொல்லிக்கொண்டு போவார்களோ, அதுபோல் எல்லோரிடமும் ராம் ராம் என்று சொல்லிக்கொண்டே வைகுண்டம் கிளம்பினார். எப்படி என்கிறீர்களா ? இறந்தபிறகு அல்ல ! இந்தப் பூத உடலுடன் பாடிக்கொண்டே, அதுவும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே ! அவருடைய அனுக்கிரகத்தின் மகிமை எத்தகையது என்பதை, அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு சம்பவத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
துக்காராம் எப்பொழுதும்போல் தன்னை மறந்த நிலையில் இறைவனைப் பாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒருவர் வந்து அவரை நமஸ்கரித்தார். துக்காராமோ தன்னை மறந்த நிலையில் பாடிக்கொண்டு பரவசத்துடன் காணப்பட்டார். வந்தவர் துக்காராம் அவர்களின் உடலில் காணப்படும் மயிர்க்கூச்சலைக் கண்டார். ரோமங்கள் எல்லாம் முள்ளம்பன்றியின் முட்கள்போல் புடைத்துக்கொண்டு காணப்பட்டது. விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. ஹ்ருதயத்தில் பக்தியானது, ஊற்றாகக் கிளம்பி காட்டாற்று வெள்ளம்போல கட்டுக்குள் அடங்காமல் கீர்த்தனைகளாக வெளிப்பட்டுக்கொண்டிருந்தது. அவருடைய முகத்தில் கருணை, அன்பு, அமைதி, திவ்யமான தேஜஸ் எல்லாம் ஒன்றுசேர்ந்து குடிகொண்டிருந்தது. இப்படி ஒருவரைக் காண முடிந்தால், நமக்கும் அத்தகைய நிலையை அடையவேண்டும் என்ற ஆசை அந்த நேரத்திலாவது ஒருவருக்குத் தோன்றத்தானே செய்யும் ! அப்படித்தான் துக்காராமை நமஸ்கரித்தவருக்கும் ஆசை ஏற்பட்டது. கீர்த்தனம் முடிந்தபிறகு துக்காராமை தனிமையில் தரிசனம் செய்தார். எனக்கும் தங்களைப் போல ஞான வைராக்கியத்துடன் கூடிய பக்தி ஸித்திக்க, தாங்கள் அருள்செய்ய வேண்டும் என்று மன்றாடி பிரார்த்திக்கின்றனர். துக்காரமும் புன்முறுவலுடன் அவருக்கு ஒரு வாழைப்பழத்தை கொடுத்தனுப்பினார். பழத்தைப் பெற்றவருக்கு ஏமாற்றம். நாம் ஞானபக்தியை வைராக்கியத்தைக் கேட்டால், இவர் ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்து அனுப்பிவிட்டாரே என்று வருந்தினார். அந்த ஏமாற்றமும் வருத்தமும் எல்லாம் சேர்ந்து வெறுப்பாக மாறியது. வீதியில் அப்பொழுது, ஓர் ஏழை தெருவிலிருக்கும் குப்பைகளைக் கூட்டிக்கொண்டிருந்தார். அதுதான் அவருடைய வேலை. வெறுப்பில் அந்த வாழைப் பழத்தை அவரிடம் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். அந்தப் பழத்தைச் சாப்பிட்டவுடன் அது அவரிடத்தில் தன் வேலையைக் காண்பித்தது. ஆம் ! அவர் மகா பக்தராகிவிட்டார். சாங்கேவர்மன் என்பது அவருடைய பெயர். குருவின் பெருமைகளைப் பாடிய அவருடைய குருத்யாயி என்ற பாடலை பக்தர்கள் இன்றும் பாடிக்கொண்டிருப்பதே இதற்கு சாட்சி. மகான்களின் சம்பந்தம் பெற்ற எதுவுமே மகத்தானது என்பதை இதன்மூலம் அறியலாம்.

