Showing posts with label ஔவையார். Show all posts
Showing posts with label ஔவையார். Show all posts

Friday, October 12, 2012

மனம் தெளிந்த நீராகட்டும்



* யாரிடமும் கோபம் கொண்டு, சண்டை போடாதீர்கள். சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் மனதில் நிம்மதி கெடுவதை தவிர, பயன் ஏதும் ஏற்படுவதில்லை. பண்பட்ட மனம் உடையவர்கள் யாரிடமும் சண்டையிடுவதில்லை. அவர்கள் கோபப்படும் விதமாக ஏதேனும் நிகழ்ந்தாலும்கூட அமைதியாக இருந்து விடுவர். 
* ஒருவர் உயர்கல்வி கற்றாலோ, சமூகத்தில் உயரிய பொறுப்பில் இருந்தாலோ அவரிடம் கோபப்படும் குணம் இருக்குமானால் அவர் கற்ற கல்வியும், சமூக நற்பெயரும் அந்த நொடியிலேயே அழிந்து விடும். சிறுவிஷயங்களுக்காக சண்டையிடுவது மரியாதையைக் குறைக்கிறது. இதனால் உறவு, அன்பு, பாசம் ஆகியவை அழிந்து, அனாதையாக நிற்கும் உணர்வு ஏற்படுகிறது.
* கோபம், மனதில் பல தீய எண்ணங்கள் தோன்றுவதற்கு காரணமாக இருக்கிறது. பொறாமை, வஞ்சகம், ஒழுக்கமின்மை போன்ற பல தீய குணங்களையும் உண்டாக்கி விடுகிறது. வீண் விபரீதங்களையும், பொருள் இழப்பையும் ஏற்படுத்துகிறது. எனவே, கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
* மனிதர்களின் மனம் தண்ணீர் போன்றது. கோபம், ஆற்றாமை போன்ற தீய குணங்கள் கழிவு போன்றவை. தண்ணீர் நல்ல நிலையில் இருக்கும்போது அதனை நம் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தலாம். அதே நீரில், கழிவு சேர்ந்துவிட்டால் அதன் தன்மையே மாறிவிடுகிறது. எதற்கும் பயன்படுத்தவும் முடியாது. உங்கள் மனம் தெளிந்த நீரைப் போல இருப்பதற்கு முதலில் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்

Sunday, September 18, 2011

பிறரைப் பழித்துப் பேசாதீர்



* உங்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர் களோ, அதே அளவிற்கு பிறர் மீதும் நேசம் காட்டுங்கள். அவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும், பிறரை இழிவாக பேசுதலும், வீண்பழி சுமத்துதலும் கூடாது. இத்தகைய செயல்களால் வீண் பகை வளருமே தவிர, பெயருக்குக் கூட நன்மை உண்டாகாது. மேலும் இத்தகைய குணமுடையவர்களிடம் பாசம், பரிதாபம், இரக்கம், கருணை என எத்தகைய நற்பண்புகளும் இருக்காது.   
* மனிதர்களுக்கு ஏற்படும் துன்பமானது, வெளியில் எங்கிருந்தோ வருவதில்லை. அவரவர் நடந்து கொள்ளும் விதத்திற்கேற்ப அவர்களுக்கு திரும்பக்கிடைக்கிறது. பிறரை பழிப்பதாலும் நமக்கு துன்பம் வரும். ஆகவே, பழிச்சொல்லை விட்டு, அனைவரிடமும் பரிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அத்தகையவர்களே இறைவனால் விரும்பப்படுவர்.
* சிலர் மற்றவர்களை பற்றி குற்றம் சொல்லுவதையே வழக்கமாக கொண்டிருப்பர். பிறர் செய்யும் நல்ல செயல்களைக்கூட மாற்றி திரித்து பேசுவர். இப்படி செய்யவே கூடாது. அடுத்தவர்களை குற்றம் சொல்லிக் கொண்டிருப்பவர்களிடம் யாரும் நெருங்க மாட்டார்கள். ஒருகட்டத்தில் அவர் தன் சுற்றத்தார் அனைவரையும் இழந்து தனித்து நிற்க வேண்டிய சூழ்நிலைதான் வரும். இறுதிவரையில் அவருடன் சொந்தம், உறவு என யாரும் இல்லாமலேயே போய்விடுவர். ஆகவே, ஒருவர் எத்தகைய செயல் செய்தாலும், அதை விமர்சனம் செய்து பேசாதீர்கள்.

பெண்களுக்கு அழகு எது?

* பயனில்லாத பொருள்களை நாம் தூக்கி எறிவது போல், பயனற்றவர்களின் அன்பையும் உதறித் தள்ளுவதே அறிவுடைமை.
* ஒருவர் பலமுறை கூறி, அதன் பின் செயலை செய்து முடிப்பது பண்பாகாது. தானே தனது கடமையைச் செய்ய வேண்டும்.
* மன எழுச்சியைப்பெற அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது சரியான வழி முறையாகும்.
* பெரியோர் இருக்குமிடத்தில் பேசும் போது நம் வாதங்களை, முகத்தில் அடித்தால் போல் நிதானமிழந்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.
* கணவனைக் காத்தல், வீட்டைக் காத்தல், அறத்தைக் காத்தல், அன்பைக் காத்தல் என நல்லனவற்றைக் காப்பதே பெண்ணுக்கு அழகு.
* தீயவனவற்றைக் காப்பாற்றக் கூடாது, அவை அழிவுக்கு காரணமானதாகும், நல்லனவற்றையே காத்தல் நம்மையும் ஒரு பொருட்டாக உலகம் மதிக்க வழி ஏற்படுத்தித் தரும்.
* நல்ல நூல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர் கூறும் அறிவுரைகளையும் உள்ளத்தில் வைத்து காத்தல் வேண்டும்.