Wednesday, May 4, 2011

துளசி தீர்த்தம்...

இந்து சமயத்தில் துளசிச்செடி புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூசைகளின் பொது அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசியிலை முக்கியத்துவம் பெறுகிறது.
மிகத் தொன்மையான காலத்தில் கிரேக்க நாட்டுத் தேவாலயங்களில் துளசிகலந்த புனித நீர் மக்களுக்கு தீர்த்தமாக விநியோகிக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.
துளசி எல்லா இடங்களிலும், பலதரப்பட்ட காலநிலைகளிலும் வளரக் கூடியதாகும். துளசி அதிகமாக வளரும் பகுதிகளில் உள்ள சயனைட் போன்ற விசவாயுக்களை உள்ளெடுத்து கூடுதலான ஒட்சிசன் நிறைந்த வாயுவை வெளியிடும். இது மனிதர்கள் சுவாசத்திற்கு சிறந்த புத்துணர்ச்சி தரும். அத்துடன் நுளம்புகள் துளசிச்செடி உள்ள சுற்றாடலில் காணப்படுவதில்லை.
துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது.
துளசி ஊறப் போட்ட தூய நீரை உட்கொண்டு வந்தால் இருதய நோய்கள் குணமாவதுடன் இருதயமும் வலிமை பெறும். கோவில்களில் துளசி கலந்த புனித நீர் தீர்த்தமாக விநியோகிப்பதை நாம் அறிவோம்.
ஹரி பக்தி சுதோயம் என்னும் நூலில் துளசியின் மகிமை பற்றி விரிவாக சொல்லப் பட்டுள்ளது. துளசி இலையின் நுனியில் நான் முகனும், மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பன்னிரண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த துளசி செடியை வணங்கிவந்தால் இவர்களை வணங்கியதற்க்கு சமனாகும் என்றும் சொல்லப் பட்டுள்ளது.
துளசியின் தாவர வியற் பெயர் Ocimum sanctum இது Labiatae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது.

Wednesday, December 22, 2010

சித்தன் என்பவன்

பித்தம் கலங்கி இப் பிறப்பை அறுத்தெறிந்து
உத்தம எண்ணமதால் உறவறுத்து இறை எண்ணம்
நித்தம் தனதாக்கி நீல மேக வண்ணன் பால்
சித்தம் வைத்தானே சித்தன் 

திருவாய் திறந்து...................

திருவாய் திறந்து மணிகள் ஒலிக்கத்
திருநாள் அறிந்து திசைகள் சொலிக்கத்
திருமகள் சூடும் மணியாகும் - தீபத்
திருவிழா சூழும் சுடர்


Tuesday, December 21, 2010

எது உண்மைக் கல்வி?