தீமைக்கெல்லாம் காரணம் பணம்



தீமைக்கெல்லாம் காரணம் பணம்* செல்வத்தின் பாலுள்ள விருப்பை விடு. ஒன்றொன்றுக்குள்ள வித்தியாசத்தை ஆராய்ந்தறி. மனம் உணர்ச்சி வசப்படாமலிருக்க பயில, உன் சொந்த முயற்சியால் ஈட்டும் சிறு பொருளுடன் திருப்தி அடை.
* தீமைக்கெல்லாம் ஆதி காரணம் செல்வமே. உண்மையில் அதில் இன்பத்தின் அடிச்சுவடை சிறிதளவும் காண முடியாது. செல்வருக்குத் தம் மக்களிடமிருந்தே அச்சம் தோன்றும். எங்கும் இதே நிலைதான்.
* உன் மனைவி யார்? உன் மகன் யார்? இவ்வுலகம் மிக விசித்திரமானது நீ யார்? யாருடையவன் நீ? நீ எங்கிருந்து வந்தாய்? இவ்விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்.
* உன் சுற்றத்தாரையோ, செல்வத்தையோ, இளமையையோ பற்றிப் பெருமைப்படாதே. எல்லாவற்றையும் விழுங்கும் காலன், இவற்றையும் ஒரு கணத்தில் விழுங்கிவிடுவான். பொய்யான இப்பொருள்கள் யாவற்றையும் துறந்து, பரமனைக் கண்டு அவனிடம் சரணடைந்து விடு.
* உணர்ச்சிவெறி, கோபம், பற்று, பேராசை இவற்றையெல்லாம் துறந்து, உன் உண்மையான தன்மையைக் கண்டுபிடிக்க முயற்சிசெய்.
* ஆத்ம ஞானம் இல்லாத மூடர் பயங்கர நரகங்களையே அடைவர். இவர்கள் கோயிலிலோ, மரத்தடியிலோ வசிக்கலாம். தரையில் படுத்துறங்கலாம். மான்தோல் போர்த்துக் கொள்ளலாம். விஷய போகங்களை துறக்கலாம். இத்துறவுகளால் யாருக்கு இன்பம் ஏற்படப் போகிறது?
* நண்பனிடமோ, பகைவனிடமோ, மகனிடமோ, உறவினிடமோ, யுத்தத்தின் பாலோ, சமாதானத்தின்பாலோ பற்று வைக்காதே. நீ விரைவில் பரம நிலை அடைய விரும்பினால், எதிலும் சமபுத்தியுடையவனாக இரு. உண்மையைப் பொய்யினின்று வேறுபடுத்தி அறி.

Sunday, September 18, 2011

ஒளவையார் பெருமை

தமிழ்மொழியிலேயே முதன்முதலில் தோன்றிய நூலாக "அகத்தியம்" என்னும் நூலைச் சொல்வார்கள். அகத்தியரால் இயற்றப்பட்டு விநாயகரால் எழுதப்பட்ட நூல் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் குறிப்பிடப்படுவது இந்நூல்தான். ஆனால் தற்சமயம் நம்மிடம் வழங்கும் தமிழ்நூல்களிலேயே மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். ஆகையால் இன்று நம்மிடம் இருக்கும் தமிழ்நூல்களில் காலத்தால் முதன்மையான நூல் தொல்காப்பியம். தமிழின் சிறப்புவாய்ந்த நூல்களில் திருக்குறþளே முதன்மை வகிக்கிறது. ஆனால் அனைத்து நூல்களுக்கும் இல்லாததொரு விசேஷ சிறப்பு ஒளவையின் நூலான "ஆத்திசூடி"க்கு உண்டு.

ஆத்திசூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும்போதே தமிழில் கற்கப்படும் முதல் நூல். தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால் கலந்து ஊட்டப்படுவது ஆத்திசூடிதான்.

தமிழ்ப்பாட்டி

"தமிழ்த்தாத்தா" என்று நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த உ.வே.சாமிநாதய்யரை அழைக்கிறோம். ஆனால் "தமிழ்ப்பாட்டி" என்று அழைக்கப்படுகின்ற பெருமையைப் பெற்ற ஒளவையோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தோன்றிவிட்டாள்.

வரலாறு
ஒளவையின் வரலாறு, காலம் ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஒளவையின் பெயரால் பல பாடல்களும், சில நூல்களும், சில கதைகளும் நிலவிவருகின்றன. அவற்றை வைத்துப்பார்க்கும்போது சுமார் ஆயிரத்தைன்னூறு ஆண்டுக் கால கட்டத்திற்குள் குறைந்தது மூன்று ஒளவையார்களாவது இருந்ததாகத் தோன்றும். அனைத்துக் கதைகளும் இணைக்கப்பட்டு, கதம்பமாக ஒரு வரலாறு பின்னப்பட்டு, அதுவே ஒளவையாரின் வாழ்க்கைச் சரிதமாக, செவிவழி மரபாகக் கூறப்பட்டு வருகிறது.

அவர் ஆதி பகவன் ஆகிய இருவருக்குப்பிறந்து, பிறந்தவுடனேயே பெற்றோராலால் கைவிடப்பட்டு, பாணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டதாக அவ்வரலாறு கூறும். அவர் கன்னிப்பருவத்திலேயே முதுமையையும் துறவறத்தையும் விநாயகபெருமானின் பேரருளால் பெற்றதாகவும் அது கூறும். அதிகமானிடம் நெருங்கிய நட்பு பூண்டு, அவரால் ஆதரிக்கப்பட்டு, அவரிடமிருந்து கருநெல்லிக்கனி ஒன்றைப்பெற்று, உண்டு, அதன்மூலம் அழியாத உடலையும் நீண்ட ஆயுளையும் பெற்றார்; அதிகனுக்காக தொண்டைமானிடம் தூது சென்றார்; தமிழகம் முழுமையையும் நடையிலேயே வலம் வந்திருக்கிறார்; பல மன்னர்களுக்கு ஆலோசனைகளும் புத்திமதியும் சொல்லியிருக்கிறார்; மிக்க மன உரம் மிக்கவர்; அஞ்சாமை, வைராக்கியம், ஈரம், இரக்கம், சொல்வன்மை, இறைவனின் திருவருள், அற்புத ஆற்றல்கள், சித்திகள் முதலியவை படைத்தவர்; எளிமையின் சின்னம்; ஏழையின் தோழி; பொன்னுக்கும் புகழுக்கும் பெரும்பான்மையான புலவர்கள் பாடி வரும்போது கூழுக்கும் பாடியவர்.

