Friday, May 11, 2012

மனிதமும் சனாதனமும் - பகுதி 2

உண்மையில் நாம் எல்லோருமே அறியாமைப் புலியால் பின் தொடரப்படுகின்றோம். 

இறைவன் உயிர்களின் மீது கடலினும் மிகு கருணை உடையவராய் இருக்கின்றார். மனித வாழ்வின் லட்சியத்தை பக்குவப்படுத்திக் கொள்ள மனிதனால் நிச்சயம் முடியும்.

கடவுள் என்ற ஆள்பவரும், ஜீவர்கள் என்ற ஆளப்படுபவரும் சுயத்தின் இயற்கைக் கட்டாயத்தில் இருப்பவர்கள் அல்லவா?.

 அதாவது கர்ம வினைப்படி (சனாதன தர்மத்தின்) அடிப்படையில் இச் செயல்பாடுகளுக்கும் விளைவுகள் இருக்கத்தான் வேண்டும்.  நான் ஆளப்படவில்லை சுதந்திரமானவன் என்று கூறினால் அவன் ஞானமற்றவனே. குறைந்த பட்ச கட்டுப்பட்ட வாழ்வில் ஒவ்வொரு விதத்திலும் ஜீவன் ஆளப்படுகிறது.
பிரகருதி (பௌதீக இயற்கை) அதன் நிலைப்புக்காலம்,அதன் தோற்றம், பிரபஞ்சத்தின் மொத்தத் தோற்றம்,அதன் நிலைப்புக்காலம்; என பல்வேறு கொள்கைகளையும் செயல்களையும் உடையது. 

கடவுள் யார்?,  

உயிர்கள் யாவை?,
பிரகிருதி என்றால் யாது?,  

பிரபஞ்சத்தோற்றம் என்பது என்ன?, 
இவைகள் யாவும் காலத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
உயிர்களின் செயல்கள் யாவை?  

அவைகளின் நோக்கம் அவற்றின் இறுதி என்பதெல்லாம் நாம் அறியப்பட வேண்டியது என்பதே வேதத்தின் விளக்கமாய் உள்ளது,
 

 1. இறைவன் (பரம புருஷன்)
2.உயிர்வாழி (ஜீவன்)
3.இயற்கை (பிரகிருதி)
4.காலம் (நித்யம்)
5.செயல். (கர்மம்)

          இந்த ஐந்தில் இறைவனும், உயிர்களும்,காலமும் நித்யமானவை, எப்போதும் இருந்து கொண்டிருப்பவை. செயல்கள் -அதாவது கர்மா,முக்குணங்களால் நிகழப்பெறுபவை. 

இதனை இறைவன், மனிதனுக்கு (நிலையற்றதாய் விளங்கும் பிரகிருதியின்) இயற்கையில் தோன்றிய மனிதனுக்குக் கொடுத்த சுதந்திரத்தின் வழியாக வந்துற்றது. முக்குணங்கள் நற்குணம் (சத்வ), தீவிர குணம் (ரஜோ), அறியாமை (தமோ) நினைவிற்கெட்டாத காலத்தில் இருந்து பல்கோடிப்பிறப்பினின்றும் இயற்கை குணஇயல்பு கலவையாலும், நித்யமான காலத்தின் பார்வையாலும், நம் செயல்களின் பலன்களால், நாம் துன்புறவோ அல்லது இன்புறவோ செய்கின்றோம். 

வாழ்வின்; யாவற்று நிலையிலும் நம் செயல்களின் விளைவுகளாலயே துன்பம், இன்பம் என இருவினையை வேண்டியவர்களாகின்றோம். இதுவே கர்மம் எனப்படுவது.

 வைணவ தத்துவப்படி உலகின் தோற்றம் பொய்யாக ஏற்றுக்கொள்ப்படுவதில்லை. அது உண்மையாக ஆனால்,நிலையற்றதாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. 

உவமையாக கூறப்போனால்: வானில் வந்த மேகம் மழை தருகிறது. பயிர்கள் செழிக்கின்றன. அதே சமயம் மழைக்காலம் தீர்ந்தவுடன் மேகங்கள் அகன்று விடுகின்றன. மழையில் வளம் பெற்ற யாவும் வாடியும் விடுகின்றன. இது போலவே பௌதீக தோற்றம் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தோன்றி சில காலம் இருந்து பின்மறைகிறது. இது நிலையற்றதற்கு ஒரு விளக்கம்.

எனவே இயற்கையின் செயல்கள் யாவும் இவ்வாறானவையே. இதுபோல கர்மம் நிலையற்றதே. நிச்சயமாக, நித்தியமானதல்ல. எந்த ஒரு செயல்களின் விளைவுகள், பின் விளைவுகள் இவற்றினின்றும் விடுதலை பெற எவ்வித செய்கையினை நாம் செய்ய வேண்டும் என்பதை நாம் சந்தேகமில்லாமல் அறிய மாட்டோம்.

உயிர்கள் தம் உடல் பற்றிய (சம்பந்தப்பட்ட) உணர்வுகளையே உடையவை. ஆனால் இறைவனோ எல்லா உடல்களையும் உணர்பவன். 