இளைமை முதல் எமது உண்மை ஸ்வரூபத்தினை பல வித முகமூடிகளை கொண்டு மறைத்த வண்ணமே வாழ்ந்து வருகிறோம். எம்மை புற உலக தேவைகளுக்கு ஏற்றவாறு எப்படி தயாற்படுத்திக் கொள்வது என்பதே இதன் முக்கிய நோக்கமாக இருக்கிறது. எமது குடும்பமும் நண்பர்களும் சமூகத்தில் எப்படி நடக்கவேண்டும் என்பதனை கற்று தருகின்றனர். எமது கல்வி முறைகள் பணத்தையும் பௌதிக தேவைகளை பெறுவது எப்படி என்பது பற்றியும் சொல்லித்தருகிறது. இந்த பௌதீக கல்வி மூலம் பணத்தை சம்பாதிப்பது எப்படி? சமூகத்தில் எப்படி மேலான அந்தஸ்திற்கு வருவது என்பது பற்றியே சதா சிந்தித்து போராடி வருகிறோம்.
ஆனால் மிக அரிதாக சிறிதளவான நபர்களே தமது அகவாழ்க்கை, ஆற்றல்களை அறிவதற்கும், பெறுவதற்கும் முயற்சித்து வருகிறார்கள். இந்த அக ஆற்றலை அறிந்தவர்களே தெய்வீக ஞானம், ஆழ்மன சக்தி, சுயசிந்தனை, தன்மதிப்பு, சூஷ்ம சக்திகள், ஆன்மீக வளர்ச்சி பெற்று வருகிறார்கள். இவற்றை பெறுவதற்கான சுயம் எம் அனைவரிலும் எப்போதும் நித்தியமாக இருக்கும் ஆன்மாவாகும். இதன் குரலை கேட்பவர்கள் ஆன்ம வாழ்வில் படியெடுத்து வைக்கிறார்கள். இதற்கான வழிமுறைகள் காலம் காலமாக எல்லாவித கலாச்சாரங்களிலும் இரகசியமாக குரு பரம்பரை மூலம் பரப்ப பட்டு வருகிறது. இந்த குருபரம்பரையினை பூர்வ புண்ணியமாக தொடர்பு கொண்டவர்கள் இன்று வரை இந்த உலகில் குப்த யோகிகளாக இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். யார் தமது உள்ளுணர்வின் குரலை மதித்து  உண்மையான அகவாழ்க்கையினை வாழ விரும்பி தாகம் கொள்பவர்களுக்கு இந்த அதி சக்தி வாய்ந்த தெய்வ உதவி கிடைத்த வண்ணமே இருக்கிறது.
துன்பம் நிறைந்த வாழ்க்கை
வாழ்வு என்பது பல்வேறு சவால்களை கொண்ட துன்பம் நிறைந்த ஒன்று, அமைதியான அன்பு நிறைந்த குடும்ப வாழ்க்கை, வெற்றி நிறைந்த தொழில், பாதுகாப்பான செல்வம், நோயற்ற வாழ்க்கை இவற்றை பெறுவது என்பது மிகுந்த சவாலானது. இன்றைய ஆன்மீக ஆசான்கள் எனச் சொல்லிக் கொள்பவர்கள் இதற்கான பதிலாக பூர்வ கர்மம், ஒருவன் செய்த பாவம் என்பவற்றை காரணம் சொல்லி சமாதானமடைகின்றனர். அப்படியானால் இவற்றை வழியே இல்லையா என சோர்வடைந்து வருந்தி மேலும் மேலும் துன்பத்தினை தமக்கு வருவித்துக்கொள்கின்றனர். ஆன்மிகம் என்றவுடன் பலவித ஒழுக்கங்கள், கட்டுப்பாடுகள் என்பவற்றை போதித்து அனைவரிலும் தாழ்வு மனப்பான்மையினை உருவாக்கி தம்மை பெரியவர்களாக்கி கொள்ளும் உளவியல் உத்திதான் இன்றைய ஆன்மீக ஆசான்களிடம் காணப்படுகிறது.
உண்மை ஆன்மீகம் என்பது தன்னை அறிந்து தனது உள்ளுணர்வை தொடர்பு கொண்டு, தன் உள்ளுனர்விடமிருந்தே எல்லாவித பிரச்சனைகளுக்கும் பதிலை பெற்று வாழ்வின் சவால்களை எதிர் கொண்டு வெற்றி கொள்வது!

இத்தகைய கல்வியே மனிதனுக்கு தேவையான உண்மைக்கல்வி! இத்தகைய கல்வியினை மக்கள் பேறுவதற்கு எமது 

Friday, November 26, 2010

தர்ப்பையின் மகிமை...