காதலில் தோல்வியடைந்த பேயொன்றைத் தன் ஆற்றலால் மீண்டும் "தமிழறியும் பெருமாள்" என்ற பெயரோடு பெரும்பண்டிதையாகப் பிறக்கச்செய்து, அந்தப்பிறவியில், இழந்த காதலை மீண்டும் பெறச்செய்தார். கம்பர், ஒட்டக்கூத்தர் ஆகியோருடன் போட்டியிட்டார். சங்கப்புலவர்களால் முதலில் புறக்கணிக்கப்பட்ட திருக்குறளுக்காக, சங்கப்புலவர்களை மீண்டும் கூட்டி, பொற்றாமரைத் திருக்குளத்தில் சங்கப்பலகையைத் தோன்றச்செய்து, அதன்மீது திருக்குறள் சுவடியை வைத்து, தாங்கச்செய்து, குறளின் சிறப்பை உணர்வித்து, அரங்கேற்றம் பெற உதவினார். பாரி வள்ளலின் இறப்புக்குப்பின்னர், அவரின் உயிர்த்தோழர் கபிலரின் மறைவுக்குப் பிறகு, பாரிமகளிரை திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரி மன்னனுக்கு மணமுடித்து வைத்தார்.

சுந்தரமூர்த்தி நயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை , குதிரை மீதேறிக்கொண்டு திருக்கயிலைக்குச் செல்லும்போது, விநாயகர் பூஜையைச்செய்து, விநாயகர் அகவலைபாடி, விநாயகப்பெருமானின் ஆற்றலால் அவர்களுக்கு முன்னரேயே உடலுடன் திருக்கயிலையை அடைந்தார். இவையெல்லாம் அந்த மரபுவழிக்கதைகளாலும் பாடல்களாலும் அறியப்படுபவை.

வரலாற்று ஆய்வு
ஆராய்ந்து பார்க்குமிடத்து மூன்று ஒளவையார்களாவது இருப்பது தெரியும்:

சங்க காலத்தில் உள்ள ஒளவையே பாணர் குலத்தில் உதித்த விறலி. பேரழகியாக விளங்கி, பெரும்புலமையுடனும் தைரியத்துடனும் விளங்கியவர்; இவர்தான் கபிலர், பரணர், பாரி, அதிகமான் ஆகியோர் காலத்தில் வாழ்ந்தவர்; அதிகமானுக்காக தூது சென்றவரும் இவர்தான். அதிகமான் தந்த கருநெல்லிக்கனியை உண்டு, நீண்ட காலம் உயிருடன் இருந்தவர்; பாரிமகளிருக்கு மணமுடித்து வைத்தவரும் இவர்தான். இவருடைய பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சங்ககாலம் முடிவடைந்தது. நீண்ட காலம் உயிருடன் இருக்கும் காயசித்தி ஆற்றலைக் கருநெல்லியின் மூலம் பெற்ற ஒளவை, பின்னர், சங்கம் மருவிய காலத்தில், திருக்குறளை அரங்கேற்றம் செய்ய உதவியிருக்கலாம். இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், யோகசாத்திரங்களில் கரை கண்டவராக ஒளவையார் காணப்படுகிறார். அப்போது இவர் விநாயக உபாசனையையும் செய்து வந்திருக்கிறார். விநாயக உபாசனை, குண்டலினி யோகம் ஆகியவற்றைத் தமிழகத்தில் பிரபலப்படுத்துவதில் இவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். "ஒளவை குறள்" என்னும் சித்தர் நூலை எழுதியவரும் இவராக இருக்கலாம். சாகாக்கலையைப் பற்றி அந்நூலில் இவர் கூறியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் "விநாயகர் அகவலை"ப் பாடியவுடன் விநாயகரின் பேரருளால் தன் உடலுடன் திருக்கயிலையை அடைவதுடன் இந்த ஒளவையாரின் வரலாறு பூர்த்தியாகும்.

கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த இன்னொரு ஒளவையார், பல தனிப்பாடல்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.

அதன்பின், சில நூற்றாண்டுகளுக்குப்பிறகு, வேறொரு ஒளவையார் இருந்திருக்கிறார்.

இவரோ அல்லது கம்பர் காலத்து ஒளவையாரோதான் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களை இயற்றியவர். ஆனால் இவர்களில் கடைசி ஒளவையார்தான் மூதுரையையும் நல்வழியையும் ஆக்கியுள்ளார்.