தூய்மையில் சத்வ குணத்தில் இருந்து செயல்களின் விளக்கம் யாவை என ஜீவன் புரிந்து கொள்கையில் இந்த கர்மங்களை மாற்றிவிட முடியும். அவ்வாறு செய்வானேயானால் கடந்த கால செயல்களின் விளைவுகளையும் அதன் பின் விளைவுகளையும் மாற்றிவிட முடியும். எனவே கர்மம் நித்யமானதில்லை. முன் கூறியது போல இறைவன் ஜீவன், காலம் இவைகள் மட்டுமே நித்யமானவை. கர்மம் மாறுதலுக்கும்,மாற்றுதலுக்கும் உட்பட்டவை.

                இப்பிரபஞ்ச இயற்கையில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இயற்கையின் சீற்றமோ, இயற்கையில் மாறுதலோ,மாறும் இயற்கைச் சூழலோ, அதிக வெப்பமோ, அதிகக் குளிரோ, அதிகக் காற்றோ, பேரிடர் அழிவுகளோ, நல் வளங்களோ, மனித பொது மன மாற்றமோ, மக்களை சமூக இயக்கமாகவும், அரசின் இயக்கமாகவும் மாற்றும் தலைகீழ் மாறுதல்களோ, இவைகளால் எல்லாம் ஏற்படும் புதுப்புது சூழல்களால் எவரும் எதிர்பாராதவாறு நிகழ்பெற்றன என்றால் இறைவனின் கருதுதலால் அன்றி இவைகள் (அதிசயங்கள்)  நிகழந்திருக்க முடியாது

இன்னும் பலப்பல நிகழ இருப்பவையாகவும் இருக்கின்றன. 

இவற்றிற்கெல்லாம் ஒரு நாயகன், ஒரு ஆளுநன் இருக்கின்றான். 

அவனே செயல்படுகிறான். ஆளப்படாத ஒரு பொருளை தோற்றுவிக்க முடியாது. 
ஆண்டவன் இருப்பதை உணராதவரை அவ்விதம் இருப்பவர்கள் சிறுபிள்ளைத்தனம் கொண்டவர்களே. 

குதிரையாலோ, மாட்டினாலோ, வேறு ஒரு மிருகத்தாலோ இழுக்கப்படாத நிலையில் ஒரு பேருந்து ஓடுவதை வினோதமாக சிறுகுழந்தை அதன் அறியாத்தன்மையில் பார்க்கலாம். ஒவ்வொரு இயந்திரத்திற்குப் பின்னும் ஒரு மனிதன், இயக்குபவன் உள்ளான் என்று அக்குழந்தை அறிய மாட்டாது.

 மனிதனின் தூய உணர்வின் செயல்கள் இறைவனின் இச்சையுடன் ஒருங்கிணைந்து நிற்கும். அது அவனை மகிழ்விக்கும். அதற்காக உலகியல் செயல்களை எல்லாம் அவன் நிறுத்தி விட வேண்டுமென்பதில்லை. அதே சமயம் அவனுடைய செயல்கள் சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

 சுத்தமான செயல்களே பக்தி என்று அழைக்கப்படுவதாலும், பக்தியின் செயல்கள் சாதாரண செயல்கள் போலத் தோன்றலாம். ஆனால் அவைகள் களங்கப்படாததாகும். நடத்தையினை விட மனப்பாங்கே முக்கியத்துவம் பெற்றவையாகும். 

உடல் சம்பந்தமான கருத்துக்களில் இருந்து ஒருவனை விடுதலை செய்வதற்காகவே வேத நூல்களில் பல்வேறு உபதேசங்கள் அருளப்பட்டன

  மானுடனை நேரடியாகவே ஆன்மாவின் தொடர்புடையவனாக்கி ஆன்ம விடுதலை பெற உதவி செய்தவன் கண்ணன். 
அவ்வுதவியைப் பெற பக்குவம் இன்றி அர்ஜுனன் இருந்தான். இறைவனே அவனை வழிநடத்தி மேம்படச் செய்தார். வாழ்வில் உடலோடு தொடர்புடைய எண்ணங்களில் இருந்து ஒருவன் விடுபட வேண்டும். இதுவே ஆன்மீகவாதியின் துவக்கச் செயலாகும். விடுதலை பெற விரும்புவன், முதலில் அவன் இந்த ஜட உடல் அல்ல என்பதை உணர வேண்டும். 
 