சுப காரியம் அல்லது அசுப காரியம் எதுவாய் இருந்தாலும் அங்கே தர்ப்பை புல்லுக்கு முக்கியமான இடம் உண்டு. கிரகண காலங்களில் சேமிக்கும் உணவு பதார்த்தங்கள் இருக்கும் பாத்திரங்களில் தர்ப்பை புல்லை போட்டு வைத்தால் அவை பாதிப்படையாமல் இருக்கும் என்பார்கள்.
அரிதான இடங்களில் மட்டுமே வளரும் புல் வகை தாவரமான தர்ப்பையில் பலவகைகள் உண்டு.
தர்ப்பையால் பவித்திரம் ( மோதிரம் போன்ற வளையம் ) செய்து , ஆண்கள் வலது மோதிர விரலிலும், பெண்கள் இடது மோதிர விரலிலும், அணிந்து கொண்டு சங்கல்பம் செய்த பின்னரே எந்த காரியத்தையும் ஆரம்பிப்பார்கள்.
நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து தான் தரப்பை புல் அரிவார்கள். "தீர்த்தத்தின் மறு ரூபமே தர்ப்பை, தீர்த்தம் வேறு தர்ப்பை வேறல்ல" என்கிறது வேதம். இதற்காக ஒரு புராணக் கதையும் சொல்லப் படுகிறது,
விருத்திராசுரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், பூலோக உயிர்களுக்கும் பெரும் கொடுமைகள் புரிந்து வந்தான். இதனால் கோபங்கொண்ட தேவேந்திரன். தனது வஜ்ஜிராயுதத்தை பிரயோகித்து அவனை அழிக்க முயன்றும் பலனில்லை, அசுரன் மீண்டும் மீண்டும் தேவேந்திரனை போருக்கு அழைத்தான், திகைத்தான் இந்திரன். இதைக் கண்ட பிரம்மா, வஜ்ஜிராயுதத்தை தனது கமண்டல தீர்த்தத்தில் நனைத்து கொடுத்து இப்போது பிரயோகிக்குமாறு கூற தேவேந்திரனும் அவ்வாறே செய்தான்.
தீர்த்தத்தின் மகிமையால் பலம் பெற்ற வச்சிராயுதம் விருத்திராசுரனின் அங்கங்களை கண்ட துண்டமாக வெட்டியது. வஜ்ஜிராயுதத்தின் பலத்துக்கு காரணம் புனித தீர்த்தங்களே என்று அறிந்த விருத்திராசுரன், உலகிலுள்ள எல்லா தீர்த்தங்களுக்கும் சென்று, ரத்தம் வழியும் தனது உடலை நனைத்து தீர்த்தங்களின் புனிதத்தை மாசுபடுத்த முயன்றான். இத கண்ட பிரம்மா தீர்த்தங்களை எல்லாம் தர்ப்பை புட்களாக மாற்றி விட்டாராம்.
இதனால்தான் தான் தர்ப்பை விசேடமாக திகழ்கிறதாம்....

Thursday, November 11, 2010

ஸப்த ரிஷிகளுக்கும் உரிய காயத்ரி மந்திரங்கள்..

சப்தரிஷிகள்
காஸ்யபர்..
ஓம் சர்வ சாஸ்த்ரார்த்தாய வித்மஹே
ஆத்ம யோகாய தீமஹி
தந்நோ காஸ்யப: ப்ரசோதயாத்||
அத்ரி..
ஓம் சத்கர்மபலதாய வித்மஹே
சதாக்நிஹோத்ராய தீமஹி
தந்நோ அத்ரி: ப்ரசோதயாத்||
பரத்வாஜர்..
ஓம் தபோரூடாய வித்மஹே
சத்ய தர்மாய தீமஹி
தந்நோ பரத்வாஜ: ப்ரசோதயாத்||
விஸ்வாமித்ரர்..
ஓம் தநுர்தராய வித்மஹே
ஜடாஜுடாய தீமஹி
தந்நோ விஸ்வாமித்ர: ப்ரசோதயாத்||
கெளதமர்..
ஓம் மஹா யோகாய வித்மஹே
சர்வபாவநாய தீமஹி
தந்நோ கெளதம: ப்ரசோதயாத்||
ஜமதக்னி..
ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே
அக்ஷசூத்ராய தீமஹி
தந்நோ ஜமதக்னி: ப்ரசோதயாத்||
வசிஷ்டர்..
ஓம் வேதாந்தகாய வித்மஹே
ப்ரஹ்ம சுதாய தீமஹி
தந்நோ வசிஷ்ட: ப்ரசோதயாத்||

Wednesday, November 10, 2010

மகிழ்ச்சியாக வாழ சில எளிய வழி முறைகள்

*மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் மனதில் உறுதியாக இருங்கள்.
*ஆசைகளை உங்களால் முடிந்தளவு குறையுங்கள்.
*தீய எண்ணங்களில் இருந்து மனத்தை தூய்மையாக வைத்திருங்கள்.
*வாழ்க்கையைப் பற்றிய உங்கள் பார்வை நேரானதாக இருக்கட்டும்.
*உங்கள் தினசரி வாழ்கையில் கடவுள் உங்களோடு கூடவே
இருப்பதாக நினையுங்கள்.
*உங்களிடம் இல்லாததைப் பற்றி வருத்தப்படுவதைக் காட்டிலும்
இருப்பவைகளைப் பற்றி பெருமையாக நினையுங்கள். 
*எல்லாவற்றிலும் மேலாக அடுத்தவர்களுக்கு உதவுங்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாக    இருக்க விரும்பினால் அது மற்றவர்களை மகிழ்விப்பதன் மூலமே முடியும்.