நூல்களின் சிறப்பு
மிகப்பெரிய பெரிய நீதிநூல்கள் பலவற்றுள் காணப்படும் விஷயங்களின் சாரமாக அமைந்துள்ள அனைத்து நீதிகளையும் நீதிக்கருத்துக்களையும் "ஆத்திசூடி", கொன்றைவேந்தன்" ஆகிய நூல்களில் எளிய சொற்களால் அமைந்த, சிறிய வாக்கியங்களில் காணலாம். இளஞ்சிறார்கள் மிக எளிதாய்ப்படித்து, புரிந்து, மனனம் செய்துகொள்ளும்படி அமைந்தவை அவை. அத்தனை இளவயதில் மனனம் செய்யப்பட்டு விட்டதால், பசுமரத்தாணி போல் அவை மனதில் பதிந்துவிடுகின்றன. அவற்றைப் படித்த மனிதனின் அல்லது சொல்லக்கேட்ட மனிதனின் ஆழ்மனதின் மிக ஆழத்தில் பதிந்து விடுவதால் அந்த மனிதனின் சிந்தனை, செயல் யாவற்றிலும் அவை பிரதிபலிக்கும். சுருங்கச்சொன்னால், அந்த மனிதனின் மனச்சாட்சியை இந்த நீதி வாக்கியங்கள் உருவாக்கி, நிலை பெறவும் செய்கின்றன.

சமுதாயத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் இவற்றையெல்லாம் நீதிகளாகக் கற்று, கேட்டு வந்த காலங்களில், தமிழ் சமுதாயத்தினிடத்தில் குற்றச்செயல்களின் விகிதம் இன்றை விட குறைவாகவே இருந்திருக்கின்றது.

"பதஞ்சலி யோகசூத்திர"த்தைப் போன்ற சூத்திரங்களின் வடிவில் இந்நூல்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன.

இவற்றில் "ஆத்திசூடி" மிகச்சிறிய வாக்கியங்களாலும் "கொன்றைவேந்தன்" சற்றுப்பெரிய வாக்கியங்களாலும் ஆகியவை. "இன்னதைச்செய்" அல்லது "இன்னதைச் செய்யாதே", "இப்படிச்செய்தால் நல்லது", "இப்படியெல்லாம் செய்தால் தீமை" என்ற பாங்கில் அவை அமைந்திருக்கும்.

"ஆத்திசூடி" என்ற பெயர் "ஆத்திமாலையை அணிந்திருப்பவன்" என்ற பொருளைத் தரும். இந்த இடத்தில் இது விநாயகரைக் குறிக்கிறது.

"கொன்றைவேந்தன்" - சிவன்; அவனுடைய "செல்வன்" - விநாயகன். இந்த இரு பெயர்களுமே முறையே அந்த நூல்களின் கடவுள் வாழ்த்தின் முதல் இரு சொற்களாக அமைந்தவை.

ஆக, இரு நூல்களுமே தம்முள் கடவுள்வாழ்த்துப் பெற்ற கடவுள் நாயகனுடைய பெயரைத் தாங்கியே, காலத்தை வென்று நிற்கின்றன.

"மூதுரை" என்னும் நூல் வெண்பாக்களால் ஆகியது. இது நீதிகளைக்கூறுவதோடு அல்லாமல், உலக உண்மைகளையும், நடப்புகளையும், யதார்த்தங்களையும், விளக்குகின்றது. ஒவ்வொரு கருத்துக்கும் உவமை கூறும் நயம் படைத்தது. முப்பது வெண்பாக்கள் உடையது இந்நூல்.

"நல்வழி" என்னும் நூலும் வெண்பாக்களினால் ஆனதுதான். இதில் உலகியல் வாழ்வின் உண்மையையும், ஊழின் வலியையும், இறை நம்பிக்கையையும் வலியுறுத்துகிறார் ஒளவையார். நாற்பது பாடல்கள் கொண்டது இன்னூல்.

இவையே தமிழ்மொழியின் தலையாய நீதிநூல்கள்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சங்கத்தார் கோயிலில், தமிழ்ச்
சங்கத்தின் தலைவர் "இறையனார்" என்னும் "திரிபுரம் எரித்த
விரிசடைக்கடவுளின்" பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் பெருமையை
ஒளவையார் பெற்றிருக்கிறார்.

மனதை கட

நாட்டில் சுந்தரானந்தர் எனும் ஒருவர் மாயாவி போல் மாயங்கள் நிகழ்த்துவதாக அமைச்சர் வாயிலாக கேள்விப்பட்ட மன்னன் அபிஷேக பாண்டியன், அரசனுக்கே உரிய செருக்கோடு, சுந்தரானந்தரை அவைக்கு அழைத்து வரச்சொல்லி சேவகர்களை அனுப்பிவிட்டான். ஆனால், அது எத்தனை பிழையான செயல் என்பதை அவன் எண்ணிப்பார்க்கவில்லை.
செருக்குகள் இருவிதம்:
ஒன்று பிறர் அறியும் விதம் வெளிப்படும் கர்வச் செருக்கு. இன்னொன்று, அறியாவண்ணம் ஒளிந்திருக்கும் அதிகாரச் செருக்கு. இரண்டுமே தவறானது என்பதை காலத்தால் உணர்த்துபவர்களே சித்தர்கள். பாண்டிய மன்னனிடம் அதிகாரச் செருக்கிருந்தது.கூடவே அவனுக்கும் மேலானவர்கள் பூமியில் இல்லை என்கிற ஓர் எண்ணமும் இருந்ததால் அவன் பணிவாக நடந்திட வழியே இல்லாமல் போய்விட்டது.