 
 

Thursday, May 10, 2012

துவாரகா ராமதாசர்

கண்ணன் அரசு செய்த துவாரகாபுரிக்கு அருகில் டாங்கேர் என்ற கிராமத்தில் ராமதாசர் என்று பெயர் கொண்ட அந்தணர், உஞ்சவிருத்தி எடுத்து ஜீவித்து வந்தார். அன்றைக்கு அமுதுபடி செய்ய வேண்டிய அரிசி கிடைத்தவுடன் திரும்பி விடுவார். அடிக்கடி துவாரகை சென்று துவாதசியில் ஏழைகளுக்கு அன்னமிட்டும், பாகவத புராண கதைகளை மக்களுக்கு எடுத்துரைத்தும் பஜனை செய்தும், தூய்மையான பக்தியுடன் இறைவழிபாட்டில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரது நல்லொழுக்கத்தையும், அவரையும் புகழ்ந்தும், இவர் அடிக்கடி துவாரகை சென்று வந்ததால் இவரை துவாரகா ராமதாசர் என்ற பெயரில் மதிப்புடனும், மரியாதையுடனும் கொண்டாடி வந்தார்கள்.இப்படியே 25 ஆண்டுகள் கழிந்தது. அவருக்கு முதுமை வந்ததால் அடிக்கடி துவாரகை செல்ல முடியவில்லை. ஒரு சமயம், உடல்நிலை சரியில்லாதநிலையில், பிடிவாதமாக துவாரகை சென்று, கண்ணன் சன்னதியில் நின்று மெய்யுருக கிருஷ்ணா ! அடுத்த துவாதசிக்கு நான் வர முடியாவிட்டால், என் வீட்டிற்கு வந்து அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். பரந்தாமன், ராமதாசர் முன் தோன்றி, உன் பக்திக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நீ எனது சிலையை என்னுடைய தேரில் வைத்து உங்கள் ஊருக்கு அழைத்து சென்றால் வருகிறேன், என்றார்.
சிலையை துவாரகையிலிருந்து எடுத்துச் சென்று விட்டால், விக்ரகத்தை காணாமல், அர்ச்சகர்கள், நான் திருடிவிட்டதாக நினைத்து எனக்கு தண்டனை தந்தால் என்ன செய்வது, என்று குழம்பினார் ராமதாசர். கடைசியில் நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று மனதை தேற்றிக் கொண்டு, நடுநிசியில் அங்கு வந்து சிறிய தேரில் கிருஷ்ண விக்ரகத்தை எழுந்தருளச் செய்து, துவாரகையிலிருந்து டாங்கேர் வந்து, வீட்டின் கூடத்தில் வைத்து பூஜை செய்தார். மறுநாள் விடியற்காலையில், அர்ச்சகர்கள் கோயில் கதவை திறந்து பார்த்தவுடன். அங்கு கிருஷ்ணன் விக்ரகத்தை காணவில்லை. முதல் நாள் இரவு, அதிக நேரம். ராமதாஸ் துவாரகை கோயிலில் இருந்தததால், அவர்தான் எடுத்துச் சென்றிருப்பார். என தீர்மானித்து கோஷ்டியாக எல்லாரும் டாங்கரே வந்தனர். இவர்கள் வருவதை அறிந்து ராமதாஸ். பயந்து ஒரு பெட்டியில் அந்த விக்ரகத்தை வைத்து தன் வீட்டு கிணற்றிற்குள் இறக்கிவிட்டார். அர்ச்சகர்கள். கிருஷ்ணர் விக்ரகத்தை எடுத்து செல்ல ராமதாசர் வீட்டிற்கு வந்தனர். வந்தவர்கள் இவரிடம் எதுவும் கேட்கவில்லை. வீடு முழுவதும் சோதனை செய்தனர். வீட்டில் கிடைக்கவில்லை. ராமதாசரது பக்தியை உலகுக்கு எடுத்துக்காட்ட நினைத்த பரமாத்மா, கிணற்றுக்குள்ளிலிருந்து, நான் இங்கே தான் இருக்கிறேன். இந்த ராமதாஸ் என்னை இங்கே ஒளித்து வைத்திருக்கிறான் என்று குரல் கொடுத்தார். இதைக்கேட்ட அர்ச்சகர்கள், கிணற்றுக்குள் இறங்கி, விக்ரகத்தை எடுத்துவந்து ஆனந்தத்துடன் தேரில் எழுந்தருளச் செய்தனர்.
ராமதாஸ் இறைவனை வணங்கி, கிருஷ்ணா ! உன் சொற்படிதானே நான் விக்ரகத்தை எடுத்து வந்தேன். நீ எனக்கு திருட்டு பட்டம் வாங்கி கொடுத்துவிட்டு, என்னையும் விட்டு செல்வது சரியா ? என்று மனமுருகி வேண்டினார். பக்தர்கள் துயரை தீர்க்கும் பகவான், தாசரிடம் அவருக்கு மட்டும் கேட்கும்படியாக என் எடை அளவு பொருள் தருவதாக இந்த அர்ச்சகர்களிடம் சொல் ! அர்ச்சகர்கள் விக்ரகத்தை இங்கேயே விட்டுச் செல்வார்கள், என்று அருளினார். ராமதாசரும், அர்ச்சகர்களை வணங்கி, இறைவனின் எடைக்குஎடை துலாபாரமாக பொன் தந்தால், விக்ரகத்தை எனக்கு தருவீர்களா? என்று கேட்டார். அவர்கள் தாசரிடம், நீரோ அன்னக்காவடி. உஞ்சவிருத்தி எடுத்து ஜீவிப்பவர். உம்மால் எப்படி விக்ரகம் அளவு பொன் தர முடியும், எனக்கேட்டு விட்டு, தைரியத்துடன் சம்மதித்தனர். இதற்குள் இந்த விபரம் தெரிந்தவுடன், ஊர்முழுவதும் அங்கு கூடிவிட்டது. தராசுக்கோல் கொண்டு வரப்பட்டு. அதில் ஒரு தட்டில் கிருஷ்ண விக்ரகம் வைக்கப்பட்டது. ஊரில் உள்ளவர்கள் ராமதாசர் எப்படி இவ்வளவு பவுன் தரப்போகிறார் என ஆச்சரியப்பட்டனர். தாசர், உள்ளே சென்று மனைவியின் மூக்குத்தி திருகாணியுடன் வந்தார். இது என்னது, தாசரே, பொன் என்று அர்ச்சகர்கள் கேட்கவும், தாசர், காண்பித்த மூக்குத்தி திருகாணியை கண்டு நகைத்தனர். இறைவனிடம், அசையாத பக்தியுடைய, ராமதாசர், அந்த மூக்குத்தி திருகாணியை தட்டில் வைத்து, இறைவா உன் வாக்கு பொய்யாகக்கூடாது, என வேண்டினார். எல்லாரும் ஆச்சரியப்படும் வகையில் இரு தட்டும் ஒரே சமநிலையில் நின்றது. அர்ச்சகர்கள், தாசரது பக்தியை மெச்சி, இறைவன், இங்கேயே இருக்க இசைந்துள்ளான் என எண்ணி, கிருஷ்ண விக்ரகத்தை தாசரிடம் கொடுத்து சென்றனர். பக்தி உண்மையானதாக இருந்தால் பகவான் நம்மோடு எப்போதும் இருப்பான்.

எதிர்கால கவலை வேண்டாம் - »சின்மயானந்தர்


எல்லாவற்றையுமே உலக நன்மைக்காகக் கொடுப்பவர்கள்தாம் நமது பெரியோர்கள், ஆச்சார்ய புருஷர்கள், தீர்க்கதரிசிகளான ஞானிகள், அவர்கள் எதையுமே தமக்கு என்று வைத்துக் கொண்டதில்லை. அதனால் தான், உலகமே அவர்கள் பின்னால் அடிபணிந்து போய்க் கொண்டிருக்கிறது.
கடவுள் நமக்கு உடலைக் கொடுத்தார். அதில் உள்ளத்தையும் கொடுத்தார். இரண்டுமே நமக்குப் பிறவியில் கிடைத்த சாதனங்கள்தாம். அவற்றை வைத்துக்கொண்டு நம்மை நாமே உருவாக்கிக் கொள்வது தான் நம் கையில் இருக்கிறது.
நம்மிடம் உள்ள சக்தி, மோசமான பண்புகளான கோபம், ஆசை, பொறாமை போன்றவற்றால் வடிந்துபோகிறது.
உயர்ந்த லட்சியங்களுக்காக நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும்போது நமது உள்ளத்தில் அரியதோர் சக்தி தூண்டி விடப்படுகிறது. இவை நமது தீய பண்புகளால் வடிந்துபோய்விடும் அபாயம் உண்டு. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொண்டால் நமது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
நமது வாழ்க்கையில் மூன்றுவிதமான வடிகால்கள் உள்ளன. 1. கடந்த காலத்தையே நினைத்துக் கொண்டிருப்பது. 2. எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கனவு கண்டுகொண்டிருப்பது. 3. நிகழ்காலத்தில் நடப்பதை மிகவும் நிலையானதாக எண்ணி, அதையே கவனித்துக் கொண்டிருப்பது.
நம்முடைய முயற்சியில் அளவுக்கு மீறிய எதிர்கால கவலைகள் இடம் பெறுவது நமக்கு ஏமாற்றத்தையே அளிக்கும்.
வாழ்க்கையில் பிடிவாதமாக ஒரு குறிப்பிட்ட முறையில் வாழ்ந்து பழகிவிட்டவர்கள் அதை மாற்றிக் கொள்வது சிரமம்தான். ஏனென்றால், பிடிவாதமான சில பண்புகள் அவர்களிடம் ஊறிப்போய் இருக்கின்றன

உலகம் நன்மை பெறட்டும்-சின்மயானந்தர்

* உயர்ந்த லட்சியத்திற்காக நம்மை அர்ப்பணித்துக் கொண்டால் உள்ளத்தில் ஆற்றல் தூண்டப்படுகிறது. இதன் மூலம் லட்சியத்தை நோக்கி விரைந்து செல்ல முடியும்.
* கோபம், ஆசை, பொறாமை போன்ற தீய பண்புகளால் நம் ஆற்றல் வீணாகிவிடும். முயற்சிகளில் முழுவீச்சுடன் ஈடுபட முடியாமல் தடுமாற்றம் ஏற்படும்.
* கடவுள் கொடுத்த உடலும், உள்ளமும் நமக்கான சாதனங்கள். அவற்றை வைத்துக் கொண்டு நம்மை நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதற்கான சுதந்திரமும் நம்மிடம் தான் இருக்கிறது.
* தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், உலக நன்மையைக் குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்களே உயர்ந்தவர்கள். அவர்களின் பின்னால் செல்ல உலகமே காத்துக் கொண்டிருக்கிறது.
* பிறருக்காக வாழவேண்டும் என்ற பொது நல உணர்வு கொண்டவர்கள், சேவை செய்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பர்.
* எண்ணத்தில் தூய்மையை வளர்த்துக் கொண்டால், ஒவ்வொரு பொருளிலும் புனிதம் நிறைந்திருப்பதை உணர முடியும்.
-