ஆலயத்தின் மிசை தெய்வத்தின் முன் பணிவாக நடந்து கொண்ட போதிலும் அங்குள்ளது விக்கிரக சொரூபம் தானே?எனவே, உயிருள்ள எவர்முன்னும் அவன் பணிவாக நடந்து கொள்ள வாய்ப்பேயில்லாததால் அவனுக்குள் ஒரு 'நான்' அகங்காரத்தோடு எப்பொழுதும் திகழ்ந்தபடி இருந்தது.

அதற்கு அந்த சித்த புருஷரும் ஒரு பாடம் கற்பிக்கத் தயாரானார். தன் எதிர்வந்து நின்ற சேவகர்களை, என்ன சேதி என்பது போல பார்த்தார்.
''உங்களை எங்கள் அரசர்பிரான் காண வேண்டுமாம்.''
''அதற்கு..?''
''நீங்கள் எங்களோடு அவைக்கு வர வேண்டும்.''
''இது என்ன வேடிக்கை? ஆற்றில் குளிக்க ஒருவர் ஆசைப்பட்டால் அவரல்லவா
ஆற்றுக்குச் செல்லவேண்டும். ஆற்றை வெட்டி அரண்மனைக்கு இட்டுச் செல்வீர்களோ நீங்கள்?''
''அது... அது... அதெல்லாம் எதற்கு? அவர் அரசர். இந்த நாட்டின் தலைமகன்.. இது அவர் உத்தரவு.''
''அந்த உத்தரவுக்கு, தன்னையறியாத நீங்கள் வேண்டுமானால் மடங்கிப் போங்கள். எனக்கு உம் அரசரைக் காண்பதால் ஆகப்போவது எதுவுமில்லை.
'நான்' என்கிற மமதை உள்ளோரால் ஆகிவிடப் போவதும் எதுவுமில்லை. அற்ப மனிதப் பிறப்பாக பிறந்து விட்டோமே என்னும் குழப்பம் மிக்க உனது அரசனால் ஆனதும் எதுவுமில்லை. மூன்று காலங்களிலும் இருந்தும் இல்லாத அவனை நான் காண்பது என்பது சித்தத்துக்கும் அழகில்லை. போய்ச் சொல் போ...''
''மாயாவியே... நீ சொன்னதை நான் அப்படியே போய் சொன்னால் உம்கதி என்னாகும் தெரியுமா?''
''என் கதி மட்டுமல்ல.. உன் அரசர் கதியும் இப்படி நான் சொன்னால்தான் வரலாறாகும்!  போய்ச் சொல். மேற்கொண்டு நீ ஏதாவது பேசினால், சதாசர்வ காலமும் பேசியபடி இருக்கும் கிளியாக உன்னை மாற்றி விடுவேன். அரசனுக்குக் கட்டுப்பட்டு நடக்கத் தெரிந்த உனக்கு, ஆண்டியும் பெரியவனென்று தெரிய வேண்டும். ஓடிவிடு...''
சுந்தரானந்தர் போட்ட போடு _ அந்த சேவகர்கள் திரும்பிச் சென்றனர். மன்னன் அபிஷேக பாண்டியனும் அவர்கள் திரும்பி வந்து சொன்னதை எல்லாம் கேட்டு முதலில் அதிர்ந்தான். பிறகு வியந்தான். வார்த்தைக்கு வார்த்தை அவர் சொன்னதையெல்லாம் அசை போடத் தொடங்கினான். 'ஆனது எதுவுமில்லை, ஆகிவிடப் போவதுமில்லை, ஆவதும் ஏதுமில்லை' என்று முக்கால கதியில் சுந்தரானந்தர் செய்த விமர்சனம் நெஞ்சக் கூட்டை திருகியபடியே இருந்தது. இதனாலோ என்னவோ அவரை எதிர்த்து ஆணைபிறப்பித்து எதையும் செய்யவே தோன்றவில்லை.
ஒரு மனிதன் முதல்முறையாக அபிஷேக பாண்டியன் மனதுக்குள் விசுவரூபமெடுக்கத் தொடங்கிவிட்டான். நின்றால், நடந்தால், படுத்தால், புரண்டால் சுந்தரானந்தர் நினைப்புதான்.
இதே குழப்பத்தோடு ஒரு நாள், ஜடம்போல ஆலவாய் அழகன் திருக்கோயிலுக்குள் மன்னன் சென்ற சமயம், சுந்தரானந்தரும் ஆலயத்துக்குள் பிரவேசித்திருந்தார்.