Thursday, May 3, 2012

காஞ்சிப் பெரியவர் வாக்கு

கந்தையிலே அழுக்கிருந்தா கசக்கி எடுத்துவிடு!
சிந்தையிலே அழுக்கிருந்தா சிவத்தை நினைத்து விடு

* சிறிய தர்மங்கள் அனைத்தையும் நாம் மறந்து விடுகிறோம், குறிப்பாக நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்க வேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல ஆடை இருக்க வேண்டும் என்பதைக் கவனிக்கத் தவறுகிறோம். நமது ஊர் கோயிலில் சுவாமியின் வஸ்திரம், சுத்தமாக அழுக்கில்லாமல் இருக்கிறதா என்பதில் மனதைச் செலுத்தும் போது, நம் மனதில் அழுக்கு போய்விடுகிறது.
* சந்தனமரத்தை சுற்றி பாம்பு இருந்தாலும், அதனுடைய விஷத்தால் சந்தன மரம் கெடுவதில்லை. அதுபோல், நல்லவர்களுக்கு கெட்டவர்கள் சேர்க்கை ஏற்பட்டாலும், கெட்டவர்களாக மாறாமல் சந்தனமரத்தைப் போல்
உலகுக்கு நன்மை புரிவார்கள்.
* இறைவனை நினைத்துச் செய்யும் அனைத்து செயல்களுக்கும் நன்மை உண்டு, அதேபோல் அறியாமல் செய்தால் கூட அதற்கும் பயன் உண்டு.
* மந்திரங்களை உச்சரிக்காமல் இருந்தால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை, நமக்குத் தான் நஷ்டம்.
* குடும்பக் கடமைகளை விட்டுவிட்டு சமுதாய கடமை என்று புறப்பட வேண்டியதில்லை. சமுதாயக்கடமை செய்தாலும், குடும்பத்தைக் கவனிப்பதும் கடமை என்ற உணர்வோடு சேர்த்து செய்ய வேண்டும்.
* வாழ்க்கையை எளிதாக்கிக் கொண்டால், பொருளுக்காக அலைய வேண்டிய
அவசியமில்லை.
* "நாம் செய்கிறோம்' என்கிற எண்ணம் போய்விட்டால், அதுவே இறைவனுக்கு சதாகால நமஸ்காரம் ஆகும்.
* நம் அன்பை வெறும் பேச்சாக இல்லாமல் செயலில் காட்டினால், இறைவனின் அன்பு நமக்கு கிடைக்கும்.
* பக்தி இல்லையென்றால் அறிவினால் பயன் இல்லை, எனவே கல்வியின் லட்சியம் ஈஸ்வர பக்தியை வளர்ப்பது தான்.
* இந்து மதம் தவிர மற்ற அனைத்து மதத்தினரும் அமைப்பு ரீதியில் உள்ளனர். நமக்கு அமைப்பு ரீதிபோதாது, இங்கு தனி மனிதனின் சக்தியில் மதம் வாழ்கிறது.
* கந்தையில் அழுக்கிருந்தால் கசக்கினால் போகும். ஆனால், சிந்தையில் உள்ள அசுத்தம் நீங்க சிவத்தை நினைக்க வேண்டும். அப்படி செய்தால் மனம் தானாகவே பரமாத்மாவின் பக்கம் திரும்பிவிடும்.
* பணம், பேச்சு, செயல் அனைத்தும் அளவுடன், கணக்குடன் இருக்க வேண்டும். ஆசையாய் இருக்கிறது என்பதற்காக அவசியமில்லாத அல்லது கெட்டதான செயல்களில் ஈடுபடக்கூடாது. ஆத்மாவுக்கோ, உலகத்திற்கோ உபயோகம் இல்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது.
* சத்தியம் என்றால் வாக்கும், மனதும் ஒன்றுபடுவது மட்டுமல்ல, நல்ல மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை வாக்கில் சொல்வதாகும். சத்தியம், நல்ல விளைவுகளை உண்டாக்குவதே சத்தியம்.

Tuesday, May 1, 2012

கண்ணாகத் தன் அருளே காட்டினான் தன்னடியேற்(கு)நோக்குருவாய் நோக்குள்ளே நுழைவான்‏

நோக்குருவாய் நோக்குள்ளே நுழைவான்

பக்குவமுற்ற சீடனை குருவே வந்து ஆட்கொள்கிறார் என்ற பொதுவான நம்பிக்கை ஆன்மீகத்தில் வலுவாகவே உண்டு. ஒரு சிலருக்கு இது எதிர்பாராதவிதமாக நடைபெறுவதுண்டு என்றும் பலருக்கு ஆண்டாண்டு காலமாய் தேடியப் பின்னரே வாய்க்கிறது என்றும் அறிகிறோம். எதிர்பாராத விதத்தில் நடைபெறும் போது அதை பிந்தைய சென்மங்களில் செய்த முயற்சியின் தொடர்ச்சி என்றும் புரிந்து கொள்ளப் படுகிறது.

எப்படியாயினும் சீடன் பக்குவமுற வேண்டும்.

மேல்தோல் பச்சையாய் இருக்கும் வரை காய். அதில் சற்றே மஞ்சள் காணத் துவங்கும் போது கனியாகிக் கொண்டிருக்கிறது என்கிற குறிப்பு தெரிகிறது. அதைப் பறித்து அரிசி டப்பாவுக்குள்ளோ அல்லது வைக்கோற்புல் கூடைக்குள்ளோ வைத்துப் பழுக்க வைப்பர். இதை மூட்டம் போடுவது என்று சொல்லக் கேள்வி. அதை நல்ல முறையில் செய்வதற்கும் அந்தத் துறையில் தேர்ச்சி இருக்க வேன்டும். குரு ஒருவருக்கே சீடன் கனிந்து கொண்டிருக்கும் பக்குவத்தை முறையாக புரிந்து கொள்ள முடியும்.

பத்திரகிரியார் பாடல் ஒன்று :

தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டெல் லாமறிந்து
குருவையறிந் தேநினைந்து கும்பிடுவது எக்காலம் ?

( தெரிவை terivai : (page 2036) (யாழ். அக.) 4. Appearance, visibility; தோற்றம். (W.) 5. That which is known or ascertained; அறியப்பட்டது )
இதில்காய் கனிந்து கொண்டிருக்கும் நிலையை குறிப்பிடுவதோடு மட்டுமல்லாமல் ’எல்லாமறிந்த அந்த குரு என்னை அடையும் நாள் எப்போதோ’ என்ற காத்திருக்கும் மன அடக்கத்தையும் காட்டுகிறது.

நல்ல சீடர்களாக அறியப்பட்டவரின் வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து அப்பேற்பட்டப் பக்குவம் என்பது என்ன என்பதை ஓரளவு கண்டு கொள்ளலாம்.

அப்படி ஒரு நல்ல சீடர் சுப்பிரமணியன் என்னும் தமிழ் புலவர். உ.வே. சாமிநாதையர், மீனாட்சி சுந்தரம்பிள்ளை போன்ற தமிழறிஞர்களால் சங்ககால இலக்கியங்களுக்கு நிகரான தமிழ் பாடல்கள் படைக்க வல்லவர் என்று பாராட்டப் பெற்றவர்.

அவரைத் தேடி இரண்டு புத்தகங்கள் அவரது மாமனார் வழியே வந்தடைந்தது. குருவின் திருவுள்ளம் யார் மூலம் செயல்படும் என்பதை யாரும் அறியார். பிற்காலத்தில் தன் மகளை விட்டு விட்டு மனையைத் துறந்து பிட்சாடனம் போவதற்கான வழியை அவரே திறந்து விட்டார்.

அருணாசல ஸ்துதி பஞ்சகம் மற்றும் நான் யார் என்ற தலைப்புடைய புத்தகங்களே அவை. சுப்பிரமணியன் போய் முருகனார் என்ற சீடர் கிடைப்பதற்கு வழி செய்தன.

ஸ்ரீ ரமண பகவானின் மிகப்பிரியமான பக்தருள் ஒருவர் முருகனார். சீடன் என்பதன் இலக்கணத்தை அறிய வேண்டுமென்றால் அது முருகனாரின் வாழ்க்கையை அறிவதே எனலாம்.

சென்னையில் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார் சுப்பிரமணியன். பகவானைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த போதெல்லாம் உடனே ஆஸ்ரமத்திற்கு வந்துவிடுவார். ஆனால் திரும்பிப் போகும் போது தேனில் விழுந்த வண்டைப் போல சிக்கித் தவிப்பார்.

கிளம்பிச் சென்றவர் சற்று நேரத்தில் திரும்பி வந்து நிற்பார். இதைக் கண்ட பகவான் யாரையாவது அவர் கூடவே அனுப்பி ரயில்வே ஸ்டேஷனில் விட்டு வரும்படி செய்வார். அப்படி அனுப்பியும் சில நேரங்களில் ஆஸ்ரமத்திற்கு திரும்புவதுண்டு .

இரயில் வந்ததும் தெரியாமல் போனதும் தெரியாமல் தன்னை மறந்த நிலையில் பிளாட்பாரத்தில் மேலும் கீழும் உலவிக் கொண்டு இருப்பார். அவரது நிலை பரிதாபமாக இருக்கும். அதன் பின்னர் ரயில் ஏற்றிவிட்டு கிளம்பும் வரை கூட இருந்து வழியனுப்புவதை சில நண்பர்கள் வழக்கப்படுத்திக் கொண்டனர்.