சாதாரணமாக எல்லா ஆலயங்களையும் கற்பீடங்களே தாங்கி நிற்கும். ஆனால், ஆலவாய் அண்ணலான சொக்கநாதரின் ஆலயத்தை நாற்புறமும் யானைகள் தாங்கி நிற்கக் காணலாம் அதுவும் வெண்ணிற யானைகள்! வெண்ணிற யானை என்றாலே இந்திரன் வந்துவிடுவான்.
இந்திரன் அனுதினமும் பூஜிக்க, சிவ நெறியை நாட்டில் நிலைப்படுத்த, சாப விமோசனமாக கட்டிய திருக்கோயிலல்லவா அது? அபிஷேக பாண்டியனும் அவன் வழி வந்தவனல்லவா? அண்ணலின் தரிசனம் முடிந்து பிரதட்சணம் வரும் சமயம், சுந்தரானந்தரும் எதிரில் வந்தார்.
அதுவும் அப்பிரதட்சணமாய்....! அப்பொழுதுதானே இருவரும் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளவும் தோது ஏற்படும்? அதிலும் அரசன் பிரதட்சண உலா வரும்போது கட்டியங்காரர்கள் முன்னாலே சென்று பராக் சொல்லி எல்லோரையும் ஓரம் கட்டிவிடுவார்கள். ஆயினும் அப்பிரதட்சணமாக வரும் சுந்தரானந்தரை ஓரம்போகச் சொல்ல அவர்களால் முடியவில்லை. காரணம், அவரது தேஜஸ். அடுத்து, பார்க்கும் பார்வை அப்படியே ஆளை நடுக்கி விடுகிறதே..!
அபிஷேக பாண்டியனுக்கு, தனக்கெதிரில் தனக்கிணையாக அவர் நடந்து வருவதன் பொருட்டு கோபம் பீறிட்டது.
அதிகார கோபமும் தவஞான கோபமும் முட்டிக் கொண்டன.
''நீர்தான் மாயங்கள் நிகழ்த்தும் அந்த மாயாவியோ?'' அபிஷேக பாண்டியனே கேள்வியைத் தொடங்கினான்.
''தவறு பாண்டியனே.. சித்தசாகஸங்கள் மாயங்கள் அல்ல. மாயங்கள் அற்பமானவை. சித்த சாகஸங்கள் ஜம்புலனைச் சுருக்கி உள்ளொளியைப் பெருக்கி பஞ்சபூதங்களை உணர்ந்து பிரபஞ்ச நியதி அறிந்து அதற்கேற்ப செயல்படுத்தப்படுபவை... முயன்றால் நீயும் இதை சாதிக்கலாம். இதோ நிற்கிறதே உன் ஏவலர் வரிசை... இவர்கள் கூட சாதிக்கலாம்.''
''நம்ப முடியாது இதை... அந்த இறைவன், மனிதனை ஒரு வரம்புக்கு உட்பட்டே
படைத்திருக்கிறான்...''
'உண்மைதான். ஆனால் அந்த வரம்பு, கைலாயம் என்னும் எல்லையை ஒருபுறமும், வைகுந்தம் என்னும் எல்லையை மறுபுறமும் தொட்டு நிற்பது. அதை உணர்ந்து கைலாயத்தை நீ தொடும்போது, நீயே கைலாயபதி.''
''எதை வைத்து இதை நான் நம்புவேன்?''
''வேண்டுமானால், இங்கேயே அதற்கான பரிட்சையை வை. மாயம் என்றால் இல்லாததை இருப்பதுபோல உருவாக்குவது. அது வெறும் காட்சி. அவ்வாறு இல்லாத ஒரு சாகஸத்துக்கு நீயே அடி கோலுவாய். நானும் உனக்குப் புரியவைப்பேன்...'' _சுந்தரானந்தர் அவ்வாறு சொன்னதுதான் தாமதம், அபிஷேக பாண்டியன் தீர்க்கமாய் சிந்தித்தான். அவன் நின்ற இடத்திற்கு அருகில்தான் இருந்தது, ஆலய விமானத்தை தாங்கியபடி இருக்கும் அந்தக் கல் யானை. நிதர்சனமாய் தெரிவது... மாயபிம்பம் அல்ல அது!