அப்பேற்பட்ட மனநிலை வாய்க்காத வரையில், நம்மை ஆன்மீக சாதகர்கள் என்று சொல்லிக் கொள்ளவோ அல்லது குரு அருள் இல்லையே என்று ஏங்கவோக் கூட தகுதியுள்ளவர்களா என்ற கேள்வி மனதில் எழுகிறது.

ஸ்ரீ முருகனார் பகவான் தரிசனத்திற்கு வருவதே ஒரு வினோதம். பகவானைப் பார்த்தமாத்திரத்தில் அவர் உள்ளம் நெகிழ்ந்து உடல் ஒடுங்கி நடை தளர்ந்து விடும். அவரது பார்வை பகவானைத் தவிர வேறெதையும் பார்க்காது. இந்த நெகிழ்வுடன் பகவானைப் பணிந்துவிட்டு ஹாலில் ஒரு பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டு பகவானைப் பார்த்த வண்ணம் இருப்பார். அவரது குருபக்தி காலத்தைக் கடந்து நிற்கிறது.

இங்கே கபீர்தாசரின் அனுபவத்தை முருகனாரில் காண்கிறோம்.

गुरु मूरति गति चन्द्रमा, सेवक नैन चकोर ।
आठ पहर निरखत रहे, गुरु मूरति की और ॥

தண்நிலவாம் குருவுருவம் சீடனுக்கு, சகோரமாய் கண்கள் தொடருது
எண்சாமம் நினைவின்றி போகுது, எல்லாம் குருவுருவில் மறந்து

எட்டு ஜாமம் போவது அறியாமல் வேறெந்த சிந்தனையுமின்றி அமர்ந்திருக்க வேண்டுமானால் அது, குரு சீடனுள் தூண்டிவிட்ட மெய்யுணர்வு அனுபவம் ஆகத்தான் இருக்க முடியும்.

அவ்வாறு அருள் நோக்கால் தம்மை மறக்க நேரிடும் சீடன், மீண்டும் மீண்டும் அதற்காக ஏங்குவதை சகோர பட்சி, நிலவின் ஒளிக்காக ஏங்குவதை ஒப்பிடுகிறார் கபீர்.

வெறும் நிலவின் ஒளியிலேயே அமிர்தத்தை உண்டு வாழ்வது சகோர பட்சி என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. பிற பறவைகள் போல புழு பூச்சிகளை உண்ணாமால், காய் கனிகளிலும் விருப்பம் கொள்ளாத பட்சி அது.

இது பூவுலக ஆகர்ஷணங்களுக்கு ஆட்படாமல் மிக உயர்ந்த ஆன்ம தத்துவத்திற்காக ஏங்கும் சீடனின் நிலையை குறிப்பிடுவதற்காக சொல்லப்படுவது. குரு அருளுக்கு பாத்திரமாவதே மிகப் பெரிய சாதனையாகும்.

இதற்கானக் காரணத்தை முருகனாரின் பாடல் ஒன்றிலேயே காணலாம். முருகனாரின் திருக்கண்ணோக்கம் (9)

நோக்குருவாய் நோக்குள்ளே நுழைந்தானைத் தந்நோக்கால்
நோக்குறுவார் நோக்காரா நோக்காதார் நோக்குதலால்
நோக்கரிய நோக்கானை நோக்கலுறிற் றடையாமந்
நோக்கற வேங்கடனொடு கண்ணோக்க நா(ம்) ஆடாமோ

நோக்குருவாய் நோக்குள்ளே நுழைந்தானை :பார்க்கும் பார்வையில் பார்ப்போனாயிருக்கும் உணர்வுருவாயிருந்து, பார்வையினூடே உள்ளத்தில் நுழைந்தானை
தந்நோக்கால் நோக்கு உறுவார் :தன்னை உணரும் மெய் அறிவினால் அன்பர்கள் காண்பார்கள்.
நோக்காரா நோக்காதார் : நிறைந்த பார்வையிலாதார் காண இயலாது.
நோக்கரிய நோக்கானை :பார்பதற்க்கரிய மெய்யறிவு உடையானைக்
நோக்கலுளில் தடையாம் :காண்பதனால் தன்னைக் காண்பதிலுள்ள தடையாயிருக்கும்
அந்நோக்கற : (அந்த நோக்கு அற) அந்த சுட்டறிவு (அகந்தை) அறவே நீங்கும்.
வேங்கடனொடு கண்ணோக்க நா(ம்) ஆடாமோ:(அத்தன்மையான) வேங்கடனை கண்டு களித்திருப்போம்.
(வேங்கடராமன் ரமணரின் இயற்பெயர்)
குருவின் அருட்பார்வை தம்மை தரிசிக்கும் அடியார்களின் விழிவழியாக ஊடுருவி சென்று, எழும்பும் அகந்தையை எழுமிடத்திலேயே அழித்து விடும் ஆற்றல் உடையது. அகந்தை அழிந்தால் எஞ்சியிருப்பது மெய்யுணர்வே. இந்த மெய்யுணர்வில் நிலைப்பட்டவர்க்கு தனக்கு அன்னியமாய் எதுவும் தோன்றாது.அப்படிப்பட்ட மெய்யுணர்விற்கு ஏதேனும் தடையிருந்தால் அதை அறவே நீக்குவதே பகவானது அருள் நோக்கு என்று கூறுகிறார்.

குருவாகி வந்தானோ குலமறுக்க வந்தானோ
உருவாகி வந்தானோ உருவழிக்க வந்தானோ

என்று குருவருள் பெற்ற சீடன் நிலையை பட்டினத்து அடிகள் அருட்புலம்பலில் (489) சொல்கிறார். உருவழிக்க வந்தானோ என்பதை தன்னோக்கால் நோக்கு உறுவார் என்ற முருகனாரின் வரிகளால் உண்மை என்று அறியலாம். மெய்யுணர்வை அடைந்த நிலையில் புற உருவின் நினைவை இழப்பவன் சீடன் அன்றோ !

[Thanks for photo courtesy : davidgodman.org ] Muruganar seated on the Verandah


அவ்வாறு அவர் அடைந்த அனுபவத்தை ஒரு சிறிய நிகழ்வு மூலம் அறிகிறோம்.

வேறொரு ஆசிரமத்தைச் சேர்ந்த சீடர் ஒருவர் அவர்களது குருவின் வழிமுறையை பகவான் ரமணரிடம் விளக்கிக் கொண்டிருந்தார். அவர்களது முறைப்படி குரு சிஷ்யர்களை தினமும் சில ஆயிரம் செபங்களைச் செய்யச் சொல்லி இறுதியில் அதை குருவிற்கு அர்ப்பணம் செய்யச் சொல்லுவாராம். தான் அதைத் தவறாமல் செய்து வருவதாகவும் ரமணாசிரமத்தின் முறை என்ன என்பதையும் தயங்கிய படியே கேட்டார்.

இதைக் கேட்ட பகவான் சிரித்துவிட்டு “ஓஹோ ! அப்படியா! பரவாயில்லையே! குருவிற்கு சிரமில்லாமலே நாமத்தை சிஷ்யர்கள் சேர்த்துக் கொடுத்து விடுகிறார்களே ! அவருக்கு நல்ல லாபம்தான்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது முருகனார் வந்தார்.

பகவான் அவரிடம் விஷயத்தைச் சொல்லி “. .அப்புறம் அந்த சிஷ்யருக்கு என்ன மிஞ்சுமோ! அசலை வைத்துக் கொண்டு வட்டியைக் கொடுப்பது போல குருவிற்கு காணிக்கைத் தர வேண்டும். எப்படி இந்த ஏற்பாடு!” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

அதைக் கேட்ட முருகனார், “அந்த குரு தேவலையே! முதலையாவது விட்டு வைக்கிறாரே ! வட்டியைத் தானே கேட்கிறார். (பகவானைக் காட்டி) இந்த குருவோ முதலையே விழுங்கி விடுமே! பிறகு வட்டியைக் கொடுப்பதற்கு யார் மிஞ்சி இருக்கிறார்கள்? வட்டியும் முதலும் ஒரு சேர தீர்ந்துவிடும் அப்புறம் என்ன இருக்கிறது " என்று கண்ணீர் மல்க பதில் கூறினார்.

பக்தியின் ஆழத்திலிருந்து வெளியான மிக உயர்ந்த நகைச்சுவை உணர்வு!

பகவானிடமிருந்து புன்முறுவலே பதிலாயிற்று.

கண்ணாகத் தன் அருளே காட்டினான் தன்னடியேற்(கு)
அண்ணாமலை ரமணன்

( திருமதி கனகம்மாள் அருளிய நினைவில் நிறைந்தவை என்ற புத்தகத்தில் காணப்படும் விவரங்களை வைத்து எழுதப்பட்டது. இது ஒரு ரமணாசிரம வெளியீடு)திருக்கண்ணோக்கம் , கடைக்கண்பார்வைக்கு ஞானியர்கள் ஏங்கியதும் இதனால்தானோ! முருகனையே குருவாக அடையப் பெற்ற அருணகிரிநாதரும்

கண்டு வேட்டுப் பொருட்கொண் டாட்டத்
தின்ப வாக்யத் தெனக்குங் கேட்கத்
தந்து காத்துத் திருக்கண் சாத்தப் ...... பெறுவேனோ
[என்னைப் பார்த்து, என் மீது விருப்பம் கொண்டு, கொண்டாடத் தக்க பொருள் அமைந்த இன்ப உபதேச வார்த்தையை அடியேனாகிய நானும் கேட்டு உணரும்படி போதித்துக் காத்து, உனது திருக் கண்ணோக்கம் அடியேன் மீது படும்படியான பாக்கியத்தைப் பெறுவேனோ? ]
என்று திருச்செங்கோடு முருகனை நோக்கிப் பாடுகிறார்.