''தவசீலரே... இதோ கல் யானை. மானுட சக்தி, இறை சக்தி வரை செல்லக் கூடியது. அதுவே இறையாகவும் உள்ளது என்று கூறினீரே, இந்தக் கல் யானையை உயிர் யானையாக்குங்கள் பார்ப்போம்.... அப்பொழுது நான் நம்புகிறேன்.''_ அபிஷேக பாண்டியன் அப்படிச் சொன்ன நொடி, சுந்தரானந்த சிவத்தின் முகத்தில் ஒரு புன்னகை. பாண்டியன் பரிவாரத்தில் ஒருவன், மன்மதன் போல கரும்போடு தென்பட்டான். அவனும் அருகில் வந்தான். கரும்பும் பாண்டிய அரசன் கைமிசை சென்று சேர்ந்தது.
''பாண்டியனே.. அந்தக் கல் யானை அருகே செல். உன் மனது அந்த ஈசனின் பஞ்சாட்சர மந்திரத்தைக் கூற, மனமுருகி பிரார்த்தனை செய். என் பொருட்டு இன்று கல் யானை உயிர் யானையாகும். நாளை முற்றாய் நீ உன்னையுமறியும்போது உன்னாலுமாகும்..'' _ என்ற சுந்தரானந்தர் அக்கல்யானையை நோக்க, அடுத்த நொடி, அந்த யானைக்கு உயிர் வந்தது.
அதன் தும்பிக்கை அசைந்து நீண்டு பாண்டியன் வசம் இருந்த கரும்பைப் பற்றி
உண்ணவும் தொடங்கியது. அபிஷேக பாண்டியன் தன் கண்களையே நம்பாமல் கசக்கி விட்டுக் கொள்ள, முழுக்கரும்பை சாறொழுகத் தின்ற அந்த யானை, பாண்டியன் கழுத்து முத்துமாலையையும் எட்டிப் பறித்தது.
பாண்டியன் ஆடிப்போனான். அவன் மேல் மனதும் ஆழ்மனதும் ஒருசேர ஒரே கதியில் உழப்பட்டதில் அப்படியே சுந்தரானந்தர் பாத கதி விழுந்தான் கண்ணீர் விட்டான். பரவசத்தில் சிலிர்த்தான். சுந்தரானந்தரும் புன்னகை பூத்தார்.
சூழ்ந்திருப்பவர்களும் காணக்கிடைக்காத காட்சியைக் கண்டதில் பரவச உச்சிகளில் இருந்தனர். அதன்பின், தனக்கு வம்சம் விளங்கப் பிள்ளைப்பேறு வேண்டினான் பாண்டியன். அருளினார் இறைமுனி. யானையும் பறித்த முத்து மாலையை திரும்பக் கழுத்தில் சூட்டி மீண்டும் கல்லாகி நின்றது.
தவசக்தி எத்தகையது என்று நிரூபித்துவிட்ட பூரிப்புடன் அனைவர் கண் எதிரில், ஆலவாயன் திருச்சன்னதிக்குள் புகுந்து மறைந்தார் சுந்தரானந்தர்.
பாண்டியன் நெக்குருகிப் போனான். வேதங்கள் தந்ததும் இறையே.. அதை அசுரர்கள் பாதாளம் கொண்டு சென்றபோது மீட்டு எடுத்து வந்து தந்ததும் இறையே.. வாழவழி காட்டிய இறை, அதனுள் இறையாகவும் ஆகும் வழி காட்டிட, சித்தவுருவினனாகவும் நேரில் வந்தது. அன்று நேரில் வந்த அந்த சிவம், இன்றும் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு இடப்பக்கத்தில் கல்யானைக்கு அருகிலேயே கோவில் கொண்டு அமர்ந்துள்ளது.
கல்லுக்கே உயிர் கொடுத்த அந்த ஈசன், கல்லாய் கனக்கும் நமது ஊழ்வினைக்
கர்மங்களையும் நீக்கி அருள்புரிந்திடவே கோயில் கொண்டுள்ளான்.
ஆறுநிறைய தண்ணீர் ஓடலாம். ஓட்டைப் பாத்திரங்களால் அதை நாம் நமக்கென எடுத்துக் கொள்ள முடியாது. கொள்ளத் தெரிந்துவிட்டாலோ தாகமே நமக்குக் கிடையாது.
இந்த சுந்தரானந்த சித்தரும் அப்படித்தான். இவரின் பெருங்கருணையை, நற்பாத்திரமாக நாம் இருந்தால், வாரிக் கொண்டு வந்துவிடலாம். அசையாததை எல்லாம் அசைக்கலாம்...

மன்மதன் போல எழிலுருவில் இவர் வந்ததால், மலர்கள் இவருக்கு மிகப் பிடித்ததெனக் கருதி 'பூக்கொட்டாரம்' போடுவது என்னும் ஒரு மலர் வழிபாடு இன்று வழக்கில் உள்ளது. குறிப்பிட்ட தொகையை ஆலய நிர்வாகமே நிர்ணயித்துள்ளது. எனவே, அணுகச் சுலபமான இந்த சித்தனை அணுகுங்கள். அப்படியே சித்தகதியை அடைய சிலராவது முயலுங்கள்.

பயமில்லாதவர் யார்?



* தந்தைக்குக் கடனைத் தீர்த்து வைப்பதற்கு பிள்ளைகள் இருக்கின்றனர் ஆனால் அறியாமைத் தளையை நீக்கி விடுவிக்க அவரவரால் மட்டுமே முடியும்.
* சிரத்தையும், பக்தியும், தியானயோகமும் முக்திக்குக் காரணங்கள் என வேதம் கூறுகிறது. யார் இவைகளில் நிலைபெற்றிருக்கிறாரோ அவர் உலகத் தளைகளில் இருந்து விடுதலை பெறுகிறார்.
* உலகில் எங்கும் என்னைப் போல் பாவம் செய்தவரும் இல்லை. உன்னைப் போல் பாவத்தைப் போக்கும் சக்தி கொண்டவளும் இல்லை. தேவி! இந்த உண்மையை எண்ணிப் பார்த்து உன் இஷ்டம் போல செய்வாயாக.
* மனிதப்பிறவி, ஞானத்தில் நாட்டம், மகான்களின் தொடர்பு இவை மூன்றும் கிடைப்பது அரிது. தெய்வத்தின் அருள் காரணமாகவே இவை ஒருவனுக்கு கிடைக்கின்றன.
* பகவத் கீதையைச் சிறிதாவது படிப்பவன், கங்கை நீரை ஒரு துளியாவது பருகியவன், பகவானுக்கு ஒரு முறையாவது பூஜை செய்தவன்... இப்படிப்பட்டவனுக்கு எமபயம் கிடையாது.
* பொருள் தேடும்வரை சுற்றத்தினர் நம் மீது அன்பு வைத்திருப்பார்கள். நோயினால் தளர்ந்தபோன பின் யாரும் நம்மைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.

பிறரைப் பழித்துப் பேசாதீர்



* உங்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர் களோ, அதே அளவிற்கு பிறர் மீதும் நேசம் காட்டுங்கள். அவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும், பிறரை இழிவாக பேசுதலும், வீண்பழி சுமத்துதலும் கூடாது. இத்தகைய செயல்களால் வீண் பகை வளருமே தவிர, பெயருக்குக் கூட நன்மை உண்டாகாது. மேலும் இத்தகைய குணமுடையவர்களிடம் பாசம், பரிதாபம், இரக்கம், கருணை என எத்தகைய நற்பண்புகளும் இருக்காது.   
* மனிதர்களுக்கு ஏற்படும் துன்பமானது, வெளியில் எங்கிருந்தோ வருவதில்லை. அவரவர் நடந்து கொள்ளும் விதத்திற்கேற்ப அவர்களுக்கு திரும்பக்கிடைக்கிறது. பிறரை பழிப்பதாலும் நமக்கு துன்பம் வரும். ஆகவே, பழிச்சொல்லை விட்டு, அனைவரிடமும் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அத்தகையவர்களே இறைவனால் விரும்பப்படுவர்.
* சிலர் மற்றவர்களை பற்றி குற்றம் சொல்லுவதையே வழக்கமாக கொண்டிருப்பர். பிறர் செய்யும் நல்ல செயல்களைக்கூட மாற்றி திரித்து பேசுவர். இப்படி செய்யவே கூடாது. அடுத்தவர்களை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பவர்களிடம் யாரும் நெருங்க மாட்டார்கள். ஒருகட்டத்தில் அவர் தன் சுற்றத்தார் அனைவரையும் இழந்து தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலைதான் வரும். இறுதிவரையில் அவருடன் சொந்தம், உறவு என யாரும் இல்லாமலேயே போய்விடுவர். ஆகவே, ஒருவர் எத்தகைய செயல் செய்தாலும், அதை விமர்சனம் செய்து பேசாதீர்கள்.

மழை பெய்வது யாருக்காக?



பசிப்பிணி என்ற பாவி ஒருவனைப் பிடித்து விட்டால் தன்மானம், குடிப்பெருமை, கல்வி, வளமை, அறிவுடைமை, கொடை, தவம், உயர்வு, ஊக்கம், காதல் ஆகிய குணங்கள் மறைந்து விடும். தி வருவாய்க்குத் தக்க வகையில் செலவு செய்ய வேண்டும். வரவுக்கு மீறிச் செலவு செய்பவன் மானத்தை இழப்பான். நல்லது கெட்டதை பிரித்தறியும் அறிவினை இழந்து விடுவான். திருடன் என்று பெயர் எடுப்பான். ஏழு பிறப்பிலும் பாவத்தைச் செய்ய வேண்டி வரும்.   துன்பங்களைச் சேர்த்து வைக்கும் இடமாக உடல் இருக்கிறது. இந்த பொய்யான வாழ்க்கை நிலையானது என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். சேர்த்து வைத்த பொருளைக் கொண்டு வறியவர்களுக்கு உதவி செய்யுங்கள். நாம் செய்யும் தர்மமே நம் துன்பத்தைப் போக்க வல்லது.                நெல்லுக்கு பாய்ச்சிய நீர் வாய்க்கால் வழியாகப் புல்லுக்கும் பாய்வது போல, மண்ணுலகில் நல்லவர் ஒருவர் இருந்தாலும் அவருக்காகவே மழை பொழிகிறது. அம்மழைநீரால் உலகில் உள்ள அனைவரும் பயன் பெறுகின்றனர்.  நாம் வருந்தி அழைத்தாலும் நமக்கில்லாத பொருள் கிடைக்காது. நமக்கான பொருளை வேண்டாம் என்று புறக்கணித்தாலும், அது நம்மை விட்டு நீங்காது. இந்த உண்மையை அறியாமல் மனிதர்கள் வருந்துகின்றனர்.